Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> Tamil Nadu > Tamil Nadu & the Tamil Eelam Freedom Struggle > சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா? - ரவிக்குமார் எம்.எல்.ஏ.

 

tamil nadu
& Tamil Eelam freedom struggle 

சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா?

ரவிக்குமார் எம்.எல்.ஏ.

"அமெரிக்காவின் ஆதரவை எப்படி முஷ்ரப் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அப்படித்தான் ராஜபக்ஷேவும் இந்தியாவின் ஆதரவைத் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டு தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்... இனியாவது இந்தியா தனது அணுகு முறையை மாற்றிக்கொள்ளுமா?"

 


கடந்த ஆறு வருடங்களாக நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெறுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை உலக நாடுகள் பலவும் இப்போது கண்டித்து வருகின்றன. இதன் மூலம் இலங்கை அரசு வெளிப்படையான ஒரு போர்ப் பிரகடனத்தையே செய்திருக்கிறது என்று கருதப்படுகிறது. இனி இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு இல்லை என்பதையே இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.

2002-ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் முழுமையான அமைதி ஏற்பட்டுவிடவில்லை என்றாலும் அதனால் சுமார் பத்தாயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் 'நார்டிக்' நாடுகள் என அழைக்கப்படும் நார்வே ஸ்வீடன் டென்மார்க் பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர்.

அந்தக் குழுவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தனர். எனினும் கடந்த ஆறு ஆண்டுகளில் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் செய்த அத்துமீறல்களை அந்த கண்காணிப்புக் குழு பதிவுசெய்து ஆவணப்படுத்தி வந்தது. இத்தகைய சர்வதேச அமைப்பு ஒன்றின் கண்காணிப்பின் காரணமாகத்தான் சட்டவிரோதக் கொலைகள் இலங்கையில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டன. இலங்கை அரசின் அறிவிப்பால் ஜனவரி பதினாறாம் தேதி போர்நிறுத்த கண்காணிப்புக்குழு இலங்கையை விட்டு வெளியேறப்போகிறது.

2002-ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் பிறகு மூன்று ஆண்டுகள் வரை இலங்கையில் ஆயுத மோதலில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்பதிலிருந்தே அந்த ஒப்பந்தம் எந்த அளவுக்குப் பயனுடையதாயிருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 நல்ல முறையில் சென்று கொண்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைத் தடைப்பட்டு மீண்டும் மோதல்கள் ஆரம்பித்தபின் கடந்த 15 மாதங்களில் மட்டும் சுமார் நான்காயிரம் பேர் இலங்கையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இலங்கை அரசின் இப்போதைய அறிவிப்பு அங்கே நடந்துவரும் போரின் மீது பெரிய அளவிலான தாக்கம் எதையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றால் இப்போது இப்படியொரு அறிவிப்பை அரசாங்கம் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

இந்தக் கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. ஜே.வி.பி. உள்ளிட்ட சிங்கள இனவாதக் கட்சிகளின் நெருக்கடியின் காரணமாகத்தான் இப்படி அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவது முழு உண்மை ஆகாது. யுத்தத்தின் மூலமாகப் புலிகளை ஒழித்துக்கட்டிவிடலாம் என ராஜபக்ஷே அரசு நம்புவதே இதற்கு முதன்மையான காரணம்.

போர்முனையில் இலங்கை ராணுவத்துக்குக் கிடைத்து வரும் வெற்றி ஆட்சியாளர்களிடம் மட்டுமின்றி சிங்கள பொதுமக்களிடமும் பேரினவாத உணர்வை தீவிரப் படுத்தியுள்ளது. இலங்கையில் செயல்படும் 'மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்' என்ற அமைப்பின் சார்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெளிவாகியுள்ளது.

போரில் புலிகளைத் தோற்கடிப்பதன் மூலம்தான் இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட முடியுமென்று பெரும்பாலான சிங்களவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று பிரிவினரும் போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமெனக் கூறியுள்ள தாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வில் அக்கறையற்ற பேரினவாத மனநிலைக் காரணமாக மீண்டும் இலங்கையில் 1983-ல் நடந்தது போன்ற இனஅழித்தொழிப்பு நடக்குமோ என்ற அச்சம் இப்போது தமிழர்களிடையே அதிகரித்து இருக்கிறது.

''அதிபர் தேர்தல் நடந்தபோது புலிகள் தேர்தலை புறக்கணிக்கச் சொன்னதால் தமிழர்கள் பெரும்பாலும் வாக்களிக்கவில்லை. நான் சிங்களவர்கள் அளித்த வாக்குகளின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனவே அவர்களுடைய அபிலாஷைகளை நான் புறக்கணிக்க முடியாது'' என ராஜபக்ஷே கூறியிருப்பது இலங்கையில் நிலவும் இனவெறிச்சூழலுக்கு ஒரு உதாரணமாகும்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை சிங்களப் பேரினவாதிகள் கொஞ்சம்கூட விரும்பவில்லை. அதனால்தான் ராஜபக்ஷேவால் அமைக்கப்பட்ட 'அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் குழு' எந்தவொரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையும் இதுவரை முன்வைக்க முடியவில்லை. கூட்டாட்சி முறையைப் பரிந்துரைக்கும் எந்தவொரு சமரசத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கமாட்டோமென ஜே.வி.பி. உள்ளிட்ட சிங்கள இனவாதக் கட்சிகள் வெளிப்படையாகவே பேசிவருகின்ற நிலையில் அந்தக் குழுவால் பயன் எதுவும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளப் போவதாகவும் அதற்குள் அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு இந்தியத் தரப்பிலிருந்து இலங்கை அரசுக்கு நெருக்கடி தரப்படுவதாகவும் உலவிவந்த வதந்திகளில் உண்மை இல்லை என்பதை இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிப் பவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.

அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து முக்கியமான சிங்கள அரசியல் கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில் அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை ஒரு மாதத்துக்குள் தயாரிப்பது சாத்தியமே இல்லை. அதுமட்டுமின்றி இந்திய பிரதமரின் இலங்கைப் பயணத்துக்கு இடதுசாரி கட்சிகள் உட்பட இங்குள்ள அரசியல் இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மன்மோகன் சிங் தன் பயணத்தையே ரத்து செய்துவிட்டார்.

போர் நிறுத்த காலகட்டத்தைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டதைவிடவும் சிங்கள ராணுவமே நன்றாக உபயோகப்படுத்திக் கொண் டிருக்கிறது. பல நாடுகளிலும் இருந்து நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. தமது விமானப் படையினருக்கு பாகிஸ்தானின் உதவியோடு மேம்பட்ட பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறது.

புலிகளின் அனுராதபுரம் விமானதளத் தாக்குதலால் சேதமடைந்த விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை வாங்குவதற்கு ஈரான் நாட்டில் நிதியுதவி கேட்டு ராஜபக்ஷே தூது விட்டிருப்பதாகவும் அதற்கு பாகிஸ்தானின் அணுஆயுதத் தந்தை எனப்போற்றப்படும் ஏ.க்யூ.கானின் நண்பர் ஒருவர் உதவி செய்வதாகவும் பாதுகாப்புத்துறை நிபுணர் பி.ராமன் கூறியிருப்பது கவனத்துக்குரியதாகும்.

புலிகளுக்கெதிராக சிங்கள ராணுவம் மேற் கொண்டுள்ள தாக்குதல் இரண்டு வகைப்பட்ட யுக்திகளைக் கொண்டதாக உள்ளது. தொடர்ச்சி யாக யுத்தத்தில் ஈடுபடுவதன் மூலம் புலி களைச் சோர்வடைய வைத்து அவர்களது ஆள் பலத்தைக் குறைப்பது என்பது ஒன்று. துல்லியமான விமானத் தாக்குதல்கள் மூலம் புலி களின் கட்டமைப்புகளை சேதப்படுத்தி பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதென்பது இன்னொன்று. சுப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் மாவீரர் நாளன்று புலிகளின் வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை சிங்கள விமானப்படையிடம் துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய வசதிகள் இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளன.

ராணுவ ரீதியான சேதங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி முக்கியமான தளபதிகளைக் கொல் வதன்மூலம் புலிகளின் அணிகளைத் தார்மீக ரீதியில் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளையும் சிங்கள ராணுவம் மேற்கொண்டுள்ளது. சுப.தமிழ்ச் செல்வனைத் தொடர்ந்து புலிகளின் ராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த சார்லஸ் இப்போது கொல்லப்பட்டிருக்கிறார். ஜனவரி ஐந்தாம் தேதியன்று மன்னார் பகுதியில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடித் தாக்கு தலில் சார்லஸ் உள்ளிட்ட நான்கு புலிகள் கொல்லப் பட்டது சிங்கள ராணுவத்தின் ஊடுருவும் திறனுக்கு எடுத்துக்காட்டாகும்.

இப்படியான அனுகூலங்கள் இருந்தபோதும் இலங்கை அரசுக்கு சில சிக்கல்களும் இருக்கின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதன் மூலம் இப்போது இலங்கை அரசு சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

 புலிகளை ஒடுக்கவேண்டுமென விரும்பும் இந்தியா போன்ற நாடுகளும்கூட இப்போது வெளிப்படையாக இலங்கை அரசை ஆதரிக்க முடியாத சிக்கல் உருவாகியுள்ளது. சிறுபான்மைத் தமிழர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் அதிகாரங் களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அந்த நாடுகள் இலங்கையை வற்புறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இத்தகைய சர்வதேச நெருக்குதலால் சிங்கள ராணுவம் ஒரு முழுமூச்சான யுத்தத்தைத் தொடுக்க முடியாத இக்கட்டுக்கு ஆளாகியுள்ளது. அதுமட்டுமின்றி அதிகரித்துவரும் ராணுவ செலவுகள் இலங்கையின் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதித்து பொதுமக்களிடம் அதிருப்தியை உண்டாக்கக்கூடிய சாத்தியமும் உள்ளது.

ராஜபக்ஷேவின் நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள பிற சிங்கள கட்சிகள் இப்போது கடுமையாக விமர்சிப்பதால் அவர் தனது பதவியைக் காப்பாற்றி கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலைமை உள்ளது. இலங்கை அரசின் இத்தகைய பலவீனங்களைப் புலிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா?

இது அடுத்தடுத்து பதில் கிடைக்க வேண்டிய கேள்வியாகும்!

இலங்கை அரசுக்கு எதிராகத் தற்போது திரண்டு வருகின்ற உலக நாடுகளின் அதிருப்தியைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான அரசியல் யுக்தி புலிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

 இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு தனி ஈழம்தான் எனவும் அதை அடைவதற்கு ஆயுதப் போராட்டம் ஒன்றே வழி எனவும் நம்புகின்ற புலிகள் ராணுவரீதியாகத் தம்மைப் பலப்படுத்திக்கொண்டிருப்பது உண்மைதான்.

ஆனால் அதற்கு இணையான அரசியல் வலிமை அவர்களிடம் இல்லை. பயங்கரவாதம் என்பது மாபெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இன்றைய சூழலில் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்துவது எளிதானதல்ல.

தமிழர்களின் பிரச்னைக்குத் தனிநாடு ஒன்றுதான் தீர்வு என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாத வரை புலிகளின் போராட்டத்தையும் அது பயங்கரவாதமாகவே கருதும்.

சர்வதேச சமூகத்திடம் மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் யுக்திகளை வகுப்பதிலும் அவற்றைச் செயல் படுத்துவதிலும் புலிகள் மிகவும் பலவீனமாகவே உள்ளனர். அவர்களுக்கு ஏற்படும் ராணுவ ரீதியான பின்னடைவுகளுக்கும்கூட இந்தப் பலவீனமே அடிப்படை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் படையாக மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு அரசாங்கத்தை நடத்துகிற ஆட்சியாளர்களாகவும் இருப்பது புலிகளுக்குள்ள மற்றொரு முக்கியமான பிரச்னையாகும்.

கெரில்லாப் படையாக இருப்பதில் உள்ள அனுகூலங்கள் ஒரு நிலப்பகுதியைக் காத்து நிற்கும் வழக்கமான ராணுவத்துக்குக் கிடையாது. அந்த விதத்தில் இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள புலிகள் ராணுவ வலிமை பெற்றவர்களாக இருந்தாலும் கெரில்லாப் படையின் அனுகூலங்களை இழந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இந்தக் காரணங்களால் இப்போதைய யுத்தத்தில் புலிகளின் தரப்பு சற்றுப் பலவீனமாக இருக்கிறது என்பதே உண்மை. ஆனால் சிங்கள அரசு சொல்வது போல புலிகளை அவ்வளவு லேசாக எடைபோட்டுவிட முடியாது. தமது போர்த்திறனையும் வலிமையையும் அவர்கள் பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மட்டுமல்ல... 1987-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும்கூட இலங்கை அரசு நிராகரித்து விட்டது என்பதே உண்மை.

அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கும் இலங்கை அதிபராயிருந்த ஜெயவர்த்தனேவுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதத்தில் இந்திய நலன்களைப் பாதிக்கும் விதத்தில் இலங்கையில் வெளிநாட்டு ராணுவ-உளவு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பதோ திரிகோணமலை துறை முகத்தை இந்திய நலனுக்கு மாறாக பிறநாடுகளுக்குத் திறந்து விடுவதோ கூடாது என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிபந்தனைகளை இலங்கை அரசு இப்போது காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

இலங்கையில் அமெரிக்கா சீனா பாகிஸ்தான் என பலநாடுகளும் இப்போது கூடாரம் அமைக்கத் தொடங்கி விட்டன. இந்திய நலனுக்கு எதிரான பல ஒப்பந்தங்களை இலங்கை அதிபர் அமெரிக்காவோடும் சீனாவோடும் போட்டுக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தானோடும் அவர் கொஞ்சிக்குலாவுகிறார்.

இப்படி இந்தியாவோடு போட்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு மதிக்காதபோது இலங்கைக்குக் கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்த ஒப்பந்தத்தை மட்டும் எதற்காக இந்தியா மதிக்க வேண்டும்? கச்சத்தீவை இந்தியா மீண்டும் எடுத்துக்கொள்வதற்கு எது தடையாக இருக்கிறது?

இலங்கை பிரச்னை குறித்த இந்திய அணுகுமுறையைக் கவனிப்பவர்கள் இதற்கும் பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா கையாளும் அணுகுமுறைக்கும் ஒற்றுமை இருப்பதை உணரலாம்.

 அல்-கொய்தாவை அடக்குவதற் காகவே முஷ்ரப்பை ஆதரிப்பதாக அமெரிக்கா சொல்லி வருகிறது. அப்படித்தான் புலிகளை ஒடுக்குவதற்காக ராஜபக்ஷேவை இந்தியா ஆதரிக்கிறதென அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் ஆதரவை எப்படி முஷ்ரப் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அப்படித்தான் ராஜபக்ஷேவும் இந்தியாவின் ஆதரவைத் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டு தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

தன்னை ஆதரிக்காவிட்டால் பயங்கரவாதம் வளர்ந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவதுதான் முஷ்ரப் ராஜபக்ஷே ஆகியோரின் தந்திரம். இது ஒருவகையான பிளாக்மெயில் அரசியல் என்பதை எவரும் புரிந்துகொள்ளமுடியும். பாகிஸ்தான் பற்றிய அமெரிக்க அணுகுமுறை எவ்வளவு தவறானது என்பதை இப்போது உலக மக்கள் தெரிந்து கொண்டுவிட்டனர். இனியாவது இந்தியா தனது அணுகு முறையை மாற்றிக்கொள்ளுமா?

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home