Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State > Australiaசேரனின் இராவணேசன்: நாட்டிய நாடகம் - பராசக்தி சுந்தரலிங்கம்

Tamils - a Nation without a State

Australia - அவுஸ்திரேலியா
- an estimated 30,000 Tamils live in Australia -


சேரனின் இராவணேசன் - நாட்டிய நாடகம்
பராசக்தி சுந்தரலிங்கம்

12 November 2008

சிட்னி இரசிகர்களுக்கு இராவணேசன் கண்ணுக்கும், காதுக்கும், கருத்துக்கும் நல்ல விருந்து. நடன நிகழ்வு சிறப்பாக அமைந்ததோடு, நல்லதொரு நோக்கக்கத்திற்காகவும் அமைந்ததென்பது திருப்தியைத் தருகிறது. சேரன் போன்ற இளையோர் சமூக நோக்குடன் பல படைப்புகளை வழங்கிவருவது நிறைவைத் தருகிறது.


'இன்றுபோய் நாளை வா'  என்று, போர்க்களத்திலே இராவணனைப் பார்த்து இராமன் கூறியதும், மாவீரன் இராவணன், 'வீரமும் களத்தே போட்டு
வெறுங்கையோடு இலங்கை புக்கான்', என்பதும், மறுநாள் போரிலே அந்த மாவீரன் சாவைத் தழுவியதும், கம்பரைக் கற்றோர் அறிந்த கதை. காலம் காலமாக இராமனை நல்லவனாகவும் இராவணனைத் தீயவனாகவும் இராமகாதைகள் காட்டி நிற்கின்றன.

இன்றைய காலகட்டத்தின் தேவை கருதி இதிகாச, புராணப் பாத்திரங்களைப்பற்றி, புதிய பார்வை, புதிய சிந்தனை ஏற்பட்டுவருவதைப் பார்க்க முடிகிறது. சமீபத்தில் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்தில் 'பரதம் விரவிய கூத்து' வடிவிலே கர்ணன் கதை அரங்கேறியபோது, இந்தப் புதிய சிந்தனையை உணரமுடிந்தது. கர்ணனின் கதையை இன்றைய அரசியலோடு இiணைத்து, இளைய பத்மநாதன் அரங்காக்கியது, உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் தமிழ்த் தேசிய அரங்கத் தேடலுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது.

இராவணன் சிறந்ததோர் வீரன், கைலை மலையையே அசைத்த பராக்கிரமசாலி, கல்விகேள்விகளிலே சிறந்தவன், இசைக்கலைஞன், வீணையை இசைத்துப் புகழ்பெற்றவன், சிவபக்தன். மேலும், தசமுகன் என்னும் போது, அவன் பத்துத் தலைகளோடு கூடிய அரக்கன் அல்லன், ஒரே நேரத்தில் பத்து விடயங்களைச் செய்யும் ஆற்றல் படைத்தவன், தசாவதானி. அவன் வாழ்வில் செய்த தவறு, பிறர்மனையைக் கவர்ந்து சிறைவைத்தது, ஆனாலும், முறைதவறி நடக்க முற்படவில்லை. இதனால் அவன்மீது மதிப்பே ஏற்படுகிறது. விமர்சனத்திற்கும் அப்பால் உயர்ந்து நிற்கிறான்.

இவ்வாறாக இராவணனைப் போற்றும் வகையில் 'இராவணேசன்', மட்டக்களப்பு வடமோடிக் கூத்தாக, பேராசிரியர் மௌனகுரு அவர்களின் ஆட்டத்திலும் ஆக்கத்திலும் பிரபலமடைந்தது. முன்னம், ஆர். எஸ். மனோகர் அவர்களின் 'இலங்கேஸ்வரன்' என்னும் நாடகமும் இரவணனின் புகழ் பாடியது.

இந்த வகையிலே சேரன் சிறீபாலன், சிட்னியிலுள்ள ர்ருசுவுளுஏஐடுடுநு ஊஐஏஐஊ ஊநுNவுசுநு ல், அக்டோபர் 25ம் நாள் இராவணனை ஒரு வீர புருஷனாக பரதநாட்டியத்தில் அரங்கேற்றியது பெரும் வரவேற்பைப் பெற்றது.

தாயகத்திலுள்ள நவம் அறிவுக் கூடத்தின் பணிகளுக்கு உதவும் வகையில், சென்ற இரண்டு வருடங்களாக சேரன் தனது தனி ஆடல் மூலம் நிதி சேகரித்து உதவியுள்ளார். போரிலே பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்த போராளிகளுக்கு கணனி, இலக்கியம், வரலாறு, இசை போன்ற கற்கை நெறிகளை நவம் அறிவுக் கூடம் வழங்கிப் பெரும் தொண்டாற்றி வருகிறது.

அங்கவீனனாகியும் உறுதியை இழக்காத நவம் என்னும் மாவீரனின் பெயரால் நடைபெறும் இக்கல்விக் கூடம் போராளிகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வருவதாக அங்கு நேரிலே சென்று பணியாற்றிய பல்வைத்திய கலாநிதி வாசுகி டெலிலோ தனது உருக்கமான பேச்சின் மூலம் விளக்கினார். அதனைத் தொடர்ந்து நவம் அறிவுக் கூடத்தைப் பற்றிய ஒரு விவரணப் படமும் திரையிடப்பட்டது. அங்கங்களை இழந்தபோதும் அவர்களின் தன்னம்பிக்கை சிலிர்ப்படைய வைத்தது. சேரன் தனது நடன நிகழ்வு மூலம் இந்த வருடமும் நிதி சேகரித்து இந்த நல்ல பணிக்குக் கையளித்துச் சாதனை புரிந்துள்ளார்.

'இராமனின் புகழ் வழும்வரை இராவணனின் புகழும் வாழும்'
என்பதற்கிணங்க நிகழ்ச்சியின் முற்பகுதி இராமனையும், பிற்பகுதி இராவணனையும் முதன்மைப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தன. நடனக் கலைஞர் ஆனந்தவல்லி அவர்கள் குத்துவிளக்கேற்றி நகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

பத்ராசல ராமதாஸர், துளசிதாஸர், ஆகியோரின் இராமர் புகழ்பாடும் பஜனைப் பாடல்களுக்கு நடனம் ஆடியது புதுமையாக இருந்தது. தனஞ்ஜயன் தம்பதியினரின் மாணவனான சேரனும், கலஷேத்ரா மற்றும் சி. வி. சந்திரசேகரனின் மாணவனான ரஞ்ஜித் சூரகட் என்னும் நடனக் கலைஞனும் இணைந்து இராமாயணக் காட்சிகள் சிலவற்றை நடனத்தில் அமைத்து ஆடியது அழகாக அமைந்திருந்தது. இராமர் விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காவல் புரிவது, குகனைச் சந்திப்பது, சபரி மோட்ஷம் ஆகியவற்றை நடனத்தில் கொண்டுவந்தனர்.

இதன் நிறைவாக நிருத்திய அங்ககாரம் என்னும் நடன அமைப்பிலே, ஆனந்தவல்லியின் லிங்காலயம் மாணவி அபிராமி சிறீகாந்தாவும், சேரனின் ரஸனா கவின்கலைக் கல்லூரி மாணவி லாவணியா தேவராஜானும் சேரன், ரஞ்ஜித் ஆகியோருடன் இணைந்து அழகிய நடனக் கோர்வைகளையும் நிருத்த நிலைகளையம் கொண்ட விறுவிறுப்பான நிருத்தத்தில் சிறந்ததொரு நடனத்தை வழங்கியது கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

தொடர்ந்தது நிகழ்வின் இரண்டாம் பகுதி - 'இராவணேசன்'. சேரன்: இராவணனாகவும், ரஞ்ஜித்: இராமன், சிவன், அங்கதனாகவும், அபிராமி: மண்டோதரி, சூர்ப்பனகை, சீதையாகவும், லாவணியா: பார்வதி, மாயமான், சகியாகவும் முறையே பாத்திரங்களை ஏற்று ஆடினார்கள்.

ரஞ்ஜித் கதை சொல்லியாகத் தோன்றியதுமே நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கிவிட்டது. திறந்த வெளியரங்கில் மக்கள் கூடியிருந்து விடிய விடிய நாடகம் பார்த்த காலத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்றுவிட்டார். திரையை நீக்கி எட்டிப் பார்ப்பது, சபையோரைப் பார்த்த திருப்தியுடன் தலையசைப்பது எனப் பலவிதமான அபிநயங்கள் மூலமும், தனது நடிப்பாற்றல் மூலமும், தனது தனித் திறமையை வெளிக்காட்டினார்.

தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்
சிந்தை யெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந் தோளான் கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல் செய்யும ;கூட்டத்தின் கூற்றம்
என் தமிழர் மூதாதை என் தமிழர் பெருமான்
இராவணன் காண் அவன் நாமம் இவ்வுலகம் அறியும்

எனப் பாரதிதாசனின் உணர்ச்சிமிக்க கவிதையை லாவண்யா விதூஷன் இசைக்க, இராவணனின் வருகை கம்பீரமாக அமைந்தது. சிவபக்தன் இராவணன் கைலைமலையை அசைப்பதும், அவன் தருக்கை அடக்கிய சிவன். அவன் இசையில் உருகுவதும் தொடர்ந்தது. சேரனும் ரஞ்ஜித்தும் முறையே இராவணனாகவும் சிவனாகவும் ஆடியபோது இரு சிறந்த கலைஞர்களும் இணைந்து மிளிர்ந்தனர். சேரனின் அடக்கமான ஆட்டமும், ரஞ்சித்தின் தாண்டவமும் பொருத்தமாக அமைந்தன.

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
வானாகி எங்கும் விரிந்தாய் போற்றி
நீராகி எங்கும் பரந்தாய் போற்றி
தீயாகி எங்கும் ஒளிர்ந்தாய் போற்றி
மண்ணாகி எங்கும் சுழன்றாய் போற்றி
கைலை மலையானே போற்றி போற்றி

என இராவணனின் சிவ துதியைத் தொடர்ந்துவந்த ஞானசம்மத்தப் பெருமானின் கோணமாமலைப் பதிகம் தாயக வரலாற்றுத் தடங்களைக் காட்டியது.

நிரைகழல் அரவஞ் சிலம்பொலி யலம்பும்
நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாய்ப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே

என்னும் தேவாரத்தில் பக்திரசம் மேலோங்கியது. வீரம், பக்தி ஆகிய ரசானுபவங்களைத் தொடர்ந்து வந்தது சிருங்காரம். இராவணனும் மண்டோதரியும் வாசமிகு மலரச்சோலையில் வட்டமிடும் வண்டுகளின் ரீங்கார இசையில் தம்மை மறந்து காதல் கொள்வதை, புலவர் குழந்தையின் இராவண காவியப் பாடலில் பார்த்தோம். வீரன் ஒருவனை மனதார விரும்பும் அழகியதொரு பெண்ணையும், அந்தக் காதலை முழுமையாக ஏற்கும் ஒரு வீரனையும் பார்க்கிறோம். அபிராமி சிறீகாந்தா நாணம், காதல், வியப்பு ஆகிய உணர்வுகளை அழகாகத் தனது நடனத்தில் கொண்டுவந்தார்.

திருமணத்தைத் தொடர்ந்து வரும் நல்லாட்சியில் சூர்ப்பனகை வடிவில் விதி புகுந்து விளையாடுவதைப் பார்க்கிறோம். இராமலக்குவர் சூர்ப்பனகையை அவமானப்படுத்துவதும், அவள் அண்ணனிடம் முறையிடுவதும், அவன் சீதையைக் கவருவதும் என்று துயரங்கள் போர்க்களம் வரை தொடர்கின்றன. கிரேக்க நாடகங்களிலே வரும் துன்பியல் கதாபாத்திரங்களுடன் இராவணனின் கதையையும் ஒப்பக் காணலாம்.

விதி யாரை விட்டது. 'சீதையை விடு அல்லது இராமனின் கையால் கெடு' என்ற செய்தியோடு அங்கதன் இராமதூதனாக வருகிறான். வாலியின் மகன் அங்கதன் கூற்றுக்கு,

அப்பனைக் கொன்றவனோடு
எப்படிநீ கூடினாயோ - அட தம்பி
நானவனைக் கொல்லுகிறேன் நீ
எனக்குத் துணைவாடா தம்பி

என்ற, 'இராவணேசன்' கூத்துப் பாடல் வரிகளை இராவணனின் பதிலில் கேட்கிறோம். சீதையை விடுவதல்ல இராவணனின் பிரச்சனை, எதிரிமுன் பணிவதா என்பதே. தான் தோற்பது உறுதி என்று தெரிந்தும் போருக்குச் செல்லும் சுத்த வீரனைக் காண்கிறோம். வந்தபகையை விட்டானில்லை.

போர்க்களக் காட்சியில் ரஞ்ஜித்தும் சேரனும் ஒருவருக் கொருவர் சளைக்காது, அம்பு, வில், ஈட்டி, வாள், சிலம்பம், என்பவற்றோடு போரிடுகையில், ரஞ்ஜித்தின் 'களரிப்பயிற்று' ஆற்றல், நடன அமைப்புக்குப் புதிய அசைவுகளைத் தந்து பிரமிக்கவைக்கிறது. ஆனாலும், ஆயுதங்களைக் கையாளாது, பரதத்திற்கே உரிய முத்திரைகளுக்கூடாக ஆயுதங்களை உருவப்படுத்தி இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. போராட்டம் இன்னும் பரதத்தின்பாற் பட்டிருக்கும்.

போர்க்களத்திலே எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இராவணனைப் பார்த்து இராமன், 'இன்று போய் நாளை வா' என்பதும், அவன் தளர்ந்து ஏகுவதும், துன்பியல் தலைவனின் பெரும் வீழ்ச்சியைக் காட்டிநிற்கின்றன.

வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க் கேற்ப
நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும்
சங்கரன் கொடுத்த வாளும்
விரமும் களத்தே போட்டு
வெறுங்கையோடு இலங்கை புக்கான்

என்ற, கம்பனின் வரிகள், பின்னணியில் இராவணனின் வீழ்ச்சியை எடுத்தியம்பின.

அழிவது உறுதி என்று
அறிந்துமே இராவணன்
இறுதி மூச்சிருக்கு மட்டும்
உறுதியைக் கைவிட்டானில்லை
வீரத்திற்காக வீழ்ந்தான்
விரத்தின் சின்னமானான்

என்று, 'இராவணேசன்' கூத்துப் பாடல் சிறிபாலனின் கம்பீரமான குரலில் ஒலிக்க, மாவீரன் கதை முடிகிறது.

மண்டோதரியின் சோகத்தை அபிராமி தனது பாவத்திலே கொண்டுவந்து தன்னை ஒரு பூரணமான நடனக்கலைஞர் என்பதைக் காட்டிவிட்டார். பாவமும் நிருத்தமும் இவரில் நிறைந்திருக்கின்றன.

'இராவணன் மேலது நீறு' என்று சம்மத்தப் பெருமான், சிவபக்தன் இராவணனுக்குப் பெருமை சேர்த்தார். சேரனின் நெற்றியில் நாமக் குறி இராவணனுக்குப் பொருந்தாது. இராவண மீசை எங்கே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஒப்பனையில் மேலும் கவனம் எடுத்திருந்தால், சேரனின் ஆளுமை மேலோங்கியிருக்கும். சேரன் ஓர் அருமையான நடனக் கலைஞன்.

ரஞ்ஜித் இராமனாக, அங்கதனாகப் பல பாத்திரங்களால் பல முகங்களைக் காட்டிவிட்டார். குகனாக ஓடத்தை வலித்தபோது தண்ணீரிலே ஓடம் சென்றதைக் கண்டோம். கதை சொல்லியாக அவருடைய ஒவ்வொரு அசைவும் முகபாவமும் இந்த நாட்டிய நாடகத்திற்கு மெருகேற்றிவிட்டன. ரஞ்ஜித் ஒரு பூரணமான நடனக் கலைஞன். சிறந்ததோர் எதிர்காலம் இந்த இளம் கலைஞனுக்கு உண்டு.

சேரனின் மாணவி லாவணியா தேவராஜனுக்கு இது ஒரு சவாலான நடன நிகழ்வு. மூன்று பெரும் நர்த்தகர்களுக்கு ஈடுகொடுக்கவேண்டியிருந்தது.

பாட்டும் பக்கவாத்தியங்களும் இணைந்து நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றின. லாவண்யா விதூஷன், பாரத் மோகன் ஆகியோரின் மிடற்றிசையுடன், கோபதிதாசின் வயலின் இசை, கிறிஷான், செந்தூரன் ஆகியோரின் மிருதங்கம் முதலான தோல் வாத்தியங்கள், லஷ்மி நரேந்திரனின் வீணை இசை என பல்லியம் வெகு பொருத்தம். தமிழிலும் ஆங்கிலத்திலும் காயத்திரியின் பொருத்தமான விளக்கமும், கம்பீரமான நட்டுவாங்கமும், செந்தூரனின் விறுவிறுப்பான சொற்கட்டும் நிகழ்ச்சிக்கு முழுமை சேர்த்தன. அவர்கள் அனுபவம் மிக்கவர்கள். ஒவ்வொருவரும் தமது திறமையைக் காட்டினார்கள்.

சிட்னி இரசிகர்களுக்கு இராவணேசன் கண்ணுக்கும், காதுக்கும், கருத்துக்கும் நல்ல விருந்து. நடன நிகழ்வு சிறப்பாக அமைந்ததோடு, நல்லதொரு நோக்கக்கத்திற்காகவும் அமைந்ததென்பது திருப்தியைத் தருகிறது. சேரன் போன்ற இளையோர் சமூக நோக்குடன் பல படைப்புகளை வழங்கிவருவது நிறைவைத் தருகிறது.







 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home