Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State > Australia > காத்தான் பாணி நாடகக் கூத்து: பரதம் விரவிய புதிய வடிவம் - பராசக்தி சுந்தரலிங்கம்

Tamils - a Nation without a State

Australia - அவுஸ்திரேலியா
- an estimated 30,000 Tamils live in Australia -


காத்தான் பாணி நாடகக் கூத்து
பரதம் விரவிய புதிய வடிவம்

Review by பராசக்தி சுந்தரலிங்கம், Sydney
4 May 2008

"இதிகாசங்களிலும், புராணங்களிலும் துன்பியல் பாத்திரங்களான ஏகலைவன், வாலி, இராவணன், நந்தன், சீதை, பாஞ்சாலி, குந்தி, சிகண்டி, கண்ணகி, மணிமேகலை போன்றோரின் கதைகள் தனி நடிப்பிற்கு மிகவும் பொருத்தமாகக் காணப்படுகின்றன. அவற்றில் இன்றைய அரசியலுக்குப் பொருத்தமான கருத்துகளையும் காணலாம். அவர்களின் வரலாறுகளைப் பாட வல்லவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். மிடற்றிசை, வாத்திய இசை, நடனம், கூத்து, ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சிபெற்ற ஆசிரியர் பலர் இருக்கிறார்கள். இன்று திறமையாகச் செயற்படும் இளையோரும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இணைந்து செயற்படவேண்டிய காலம் இது."

 


தாயகத்தைப் பிரிந்து புதிய மண்ணிலே காலூன்றி வாழும் கூத்தர்கள், பழைய கூத்துகளைப் பேணுவதோடு, தமது வேர்களில் இருந்தே, வேறு வேறு பாணி ஆடல் பாடல் உடை அலங்காரம் முதலியவற்றை மணிப்பிரவாளமாகக் கோர்த்து புதிய கூத்துகளை ஆக்குவது - பழையன கலந்து புதியனவாவது - காலத்தின் தேவைதான். இது அரங்க வரலாற்றின் தொடர்ச்சி.

இந்த வகையில் அவுஸ்திரேலியாவில், சிட்னியிலே, ஏப்ரல் 5 ஆம் திகதி, சிட்னி தமிழ் அறிவகம்| ஆதரவில் லிட்கொம் யூக்றெனியன் மண்டபத்தில் அரங்கேறிய அண்ணாவியார் இளைய பத்மநாதனின் புதிய கூத்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மகாபாரதக் கர்ணனின் கதை செஞ்சோற்றுக் கடன்| என்ற பெயரில் காத்தான் கூத்து இசைப்பாணியில, பரதம் விரவிய ஆடலிலும் அபிநயத்திலும, அரங்காக்கம் பெற்றது. நாட்டுக் கூத்தர்களும் பரதக் கலைஞர்களும் இணைந்து அரங்காக்கம் செய்தது வரவேற்கப்பட வேண்டியது. சுபத்திரா சஞ்சயன் அவர்களின் பரத வளஆளுமையுடன் இளைய பத்மநாதன் அவர்களின் அண்ணாவியத்தில் பரதம் பயின்ற கண்ணன் மனோகரன் அவர்களின் தனி நடிப்பில் புதிய கர்ணன் கூத்து உருவாகியது.

கர்ணன்பற்றி இளைய பத்மநாதனின் வார்த்தைகளிலே கூறுவதானால்:

மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் கர்ணன். கொண்ட கொள்கையில் நின்று விலகாதவன். இரத்த பாசத்திற்கும் மேலாக, பேரரச பதவிக்கும் மேலாக, செய்நன்றி காத்தவன், செங்சோற்றுக் கடன் தீர்த்தவன். வீரன்! தீரன்! இல்லை என்னாது கொடுத்த வள்ளல். எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் ஒரு கர்வி, தற்பெருமை கொண்டவன். கொடுத்ததால் தாழ்ந்தானா? கர்வத்தால் வீழ்ந்தானா? கர்ணன் மிகவும் சிக்கலான பாத்திரம். கர்ணன் ஒரு துன்பியல் தலைவன் - Tragic Hero

செஞ்சோற்றுக் கடன்| - இது ஒரு துன்பியல் நாடகம் - Tragedy. மண்ணிலே பிறந்தது முதல் இறுதி மூச்சுவரை அவன் வாழ்வு துயரம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. கர்ணன் ஒரு துன்பியல் பாத்திரம் என்று இளைய பத்மநாதன் கூறுவது முழுவதுமே சரி. பாண்டவர், கௌரவர் எல்லோருக்கும் மூத்தவன். அரச வம்சத்திலே பிறந்தவன். வாரிசு உரிமை அவனுக்கே உரியது. ஆனால், அவன் வரலாறு வெளியில் தெரியாமலே மடிகிறான். எனினும, இதிகாசத்தில் அவன் பெயர் முன் நிற்கிறது. பெயரோடும், புகழோடும், வீரனாக, தீரனாக, கர்வியாக, வள்ளலாக, என்றும் மக்கள் மனதிலே வாழ்ந்து கொண்டிருக்கிறான், கலைஞர்கள் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கிறான்.

செஞ்சோற்றுக் கடன்| நாடகம் பதினேளாம் நாள் போர்க் களத்திலே கர்ணன் வருகையோடு ஆரம்பிக்கிறது.

அங்கர் கோன் கர்ணன் நானே - கவுரவர்
பொங்கும் படைத் தளபதி போரிட வந்தேன்

எனத் தன் வரலாறு கூறி வருகிறான். முன்னர் அவனைத் தேரோட்டி மகன் என்று, அரசர்கள் விற்போட்டிக்கு மறுத்ததும், போர்க்களத்தில் அவனுக்குக் கொடுக்கவேண்டிய அதிரதன் பதவியைக் கொடுக்காது பீஷ்மர் அவனை அவமதித்ததும், அவன் பீஷ்மர் மடியும்வரை களம் புகாது காத்திருந்ததும், கூறி வருகிறான். தேரோட்டியின் மகனாய் வளர்ந்தவனுக்கு இன்று மன்னன் சல்லியன் தேரோட்டுகிறான் எனப் பெருமை பேசி வருகிறான். அங்கதேசத்தைப் பரிசளித்து அவனுக்கு உயர்ந்த அந்தஸ்த்தைக் கொடுத்த உற்ற நண்பன் துரியோதனனுக்காகச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, என்னை வெல்வாருண்டோ, வெல்வாரும் உண்டோ| என அர்ச்சுனனுடன் போரிட வருகிறான். இறுதியில் அர்ச்சுனனின் அம்பாலே மாண்டுபோகிறான். நாடகம் முடிகிறது. இந்த நாடகத்தின் அமைப்பு, ஒரு நாளில் நடப்பவை - பாரதப் போரின் 17 ஆம் நாள், ஓர் இடத்தில் நடப்பவை - குருஷேத்திரப் போர்க்களம், என்ற கட்டுக் கோப்புக்குள் அமைந்துள்ளது. கிரேக்கச் செவ்வியல் நாடகங்களின் கால ஒருமை (Unity of time) , இட ஒருமை (Unity of place)அமைப்பை இவை கொண்டிருப்பதைக் காணலாம்.

கர்ணனின் அட்டகாசமான வருகைக்கும் அவன் சாவுக்கும் இடையில் கதை விரிகிறது. நாகாஸ்திரத்தை அர்ச்சுனன் மேல் இரண்டாவது தடவை பிரயோகிக்க முடியாமல், மூத்தமகனே என்று உறவு கொண்டாடி வந்த தாயார் குந்திதேவியாரின் வேண்டுகோளால் வஞ்சிக்கப்பட்டான்.

நாகபடையை ஒரு முறையே - அம்மா
நவின்றபடியே நான் தொடுத்தேன்
பார்த்தன் மேல் தாயே

என்று, சொன்ன சொல்லைக் காத்த மானி. தேர்ச் சாரதி சல்லியன் இந்தச் சத்தியத்தை அறியாதவன், சலித்துப்போய்க் கைவிட்டுப் போய்விடுகிறான். தனியனாகத் தேரோட்டிப் போகும் வேளையில் தேர்ச் சில்லும் மண்ணில் புதைகிறது.


சில்லும் மண்ணிலே போரில்
தாளும் என்று ஓரு முனி
சொல்லிய சாபம் இன்று பலித்ததோ

உயிர் காக்கும் கவசகுண்டலங்களைத் தானம் என்ற பெயரில் இந்திரனுக்குப் பறிகொடுத்தான். அர்ச்சுனன் அம்பு மார்பைப் பிளக்கிறது.
கற்றவித்தை வேண்டும் போது பயனற்றுப் போம்| என்று அவனது குரு பரசுராமர் சபித்ததும் பலிக்கிறது. மார்பிலே அம்பு பாய்ந்து உயிருக்குப் போராடும் வேளையிலும் அவன் உயிரைக் காத்துநிற்கும் புண்ணியத்தைத் தானமாக கேட்டுவரும் கிருஸ்ணனிடம் கொடுத்து விடுகிறான், உயிர் பிரிகிறது. உயிர் பிரியும் வேளை அவன் மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள் ஓடுகின்றன. இறுதியில் அம்மாவை அழைக்கிறான்.

கர்ணனைச் சுற்றிப் பின்னப்படும் அத்தனை நிகழ்வுகளும், அவனைச் சாவுக்கே இட்டுச்செல்வதைக் காணலாம். நிகழ் காலத்தில் நடப்பவற்றுக்கு இறந்தகாலத்தில் நடந்த சம்பவங்கள் கர்ணன் கூற்றாகத் தொடர்புபடுத்தப்படுகின்றன. நாடகத்தில் அரங்கச் செயற்பாடுகள் எல்லாமே கர்ணனின் சாவை நோக்கியே நகர்த்தப்படுகின்றன. இந்த அரங்காக்க முறை கிரேக்க செவ்வியல் நாடகங்களின் செயல் ஒருமைக் கோட்பாட்டை (unity of action)  கொண்டிருப்பதைக் காணலாம். கிரேக்க நாடகங்களுடன் ஒப்பு நோக்கப்பட்டாலும், அவற்றின் அரங்காக்க முறைகளைத் தழுவியதல்ல. இது தனித்துவமானது. தமிழ் மண்ணில் வேர் கொண்டது.

காத்தான் பாணியில் இசைக்கப்பட்ட காப்புப் பாடலுக்கும், வரவுப் பாடலுக்கும் கீதா மனோகரனின் ஆடல், பரதக் கச்சேரியின் ஆரம்பத்தில் ஆடப்படும் அலாரிப்பு போல அழகாக அமைந்தது. நாடகத்தின் ஆரம்பமே களைகட்டிவிட்டது. அவ்வாறே முடிவில் பாடப்பட்ட மங்களப் பாடலும், கீதாவின் ஆடலும், அபிநயமும் அமைந்தன. கீதா மிகவும் தேர்ந்த பரதக் கலைஞர்.

நீண்ட வில்லுடனும் நீட்டிய அம்புடனும் தேரிலே கர்ணனாகத் தோன்றிய கண்ணன் மனோகரனின் அங்கத்தில் கர்ணனையே கண்டோம். இந்தப் பாத்திரத்திற்குக் கண்ணன் மிகவும் பொருத்தமான தேர்வு. இவர் ஒரு சிறந்த பரதக் கலைஞர். கண்ணன், கீதா ஆகிய இரு சகோதரரும் நீண்ட காலம் பரதம் பயின்று அண்மையில் தலை அரங்கேறியவர்கள். பரதப் பயிற்சி அவர்களின் அங்கங்களில் மிளிர்ந்தது. கண்ணனின் பரதம் கலந்த அசைவும், பாவபூர்வமான நடிப்பும், கம்பீரமான தோற்றமும், வீரம், கோபம், இரக்கம், வெறுப்பு, அன்பு, பாசம், என இரசங்களை உணர்த்திய பாங்கும், கர்ணன் என்ற பாத்திரத்தின் மேல் மதிப்பை உயர்த்திவிட்டது. துன்பத்தின், வேதனையின் உச்சங்களைக் கண்ணன் தனது பாவத்தாலும் நடிப்பாலும் அப்படியே கொண்டுவந்தபோது பார்வையாளர்களும் அப்படியே ஒன்றிவிட்டார்கள், கண்கள் பனித்தன.

கர்ணனின் தோளில் கூடவே வந்தது ஒரு சருகைப் பட்டுச் சால்வை. தற்காலப் போர் உடையில் அது மேலும் பளிச்சிட்டது. குந்தி தான் பெற்ற குழந்தையைத் தன் போர்வையால் சுற்றிப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டதும், பின் தாயென உரிமை கோரி வந்தோரை, அந்தப் போர்வையைப் போற்றிக் கர்ணன் சோதித்ததும் பாரதக் கதை.

நாடகத்தில் தாயின் போர்வையே கர்ணனின் சால்வையாவதாகக் கொள்ளலாம். போருக்கு வரும் போது தாயின் நினைவாக அணிந்து வருவதாகவும் கொள்ளலாம். தாயை வரவேற்கும் போது சால்வை அணிவித்து வரவேற்கிறான்.

இது தாயைச் சோதிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறாகச் சால்வை பல கற்பிதங்களைத் தூண்டுகிறது. மேடையிலே அதனை அழகாகப் பாவித்தமையும் குறிப்பிடும்படி இருந்தது. அதை மடித்துக் குழந்தையாக அணைப்பதும், பெட்டிக்குள் வளர்த்துவதும், பின்னர் அதைப் பெட்டியாக ஆற்றிலே மிதக்கவிடுவதும் என ஒரு சால்வைத் துண்டு பெறும் மாற்றங்கள் அற்புதம். குழந்தையைச் சுமந்தபடி பெட்டி ஆற்றிலே மிதந்துபோவதையும் தாய் சோகமாகப் பார்த்தபடி நிற்பதையும் கண்ணன் தனது மெய்ப்பாடுகளில் தத்ரூபமாகக் கொண்டுவந்தார்.

சதுரங்கம் ஆடும் காட்சியும் நன்றாக அமைந்திருந்தது. கண்ணனின் நடிப்பில், கர்ணன் முன் துரியோதனனின் மனைவியையும், துரியோதனனையும் கண்டோம். எடுக்கவோ, கோர்க்கவோ| என்ற பாடலுக்குக் காட்டிய நடிப்பில் அவமானம், வெட்கம், துக்கம், ஈற்றில் மகிழ்ச்சி, நன்றி எல்லாம் ஒரு நொடிக்குள் வந்து போயின. கர்ணன் குற்றுயிராகத் தேர்ச்சில்லில் சாய்ந்து படுத்தபடி, தன்னை எடுத்தணைத்து தாயார் தனக்காக ஒப்பாரி எவ்வாறு சொல்லுவா என நினைந்து உருகி உருகி சாவை அணைப்பது எல்லோரையும் உருக்கிவிட்டது.

இந்த நாடகத்தின் நோக்கம் துன்பியலைப் படைப்பது மட்டும்தான் என்றால், பார்வையாளர் பலருக்கு, மகாபாரதக் கர்ணனுக்கு இன்றைய போர் வீரர்களின் உடை அலங்காரம் ஏன் என்ற கேள்வி எழுவது இயல்புதான். நாடக ஆரம்பத்திலேயே உடை கேள்வியை எழுப்புகிறது, இறுதியில், ஒப்பாரியில் விடை கிடைக்கிறது.

போர்க்கலைகள் கற்றவன் நீ
போரிலே வென்றவன் நீ - என் மகனே மூத்தவனே
போர்க்கலம் கைவிட்டாய்
தேராயோ அரசியல் நீ சதுரங்கப் பலியானாய்.

நாடகம் அரசியலை வெளிப்படையாகப் பேசவில்லை, உடையால் ஒரு முடிச்சுப் போடுகிறது. பார்வையாளர்களிடமே அந்த முடிச்சை அவிட்கும் வேலையை விட்டுவிடுகிறது. இது பல மட்டங்களில் சிந்தனையைக் கிளறுகிறது.

மேடையிலே ஒரு மீற்றர் விட்டம் கொண்ட தேர்ச்சில்லும், அந்த மட்டத்திற்கு அதன் பின்னே சிறு மேடையும், அதிலே கொளுவி இருந்த ஆயுதங்களும் மேடையில் போர்க்களத்தைக் கொண்டுவந்தன. தேரில் நின்று வில்லை வளைத்து நாணேற்றுவதும், கதாயுதத்தைச் சழற்றுவதும், ஈட்டியால் குறி பார்ப்பதும, தேரை ஓட்டுவதும், புதைந்த தேர்ச்சில்லைத் தள்ளுவதும் அழகாக இருந்தாலும், ஆயுதங்களைக் கையாள்வதில் இன்னும் பயிற்சி வேண்டும் என்றே தோன்றுகிறது. இது முதல் அரங்கேற்றம்.

முழுமையில் அரங்காக்கம் நன்றாகவே இருந்தாலும் இந்த முதல் அரங்கேற்றத்தில் காணப்பட்ட குறைகளையும் குறிப்பிடுவது இனிவரப்போகும் அரங்கேற்றங்களுக்கு உதவலாம். கர்ணன் கம்பீரமான வீரன் - ஓர் ஆண் பாத்திரம். எனவே அந்தப் பாத்திரத்திற்காக ஆண் குரலில் பாடுவதுதான் பொருத்தம். இளைய பத்மநாதன் மிகவும் உணர்வு பூர்வமாகப் பாடி பாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். கூத்துக்குப் பாவத்துடன் எப்படிப் பாடவேண்டும் என்பதை அறிந்த அனுபவஸ்த்தர். பாவத்துடன் இணைந்த பாடலுக்கே பாவத்துடன் ஆடமுடியும். பாடுபவர் ஆடுபவரின் பாவத்துள்ளும், ஆடுபவர் பாடுபவரின் பாவத்துள்ளம் ஒன்றிவிட வேண்டும்.

இணைந்து பாடிய யதுகிரி லோகதாசன் வளர்ந்துவரும் திறமையான பாடகி. ஆனாலும் இளைய பத்மநாதனின் குரலுடன் சேரவில்லை. குரலின் மென்மை, கூத்துடன் ஒன்றாமல் தனித்து நின்றது. குரல் பொருத்தம் கவனிக்கப்படவேண்டும்.

தரமான பக்கவாத்தியக் கலைஞர்களான சாள்ஸின் ஆர்மோனியம், யதுகிரியின் வீணை, துஷானியின் வயலின், கிஷானின் மிருதங்கம், செந்தூரனின் பல தோற்கருவிகளின் இசை இருந்தும், கூத்துடன் இணைந்து இசைத்ததாகக் கூறமுடியவில்லை. பக்கவாத்தியங்களுடன் போதிய ஒத்திகை இருந்திருந்தால் கூத்தின் தரம் மேலும் உயர்ந்திருக்கும்.

கர்ணனின் கதையை அந்தத் துன்பியல் பாத்திரத்தின் சோகத்தை இதில் ஈடுபட்ட எல்லோரும் உள்வாங்கியிருந்தால் இக்கலை வடிவம் மேலும் மெருகேற்றப்பட்டிருக்கும். இளையோரிடம் திறமை இருக்கிறது. அவர்கள் மேலும் திறம்படச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூத்தை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். புதிய கூத்துகளுக்கு வரவேற்பு இருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளிலே கூத்தை முறையாகப் பயிற்ற ஒரு சிலரே உள்ளனர். இந்தச் சந்ததியினரோடு கூத்துக் கலை மறைந்து விடாமல் இருப்பதற்கு ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டியது இன்றைய தேவை.

இதிகாசங்களிலும், புராணங்களிலும் துன்பியல் பாத்திரங்களான ஏகலைவன், வாலி, இராவணன், நந்தன், சீதை, பாஞ்சாலி, குந்தி, சிகண்டி, கண்ணகி, மணிமேகலை போன்றோரின் கதைகள் தனி நடிப்பிற்கு மிகவும் பொருத்தமாகக் காணப்படுகின்றன.

அவற்றில் இன்றைய அரசியலுக்குப் பொருத்தமான கருத்துகளையும் காணலாம். அவர்களின் வரலாறுகளைப் பாட வல்லவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். மிடற்றிசை, வாத்திய இசை, நடனம், கூத்து, ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சிபெற்ற ஆசிரியர் பலர் இருக்கிறார்கள். இன்று திறமையாகச் செயற்படும் இளையோரும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இணைந்து செயற்படவேண்டிய காலம் இது.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home