Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness >புரட்சித் திருமணத் திட்டம்

CONTENTS
OF THIS SECTION
10/06/09

திராவிட நாட்டுப்பண்
இசை -- மோகனம்,
 தாளம் -- ஆதி

வாழ்க வாழ்கவே
வளமார் எமது திராவிட நாடு
வாழ்க வாழ்கவே!

சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்
கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்
அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு
வெள்ளப் புனலும் ஊழித் தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு.
வாழ்க வாழ்கவே...

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.
வாழ்க வாழ்கவே...

ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு.
வாழ்க வாழ்கவே...

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...
 

புரட்சித் திருமணத் திட்டம்
Bharathidasan

[see also Ancient Tamil Marriage Ceremony]


நடத்தும் முறை

திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற் போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மெற்கொள்ளப் பட்டுவருகிறது. ஆங்காங்கு - அன்றன்று, திராவிடர் புரட்சித் திருமணங்கள். சில அல்ல, மிகப் பல! மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - தம் ஊரில் உள்ள வர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு குறையும். தலைவர்கட்கும் தொல்லை இராது.

1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார்.

2. இசை: திராவிட நாட்டுப் பண்.

3. மணமக்கள் அவைக்கு வருதல்.

4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, அவைத் தலைமை தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை வேண்டிக்கொள்கிறேன், என்று முன் மொழிதல்.

5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, நாங்கள் ஆதரிக்கிறோம், என்று வழிமொழிதல்.

6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்துவந்து சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல்.

7. அவைத் தலைவர் முன்னுரை.

8. திருமணம் நடத்துதல்:

மணப்பெண், இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன், என்று சொல்லல்.

மணமகனும் அவ்வாறு சொல்லல்.

அதன்மேல் இருவரும் மாலை மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். வாழ்க என முழங்குதல்.

9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல்.

10.வரிசை:

அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல்.

இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வ துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.

இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில் ஈண்டு எழுதியுள்ளேன். இங்கு காட்டிய திட்டம் பெரும் பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர, இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது. இதனிலும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம். ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்?  -  பாரதிதாசன்

1 அவையத்தார்

அகவல்

வருக வருகென மலர்க்கை கூப்பித்
திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத்
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
அரிவைய ரோடுவந் தமர்ந்தனர் நிறையவே!
குழலும் முழவும் பொழிந்த இன்னிசை
மழையை நிறுத்திஓர் மறவன் எழுந்து,தேன்
மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத்
திராவிட நாட்டுப்பண் பாடினான்;
ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே.
மணமக்கள் வருகை
மணமகள் தோழிமார் சூழவும், மணமகன்
தோழர் சூழவும் தோன்றி அவைதொழுது
யுஇருக்கரு என்று தோழர் இயம்ப
இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர்.


2. முன் மொழிதல்

மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில்
முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்:
புதிராவிடநாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள்.
இன்று நடைபெற இருக்கும் இத் திராவிடர்
புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத்
தலைமை தாங்கவும் நிலைமை உயர
மணமகள் மணமகன் வாழ்க்கை ஒப்பந்தம்
நிறைவேற் றவும்பெரி யாரை
முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே.

வழி மொழிதல்

அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர்,
புமுன்மொழிந் தாரின் பொன்மொழி
நன்றொப்பு கின்றோம்மு என்றார் இனிதே.
வேண்டுகோள்
முன்மொழிந் தாரும், வழிமொழிந் தாரும்
பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி,
எழுந்தருள் கென்றே இருகை கூப்பி
மொழிந்து சீர்செய்து முன்னுற அமைந்த
இருக்கை காட்டத் தமிழ்ச்சொற்
பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே:


3 அவைத்தலைவர்

சேர சோழ பாண்டியர் வழிவரு
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து
ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன்.
ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து
வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர்
ஆதலால், அவரின் வேத மந்திரம்
தீது பயப்பன ஆதலால், திராவிடர்
வாழு மாறு மனங்கொளார் என்பதும்,
தாழ இன்னலே சூழுவார் என்பதும்,
அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால்,
நம்மொழி, நம்கலை, நம் ஒழுக்கம்
நம்பேர் ஒட்பம் நடைமுறை மாய்க்கவே
தம்மொழி தீயதம் தகையிலா முறைகளை
மணமுதல், திராவிடர்வாழ்க்கை முறைகளில்
இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால்
ஆரியர் பார்ப்பனர் அடாமண முறையை
வேரொடு சாய்க்க வேண்டும் அன்றோ?
அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய
தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க
வடமொழிக் கூச்சலா? இன்ப வாழ்வு
தொடங்கையில் நடுவிற் சுடு நெருப்பா?
தாய்தந் தைமார் தவஞ்செய்து பெற்றனர்
தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக் கின்றனர்
ஒருமனப் பட்ட திருமண மக்களைப்
பெரிதின்பம் பெறுக பெறுக என்று
வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில்
ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை?
ஊழி தொடங்கையில் ஒளிதொடங்கு மூவேந்து
வாழையடி வாழையாய் வந்த திராவிடர்
சூழ்ந்திங் கிருக்கையில் சூழ்ச்சி யன்றி
ஏதுங்கெட்ட பார்ப்புக் கிங்கென்ன வேலை?
நல்லறம் நாடும் நம்மண மக்கட்குக்
கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்?
மிஞ்சும் காதலர் மெய்யன் பிருக்கையில்
கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்க மேனோ?
தீதிலா மிகப்பல திராவிட மறவர்
ஆதர விருக்கையில், அறிவிலான் படைத்த
சாணிமுண் டங்கள் சாய்ப்ப தென்ன?
கீழ்நெறிச் சடங்குகள் கிழிப்ப தென்ன?
மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத்
தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்!
இரண்டாம் நாளில் இன்பச் செல்வியைக்
கந்தரு வர்பால் கலப்புறச் செய்வதாம்!
தீஎனும் தெய்வம் மூன்றாம் நாளில்
தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்!
நாலாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்!
திராவிட மக்களின் செவிஏற்கு மோஇதை?
வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில்
தமிழர் பண்பு தலைசா யாதோ?
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழைஎனப் பேசும்
திருவள் ளுவனார் திருநெறி மாய்ப்பதோ?
திராவிடர் புரட்சித் திருமணம்
புரிந்தின் புறுக திருமண மக்களே!

வாழ்க்கை ஒப்பந்தம்
ப·றொடை வெண்பா
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
இருவர்தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக -
நீவிர் சான்றாக - நிகழ்த்துவிக் கின்றேன்நான்.

"பாவையீரே!* உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள
* பாவையீரே - மணமகளாரே.

ஆடவர் தம்மை அறிவீரோ? அன்னாரைக்
கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள
உறுதி உரைப்பீரோ?" என்று வினவ,
உறுதி அவ்வாறே உரைத்தார் மகளாரும்.
"தோழரே!* பாங்கிலுள்ள தோழியரைத் தேர்ந்தீரோ?
* தோழரே - மணமகனாரே

வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ?
ஆயின் உறுதி அறிவிக்க!மு என்னவே,
தூயர் அவ்வாறே உறுதியும் சொல்லிட
வாழிய நீவிர்எனப் பெரியார் வாழ்த்தினார்!
வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்!
தாரொன்றைத் தாங்கித்தம் கொழுநர்க்கே சூட்ட
நேரிழை யார்க்கும் நெடுந்தா ரவர்சூட்டக்
கையிற் கணையாழி கட்டழகியார் கழற்றித்
துய்யமண வாளரைத் தொட்டணிய, அன்னவரும்
தம்ஆழி, மங்கையர்க்குத் தந்து மகிழ்ந்தமர்ந்தார்!

செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்:

அற மொழிகள்

"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும்
அது" என்றார் வள்ளுவனார்.
இல்வாழ்வில் அன்பும்
அறமும் இருக்குமெனில்
நல்லதன்மை நல்லபயன்
நாளும் அடையுமன்றோ?
"மனைத்தக்க மாண்புடையாள்
ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்
துணை" என்றார் வள்ளுவனார்!
வாழ்க்கைத் துணைவி
மனைக்குரிய மாண்புகொண்டு
வாழ்வில் அவனின்
வருவாய் அறிந்து
செலவு செயல்வேண்டும்
என்பது மன்றியும்,
"தற்காத்துத் தற்கொண்டான்
பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள்
பெண்" என்று சொல்கின்றார்.
தன்னையும் தக்கபடி
காத்துக் கொளல்வேண்டும்
தன்கொழுநன் தன்னையும்
காத்திடல் வேண்டும்
சீர்சால் திராவிடர்
பண்பு சிதையாமல்
நிற்பவளே பெண்ணாவாள்.
"மங்கலம் என்ப
மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட்
பேறு" பெறுக.
"வழங்குவ துள்வீழ்ந்தக்
கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல்
இல்"மற வாதீர்.
"இளிவரின் வாழாத
மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும்
உலகு" தெளிக.
மணமகளாரே, மணமகனாரே
இணைந்தின் புற்றுநன்
மக்களை ஈன்று
பெரும்புகழ் பெற்றுநீடூழி
இருநிலத்து வாழ்கஇனிது.

நன்றி கூறல்

அறுசீர் விருத்தம்
மணமக்கட் குரியார் ஆங்கு
வாழ்த்தொலிக் கிடை எழுந்தே,
"மணவிழாச் சிறக்க ஈண்டு
வந்தார்க்கு நன்றி! இந்த
மணஅவைத் தலைமை தாங்கி
மணமுடித் தருள் புரிந்த
உணர்வுடைப் பெரியார்க் கெங்கள்
உளமார்ந்த நன்றி" என்றே
கைகூப்பி, அங்கெ வர்க்கும்
அடைகாயும் கடிது நல்கி
வைகலின் இனிதின் உண்ண
வருகென அழைப்பா ரானார்!
பெய்கெனப் பெய்த இன்பப்
பெருமழை இசையே யாக
உய்கவே மணமக்கள் தாம்
எனஎழும் உள்ளார் வாழ்த்தே.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home