Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > நமக்கென்று ஒரு அழகியல் - இந்திரன்

நமக்கென்று ஒரு அழகியல்

இந்திரன்


இரட்டை முகம்

தமிழனின் இரட்டைமுகம் திடீரென்று அவன் இரவு படுக்கையில் இருக்கும்போது முளைத்துவிட்டது அல்ல. வரலாற்று ரீதியான வாழ்நிலை அவனை இரட்டை முகம் கொண்ட பிறவி ஆக்கிவிட்டது.

அவன் பல நேரங்களில் தமிழ் மரபுக்கு உள்ளே இருக்கிறான்; பல நேரங்களில் வெளியே இருக்கிறான்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து, வளர்ந்து இன்றும் வாழ்ந்துவரும் ஒரு செழிப்பான பண்பாட்டை தன் முதுகில் சுமந்தவனாக இருக்கிறான்; மரபோடு கொண்ட அவனது ரத்தபந்தமான உறவு இன்னமும் அவனை விட்டுவிடவில்லை.

அதே நேரத்தில் தனது பண்பாட்டுக்கு முற்றிலும் தொடர்பற்ற ஒரு வாழ்நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான். தனது பண்பாடு தனக்கே அர்த்தமற்ற ஒன்றாகத் தெரிகிற, பண்பாட்டு அந்நியனாகவும் அவன் வாழவேண்டி இருக்கிறது.

இந்த இரண்டில் எது உண்மை, எது பொய் என்பதைத் தீர்மானிக்க இயலாதவனாக அவனது இரட்டை முக வாழ்க்கை தொடர்கிறது.

சிந்தனை எஜமானர்கள்

தமிழ்ச்சமூக உளவியலில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், நமது அரசியல் எஜமானனாக இருந்தது என்பதினால் மட்டுமே நமது பண்பாட்டைத் தாக்கியது என்று சொல்லமுடியாது. உலகை மாற்றிய தொழில் புரட்சியுகத்தின் நேரிடை வாரிசுகள் என்ற விதத்தில் அவர்கள் நமது அன்றாட வாழ்க்கையின் மீது நேரிடையாக கைவைத்தனர். தொழில் நுட்ப, சமூக சக்திகளின் தாக்குதலினால் நமக்குள் ஒரு புதிய சமூக பிரச்சினையை அவர்கள் ஏற்படுத்தினார்கள். அன்றாட வாழ்க்கையின் மீது அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் நமது பழைய பண்பாட்டின் இன்றைய காலத்திற்குப் பொருந்தும் தன்மை குறித்து நம்மை சந்தேகப்பட வைத்து விட்டது.

அதுமட்டுமின்றி, காலனி ஆதிக்கத்திலிருந்து அரசியல் விடுதலை பெற்ற பிறகும் கூட மேலை நாட்டினரே நமது சிந்தனை எஜமானர்களாகத் தொடர்கிறார்கள். மேலைப் பண்பாடு தனது பலமான தகவல் தொடர்புகளின் மூலமாகவும், அரசியல் பலத்தினாலும் தமது பண்பாட்டு விதைகளை நம்மிடையே விதைத்துக் கொண்டே இருக்கிறது. தமிழனின் இரண்டு முகங்களில் ஒன்று இதனை சிரித்த முகத்துடன் வரவேற்கிறது. ஆனால் அவனது இரண்டாவது முகம் இது குறித்த வேதனையை வெளிப் படுத்துவதாகவும் இருக்கிறது.

தமிழனின் அன்றாட பிரச்சினை இதுதான்: மேலைநாடுகளிலிருந்து நமது மண்ணில் வந்து இறங்கும் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி நமது வாழ்க்கையை வசதிமிக்கதாக, இன்பம் மிக்கதாக மாற்றுகிறது; கிரகம் தழுவிய ஒரு பண்பாட்டின் பங்காளிகளாக இருக்கிறோம் என்கிற பெருமிதத்தை நமக்குக் கொடுக்கிறது. ஆனால் அதே மேலை பண்பாடுதான் நமது நிம்மதியான அன்றாட வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்களைத் திடீரென்று திணித்து நம்மை திக்குமுக்காடச் செய்கிறது. ஆண்டாண்டு காலமாக நமக்கு மிகவும் உவப்பானதாக இருந்து வந்த நமது பண்பாட்டினைச் சிதறடித்து நாசம் செய்கிறது. எனவேதான் மேலை நாட்டு தொழில் நுட்ப நாகரிகத்தை நம்மால் தள்ளிவிட முடியவில்லை. அதே நேரத்தில் அது செய்யும் பண்பாட்டு நாசங்களையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்றைய தமிழன் எதிர்கொள்ளும் இன்னொரு முக்கிய சிக்கல் -அடையாளச் சிக்கல். தன்னைச் சுற்றி நிகழ்பவைகளோடு, சகமனிதர்களோடும் உரையாடல்களை நிகழ்த்துகிற அவன் தன்னோடும் உரையாடிக்கொள்ளும் தேவை உளவியல் ரீதியாகவே இருக்கிறது. தமிழன் தன்னிடம் ஒரு வினாவை எழுப்பிக்கொள்கிறான் : நான் யார்? இதற்கு அவனிடமிருந்து இரண்டு விடைகள் கிடைக்கின்றன. 1. நீ உலகம் முழுமைக்கும் சொந்தமான உலக மனிதன். 2. நீ உன்னைச் சுற்றி அன்றாடம் உறவாடும் சமூகத்துக்கும் அதன் பண்பாட்டுக்கும் உரிய தமிழன். இவை இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அவனுக்குச் சிக்கல். அவன் தன்னை ஒரு சர்வ தேச மனிதனாகத் தேர்ந்து கொண்டு 'எம்.டிவி'யும் 'ஸ்டார் டிவியும்' காட்டும் உலகத்தில் வாழத் துணிந்தால் அவனது அன்றாட வாழ்க்கைக்கும் அதற்கும் எந்தவிதத் தொடர்புமற்றவனாக இருக்கிறான். எனவே சர்வதேச மனிதனாகத் தன்னைத் தேர்ந்து கொள்கிறபோதும் அவன் அந்நியனாகி விடுகிறான். சரி என்று தன்னை ஒரு தமிழன் என்று தேர்ந்து கொள்கிற போதும் தான் இந்தக் காலத்திற்குப் பின்தங்கியவனாகப் போய்விட்டோமோ என்கிற சுய இரக்கம் அவனைக் கவ்விக் கொள்கிறது.

இரண்டாவது, தொழில் நுட்ப யுகம் வந்துவிட்டது என்று பேசப்படுகிற இன்றைய கால கட்டத்தில் இந்தச் சோகத்தின் தீவிரம் இன்னமும் ஆழமடைந்து விடுகிறது.

இத்தகைய ஒரு கால கட்டத்தில் வாழும் ஒரு ஓவியனும் சிற்பியும், இசைக் கலைஞனும் நடனமாடுபவனும் தனது கலை ஆளுமையில் ஒரு மாபெரும் விரிசல் ஏற்படுவதைக் காண நேருகிறது. நமது மரபுரீதியான கலைகளுடன் புதிய தொழில் நுட்பம் மோதி ஒரு புதிய கலை வெளிப்பாட்டைச் செய்யுமாறு கலைஞனைக் கட்டாயப் படுத்துகிறது. இந்தக் கட்டாயத்தை சமாளிப்பதற்கு கலைஞன் தன்னை தத்துவார்த்தமாகவே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியவனாகிறான்.

எண்ணற்ற வினாக்கள்

அழகியல் என்பது கலைகளைப் பற்றிய பிரச்சினைகளின் மீதான தத்துவரீதியான விசாரணை என்று பொதுவாகக் குறிப்பிடலாம். கலைப் படைப்பு, கலைப்படைப்பைச் செய்த கலைஞன், படைப்பின் பார்வையாளன், படைப்பின் விமர்சகன் ஆகியவை பற்றிய வினாக்களை அழகியல் சதா எழுப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த அடிப்படை வினாக்களுக்கான விடைகளைத் தேடும் முயற்சியில் தமிழன் இறங்குவானானால் அவனது அழகியல் ஆளுமையின் பலம், பலவீனம் ஆகியவை குறித்த ஒரு தரிசனம் கிடைக்கும். இந்த தரிசனம் தன்னையே தான் அறிந்து கொள்ள அவனுக்கு உதவி செய்யும். இதனால் இருமுக பிறவியாக இன்னல்படும் தமிழன், தான் இழந்த ஆளுமையை மீட்டெடுக்க முடியும்.

இதன் பொருட்டு தத்துவ சிந்தனையின் ஒரு பகுதியாகவே அழகியலை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அந்த சிந்தனைகளின் தொகுதி நமது மண்ணின் பார்வையாகவே அமையும் என்பதால் அதனைத் தமிழ் அழகியல் என்றே நாம் குறிப்பிடலாம். இப்படி தமிழ் அழகியல் என்று நான் குறிப்பிடுவதுகூட ஒரு வகையில் பார்த்தால் மேலை உலகின் சுற்றி வளைத்த பாதிப்புதான் என்று சொல்லவேண்டும்.

மூன்றாம் உலக நாடுகளின் பண்பாடுகள் எப்போதெல்லாம் மேல்நாட்டுப் பண்பாடுகளினால் அச்சுறுத்தப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அவை தங்களது பண்பாட்டு அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் தேவை ஏற்பட்டு விடுகிறது. தங்களது பண்பாட்டுக் கூறுகளை தற்கால சிந்தனை வெளிச்சத்தில் மறு பரிžலனை செய்ய வேண்டியதாகிறது.

இத்தகைய ஒரு தேவையின் வெளிப்படாகத்தான் டாக்டர் ஆனந்த குமாரசாமி எனும் கலைமேதை இந்திய கலைகளின் அடிப்படைப் பண்புகளை எடுத்துரைக்கத் தொடங்கினார். 'சிவானந்த நடனம்' எனும் தன் நூலில் நடராச தத்துவத்தைப் பற்றிய விரிவானதொரு ஆராய்ச்சியை அவர் நிகழ்த்தினார்.

தமிழ் அழகியல்-நேற்றைய, இன்றைய தமிழனின் சமூக வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் இருக்கும் தனிப்பட்ட அடையாளம் கொண்ட அழகியல் கூறுகளை வற்புறுத்துகிறது. இதனால் இன்றைய தமிழனுக்கு கலை ரீதியான சுயமரியாதையுடன் கூடிய ஒரு புரிதலை உண்டாக்குகிறது. அவனுக்கு என்று பெருமைப் படத்தக்க ஒரு கலை அடையாளத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலமாக தமிழனுக்குள் தொன்று தொட்டு அவனை அறியாமலேயே தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கலை ஆளுமையை கண்டு பிடித்துத் தருகிறது. தமிழனின் கலை ஆளுமையை இன்று கண்டு பிடிப்பது என்பது, அவனது எதிர்கால கலைபடைப்புகளை தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களுடன் கொண்டு வர நிச்சயம் வழி வகுக்கும்.

சர்வதேசக் கலை

இன்றைய தமிழனின் வாழ்வில் தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள் குறைந்து கொண்டு போகிறபோது, அவனது கலைப் படைப்பில் மட்டும் அது எவ்வாறு வந்து அமைய முடியும்.

ஓவிய, சிற்பக்கலைகள் என்று வருகிறபோது அவை நாடு, இனம், மொழி ஆகியவற்றைக் கடந்த ஒரு சர்வதேச பார்வை மொழியில் பேசுபவை? அவற்றைத் தமிழ் எனும் சிமிழுக்குள் அடைப்பது என்ன நியாயம்?

தமிழ் அழகியல் என்கிற கருத்தை முன் வைக்கிறபோதே இத்தகைய எண்ணற்ற வினாக்கள் எழவே செய்யும்.

கலையில் இன, பண்பாட்டு அடையாளங்களைத் தேடுவது என்பது பிற்போக்கானது என்று நினைக்கும் தமிழர்கள் இங்கு ஏராளமாகவே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பெற்றிருக்கும் கல்வி அவர்களை அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்திருக்கிறது.

இத்தகைய வினா எழுப்புகிறவர்களுக்காக நான் பாரீஸ் பல்கலைக் கழகத் தத்துவ பேராசிரியரான மைக்கேல் டப்ரேன் என்பவரின் வார்த்தைகளை எடுத்துக்காட்ட வேண்டி இருக்கிறது.

"கான்ஸாஸ் கணிதம் என்றோ, சோவியத் உயிரியல் என்றோ எதுவும் இல்லையென்று சொல்ல முடியும். ஆனால் பாலினீசிய நம்பிக்கை, ஸ்பானிய கலைப்போக்கு என்று ஒன்றும் இல்லை என்று நாம் கூற முடியுமா? கவிதையை உண்மையில் மொழி பெயர்க்க முடியாது என்று நமக்குத் தெரியுமல்லவா?"

சர்வதேசக்கலை என்பதின் பொருளை நாம் தவறுதலாகப் புரிந்து கொள்கிறோம். சர்வதேச கலை என்பது எல்லா தேசங்களுக்கும் உரியது என்று பொருள்படுவது அல்ல. அது ஒரு குறிப்பிட்ட நாடு, இனம், மொழி ஆகியவற்றைச் சேர்ந்த தனி பண்பாட்டு அடையாளம் கொண்டதுதான். ஆனால் சர்வதேச அளவில் அனைவரின் உணர்வுகளுடனும் உறவாடும் கலைரீதியான கிளர்ச்சி மிக்கது என்பதுதான் அதன் பொருள்.

உலகப்பண்பாடு என்பதை நிர்மாணிக்க, இந்த உலகில் இருக்கும் எல்லா இன, மொழி, பண்பாட்டு வண்ணங்களையும் துறந்து அனைவரும் நிறமற்றவர்களாகி விட வேண்டும் என்பது பொருள் அல்ல. மாறாக ஒவ்வொருவரும் அவரவர்களுக்குள்ளேயே தோண்டிச்சென்று, தங்களுக்குள் இருக்கும் சிறப்பான பண்பாட்டுக் கூறுகளைக் கண்டறிந்து உலகப் பண்பாட்டிற்கு அவற்றை தங்களது பண்பாட்டின் சார்பிலான ஒரு பரிசாக அளிக்க வேண்டும். இந்தப் பங்களிப்பு நடை பெற வேண்டுமானால் ஒவ்வொரு மொழி, இனம், நாட்டைச் சேர்ந்தவர்களும் அவர்களது சிறப்பான அம்சங்களாக அடைந்த அடையாளங்களை இழந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

இன்றைய நவீன கலைகளைப் படைப்பவர்கள் புதிய போக்குகளை உண்டாக்க, நம்மைச் சுற்றி வாழும் மக்களை நிறைய படிக்க வேண்டும். மேல்நாட்டு புத்தகங்களைக் காட்டிலும் இன்றைக்கு வாழும் நமது மக்கள் நம் கலைஞனுக்கு அரிய பாடங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுப்பார்கள். பண்பாட்டு அடையாளங்களின் வேர்களை இலக்கியங்களைக் காட்டிலும் மக்களின் வாழ்க்கையே சிறப்பாகக் காப்பாற்றி வருகிறது.

ஆப்பிரிக்க நாட்டுக் கவிஞனும், நாடகாசிரியருமான நோபல்பரிசு பெற்ற வோல்லே சொயின்கா தனது நாடகங்களை ஆங்கிலத்தில் பிரிட்டனில் அரங்கேற்றி வெற்றி காண்கிறார். அவர் நிச்சயமாக ஒரு சர்வதேச நாடகாசிரியர். ஆனால் அவர் அவரது சொந்த மண்ணான நைஜ"ரியாவில், தான் சேர்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு மட்டுமே சொந்தமான பண்பாட்டு அடையாளங்களுடன்தான் தனது நாடகங்களைத் தயாரிக்கிறார்.

இதேபோன்றுதான் ஐசக் பெஷ்விஸ் சிங்கர் எனும் யூத எழுத்தாளர் அமெரிக்காவில் கடந்த முப்பது ஆண்டுகளாகக் குடியேறி வாழ்ந்து வருகிறார். அவர் அமெரிக்காவின் குடிமகன். ஆனால் இன்னமும் அவரது எழுத்துக்களின் அடிப்படை, தான் ஒரு காலத்தில் கூடிவாழ்ந்த, இன்று இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் யூத சமூகம் பற்றியதாகவே இருக்கிறது.

தற்காலத் தமிழ்க் கலை

நமது இன்றைய வாழ்க்கையில் தொடர்பற்று போய்விட்ட பழங்கால சிற்பம், ஓவியம் ஆகியவற்றை நாம் மறுபடியும் இங்குச் செய்யத் தொடங்கிவிடுவது என்பது பொருளற்ற செயல். நமது அன்றாட வாழ்வில் தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள் அதிகம் இல்லை என்பதினால் நாம் மீண்டும் பழமைக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதும் தேவையில்லை. நமது பழம்மரபுகள் இன்றைய தேவையின் ஒரு பகுதியாக மாறினாலன்றி அவை தற்கால தமிழ்க்கலையின் ஒரு அங்கமாக மறுஉயிர்ப்பு அடைய முடியாது.

தற்கால ஓவியர்களில் சிலர் தங்களது தமிழ் அடையாளம் குறித்த உணர்வின் காரணமாக, மேல்நாட்டு முறையிலான பாணியில் இன்றைய நடைமுறைக்காட்சிகளை படைக்கிறார்கள். மூக்கையா எனும் தமிழகத்துச் சிற்பி, பறை அறைதல், காவடி ஆட்டம் போன்ற காட்சிகளை பிக்காசோ, ஹென்ரி மூர் போன்றவர்களின் பாணியிலும், பி.பெருமாள் எனும் சென்னை ஓவியக்கல்லூரியின் பேராசிரியர் ஃபாவிஸ்டுகளின் பாணியில் நாட்டுப்புற மக்களையும், முத்துசாமி 'கொல்லாஜ்' எனும் கலவை ஓவிய பாணியில் கிராமக் காட்சிகளையும் படைக்கின்றனர். இவர்கள் நல்ல திசையில் பயணப்படுகிறார்கள் என்றாலும் மேலும் தீவிரமான கலைப்பரிசோதனைகளை இவர்கள் மேற்கொள்ளலாம். அப்போது தமிழ் அழகியலும், தமிழ்க்கலையும் மிக உன்னதமான ஒரு இடத்தைப் பிடிக்கும் என்பது நிச்சயம்.

இது குறித்து நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான ஒன்றாக இந்தியாவின் தலை சிறந்த ஓவியரும், விமர்சகருமான கே.ஜி. சுப்பிரமணியம் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

"நவீன இந்திய ஓவியர்கள் தங்கள் மரபுகளோடு உண்மையான இணக்கம் கொள்ள வேண்டுமானால் அவர்கள் தங்களுக்கே உரிய முறையில் அவற்றைப் புரிந்து கொள்ளும் சாதனையைச் செய்ய வேண்டும். இதனை அவர்கள் செய்வார்கள் என்றால், அவர்களது மரபு பல தலைகள் கொண்ட ஒரு அசுரனைப்போல உயிர் பெற்றெழுந்து, அதனது பலவாய்களினால் அவர்களுடன் பேசத் தொடங்கிவிடும்".


தமிழ் அழகியல் : சில வினாக்கள் - இந்திரன்

அழகியல் அனுபவத்தின் சமூக இயல்பு குறித்து சிந்திக்கிறபோது தமிழ்ச் சூழலில் படைக்கப்பட்டுவரும் பல்வேறு கலைப் படைப்புகளை நாம் மேலும் ஆழமாகவும், சரியான வெளிச்சத்திலும் புரிந்துகொள்வதற்கு நமக்கு என்று ஒரு அழகியல் தத்துவத்தை உருவாக்கிக் கொண்டால் என்ன என்கிற ஒரு சிந்தனை எழுகிறது.

மரபும் நவீனமும்

கலையைப் பண்பாட்டின் மிக உயர்ந்த நிலையில் நிறுத்துகிறபோது, அக்கலையின் காலம் சார்ந்ததன்மையைப் பெரிதும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனால்தான் நவீன கலை என்று சொல்கிறபோது அது முதல் உலகப் போருக்குப் பிறகு மேலை நாடுகளில் தோன்றி கலை என்று புரிந்துகொள்கிற அதே நேரத்தில், அது தற்காலத்தன்மையையும் குறிக்கும் என்று மனதில் கொள்ளவேண்டும்.

பழைய தலைமுறையிடமிருந்து பெறப்பட்டு இன்றும் வாழ்ந்து வரும் அடையாளங்களையெல்லாம் தேடி எடுத்துத் திரட்டி அவற்றை ஆழமான புரிதலுக்கும், காய்தல் உவர்த்தல் அற்ற தத்துவ விசாரணைக்கும் உள்ளாக்குகிறபோது இன்றைய நமக்கான ஒரு அழகியலை நாம் கடைந்தெடுத்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் 'பழந்தமிழரின் பண்பாடு' என்ற பெயரில் உணர்வு ரீதியான பிணைப்பு கொண்டுள்ள பல பண்பாட்டுக் கூறுகள் இன்று அர்த்தமற்றவைகளாக வெளிறிப்போய் இருக்குமானால் அவை அடையாளம் கண்டு விலக்கப்படவும் வேண்டும்.

முன்னொரு காலத்திய நமது மூதாதையர்களின் கலை இலக்கிய படைப்புகளைப் பற்றிய கருத்தோட்டங்கள் என்ற காரணத்திற்காகவே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட வேண்டும் என்று கருதக்கூடாது. அதேபோல் பழங்காலத்தைச் சேர்ந்தது என்று ஒன்று தற்கால கலையின் புரிதலுக்கு உதவுமெனில் அது பழங்காலத்தியது என்ற காரணத்துக்காகவே தள்ளி வைக்கப்படவும் கூடாது.

இவற்றை ஏன் நான் வலியுறுத்துகிறேன் என்றால், 'தமிழ் அழகியல்' என்ற கருத்து, சர்வதேச ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட மேலை நாட்டு அழகியலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் ஒரு மொழி வெறிச்செயல் அல்ல என்பதைக் காட்டவேதான்.

சொல்லப்போனால் மேலைநாடுகளில் அழகியல் என்ற ஒன்றை தத்துவ விசாரணையின் ஒரு பிரிவாகவே பேணி வளர்த்து வந்திருக்கிறார்கள் என்கிற உண்மை என்னை இதில் ஊக்கப் படுத்துகிறது. பிளேட்டோ, அரிஸ்டாடில் காலத்திலிருந்து, கான்ட், ஹெகல் என்று தொடர்ந்து, பெனடெட்டோ க்ரோஸ், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், வைட்ஹெட், சுசான் லேங்கர் என்று தத்துவவாதிகள் பலரும் அழகியலை ஒரு செழிப்பான விமர்சன மரபுடன் வளர்த்து வந்திருக்கிறார்கள். இதனைப் பார்க்கிறபோது தமிழில் இத்தகைய விமர்சன மரபுகளை நாம் வைத்திருந்தோமா, இன்றுவரை வளர்த்து வந்திருக்கிறோமா என்ற வினாக்கள் எழுகின்றன.

தமிழ் அழகியலை எப்படி வளர்ப்பது ?

தமிழில் அழகியலை தத்துவ விசாரணையின் ஒரு பிரிவாக நாம் வளர்க்கவில்லை. இதை ஒப்புக்கொள்வதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை தொல்காப்பியம், நன்னூல் உரையாசிரியர்கள், பாஷ்யக்காரர்கள் என்று ஏராளமானவர்கள் தமிழில் இலக்கிய விசாரணைக்கான வழிவகைகளை மிகச் சிறப்பாகக் காட்டிச் சென்றுள்ளனர். இவற்றில் எவை எவை இன்றைய இலக்கியம், ஓவியம், சிற்பம், இசை ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கும், அவற்றின் சிறப்புத் தன்மைகளை அளவிடவும் பயன்படும் என்கிற கேள்வியையும் நாம் உடன் எழுப்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்.

'தமிழ் அழகியல்' என்ற ஒன்றை இன்றைக்கு வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன நேர்ந்து விட்டது? இந்த வினாவிற்கான விடை நீளமானது. சுருக்கமாகச் சொல்வதெனில் பலநேரங்களில் மேலை உலக சிந்தனைகளை எந்தவித விசாரணையும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்கிற அடிமை மனப்பான்மை நமக்கு இழைத்த இன்னல்கள் ஏராளம். மேலை நாட்டு கலை விமர்சகர்கள் நமது பண்பாடு, கலை குறித்த அரைகுறை அறிவினால் வைத்த ஒருதலைபட்சமான கோட்பாடுகள் நம்மையே நாம் தவறுதலாகப் புரிந்து கொள்வதற்கு வழிவகுத்துள்ளன. இன்றைக்கு நம்மிடையே வாழ்ந்து கொண்டு கலைப் படைப்பில் ஈடுபட்டுவரும் ஓவியர்கள், சிற்பிகள், இசைவாணர்கள் ஆகியோரை நாமே தவறாகப் புரிந்து கொள்ள இடமளித்துவிடுகின்றன. ஏனெனில் இவை நமது பண்பாட்டு வெளிச்சத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. இதனாலேயே நமது கலைப் படைப்புகளை எடை போட நமக்கொன்று ஒரு அழகியலை உருவாக்கும் பெருமுயற்சியில் நாம் ஈடுபட வேண்டியவர்களாகிறோம்.

எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம்; சென்னை ஓவியக் கல்லூரியின் மூத்த சிற்பியும், அகில இந்திய அளவில் தமக்கென ஒரு மூலசக்தி கொண்ட சிற்பங்களைப் படைத்து விடும் சக்தியும் கொண்ட மூக்கையாவின் சிற்பங்களைப் பற்றி நமது கலை விமர்சகர்கள் அனைவரும் விமர்சிக்கிற போது அவை காட்டுமிராண்டித்தனமானவை என்றும், மக்கள் கலைப்பண்பு கொண்டவை என்றும், 'மலைவாழ்மக்களின் கலை' என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். காமராஜ் மாவட்டத்தில் ஒரு உள்கிராமத்தில் பிறந்த மூக்கையா தன் இளமைக் காலத்தில் கண்டு களித்த ஜல்லிக்கட்டு, பறையறைதல், காவடி ஆட்டம் போன்ற காட்சிகளை தமக்கே உரிய நவீன பார்வையுடன் வடிவ எளிமை எனும் இன்றைய சிற்ப உத்திமுறையைப் பயன்படுத்தி செய்திருக்கிறார். இவை மேற்சொன்ன எந்த வகையிலும் அடங்காதவை. உண்மையில் இவை நவீன சிற்பம் என்கிற வகையைச் சேர்ந்தவை.

காட்டுமிராண்டித்தனமாக ஒரு இந்தியாவைக் காண பேராவல் கொண்டிருந்த மேல்நாட்டு கலை விமர்சகர்களின் வார்த்தைகளையும் புரிதல்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்ட ஒரு பண்பாட்டு அடிமைத்தனத்திலேதான் மேற்சொன்ன விமர்சகர்கள் குளறுபடி செய்திருக்கிறார்கள்.

இவற்றைத் தவிர்ப்பதற்காகவே நாம் நமக்கென்று ஒரு அழகியலை-தமிழ் அழகியலை-உருவாக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

எது தமிழர் மரபு ?

'தமிழ் அழகியல்' என்ற கருத்தை முன்வைக்கிறபோது மிகவும் வழுக்கலான ஒரு நிலத்தில் கால் வைக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ஏனெனில் தமிழ் என்ற சொல் இங்கு பலரால் பலகாலக் கட்டங்களில், பல்வேறுவித அர்த்த தளங்களில் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மரபுகள் என்று நமக்கு சுட்டிக்காட்டப்பட்டவை உண்மையில் நமது மரபுகள்தானா? எது தமிழ்ப் பண்பாடு, யார் தமிழன் போன்ற கேள்விகளுக்கு பதில் காணாமல் தமிழ் அழகியல் என்கிற ஒன்றை உருவாக்கிவிட முடியுமா?

கிரகம் தழுவிய ஒரு பண்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் அழகியல் என்பது கிணற்றுத் தவளைத்தனமானது அல்லவா?

வினாக்கள் ஏராளமாக எழுகின்றன. இவற்றிற்கு தத்துவ ரீதியாக விடைகளைத் தேட முயற்சிக்கையில், தமிழ் அழகியல் என்ற ஒன்றைக் கட்டுவதற்கு இங்கு என்னென்ன நிலைமைகள் தேவை என்பதைக் குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட வேண்டும்.

முதலில் நம்பிடையே தீவிரத்தன்மையுடனும், கலைக் கோட்பாட்டுடனும் இயங்கும் ஓவியர்களும், சிற்பிகளும் இணைந்த ஒரு கலை இயக்கம் தேவை. இதில் தமிழ்த்தனமான புரிதல்களுடன் கூடிய ஓவியங்களையும் சிற்பங்களையும் நாம் வரவேற்க வேண்டும். இத்தகைய கலை இயக்கம் தமிழகத்தில் இதுவரையிலும் நடைபெற வில்லை.

அடுத்ததாக நமக்கென்று ஆழமான விமர்சன மரபு தேவை. விமர்சனம் என்பதைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கான எல்லா நிலைமைகளும் இங்கு உள்ளன. நமது விமர்சன மரபுகளை அடையாளம் காண்பதற்கு பதிலாக நக்கீரன்-சிவன் மோதல், இலக்கியம் குறித்த தரநிர்ணயம் செய்ய ஒரு சங்கப் பலகை என்று கதைகள் வேறு உள்ளன. கோஷ்டி சண்டைகளையும், பூசல் வார்த்தைகளையும் விமர்சனம் என்றும் அழகியல் என்றும் தவறாகப் புரிந்துகொள்ளும் இழி நிலைக்கு நாம் ஆளாகி இருக்கின்றோம்.

கலை விமர்சகர்கள் என்று தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவர்கள் அழகியல் மதிப்பீட்டிற்கு மிகவும் தேவைப்படுகிற அடிப்படை அழகியல்வினாக்கள் குறித்த பதில்களைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். விமர்சனங்களை நிகழ்த்துவதற்கு வசதியான அறிவார்ந்த ஒரு வசன நடையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதற்கான அழகியல் சொற்களுக்கான வரையறைகளைச் செய்யும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்.

தமிழ்முறையிலான ஒரு கலைத்திறனாய்வை மேற்கொள்ள நாம் நமது பழைய மரபுகளை இன்றைய விமர்சன முறைகளினால் எருவிட்டு வளர்க்க முடியுமானால் மிகச் சிறப்பாக இருக்கும். இது குறித்து தற்கால தமிழ் விமர்சகர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழவனின் கீழ்க்கண்ட வரிகள் நல்ல திசையில் இவர்கள் பயணப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

"என் கருத்துப்படி ஐந்திணைக் கோட்பாடு உலகளாவிய மானுடவியல் பகுப்பாய்வு முறைகளோடு ஒப்பிடப்பட்டுப் புது உருவம் பெற்றால் இன்றைய அமைப்பியல் தரவுகளுடன் இணைக்கப்பட முடியும். உதாரணமாக, குறிஞ்சி என்பதை ஒருவித குறி என்று எடுத்துக் கொண்டு முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பவற்றை அதன் துணைக்குறிகளாகக் கொண்டு இன்றைய அமைப்பியல் சிந்தனைகளோடு இணைத்து அமைப்பியல் போல ஒரு ஐந்திணைக் கோட்பாடு இன்றைய இலக்கியத் திறனாய்வுக்குச் சமைத்தெடுக்க முடியும்".

இத்தகைய தன்னம்பிக்கை கொண்ட விமர்சகர்கள் கூட மேலைநாட்டு கருத்துக்களை சரிவர செரித்துக் கொள்ளாமல் சில இடங்களில் கையாள்கிற போதுதான் மேற்சொன்ன அழகியல் பிரச்சினைகள் எழுகின்றன.

தமிழ் அழகியலை அடைய...

தமிழ் அழகியலை ஒருநாளிரவில் கட்டி முடித்துவிட முடியாது. இதற்காக அகழ்வராய்ச்சிகள் தொட்டு பழைய சிற்பங்கள், இசைக் கருவிகள், ஓவியங்கள் போன்றவற்றை இன்றைய புரிதலுடன் கூடிய விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும்.

வாய்மொழியாக இருக்கும் நாட்டுப் பாடல்கள், கலை பற்றிய பழமொழிகள், நடனமுறைகள் பற்றி செவிவழிச் செய்தியாக இருக்கும் பாடங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட வேண்டும். இந்தப் பதிவுகள் செய்வதற்கு சினிமா, வீடியோ, ஆடியோ கருவிகள் மிகவும் உதவி செய்வனவாகும்.

குறியீடுகள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் என்று இன்றும் நம்பிடையே வாழும் தமிழ்ப் பண்பாட்டுப் பகுதிகளை நாம் ஆராய வேண்டும்.

இவற்றை சாதிப்பதற்கு தனிமனிதர்கள் போதாது. தமிழ்ப் புரிதலுடன் கூடிய கலை இயக்கங்கள் இங்கு தோன்ற வேண்டும். ஏராளமான கலைப்படைப்புகள் படைக்கப்பட வேண்டும். வாழும் ஓவியர்கள் பற்றிய விவாதங்கள் நிகழ்த்தப்பட வேண்டும்.

பிரதேச ரீதியாக தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றை நாம் வரையறுக்க முடியாது. தமிழ் மொழியும், அதனைச் சார்ந்த பண்பாட்டில் வாழும் தமிழ் மக்களும் தமிழகம், இலங்கை, மலேசியா போன்று உலகின் எந்தெந்த பகுதிகளில் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ் அழகியல் குறித்த சிந்தனைக்கு தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்.


இந்திரன் - 1948-ல் பாண்டிச்சேரியில் பிறந்தவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் கலை விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவை செய்துவருபவர் இவர். இவரது ஆங்கிலக் கவிதை நூலான 'Syllables of Silence' கவிதைகள் கிரேக்க மொழியில் பெயர்க்கப்பட்டு Athens இதழில் வெளிவந்துள்ளன. கலைவிமர்சனங்கள் பிரெஞ்சு மொழியில் வெளிவந்துள்ளன. Express Weekend. Times of India, Economic Times ஆகிய நாளேடுகள் உட்பட பல்வேறு சிற்றேடுகளிலும் எழுதிவருபவர்

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home