Tamil Drama & Film -
- நாடகத் தமிழ்
நாடகத் தமிழ் வளர்த்த
பரிதிமாற்கலைஞர்
அறந்தை நாராயணன்
தமிழைச்
சொல்லித் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் மிகப் பலர்; தமிழை
வளர்த்தவர்கள் மிகச் சிலர்; அந்த மிகச் சிலருள் ஒருவர் -
பரிதிமாற் கலைஞர்!
பெற்றோரிட்ட பெயர்: சூரிய நாராயண சாஸ்திரி.
வெள்ளையர் ஆட்சியினால் ஆங்கில மொழி ஏற்றமுடன் திகழ்ந்திட்ட 1870-ம்
ஆண்டு ஜூலை மாதம் 7-ம் நாளன்று, மதுரை மாநகருக்கருகே விளாச்சேரி
என்னும் கிராமத்தின் வைதீகக் குடும்பமொன்றில் பிறந்தவர் சூரியநாராயண
சாஸ்திரி.
தந்தை கோவிந்த சிவா சாஸ்திரியிடம் சமஸ்கிருதமும், மதுரைப் புலவர்
சபாபதி முதலியாரிடம் தமிழும் பயின்ற சூரிய நாராயணன் ஆங்கிலம் கற்றது
கிறித்துவக் கல்லூரியில்.
அங்கே இளங்கலை வகுப்பில், ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பாடம் நடத்த வந்த
கல்லூரி தலைமையாளர் டாக்டர் மில்லர் என்பார், டென்னிஸன் இயற்றிய 'MORTE
D'ARTHUR' செய்யுள் நூலின் திறம் வியந்து ''இது போன்ற உவமையழகு தமிழில்
உண்டா?'' என்று சூரிய நாராயணனைக் கேட்டார்.
''டென்னிஸனுக்கு ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னரே, எங்கள் கம்பன்,
தனது 'இராம காதை'யில் உவமையழகு கொப்பளிக்க எழுதியுள்ளார்!''-என்றார்
சூரிய நாராயணன்.
''திராவிட சாஸ்திரி''!
டாக்டர் மில்லரின் வேண்டுகோளுக்கு இணங்க ஷேக்ஸ்பியரின் 'வெனிஸ்
வர்த்தகன்' நாடகத்தின் ஒரு பகுதியைத் தமிழாக்கம் செய்தார் சூரிய
நாராயணன்.
1892-ம் ஆண்டு இளங்கலை இறுதியாண்டுத் தேர்வில் தமிழிலும்,
தத்துவத்திலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறி மன்னர் பாஸ்கர சேதுபதி
பொற்பதக்கம் பெற்ற சூரிய நாராயணனை கிறித்துவக் கல்லூரியே தனது
தமிழ்த்துறை ஆசிரியராக ஏற்றுக்கொண்டது.
பெரும் புலவர் சி.வை.தாமோதரம் பிள்ளை, சங்க இலக்கியங்களில் தேர்வு
நடத்தி, வெற்றி பெற்ற சூரிய நாராயணனுக்கு வழங்கிய சிறப்புப் பட்டம்:
'திராவிட சாஸ்திரி'!
இயற்றமிழ் வல்லவரான சூரிய நாராயணன், பெரும்புலவர் சி.வை.தாமோதரம்
பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க 'மதிவாணன்' என்னும் புதினத்தையும்
'தமிழ்மொழி வரலாறு' என்னும் ஆய்வு நூலையும் எழுதினார்.
'பரிதிமாற் கலைஞர்'
இசைத் தமிழிலும் தேர்ந்தவரான சாஸ்திரி 'தனிப் பாசுரத் தொகை' என்னும்
சிறிய அகவற்பாக்களால் இயற்றப்பட்ட இசைப்பாடல்களை நூலாக வெளியிட்டார்.
அப் படைப்பின்போதுதான் சூரிய நாராயண சாஸ்திரி 'பரிதிமாற் கலைஞன்' என
தனித்தமிழில் தன் பெயரைப் பதிப்பித்தார். பரிதிமாற் கலைஞரின் மற்றுமொரு
பாடல் தொகுப்பு 'பரவலர் விருந்து'.
பரிதிமாற் கலைஞரைப் பெரிதும் கவர்ந்தது 'நாடகத் தமிழ்.' அவர் காலத்தில்
நாடகங்கள் பல இருந்தன. ஆனால் இலக்கணம் மீறியவை. 'நாடகவியல்' என்னும்
நூலை எழுதினார் பரிதிமால் கலைஞர்.
அதுவே, தமிழின் முதல் நாடக இலக்கண நூல்!
தாமே வகுத்த இலக்கணத்திற்கு ஏற்ப 'கலாவதி' என்னும் நாடகத்தையும்
எழுதினார். இந்நாடகம் சென்னை எழும்பூர் விக்டோரியா பப்ளிக் ஹாலில் 1897
ஏப்ரல் முதல் தேதியன்று அரங்கேற்றப்பட்டது. பரிதிமாற் கலைஞர் எழுதிய
மற்றொரு நாடகம்: 'ரூபாவதி-அல்லது-காணாமற் போன மகள்'
நடிப்புக் கலையிலும் தேர்ந்தவராதலால் 'கலாவதி' நாடகத்தில்
கலாவதியாகவும் 'ரூபாவதி' நாடகத்தில் ரூபாவதியாகவும் பெண்வேடமேற்று
நடித்தார்.
இவரது மற்றொரு நாடகம்: 'மான விஜயம்'
இவர், தமது நாடகப் பாத்திரங்கள் வாயிலாக பெண்மையின் சிறப்பு,
ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றைப் போற்றினார்.
தாம் இயற்றிய நாடக நூல்களின் வகையினை 'நாமகள் சிலம்பு' எனவும்,
செய்யுள் நூல் வகையினை 'தமிழ் மகள் மேகலை' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
''தமிழ் உயர்தனிச் செம்மொழி! அது வடமொழிக்குச் சற்றும் தாழ்ந்தது அல்ல!
அன்றியும் நடைமுறையில் பயிலப்படும் மொழி தமிழ்! எனவே ஓராற்றால்
வடமொழியிலும் தமிழ் சிறந்தது!'' என்பது பரிதிமாற் கலைஞரின் கருத்து.
இந்தக் கருத்தையே தமது படைப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம் இவர்
நிலைநாட்டினார்.
பகலில் ஓய்வில்லா கல்லூரிப் பணி. இரவில் நாடகங்களைப் பயிற்றுவித்தல்;
நடித்தல்; எழுதுதல்; பிறர் நாடகங்களைக் காணுதல். ஓயாத உழைப்பின்
காரணமாக நோயுற்றார். 33 வயதில் அவரது வாழ்வு முற்றுப் பெற்றது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1973-ம் ஆண்டு அக்டோபரில் நாடகக் கலை
வளர்த்த பம்மல் சம்பந்த முதலியார் (1873), சி.கன்னையா (1872),
பெரும்புலவர் பரிதிமாற் கலைஞர் (1870) ஆகிய மூவரின் நூற்றாண்டு விழாவை
ஒரே மேடையில் நடத்தியது; விழாவையொட்டி சிறப்பு மலர் ஒன்றையும்
வெளியிட்டது.
அந்த மலரில், பரிதிமாற் கலைஞர் பற்றி கவிஞர் எஸ்.டி.சுந்தரம்
எழுதினார்.
நாடகங்கள் எழுதியதில்
நடித்ததோடு
நல்லதொரு இலக்கண நூல்
செய்த மேலோன்!
கூடல் நகர் தமிழ்ச் சங்கம்
கண்ட நாளில்
குலவுதமிழ் மேவபணி
கொண்ட நூலோன்!
பரிதிமாற் கலைஞனெனும்
மதுரை ஆசான்!
பரிவுடனே அந்த நாளில்
பயில்வோர் உள்ளம்
உருகுமொரு உணர்ச்சியொடு
தமிழ் வளர்த்தான்
உயர்ந்த மனச் செம்மல் புகழ்
ஓங்கி வாழ்க!
சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு (1967) விழா' மலரில், பரிதிமாற் கலைஞர்
பற்றி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. எழுதினார்.
''சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரைத் தூய தமிழிலே 'பரிதிமாற்
கலைஞர்' என்று மாற்றி அதனை வழக்கத்திலும் கொண்டு வந்தார். பரிதிமாற்
கலைஞர், 33 ஆண்டுகளே மண்ணுலகில் வாழ்ந்தார். அச் சொற்ப காலத்தில் தமிழ்
நாடகக் கலைக்குப் புது மெருகு கொடுத்து தமிழ்மொழிக்கே புது வாழ்வு
தேடிவிட்டார். யாக்கை நிலையாமையை அறிந்தவர் ஆதலால், இரவு பகலாகக்
கண்விழித்து போதிய உணவு கொள்ளவும் தவறி, படிக்க வேண்டியவற்றையெல்லாம்
படித்தார், எழுத வேண்டியவற்றையெல்லாம் எழுதி முடித்தார். ஓய்வின்றி
உழைத்ததனால், எலும்புருக்கி நோய் கண்டு, இளமையிலேயே உயிர் நீத்தார்.
அவரது வாழ்வு முடிந்தது. ஆனால், தமிழுக்கு அவர் துவக்கி வைத்த புது
வாழ்வு நீடிக்கிறது. அதற்கு முடிவே இல்லை!''
சிறப்புச் செய்திகள்:
பரிதிமாற் கலைஞர் இயற்றிய 'தனிப் பாசுரத்தொகை' என்னும் நூலை,
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தமிழ்ப் புலவர் டாக்டர் ஜி.யூ.போப்,
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
அவர் எழுதி அரங்கேற்றி நடித்த இன்னொரு நாடகம்: 'சூர்ப்பனகை'.
|