Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil Art > Drama > பம்மல் சம்பந்த முதலியார்
 

Tamil Drama & Film -  - நாடகத் தமிழ்

பம்மல் சம்பந்த முதலியார்
Pammal Sampantha Muthaliyar

தெ.மதுசூதனன் in Aaramthinai

24 September 2002


Pammal Sampantha Muthaliyar பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சமூகச்சீர்த்திருத்தம், சமூகஅசைவியக்கச் செயற்பாட்டில் முக்கியமான இடத்தைப் பெற்றது. சமூகவிழிப்புணர்வுமிக்க பலரை பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட வைத்தது. இவ்வாறு உருவான ஆளுமையாளர்களுள் ஒருவர்தான் பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964).

இவரது மூதாதையர் சென்னையை அடுத்த பம்மல் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பம்மலின் தந்தையார் சென்னையில் பணியாற்றியமையால் சென்னையிலேயே இவர்களது குடும்பம் வாழ்ந்து வந்தது.

பம்மல் 1.2.1873 இல் பிறந்தார். சென்னை நகரவாழ்க்கை இவருடைய பல்துறை வளர்ச்சிக்கு பயனாக இருந்தது. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலக் கல்வியுடன் கூடிய நவீன கல்வி கேள்வியிலும் சிறப்புற்று விளங்கினார். மாநிலக் கல்லூரியில் பிஏ படித்து பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடப்பிரிவிலும் சேர்ந்து படித்தார்.

பின்னர் வழக்கறிஞராக வேண்டி சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். சிறந்த வழக்கறிஞராக எல்லோராலும் பாராட்டுப் பெறும் வகையில் உயர்ந்தார். 1924ஆம் ஆண்டு சிறுவழக்கு நீதிமன்றதின் நீதிபதியானார். நீதிக்கும் நேர்மைக்கும் தான் வழங்கும் தீர்ப்புகள் முன்மாதிரியாக அமைய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டார்.

சம்பந்தனாரின் குடும்பம் சைவ சமயச் சார்புடையது. இது அவரின் வாழ்வியல் நெறிமுறைகளில் பெரும் தாக்கம் செலுத்தியது. சமயத் தொண்டுகள் செய்வதில் அதிக அக்கறையுள்ளவராகவும் இருந்தார். 1900 ஆம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராகப் பணயாற்றினார். இத்தருணத்தில் ஆலயத்தில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார். குறிப்பிட்ட நேரத்தில் பூஜை நிகழ்ச்சிகளும் விழா நிகழ்ச்சிகளும் நடந்தேற வேண்டும் என்று கருதி அதனை நடைமுறைப்படுத்தினார். கோயில் வரவு செலவுகளை அறங்காவலர் நேரடியாகச் செய்யாது வங்கித் தொடர்புடன் செய்ய வேண்டும் எனும் நடைறையை உருவாக்கினார்.

இதுபோல் பல்வேறு ஆலயத் திருப்பணிகளிலும் சம்பந்தனார் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபட்டார். ஆனாலும் அவரது முழுமையான ஈடுபாடு நாடகத்துறையில் இருந்தது. 1891 முதல் நாடகக்குழுவை உருவாக்கி நாடகம் நடத்துதல் என்பதை விடாது மேற்கொண்டார்.

"என்னுடைய பதினெட்டாவது வயதுக்கு முன், யாராவது ஒரு ஜோசியன் 'நீ தமிழ் நாடக ஆசிரியனாகப் போகிறாய்' என்று கூறியிருப்பானாயின், அதை நானும் நம்பியிருக்க மாட்டேன், என்னை நன்றாயறிந்த எனது வாலிப நண்பர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு மிகவும் அருகாமையில் பல வருடங்களுக்கு முன் ஒரு கூத்துக் கொட்டகையிருந்தபோதிலும், சென்னை பட்டணத்தில் அடிக்கடி பல இடங்களிலும் தமிழ் நாடகங்கள் போடப்பட்டபோதிலும், அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையாவது நான் ஐந்து நிமிஷம் பார்த்தவனன்று. நான் தமிழ் நாடகங்களைப் பாராமலிருந்தது மாத்திரமன்று; அவைகளின் மீது அதிக வெறுப்புடையவனாகவுமிருந்தேன்."

இவ்வாறு தமிழ் நாடகங்களில் ஆரம்பத்தில் வெறுப்புற்றிருந்த இளைஞன் வெறுப்பு நீங்கி தமிழ் நாடகங்கள் மீது விருப்புண்டாகி தமிழ் நாடக வரலாற்றின் போக்கில் திசை திருப்பங்களை, புதிய வளங்களை ஏற்படுத்தி மறுமலர்ச்சி உருவாகக் காரணமாகயிருந்தவர் பம்மல் சம்பந்த முதலியார் .

பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டது. ஆங்கிலக் கல்வி அறிமுகமாயிற்று. புதிய இலக்கிய வகைமைகள் தமிழுக்கு வந்து சேர்ந்தது.

ஆங்கிலேய வழித் தாக்கத்தினால் உருவான மாற்றங்களைத் தமிழ் அரங்கக் கலையும் உள்வாங்கத் தொடங்கிற்று. 'பார்ஸி தியேட்டர்' மேடை நாடக மரபில் புதிய செழுமைப் பாங்குகளைக் கொண்டு வந்து சேர்த்தது. இக் காலத்தில் தமிழ் நாடக மரபை, கால மாற்றத்தின் அசை வேகத்துக்கு ஏற்ப மாற்றியமைத்து வளர்ச்சிக்குத் தளம் அமைத்துச் சென்றவர்களுள், அந்த மரபின் வழியே திருப்புமுனையாக வருபவர் பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964)

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகத்தின் நிலை மிகவும் கவலைப்படக்கூடியதாகவேயிருந்தது. கற்றவர்களால் நாடகக்கலை வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்தது. நடிகர்களைக் கூத்தாடிகள் என ஏளனமாக நோக்கும் பார்வையே பரவலாகயிருந்தது. இந்தக் காலகட்டத்தில் பட்டதாரிகள், நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என கற்றோர் குழாம் நாடகத்தில் ஈடுபாடு கொண்டு நடிகர்களாக நடிப்புத் திறனில் வெளிப்பட்டு நாடகத்துக்குப் புத்துணர்வும் புதுப்பொலிவும் ஏற்படக்கூடிய சூழலைப் பம்மல் கொண்டு வந்தார்.

நகரம் சார்ந்த கற்றோர் குழாம் நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டு தொழிற்படும் போக்கு உருவாவதற்கு அடிப்படையான தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர். இதிகாச நாடகங்களையும் புராண நாடகங்களையும் நடத்தி வந்த தொழிற்முறை நாடகக் குழுவினரின் போக்கையும் மாற்றினார். சபா நாடகங்கள் என்னும் போக்கில் புதுத் திருப்பம் ஏற்படுத்தினார். 1891-ஆம் ஆண்டில் 'சுகுண விலாச சபா' என்ற பயில் முறைக் குழுவைத் தோற்றுவித்து சுமார் நூறு நாடகங்களுக்கு மேல் எழுதியும் தயாரித்தும் தாமே நடித்தும் நாடகக் கலைக்குப் புது ஊற்றை வழங்கிச் சென்றார். ஆங்கில நாடகங்களையும் வட மொழி நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அவற்றை மேடைகளில் நடித்தும் தமிழ் நாடகத்திற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். ஆங்கில நாடகங்களின் அமைப்பைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களை அமைத்தார்.

அந் நாட்களில் தமிழ் நாடகங்கள் விடிய விடிய நடப்பதுண்டு. இந்நிலையை மாற்றித் தமிழ் மேடை நாடகங்களை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கால எச்சரிக்கையை முன்னிறுத்தினார். இவ்வாறு நாடகத்திற்குரிய கால எல்லையை வரன்முறை செய்தவர்.

வளர்ச்சியுற்ற பார்ஸி நாடக மரபின் வருகையினால் பழைய மரபு செல்வாக்கிழந்தது. நாடகம் என்பது ஒரு சமூக நிறுவனமாகத் தோற்றம் பெற்றது. இந்த வளர்ச்சியில் பம்மல் சம்பந்த முதலியாரின் பங்கு முக்கியமானது.

சம்பந்தனாரின் கலைப் பணிகளென: நாடகத்தில் நடிப்பு, நாடகங்களை இயக்குதல், நாடகப் பிரதி உருவாக்கல், நாடக மேடையைச் சீர்திருத்தல், கற்றோர் குழாமை நாடகத்துடன் இணைத்தல் என பல பணிகளைக் குறிப்பிட முடியும். ஆக்கமான சிந்தனை, அயராத உழைப்பு, தொடர்ந்த தேடல், கால மாற்றத்துக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படும் பாங்கு இவற்றின் மூலம் பம்மல் நாடகக் கலைக்குப் புத்துயிர்ப்புக் கொடுத்தார்.

பம்மல் இளமையாகயிருந்தபொழுது தலைமைப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின்னர் வயது ஏற ஏற அந்தந்தப் பருவத்துக்குத் தக்கவாறு பாத்திரங்களை ஏற்று நடித்தார். அந்த அளவுக்கு நடிப்புக்கலை மீதான ஈடுபாட்டில் அதிகம் அக்கறை செலுத்தினார். தன்னை முதன்மைப்படுத்தும் நிலையில் நடிப்புக்கான நடிகர்களைத் தேர்வு செய்வதில் அதிகம் அக்கறை காட்டாதவர்.

நாடகக் காட்சி அமைப்பில் புதிய நுணுக்கங்களைக் கையாண்டார். பல்வேறு நாடகக் குழுக்களின் நாடகங்களை பம்மல் பார்க்கக்கூடியவர். 'மதராஸ் டிரமாடிக் சொசைட்டி' என்னும் பெயரில் அமைந்த நாடகக் குழு நடத்திய நாடகங்களில் காட்சிகளுக்கு ஏற்பவும் இடங்களுக்கு ஏற்பவும் திரைகளைப் பயன்படுத்தியதைக் கண்ணுற்ற பம்மல், தன்னுடைய நாடகங்களிலும் அதே நுணுக்கங்களைக் கையாண்டார். இதுபோல் பாரசீக நாடகக் குழுவினர் நடத்திய நாடகங்களில் திரைகள், பக்கத் திரைகள், மேல் தொங்கட்டான்கள் முதலியவை புதிய முறையில் அமைந்திருந்தன. அவற்றையும் தனது நாடகங்களில் பம்மல் சிறப்பாகக் கையாண்டார்.

அதுவரையான தமிழ் நாடக மேடை அமைப்பில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இதற்கு பாரசீக நாடகக் குழுவினரின் வருகையே காரணம் எனலாம். அதாவது இதற்கு முன்னர் தமிழ் நாடகங்களில் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமிடையே இடைவெளி விடப்பட்டிருந்தது. இக்குறை பாரசீகக் குழுவினர் வருகையுடன் களையப்பட்டது.

பம்மல் இத்தகைய நுணுக்கங்களை உள்வாங்கித் தமிழ் நாடக மேடையேற்றத்தில் அதனை இயல்பாகக் கையாண்டார். மேடையில் காட்ட முடியாத சில கடினமான காட்சிகளைத் துணிவாக மேடையேற்றிய தனிச்சிறப்பு பம்மலுக்கே உண்டு என்பர். ஒரே மாதிரியான புராண நாடகங்களையே நடித்து வரும் மரபு காணப்பட்டது. மக்கள் முன்பே அறிந்த கதைகளையே நாடகமாக்கி வந்தனர். இந்நிலைமையைப் போக்க, மாற்றியமைக்கப் பம்மல் பலவிதமான நாடகங்களை எழுதினார். மேல்நாட்டு அமைப்பு முறையில் பலவகையான நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.

பம்மலின் நாடக மொழி கற்றோரின் பேச்சு வழக்கைப் பின்பற்றியது. இது இயல்பாகவும் எளிமையாகவும் காணப்பட்டது. கேட்பதற்கும் படிப்பதற்கும்கூட இந்த மொழி நடை இலகுவாக இருந்தது. பொதுவில் இவரது மொழிநடை நாடகங்கள் நடிக்கப்படும் போது அவை உலக இயல்புடன் இயற்கையாக ஒன்றிணைவதற்கு சாதகமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

தமிழ் நாடகம் புதுமையாகவும் சிறப்பாகவும் வளர்ச்சியடைய நாடகத்தின் பல்வேறு ஆக்கக்கூறுகள் குறித்த புதிய சிந்தனைக்கும் மாற்றத்திற்கும் உரிய வகையில் முயற்சி செய்தார். தக்க பலன் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு நாடக உருவாக்கத்தையும் திட்டமிட்டு உருக்கொடுத்தார்.

நாடகக் கலைஞர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கத் தக்க தளம் அமைத்துக் கொடுத்தார். கலைஞர்கள் என்றும் மதிக்கப்பட, கெளரவிக்கப்பட வேண்டுமென்பதை உறுதிப்பட கூறி வந்தார். அதற்கான சூழல்களை உருவாக்கினார்.

பம்மல் 1891-ல் சுகுண விலாச சபா என்ற நாடகக் குழுவைத் தோற்றுவித்தது முதல் 1930-ஆம் ஆண்டு வரை அவர் எழுதிய நாடக நூல்கள், அவரோடு நடித்த நடிகர்கள், நாடகத் தொழில்நுட்பக் கலைஞர்கள், பிற நாடகக் குழுவில் பணியாற்றிய கலைஞர்கள், அறிஞர்கள் என நாடகத் துறையோடு சம்பந்தப்பட்ட பலதரப்பினர் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் 'நாடக மேடை நினைவுகள்' எனும் நூலை எழுதியுள்ளார். தமிழ் நாடக வரலாறு எழுதுதல் முறைமைக்கு இந்நூல் குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பதிவு எனக் கூறலாம்.

பம்மலின் சாதனைகளைக் கெளரவிக்கும்விதத்தில் இந்திய அரசு 1959இல் 'பத்மபூஷன்' விருதை அளித்துப் பாராட்டியது. இவை தவிர சென்னை நாட்டிய சங்கம் பம்மலுக்கு சிறப்புச் செய்தன. இத்தகைய சிறப்புக்குரிய பம்மல் 24.9.1964இல் தனது கலைப் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாடக வளர்ச்சியை நோக்கும்பொழுது பம்பல் சம்பந்த முதலியார் என்பவரின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது. பம்பலின் நாடக முயற்சிகள், சிந்தனைகள் தமிழ் நாடக வளர்ச்சி புதுப் பரிமாணம் பெறுவதற்கு தக்க தளம் அமைத்துக் கொடுத்தது.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home