Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan >  Suran Por

Suran Por

suran
A poem by Raj Swarnan
8 November 1999
 

கந்தசஷடி விரதம் இந்துக்களின் விரதங்களுள் முக்கியமான ஓர் விரதமாகும். 14 - 11 - 1999 அன்று கந்தசஷடி விரதத்தின் இறுதி நாளாகும்.
அன்றுசூரன் போர் நடைபெறும். இது, அசுரர்களின் அரசனான சூரபன்மனை
அமரசேனாபதியாகிய முருகக் கடவுள்  வதம் செய்ததனை நினைவு கூரும் ஓர் நிகழ்வாகும்.


நீண்டநெடு நாளாய்
நிம்மதியிழந்திருந்த
வானவர் தமக்கு

விடிவு வேண்டிப்
பரமன் படைத்தனன் ஓர் பாலனை..
பல்லாண்டுகாலப் பகைமையழிக்கப்
படையெடுத்துப் புறப்பட்டான்
பன்னிரு கையோன்..
பாலகன் தானே - இவன்
படையணிகளோ பால்குடிகள் எனப்
பரிகசித்துரைத்தான் சூரன்.
பாலனேயாயினும் - நான்
பரமன் புதல்வன்
வேண்டாம் சூரா விபரீத விளையாட்டு
பேசித்தீர்ப்போம், போர் தவிர்ப்போம் என
வீரவாகுவைத் தூதனுப்பினான்
விருபாட்சன் மகன்..
அகங்காரம்
அடிமுதல் நுனிவரை
ஆட்டிப் படைக்க
அடித்து முடிப்பேன் உனை என
அறிக்கை விடுத்தான்
அசுரத் தலைவன்..

போர் முண்டது..
பெருத்த சண்டை..
வானவர் படை
வல்லமையுடன்
வாளெடுத்தெழுந்தது..
அலை அலையாய் வந்த
அமரர் சேனை முன்
அவுணர் சேனை ஆட்டங் கண்டது
..
தம்பி தாரகன் தலை கழன்றது,
சிதறியோடிய சேனையைச் சேர்க்க
சிங்கனை அனுப்பினான் சூரன்..
பரமன் பாலன் தம்
பக்கமுள்ளான் எனும்
புத்துணர்வுடன்
அசுர சேனையை
அடித்துத் துவைத்தது
அமரர் சேனை..
சிங்கனும் மாளச்
சூரன் சேனையோ
சுக்கு நூறானது..
ஆறுதல் கூறி அசுரர் சேனையைத்
தேற்றிட முனைந்தான் தேவர் எதிரி
பற்பல கூறிப் படையின் பயத்தைத்
தணிக்கை செய்து தயக்கம் போக்கினான்..
நின்றவர் சென்றவர்
தப்பியோடியோர்
தலைமறைவாகினோர்
யாவரும் வாரீர் எனத்
தண்டோராப் போட்டுத்
தானே சமரிற் பொருதனன் சூரன்..
ஆண்டுகள் பலவாய்
அமரர் இழந்த
ஆட்சியை மீட்டிட
அற்புத யுத்தம் அரங்கேறியது..
சூரர் சேனை இதுவரை காணாப்
புதிய ஆயுதம் - புறப்பட்டது..
நெடுந்தூரம் நீண்டுசென்று
நின்றவரெல்லாம் நிலைகுலைந்தோடச்
சுற்றிச் சுழன்று பாய்ந்தது
சுடர் வேல் ஆயுதம்..
காததூரம் சென்று
கற்று வந்த கலையெல்லாம்
கைகழுவி விட்டன
காசிபன் மகனை..
கடுந்தவமியற்றிக் கொணர்ந்த கலன்கள்
வெற்றுப் பொருட்களாய் வேல் முன் ஆயின..
சிவன் தந்த ஆயுதங்களுமா
சீவனிழந்தன எனச் சினந்தான்
சிங்கன் சகோதரன்..
முத்த சிவனே
முன்வந்துதவினாலும்
முனைப்புடன் எழுந்த இம்
முருகன் சேனையை
முறியடிப்பதினி முடியாதென்பதை
முழுதாயுணர்ந்த சூரன் - உயிரைக்
காத்திடல் கருதிக்
கலங்கியோடி
மரமாய் மாறி மயக்கப் பார்த்தான்..
எல்லாம் அறிந்த எங்கள் முருகன்
எடுத்தனன் வேலை.. நடத்தினன் லீலை..
அமரர் தம் உரிமையை நசுக்கிய
ஒற்றையுடல் கொண்ட
அசுரத் திணிவை
இரு கூறாக்கினான்
இறையவன்..
உரிமை பெற்றனர் அமரர்..
உள்ளங்குளிர்ந்தனர் தேவர்..
உணர்ச்சி பொங்கக்
கூத்தடித்தாடினர் ஊரார்..
பணி முடித்த பாலகன் கைவேல்
பாவந்தீர்க்கப் பற்பல குளங்களிலும்
பன்னீராடியது..
வேலை முடித்து வேலன் வேல்
வெற்றிப் பெருமிதத்துடன்
வானவழியில் மயிலேறி வந்து
கதிர்காமக் குன்றில்
இடிபோல் இறங்கி
இளைப்பாறியது..
ஆகா என்றனர் அமரர்..
வாகா முருகா என்றனர் வானவர்..
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வந்த குமரக் கடவுளைக்
குதூகலித்துக் கொண்டாடினர் குவலயத்தோர்..
வெற்றிமுழக்கத்துடன் வீர மறவர்கள்
விரதம் முடித்துப் பாறணை பண்ணிப்
பணிந்து வணங்கினர் பரமன் மகனை..
அநீதி அழிந்திட நீதி நிலைத்திட
அஞ்சா நெஞ்சினர்க்கு அருள்மழை பொழிந்து
ஆங்கே அமர்ந்தனன் அமர சேனாபதி..
அடியவர் நாமும் மனதால் வணங்கி
அருள் வேல் மகனை ஏத்தித் துதிப்போம்..

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home