Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >ஒசாமாவிலிருந்து ஒபாமா வரை……….!!

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

ஒசாமாவிலிருந்து ஒபாமா வரை……….!!

20 February 2007


 அவுஸ்திரேலியப் பிரதம மந்திரியான திரு ஜோன் ஹவார்ட் (John Howard) அவர்கள், அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பரக் ஒபாமா (Barack Obama) அவர்களுடைய கொள்கைகளைக் கடந்த வாரம் விமர்சித்திருந்தார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக வரக்கூடிய பரக் ஒபாமா அவர்கள் ஈராக்கிலிருக்கும் அமெரிக்கப் படையினரை ஈராக்கிலிருந்து மீளப்பெறுவதற்கான தனது கொள்கையை அறிவித்திருந்தார்.

 இதனை அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் விமர்சித்துத் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நேசநாடொன்றின் முக்கிய தேர்தல் வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்து நிற்கும் அரசியல் கட்சி மீது அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்த விமர்சனங்கள் இந்த நாடுகளுக்கிடையான உறவைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும, இவை தொலைநோக்குப் பார்வையற்ற, பொறுப்பற்ற விமர்சனங்கள் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

‘அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு விலகுவதானது பயங்கரவாதிகளை உற்சாகப் படுத்தக்கூடிய விடயமாகும்’ என்று கூறிய அவுஸ்திரேலியப் பிரதம மந்திரி ஜோன் ஹவார்ட் ‘நான் ஈராக்கில் அல்-கொய்தாவைத் வழி நடத்துபவனாக இருந்தால், நான் ஒபாமாவும் அவரது ஜனநாயகக் கட்சியும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று பிரார்த்திப்பவனாக இருப்பேன்’ என்றும் கூறிய கருத்துக்கள்தான் இன்று இந்த பலத்த சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது.

இங்கே ஒரு பழைய விடயம் ஒன்றைச் சுட்டிக்காட்டுவது அவுஸ்திரேலிய பிரதமரின் முரணான நடவடிக்கையை விளக்கக் கூடும். அவுஸ்திரேலியத் தொழிற் கட்சியின் முன்னைய தலைவரான மார்க் லேத்தம் (Mark Latham) அவர்கள் 2004ம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை விமர்சித்துக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார. அப்போது அந்த விமர்சனத்தைக் கண்டித்த ஜான் ஹவார்ட் நேசநாட்டுத் தலைவர் ஒருவரை இவ்வாறு விமர்சிப்பதானது, ‘அபாயகரமானது’ என்றும், ‘யோக்கியதையற்றது’ என்றும் சினந்து கூறினார். ஆனால் இன்று ஜோன் ஹவார்ட் அவர்களே, நேசநாட்டுத்தலைவர்களில் ஒருவரையும், அவரது கட்சியையும் விமர்சனம் செய்கின்ற முரணையும் நாம் காண்கின்றோம்.

கறுப்பினத்தைச் சேர்ந்தவரும், மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யமாகிக் கொண்டு வருபவருமான பரக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லும் பட்சத்தில், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அரச தலைவர் என்ற பெருமையையும் பெறக்கூடும். அமெரிக்கா ஈராக்மீது படையெடுத்ததை ஒபாமா ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாது, ஒபாமாவின் உரைகளைக் கூர்ந்து கவனிப்பவர்கள் ஒரு விடயத்தை அவதானிக்கக் கூடும். அவர் அடிக்கடி புதிய தலைமுறை என்ற சொற்றொடரை உபயோகிப்பவராக இருக்கின்றார். அத்தோடு மட்டுமல்லாது, ஒபாமா ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதையும் நாம் காண்கின்றோம். ‘இன்று அமெரிக்கா எதிர்கொள்ளுகின்ற சவால்களை, தீர்க்கக்கூடிய பதில்களை, இந்தப் புதிய தலைமுறைதான் தரவேண்டும்’-என்றும் ஒபாமா வலியுறுத்தி வருகின்றார். ‘கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளையெல்லாம் புதிய தலைமுறைகள் தான் நேர்கொண்டு தீர்த்து வைத்தன’ என்று ஒபாமா கூறி வருவதானது, அவர் அதிபர் தேர்தலில் வெல்லும் பட்சத்தில் புதிய சிந்தனைகளை அமெரிக்க அரசியலில் புகுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகின்றது.

ஆனால், அவுஸ்திரேலியப் பிரதமமந்திரி ஜோன் ஹவார்டின் கூற்றுப்படி ‘ஒபாமா வென்றால் ஒசாமா பின்லாடன் மகிழ்ச்சியடையக் கூடும்’ என்ற கருத்துத் தொனிக்கின்றது. ஆனால் ஒசாமா பில் லாடனை வளர்த்து விட்டது இன்றைய மற்றும் முன்னைய அமெரிக்க அரசுகள்தான் என்பதே உண்மையுமாகும். அது மட்டுமல்லாமல் பின்லாடனைச் சர்வதேச சக்தியாக மாற்றியதும் இதே அமெரிக்காதான்.!

சதாமும் ஈராக்கும் ஒரு நாடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயங்களாகும். ஆனால் ஒசாமா பின்லாடனோ அப்படியல்ல! இன்று பின்லாடன் தனி ஒரு நாட்டுடன் சம்பந்தப்பட்டவர் அல்ல. பல இஸ்லாமிய நாடுகளுடன் பின்னிப்பிணைந்து அமெரிக்காவிற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவர். இன்று சதாமுக்கு எதிராக ஈராக்கோடு போர் புரிந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா, பின்லாடனுக்கு எதிராக எந்த நாட்டோடு அல்லது எத்தனை நாடுகளோடு போராடும். அல்லது போராட முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா?

அமெரிக்கா அரசுகளின் இப்படிப்பட்ட நடவடிக்கைளின் காரணமாகத்தான் இஸ்லாமியத் தீவிரவாதம் பெருகி வருகின்றது. இன்று இஸ்லாமியத் தீவிரவாதம் உலகெங்கும் பரவி வருவதற்கு அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும்தான் தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும். அமெரிக்கா தான் செய்திட்ட பாரிய தவறுகள் காரணமாக, தம்மையும் மிகப்பாரிய அழிவுக்குள் நிறுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது, உலகநாடுகளையும் சேர்த்து இந்த அழிவுக்குள் நிறுத்தியிருப்பதாக மக்கள் கருத்துக்களும், கருத்துக் கணிப்புக்களும் தெரிவித்துள்ளன.

ஆகவே சரியாகச் சொல்லப் போனால் ஒசாமா பின்லாடன் பிரார்த்திக்க கூடியது வேறுவிதமாகத்தான் இருக்கக் கூடும். எதிர்வரும் அமெரிக்க அரச அதிபர் தேர்தலில் ஒபாமாவோ அல்லது அவரது கட்சியின் வேறு வேட்பாளரோ வெல்லக் கூடாது என்பதுதான் ஒசாமா பின்லாடனின் பிரார்த்தனையாக இருக்க முடியும். மாறாக ஜோர்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் அடுத்த அரச அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதையே பின்லாடன் விரும்பிப் பிரார்த்திக்கவும் கூடும். அப்போது தானே போர் தீவிரமடைந்து மேலும் மேலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இஸ்லாமியத் தீவிரவாதச் செயற்பாடுகளில் சேரக்கூடும். ஆகவே ஒசாமா புஷ்ஷிற்கு ஆதரவாகத்தான் பிரார்த்திப்பாரே தவிர, ஜோன் ஹவார்ட் கூறியதுபோல் ஒபாமாவிற்காக அல்ல!

ஜோன் ஹவார்டின் இந்தக் கருத்து அமெரிக்கப் பொதுமக்களின் அபிலாசைக்கு எதிரான கருத்தாகும்.

சமீபத்திய கருத்துக் கணிப்புக்களின்படி மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கப் பொதுமக்கள் ஈராக் மீதான யுத்தத்தை எதிர்க்க்pன்றார்கள் என்று அறியப்பட்டுள்ளது. ஆகவே அமெரிக்காவின் அரசை மாற்றக்கூடிய வல்லமையை இந்த ஈராக் யுத்தம் பெற்றிருக்கின்றது என்றும் நாம் கூறலாம்.

அமெரிக்க அரசை மட்டுமல்ல, அதன் நேசநாடுகளின் அரசுகளையும் மாற்றக்கூடிய வல்லமையை ஈராக் யுத்தம் பெற்றுள்ளது என்றுதான் நாம் கருதுகின்றோம். உதாரணமாக நாம் முன்னர் ஒரு முறை கூறியிருந்த கருத்தை மீண்டும் தர்க்கிக்க விழைகின்றோம்.

பல்லாண்டுகளுக்கு முன்பு, சூயஸ் கால்வாயை நாசர் தேசியமயப் படுத்திய போது பிரித்தானியா எகிப்து மீது படையெடுத்தது. ஆனால் அப்பொழுது அமெரிக்கா, பிரித்தானியாவிற்கு ஒத்துழைப்பு தரமறுத்தது. இந்தப்போரில் பிரித்தானியா பலத்த அடி வாங்கிப் பின்வாங்க நேர்ந்தது. அதற்குப் பின்னர் பிரித்தானியா கொள்கையளவில் ஒரு தீர்மானத்தை எடுத்ததாக நம்பப்படுகிறது. அதாவது எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைத்து பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று பிரித்தானியா முடிவெடுத்தாக அறியப் படுகின்றது.

இந்த முடிவை பிரித்தானியாவின் தற்போதைய பிரதம மந்திரியான ரோனி பிளேயர் இன்னும் உயர தூக்கி பிடித்து ஈராக் விடயத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தார். இவ்வகையான ஒத்துழைப்பு பிரித்தானியாவின் ஓர் அறிவிக்கப்படாத கொள்கையாகவே இருந்து வந்துள்ளது. அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி பிரித்தானியாவின் இந்தக் கொள்கை இனி மாற்றத்துக்கு உள்ளாகக்கூடும். அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் தாளம் போடுவதற்கு வருங்காலத்தில் பிரித்தானியா இணங்காது. அமெரிக்கா தனிமைப் படுத்தப்படும். பிரித்தானியாவின் எதிர்காலப் பிரதமர்கள் இந்தப் புதிய கொள்கையை அமல்படுத்தும் நிலை நிச்சயம் உருவாகும்.

இன்று புஷ்ஷின் குடியரக்கட்சி தனது ஆட்சியை எதிர்வரும் அரசஅதிபர் தேர்தலில் இழக்கக்கூடிய வாய்ப்புக்களே தென்படுகின்றன. அதேபோல் ரோனி பிளேயரின் கட்சியும் அடுத்த தேர்தலில் தனது ஆட்சியை இழக்கும் சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளன. அவுஸ்திரேலியாவிலும், ஜோன் ஹவார்ட்டின் லிபரல் கட்சி தோற்கக் கூடும் என்று கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

விசித்திரம் என்னவென்றால் இந்தப் பாரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பொதுக்காரணியாக, (வேறு காரணிகளும் உள்ளன) ஈராக் யுத்தம் விளங்குகின்றது.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன் ஹவார்ட் அவர்கள் ஈராக் மீதான போரை நியாயப் படுத்தி சில காரணங்களை வெளியிட்டிருந்தார். சதாம் ஹீசெயின் பேரழிவுக்குரிய இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்பது அந்தக் காரணிகளில் முக்கிய நோக்கமாகும். ஆனால் அந்த அழிவுக்குரிய ஆயுதங்கள் குறித்து இப்போது கதை ஏதும் இல்லை. சதாம் ஹீசைன் இப்போது தூக்கிலிட்டு கொன்றுமாயிற்று.

சதாம் ஹீசைன் தன் சொந்தநாட்டு மக்கள்மீதே மிக்க கொடுமையான அடக்குமுறையை மேற்கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. பாலஸ்தீனப் பிரச்சனையில் சதாம் ஹீசைன் முழுமையாகப் பாலஸ்தீனர்கள் பக்கம் நின்றவரும் அல்ல. ஈராக் நாட்டின் அதிகார மற்றும் அரசியல் பலத்தைக் குலைத்து, ஈரானை சமநிலைப் படுத்துவதற்காக, அமெரிக்கா சதாம் ஹீசைய்னைப் பயன்படுத்தியதையும் நாம் மறந்துவிட முடியாது. ஈரானுடனான போரில் அவர் அமெரிக்காவின் கையாளாக செயற்பட்டார் என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் சதாம் ஹீசைய்ன் குவெய்த் நாட்டை முன்னர் ஆக்கிரமித்தபோது நிலைமை மாறியது. அமெரிக்கா குவைத் நாட்டின் பக்கம் சாரவேண்டியதற்கு நியாயமான காரணங்களோடு இன்னுமொரு மிகமுக்கியமான மறைமுகமாக காரணமும் உண்டு. அது குவைத்நாடு. அமெரிக்காவின் செய்துள்ள முதலீடுகளின் பரிமாணமாகும். குவைத் நாட்டின் அரச குடும்பச் சொத்துக்களை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கொன்றே குவைத் முதலீட்டு அலுவலகம் (முஐழு) இயங்குகின்றது. இந்த அலுவலகம் சுமார் 112பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் மொத்த வெளிநாட்டுக் கடனாகிய 700பில்லியன் டொலர்களில் 200பில்லியன் டொலர்கள் குவைத் நாட்டினுடையதாகும். அமெரிக்க கம்பனிகளில் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை குவைத்தின் அமீர் மட்டுமே வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈராக் மீதான அமெரிக்காவின் மனமாற்றத்திற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.!

சதாம் ஹீசைய்ன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைச் சற்று கவனத்தில் எடுப்போம். ஈராக்கின் அரசில் பெரும்பான்மையாக அங்கம் வகித்த ஷியாக்களில் 140 பேரை கொன்றதாக சதாம் ஹீசைன் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டுத்தான் அவர் தூக்கிலிடப்பட்டிருந்தார். ஆனால் சதாம் ஹீசைய்ன் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களையும் கொன்றொழித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு விசாரணையில் இருந்து பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்தக் குற்றசாட்டிற்கு விசாரணை நடைபெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

லாப்ஜாவில் அமெரிக்கா வழங்கியிருந்த போர் விமானங்களையும், விஷ வாயுவையும் கொண்டுதான் ஆயிரக்கணக்கான குர்து இனமக்களை சதாம் ஹீசைன் கொன்று குவித்தார். அப்படி சதாம் ஹீசைன் ஆயிரக்கணக்கான குர்துகளை கொலை செய்த போது அமெரிக்கா என்ன சொல்லியது தெரியுமா? இந்த இனப்படுகொலையை ‘ஈராக்கின் உள்விவகாரம்’ என்றுதான் அமெரிக்கா அலட்சியப் படுத்தி சொன்னது.

இந்த ‘உள்விவகாரம்’ குறித்து சதாம் ஹீசைன் மீது நீதிமன்ற விசாரணை நடந்திருந்தால் என்ன என்ன விடயங்கள் வெளிப்பட்டிருக்கும்.? அப்படி ஒரு விசாரணை நடைபெற்றிருக்குமானால் குர்து இன மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் புரிந்த கொலைகாரர்கள் என்று தகப்பனார் புஷ்சும், மகன் புஷ்சும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருக்கக் கூடும் அல்லவா?

அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும் ஈராக்கின் மீது நடாத்திய இந்தப் போர் காரணமாகக் கொல்லப்பட்ட ஈராக்கியப் பொதுமக்களின் தொகை இலட்சக்கணகானது என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர இரண்டு மில்லியன் ஈராக் மக்கள் ஈராக் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், 1.6 மில்லியன் மக்கள் ஈராக் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து வாழ்வதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ABC செய்தியின் நிருபர் மார்தா ரடாட்ஸ் (
MARTHA RADDATZ) ஈராக்கில் நடைபெறுவது உள்நாட்டு யுத்தம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷிடம் கேள்வி ஒன்றைக் கேட்டார். அதற்கு அவர் ‘இந்த அழகிய வெள்ளை மாளிகைக்குள் வாழ்ந்துகொண்டு நேரடியான மதிப்பீடுகளை செய்வது எனக்கு கடினமானது’ என்று கிண்டலாகப் பதில் அளித்தார். இதுதான் இன்றைய அமெரிக்க ஜனநாயகம்.!

ஆயினும் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை
(HOUSE OF REPRESENTATIVES) மேலதிகமாக அமெரிக்கத் துருப்பினரை ஈராக்குக்கு அனுப்ப முயலும் ஜோர்ஜ் புஷ்சின் திட்டத்தை முறியடித்துள்ளது. இது போருக்கு எதிரான வெற்றியாகும். அதேபோல் ஜோர்ஜ் புஷ் போருக்காக ஒதுக்கவுள்ள நூறு பில்லியன் அமெரிக்க டொலர் திட்டமும் தோற்கடிக்கப்படலாம் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

அமெரிக்க பொதுமக்களும், பிரித்தானிய பொதுமக்களும், அவுஸ்திரேலிய பொதுமக்களும் போருக்கு எதிரான கருத்துக்களையே கொண்டிருப்பதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது எதிர்வரும் தேர்தல்களிலும் தெளிவாகப் புரிய வைக்கப் படவும் கூடும். மேற்குலகங்களில் வரக்கூடிய ‘மாற்றம்’ அல்லது ‘திருத்தம்’ மற்றைய உலக நாடுகளிலும் சமாதானத்தைக் கொண்டு வரக்கூடும். இது ஒரு நியாயமான எதிர்பார்ப்புமாகும்.

(இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு AGE, AUSTRALIAN, TIME போன்ற பத்திரிகைளும் யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும் REPORT ON IRAQ, BEYOND THE GULF WAR, GULF WAR & THE NEW WORLD ORDER போன்ற ஆய்வு நூல்களும் ABC, BBC செய்திச் சேவைகளும் உதவின. சகலருக்கும் எனது நன்றிகள்.)

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home