Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தி(ஒ)ரு லக்ஷ்மன் கதிர்காமரின்,‘ஒரு தனி மனிதச்சாவு’ஒரு பதிவு
 

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

 தி(ஒ)ரு லக்ஷ்மன் கதிர்காமரின்,
‘ஒரு தனி மனிதச்சாவு’ஒரு பதிவு

"..இன்று இந்தத் தனி மனிதச்சாவைப் பூரண அரச மரியாதைகளுடன் அடையாளப்படுத்துகின்ற சிங்களப் பேரினவாதம் நாளை லக்ஷ்மன் கதிர்காமரை முழுமையாக மறந்து போய் விடும். ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் மேன்மைக்குத் தன் சேவையை அர்ப்பணித்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை ஈழத்தமிழினம் என்றுமே மறக்காது!.."

15 August 2005


சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரான திரு லக்ஷ்மன் கதிர்காமர், துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டுள்ளார். மானிப்பாய் தமிழீழத்தைச் சேர்ந்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு தமிழராவர். நன்கு கற்றுத் தேர்ந்த ஒரு கல்விமான். சட்ட நுணுக்கங்களையும் கரை கண்டவர். மிகுந்த ஆங்கில மொழிப்புலமை கொண்ட ஒரு நாவண்மையாளன். அறிவாளி என்றும் அறிவுஜீவி என்றும் அறியப்பட்டவர்.

இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த ஒக்ஸ்வோர்ட் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டங்களைப் பெற்றவர். அவருடைய விவாதத் திறமையை ‘ஒக்ஸ்வோர்ட்’ பல்கலைக்கழக பேராசிரியர்களும் வியந்து பாராட்டினார்கள்.

திரு லக்ஷ்மன் கதிர்காமர் பணியாற்றிய சர்வதேச நிறுவனங்கள் பலவாகும். Internationa Labour Organisation (ILO) world Intellectural Property Organisation, (WIPO), SAARC  போன்ற அமைப்புக்களில் அவர் ஆலோசகராகவும், இயக்குனராகவும், தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். வணிகம், முகாமைத்துவம், அறிவுசார் இயல்பு, தொழில்துறை, அரசியல் யாப்பு மற்றும் சர்வதேச சட்டவியல் போன்ற துறைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரின் முழுத்திறமைகளையும், சேவைகளையும் முழுமையாகப் பெற்றுக் கொண்ட சிங்களப் பேரினவாதம் இன்று துக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கிறது. அதன் வருத்தம் நமக்கு புரிகின்றது. சரியாக சொல்லப் போனால் சிங்களப் பேரினவாதத்தின் இந்த வருத்தத்தையும், சோகத்தையும் தமிழர்களால்தான் சரியாகப் புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் முடியும்.

லக்ஷ்மன் கதிர்காமர் என்கின்ற தமிழரின் ‘தனிமனிதச் சாவு’ குறித்து சில தர்க்கங்களை நம் முன் வைப்பதற்கு முதல், சில கேள்விகளை முன் வேண்டிய அவசியத்தையும் நாம் உணர்கிறோம். அது லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் கொலையின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்களாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பின்னிரவு வேளையின் போது சுடப்பட்டு சனிக்கிழமை விடிந்த வேளையிலே, லக்ஷ்மன் கதிர்காமர் வைத்தியசாலையில் காலமாகியபோது, பல சர்வதேச ஊடகங்கள் அவரது சாவு குறித்துச் செய்திகளை வெளியிட்டிருந்தன. சனிக்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் கதிர்காமரின் சாவு குறித்துச் செய்தி வெளியிட்ட சர்வதேச ஊடகமான றொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் சிறிலங்காவின் பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்னாண்டோ, ‘விடுதலைப் புலிகளே இக்கொலையைச் செய்துள்ளார்கள்’ என்று குற்றம் சாட்டியதாக குறிப்பிட்டிருந்தது.

“It is the Tigers” – Inspector General of Police, Chandra Fernando told reporters early on Saturday.

என்று கதிர்காமர் அவர்களின் உயிர் பிரிந்த உடனேயே உலகளாவிய ரீதியில் கருத்து ஒன்று பரப்பப்பட்டு விட்டது.

“கதிர்காமரின் சாவுக்கு விடுதலைப் புலிகள் காரணமாக இருக்கக் கூடும்” என்றோ, அல்லது கதிர்காமரின் சாவுக்கு விடுதலைப் புலிகளை நாம் சந்தேகிக்கின்றோம் என்றோ, பொலிஸ் மாஅதிபர் கூறவில்லை! மாறாக விடுதலைப்புலிகளே “இச்சாவுக்கு காரணம்! அவர்கள் தாம் இந்தக் கொலையைச் செய்தார்கள்!” என்று அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.

இந்தக் குற்றச் சாட்டுக்குரிய ஆதாரங்களையோ, சந்தேகங்களையோ இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை, அவர் தெரிவிக்க வில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லக்ஷ்மன் கதிர்காமரின் உயிர் பிரிந்த உடனேயே கொலை சம்பந்தப்பட்ட விபரங்களை சிறிலங்கா பொலிஸ் மாஅதிபர் அறிந்து விட்டார். என்றால் அதற்குரிய அடிப்படைப் புலனாய்வுத் தகவல்களை இந்தக் கொலை நடப்பதற்கு முன்பதாகவே அவர் அறிந்திருக்க கூடும் என்ற எண்ணம், என்ற ஐயம் எமக்கு எழுவதை எம்மால் தடுக்க முடியவில்லை.

அப்படியென்றால் அதாவது இக்கொலை நடக்கப் போவது குறித்து அவருக்கு அதாவது இந்த பொலிஸ்மா அதிபருக்கு தெரிந்திருந்தால், அவர் ஏன் இதனை தடுக்கும் நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற கேள்வியும் பெரிதாக எழுகிறது.! தெரிந்திருந்தும் அவர் பேசாமல் இருந்திருக்கின்றார் என்றால் இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் அவர் பக்கத்து ஆட்களோ என்ற சந்தேகமும் எமக்கு விபரீதமாக எழுகின்றது.

அப்படி இல்லையென்றால் அவர் அவசரப்பட்டு இப்படிப்பட்ட அறிக்கையை அறிவித்திருக்கக் கூடாது! ஏனென்றால் இப்படிப்பட்ட உடனடியான அவசரமான அறிக்கைகள் எதனையும் சிறிலங்காவின் பொலிஸ் மாஅதிபரோ, அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ முன்னர் ஒருபோதும் அறிவித்திருக்க வில்லை!

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கொலை செய்யப்பட்டபோது கொலைகாரர்கள் யார் என்பது குறித்து சிறிலங்கா அரசு அவசரப்பட்டோ அல்லது ஆறுதலோ தெரிவிக்கவில்லை.

இதே நிலைதான் றிச்சட் டீ சொய்ஸா உட்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், ஏன் சந்திரிக்கா அம்மையாரின் கணவரான விஜயகுமாரதுங்கவிற்கும் நேர்ந்தது.

பொலிஸ் மா அதிபரின் இந்தக் குற்றச்சாட்டை மேற்கூறிய சம்பவங்களின் அடிப்படையில் நாம் தர்க்கிக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல் இதனை இந்தக் குற்றச்சாட்டை-வன்மையாக கண்டித்திருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறியுள்ள காரணங்களும் மிகவும் வலுவானவையாகும்.

ஆனால் இந்த மறுப்பை சிறிலங்காவின் அரசாங்கப் பேச்சாளர் நிமால் சிறீபால டி சில்வா நிராகரித்துள்ளார். அவரும் சிறிலங்காவின் பொலிஸ் மாஅதிபர் போன்றே எந்தவிதக் காரணத்தையோ அல்லது ஆதாரத்தையோ காட்டாமல் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுப்பை நிராகரித்துள்ளார்.

நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம்தான்.! ஆனால் கதைப்பொருள்தான் பலவீனமாக உள்ளது.

இந்தத் தர்க்கங்களின் அடிப்படையில்தான் லக்ஷ்மன் கதிர்காமர் என்பவரின் தனி மனிதச்சாவு குறித்து மேலும் சில தர்க்கங்களை நாம் முன் வைக்க விரும்புகின்றோம்.

திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களுடைய தகைமைகள் குறித்தும் அவரது ஆற்றல் குறித்தும் இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் வருந்தத்தக்க வகையில் இவருடைய இந்தத் தகைமைகளும், ஆற்றலும் தமிழின மக்களுக்கு எதிராகவும் அவர்களது நாளாந்த இயல்பு வாழ்க்கைக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகட்கு எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளன. அடிப்படையில் இவர் மண்ணோடு ஒட்டாதவர். அதன் மக்களோடு உறவாடாதவர். தன் இன மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமலேயே ஒரு நியமனப் பாராளுமன்ற உறுப்பினராக சிங்களப் பேரினவாதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

இன்னுமொரு விடயத்தையும் நாம் இங்கே சுட்டிக் காட்டியாக வேண்டும். திரு லக்ஷ்மன் கதிர்காமர் என்பவர் ‘தமிழினத் துரோகி’- என்ற ரீதியில் பலராலும் குற்றம் சாட்டப்பட்டு வந்தவர்தான்.! ஆனால் அவருடைய ‘உலகம் இதனை விடப் பெரியது’ ஆகும் அவர் தன்னுடைய தலைவியான சந்திரிக்கா அம்மையாரின் தனிப்பட்ட நலனுக்காகவும், அவருடைய அரசியல் நலனுக்காகவும் தன்னுடைய அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்தவர் ஆவார்.! அந்த அர்ப்பணிப்பிற்காக அவர் தமிழர்களின் நலனை மட்டுமல்ல, முஸ்லிம் இன மக்களின் நலனையும், சிங்கள மக்களின் பெரும்பான்மையானவர்களின் நலனையும் பலி கொடுத்தவரும் கூட.!

ஆழிப்பேரலை அழிவுகள் காரணமாக உருவாக்கப்பட வேண்டிய பொதுக் கட்டமைப்பு தனியே தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு மட்டும் அல்ல.! இப்பொதுக் கட்டமைப்பின் செயற்பாடுகள் ஊடாக தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் பயனடைவதாக இருந்தனர். ஆனால் சந்திரிக்கா அம்மையாரின் தனிப்பட்ட அரசியல் விருப்பு-வெறுப்பு காரணங்களுக்கு அமைய திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் பொதுக் கட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களை முடுக்கி விட்டிருந்தார்.

இந்தப் பொதுக் கட்டமைப்பு எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகும். அதனைக் கூடச் சட்டை செய்யாத வகையில் திரு லக்ஷ்மன் கதிர்கமர் அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் மற்றும் சிங்களப் பொது மக்களுக்கும் தீமை செய்தவர் ஆவார்.! இவர் தமிழ் மக்களுக்கு எதிரிதான்! ஆனால் மற்றவர்களுக்கும், உண்மையான நண்பர் இல்லை.!! ஏனென்றால் சந்திரிக்கா அம்மையாரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றிய ஒரு தனி மனிதர்தான் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள்.

அடிப்படையில் சமாதானத்திற்கு விரோதியாகத்தான் திரு லக்ஷ்மன் கதிர்காமர் செயற்பட்டு வந்துள்ளார். தமிழ்த்தேசிய வாதத்திற்கு மட்டும் அவர் எதிரியாகச் செயற்பட வில்லை. எந்த வகையான சமாதானத் தீர்வுக்கும் அவர் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளார். நோர்வே நாட்டின் சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக, திரு லக்ஷ்மன் கதிர்காமர் மிகக் காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் படித்தவர்தான்! சட்டம் தெரிந்தவர்தான்! ஆனால் ஆக்க பூர்வமாகச் செயல்படாதவர். அவர் திறமையாகச் செய்ததுதான் என்ன? ஜனநாயக மரபுகளை சட்டரீதியாக மீறுவது எப்படி? என்று ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு ஆலோசனை வழங்குவதுதான் இவரது முக்கிய வேலையாக இருந்திருக்கிறது. அதனை திரு கதிர்காமர் மிகத்திறமையாகவே செய்து வந்திருக்கிறார்.

உலகநாடுகளினதும், உலக நிறுவனங்களினதும் நியாயமான கரிசனைகளைக் கூட திரு கதிர்காமர் மதித்ததில்லை. 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ந் திகதியன்று சிறிலங்கா விமானப்படையின் குண்டு வீச்சுத் தாக்குதலால் புதுக்குடியிருப்பில் 22 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளி உலகிற்கு உறுதி செய்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்த போது திரு லக்ஷ்மன் கதிர்காமர் பதிலுக்கு ஐக்கிய நாடுகள் சபையை கண்டித்தார். அன்று அவர் சொன்னதை எமது நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

“ஐக்கிய நாடுகள் சபை, உள்நாட்டுப் போரில் ஏற்படும் இழப்புக்கள் குறித்து தலையிட வேண்டியதில்லை. மலேரியா மற்றும் நுளம்புப் பிரச்சனைகளையும் சமூக பொருளாதார வளர்ச்சிகளையும் குறித்தே ஐக்கிய நாடுகள் சபை அக்கறை காட்ட வேண்டும்.” என்று மிக்க கடுமையாக கதிர்காமர் அன்று கண்டித்திருந்தாhர். அவர் கருத்துப்டி நுளம்பு அடிக்க வேண்டிய இந்த அமைப்புக்கள் இன்று நுளம்படிக்காமல் அவருக்கு அஞ்சலிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

தன் இனத்து மக்கள் போர் காரணமாகவும், பொருளாதாரத் தடை காரணமாகவும் இன்னல் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கையில், திரு கதிர்காமர் அவர்கள் தன்னுடைய மனைவியுடன் உலகநாடுகள் பலவிற்கும் விஜயம் செய்ததால் ஏற்பட்ட செலவு சுமார் ஆறுகோடி ரூபாய்களுக்கும் மேலானதாகும். இச் செலவுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்ட போது அவர் கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் இந்த மனிதர் தன் மண்ணோடு ஒட்டாதவர். தமிழ் மக்களின் சாதாரண வாழ்வு முறை குறித்துக் கூட எதையும் அறியாதவர்தான் இவர்.

சந்திரிக்கா அம்மையாரின் தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் மண்ணோடு ஒட்டாத இன்னொரு மனிதரான பீலிக்கஸ் டயஸ் பண்டாரநாயக்கா என்பவர் சிறிமாவோ அம்மையாருக்கு ஆலோசகராக இருந்தார். சிறிமாவோ அம்மையாரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா அவர்கள் அன்று வழங்கிய ஆலோசனைகள் சாதாரண மக்களுக்குப் பெரும் துன்பத்தை வழங்கின. அந்த வகையில் இங்கே ஒரு வரலாற்று ஒற்றுமையையும் நாம் காண்கின்றோம்.

இந்த வேளையில் பின் நவீனத்துவ சிந்தனை ஒன்றை நாம் எமது நேயர்கள் முன் வைக்க விரும்புகின்றோம். வன்முறை என்பது ஆயுதத்தாலோ, அல்லது போரினாலோ வருவது மட்டும் அன்று! அரசியல் ஊடாகவும், சட்டங்கள் ஊடாகவும் வன்முறையை பிரயோகிக்கலாம். உதாரணத்திற்கு, ஓர் இனத்தின் மீது விதிக்கப்படுகின்ற பொருளாதாரத் தடை என்பது ஒரு வன்முறையான செயலாகும். அதேபோல் கருத்து வன்முறை, பிரச்சார வன்முறை என்று பல வன்முறைகளைப் பேரினவாதிகள் செய்து வருவது கண்கூடு.

அந்தவகையில் மெத்தப் படித்தவரும், கல்விமானும் அறிவுஜீவியுமான திரு லக்ஷ்மன் கதிர்காமரும் ஒரு வன்முறையாளரே! இவருடைய வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க வேண்டி வந்துள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னல் நிறைந்த வழ்க்கையை மேற்கொள்ள வேண்டியும் வந்தது. இவற்றிற்கு திரு லக்ஷ்மன் கதிர்காமர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இன்று இந்தத் தனி மனிதச்சாவைப் பூரண அரச மரியாதைகளுடன் அடையாளப்படுத்துகின்ற சிங்களப் பேரினவாதம் நாளை லக்ஷ்மன் கதிர்காமரை முழுமையாக மறந்து போய் விடும். ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் மேன்மைக்குத் தன் சேவையை அர்ப்பணித்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை ஈழத்தமிழினம் என்றுமே மறக்காது!
 

 
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home