Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > சுயநிர்ணய உரிமையும், சுதுமலைப் பிரகடனமும்
 

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

சுயநிர்ணய உரிமையும், சுதுமலைப் பிரகடனமும்

"...தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்பட வேண்டும். இச்சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்படாமல் போனால் நாம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டி நேரிடும். தமிழீழத் தேசியத் தலைவர் இந்தக் கருத்தை பன்னெடுங் காலமாகவே வலியுறுத்தி வந்துள்ளார்..."

9 August 2005


கடந்த மூன்றரை ஆண்டு காலமாக, இரண்டு சிங்கள அரசுகளும் கடைப்பிடித்து வந்துள்ள சிங்கள பேரினவாத மேலாதிக்கப் போக்கின் காரணமாக, இன்று இலங்கைத் தீவில் நெருக்கடியான நிலைமை ஒன்று உருவாகியுள்ளது. சமாதானப் பேச்சு வார்த்தைகள் செயல் இழந்து போயுள்ளதோடு, யுத்தநிறுத்த ஒப்பந்தமும் ஆட்டம் காண்கின்ற நிலைமை தோன்றியுள்ளது.

சிங்கள அரசுகள் ஊடாக தமிழீழ மக்களுக்கு எந்த விதமான நீதியோ, நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற யதார்த்தம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்ட இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தம்முடைய ஆட்சி முறைமையைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற பிரகடனத்தைச் சமர்ப்பித்து இருக்கின்றார்கள்.

இக்காலகட்டத்தை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான காலமாகவே நாம் கருதுகின்றோம். கடந்த கால வரலாற்றுப் பாதையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, முக்கியமான கருத்துக்கள் சிலவற்றை தர்க்கிப்பது இவ்வேளையில் பொருத்தமாக இருக்கக் கூடும் என்று நாம் நம்புகின்றோம்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்-நான்காம் திகதியன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில் முதன்முறையாகப் பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றினார்.

தமிழீழத் தேசியத் தலைவரைக் காணவேண்டும் என்றும் அவரது உரையைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், மிக மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சுதுமலையில் கூடி நின்றார்கள். அன்றைய தினம் தமிழீழ தேசியத் தலைவர் ஆற்றிய உரை ‘சுதுமலைப் பிரகடனம்’ என்று பெயர் பெற்றது.

தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனப் பார்வை குறித்தும், அவரது தெளிவான சிந்தனை குறித்தும், ஒப்பிடற்கரிய செயல் திறன் குறித்தும் நாம் புதிதாக எதையும் இன்றைய தினம் தர்க்கிக்க வரவில்லை. ஆனால் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய கருத்துக்களையும் அதனை ஒட்டி பின்னாளில் அவர் ஆற்றிய உரைகளையும், இன்றைய காலகட்;டத்தில் நாம் சிந்திக்க வேண்டியது பயனுடையதாகும் என்றே நாம் நம்புகின்றோம்.

அன்றைய ஆண்டு அதாவது 1987ம் ஆண்டும் ஓர் ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டது. ஆனால் அது வேறு இரண்டு அரசுகளுக்கிடையே-அதாவது இந்திய அரசிற்கும்-இலங்கை அரசிற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும். தமிழ் மக்களின் ஒப்புதலோ, அங்கீகாரமோ இல்லாமல், தமிழ் மக்கள் குறித்த அந்த ஒப்பந்தம் 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ந்திகதியன்று இந்திய இலங்கை அரசுகளால் கைச்சாத்திடப் பட்டிருந்தது.

‘சுதுமலைப் பிரகடனம்’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட அந்த உரையின் போது, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், இலங்கை-இந்திய ஒப்பந்தமானது எமது தேசியப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை பெற்றுத் தராது என்பதைத் தெட்டத் தெளிவாக கூறியிருந்தார்.

தேசியத் தலைவரின் இச்சிந்தனைகள் குறித்துச் சில தர்க்கங்களை இவ்வேளையில் முன்வைக்க விரும்புகின்றோம்.

இந்த ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ அடிப்படையிலேயே பல தவறுகளைக் கொண்டிருந்த ஒப்பந்தமாகும். தமிழ் மக்கள் என்கின்ற ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையை இந்த ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்;’ மிகத்தவறாக சித்தரித்திருந்தது. தமிழீழ மக்களின் பிரச்சனை என்பது ஒரு தேசிய இனப் பிரச்சனை என்கின்ற உண்மையை முற்றாக நிராகரித்து விட்டு ஏதோ ஒரு சிறுபான்மை இனக்குழுவின் அரசியல் பிரச்சனை என்ற வகையிலேயே இந்த ‘இந்திய-இலங்கை ஒப்பந்தம்’ ஒரு தீர்வினை தேட முனைந்தது. இந்த தீர்வு இந்த தீவுக்கு பொருத்தமானது அல்ல!.

ஏனென்றால் இலங்கை மக்கள் ஒரு பல் இனச்சமுதாயமாக-அதாவது plural society ஆக வாழ்கிறார்கள். இதில் தமிழர்கள் என்பவர் ஓர் இனக்குழு அதாவது ethnic group என்பவர்கள் என்கின்ற வகையில் தான் இந்த ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ எமது ஈழத் தமிழினத்திற்கு ஒரு வரைவிலக்கணத்தை அளித்திருந்தது.

இந்த விளக்கமானது தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாது தமிழ் மக்களின் தேசிய இனக்கோட்பாட்டையும், தேசிய சுய நிர்ணய உரிமையையும் மறுதலித்து நிற்கின்றது. இதற்கு முன்னர் இடம் பெற்ற திம்பு பேச்சு வார்த்தைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைத்த தமிழ்த் தேசியம்-சுய நிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளுக்கும் இந்த இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் ஆப்பு வைக்கப்பட்டது.

இதனைத்தான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அன்றைய தினம் அதாவது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் முன் வைக்கப்பட்டிராத இந்த இந்திய இலங்கை ஒப்பந்தம் எமது மக்களுக்கு நிரந்தர தீர்வைத் தராது என்பதை சரியாக உணர்ந்து கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அதனை அன்றைய தினமே தீர்க்க தரிசனமாகத் தெளிவு படுத்தியிருந்தார்.

‘இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று நான் நம்பவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை’

என்று தீர்க்க தரிசனமாக கூறிய எமது தேசியத் தலைவர் மேலுமொரு முக்கிய விடயத்தையும் அன்று அதாவது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுதுமலையில் கூறினார். ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.’- இதனைத்தான் அதாவது இதே கருத்தைத்தான் 2002ம் ஆண்டு அன்றைய சிங்கள அரசுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தக் காலத்தின் போதும் தேசியத் தலைவர் கூறியிருந்தார்.

அமைதி வழியில் மென்முறை தழுவி நேர்மையுடனும், நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முனைந்து வருகின்றோம். ‘காலத்திற்கு எற்ப வரலாற்றுக் கட்டாயத்துக்கு அமைய எமது போராட்ட வழி முறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை’ என்று தமிழீழத் தேசியத் தலைவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார்.

அன்று தமிழீழ மக்களின் கருத்தைக் கேளாது-தமிழீழ விடுதலைப் புலிகளைக் கலந்து கொள்ளாது இந்தியா முன்வைத்த ஒப்பந்த முயற்சிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகள் பல இணைந்து முன்வைத்த ஒப்பந்தத்திற்கும் இடையே ஓர் ஆபத்தான ஒற்றுமை இருப்பதை நாம் மீண்டும் எமது நேயர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

மிகக் குறைபாடான திட்டத்தை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமுலாக்க முயன்ற இந்தியா அடிப்படையில் இன்னுமொரு முக்கிய விடயத்தை கவனிக்க தவறி விட்டது. சிங்களத்தின் இரண்டு பெரும் அரசியல் கட்சிகளுக்கிடையே இந்த சமாதான ஒப்பந்தம் குறித்து ஓர் ஒப்பந்தத்தை, ஓர் உடன்பாட்டை காண்பதற்கு அன்று இந்தியா தவறி விட்டது. அது ஒரு மிகப்பெரிய தவறாகும்.

அதே தவறை இன்று இலங்கை பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ள சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் செய்திருக்கின்றன. சிங்களத்தின் இரண்டு பெரும் அரசியல் கட்சிகளிடையே சமாதானத் தீர்வு குறித்து, எந்த விதமான உடன்பாட்டையும் அந்தக் கட்சிகளுக்கடையே ஏற்படுத்தாமல் எந்த விதமான உருப்படியான சமாதானத் தீர்வையோ, அல்லது பெறுபேற்றையோ காண முடியாது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இந்தியா தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளவில்லையே அதேபோன்று இன்று சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் தமிழீழ மக்களின் தேசிய நாளாந்தப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவில்லை என்ற ஐயப்பாடு எமக்கு உண்டு.

அன்புக்குரிய எமது நேயர்களே!

இப்போது நாம் சொன்ன கருத்துக்கள் இன்றைய தினத்தில் நாம் சொன்ன கருத்துக்கள் அல்ல. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நாம் தெரிவித்திருந்த கருத்துக்கள்!! சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வானொலிகள் ஊடாகவும், இணையத் தளங்கள் ஊடாகவும், குறிப்பிட்ட சில பத்திரிகைகள் ஊடாகவும் நாம் இந்தக் கருத்துக்களை தர்க்கித்தபோது எம்முடைய கருத்துக்கள் சமாதானத்திற்கு எதிரானவை என்று பல ஊடகங்கள் கண்டிக்க முனைந்தன.

பொதுவாக பொதுசன அபிப்பிராயங்கள் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக சொல்கின்ற பொறுப்பானவர்களின் முதுகில் குத்துகின்ற செயல்பாடுகளும் எமது கருத்துக்களுக்கு எதிராக எழுந்திருந்தன.

ஆனால் தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தில் அவரது வழிகாட்டுதலில் நாம் திடமாக நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருந்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பு நாம்; தர்க்கித்திருந்தமை இன்று நிதர்சனமாக நடப்பதற்கு காரணம் எமது சிற்றறிவு அல்ல. வரலாற்றில் இதுவரை காணக் கிடைக்காத ஒரு மகத்தான தலைவனின் வழிகாட்டுதலை சிறிதளவாவது பின்பற்ற முயன்றதன் பயனும,; பலனும் தான் எம்முடைய இந்தக் கருத்துக்கள் ஆகும்.

‘தமிழீழ மக்களின் உரிமைகள் குறித்து வெளியுலகத்தின் பார்வையும், எண்ணமும் இன்னமும் மாறவில்லை’. என்ற எம்முடைய கருத்துக்கு ஆதாரமாக இரண்டு நிகழ்வுகளை நாம் இங்கு நினைவு படுத்த விரும்புகின்றோம். இந்தாண்டு நிகழ்வுகளையும் நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரேயே தர்க்;கித்திருந்தோம் என்பதையும் இவ்வேளையில் ‘சொல்லித்தான்’ ஆக வேண்டியிருக்கின்றது.

சுதுமலைப் பிரகடனத்தின் பின்பு அதாவது அதற்கு அடுத்த நாள் 05-08-1987 அன்று ஆயுதக் கையளிப்புக் குறித்து, ஊடகவியலாயர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் செவ்வி ஒன்றை அளித்தார். இவர்களில் பெரும்பான்மையானோர் மாறி மாறி ஒரே மாதிரியான கேள்விகளைத்தான் கேட்டார்கள். அவை வருமாறு:

முழு ஆயுதங்களையும் கொடுக்கப் போகின்றீர்களா?

ஓர் ஆயுதத்தை கூட வைத்திருக்க மாட்டீர்களா?

எப்போது முழு ஆயுதங்களையும் கொடுத்து முடிப்பீர்கள்?

-இவைதான் மீண்டும் மீண்டும் எழுந்த கேள்விகள்.

தமிழீழ மக்களின் உரிமைகள் குறித்தோ, அவர்களது பாதுகாப்பு குறித்தோ, அவர்களது அரசியல் ரீதியான எதிர்காலம் குறித்தோ இப்பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை. இதே காட்சிதான், இதே நிலைமைதான்- பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2002ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பத்தாம் திகதியன்று தமிழீழத் தேசியத் தலைவர் நடாத்திய சர்வதேச ஊடகவியளாளர் மகாநாட்டின் போதும் நிகழ்ந்தது. ஈழத் தமிழர்கள் இதுவரை காலமும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாகப்பட்ட இன்னல்கள் குறித்தோ, சிறிலங்கா அரசுகள் விதித்திருந்த உணவு மருந்து பொருளாதாரத் தடைகள் காரணமாக ஏற்பட்டிருந்த அவலங்கள் குறித்தோ தமிழ் மக்களுடைய அடிப்படை அத்தியாவசியத் தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படும் என்பது குறித்தோ இந்த மக்களுக்குரிய புனருத்தாரண புனர்நிர்மாண செயற்பாடுகள் குறித்தோ அவர்களுடைய அடிப்படை உரிமைகள் எவ்வாறு வென்றெடுக்கப்;படும் என்றோ எந்தவிதமான கேள்விகளையும் இந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் கேட்கவில்லை.

அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகள்தான் என்ன? தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டீர்களா? தற்கொலைத் தாக்குதல்கள் மீ;ண்டும் நடக்குமா என்பது போன்ற கேள்விகள்தான் மீண்டும் மீ;ண்டும் கேட்கப்பட்டன. இது சர்வதேச சமூகத்தின் அவற்றின் ஊடகங்களின் குறுகிய பார்வையை மீண்டும் நிரூபித்ததாகவே அமைந்தது.

இதனை தாங்க முடியாததால்தான் இந்தக் கட்டுரையாளன் ஒரு கேள்வியைத் தேசியத் தலைவரிடம் கேட்டுக் கொண்டான். தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து விளக்கம் அளிக்கும் படி இக்கட்டுரையாளன் கேட்டுக்கொண்ட போது, தமிழில் கேட்டுக் கொண்ட போது அது குறித்து ஆங்கிலத்தில் விளக்கம் ஒன்றை கொடுக்கும் படி தமிழீழத் தேசியத் தலைவர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களிடம் கூறினார். சர்வதேச சமூகத்தின் ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ மக்களின் சுயநிர்ணயக் கோட்பாடு குறித்து 2002ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 10ம் திகதியன்று ஒரு மீள்விளக்கம் ஒன்றை ஆங்கிலத்தில் அளித்தார்.

பாரம்பரிய பூமியையும், தனித்துவமான மொழியையும், பண்பாட்டையும் கொண்டுள்ள எமது மக்கள் ஒரு தேசிய இனத்தவர்கள் ஆவார்கள். அந்த தேசிய இனத்தவர்கள் தமது அரசியல் பொருளாதார வாழ்வை தாமே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள் என்று கூறியதோடு சுயநிர்ணய உரிமை குறித்த மேலும் சில விளக்கங்களை அளித்த திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இன்னுமாரு முக்கிய விடயத்தையும் வலியுறுத்தி சொல்லியிருந்தார்.

தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்பட வேண்டும். இச்சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்படாமல் போனால் நாம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டி நேரிடும்.

தமிழீழத் தேசியத் தலைவர் இந்தக் கருத்தை பன்னெடுங் காலமாகவே வலியுறுத்தி வந்துள்ளார். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சுதுமலையில் பேசிய போது இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு உரிமை எதையும் பெற்றுத் தராது என்றும், இந்த ஒப்பந்தத்தை தாம் ஏற்க வில்லை என்றும் தெரிவித்ததோடு, இன்னுமொரு முக்கியமான கருத்தையும் கூறியிருந்தார். இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தோடு உரசுகிறது என்றும் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவம் குறித்து தன்னுடைய மாவீரர் தினப் பேருரைகளி;ன் போது பல தடவைகள் பேசியுள்ளார். சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு நடைபெற்ற அதே ஆண்டு மாவீரர் தினப் பேருரையின் போதும் அதாவது 2002ம் ஆண்டு நவம்பர் மாதம்27ம் திகதியன்றும் தேசியத் தலைவர் சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசியிருந்தார். சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போது சுயநிர்ணய உரிமை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்தை மீள் உறுதி செய்யும் வகையிலேயே தேசியத் தலைவர் தன்னுடைய 2002ம் ஆண்டு மாவீரர் தினப் பேருரையின் போது சுயநிர்;ணய உரிமை பற்றித் தெளிவாக்கியிருந்தார். தேசியத் தலைவர் கீழ்வருமாறு பேசியிருந்தார்.

‘தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் வரலாற்;று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில் அந்நிய சக்திகளின் தலையீடு ஆதிக்கம் இன்றி சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகிறார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டை பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது அடையாளத்தை பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத்தானே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் வேட்கையாகும் உள்ளான சுயநிர்ணத்தின அர்த்தாபிமாணம் இதில்தான் அடங்கியுள்ளது.- - - - - - - (இது) மறுக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.’

அன்புக்குரிய நேயர்களே!

இன்று தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பிரகாரம் தமது ஆட்சி இறைமையைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திற்குப் பிரகடனம் ஒன்றைச் சமர்ப்பி;த்துள்ளார்கள். புலம் பெயர்ந்து சர்வதேசங்களிலும் வியாபித்து வாழ்ந்து வருகின்ற தமிழர்களாகிய நாமும் எமது தாயக மக்களின் நியாயமான இந்த வேட்கைக்குத் துணை நின்று தோள் கொடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழ்கின்ற நாம் இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக சர்வதேச சமூகத்திற்கு மனுக்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த நாடுகளில் உள்ள பொதுச் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள் நிறுவனங்கள்;, அமைப்புக்கள் யாவும் ஒன்றிணைந்து தமிழீழ மக்களின் நியாயமான அரசியல் வேட்கைக்கு ஆதரவாக மனுக்களை அனுப்ப வேண்டும். உங்கள் நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், தொழிற் சங்கங்களுக்கும் இந்த நியாயமான மனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுவே இந்த வேளையில் எமது தார்மீக கடமையுமாகும்.!

நன்றி.

 

 
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home