Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Culture & the Tamil Contribution to World Civilisation >  Spirituality & the Tamil Nation > Saiva Mystics  > The Twelve Thirumurai >  Mannikkavasagar's Thiruvasagam (Thiruvasakam)  > Ilayaraja's 'Thiruvasagam in Symphony' on CD > உலகத்தில் தோன்றிய முதல் இசை - தமிழிசை : Vaiko at Ilayaraja's 'Thiruvasakam Vizha > Tamil National Forum: Selected Writings & Speeches - Vaiko

உலகத்தில் தோன்றிய முதல் இசை - தமிழிசை

வைகோ இசை ஆய்வுரை

Vaiko at Ilayaraja's 'Thiruvasakam' Symphony Vizha
   Vaiko at Ilayarajah's திருவாசகம் Vizha  2005

"..இசையின் வடிவில் இறைவனைக் கண்டார்கள். நான் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒரு பார்வையாளராக, ஓர் இரசிகனாக, இசையில் புலமை பெற்றவனாக அல்ல - ஒரு தமிழ்ப் பற்றாளன் என்கின்ற முறையில் அதைப் பார்க்கிறேன்... தமிழ் இசை, சாதி, மத எல்லைகளைக் கடந்து இருக்கின்றது. கத்தோலிக்கப் பாதிரிமார்களும், திருச்சபை பாதிரிமார்களும், தமிழுக்குத் தொண்டு செய்தார்கள் எனில் இங்கே திருவாசகத்தின் பெருமையைத் தருகிறோம் என்கிறபோது, எல்லை களைக் கடந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகத்துக்கு ஒரு காலத்தில் கொள்கையைத் தந்தோமே, நம்முடைய நாகரிகத்தை - நம்முடைய இசைக்கலையை உலகுக்குத் தருகின்ற இந்தப் பெருமை இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிற்கும்"

[Comment by tamilnation.org:  Vaiko's Speech remains a moving tribute not only to Ilayarajah and Thiruvasagam but also to Tamil, Tamil Culture and Tamil Music -

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்.
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்

கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே.
]


பொருநை ஆற்றின் சங்கீதம் -மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கம்பீரம் - நாட்டுப் புறப்பாடல்களின் பிரவேசம் - தெற்குச் சீமையின் எங்கள் சீதனமாம் இளையராஜா அவர்களின்அருட்கொடையாக ஆன்மிகப் பாடல்களைப் பல்வேறு இசைக் கருவிகளோடும், பாடல் ஒலித்திடுகின்ற பல வகைக் குரலோடும் பிணைத்து - இணைத்து இசைப்பெட்டகமாகத் ‘திருவாசகம் ஆரடோரியோ’ என்னும் படைப்பினை வெளியிடுகின்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்றுச் சிறப்பித்து, கடமை காரணமாக விடை பெற்றுச் சென்று இருக்கின்ற மத்திய அமைச்சர் எனது இனிய நண்பர் மாண்புமிகு ஜெயபால் ரெட்டி அவர்களே, முத்தமிழ் நாட்டுக்கு இசையின் மூலமாகப் புகழ்முடி சூட்டிய இசை மாமன்னர்- இந்த விழாவின் நாயகர் இளையராஜா அவர்களே, கருத்து உரிமையின் கவசமாகத் திகழ்கிற ‘இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் பெருமதிப்புக்குரிய என். ராம் அவர்களே, வெள்ளித் திரையில் ஜொலிக்கின்ற உன்னதமான நட்சத்திரம் பெருமதிப்புக்குரிய ரஜினிகாந்த் அவர்களே,

என் அருமை நண்பர், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஆற்றல்மிகு உரைகளால் முத்திரை பதித்த நட்புக்கு இலக்கணமான பீட்டர் அல்போன்ஸ் அவர்களே, பெருமதிப்புகுரிய தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அவர்களே, திருவாசகத்தின் பெருமையை, இளையராஜா அவர்களின் இசையின் ஆற்றலை - அகிலத்தின் எல்லாத் திசைகளுக்கும் எடுத்துச் செல்லுகிற திருப்பணியில் வாகை சூடி இருக்கின்ற தமிழ் மய்யத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான அருள்தந்தை ஜெகத்கப்பார் அவர்களே, அருள்தந்தை வின்சென்ட் சின்னதுரை அவர்களே, தமிழ் மய்யத்தின் நிர்வாகிகளே, திரை உலகத்துப் பெருமக்களே, இசை உலகத்தின் வித்தகர்களே, அன்புடைய தாய்மார்களே, அருமைப் பெரியவர்களே, மக்கள் ஆட்சிக்கு மாண்பு தருகிற செய்தியாளர்களே, தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிப்பதிவாளர்களே, வணக்கம்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்ததற்காக நன்றி தெரிவிக்கின்ற கடமை இருக்கின்றபோது, எதைச் சொல்லி நான் நன்றி தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணியதால் ஏற்பட்ட திகைப்பில், இளையராஜா திருவாசகத்தில் எந்தப் பாடல் வரிகளைத் தேர்ந்து எடுத்து, அவர் நெஞ்சை ஆக்கிரமித்த வரிகளாகவே அவர் படைத்து இருக்கின்ற இந்த சிம்பொனி ஆரடோரியாவில் வழங்கியஅந்த வாசகங்களை நன்றியாக்கிக் கூறுவதே பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

பொல்லா வினையேன்
...... நின் பெருஞ்சீர்
புகழுமாறு ஒன்றறியேன்

என்று மாணிக்கவாசகராகவே, மாறி அவர் இறை உணர்வோடு ஒன்றிப் போய்த் தன்னையே மானசீகமாகக் கருதி இளையராஜா பாடுகிறார். என் வாழ்நாளில் மறக்கமுடியாத வாய்ப்பைத் தந்து இருக்கின்ற இளையராஜா அவர்களுக்கும் அதே சொற்களையே நன்றியாகத் தெரிவிக்கிறேன்.

தமிழ் இசையாலும், தமிழ்ப் பண்ணாலும் எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகளைப் படைக்கின்ற ஒரு மாமேதை - இந்த முல்லை ஆற்றங்கரையில் - இந்தக் கிராமத்தில் பிறப்பார் என்றுதான், அந்தக் கிராமம் தனக்குப் பண்ணைப்புரம் என்று பெயர் சூட்டிக் கொண்டது. தாயின் அன்பான அரவணைப்பில் வளர்ந்து, அண்ணன் பாவலர் வரதராஜன் பராமரிப்பில் பயின்று, ஏகலைவன் வில்வித்தை கற்றுக் கொண்டதைப்போல, தானே இசைக் கருவியோடு ஆற்றலை வளர்த்துக் கொண்டு, திரை உலகில் அடியெடுத்து வைத்து, முதல் படைப்பிலேயே எவரெஸ்ட் சிகரமாக உயர்ந்துவிட்ட இளையராஜா அவர்களின் பெருமையைப் பாராட்டுகின்ற விழா இது!

இன்பச் சிலிர்ப்பு!

நெருக்கடி காலத்தில் சிறைச்சாலையின் உயர்ந்த மதில் சுவர்களுக்கு உள்ளே 12 மாத காலம் நான் அடைபட்டுக் கிடந்த 1976 ஆம் ஆண்டில், காற்றின் அலைகளோடு தவழ்ந்து வந்த ஒரு பாடல் என் செவிகளில் மோதியபோது, என் உடலில் இன்பச் சிலிர்ப்பும், பரவசமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதிலும், மாலையில் பறவைகள் மரங்களைத் தேடி ஓடுகிற வேளையிலும், அந்தத் திரை இசைப்பாடல் தொலைவில் இருந்து வர வர, இந்தப் பாடலைத் தந்தவர் யார்? இசை அமைத்தவர் யார்?  கிராமத்து மணம் கமழுகின்ற இந்த இசை எங்கோ வயல் வெளிகளில் ஒலித்தத் தெம்மாங்குச் சத்தம் போல் கேட்கிறதே, அது ஒரு வித்தியாசமாகப் படுகிறதே என்று நான் திகைத்தேன். அந்தப் பாடல்தான் ‘மச்சானைப் பார்த்தீங்களா? மலை வாழைத்தோப்புக்குள்ளே’ எனும் பாடல்! ‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்களில் தன்னைக் கால் பதித்துக் கொண்ட இளையராஜா அவர்களின் பரம இரசிகனாகிவிட்ட நான் அவரை விட்டுப் பிரிந்ததே இல்லை.

ஆம். மோனமான இரவுகளில், நெடுந்தொலைவுக் கார் பயணங்களில் இரவிலும், பகலிலும் நான் விரும்பிக் கேட்கக்கூடிய, திரை இசைப் பாடல்களில் என்றைக்கும் நான் மறக்க முடியாத பாடல்களை இசை அமைத்துத் தந்தவர் அல்லவா? காதல் ஓவியம், அலைகள் ஓய்வ தில்லை, கடலோரக் கவிதைகள், 16 வயதினிலே, முதல் மரியாதை, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, நாயகன், மூன்றாம் பிறை, கேளடி கண்மணி, கவிக்குயில், இராஜபார்வை, கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், சின்னத்தம்பி, நீங்கள் கேட்டவை, சிந்து பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது, பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம் என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

840 திரைப் படங்களுக்கு இசை அமைத்து, காலத்தை வென்று இருக்கக்கூடிய பாடல்களாகவே அமைத்து இருக்கிறார். அது மின்மினியைப் போல் மறைகின்ற பாடல்கள் அல்ல. இன்னும் நூறு, நூறு ஆண்டுகளுக்கு ஒலிக்கின்ற சாதகப் பறவைகளின் கானங்கள்தான் அவை. 1993 - ஆம் ஆண்டு இலண்டன் நகரத்தில்
Royal Philharmonic Orchestra குழுவினரின் இசைக் கருவிகளுக்கு நடுவில், நம்முடைய இளையராஜா அவர்கள் சிம்பொனி இசை அமைக்கிறார் என்ற செய்தி, மேலை உலகத்தைத் திடுக்கிடச் செய்தது. ஐரோப்பாக் கண்டமே அவரை உற்றுப் பார்த்தது.

இது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. அவர் போற்றுகின்ற
Ludwig Van Beethoven,  ஜெர்மனியில் பிறந்த அந்த மகா இசை மேதை ஒன்பது சிம்பொனி அமைத்து இருக்கின்றார். Eroica ‘இரோய்க்கா’ என்கின்ற மூன்றாவது சிம்பொனி, நெப்போலியனின் படையெடுப்புகளில் அவனது போர் வெற்றிகளைக் குறித்த சிம்பொனி. அந்தப் பீத்தோவனைச் சின்னஞ்சிறு வயதில் பார்த்த மொஸார்ட், ‘இந்த இளைஞனைப் பார். இவன் சங்கீத உலகத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தப் போகிறான்’  என்று மொஸார்ட் பாராட்டினாரே அந்தப் பீத்தோவன். அவர், 'எந்தச் சிம்பொனி இசையை ‘நான் அர்ப்பணிக் கின்றேன். போர்க்களங்களில் வெற்றியை ஈட்டியதால் அந்த வெற்றிகளுக்கு வீரத்துக்கு இலக்கணமான நெப்போலி யனுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்று சொன்னாரோ, அதே நெப்போலியன் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டு தான்தான் பிரெஞ்சு தேசத்தின் சக்கரவர்த்தி என்று அறிவித்தபோது, கொஞ்சம் கூட அச்சம் இன்றி அந்த அர்ப்பணிப்புத் தாளைக் கிழிந்து எறிந்து நான் எதிர்க்கிறேன் என்று சொன்ன உணர்வு பெற்ற பீத்தோவன். அவர் கொஞ்சம் கொஞ்சமாகச் செவிப்புலனை இழந்து, கேட்கின்ற வலிமை இழந்து, அடுத்தவர்கள் பேசுவதும் கேட்காத வேளையில், எட்டாவது, ஒன்பதாவது சிம்பொனி அமைத்து, அந்தச் சிம்பொனி அமைத்தபிறகு, அந்தக் கருவிகளின் இசை பரவுகிறபோது, இங்கே திரண்டு இருப்பதைப்போல அங்கே திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பியபோது, அந்தப் பாராட்டு ஒலிகள்அவரின் காதுகளில் விழாததால், அவருடைய அந்த வாத்தியக் கருவியின் மீது விழுந்து கண்ணீர் விட்டாரே அந்தப் பீத்தோவன் படைத்த சாதனையை நம்முடைய இளையராஜா படைத்து இருக்கிறார்.

ஆற்றல் எங்கிருந்து வந்தது?

நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் சொன்னேன். இந்த நாட்டின் கவனத்துக்கு வராமல் போன காரணத்தினால் சொன்னேன். ஒரு கொரியாக் காரன் சாதிக்காததை, சீனாக்காரன் சாதிக்காததை, ஜப்பான்காரன் சாதிக்காததை, ஓர் இந்தியன் - ஒரு தமிழன் - ஒரு தென்னாட்டுத் தமிழன் எங்கள் பண்ணைப்புரத்து இளையராஜா சாதித்து இருக்கிறார்.

அந்த இளையராஜாவுக்கு ஆற்றல் எங்கிருந்து வந்தது? இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தில் தோன்றிய முதல் இசை - தமிழ் இசை என்ற காரணத்தினால் தடைகளை உடைத்து எறிந்து கொண்டு, அந்தத் தென்னாட்டுத் தமிழன் இசையைப் படைத்து இருக்கின்றார்.

இசை எங்கே இருந்து வந்தது? சாம வேதத்தில் இருந்து வந்தது அல்ல. ‘ச ரி க ம ப த நி’ என்றார்கள். சட்சமம், ரிஷிபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் - சரிகமபதநி என்று சொன்னார்கள்.

அதையே இளங்கோவடிகள்,

குடமுதல் இடமுறையா, குரல் துத்தம்
கைக்கிளை உழை இளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே!

இங்கே பல நாடுகளுக்குப் போய் வந்தவர்கள் இருக்கிறீர்கள். மதிப்புக்குரிய ராம் அவர்கள் இருக்கிறார்கள். உலகத்தின் பழமையான நாகரிகத்தை அடையாளம் காட்டிக் கொள்கிற ஈமக் கோபுரங்கள். மன்னர்கள் இறந்ததற்குப் பிறகு அவர்களின் உடல்களை அடக்கம் செய்து வைத்து இருக்கிறார்களே பிரமிடுகள் - அந்த எகிப்தியப் பிரமிடுகளில் யாழ் கருவியின் தோற்றம் வடிவு அமைக்கப்பட்டு இருக்கின்றது.
அங்கே யாழ் என்கின்ற கருவி இருந்தது. 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டு அந்த யாழ் இசைக் கருவி இலண்டன் நகரத்தின் அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றது.

அதைப்போலவே மெசபடோமியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சுமேரிய நாகரிகம் பழமையான நாகரிகம். அங்கே இருந்த யாழ் இசைக் கருவி ஒன்று பாக்தாத் நகரத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றது. ஓர் இசைக்கருவியில் ஏழு சுரங்கள் வருகின்றன. ஏழு நரம்புகளைக் கொண்ட யாழ் இருந்தது என்று இட்ச்சு சுவான் என்கின்ற ஒரு சீன இசை நூல், கி.மு. 522-ஆம் ஆண்டு அதைத் தெரிவிக்கிறது.

கிரேக்கத்தின் ஹோமர் யாழின் திறமையை - நரம்புக் கருவிகளின் திறமையைச் சொல்கிறார். ஆனால், அருமைச் சகோதரர்களே, மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் அகழ்வு நடந்தபோது, ஈரா° பாதிரியார் அதைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இங்கே யாழ் என்கின்ற அந்த இசைக்கருவியின் முத்திரை கிடைத்து இருக்கின்றது. இது பூர்வீகத் தமிழர்கள் - ஆதித் தமிழர்கள் பயன்படுத்திய கருவி என்று குறிப்பிட்டார்.

இசை இங்கே பிறந்தது!

ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ‘பெருநாரை, பெருங்குருகு’ என்கின்ற இசை நூல்கள் இதைத் தெரிவிக்கின்றன. இது ஒன்றும் கற்பனை அல்ல - கட்டுக்கதை அல்ல. லெமூரியாக் கண்டத்தில் - தென் மதுரையில் இந்தக் கருவிகள் இருந்தன என்பதை, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் 1376 பக்கங்கள் கொண்ட தமது நூலில் - இருபதாம் நூற்றாண்டில் வந்த முதல் ஆராய்ச்சி நூலில் - 1917-ஆம் ஆண்டு வெளியிட்ட அந்த நூலில் யாழின் பெருமைகளைக் குறிப்பிடுகின்றார்.

விபுலானந்த அடிகள் எழுதிய ‘யாழ் நூலில்’ குறிப்பிடுகின்றார். 14 வகையான யாழ்கள் தமிழர்களிடம் 7,000 ஆண்டு களுக்கு முன்னால் இருந்தன. ‘பேரியாழ்’ என்ற ஆயிரம் நரம்புகளைக் கொண்ட ஒரு யாழ் இருந்தது. உலகில் எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் இல்லாதது - தென் மதுரையில் இருந்தது. அது அழிந்துவிட்டது கடலிலே. அதற்குப்பிறகு, 19 நரம்புகளைக் கொண்ட மகரயாழ், 14 நரம்புகளைக் கொண்ட சகோடயாழ், 7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டியாழ், 100 நரம்புகளைக் கொண்ட கீசக யாழ், நாரத யாழ், தும்புரு யாழ், மருத்துவ யாழ், மகதி யாழ், கச்சவி யாழ், திருக்குச்சிகை யாழ், வராளி யாழ், வல்லிகி யாழ், வில் யாழ் என்கின்ற பதினாறு வகையான யாழ்கள் இருந்தன என்று குறிப்பிடுகின்றார். எனவே, இசை இங்கே பிறந்தது. இந்தத் தென்னாட்டில் பிறந்தது இசை. இசையின் வடிவில் இறைவனைக் கண்டார்கள்.

நான் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒரு பார்வையாளராக, ஓர் இரசிகனாக, இசையில் புலமை பெற்றவனாக அல்ல - ஒரு தமிழ்ப் பற்றாளன் என்கின்ற முறையில் அதைப் பார்க்கிறேன்.

தேவார மூவர்கள் அதைத்தான் சொன்னார்கள். ‘ஏழிசையாய், இசைப் பயனாய், என்னுடைய தோழனுமாய்’ என்று சுந்தர மூர்த்தி நாயனார் இறைவனைப் பற்றிச் சொன்னார். அதே உணர்வில் ‘ஓசை, ஒலி எல்லாம் ஆனாய் நீயே’ என்று நாவுக்கரசராம் அப்பர் அடிகள் சொன்னார்கள். ‘பதம் ஏழும் பண்ணும் உருதாளத்து ஒலி பலவும் நின்றான் இறைவன்’ என்று திருஞான சம்பந்தர் சொன்னார்.

இதைத்தான் இங்கே கத்தோலிக்கத் திருச்சபையினர் - தென்இந்திய கிறித்துவ மார்க்கத்தின் திருச்சபையினர் இங்கே வந்து இருக்கின்றார்களே, அவர்கள் போற்றுகின்ற விவிலியத்தில் - புதிய ஏற்பாட்டில், யோவான் சுவிஷேசத்தில் - அந்த அதிகாரத்தின் முதல் வசனம் - ‘ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது.’ எனக் கூறுகிறது.

அதைத்தான் சங்கீதத்தில் 122-ஆவது அதிகாரத்தின் மூன்றாவது வசனத்தில் “எருசலேம் இசைவிணைப்பான நகரமாகக் கட்டப்பட்டிருந்தது” எனக் கூறுகிறது. தாவீதின் சங்கீதங்கள் - யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டுகின்ற சங்கீதங்கள் கிறித்து மார்க்கத் துறவிகளின் உள்ளத்தைக் கவர்ந்த காரணத்தினால் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகரை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆம். இந்தத் திருவாசகம் எப்படி வந்தது?

தமிழில், சைவ இலக்கியத்தில் பன்னிரு திரு முறைகள் உண்டு. பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தந்தவை. எட்டாவது திருமுறை மாணிக்கவாசகரின் திருவாசகம் - முதல் பகுதி திருவாசகம்; இரண்டாம் பகுதி திருக்கோவையார்!

ஒன்பதாவது திருமுறை ஒன்பது அடியார்கள் தந்த திருமுறைகள். திருமாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், சேதுராயர், கண்டராதித்தர், பூந்துருத்திக் காடநம்பி, புருடோத்தம நம்பி, திருவாழிய அமுதனார், வேணாட்டு அடிகள் என்று ஒன்பது அடியார்கள் தீட்டியதுதான் ஒன்பதாம் திருமுறை.

பத்தாம் திருமுறை திருமூலர் தந்த திருமந்திரம்.

11-ஆம் திருமுறை காரைக்கால் அம்மையார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி இவர்கள் தந்தவை.

12-ஆம் திருமுறை சேக்கிழார் தந்த‘பெரியபுராணம்’.

இந்தப் பன்னிரண்டு திருமுறைகளின் அடிப்படையும் ‘நமசிவாய’ என்ற ஐந்து எழுத்துதான். இந்த ‘நமசிவாய’ என்ற ஐந்து எழுத்தை வைத்துத்தான் சிவபுராணத்தைத் தொடங்குகிறார் மாணிக்கவாசகர். இவரது திருவாசகத் தைப் பற்றி வடலூர் வள்ளலார் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை இராமலிங்க அடிகளார் கூறும் போது,

‘வான் கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’ - எனப் பாடியதோடு,

‘வாட்டமிலா மாணிக்கவாசகரின் வாசகத்தைக்
கேட்டபோது, அங்கிருந்த கீழ்ப்பறவைச்சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பு அன்றே’ - என்றும் பாடினார்.

ஆகவேதான், வடலூர் வள்ளலாரின் உள்ளத்தில் மாணிக்கவாசகர் திருவாசகம் இடம் பெற்றதைப்போல, இலண்டன் நகரத்தில் இருந்து வந்த ஜி.யு.போப் உள்ளத்தில் இடம் பெற்றது. 1837-இல் தொடங்கி 63 ஆண்டுகள் தமிழ் படித்தார். இலண்டனில்
(Oxford) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாலியால் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். அவர் திருவாசகத்தில் உருகிப் போனார். அந்தக் கல்லூரியின் தலைவர் பெஞ்சமின் ஜோவர்ட் என்பவரோடு ஒரு நிலா வெளிச்சத்தில் நடந்து போகிறபோது, தமிழில் இருக்கின்ற திருவாசகத்தைப் போன்றதொரு நூலை உலகில் இதுவரை தான் படித்தது இல்லை என்று அவர் சொன்னபோது, அதனை மொழிபெயர்க்கலாமே என்று அந்தப் பல்கலைக் கழகத்தின் தலைவர் கூறினார்.

‘எனக்கு முதுமை வந்துவிட்டது. அதை மொழி பெயர்க்கும் ஆற்றல் இல்லை’ என்று சொன்னபோது, ‘ஒரு நல்ல செயலுக்காகப் பெரிய பணியில் முன்னேறிச் செல்வது நீண்ட காலத்துக்கு வாழ வழி வகுக்கும்'. இதை முடிக்கும் வரை நீ உயிரோடு இருப்பாய்' என்று சொன்னார். 1900 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் அவருடைய மொழி பெயர்ப்பு வெளியாயிற்று. அந்தத் திருவாசகத்துக்குப் பலர் உரை தீட்டி இருக்கின்றார்கள். காலத்தின் அருமை கருதி நான் விரிவாகச் செல்ல விரும்பவில்லை.

அந்தத் திருவாசகம் 51 தலைப்புகளைக் கொண்டது. 656 அல்லது 658 பாடல்கள் என்று சொல்வார்கள். இந்த 51 தலைப்புகளில் பத்துப் பத்துப்பாட்டாக 19 பத்துகள் இருக்கின்றன.

ஓர் அதிகாரத்துக்குக் குறள்கள் பத்து, மோசசின் கட்டளைகள் பத்து, சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு என்பது முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பட்டினப் பாலை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, மலைப்படுகடாம் என்று பத்து நூல்கள் உள்ளன. அதைப்போலத்தான் இந்தத் திருவாசகத்தில் 51 தலைப்புகளில் 19 பத்துகள் இருக்கின்றன.

அச்சப் பத்து
அடைக்கலப் பத்து
அருள் பத்து
அதிசியப் பத்து
அற்புதப் பத்து
அன்னைப் பத்து
ஆசைப் பத்து
உயிருண்ணிப் பத்து
கண்ட பத்து
குயில் பத்து
குலாப் பத்து
குழைத்தப் பத்து
செத்திலாப் பத்து
சென்னிப் பத்து
பிடித்த பத்து
பிரார்த்தனைப் பத்து
புணர்ச்சிப் பத்து
யாத்திரைப் பத்து
வாழாப் பத்து

(கைதட்டல்)

இந்தப் பத்தில் இவர் எதைப்பற்றிக் கொண்டார் தெரியுமா? இவர் மூன்று பத்தைப் பற்றிக் கொண்டார்.

இந்தப் பத்தொன்பது பத்துகளில் நமது இளையராஜா மூன்று பத்துகளுக்கு இசை அமைத்து இருக்கிறார். ஒன்று யாத்திரைப் பத்து. அடுத்த பத்து என்ன தெரியுமா? (வைகோ திரும்பிப் பார்க்கிறார். இளையராஜா குயில் பத்து என்கிறார். வைகோ இல்லை பிடித்த பத்து என்று கூறுகிறார்.) நீங்கள் திருவாசகத்தில் உருகி ஐக்கியமாகி விட்டீர்கள். அதனால் அப்படிச் சொன்னார்கள். நான் வெளியில் இருந்து பார்ப்பவன். நீங்கள் இசையமைத்த பாடல் ‘பிடித்த பத்து’. அடுத்த பத்து “அச்சப் பத்து” அவர் தேர்ந்தெடுத்தது இந்த மூன்று ‘பத்தி’லிருந்தும் ஒவ்வொரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இவை யன்றி அவர் சிவபுராணத்தில் இருந்து பாடல் எடுக்கிறார். ‘நமசிவாய வாழ்க’ என்னும் சொற்றொடர்தான் திருவாசகத்தின் தொடக்கம்

ஏன் இந்தத் திருவாசகம் இயற்றப்பட்டது? இது பலருக்கும் தெரிந்த கதைதான். பாண்டிய நாட்டு அரசவையில் தென்னவன் பிரமராயன் என்கிற அமைச்சர் இருந்தார். வாதவூரில் பிறந்தவர். அவர்தான் வாதவூர் அடிகள் மாணிக்க வாசகர் அவர் குதிரை வாங்குவதற்குச் சென்றபோது அரசுப் பணத்தை எல்லாம், அந்தணர் வடிவில் இருந்த சிவனடியார் உடன் சேர்ந்து, சிவனுடைய திருப்பணிகளுக்குச் செலவழித்து விட்ட காரணத்தினால், மன்னன் குதிரையோடு ஏன் வரத் தாமதம் என்று கோபித்து செய்தி அனுப்பியபோது, வாதவூரர் மனம் கலங்கிய நேரத்தில் இறைவனின் அருள்வாக்குக் கேட்டு, ‘குதிரை வரும் என்று நீ ஒலை அனுப்பு. ஓலையை அனுப்பிவிட்டு நீ முன்னால் செல். பின்னால் குதிரைகள் வரும் என்று சொல்’ என்ற சொற்களைக் கேட்டார். மாணிக்கவாசகர் என்ற பெயர் அப்பொழுது இல்லை. அவர் மன்னனிடத்தில் வந்து குதிரைகள் வந்து கொண்டு இருக்கின்றன என்று சொல்கிறார். குதிரைச் சேவகன் வருகிறான் - சிவன் வருகிறான் குதிரைச் சேவகனாக நரிகளைக் குதிரைகள் ஆக்கி வருகிறான். குதிரைகள் இலாயத்தில் கட்டப்படுகின்றன.

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்

இரவு நேரத்தில் அந்தக் குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறித் தளைகளை அறுத்துக் கொண்டு அனைத்தையும் கடித்துப் போட்டுவிட்டு ஓடுகின்றன. ஆத்திரம் அடைந்த மன்னன் வாதவூரரைச் சிறையில் பூட்டுகிறான். சிறையில் கொடுமைகள் நடக்கின்றன. இறைவன் மேலும் திருவிளையாடல் செய்கிறான். வைகையில் தண்ணீர் பெருக்கு எடுக்கிறது. காலங்கெட்ட காலத்தில் வைகையில் தண்ணீரா? கரை உடைத்துப் பாய்கிறதே வெள்ளம் என்று கவலைப்பட்ட மன்னன் கரையை அடைப்பதற்கு வீட்டுக்கு ஒவ்வொருவராக வந்து பணியாற்றக் கட்டளை இடுகின்றான்.

அப்போதுதான் பிட்டு வாணியச்சியான வந்திக்கு - செந்தமிழ்ச்செல்விக்கு - அந்தக் கிழவிக்குக் கரையை அடைப்பதற்கு வீட்டில் பிள்ளை ஒருவரும் இல்லை யாதலால் இறைவன் சிறுபிள்ளையாக மண்வெட்டி யுடனும், கூடையுடனும் ஓடிச்சென்று, ‘நான் கரையை அடைக்கிறேன். என்ன கொடுப்பாய்?’ என்று கேட்டான். அதற்கு வந்தி, ‘என்னிடம் ஒன்றும் இல்லை. உதிர்ந்த பிட்டு மட்டும்தான் இருக்கிறது’ என்று சொல்ல, பிட்டை வாங்கிக் கொண்டு, இவன் கரையையும் அடைக்காமல் தண்ணீரில் குதிப்பதும், நீந்துவதும், விளையாடுவதுமாக இருக்க, சேவகன் அதைக்கண்டு பிரம்பால் அடிக்க, அவன் முதுகில் விழுந்த அடி, அனைவரின் முதுகிலும் விழுந்தது, மன்னர் முதுகிலும் விழுந்தது.

வானத்தில் இருந்து எழுந்த ஒலி ‘சிறையில் இருக்கக்கூடிய வாதவூர் அடிகளை விடுவித்திடுக’ எனக் கூற, அதன்பிறகு மன்னன் வேதனையுற்று விடுவிக்க, வெளியே வந்த வாதவூர் அடிகள் ஆலவாய்ச் சொக்கர் இடத்தில் அருள்பெற்றுப் புறப்படுகிறார். ‘போய் வா ஒவ்வொரு இடமாக பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று, உத்திரகோசமங்கையில் - காளையார் கோவிலில் சென்று, திருமுதுகுன்றத்தில், திருக்கழுக் குன்றத்தில் எல்லா இடங்களையும் தரிசித்துவிட்டுக் கடைசியில் திருச்சிற்றம்பலத்துக்கு வந்து சேர்வாய்’ என அருள்வாக்கு சொன்னபடி சிற்றம்பலத்துக்குப் போனார். அங்கே திருவாசகத்தைப் பாடினார்.

இதுதான் திருவாசகம் தோன்றுவதற்கான அடிநாதம். ‘நமசிவாய வாழ்க’ என்றுதான் முதலில் தொடங்குகிறது. ஆனால், நம்முடைய இளையராஜா அவர்கள் அதை முதலில் வைக்கவில்லை. முதலில் யாத்திரைப் பத்து  வைக்கிறார். யாத்திரைப் பத்து என்றால் என்ன? பயணம் புறப்படுவோம் இந்த மண்ணுலகைவிட்டு, இச்சைகளை விட்டு என்று சொல்லுகிறவர்கள்.

‘பூவார் சென்னி மன்னனெம் புயங்கப்
பெருமான் சிறியோமை
ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும்
வெள்ளக் கருணையினால்
ஆ ஆ என்னப் பட்டன்பாய் ஆட்பட்
டீர்வந் தொருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட்
டுடையான் சுழல்புகவே'.

இது யாத்திரைப் பத்து. அதற்கு அடுத்து சிவபுராணத்தைப் பாடுகிறார். எடுத்த எடுப்பில் ‘நமசிவாய வாழ்க’ என்று வைக்காமல்

‘பொல்லா வினையேன்
....... நின் பெருஞ்சீர்
புகழுமாறு ஒன்றறியேன்’

‘உன்னைப் புகழக்கூடிய அறிவு ஆற்றல்எனக்கு இல்லையே’ என்று மாணிக்கவாசகர் பாடுகிற பாடலை வைத்து இருக்கிறார். இவர் மாணிக்கவாசகர் ஆகி விடுகிறார். ஏறக்குறைய நான் 20 முறை இந்த இசைப் படைப்பைக் கேட்டேன். அதைக் கேட்கும்போதுதான் ஏன் இந்தப் பாடலை வைத்தார்?- என்று எண்ணினேன்.

இந்தப் ‘பொல்லா வினையேன்’ என்ற பாடலைப் பாடும்போது, அமெரிக்கா நாட்டிலும், இங்கிலாந்து நாட்டிலும் இசைக்கருவிகளை இசைக்கக்கூடிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்ட - விருது பெற்ற மாமேதை எழுதிய ஆங்கில வரிகளுக்கு இசைக்கருவிகளை இசைக்கிறார்களே, அந்தப் பாடல்களைத்தான் கேட்டீர்கள். பொல்லா வினையேன் என்று சொல்கிறபோது, I am just a man imperfect lowly.. அடுத்தவரிகள் How can I reach for something Holy... - பாடலும் மிக அருமையான பாடல். அந்த உன்னதமான இடத்தை நான் எப்படி அடைய முடியும்? இந்தப் பாடலை வைத்துவிட்டு, அதன் பிறகுதான்

‘நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க’

எனும் சிவப்புராண வரிகளை வைத்து இருக்கிறார் இளையராஜா இந்தப் பாடலை இரண்டாவது பாடலாக வைத்து இருக்கிறார். அடுத்தப் பாடலும் மிக அருமையான பாடல்.

மாணிக்கவாசகர் மதுரையில் போய்க் கொண்டு இருக்கிறார். ஆங்காங்கு பெண்கள் மர நிழல்களில், வீடுகளில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். இளம் சிறுவர்கள் ஆங்காங்கு ஒடித் திரிகிறார்கள். கிளிகள் கொஞ்சுகின்றன. சோலையில் குயில்கள் கூவுகின்றன. இதைப்பார்க்கின்ற வேளையில், அங்கே தும்பிகள், வண்டுகள் ரீங்காரம் செய்து பாடிக் கொண்டு பறக்கின்றன. அது அரச வண்டு. அந்த வண்டினைப் பார்த்துச் சொல்கிறார். ‘ஏன் இப்படிப் பாடித் திரிகிறீர்கள்? இறைவனின் காலடியில் போய்ப் பாடுங்கள்’ என்று சொல்வதற்காக

‘தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும், காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்பும் உள்நெக ஆனந்தத்தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ’

எனப் பாடுகிறார். இதுதான் அவர் அமைத்து இருக்கின்ற பாடல். அதற்கு அடுத்து எங்கே வருகிறார்? “பிடித்த பத்து”ப் பாடலை எடுத்தாள்கிறார் இளையராஜா

இதோ அந்தப் பாடல்:

“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.”

ஆக, பிடித்தப் பத்தில் இந்தப் பாடலைச் சொன்னார். அவன்தான் தமிழன்

அவன்தான் தமிழன்

இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றபோது ஒரு நடனக் காட்சியை அமைத்து இருந்தார்கள். இந்த நடனக் காட்சி என்பது பாரதியார் சொல்லுவார். ‘எங்களிடமா இசை இல்லை? எங்கள் சுண்ணம் இடிக்கிற பெண்களின் இசைக்கு நிகர் உலகில் எங்கே இருக்கிறது?' என்று சொன்னார் பாரதியார். அதுதான் திருப்பொற் சுண்ணம். அங்கே சுண்ணம் இடிக்கிறார்கள். சுண்ணம் இடிக்கிறபோது, உலக்கையை எடுத்து இங்கே நங்கைகள் இடித்துப் பாடினார்கள். பொற்சுண்ணம் என்பது அதுதான். உலக்கையைக் குத்துகிறபோது, சத்தத்தோடு அந்தப் பாடல் வெளி வரும்.

“முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனெடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணை யொடு டாட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்துநாமே”

இந்தப் பாட்டை ஐந்தாவது பாடலாக வைத்துவிட்டு, கடைசியாக என்ன வைக்கிறார்? அவர்தான் இளையராஜா அவன்தான் தமிழன் எவருக்கும் அஞ்சமாட்டோம். எதற்கும் அஞ்சமாட்டோம். கூற்றுவனே வந்தாலும் அஞ்சமாட்டோம். ஏன் மாணிக்கவாசகர் எழுதினார்? நாவுக்கரசருடைய கருத்து அவர் மனதிலே இருக்கிறது. பல்லவ நாட்டுச் சக்கரவர்த்தியின் மண்டபத்தில் யானையின் காலில் இட்டு உன் தலையை இடறச் செய்வோம் என்றபோதும், சுண்ணாம்புக் காளவாயில் போட்டு உயிரைப் போக்குவோம் என்றபோதும், கல்லைக் கட்டிக் கடலில் தூக்கி எறிவோம் என்றபோதும், கொல்வோம் என்று மன்னன் முடிவெடுத்தபோதும்,

‘நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம்’
இன்பமே எந்நாளும்
துன்பமில்லை.

என்று முழங்கினாரே நாவுக்கரசர் பெருமான் அதே பாடலை இங்கே மாணிக்கவாசகர் அச்சப்பத்துக்குக் கொண்டு வருகிறார்.

இளையராஜாவும் ஏறக்குறைய அப்படித்தான். எவருக்கும் தலைவணங்கமாட்டார். புகழ்ச்சிக்கும் மயங்க மாட்டார். புகழ் பலரை வீழ்த்திவிடும். பலரை வீழ்த்தி இருக்கிறது. புகழால் வீழ்த்த முடியாதவர்கள்தான் உலகில் உயர்ந்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாமனிதன் எங்கள் தமிழன் - எங்கள் தென்னாட்டுத் தமிழன். அதனால்தான் அச்சப்பத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார். இதோ அந்தப் பாடல்.

" புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மான்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.”

நெருப்பை உமிழ்கின்ற வேங்கைக்கும் அஞ்சமாட்டேன். கட்டுத்தறியை உடைத்து வருகின்ற யானைக்கும் அஞ்சமாட்டேன். வளைவில்லாமல் நேராகப் பாய்ந்து வருகின்ற அம்புக்கும் அஞ்சமாட்டேன், கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் - உயிர் முடிக்கும் எமனுக்கும் அஞ்சமாட்டேன்.

இதுதான் அவர் நிறைவாக வைத்த பாடல் இந்த ஆறு பாடல்களோடு நம்முடைய தமிழ் இசையைக் கொண்டு மேற்கத்திய இசைக்கருவிகளோடு, டான்யூப் நதிக்கரையில் அங்கேரி நாட்டில் புடாபெஸ்ட் நகரத்தில் இசைக்கலைஞர்களோடு - இசைக்கருவிகளோடு ஒலி வடிவங்களை இணைத்து - உலகின் தொன்மையான இசையை இந்த உலகத்தின் எட்டுத் திசைகளுக்கும் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கிறீர்கள். இதைக் கேட்க, கேட்க அவர்களின் நெஞ்சம் கவரக் கவர எவரும் செய்யாத ஒரு பணியைச் செய்து இருக்கிறீர்கள்.

நான் பாராட்ட விரும்புவது ஒரு தாய் பிள்ளையைப் பாராட்டுவதைப் போல - தமிழகமே தாயாகி விட்டது என்று சொன்னார்களே ஆனால் யார் இவரைப் பாராட்டுகிறார்கள் என்று தெரியுமா? ஸ்டீபன்ஸவார்ட்ஸ் (STEPHEN SCHWARTZ) ஹாலிவுட் திரைப் படங்களில் ஆஸ்கார் விருதுபெற்ற இசை அமைப்பாளர் அவர் இளையராஜாவைப் பாராட்டி எழுதுகிறார்.
Last night at Sony Studios in New york City I had the pleasure of hearing the almost finished mix of Ilaiyaraj’s amazing work. நான் நேற்று இரவு நியூயார்க் நகரத்தின் சோனி ஸ்டுடியோவில் அநேகமாக முற்றுப் பெற்றுவிட்ட, இளையராஜா அவர்களின் அற்புதமான இசை ஆல்பத்தைச் செவி கொடுத்துக் கேட்கின்ற மகிழ்ச்சியைப் பெற்றேன். It is unlike anything I have ever heard before a stunning blend of Indian and western music and instruments. I asked Mr Raja, if this was something different for him too, and he said he had never done anything like this piece before. I don’t know if anyone has. இதுவரை இப்படி உலகில் எவரும் படைத்தது இல்லை என்று ஆஸ்கார் பரிசு பெற்ற ஹாலிவுட்டில் இருக்கின்ற அந்த இசை மேதை சொல்லி இருக்கிறார்.

இப்படிப்பட்ட பாராட்டைப் பெற்ற நீங்கள் திருவாசகத்துக்கு சிம்பொனி ஆரடோரியோ இசை அமைத்து இருக்கிறீர்கள். தமிழ் இசை சாதி, மத எல்லைகளைக் கடந்து இருக்கின்றது. கத்தோலிக்கப் பாதிரிமார்களும், திருச்சபை பாதிரிமார்களும், தமிழுக்குத் தொண்டு செய்தார்கள் எனில் இங்கே திருவாசகத்தின் பெருமையைத் தருகிறோம் என்கிறபோது, எல்லை களைக் கடந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகத்துக்கு ஒரு காலத்தில் கொள்கையைத் தந்தோமே, நம்முடைய நாகரிகத்தை - நம்முடைய இசைக்கலையை உலகுக்குத் தருகின்ற இந்தப் பெருமை இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிற்கும். காற்றில் ஒலி அலைகள் இருக்கின்ற வரையில் மாணிக்காவாசகரின் திருவாசகம் இருக்கும். ஒலி அலைகள் இருக்கின்ற வரையில் இளையராஜாவின் படைப்புகள் இருக்கும்.

இந்த ஒலி நாடாவை முறையாக விலை கொடுத்து வாங்கிக் கேளுங்கள். அதில் இவர் சொல்லுகிறார். ஒரே ஒரு இடத்தில்தான் அவர் பேச்சு வருகிறது. முதல் ஐந்து பாடல்களைப் பதிவு செய்து முடித்தபிறகு, இளையராஜா ராக ஆலாபனை செய்கிறார். அந்த ஆலாபனை செய்கிறபோது, இசைக்கருவிகளில் இசை வருகிறது. ‘அடடா இதுதான் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவா? எவ்வளவு அருமையாக இருக்கிறது இதில் மாணிக்கவாசகர் பாடலைப் பாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கு எந்தப் பாட்டு சரியாக வரும்? முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனா என்று சொல்லிவிட்டு, இது வார்த்தை பிரிக்க பிரிக்க வருகிறதே இதற்கு என்ன டியூன் போடுவது? என்று சொல்லியவாறு

‘புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்’

என்ற அந்த பாட்டைப் போட்டுவிட்டு, கடைசியாக ‘வாதவூர் அடிகள் வாழ்க வாழ்த்துரைக்கும் அடியார் வாழ்க என முடிக்கிறார்.

இங்கே அற்புதமாகப் பாடிய கல்லூரி நங்கைகள் அதைப் பாடலில் சேர்த்து இருந்தார்கள். வாதவூர் அடிகள் திருவாசகத்தின் மூலமாகத் தமிழ் இருக்கும் வரை வாழ்வார் - எங்கள் இளையராஜா இந்த இசைப் படைப்பால் வாழ்வார் - தமிழகம் அவருக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கிறது.

இயற்கைத் தாய் உங்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாழுகின்ற ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் கொடுத்து, இந்தத் தமிழகத்துக்கும், தமிழ் இசைக்கும் நீங்கள் பெரும் சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி, எளியேனாகிய எனக்கு இந்த அருமையான வாய்ப்பைத் தந்த உங்களுக்கு எந்நாளும் மறவாத நன்றி.

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home