|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - ஏழாம் திருமுறை > முதற் பகுதி - பாடல்கள் (1-517) > இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள் (1-517)
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
திருச்சிற்றம்பலம்
7.001 திருவெண்ணெய்நல்லூர் (1-10) மின்பதிப்பு 7.002 திருப்பரங்குன்றம் (11-21) மின்பதிப்பு 7.003 திருநெல்வாயில் அரத்துறை (22-31) மின்பதிப்பு 7.004 திருஅஞ்சைக்களம் (32-41) மின்பதிப்பு 7.005 திருஓணகாந்தன்தளி (41-51) மின்பதிப்பு 7.006 திருவெண்காடு (52-61) மின்பதிப்பு 7.007 திருஎதிர்கொள்பாடி (62-72) மின்பதிப்பு 7.008 திருவாரூர் (73-82) மின்பதிப்பு 7.009 திருஅரிசிற்கரைப்புத்தூர் (83-93) மின்பதிப்பு 7.010 திருக்கச்சிஅனேகதங்காவதம் (94-103) மின்பதிப்பு 7.011 திருப்பூவணம் (104-111) மின்பதிப்பு 7.012 திருநாட்டுத்தொகை (112-122) மின்பதிப்பு 7.013 திருத்துறையூர் (123-133) மின்பதிப்பு 7.014 திருப்பாச்சிலாச்சிராமம் (134-145) மின்பதிப்பு 7.015 திருநாட்டியத்தான்குடி (146-155) மின்பதிப்பு 7.016 திருக்கலையநல்லூர் (156-166) மின்பதிப்பு 7.017 திருநாவலூர் (167-177) மின்பதிப்பு 7.018 திருவேள்விக்குடி (178-187) மின்பதிப்பு 7.019 திருநின்றியூர் (188-198) மின்பதிப்பு 7.020 திருக்கோளிலி (199-208) மின்பதிப்பு 7.021 திருக்கச்சிமேற்றளி (209-218) மின்பதிப்பு 7.022 திருப்பழமண்ணிப்படிக்கரை (219-228) மின்பதிப்பு 7.023 திருக்கழிப்பாலை (229-238) மின்பதிப்பு 7.024 திருமழபாடி (239-248) மின்பதிப்பு 7.025 திருமுதுகுன்றம் (249-258) மின்பதிப்பு 7.026 திருக்காளத்தி (259-268) மின்பதிப்பு 7.027 திருக்கற்குடி (269-278) மின்பதிப்பு 7.028 திருக்கடவூர்வீரட்டம் (279-288) மின்பதிப்பு 7.029 திருக்குருகாவூர் (289-298) மின்பதிப்பு 7.030 திருக்கருப்பறியலூர் (299-309) மின்பதிப்பு 7.031 திருஇடையாற்றுத்தொகை (310-319) மின்பதிப்பு 7.032 திருக்கோடிக்குழகர் (320-329) மின்பதிப்பு 7.033 நமக்கடிகளாகிய - அடிகள் (330-339) மின்பதிப்பு 7.034 திருப்புகலூர் (340-350) மின்பதிப்பு 7.035 திருப்புறம்பயம் (351-360) மின்பதிப்பு 7.036 திருப்பைஞ்ஞீலி (361-371) மின்பதிப்பு 7.037 திருவாரூர் (372-382) மின்பதிப்பு 7.038 திருவதிகைத்திருவீரட்டானம் (383-392) மின்பதிப்பு 7.039 திருத்தொண்டத்தொகை (393-403) மின்பதிப்பு 7.040 திருக்கானாட்டுமுள்ளூர் (404-414) மின்பதிப்பு 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் (415-424) மின்பதிப்பு 7.042 திரு வெஞ்சமாக்கூடல் (425-434) மின்பதிப்பு 7.043 திருமுதுகுன்றம் (435-445) மின்பதிப்பு 7.044 முடிப்பதுகங்கை (446-455) மின்பதிப்பு 7.045 திருஆமாத்தூர் (456-466) மின்பதிப்பு 7.046 திருநாகைக்காரோணம் (467-477) மின்பதிப்பு 7.047 ஊர்த்தொகை (478-487) மின்பதிப்பு 7.048 திருப்பாண்டிக்கொடுமுடி (488-497) மின்பதிப்பு 7.049 திருமுருகன்பூண்டி (498-507) மின்பதிப்பு 7.050 திருப்புனவாயில் (508-517) மின்பதிப்பு
7.01 திருவெண்ணெய்நல்லூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
001 பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.01 002 நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.02 003 மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.03 004 முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.04 005 பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்
ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.05 006 தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.06 007 ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.07 008 ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.08 009 மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.7.1.09 010 காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.7.1.10
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தடுத்தாட்கொண்டவீசுவரர்,
தேவியார் - வேற்கண்மங்கையம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.2 திருப்பரங்குன்றம்
பண் - இந்தளம்
011 கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக்
கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
சில்பூத மும்நீ ருந்திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்
அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.01 012 முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர்
முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்
கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர்
கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோ ம்
பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்
அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.02 013 மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்
துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.03 014 மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி
மலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா
ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்த
நலமொன் றறியோமுங் கைநாக மதற்
கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.04 015 பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்
புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்
என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங்
கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்
கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.05 016 தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச்
சிலபூ தமும்நீ ருந்திசை திசையன
பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர்
படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர்
பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர்
படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்
அண்ணா மலையே னென்றீரா ரூருளீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.06 017 சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந்
தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்
பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர்
தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர்
கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங்
கண்ணுமூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால்
அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.07 018 பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந்
துணிவண்ணத் தின்மேலு மோர்தோல் உடுத்துச்
சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய்
மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய்
அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.08 019 கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்
மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர்
வேளா ளியகா மனைவெந் தழிய
விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந்
தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர்
உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர்
ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.09 020 பாரோடு விண்ணும் பகலு மாகிப்
பனிமால் வரையா கிப்பரவை யாகி
நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி
நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்
தேரோ டவரை எடுத்த அரக்கன்
சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்
ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென்
அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே.7.2.10 021 அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்
றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்
பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.7.2.11
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.3 திருநெல்வாயில் அரத்துறை
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
022 கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.7.3.01 023 கறிமா மிளகும் மிகுவன் மரமும்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்
நெல்வா யில்அரத் துறைநின் மலனே
வறிதே நிலையாத இம்மண் ணுலகில்
நரனா கவகுத் தனைநா னிலையேன்
பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்
பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே.7.3.02 024 புற்றா டரவம் மரையார்த் துகந்தாய்
புனிதா பொருவெள் விடையூர் தியினாய்
எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால்
நெல்வா யில்அரத் துறைநின் மலனே
மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான்
வண்டார் குழலாள் மங்கைபங் கினனே
அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.7.3.03 025 கோடுயர் கோங்க லர்வேங் கையலர்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வா யிலரத்
துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனற்க ரையாம் இளமை
உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யா
தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.7.3.04 026 உலவு முலகிற் றலைகற் பொழிய
உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
புலனைந் தும்மயங் கியகங் குழையப்
பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.7.3.05 027 ஏலம் இலவங் கம்எழிற் கனகம்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி
நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
வாலூன் றவருந் தும்முடம் பிதனை
மகிழா தழகா வலந்தேன் இனியான்
ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.7.3.06 028 சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதே
பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.7.3.07 029 திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன்
றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளி
நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற்
பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்
அண்டா வமரர்க் கமரர் பெருமான்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.7.3.08 030 மாணா வுருவா கியோர்மண் ணளந்தான்
மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்
நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
வாணார் நுதலார் வலைப்பட் டடியேன்
பலவின் கனியீந் ததுபோல் வதன்முன்
ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.7.3.09 031 நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின்
நெல்வா யிலரத் துறைநின் மலனைத்
தேரூர் நெடுவீதி நன்மா டமலி
தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
ஆரூ ரனுரைத் தனநற் றமிழின்
மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
காரூர் களிவண் டறையானை மன்ன
ரவராகி யோர்விண் முழுதாள் பவரே.7.3.10
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.4 திருஅஞ்சைக்களம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
032 தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.01 033 பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே
பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே
பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே
புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே
மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட
வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய
அடித்தார் கடலங் கரைமேன் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.02 034 சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே
சிறியார் பெரியார் மனத்தேற லுற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
முனிகள் முனியே அமரர்க் கமரா
சந்தித் தடமால் வரைபோற் றிரைகள்
தணியா திடறுங் கடலங் கரைமேல்
அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால்
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.03 035 இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால்
இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற்
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்
அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்
மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.04 036 வீடின் பயனென் பிறப்பின் பயனென்
விடையே றுவதென் மதயா னைநிற்க
கூடும் மலைமங் கைஒருத் தியுடன்
சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே
பாடும் புலவர்க் கருளும் பொருளென்
நிதியம் பலசெய் தகலச் செலவில்
ஆடுங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.05 037 இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே
இறந்தார் தலையிற் பலிகோட லென்னே
பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே
பரமா பரமேட் டிபணித் தருளாய்
உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங்
கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டரவக் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.06 038 ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான்
சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான்
நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான்
நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பலவெத் தனையுங்
கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி
ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.07 039 வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன்
விளங்குங் குழைக்கா துடைவே தியனே
இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத்
தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்
கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங்
கடுகப் பிரமன் றலையைந் திலுமொன்
றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.08 040 பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான்
பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்
நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச்
சிலைதொட் டவனே உனைநான் மறவேன்
வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.7.4.09 041 எந்தம் அடிகள் இமையோர் பெருமான்
எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்
அந்தண் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை
மந்தம் முழவுங் குழலு மியம்பும்
வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன
சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண்
டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே.7.4.10
இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அஞ்சைக்களத்தீசுவரர், தேவியார் - உமையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.5 திருஓணகாந்தன்றளி
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
042 நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.01 043 திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரள வீசுங்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கொற் றட்டி யாளால்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோ ம்
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.02 044 பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி யுங்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.03 045 வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை
வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
பல்லை யுக்கப் படுத லையிற்
பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.04 046 கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்
கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.05 047 வாரி ருங்குழல் வாணெ டுங்கண்
மலைம கள்மது விம்மு கொன்றைத்
தாரி ருந்தட மார்பு நீங்காத்
தைய லாளுல குய்ய வைத்த
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.06 048 பொய்ம்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாளொன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை என்றே எம்பெ ருமான்
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.07 049 வலையம் வைத்த கூற்ற மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைய மைத்த சிந்தை யாலே
திருவ டிதொழு துய்யி னல்லாற்
கலைய மைத்த காமச் செற்றக்
குரோத லோப மதம வருடை
உலைய மைத்திங் கொன்ற மாட்டேன்
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.08 050 வார மாகித் திருவ டிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
ஒற்றி யூரேல் உம்ம தன்று
தார மாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊருங் காடு உடையுந் தோலே
ஓண காந்தன் றளியு ளீரே.7.5.09 051 ஓவ ணமேல் எருதொன் றேறும்
ஓண காந்தன் றளியு ளார்தாம்
ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட
வரைது கிலொடு பட்டு வீக்கிக்
கோவ ணமேற் கொண்ட வேடங்
கோவை யாகவா ரூரன் சொன்ன
பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.7.5.10
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஓணகாந்தீசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.6 திருவெண்காடு
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
052 படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.01 053 இழித்து கந்தீர் முன்னை வேடம்
இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
உயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை
அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.02 054 படைகள் ஏந்திப் பாரி டமும்
பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவ ணத்த ராகி
உண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரணம் இட்டுத்
தன்மை பேசி இல்ப லிக்கு
விடைய தேறித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.03 055 பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்
பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக்
கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்
வான நாடர் மருவி யேத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.04 056 குடமெ டுத்து நீரும் பூவுங்
கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெ டுத்தொன் றாடிப் பாடி
நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடமெ டுத்த கொங்கை மாதோர்
பாக மாக வார்க டல்வாய்
விடம்மி டற்றில் வைத்த தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.05 057 மாறு பட்ட வனத்த கத்தில்
மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்
பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
கூறு பட்ட கொடியும் நீருங்
குலாவி ஏற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.06 058 காத லாலே கருதுந் தொண்டர்
கார ணத்தீ ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்
புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை
நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.07 059 குரவு கொன்றை மதியம் மத்தங்
கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்
விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
பாக மாய மங்கை யஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.08 060 மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்
நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற்
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர்
பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும்
நணுகா வண்ணம் அனலு மாய
வேடங் காட்டித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.7.6.09 061 விரித்த வேதம் ஓத வல்லார்
வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை
விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யாலா ரூரன் தொண்டன்
அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
செம்மை யாளர் வானு ளாரே.7.6.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்,
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.7 திருஎதிர்கொள்பாடி
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
062 மத்த யானை ஏறி மன்னர்
சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.01 063 தோற்றம் உண்டேல் மரணம் உண்டு
துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு
நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.02 064 செடிகொ ளாக்கை சென்று சென்று
தேய்ந்தொல் லைவீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்
பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.03 065 வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
வஞ்ச மனத்தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங்
கல்ல லில்வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.04 066 அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
காறலைப் பான்பொருட்டாற்
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்
ஊர்ப்பு றஞ்சேராமுன்
வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர்
வஞ்ச மதில்மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.05 067 பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோ டாடி
நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த
அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.06 068 கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்
செற்ற மனம்நீக்கி
வாசம் மல்கு குழலி னார்கள்
வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.07 069 இன்பம் உண்டேல் துன்பம் உண்டு
ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழை மையான்
முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
அடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.08 070 தந்தை யாரும் தவ்வை யாரும்
எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி
வான நெறிகாட்டுஞ்
சிந்தை யீரே நெஞ்சி னீரே
திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.09 071 குருதி சோர ஆனையின் றோல்
கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
மாலய னும்மறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
சோதியெம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.7.7.10 072 முத்து நீற்றுப் பவள மேனிச்
செஞ்சடை யான்உறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்
பாதம் பணிவாரே.7.7.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அயிராவதேசுவரர்,
தேவியார் - வாசமலர்க்குழன்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.8 திருவாரூர்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
073 இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.1 074 ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்க
மடந்தைமார் மதிக்கு மிந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.2 075 அறுபதும் பத்தும் எட்டும்
ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்
சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.3 076 சொல்லிடில் எல்லை இல்லை
சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு
நலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாடம் நீடு
மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.4 077 நரம்பினோ டெலும்பு கட்டி
நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை
மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.5 078 மணமென மகிழ்வர் முன்னே
மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே
பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும்
பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.6 079 தாழ்வெனுந் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
வலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.7 080 உதிரநீர் இறைச்சிக் குப்பை
எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனுந் தேடிக்
கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.8 081 பொய்த்தன்மைத் தாய மாயப்
போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வு
வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
முடிகளால் வணங்கு வார்க்கு
அத்தன்மைத் தாகும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.7.8.9 082 தஞ்சொலார் அருள் பயக்குந்
தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்
அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்
சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்
நாதனை நணுகு வாரே.7.8.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.9 திருஅரிசிற்கரைப்புத்தூர்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
083 மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர்
எரித்தீர் வருமுப் புரங்கள்
சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர்
சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்
கலவம் மயிற்பீலியுங் காரகிலும்
அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.7.9.1 084 அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத்
தீரழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்
பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை
வாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி
லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.7.9.2 085 தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்
சந்திரன் சவிதாவிய மானனானீர்
சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்
தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்
முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்
முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி
அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.7.9.3 086 கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம்
வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில்
உமக்கார் எதிரெம் பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக்
காமனை வேவக் கடைக்கண்ணினாற்
பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.7.9.4 087 வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்
வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே
உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்
இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.7.9.5 088 *அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி
சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி
மேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு
மென்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி
லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
*திரு அரிசிற்கரைப்புத்தூரென்னு மித்தலத்தில் ஆதிசைவப்
பிராமணகுலத்தில் திருவவதாரஞ்செய்து புகழ்த்துணை
நாயனாரெனப் பெயரும் பெற்று மிகுந்தஅன்புடன்
பரமசிவத்துக்குத் திருமஞ்சனமுதலிய உபசாரங்கள்
ஆகமமுறைவழுவாமல் செய்துகொண்டு வருநாளில்
பஞ்சம்நேரிட்டுச் சிலநாளுணவின்றித் திருமேனியிளைத்து
வலிவின்றியுமொருநாள் திருமஞ்சனஞ்செய்கையில்
அந்தக்குடம் நழுவிச் சிவலிங்கப்பெருமான் திருமுடிக்கண்விழலும்
நாயனார் அஞ்சி நடுங்குதல் திருவுளத்திற்கொண்டு
பரமசிவங் கிருபைகூர்ந்து பஞ்சம் நீங்குகிறவரைக்கும்
ஒருபடிக் காசு அருள்செய்த கிருபையின் பெருமை இந்த
ஆறாவது தேவாரத்தில் விளங்கக்கூறியது.7.9.6
089 பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப்
பகலோன்முத லாப்பல தேவரையுந்
தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை
என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி
விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி
அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.7.9.7 090 பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்
குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
பெருங்கா டரங்காகநின் றாடலென்னே
கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங்
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.7.9.8 091 மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்
புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள் அரவோ டென்பணி கலனா
முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.7.9.9 092 கடிக்கும் அரவால் மலையால் அமரர்
கடலைக் கடையவெழு காளகூடம்
ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை
உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்
இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி
இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை
அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.7.9.10 093 காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை
யோடகி லுந்திட் டிருகரையும்
போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழ
காலுரைப் பார்களுங் கேட்பவருஞ்
சீரூர் தருதேவர் கணங்க ளொடும்
இணங்கிச் சிவலோகம தெய்துவரே.7.9.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசுவைத்தவீசுவரர்,
தேவியார் - அழகம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.10 திருக்கச்சிஅனேகதங்காவதம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
094 தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி இடங்குல
வான திடங்குறை யாமறையாம்
மானை இடத்ததோர் கையனி டம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.1 095 கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணன்நின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.2 096 கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி
லாலுமி டம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு
வாகுமி டந்திரு மார்பகலத்
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.3 097 கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
பாய வியாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.4 098 பைத்த படத்தலை ஆடர வம்பயில்
கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.5 099 தண்ட முடைத்தரு மன்தமர் என்றம
ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.6 100 கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு
தேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற்
பேடைதன் சேவலோ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு
மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.7 101 புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்
தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.8 102 சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
வேனகை யாள்தவி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
நட்டம்நின் றாடிய சங்கரனெம்
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்
சேரொளி யன்னதோர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.9 103 வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்குமிடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.7.10.10
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காவதேசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.11 திருப்பூவணம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
104 திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.7.11.1 105 எண்ணி இருந்து கிடந்து நடந்தும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ.7.11.2 106 தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு
நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர்
புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும்
புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ.7.11.3 107 நிலனுடை மான்மறி கையது தெய்வக்
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப்
புனலுடை யார்உறை பூவணம் ஈதோ.7.11.4 108 நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்
கடைகடை தோறிடு மின்பலி என்பார்
துடியிடை நன்மட வாளொடு மார்பில்
பொடியணி வார்உறை பூவணம் ஈதோ.7.11.5 109 மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ.7.11.6 110 மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ.7.11.7 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7.11.8-9 111 சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாஉறை வான்றனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.7.11.10
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.12 திருநாட்டுத்தொகை
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
112 வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே.7.12.1 113 அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே.7.12.2 114 மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர்
கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.7.12.3 115 தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி
பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.7.12.4 116 குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்
மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே.7.12.5 117 தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே.7.12.6 118 ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய
கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே.7.12.7 119 நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங்
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே.7.12.8 120 தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே.7.12.9 121 மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே.7.12.10 122 பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை
ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல்
பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே.7.12.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.13 திருத்துறையூர்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
123 மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.1 124 மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.2 125 கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.3 126 அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.4 127 பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.5 128 மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.6 129 மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.7 130 கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.8 131 விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர்
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.9 132 மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்
பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த்
தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.7.13.10 133 செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன்
கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற்
பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.7.13.11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துறையூரப்பர், தேவியார் - பூங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.14 திருப்பாச்சிலாச்சிராமம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
134 வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.1 135 அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே அமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
இறையிறை திருவருள் காட்டாய்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.2 136 உற்றபோ தல்லால் உறுதியை உணரேன்
உள்ளமே அமையுமென் றிருந்தேன்
செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற
செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தா மியாதுசொன் னாலும்
பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.3 137 நாச்சில பேசி நமர்பிறர் என்று
நன்றுதீ தென்கிலர் மற்றோர்
பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப்
புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம்
பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.4 138 வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை
வாட்டிய வகையின ரேனும்
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை
போகுநாள் வீழுநா ளாகிப்
பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தா மியாதுசொன் னாலும்
பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.5 139 செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்
தீவினை செற்றிடு மென்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
ஆவதும் அறிவரெம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.6 140 கையது கபாலங் காடுறை வாழ்க்கை
கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்
வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
பையர வல்குற் பாவைய ராடும்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.7 141 நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன்
நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங்
கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.8 142 குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே
குற்றேவல் நாடொறுஞ் செய்வான்
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்
எம்பெரு மானென்றெப் போதும்
அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.9 143 துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந்
தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினாற் கூறி
மனத்தினாற் றொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.10 144 ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க் கடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி
லாச்சிரா மத்தெம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.11 145 ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.7.14.12
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தே