Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation Thirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்)  > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam)  > Canto 1,  Carukkam - 4  (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1,  Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1  (vampaRA varivaNTuc carukkam) Canto 2 Carukkam -6 part 2  (vampaRA varivaNTuc carukkam) Canto 2 Carukkam - 6 part 3  (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் - (பன்னிரண்டாம் திருமுறை)
 முதற் காண்டம் - சருக்கம் 4 ( மும்மையால் உலகாண்ட சருக்கம் )

periya purANam of cEkkizAr - Canto 1
carukkam -4 (mummaiyAl ulakANTa carukkam)


Acknowledgements: Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission to release the TSCII version as part of Project Madurai etext collections.  TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland. Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website  http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

4 மும்மையால் உலகாண்ட சருக்கம்

4.1

மூர்த்தி நாயனார் புராணம்

(973- 1021 )

4.2

முருக நாயனார் புராணம்

(1022-1035)

4.3

உருத்திர பசுபதி நாயனார் புராணம்

(1036-1045 )

4.4

திரு நாளைப் போவர் நாயனார் புராணம்

(1046 -1082 )

4.5

திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்

(1083 - 1210 )

4.6

சண்டேசுர நாயனார் புராணம்

(1211- 1270)

5. திருநின்ற சருக்கம்

5.1

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்

(1271- 1699)

5.2

குலச்சிறை நாயனார் புராணம்

(1700-1710)

5.3

பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம்

(1711 -1721)

5.4

காரைக்கால் அம்மையார் புராணம்

(1722-1787 )

5.5

அப்பூதி அடிகள் நாயனார் புராணம்

(1788-1832)

5.6

திரு நீல நக்க நாயனார் புராணம்

(1833-1870)

5.7

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

(1871 -1903 )




4.1 மூர்த்தி நாயனார் புராணம் (973- 1021)

திருச்சிற்றம்பலம்

973

சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும்
கார் மன்னு சென்னிக் கதிர் மாமணி மாட வைப்பு
நார் மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும்
பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு

4.1.1

974

சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடுந் தடங்கண்
வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய
வாயும் படும் நீள் கரை மண் பொருந்தண் பொருந்தம்
பாயுங் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம்

4.1.2

975

மொய்வைத்த வண்டின் செறிகுழல் முரன்ற சந்தின்
மை வைத்த சோலை மலயந்தர வந்த மந்த
மெய் வைத்த காலுந் தரும் ஞாலம் அளந்த மேன்மைத்
தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செயீரம்

4.1.3

976

சூழும்஢தழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள்
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார்
யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்

4.1.4

977

சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர்
நூல் பாய் இடத்தும் உள நோன்றலை மேதி பாயப்
பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும்
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கேறு சங்கம்

4.1.5

978

மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும்
சந்தார் முலை மேலன தாழ் குழை வாள் முகப்பொற்
செந்தாமரை மேலன நித்திலஞ் சேர்ந்த கோவை

4.1.6

979

மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர்
மெய்ய்ம்மைப் பொருளாந் தமிழ் நூலின் விளங்கு வாய்மை
செம்மைப் பொருளுந் தருவார் திருஆலவாயில்
எம்மைப் பவந் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால்

4.1.7

980

அப் பொற் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச்
செப்பத் தகு சீர்க் குடி செய்தவஞ் செய்ய வந்தார்
எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து ஏறுவார் தாள்
மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார்

4.1.8

981

நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலே
கேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம்

4.1.9

982

அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில்
எந்தைக்கு அணி சந்தனக் காப்பிட என்றும் முட்டா
அந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச்
சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில்

4.1.10

983

கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல்
மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர்
சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான்

4.1.11

984

வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம்
சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான்

4.1.12

985

வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்தி
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு
செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்

4.1.13

986

தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து
வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச்
சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும்
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான்

4.1.14

987

செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள்
முக்கட் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரை
மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண் போர்
எக்கர்க்குடனாக இகழ்தன செய்ய எண்ணி

4.1.15

988

அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம்
முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார்
தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும்
எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார்

4.1.16

989

எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத்
தள்ளுஞ் செயல் இல்லார் சந்தனக் காப்புத் தேடிக்
கொள்ளுந் துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான்
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து

4.1.17

990

புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்
வன்மைக் கொடும் பாதகன் மாய்திட வாய்மை வேத
நன்மைத் திரு நீற்று உயர் நன்னெறி தாங்கு மேன்மைத்
தன்மைப் புவி மன்னரைச் சார்வதென்(று)?" என்று சார்வார்

4.1.18

991

காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்று
ஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி
ஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும் பெறாது சிந்தை
சாய் உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில்

4.1.19

992

நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய

4.1.20

993

கல்லின் புறந் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார்
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு

4.1.21

994

அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய! உன்பால்
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு
முன் பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன

4.1.22

995

இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு
செய் வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்து
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம்

4.1.23

996

அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு
மின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல

4.1.24

997

இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல்
அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன்
வெவ்வாய் நிரயத்து இடை விரைந்து வீந்தான்

4.1.25

998

முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின்
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற்றது மற்று அவன் அன்ன மாலைப்
பொழுதும் புலர்வுற்றது செங்கதிர் மீது மோத

4.1.26

999

அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள்
கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றி
வை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலே
செய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார்

4.1.27

1000

தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்
கூழும் குடியும் முதலாயின கொள்கைத்தேனும்
சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றி
வாழும் தகைத்து அன்றி இந்த வையகம் என்று சொன்னார்

4.1.28

1001

பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான்
தன் நெடும் குடைக் கீழ்த் தம் தம் நெறிகளில் சரிந்து வாழும்
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலை
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்

4.1.29

1002

இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றக்
கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று

4.1.30

1003

செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால்
இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றிக்
கைம்மாவை நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார்

4.1.31

1004

கண் கட்டி விடுங்களி யானை அக் காவல் மூதூர்
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித்
திண் பொன் தட மாமதில் சூழ் திரு ஆல வாயின்
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி

4.1.32

1005

நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்
ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம்
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப்
பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப

4.1.33

1006

வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று
வாழ்வுற்று உலகம் செய்தவத்தினின் வள்ளலாரைச்
சூழ் பொற் சுடர் மாமணி மாநிலம் தோய முன்பு
தாழ்வுற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே

4.1.34

1007

மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது
ஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர்

4.1.35

1008

சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும்
எங்கு எங்கும் இயம்பின பல்லியம் எல்லையில்ல
அங்கு அங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின்
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும்

4.1.36

1009

வெங்கட் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்து
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை
அங்கண் கொடு புக்கரி ஆசனத்து ஏற்றி ஒற்றைத்
திங்கட்குடைக் கீழ் உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார்

4.1.37

1010

மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண்
துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்
உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள்

4.1.38

1011

வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச்
சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம்
முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில்
இந்தப் புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வான் என்றார்

4.1.39

1012

அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும்
எவ்வாறு அருள் செய்தனை மற்று அவை அன்றி யாவர்
செய்வார் பெரியோய் எனச் சேவடி தாழ்ந்து செப்ப

4.1.40

1013

வையம் முறை செய்வென் ஆகில் வயங்கு நீறே
செய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள்
ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும்
மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார்

4.1.41

1014

என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும்
வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும்
நன்றிங்கு அருள் தான் என நற்தவ வேந்தர் சிந்தை
ஒன்றும் அரசாள் உரிமைச் செயலான உய்த்தார்

4.1.42

1015

மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச்
சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம்
தேடுங் கழலார் திருஆல வாய் சென்று தாழ்ந்து
நீடுங்களிற்றின் மிசை நீள் மறுகூடு போந்தார்

4.1.43

1016

மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில்
பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால்
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி

4.1.44

1017

குலவுந் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைகக்
கலகம் செய் அமண்செயல் ஆயின கட்டு நீங்கி
நிலவும் திரு நீற்று நெறித் துறை நீடு வாழ
உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன

4.1.45

1018

நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம்

4.1.46

1019

ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும்
சீலங்கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி
ஞாலந் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழிக்
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து

4.1.47

1020

பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு தொண்டின்
பேதம் புரியா அருள் பேர் அரசாளப் பெற்று
நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே

4.1.48

1021

அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்த
இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம்
முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதிப்
புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம்

4.1.49

திருச்சிற்றம்பலம்


4.2 முருக நாயனார் புராணம் (1022 -1035)

திருச்சிற்றம்பலம்

1022

தாது சூழும் குழல் மலையாள் தளிக்கை சூழும் திருமேனி
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி
சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னி திரு நாட்டுப்
போது சூழும் தடஞ்சோலைப் பொய்கை சூழும் பூம் புகலூர்

4.2.1

1023

நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம் போல் அரவு அணிந்த
சேம நிலவு திரு நீற்றின் சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல்
காமர் மதுவுண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்குமால்

4.2.2

1024

நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கலைய
வண்ண மதுரத் தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல
தண்ணென் சோலை எம் மருங்கும் சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந் தேன் பொழியுமால்

4.2.3

1025

வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல
அண்டர் பெருமான் திருப் பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும்
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால்

4.2.4

1026

ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் புகலூர் அது தன்னில்
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை முதல்வர்
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடிக் கீழ்
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார்

4.2.5

1027

அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங் கமல வயல் கயல்கள்
மடை மேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழுந் தன்மையராய்
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றைச்
சடை மேல் அணியத் திருப் பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார்

4.2.6

1028

புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்
மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த
அலகில் மலர்கள் வெவ் வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார்

4.2.7

1029

கோட்டு மலரும் நில மலரும் நீர் மலரும் கொழுங் கொடியின்
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலருந் திருவாயில்
காட்டு முறுவல் நிலவு அலரக் கனக வரையிற் பன்னக நாண்
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையலாகும் மலர் தெரிந்து

4.2.8

1030

கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும்
இண்டைச் சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும்
தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும்
நுண்டாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூன்மார்பர்

4.2.9

1031

ஆங்கப் பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்துத்
தாங்கிக் கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிகப் பற்றான
ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் ஓவா நாவின் உணர்வினார்

4.2.10

1032

தள்ளும் முறைமை ஒழிந்திட இத் தகுதி ஒழுகும் மறையவர் தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம் பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலைப்பால் உடன் உண்ட
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார்

4.2.11

1033

அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல்
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார்

4.2.12

1034

அங்கண் அமருந் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கருளிச்
செங்கண் அடலேறு உடையவர் தாஞ்சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்

4.2.13

1035

அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்
விரவு புகலூர் முருகனார் மெய்மைத் தொண்டின் திறம் போற்றிக்
கரவில் அவர் பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன்

4.2.14


திருச்சிற்றம்பலம்


4.3 உருத்திர பசுபதி நாயனார் புராணம் (1036 -1045)

திருச்சிற்றம்பலம்

1036

நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம்
மலர்த் தடம் பணை வயல் புகு பொன்னி நன்னாட்டுக்
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமித்
தலத்தின் மேம் படு நலத்தது பெருந் திருத் தலையூர்

4.3.1

1037

வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ
தேன் அளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலை
ஆன் அளிப்பன அம் சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர்
தான் அளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்

4.3.2

1038

அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி
பங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார்

4.3.3

1039

ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார்

4.3.4

1040

கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு
பிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும்
நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய
விரை நெகிழ்ந்த செங் கமலம் என் பொய்கையுள் மேவி

4.3.5

1041

தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய
உள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத்
தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்

4.3.6

1042

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திருமலர்ப் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள்
ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்

4.3.7

1043

காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்
தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்

4.3.8

1044

நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற

4.3.9

1045

அயில் கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால்
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி
எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம்
செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்

4.3.10


திருச்சிற்றம்பலம்


4.4 திரு நாளைப் போவர் நாயனார் புராணம் (1046- 1082)

திருச்சிற்றம்பலம்

1046

பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும்
திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்
அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர்

4.4.1

1047

நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர்
ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச்
சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம்

4.4.2

1048

நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடுஞ் செழுந் தருவின் குலம் பெருகிக்
கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்
புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை

4.4.3

1049

பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண் பலவின்
நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும்

4.4.4

1050

வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும்
வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினாம்
புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய்
அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர்

4.4.5

1051

மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்
பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி

4.4.6

1052

கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி

4.4.7

1053

வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும்
புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும்

4.4.8

1054

செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக்
குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை
வெறி மலர்த் தண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும்

4.4.9

1055

புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும்

4.4.10

1056

இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்
அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்

4.4.11

1057

பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்

4.4.12

1058

ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும்

4.4.13

1059

போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்

4.4.14

1060

இவ் வகையில் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று
மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்

4.4.15

1061

திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து
விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார்

4.4.16

1062

சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன் கூர்க் கண்ணுதலார் திரு முன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார்

4.4.17

1063

சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று
பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து
சுவலோடுவார் அலையப் போவார் பின் பொரு சூழல்
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்

4.4.18

1064

வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால்
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார்

4.4.19

1065

இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தமொடுந் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப

4.4.20

1066

அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த
ஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார்
நன்றுமெழுங் காதல் மிக நாளைப் போவேன் என்பார்

4.4.21

1067

. நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்

4.4.22

1068

செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்

4.4.23

1069

நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார்
குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுகள்

4.4.24

1070

இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்
ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே
செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார்

4.4.25

1071

இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடுந் துயில்வார்

4.4.26

1072

இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார்

4.4.27

1073

இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்

4.4.28

1074

தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித்
தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார்

4.4.29

1075

ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப
நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்

4.4.30

1076

மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார்

4.4.31

1077

கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார்
எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்
பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்

4.4.32

1078

செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார்

4.4.33

1079

திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களிப் பயின்றார்
அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர்

4.4.34

1080

தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி
ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால்

4.4.35

1081

அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார்
வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து
சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார்

4.4.36

1082

மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசுடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவிளைப்
பாசம் உற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம்

4.4.37


திருச்சிற்றம்பலம்


4.5 திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் (1083 - 1210 )

திருச்சிற்றம்பலம்

1083

ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லையில் கருணைத்
தாய் ஆனாள் தனி ஆயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்ற நின்று அரும் தவம் புரியத்
தூய மாதவம் செய்தது தொண்டை நல் நாடு

4.5.1

1084.

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமை சால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு

4.5.2

1085.

நற்றிறம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவை வந்து
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு கால்
சொற்ற மெய்ம்மையும் தூக்கி அச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டை நாடு

4.5.3

1086.

ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும்
சேண் உலாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு
வாண் நிலாவு பூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது பெரும் தொண்டை நாடு

4.5.4

1087.

கறை விளங்கிய கண்டர் பாற் காதல் செய் முறைமை
நிறை புரிந்திட நேர் இழை அறம் புரிந்த அதனால்
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டை நாட்டு
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்தால்

4.5.5

1088.

தாவில் செம்மணி அருவியாறு இழிவன சாரல்
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம்
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்

4.5.6

1089.

குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம்
பறவை தாமரை இருந்து இற வருந்துவ பழனம்
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழிச் சூழல்

4.5.7

1090.

கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால்
தண்டு உணர்க் கொன்றை பொன் சொரி தள வயற்பால்
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயற்பால்
கண்டல் முன் துறைக் கரி சொரி வனகலங் கடற்பால்

4.5.8

1091.

தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலைச் சீறூர்
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர்
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள்

4.5.9

1092.

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல்

4.5.10

1093.

மல்கும் அப்பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும்
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறைத் தோகை
சொல்லும் அப்புனங் காப்பவும் சுரி குழல் தோகை

4.5.11

1094.

அங்கண் வான்மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல் மூழ்கிப் போகாச்
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும்
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும்

4.5.12

1095.

பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறில் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும்
ஆறுசூழ் சடை அண்ணலார் திரு விடைச் சுரமும்
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி

4.5.13

1096

அம்பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர்
வம்புலா மலர்ச் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக் கழுக் குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவங்குறை உளதோ?

4.5.14

1097.

கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில்லிடங்கள்
நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து
கால வேனிலில் கடும் பகல் பொழுதினைப் பற்றிப்
பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு

4.5.15

1098.

சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு அலைக்கும்
பல் பெரும் புனல் கானியாறிடை இடை பரந்து
கொல்லை மெல் இணர்க் குருந்தின் மேற் படர்ந்த பூம்பந்தர்
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை

4.5.16

1099.

பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது அளவு எனக் களவலர் தூற்றும்
அளவு கண்டவர் குழல் நிறம் கனியும் அக் களவைத்
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று

4.5.17

1100.

மங்கையர்க்கு வாள் விழியிணை தோற்ற மான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர்க் கொடி எங்கும்
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந் தமிழ் உரைக்கும்
செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திரு முல்லை வாயில்

4.5.18

1101.

நீறு சேர் திரு மேனியர் நிலாத் திகழ் முடிமேல்
மாறில் கங்கை தான் அவர்க்கு மஞ்சனந்தர அணைந்தே
ஊறு நீர் தரும் ஒளி மலர்க் கலிகை மா நகரை
வேறு தன் பெரு வைப்பு என விளங்கு மாமுல்லை

4.5.19

1102.

வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்
வீசு தெண்டிரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி
பாசடைத் தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும்
பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ

4.5.20

1103.

துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி பால்
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்கயத் தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி

4.5.21

1104.

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி

4.5.22

1105.

அனையவாகிய நதி பரந்து அகன் பணை மருங்கில்
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரைப் பெருங்குளங்கள்
புனை இருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம் போய்
வினைஞர் ஆர்ப்பொலி எடுப்ப நீர் வழங்குவ வியன்கால்

4.5.23

1106.

மாறில் வண் பகட்டேர் பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன
வேறு பல் வினை உடைப் பெரும் கம்பலை மிகுமால்

4.5.24

1107.

வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை
பெருங்குலைப்பட விலங்குவ பிறங்கு நீர்ப் பழனம்
நெருங்கு சேற்குலம் உயர்த்துவ நீள் கரைப் படுத்துச்
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி

4.5.25

1108.

தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரைத் தவிசின்
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும்
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்படை ஊர் கோள்
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு

4.5.26

1109.

ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழைக் கரும்பு
பூங்கரும்பு அயல் மிடைவன பூகம் அப்பூகப்
பாங்கு நீள் குலைத் தெங்கு பைங்கதலி வண் பலவு
தூங்கு தீங்கனிச் சூத நீள் வேலிய சோலை

4.5.27

1110.

நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங் குடி மனை அறம் பிறங்கும்
மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள்

4.5.28

1111

தொல்லை நான்மறை முதல் பெரும் கலையொலி துவன்றி
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும்
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள்

4.5.29

1112

தீது நீங்கிடத் தீக் கலியாம் அவுணற்கு
நதார் தாம் அருள் புரிந்தது நல்வினைப் பயன் செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்

4.5.30

1113.

அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின்
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற் பேறாம்
பொருவில் கோயிலும் சூழ்ந்தப் பூம்பணை மருதம்

4.5.31

1114.

விரும்பு மேன்மையென் பகர்வது விரி திரை நதிகள்
அருங்கரைப் பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து
பருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாசூர்
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம்

4.5.32

1115

. பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர்
தாமருங் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து
மா மருங்கு தண்ணீழலின் மருத யாழ் முரலும்
காமர் தண் பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்

4.5.33

1116

. தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள் விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அளத் தளவர்கள் அளப்பன உப்பு
சாயன் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்

4.5.34

1117

.கொடு வினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படு மணற் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர் தம்
வடு வகிர்க் கண்மங்கையர் குளிப்பன மணற்கேணி

4.5.35

1118

.கழிப் புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டு அணிய
வழிக் கரைப் பொதி பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை மலர்க் கட்சுரும்பு உண்ணக்
கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடற்கைதை

4.5.36

1119

. காயல் வண் கரைப் புரை நெறி அடைப்பன கனி முட்
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம்
தாய முன்றுறைச் சூழல் சூழ் ஞாழலின் தாது

4.5.37

1120

. வாம் பெருந் திரைவளாக முன் குடி பயில் வரைப்பில்
தாம் பரப்பிய கயல்களின் விழிக் கயல் தவிரக்
காம்பி நேர் வருந் தோளியர் கழிக் கயல் விலை செய்
தேம் பொதிந்த சின் மழலை மென் மொழிய செவ்வழி யாழ்

4.5.38

1121

.மருட்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும்
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த
திருப் பரப்பையும் உடைய அத் திரைக் கடல் வரைப்பு

4.5.39

1122

.மெய் தரும் புகழ்த் திரு மயிலா புரி விரை சூழ்
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலாப்
பை தரும் பணி அணிந்தவர் பதி எனைப் பலவால்
நெய்தல் எய்த முன் செய்த அம் நிறை தவம் சிறிதோ

4.5.40

1123

. கோடு கொண்டு எழும் திரைக் கடல் பவள மென் கொழுந்து
மாடு மொய் வரைச் சந்தனச் சினை மிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய

4.5.41

1124

.மலை விழிப்பன என வயல் சேல் வரைப் பாறைத்
தலையுகைப்பவும் தளைச் செறு விடை நெடுங் கருமான்
குதிப்பன கரும் பகட்டேர் நிகர்ப்பவுமாய்
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம்

4.5.42

1125

.புணர்ந்த ஆனிரை புற விடைக் குறு முயல் பொருப்பின்
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து
மணங்கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்

4.5.43

1126

.கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து
சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும்
உவரி நெய்தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்

4.5.44

1127

.அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும்
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிர் எதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு

4.5.40

1128

.மீளும் ஓதமுன் கொழித்த வெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென்
தோளும் உழத்தியர் மகளிர் மாறாடி முன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள்

4.5.46

1129

.ஆய நானிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கித்
தீய என்பன கனவிலும் நினைவு இலாச் சிந்தைத்
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ?

4.5.47

1130

. இவ் வளம் தரு பெரும் திருநாட்டிடை என்றும்
மெய் வளந் தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வுகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும்
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம்

4.5.48

1131

.ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனை யால் ஒரு காலத்து வழிபட்டு
ஊனமில் அறம் அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்ட அப் பெருமையை அறிந்தவா விளம்பில்

4.5.49

1132

.வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்று இருந்து அருளித்
துள்ளு வார் புனல் வேணியர் அருள் செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெரிய
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள்

4.5.50

1133

. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவள் ஆயின பெருந் தவக் கொழுந்து

4.5.51

1134

. நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என் கொல் நின் பால் என வினவ
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப்
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகமார்த்த பூண் முலையினாள் போற்ற

4.5.52

1135

. தேவ தேவனும் அது திருவுள்ளஞ் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள்

4.5.53

1136

. ஏதமில் பலயோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரத்து அதனுள்
பேதமும் புரந்து அருளும் அக் கருணைப் பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான்

4.5.54

1137

. துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் சூழ்ந்து உடன் செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலைமிசை வைத்தே
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை மடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து

4.5.55

1138

. அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவில் இன்பத்தின் அருட் கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரி சடையார்க்குத் திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திரு விளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழியப்
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன் மலை வல்லி

4.5.56

1139

. நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்செழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம்மலர்க் கை குவித்து அருளித்
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரியத் தரிப்பரே அவள் தனிப் பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை மகள் காண

4.5.57

1140

. கண்ட போதில் அப்பெரும் தவப் பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை
வண்டு உலாங் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பளவு இன்றிக் குறித்த பூசனை கொள்கை மேற் கொண்டு
தொண்டையங்கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்

4.5.58

1141

. உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திருச் சேடியரான
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணையக் குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள்

4.5.59

1142

. கொய்த பன்மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய்ப் பூச
நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய்ப் பூச
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி

4.5.60

1143

. கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரம் தரும் பொருளாம் மலை வல்லி மாறிலா வகை மலர்ந்த பேர் அன்பால்
சிரம் பணிந்து எழு பூசை நாள் தோறும் திரு உளம் கொளப் பெருகியது அன்றே

4.5.61

1144

. நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்கவோர் திரு விளையாட்டில் கனங்குழைக்கு அருள் புரிந்திட வேண்டி
ஓத மார் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல் வரக் கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார்

4.5.62

1145

. அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல்
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெருக் கொண்டே
உண்ணிலாவிய பதைப்புறு காதலுடன் திருக் கையால் தடுத்தும் நில்லாமை
தண்ணிலா மலர் வேணியினாரைத் தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள்

4.5.63

1146

. மலைக் குலக் கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை
முலைக்குவட்டொடு வளைக் கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத் தனித் திருநுதல் திரு முலைக்கும் செந் தளிர்க் கரங்களுக்கும் மெத்தெனவே
கொலைக் களிற்றுரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார்

4.5.64

1147

. கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த
வம்புலா மலர் நிறைய விண் பொழியக் கம்பையாறு முன் வணங்கியது அன்றே

4.5.65

1148

. பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு கங்கை தோய் முடிச் சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழக் கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ் வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார்

4.5.66

1149

. கோதிலா அமுது அனையவள் முலைக் குழைந்த தம் மணவாள நல் கோலம்
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள
வேத காரணராய ஏகம்பர் விரை மலர்ச் செய்ய தாமரை கழல் கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி

4.5.67

1150

. அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிடக் கொள்க என்று அருள
வண்டு வார் குழல் மலை மகள் கமல வதனம் நோக்கி அம்மலர்க் கண் நெற்றியின் மேல்
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவதில்லை நம் பால் என மொழிய

4.5.68

1151

. மாறிலாத இப் பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறிலாத இப்பதியினுள் எல்லா அறமும் யான் செய அருள் செய வேண்டும்
வேறு செய் வினை திருவடிப் பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன் கொடுத்து அருளப் பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள்

4.5.69

1152

. விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்று இருந்தே
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீவினையும்
தடைபடாது மெய்ந் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள் செய்தார்

4.5.70

1153

. எண்ண அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்
புண்ணிய திருக் காம கோட்டத்துப் பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும்

4.5.71

1154

. அலகில் நீள் தவத்து அறப் பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம்
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறந்த பேர் உலகம்
மலர் பெரும் திருக் காம கோட்டத்து வைத்த நல்லறம் மன்னவே மன்னும்

4.5.72

1155

. தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திருக் காமக் கோட்டத்தின்
பாங்கு மூன்றுலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனற்கேணி
வாங்கு தெண் திரை வேல்கை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளதால்

4.5.73

1156

. அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை தன் திருக் காமக் கோட்டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது வழிக் கொள்ளாத தன் மருங்கு போலினால்
சந்த மாதிர மயங்கி எம் மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கும்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளதால்

4.5.74

1157

. கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதிக் கரை மருங்கு
சென்னியிற் பிறை அணிந்தவர் விரும்பும் திருப் பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து
மன்னு வெங் கதிர் மீது எழும் போதும் மறித்து மேற் கடல் தலை விழும் போதும்
தன்னிழல் பிரியாத வண் காஞ்சித் தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்

4.5.75

1158

. மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறுறிலா நியமம் தலை நின்று
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவர் அவர்க்கு அருளி
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்ணிறந்த அத் திரு நகர் எல்லை

4.5.76

1159

. மன்னு கின்ற அத் திருநகர் வரைப் பின் மண்ணில் மிக்கதோர் நன்மை யினாலே
துன்னும் யானையைத் தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு இல் ஊக்கத்தால்
தன்னிலத்து நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி
எந் நிலைத்தினும் காண்பரும் இறவாத் தானம் என்று இவை இயல்பினில் உடைத்தால்

4.5.77

1160

. ஈண்டு தீவினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம் மூன்று உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமு முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்

4.5.78

1161

. தாளது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனியச் செழும் தாமரைத் தடமும்
நீள வார் புனல் குடதிசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்து செங்குவளை பைங் கமலம் நண்பகல் பகல் தரும் பாடலம் அன்றிக்
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயாப் புளி உளதால்

4.5.79

1162

. சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாந்தடம் ஒன்று
மாயை இன்றி வந்துள்ளடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால்

4.5.80

1163

. அஞ்சு வான் கரத்தாறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர்ப் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்றுத் தரையின் நாம மூன்றிலை படை உடைப் பிள்ளை
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும்

4.5.81

1164

. சத்தி தற் பரசித்தி யோகிகளும் சாதகத் தனி தலைவரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள் மெய்த் தவர்கள் நீடுவாழ் திருப் பாடியும் அனேகம்
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தி
வித்தகக் கரி மேற் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளதால்

4.5.82

1165

. வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரைத் தாம் காண்பிடம் உளது
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும்
அந்தமில் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளதாகும்
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார்

4.5.83

1166

.தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய்ந் நெறிக் கணின்றார்கள் தாம் விரும்பித்
தீண்டில் யாவையும் செம் பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிதால்
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அந் நகரம்

4.5.84

1167

.என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில் இலங்கு வேற்கரிகால் பெருவளத்தோன்
வன் திறற்புலி இமயமால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை
சென்று வேடன் முன் கண்டு உரை செய்யது இருந்து காத நான்கு உட்பட வகுத்துக்
குன்று போலும் மா மதில் புடை போக்கிக் குடி இருத்தின கொள்கையின் விளங்கும்

4.5.85

1168

. தண் காஞ்சி மென் சினைப் பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலிப் பணை மருதம் புடை உடைத்தாய்ப் பாரில் நீடும்
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ
வண் காஞ்சி அல்குல் மலை வல்லி காக்க வளர் கருணைக் கடல் உலகம் சூழ்ந்தால் மானும்

4.5.86

1169

. கொந்தலர் பூங் குழல் இமயக் கொம்பு கம்பர் கொள்ளும் பூசனைக் குறித்த தானம் காக்க
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்புப் போலும்
அந்தமில் சீர்க் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடைகளங்கம் அறுப்பர் என்றுஅறிந்து சூழ
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர்க் கிடங்கு மாதோ

4.5.87

1170

.ஆங்கு வளர் எயிலினுடன் விளங்கும் வாயில் அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல
ஓங்கு நிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய உமைபாகர் அருள் செய்த ஒழுக்கம் அல்லால்
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகிச்செந் நெறிக்கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம்
தாங்குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடுவான் அளப்பன வாம் தகைய வாகும்

4.5.88

1171

.மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கிக்
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்கக் கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மா லோக நிலை மேவிற்று அன்றே

4.5.89

1172.

பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல்
தோகையர் தம் குழாம் அலையத் தூக்கு முத்தின் சுடர்க் கோவைக் குளிர் நீர்மை துதைந்த வீதி
மாகமிடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பில் வண்ண
மேகமிடை கிழித்து ஒழுகும் தெய்வக் கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும்

4.5.90

1173.

. கிளர் ஒளிச் செங்கனக மயந்தானாய் மாடு கீழ் நிலையோர் நீலச் சோபனம் பூணக்
கொள அமைத்து மீது ஒருபால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே
அளவில் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு தோறும்

4.5.91

1174.

மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசைப் பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது
பொன் புரையும் செக்கர் நிறப் பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகிப் பொழிந்த நீரால்
வன் புலியின் உரியாடைத் திரு ஏகம்பர் வளர்சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு
அன்பு உருகி மெய் பொழியக் கண்ணீர் வாரும் அடியவரும் அனையவுள அலகிலாத

4.5.92

1175.

முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழுப் பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும்
நிகரில் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவஞ்செய் இமயப் பாவை
நகில் உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்குப் படைக்க நல்கும்
அகிலயோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும்

4.5.93

1176.

பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணிப் பந்தும் போற்றி ஆடும்
வில் புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்
அற்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணிமணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி
நற்கனக மழை அன்றிக் காஞ்சி எல்லை நவமணி மாரியும் பொழியும் நாளும் நாளும்

4.5.94

1177.

பூ மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாடத் தரமியங்கள் பொலிய நின்று
மா மகரக் குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறுமுன் நறு நீர் வண்டல் ஆடத்
தூமணிப் பொன் புனை நாளத்துருத்தி வீசும் சுடர்விடு செங்குங்கும நீர்த் துவலை தோய்ந்த
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கருமுகில்கள் செம்முகில் களாகிக் காட்டும்

4.5.95

1178.

இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச்
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர் களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர் தங்களையும் விசும்பிடை நின்று இழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வேறு அறிவரிதாம் தகைமையன அனேகம் அங்கண்

4.5.96

1179.

அரவ நெடுந் தேர் வீதி அருகு மாடத்து அணிமணிக் கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட
விரவு மரகதச் சோதி வேதித் திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப் படி மீது ஏறும்
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கித் தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பரங்கர்

4.5.97

1180.

வேம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடுந் தேர்க் கால் இசைப்பும் விழவுஅறாத
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்குந் தெய்வ உயர் இரவி மாக் கலிப்பும் அயன் ஊர்தித் தேர்
பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப் பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும்

4.5.98

1181.

அருமறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாடப்
பெரு மறுகு தொறும் வேள்விச் சாலை எங்கும் பெறும் அவிப் பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைக்க விடு மந்திரம் எம் மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லாத் தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்

4.5.99

1182.

அரசர் குலப் பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்
புரசை மதக் கரிகளொடு புரவி ஏறும் பொற்புடைய வீதிகளும் பொலிய எங்கும்
விரை செய் நறுந்தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்
நிரை செறியும் விமான ஊர்திகளின் மேலும் நிலமிசையும் பல முறையும் நிரந்து நீங்கார்

4.5.100

1183.

வெயில் உமிழும் பன்மணிப் பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க
வயின் நிலவு மணிக் கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருட்குலங்கள் மலிதலாலே
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமுமேவிய தன்மை கண்டு போற்றப்
பயிலும் உருப்பல கொண்டு நிதிக் கோன் தங்கப் பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும்

4.5.101

1184.

விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின் வேளாண் விழுக் குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம் பொன் மலைவல்லிக் களித் தவளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருள பெற்றுத் தொன்னிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவுத் தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும்

4.5.102

1185.

ஓங்கிய நால் குலத்து ஒவ்வாப் புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாம் குழுமிப் பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினைத் தொழிலின் முறைமை வழாமை நீடு
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமைப் பால அன்றே

4.5.103

1186.

ஆதி மூதெயில் அந் நகர் மன்னிய
சோதி நீள் மணித் தூபமும் தீபமும்
கோதில் பல்லியமும் கொடியும் பயில்
வீதி நாளும் ஒழியா விழா வணி

4.5.104

1187.

வாயில் எங்கணும் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணுஞ் சூழ் முகில் நாள்மதி
தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குலக் குழாம்

4.5.105

1188.

வேத வேதியர் வேள்வியே தீயன
மாதர் ஓதி மலரே பிணியன
காதல் வீதி விலக்கே கவலைய
சூத மாதவியே புறம் சூழ்வன

4.5.106

1189.

சாயலார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாடக் கொடியே அசைவன
சேய ஓடைக் களிறே திகைப்பன
பாய சோலைத் தருவே பயத்தன

4.5.107

1190.

அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன
தண்ணறுஞ் செழுந்தாதே துகள்வன
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன
எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின

4.5.108

1191.

வென்றி வானவர் தாம் விளையாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது

4.5.109

1192.

புரம் கடந்தவர் காஞ்சி புரம் புகழ்
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும்
வரம்பில் போக வனப்பின் வளமெல்லாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்தலால்

4.5.110

1193.

அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்துள்ளார்
செவ்விய அன்புடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார்
மை விரவு கண்டரடி வழித் தொண்டர் உளர் ஆனார்

4.5.111

1194.

மண்ணின் மிசை வந்த அதற்பின் மனம் முதல் ஆயின மூன்றும்
அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார்
புண்ணிய மெய்த் தொண்டர் திருக் குறிப்பு அறிந்து போற்று நிலைத்
திண்மையினால் திருக் குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பினார்

4.5.112

1195.

தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சி
ஊரொலிக்கும் பெரு வண்ணார் எனவொண்ணா உண்மையினார்
நீரொலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்
பேரொலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பி னொடும்

4.5.113

1196.

தேசுடைய மலர்க் கமலச் சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை
ஆசுடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி
மாசு தனை விடக் கழித்து வரும் நாளில் அங்கு ஒரு நாள்

4.5.114

1197

பொன் இமயப் பொருப் பரையன் பயந்து அருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்று அளக்க எழுந்து அருளும் நம் பெருமான்
தன்னுடைய அடியவர் தம் தனித் தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டு அன்பர்க்கு அருள் புரிவான் வந்து அணைவார்

4.5.115

1198.

சீதமலி காலத்துத் திருக் குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன்
மாதவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள்
கோதடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொளக் குறுகி

4.5.116

1199.

. திருமேனி வெண்ணீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக்
கரு மேகம் என அழுக்குக் கந்தையுடன் எழுந்து அருளி
வருமேனி அருந் தவரைக் கண்டு மனம் மகிழ்ந்து எதிர் கொண்டு
உருமேவும் மயிர்ப் புளகம் உளவாகப் பணிந்து எழுந்தார்

4.5.117

1200.

எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று
கை தொழுது கந்தையினைத் தந்து அருளும் கழுவ என
மை திகழ் கண்டம் கரந்த மாதவத்தோர் அருள் செய்வார்

4.5.118

1201.

இக் கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான்
மெய்க் கொண்ட குளிர்க் குடைந்து விட மாட்டேன் மேல் கடல் பால்
அக் குன்றம் வெங்கதிரோன் அணைவதன் முன் தருவீரேல்
கைக் கொண்டு போய் ஒலித்துக் கொடுவாரும் கடிது என்றார்

4.5.119

1202.

தந்து அருளும் இக் கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும்
கந்தை இது ஒலித்து உணக்கிக் கடிது இன்றே தாரீரேல்
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார்

4.5.120

1203.

குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடு போந்து
வெறித் தடநீர்த் துறையின் கண் மா செறிந்து மிகப் புழுக்கிப்
பிறித்து ஒலிக்கப் புகும் அளவில் பெரும் பகல் போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திரு அருளால் மழை எழுந்து பொழிந்திமால்

4.5.121

1204.

திசை மயங்க வெளியடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து
மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய
அசையுடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அருந்தவர் பால்
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார்

4.5.122

1205

ஓவாதே பொழியு மழை ஒரு கால் விட்டு ஒழியும் எனக்
காவாலி திருத் தொண்டர் தனி நின்றார் விடக் காணார்
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால்
ஆ! ஆ! என் குற்றேவல் அழிந்த வா என விழுந்தார்

4.5.123

1206

விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய எல்லை
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன்
செழும் தவர் தம் திருமேனி குளிர் கணும் தீங்கு இழைத்த
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார்

4.5.124

1207.

கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை

4.5.125

1208.

வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார்

4.5.126

1209.

முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார்

4.5.127

1210.

சீர் நிலவு திருக் குறிப்புத் தொண்டர் திருத்தொழில் போற்றிப்
பார் குலவத் தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன்
பேர் அருளின் மெய்த் தொண்டர் பித்தன் எனப் பிதற்றுதலால்
ஆருலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார்

4.5.128


திருச்சிற்றம்பலம்


4.6 சண்டேசுர நாயனார் புராணம் (1211 - 1270)

திருச்சிற்றம்பலம்

1211

பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு
வாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞ்லூர்

4.6.1

1212.

செம்மை வெண்ணீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார்
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது

4.6.2

1213.

கோதில் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழைக் குடுமி
ஓதுகிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும்
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போலப் புணர் மாடங்கள்
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன

4.6.3

1214.

யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின்
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறைப்புள்
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன்
நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டமுள

4.6.4

1215

தீம் பால் ஒழுகப் பொழுது தொறும் ஓம தேனுச் செல்வனவும்
தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அனைவனவும்
பூம் பாசடைநீர்த் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவுமுள

4.6.5

1216

வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணித் திரைகள் வயல் வரம்பின்
தாழ்வில் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாகத் தடம் சாலை
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்து ஏறும்
வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள்

4.6.6

1217

மடையில் கழுநீர் செழுநீர் சூழ்வயலில் சாலிக் கதிர்க்கற்றைப்
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம்பாளை
அடையில் பயிலுந் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி
நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினைக் காஞ்சி

4.6.7

1218

சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு எல்லை
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும்
மன்னர் பெருமான் அநபாயன் வருந் தொல் மரபின் முடி சூட்டும்
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அவ்வூர்

4.6.8

1219

பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இண் சுவையும்
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனும் எழுத்து ஐந்தும்
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப் பயனாம் சைவமும் போல்
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ

4.6.9

1220

பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனை வாழ்
தருமம் நிலவு காசிய கோத்திரத்துத் தலைமை சால் மரபில்
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல்
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்ச தத்தன் உளனானான்

4.6.10

1221

மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள் உலகில் துணைப் புதல்வர்
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லைப் பயன் பெறுவாள்
பற்றை எறியும் பற்றுவார் சார்பாய் உள்ள பவித்திரையாம்

4.6.11

1222

. நன்றி புரியும் அவர் தம் பால் நன்மை மறையின் துறை விளங்க
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர்
வென்றிவிளங்க வந்து உதயம் செய்தார் விசார சருமனார்

4.6.12

1223

ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல்
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால்

4.6.13

1224

நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்தப்
புகழும் பெருமை உப நயனப் பொருவில் சடங்கு முடித்து அறிவின்
இகழு நெறிய அல்லாத எல்லாம் இயந்த எனினும் தம்
திகழு மரபின் ஓது விக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார்

4.6.14

1225

குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே எனக் கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந் தகையார்

4.6.15

1226

நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின்
கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின்
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒரு நாள்

4.6.16

1227

ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க
போது மற்று அங்கு ஒரு புனிற்றா போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து

4.6.17

1228

பாவும் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால்
மேவும் பெருமை அரு மறைகள் மூலமாக விளங்கு உலகில்
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள் செய்வார்

4.6.18

1229

தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்தும் தாமுடைய அல்லவோ? நல் ஆனினங்கள்

4.6.19

1230

ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும்
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண்டலைத் தொடையும்
மேய வேணித் திரு முடிமேல் விரும்பி ஆடி அருளுதற்குத்
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள் தாம்

4.6.20

1231

சீலமுடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவருடன்
காலம் முழுதும் உலகனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும்
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்து நீறுதரும்
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ

4.6.21

1232

உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே உழை மான் மறிக்கன்று
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேரமிசைக்
கொள்ளும் சின மால் விடைத் தேவர் குலம் அன்றோ? இச் சுரபி குலம்

4.6.22

1233

என்றின்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்தக்
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று
நின்ற ஆயன் தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார்

4.6.23

1234

யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும்
தானேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பார் ஆகிப் பைங்கூழ்க்கு
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறைச் சிறுவர்

4.6.24

1235

கோலும் கயிறும் கொண்டு குழைக் குடுமி அலையக் குலவு மான்
தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரைக் கோவணம் சுடரப்
பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
சாலும் புல்லின் அவை வேண்டுந் தனையும் மிசையும் தலைச் சென்று

4.6.25

1236

பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி
இதம் உண் துறையுள் நற்றண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி
அதர் நல்லன முன் செல நீழல் அமர் வித்து அமுத மதுரப்பால்
உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம் தொறும் உய்த்தார்

4.6.26

1237

மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்
தண்ணித்தில நீர் மருதத் தண்தலை சூழ் குலையின் சார்பினிலும்
எண்ணிற் பெருகு நிரை மேய்த்துச் சமிதை உடன் மேல் ஏரிகொண்டு
நண்ணில் கங்குல் முன் புகுந்தும் நன்னாள் பலவாம் அந் நாளில்

4.6.27

1238

ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிகப் பல்கி
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனங்கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நண்பகலும்
தூய தீம்பால் மடி பெருகிச் சொரிய முலைகள் சொரிந்தனவால்

4.6.28

1239

பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள்
காணும் பொலிவின் முன்னையினும் அனேக மடங்கு கறப்பனவாய்
பேணுந் தகுதி அன்பால் இப் பிரம சாரி மேய்த்த அதற்பின்
மாணுந் திறத்தவான என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார்

4.6.29

1240

அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி
மனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறைக் கன்று
தனைக் கண்டு அருகு சார்ந்து உருகித் தாயாந் தன்மை நிலைமையவாய்க்
கணைத்துச் சுரந்து முலைக் கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால்

4.6.30

1241

தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு வந்து
செம்மை நெறியே உறுமனத்தில் திரு மஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே
எம்மையுடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்
மெய்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும்

4.6.31

1242

அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணி மணற் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும்
துங்க நீடு கோபுரமும் சுற்றாலயமும் வகுத்து அமைத்தார்

4.6.32

1243

ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர் புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர் சடிலத் திரு முடிமேல்
சாத்தல் ஆகும் திருப் பள்ளித் தாமம் பலவும் தாம் கொய்து
கோத்த இலைப் பூங்கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார்

4.6.33

1244

நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூங்
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவுங் கோக்கள் உடன் கூட
ஒல்லை அணைந்து பாலாக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர்
செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்

4.6.34

1245

கொண்ட மடுத்த குட நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து
வண்டு மருவுந் திருப் பள்ளித் தாமம் கொண்டு வரன் முறையே
பண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திரு மஞ்சனம் ஆட்டி

4.6.35

1246

மீள மீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட ஆள் உடையார்
தம்முடைய அன்பர் அன்பின்பால் உளதாய் மூள அமர்ந்த
நயப் பாடு முதிர்ந்த பற்று முற்றச் சூழ்
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார்

4.6.36

1247

பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான
திரு மஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி
வரும் அந் நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார்

4.6.37

1248

இறையோன் அடிக் கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும்
நிறை பூசனைக்குக் குடங்கள் பால் நிரம்பச் சொரிந்து நிரைக் குலங்கள்
குறைபாடு இன்றி மடி பெருகக் குவிந்த முலைப்பால் குறைவு இன்றி
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால்

4.6.38

1249

செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டாக முந்நூல் அணிமார்பர்
இயல்பில் புரியும் மற்று இதனைக் கண்டித் திறத்தை அறியாத
அயல் மற்று ஒருவன் அப் பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான்

4.6.39

1250

அச் சொல் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின்
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள் தமைக் கறந்து
பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை
எச்ச தத்தன் தனை அழைமின் என்றார் அவையில் இருந்தார்கள்

4.6.40

1251

ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன் தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை அழைத்துக் கொண்டு வரப் பரந்த
ஓங்கு சபையோர் அவனைப் பார்த்து ஊர் ஆனிரை மேய்த்து உன் மகன் செய்
தீங்கு தன்னைக் கேள் என்று புகுந்த பரிசு செப்புவார்

4.6.41

1252

அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான எலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்பான் போல்
கந்தம் மலிபூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார்

4.6.42

1253

மறையோர் மொழியக் கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது
இறையும் நான் முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள்
எனக் குறை கொண்டு இறைஞ்சி இனிப் புகுதில் குற்றம் எனதேயாம் என்றான்

4.6.43

1254

அந்தணாளர் தமை விடை கொண்டு அந்தி தொழுது மனை புகுந்து
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார் தமக்கு வாய் நேரான்
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன்

4.6.44

1255

சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய்
மன்றல் மருவும் புறவின் கண் மேய்ப்பார் மண்ணி மணற் குறையில்
அன்று திரளக் கொடு சென்ற அதனை அறிந்து மறைந்தப் பால்
நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான்

4.6.45

1256

அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி அரனார்க்கு
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து
பின்பு வரும் ஆன் முலை பொழிபால் பெருகும் குடங்கள் பேணும் இடம்
தன்பால் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன சமைத்தார்

4.6.46

1257

நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடிமேல்
மன்றல் விரவும் திருப் பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறை தீம் பால் குடங்கள் எடுத்து நயப்பு உற்று ஆட்டுதலும்

4.6.47

1258

பரவ மேல் மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும்
விரவ மேதக்கவர் பால் மேவும் பெருமை வெளிப் படுப்பான்
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து
குரவ மேவு முது மறையோன் கோப மேவும் படி கண்டான்

4.6.48

1259

கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கைத் தண்டு
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்துக் கொடிதாம் மொழி கூறத்
தொண்டு புரியும் சிறிய பெரும் தொன்றலார் தம் பெருமான் மேல்
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலரால்

4.6.49

1260

மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோ ன் அடிக்க வேறு உணரார்
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு
மாலா மறையோன் மிகச் செயிர்த்து வைத்த திருமஞ்சனக் குடப்பால்
காலால் இடறிச் சிந்தினான் கையால் கடமைத் தலை நின்றான்

4.6.50

1261

சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத்
தந்தை எனவே அறிந்தவன் தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமை யினால்
வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும்

4.6.51

1262

எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக
மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திடப்புகலும்
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி

4.6.52

1263

பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம்
காதல் கூர வெளிப் படலும் கண்டு தொழுது மனம் களித்துப்
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார்

4.6.53

1264

தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்து அருளி
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள

4.6.54

1265

செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்று உயர்ந்த சிவமயமாய்
பொங்கி எழுந்த திரு அருளின் மூழ்கிப் பூ மேல் அயன் முதலாம்
துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார்

4.6.55

1266

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்

4.6.56

1267

எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப்
பல்லாயிரவர் கண நாதர் படி ஆடிக் களி பயிலச்
சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழச் சைவ
நல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார்

4.6.57

1268

ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர் அருளால் நால் மறையின்
சீலம் திகழும் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றம் உடன்
மூல முதல்வர் சிவ லோகம் எய்தப் பெற்றான் முது மறையோன்

4.6.58

1269

வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர்
அந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்? ஈறிலாதார் தமக்கு அன்பு
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும் கால்

4.6.59


1270

சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணி கண்டத்து
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத்
தேசம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பணித்த திருவாளன்
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்

4.6.60


சருக்கம் 4-க்குத் திருவிருத்தம் - 1270
திருச்சிற்றம்பலம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று.


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home