|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > உற்பத்திக் காண்டம் (726- 1328) > உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) > யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் -3. மகேந்திர
காண்டம் படலம் 13-21 (640 - 1170)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 3 (verses 640 -
1170 )
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 13. சதமுகன் வதைப் படலம் | 640 -660 |
| 14. காவலாளர் வதைப் படலம் | 661 - 689 |
| 15. நகரழி படலம் | 690 - 770 |
| 16. சகத்திரவாகுகள் வதைப் படலம் | 771- 803 |
| 17. வச்சிரவாகு வதைப் படலம் | 804 - 904 |
| 18. யாளிமுகன் வதைப் படலம் | 905 - 947 |
| 19. வீரவாகு மீட்சிப் படலம் | 948 - 969 |
| 20. சூரன் நகர்புரி படலம் | 970 - 998 |
| 21. சூரன் அமைச்சியற் படலம் | 999 - 1178 |
உ
செந்திலாண்டவன்
துணை
திருச்சிற்றம்பலம்
13. சதமுகன் வதைப் படலம் (640 -660)
640 ஒண்ணில வெயிற்றினரொ ராயிரரை அட்டே
எண்ணலன் அவைக்களம் இகந்துபடர் காலைக்
கண்ணினழல் காலும்வகை கண்டுபுடை யாக
நண்ணுசத மாமுகனை நோக்கிநவில் கின்றான்.1 641 ஆறுமுகன் ஆளையிவன் ஆயிரரை இங்ஙன்
கோறல்புரிந் தானெனது கொற்றமுழு தௌ¢ளி
வேறலுடை யோர்களென மேன்மைபல செப்பிச்
சேறல்புரி வான்தவிசும் உம்பரிடை செல்ல.2 642 ஒட்டியநம் வீரரை ஒறுத்தகல் வனேனும்
விட்டதொரு தூதனொடு வெஞ்சமர் இயற்றி
அட்டல்பழி யாகுமவன் ஆற்றலை அடக்கிக்
கட்டிவிரை வால்வருகெ னக்கழற லோடும்.3 643 சூற்குல முகிற்பொருவு சூரனடி தாழா
ஏற்கும்விடை பெற்றிசைவின் ஏகுதல் புரிந்தான்
நாற்கடலும் மேவினும் நதுப்பரிய ஊழிக்
காற்கனலின் ஓதைதொடர் காட்சியது மான.4 644 ஏகுசத மாமுகன் இலக்கமற வீரர்
பாகம்வர எண்ணில்படை பாணிமிசை பற்றி
வேகமொடு சென்றதனி வேலன்விடு வீர
வாகுவினை எய்தியொரு மாற்றம்அறை கின்றான்.5 645 காவல்பல நீங்கிவரு கள்வஉல குள்ளோர்
ஏவரும வியப்பவரும் எங்களிறை முன்னம்
மேவினை இகழ்ந்துசில வீரருயிர் வௌவிப்
போவதெவன் நில்லுனது போர்வலி அழிப்பேன்.6 646 பட்டிமை உருக்கள்கொடு பாறல்அரி தாசை
எட்டுள பரப்பதனுள் ஆண்டகல்வை யேனும்
விட்டிடுவ னோவென விளம்பிவெரிந் எய்திக்
கிட்டுதலும் வீரனிது கேட்டனன் எதிர்ந்தான்.7 647 வேறு
கொற்ற வேலுடை அண்ணல்தன் தொழியினைக்
கொண்டிலன் இகழ்ந்தென்னைப்,
பற்ற ஆயிரர் தஙகளை விடுத்தலும் படுத்தனன் பெயர்காலை,
மற்று மீதொரு வயவனை உய்த்தனன் மன்னவன் இவன் ஆவி,
செற்று மாநக ரந்தனை அழித்தனன் செல்லுவன் இனியென்றான்.8 648 கருதி இன்னணஞ் சதமுகன் எனப்படு காவலன் றனைநோக்கிக்,
குருதி வேலுடைப் பண்ணவன் அடிமனங் கொண்டுதிண் டிறல்வாகு,
பொருதல் உன்னியே ஈண்டறை கூவினை
பொள்ளெனப் படையோடு,
வருதி யாலெனத் தௌ¢விளி யெடுத்தனன்
மறலிக்கும் இறைபோல்வான்.9 649 எல்லை யன்னதிற் சதமுகற் சூழ்தரும் இலக்கரும் எதிரூன்றி,
வில்லு மிழ்ந்திடு வெஞ்சாந் தொடுத்தனர் வேற்படை விடுக்கின்றார்.
கல்லெ னும்படி நேமிகள் உருட்டினர் கப்பணஞ் சிதறுற்றார்.
வல்லை முத்தலைப் படையெழு மழுக்கொடே எறிகின்றார்.10 650 அணிகள் பட்டவர் விட்டஇப் படைவகை
அண்ணன்மேற் புகலோடுந்,
துணிகள் பட்டன நெரிந்தன எரிந்தன
துகளுமாய்ப் போயிற்றால்,
மணிகள் பட்டிடும் இருஞ்சிறைக் கலுழர்க்குள்
வலியன்மேற் படுநொய்ய,
பணிகள் பட்டன போன்றன வேறிலை
படியெடுத் துரைத்தற்கே.11 651 இலக்க மாகிமுன் னின்றபேர் ஆண்டகை
இவர்செய லினைநோக்கி,
இலக்க மாய்முழு துலகமுந் துளக்கியே
இராயிரப் பத்தென்னும்,
இலக்க மாமுடி கொண்டதோர் சூளிகை
இம்மெனப் பறித்தேந்தி,
இலக்கமாகிய யெதிர்பொரு தானவர்
தங்கள்மேல் எறிந்திட்டான்.12 652 ஏதி லான்விடு சூளிகை சிறகர்பெற்
றிறந்துவீழ் மேருப்போல்,
மீது சென்றமர் இயற்றியே நின்றிடும்
வெய்யவர் மிசையெய்தித்,
தாது முற்றவுஞ் சாந்துபட் டொருங்குறத்
தனுவெலாஞ் சிதைத்திட்டே
ஓத நீர்முகி லார்ப்பொடு புவிக்கண்வீழ்ந்
துடைந்தன உதிராகி.13 653 கொடிசெ றிந்திடு சூளிகை தன்னுடன்
அவுணா¢தங் குழாங் கொண்ட,
முடிசி தைந்தன நாசிநீ டலையெலாம்
முடிந்தன முடிவில்லா,
வடிவ மைந்திடு கன்னகூ டத்தொகை
மாய்ந்தன நிலைகொள்ளும்,
அடித கர்ந்தன கொடுங்கையும் மாண்டன
ஒழிந்தவும் அழிவுற்ற.14 654 இலக்கர் தம்மையுஞ் சூளிகை தன்னுடன்
இமைப்பொழு தினில் அட்டு,
நிலக்கண் வீரனின் றிடுதலுஞ் சதமுகன்
நிரைவிழி கொடுநோக்கிக்,
கலக்க நண்ணியே தமரினைக் காண்கிலன்
கவன்றனன் தௌ¤வெய்தி,
உலக்கை சூலம்வேல் சக்கரந் தோமரம்
ஓச்சுதல் உறகின்றான்.15 655 உற்ற காலையின் ஒண்டிறல் மொய்ம்பினோன்
உருகெழு சினஞ் செய்தோர்,
பொற்றை நேர்தரு சிகரியைப் பறித்தனன்
பொள்ளென எறிகாலை,
மற்றொர் வார்சிலை வணக்கியே வெய்யதீ
வாளியா யிரம் பூட்டி,
இற்று வீழ்வகை இடைதனில் அறுத்தனன்
எறிதரு கதிர்வேலான்.16 656 அறுத்த நூறுகோல் பின்னரும் ஆங்கவன்
ஆகத்தின் நடுவெய்தச்,
செறித்த காலையின் வீரவா குப்பெயர்ச்
செம்மல்போய் அவன்வில்லைப்,
பறித்த னன்முறித் தெறிதலுஞ் சதமுகன்
பற்றவீ திடையென்னாக்,
குறித்தொ ரைம்பதிற் றிருகரம் ஓச்சியே
குரிசிலைப் பிடித்திட்டான்.17 657 பிடித்த தானவத் தலைவனை அண்ணலோர்
பெரும்புயங் கொடுதாக்கிப்,
படித்த லைப்படத் தள்ளலும் வீழ்ந்துளான்
பதைபதைத் தெழுகாலை.
அடித்த லத்தினால் உதைத்தனன்
அசனியால் அழுங்குறும்அரவம்போல,
துடிப்ப வேயுரத் தொருகழல் உறுத்தினன்
சோரிவாய் தொறுஞ்சோர.18 658 கந்த னப்படு மொய்ம்புடை வெய்யசூர்
கட்டுரை முறைபோற்றி,
வந்தெ திர்த்திடு சதமுகத தவுணனை
மிதித்திடும் அறமைந்தன்,
அந்த கப்பெயர் அசுரனை யாற்றல்பெற்
றமர்முய லகன்றன்னைத்,
தந்தியைப்பதம் ஒன்றுகொண் டூன்றிய
தாதைபோல் திகழ்கின்றான்.19 659 வேறு
மின்னல் வாளெயிற் றவுனன் மார்பகம் விடரெ னும்படி விள்ளவே,
தன்னொர் பாத முறுத்தி மற்றொரு தாளி னைக்கொடு தள்ளியே,
சென்னி யாவும் உருட்டி னான்திசை முற்றும் நின்று பரித்திடுங்,
கன்ன மார்மத மால்க ளிற்றினும் வன்மை சான்றிடு கழலினான்.20 660 நூறு சென்னியும் இடறி யாங்கொரு நொடிவரைப் பின்முன் அவுணனை,
ஈறு செய்தனன் அதுமு டித்தபின் எல்லை யின்சின மெய்தியே,
ஆறு மாமுக வள்ளல் வாய்மை இகழந்து ளான்அவை யத்தைமுன்,
ஈறு செய்துபின் இந்நக ரத்தை யென்று நினைந்தனன்.21
ஆகத் திருவிருத்தம் - 660
----
14. காவலாளர் வதைப் படலம் (661 - 689)
661 சுடரும் வேற்படைத் தொல்கும ரேசன
தடிகள் முன்னி அருளுடன் ஆண்டகை
படிய ளந்திடு பண்ணவ னாமென
நெடிய பேருருக் கொண்டுநின் றானரோ.1 662 திசைய ளந்தன திண்புயஞ் சென்றுசேண்
மிசைய ளந்தன மேதகு நீண்முடி
வசுதை யாவும் அளந்தன வார்கழல்
அசைவ ருந்திறல் ஆடவன் நிற்பவே.2 663 திருவு லாங்கழற் சீறடிச் செம்மல்பேர்
உருவு தாங்கி உகந்தனன் நிற்றலும்
அரவின் வேந்தரும் ஆதியங் கூர்மரும்
வெருவி னார்கள் வியன்பொறை ஆற்றலார்.3 664 கதிரெ றித்திடு காமரு பூணினான்
மதுகை பெற்ற வடிவொடு நிற்றலும்
அதுப ரித்தற் கருமையின் ஆற்றவும்
விதலை யுற்றது வீர மகேந்திரம்.4 665 உலங்கொள் வாகுவின் ஒண்பதம் ஊன்றலும்
விலங்கி யேதளர் வீர மகேந்திரம்
இலங்கை நீர்மையெய் தாமல் இருந்ததால்
குலங்கொள் தானவக் கோமகன் ஆணையால்.5 666 சேண ளாவிய சென்னியன் எண்டிசை
காண நிற்புறு காட்சியன் கந்தவேள்
ஆணை காட்டிநி றுவிய ஆடலாந்
தாணு வென்னத் தமியன் விளங்கினான்.6 667 சான்ற கேள்வித் தலைமகன் தாட்டுணை
ஊன்று கின்ற வுழிதொறும் மாநிலம்
ஆன்று கீண்டிட அவ்வப் புழைதொறுங்
தோன்று கின்றன சூழ்கடல் நீத்தமே.7 668 ஆத்தன் ஊன்றும் அடிதொறுந் தோன்றிய
நீத்தம் யாவும் நெடுந்திறல் வெய்யசூர்
வாய்த்த கோயில் வளைந்திறை போற்றிய
வேத்த வைக்களந் தன்னினும் மேவிய.8 669 பூழை கொண்டு புறம்படர் நீத்தநீர்
மாழை கொண்டவன் கோயில் வளைந்துராய்ப்
பேழை கொண்ட பிணிப்பறு பாந்தள்போல்
கூழை கொண்ட மறுகிற் குலாயதே.9 670 துய்ய பூழை தொறுந்தொறுந் தோன்றுநீர்
மையல் வெங்கரி வாம்பரி தேர்படை
கைய ரிக்கொடு காசினி யாறுபோல்
செய்ய மாநகர் யாங்கணுஞ் சென்றதே.10 671 தோட்ட தன்ன சுழிப்படு வாரியின்
ஈட்ட மாநகர் வீதிதொ றேகியே
பாட்டின் மாளிகை பற்பல சாடியே
மீட்டும் ஒல்லையின் வேலை மடுத்ததே.11 672 எம்மை யாளுடை எந்தைதன் தூதுவன்
செம்மை நீடு திருவுரு நோக்கியே
கைம்ம றிக்கொடு கண்டனர் யாவரும்
அம்ம வோவென அச்சமுற் றோடினார்.12 673 மாவு லாவரும் மன்னவன் கோயிலுட்
காவ லாளர்இக் காளையைக் கண்ணுறீஇ
ஓவி தோர்வஞ்சகன் உற்றனன் ஈண்டெனாக்
கூவி ளித்தனர் தத்தமிற் கூடினார்.13 674 கூடு கின்ற குணிப்பருங் காவலோர்
நீடு மெய்கொடு நின்றவற் கஞ்சியே
ஆடல் பூண்டிலம் என்னின் அரசனே
சாடு நம்மைச் சரதமென் றெண்ணினா£¢.14 675 குமரி மாமதிற் கோயிலுட் போற்றியே
அமரி யோர்கள ரைம்பது வௌ¢ளத்தர்
திமிர மேனியர் தீயுகு கண்ணினர்
சமரி யற்றத் தலைத்தலை மண்டினார்.15 676 மண்டி மற்றவர் வல்லெழுத் தோமரம்
பிண்டி பாலம் பெருங்கதை ஆதியாக்
கொண்ட கொண்ட கொடும்படை வீசியே
அண்டம் விண்டிட ஆர்த்தனர் ஆடினார்.16 677 ஆடும் எல்லை அடுபடைத் தானவர்
பாடு சூழ்ந்த பரிசினை நோக்கினான்
நீடு சான்ற இடித்தொகை ஆயிர
கோடி போற்புயங் கொட்டிநின் றார்ப்பவே.17 678 அலைக்க வந்த அவுணப் படையெலாங்
கலக்க மூழ்கிக் கருத்துணர் வ·கியே
உலக்கு றாத உருமிடி உண்டிடும்
புலைக்க டுந்தொழிற் புள்ளென லாயவே.18 679 வேறு
பன்மழைக் குலங்களிற் படைக்கலங்கள் யாவையும்
வன்மைபெற்ற வீரருய்ப்ப வந்துமேனி படுதலுஞ்
சின்மயத்தன் ஒற்றன்மிக்க செய்யவீழ் விழுத்திய
தொன்மரத் தியற்கைபோன்று சோரிசோர நின்றனன்.19 680 ஆனகாலை வீரவாகு அறிவனங்கி யிற்சினைஇ
மானவீரர் மீதலாது வாளெடுக்க லேனெனாத்
தேனின்மாப் பெருங்கடல் திளைத்தலைக்கு மத்தெனத்
தானவப் பதாதியைத் தடிந்தலைத்தல் மேயினான்.20 681 மிதித்தனன் கொதித்தனன் விடுத்திலன் படுத்தனன்
சதைத்தனன் புதைத்தனன் தகர்த்தனன் துகைத்தனன்
உதைத்தனன் குதித்தனன் உருட்டினன் புரட்டினன்
சிதைத்தனன் செகுத்தனன் செருக்கினன் தருக்கினன்.21 682 சிரத்தினை நெரித்தனன் திறம்புயம் இறுத்தனன்
கரத்தினை முரித்தனன் களத்தினைத் திரித்தனன்
உரத்தினைப் பிரித்தனன் உருத்தனன் சிரித்தனன்
புரத்தினை உரித்தனன் பொடித்தனன் படைத்திறம்.22 683 எடுத்தனன் சுழற்றினன் எறிந்தனன் சிலோர்தமைப்
புடைத்தனன் இடித்தனன் புயத்தினாற் சிலோர்தமைப்
பிடித்தனன் பிசைந்தனன் பிழிந்தனன் சிலோர்தமை
அடித்தலங் கொடித்தலத் தரைத்தனன் சிலோர்தமை.23 684 பெருத்தனன் சிறுத்தனன் பெயர்ந்தும்வேறு பல்லுருத்
தரித்தனன் நடந்தனன் தனித்தனி தொடர்ந்தனன்
மருத்தெனக் கறங்கினன் வளைந்தனன் கிளர்ந்தனன்
ஒருத்தன்வௌ¢ளம் ஐம்பது உலக்குறக் கலக்கினான்.24 685 மஞ்ஞை அன்னம் ஒண்புறா மடக்குயில் ரிட்பயில்
செய்ஞ்ஞலங்கொள் மாடமீது சேனங்கூளி பிள்ளைகள்
பிஞ்ஞகன் குமாரனாடு பேரமர்க் களம்படும்
அஞ்ஞையாளர் குருதியூன் அருந்துமா றிருந்தவே.25 686 மானினஞ் செறிந்திரைந்து வந்தவெல்லை தன்னிடைத்
தானொர்சிங்க ஏறுபுக்க தன்மைபோல் அவுணர்தங்
கோனிருந்த உறையுளிற் குலாயகாவ லாளராஞ்
சேனைவௌ¢ளம் ஐம்பதுஞ் சினத்தின்வல்லை சிந்தினான்.26 687 முறிந்தனர் உறுப்பியாக்கை முற்றும்வேறு வேறவாய்ப்
பிறிந்தனர் தகர்ந்தனர் பிறங்குசென்னி சோரியுட்
செறிந்தனர் புதைந்தனர் சிதைந்தனர் உருண்டனர்
மறிந்தனர் இறந்தனா¢ மடிந்தனர் கிடந்தனர்.27 688 இன்னபான்மை வீற்றுவீற்றின் அவுணர்தானை யாவையுஞ்
சின்னபின்ன மாகியே சிதைந்துவீழந் துலந்திட
உன்னுகின்ற முன்னமட் டுலம்பினான் சிலம்பினின்
மன்னன்மங்கை நூபுரத்தின் வந்தவீர வாகுவே.28 689 வள்ளல்நின்று சமரிழைப்ப மாண்டவீரர் யாக்கையின்
உள்ளதாது வானஏழும் உருவம்வேறு காண்கிலா
தள்ளலாகி யொன்றுபட்ட தங்கிதன்னின் உருகியே
வௌ¢ளியாதி உலகம்யாவும் விரவும்வண்ணம் என்னவே.29
ஆகத் திருவிருத்தம் - 689
------
15. நகரழி படலம் (690 - 770)
690 ஆசுறும் அவுண வௌ¢ளம் ஐம்பது முடித்தோன் ஐஞ்?
றோசனை அளவை யான்றே ஒராயிர மும்ப ரேகித்
தேசுறு மேரு வென்னச் சிகரமோ ரிலக்கஞ் சூடி
வீசுபொன் சுடர நின்ற வேரமொன் றங்கட் கண்டான்.1 691 புறத்திருள் இரிய வைகும் பொலஞ்சுடர்ப் பொன்செய் வேரந்
திறத்தியல் கோயில் முன்னஞ் சேர்ந்தது தன்னை வீரன்
பறித்தொரு கரத்தின் ஏந்திப் பதகனாஞ் சூர பன்மன்
அறத்தியல் இழுக்கி வைகும் அவைக்களம் வீசி ஆர்த்தான்.2 692 பன்மணி செறிந்த பொற்பிற் பாயொளி எரிபொன் வேரம்
மன்னவன் உறையுஞ் செம்பொன் மாயிரு மன்றில் போதல்
மின்னவிர் மேரு வாதி வெற்பெலாம் மிகலின் ஒன்றிப்
பொன்னகர் பொடிப்பச் செல்லுந் தன்மையைப் போலும்அம்மா.3 693 வார்த்தரு கழற்கால் வீரன் வானுரும் ஏறும் உட்க
ஆர்த்திடு துழனி யேகி அரசன்மே வியவத் தாணி
சேர்த்தவர் கன்னத் தூடு செறியுமுன் எறித லுற்ற
பேர்த்திடு செம்பொன் வேரம் பேரவை மிசையுற் றன்றே.4 694 விற்செறி தூபிச் செம்பொன் வியன்மணி கஞலும் வேரங்
கற்செறி பெருந்தோள் வீரன் எறிதலுங் கடிது நண்ணிப்
பொற்செறி மார்பிற் சூரும் புதல்வருஞ் சிலரும் வைகுஞ்
சிற்சில இடையே அன்றி மன்றெலாஞ் சிந்திற் றாமால்.5 695 தடத்தனி வேரங் கீண்டு தபனியத் தவைக்கண் ஓச்சி
இடித்தனன் ஒருதான் நிற்கும் எம்பிரா னேவல் தூதன்
படைத்தளித திறுதி வேலைப் பசும்பொனார் தசும்பின் அண்டம்
உடைத்துல கழித்து நிற்கும் ஒருபெருங் கடவுள் ஒத்தான்.6 696 புலவுகொள் அலகு வெவ்வாய்ப் புட்செறி பொதும்பர் தன்னில்
பலமுடை உருமு வீழப் பட்டதோர் பரிச தென்னத்
தொலைவகன் மைந்தன் விட்ட சூளிகை தகர்ப்பத் தொல்சீர்
மலிவுறு சனங்க ளோடு மன்றமங் குற்ற தம்மா.7 697 இடிந்தன மிசையின் எல்லை இற்றபித் திகையின் சூழல்
பொடிந்தன உத்தி ரங்கள் போதிகை பூழி யாகி
முடிந்தன மதலை யாவும் முரிந்தன கபோதம் வீழ்ந்த
மடிந்தன திருவுஞ் சீரும் மன்றழி வுற்ற தன்றே.8 698 பீடிகை புரைத்த பொற்பிற் பேரவை தகர்த லோடும்
பாடுற அரசர் சூழ்ந்த பரிசனர் தம்முட் சில்லோர்
ஓடினர் சிலவர் மெய்யூ றுற்றனர் சிலவர் நெக்கு
வீடினர் சிலவர் ஆற்ற மெலிந்தனர் புலம்ப லுற்றார்.9 699 நெக்கது பொதியி லாக நிரந்தது செம்பொற் பூழி
திக்கொடு புவியும் வானுஞ் செறிந்தன அவுண ராகித்
தொக்கனர் உடைந்து மாய்ந்து தொகைபிரிந் தழிந்தார் தொல்லைத்
தக்கனின் உணர்வு தீர்ந்த தகுவர்கோன் இவற்றைக் கண்டான்.10 700 ஆயிர நாமத் தண்ணல் அனையவன் வன்மை காணா
ஆயிரம் வடவை யேபோல் அழன்றுதன் னயலின் நின்ற
ஆயிர நெடுந்தோள் ஐஞ்? றானனங் கொண்ட தீயோர்
ஆயிரர் தம்மை நோக்கி அடலுரும் ஏற்றிற் சொல்வான்.11 701 விழிப்பரு நிவப்பின் ஓங்கும் வேரமொன் றதனைக் கீண்டே
தெழிப்பொடு குமரன் தூதன் செலுத்தினன் செம்பொன் மன்றம்
இழிப்புறத் தகர்ந்து வீழ்ந்த தீண்டுசில் லிடமே அன்றிப்
பழிப்பெனக் கிதன்மேல் உண்டோ பட்டதென் புகழும் மன்னோ.12 702 கோறலே கொற்ற மன்றால் ஒற்றனைக் குறுகி நீவிர்
மாறுபோர் இயற்றி யேனும் மற்றவன் வழாத வாற்றல்
ஈறுசெய் திடாது பற்றி எம்முனர்த் தருதிர் மெய்யின்
ஊறுசெய் தவனை வானோ ருடன்சிறை உய்ப்ப னென்றான்.13 703 அன்னவர் அதனைக் கேளா அரசவீ தருளிக் கேண்மோ
ஒன்னலன் தூதன் சோரி உயிரொடு குடித்தற் குற்றாம்
நின்னருள் ஆணை நாடி நெஞ்சகம் புழுங்கி யஞ்சி
இன்னதோர் பொழுதுந் தாழ்த்தேம் இனியது புரிது மென்றார்.14 704 என்றனர் வணக்கஞ் செய்ய இனிதென உவகை பூத்துக்
கன்றிய அவுணர் தங்கள் காவலன் விடுப்ப அங்கட்
சென்றனர் பத்து நூற்றுத் திறலுடை மொய்ம்பர் முன்னம்
நின்றிடு வீர வாகு நிலைமையை உரைக்க லுற்றாம்.15 705 வேறு
வேரம தெறிந்தவை வீட்டி நின்றுளான்
சூருரை நகர்வளந் தொலைச்சிச் சூழுநர்
சேருறும் இருக்கையுஞ் சிதைப்பன் இன்றெனா
ஓருறு புந்தியில் உன்னி னாரோ.16 706 மறிப்பிணை முதலிய மான்கள் புள்ளினஞ்
சிறப்புறு தண்டலை மணியிற் செம்பொனிற்
குறிப்பினர் குயிற்றுசெய் குன்றம் யாவையும்
பறித்தனன் திசைதொறும் பரவ வீசினான்.17 707 வரைவயி றுயிர்த்திடு மாசில் பல்பகை
அரதன நிரைகளின் அணிய செம்பொனின்
மரபினில் இயற்றிய வரம்பில் தெற்றிகள்
விரைவொடு தொட்டனன் எடுத்து வீசினான்.18 708 முடிவகல் பேழையின் மூட்டு நீக்கியே
அடியுறு கொள்கலம் அவற்றைச் சாய்த்தெனப்
படியுறு மண்டபம் பலவுந் தொட்டெடா
இடிபுரை ஓதையான் யாண்டும் வீசினான்.19 709 மலரயன் மிசையுறு மாயற் புல்லுவான்
நிலமகள் கைகளை நீட்டி யென்னவான்
உலகெலாம் இகந்துமேல் ஓங்கு கோபுரம்
பலபல பறித்தனன் பாங்கர் ஓச்சினான்.20 710 மூளுறும் எரிசிகை முடித்துத் தானவர்
கேளடு தமித்தமி கெழுமி யுற்றென
வாளுறு மாமணி வயங்கு தூபிகைச்
சூளிகை பலபல தொட்டு வீசினான்.21 711 கற்றிடும் விஞ்சையின் கழகம் பல்கடைத்
தெற்றிகள் வேதிகை சிறந்த சாலைகள்
துற்றிடு பழுமரச் சோலை வாவிகள்
மற்றுள பிறவொடும் மட்டித் தானரோ.22 712 கந்துக வியனிரை கரிகள் தேர்த்தொகை
பந்தியிற் சாலையிற் பயின்று நின்றன
அந்தமின் றாயின் அள்ளி அள்ளியே
உந்தினன் திசைதொறும் உரற்றி வீழவே.23 713 நிலவரை சூழ்தரு நேமி வெற்பென
மலிதரு செம்மணி வகையிற் பண்ணிய
பலவகை இயந்திரப் பதண இஞ்சிகள்
ஒலிகழற் காலினான் உதைத்து வீட்டினான்.24 714 பூழியம் பொற்புயப் புனிதன் வெய்யசூர்
வாழுறு கோநகர் வளத்தை யின்னணம்
ஊழியின் மருத்தென உலாவி யட்டபின்
சூழுறு கிடங்கருந் தூர்த்திட் டானரோ.25 715 அறந்தலை நின்றிடா அரசன் கோயில்நின்
றெறிந்திடு சிகரிகள் இலங்கு சூளிகை
நிறைந்திடு மண்டபம் நெருங்கு காமர்காச்
செறிந்தன பிறவொடு சென்று சேணெலாம்.26 716 உளர்ந்திடு வரியளி யுலாவு தொங்கலான்
வளர்ந்திடு பாணியான் மன்னன் செல்வமாய்க்
களைந்தெறி கின்றன கணிப்பி லாதவுங்
கிளர்ந்திடு நெடுமுகில் கிழித்துச் சென்றவே.27 717 சூரெனும் அவுணர்கோன் படைத்த தொல்வளஞ்
சேரிய மிசைவரத் தெரிந்து வானிடைச்
சாருறு கடவுளர் தம்முள் ஏங்கியே
ஏரியல் தொகைபிரிந் திரியல் போயினார்.28 718 ஊனிவர் குருதிவேல் ஒருவன் ஓச்சிய
தானவர் கோன்வளந் தகைந்து விண்ணவர்
மேனிகழ் பதங்களை வீட்டி ஏகியே
வானதி தன்னையும் வல்லை தூர்த்தவே.29 719 வெறித்திடு தார்ப்புய விடலை நொய்தினில்
பறித்தெறி அவுணர்கோன் பலவ ளங்களும்
எறித்திடு தீங்கதிர் எல்லை வேந்தனை
மறைத்தன பணிபல மயங்கிச் சூழ்ந்தபோல்.30 720 சோலையின் மண்டபத் தொகையிற் சூளிகைப்
பாலினிற் சிகரியிற் பயின்ற புள்ளெலாம்
மேலுறு செலவினில் விரைவின் ஏகியே
மாலயன் புள்ளடு மருவி வைகியே.31 721 செஞ்சுடர்ச் சூளிகை சிகர மாதிகள்
விஞ்சிய மிசைவர விழித்துத் தாளிலோன்
எஞ்சிய வுடலமும் இறுங்கொல் இன்றெனா
அஞ்சினன் அழுங்கினன் அலரி பாகனே.32 722 வள்ளுறு வசிகெழு வயிர மாமுடி
உள்ளபல் சூளிகை உம்பர் செல்வன
பிள்ளைகள் எறிந்திடப் பிறங்கு பம்பரம்
பொள்ளென ஈண்டிவான் போவ போன்றவே.33 723 மீப்படு வியன்முகில கிழித்து விண்மிசை
மாப்பெருஞ் சிகரிகள் வல்லை செல்வன
நீப்பருங் ககனமான் நெடுங்க துப்பினில்
சீப்பிடு கின்றதோர் செய்கை போலுமால்.34 724 பயனுறு பழுமரப் பைம்பொற் காமர்கா
வயனெறி தந்திட அகல்விண் செல்வன
நயனறும் அவுணனூர் நணிய கற்பகம்
வியனுல இருந்திட மீள்வ போன்றவே.35 725 ஐயன தொற்றுவன் அள்ளி வீசிய
செய்யபல் பொருள்களுஞ் செறிந்து சேணெலாங்
கொய்யுளை வயப்பரிக் கொடிஞ்சித் தேர்மிசை
வெய்யவன் செலவினை விலக்கு கின்றவே.36 726 திருமிகு சூளிகை சிகர மாதகள்
நிரல்பட ஏகியே நிரந்த பல்வகைப்
பருமணி யெரிசுடர் பரப்பி வான்படர்
இரவிதன் கதிரையும் இகலி வென்றவே.37 727 மின்னவிர் சிகரிபொன் வேர மாதிகள்
என்னவும் வான்படர்ந் தெழாலின் விஞ்சையர்
உன்னுறும் ஓங்கலும் உவண வைப்பெனும்
பொன்னெயில் வட்டமும் பூழி செய்தவே.38 728 குன்றொடு சூளிகை கோபு ரம்பிற
ஒன்றுடன் ஒன்றுபட் டுரிஞ்சி யாயிடைத்
துன்றிய மணிதிசை தோறுஞ் சிந்துவ
மின்றிகழ தாரகை விளிந்து வீழ்வபோல்.39 729 பொற்றைகள் சிகரகோ புரங்கள் தத்தமில்
எற்றுழிப் புகையென எழுந்து பூழிகள்
சுற்றிய புலிங்கமுந் தோன்று கின்றன
வெற்றவெம் புயல்களு மின்னும் போலவே.40 730 ஏழுயர் களிறனான் எறிந்த யாவையுஞ்
சூழுற வானிடைத் துவன்ற எற்றலிற்
கேழுறு நுண்டுகள் கெழுமிச் சிந்துவ
பூழியின் நெடுமழை பொழியுந் தன்மைபோல்.41 731 ஆரியன் ஓச்சிய அணிகொள் மண்டபம்
வேரமொ டகன்பொழில் பிறவும் விண்ணுறீஇத்
தாரகை முதற்சுடா¢த் தனுக்கள் சார்ந்திடச்
சோரியும் இடையிடை துளித்த தென்பவே.42 732 புந்தியி லான்மகம் புகுந்த தீமையால்
இந்திர னாதியோர் யாருஞ் சூரனால்
நொந்தனர் அவன்நகர் வளமும் நோவுற
அந்தரத் தவரையும் அலக்கண செய்தவே.43 733 வெற்புறழ் மொய்ம்பினான் விடுத்த சூளிகை
பற்பல பொருந்தலும் பட்ட வன்னிபோய்
எற்படு கதிருடை இரவி பச்சைமாப்
பொற்புறு கொய்யுளை பூழி செய்ததே.44 734 பொன்னவிர் சிகரகோ புரங்க ளாதிய
துன்னிய தாக்கலில் தோன்றித் தீப்பொறி
இன்னுயிர் வழங்கிய வெல்லை எங்கணும்
வன்னிபெய் மழையென மயங்கி வீழ்பவே.45 735 வழுவுறும் அவுணர்கோன் வளங்கள் யாவையும்
கெழுதகு விசும்பினைக் கிழித்துச் சேறலின்
எழிலிகள் வயிறுடைந் திரங்கி ஆற்றலா
தழுதென உலகெலாம் அறல்சிந் துற்றவே.46 736 வேறு
ஏசிலா அறிவன் விட்ட இன்னபல் வெறுக்கை யாவும்
மாசகல் விசும்பின் ஏகி மதிமுடி அருள்பெற் றுள்ள
கோசிகன் துறக்க முய்த்த கொற்றவன் தவறி யென்ன
ஆசுற மீண்டு ஞாலத் தகிலமும் வீழந்த அன்றே.47 737 படிதனில் திசையின் பாலிற் பௌவத்திற் பழுவந் தன்னில்
தடவரை தன்னில் இன்ன தகையன பிறவிற் சூர
னுடையபல் வளங்க ளெல்லாம் உரற்றியே வீழ ஆண்டும்
இடைதரு முயிரின் பொம்மல் வெருவிவீழ்ந் திரித லுற்ற.48 738 அலைந்தது பரிதி ஓங்கல் அதிர்ந்தது மேருச் சையங்
குலைந்தது சூழுங் குன்றங் குலுங்கிய அசலம் ஏழுங்
கலைந்தது நாகர் வைப்புங் கலங்கிய கடலும் பாரும்
உலைந்தன உயிர்கண் முற்றும் ஓடின திசையின் யானை.49 739 தண்படு தொடலை மார்பன் தானெறிந் தவற்றிற் பல்வே
றொண்புவி முழுதுஞ் சிந்திற் றொழிந்தன உலப்பி லாத
எண்பதி னாயி ரப்பேர் யோசனை யெல்லைத் தாகிக்
கண்படு சூரன் ஊரின் கல்லென வீழ்ந்த மாதோ.50 740 முடிந்திடல் அரிய சூரன் மொய்வளம் அவனூர் முற்றுந்
தடிந்தெறி உருமே றென்னத் தணப்பற வீழ்த லோடும்
இடிந்தன மாட வீதி யாவையும் கடிகா இற்ற
பொடிந்தன சிகரி யாதி புரிசைகள் மறிந்து மாண்ட.51 741 மண்டபஞ் சிகரி வேரம் அணிமதில் மாட கூடம்
எண்டகு பொதியின் முற்றும் இடிபட எழுபொற் பூழி
விண்டொடு திசைபார் யாண்டும் வெறுக்கையின் வடிவ மாக்கி
அண்டா¢தம் உலகீ தென்றே அறிகுறா வகைசெய் தன்றே.52 742 புடையகல் பொன்செய் மூதூர் பொள்ளெனத் தகர்ந்து வீழ
மிடைதரு வீதி முற்று மேயின சனங்கள் பூசல்
கடைவரு நாள தெல்லைக் ககனமூ தண்ட கூடம்
உடைதலும் முடியும் ஆவி அரற்றுமா றொத்த தன்றே.53 743 வேறு
நாக முந்து நறுநிழல் மாதவி
நாக முந்து நறுநிழற் பொற்கணி
சேக ரம்பல சிந்திடு காழுடைச்
சேக ரம்பல வோடு சிதைந்தவே.54 744 கோட ரங்குல வுற்றிட வான்றொடுங்
கோட ரங்குல வுற்றிடு தண்டலைக்
கோட ரங்குலங் கோலஞ்செய் பொன்வரைக்
கோட ரங்குல வுற்றிறை கொண்டவே.55 745 ஓடும் வாவியின் மீனினம் ஓங்குபுள்
ளோடும் வாவிவிண் ணுற்றிட வீதியின்
மாட மாலை வரிசையின் மல்கிய
மாட மாலை மறிந்திடி பட்டதே.56 746 அண்ட ரண்டரும் அந்நகர் மாண்டன
அண்ட ரண்டம் அளவிடு சூளிகை
மண்ட பம்மதின் மாடந் தரித்தயர்
மண்ட பம்மதின் மாதவம் யாவதே.57 747 பூவை யன்ன மணிமயில் பொற்புறு
பூவை யன்ன மணிமயில் பொற்புறா
வாவி யோடைவண் டான மழிந்திட
வாவி யோடைவண் டானம் அழியுமால்.58 748 மொய்யு டைத்தறி மோதித் தளைபரீஇ
மையு டைப்பெரு மால்கரி சோரிநீர்
மெய்யி டத்துக விண்முகி லச்சுறக்
கையெ டுத்துக் கதறி உடைந்தவே.59 749 ஈடு சான்ற வெருத்த முரிந்திட
நீடு பூநுதல் நெக்குறக் கிம்புரிக்
கோடு சிந்தக் குருதியு குத்தரோ
ஓடி வீழ்வ உவாக்கள் அரற்றியே.60 750 கார்கொள் சிந்துரங் காயத் திடையிடைச்
சோரி சோர்தரத் தோன்றுவ ஈற்றினின்
மேரு வாதி விலங்கலை மெய்க்கனல்
சாரும் வெம்புகை தன்னொடுஞ் சூழ்ந்தபோல்.61 751 கோடிகள் இற்ற கொடிஞ்சி முரிந்தன
இடைகொள் பீடிகை எல்லைகள் நெக்கன
அடிகொள் சில்லியும் ஆருஞ் சிதைந்தன
பொடிய தாகிப் புரண்டன தேர்களே.62 752 பந்தி தோறும் பராவிய ஐங்கதிக்
கந்து கங்கள் கலங்கி நெரிந்திட
நொந்து மேனி நொறில்வரு செம்புனல்
சிந்தி யோடச் சிதறிய திக்கெலாம்.63 753 சிதவல் கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை
மதுகை வெம்பரி வாய்களின் வீழ்தரு
முதிர வாரி யொலிகடல் புக்கதால்
இதுகொ லோவட வைக்கனல் என்னவே.64 754 காள வெங்கரிக் காலின் வயப்பரித்
தாளின் ஊடகப் பட்டுத் தரைபுகா
மூளை சிந்த முழுதுடல் பூழியாய்
மாளு கின்றனர் மாநக ரோர் சிலர்.65 755 ஆளி மொய்ம்புடை அண்ணல்முன் வீசின
நீளு மாநகர் ஞௌ¢ளலின் வீழ்தலுந்
தோளி ழந்து சுவல்முரிந் தொய்யெனத்
தாளி ழந்து தரங்கமுற் றா£¢சிலர்.66 756 பொற்றை யன்ன பொலன்மணி மாளிகை
இற்று வீழ்தலும் என்னிது வென்றெழீஇ
வெற்ற வௌ¢ளிடை மேவுதல் முன்னியே
முற்றம் வந்திடு முன்மறிந் தார்சிலர்.67 757 ஊடு மைந்தரும் ஒண்டொடி மாதரும்
மாட மோடு மறிந்தனர் தம்முடல்
வீடி விண்மிசை வேற்றுரு வெய்தியே
கூடி யேவழிக் கொண்டன ரோர்சிலர்.68 758 உவமன் இல்லவன் ஓச்சின எங்கணும்
அவதி யின்றிப் பொழிய வவைதெரீஇத்
தவறி லாதுசெய் தாழ்வரை கீண்டெடாக்
கவிகை யாத்தமைக் காத்துநிற் பார்சிலர்.69 759 விறற்கொள் வாகு விடுத்தன கல்லக
வுறைப்பின் வீழ ஒதுங்கிடம் இன்மையிற்
சிறக்கு மாநகர்ச் செந்தரைக் கொண்டகீழ்
அறைக்கு ளேபுக் கலமரு வார்சிலர்.70 760 மாதர் தங்களை மக்களை அன்னையைத்
தாதை மாரைத் தமதுகைப் பற்றியே
ஏதின் மாடம் இகந்துகச் சோரிநீர்
வீதி போந்து வெருவிநிற் பார்சிலர்.1 761 கருவி வானினுங் கண்ணகன் திக்கினுந்
தரணி தன்னினுந் தாவிலன் வீசிய
திருவ ளங்கள் செறிந்தன விழ்தலும்
வெருவிப் போய்க்கடல் வீழ்ந்தொளிப் பார்சிலர்.72 762 கிழிந்த சென்னியிற் கேழ்படு செம்புனல்
கழிந்து தோன்றவுங் கண்டனர் ஐயுறாப்
பொழிந்து மெய்ப்புறம் போர்த்தலுந் தேற்றியே
அழிந்தி ரங்குற ஆகுலிப் பார்சிலர்.73 763 ஆடல் மொய்ம்பினன் ஆர்த்துமுன் வீசிய
மாட வீதி வளநகர் எங்கணும்
நீட வீழதலும் நிற்றலை அஞ்சியே
ஓடி யூறுற் றுயிர்துறப் பார்சிலர்.74 764 திங்கள் சூடி திருமகன் விட்டன
எங்கும் வீழும் இறப்பினை நோக்கியே
அங்கி வெங்கணை தொட்டறுத் தன்னவை
தங்கள் ஆருயிர் தாங்கிநிற் பார்சிலர்.75 765 மையல் மாதரும் மைந்தரும் ஆவியும்
பொய்யில் புந்தியும் ஒன்றிப் புணர்தலுஞ்
செய்ய மாடஞ் சிகரமொ டேவிழ
மெய்யும் ஒன்றி விளிந்திடு வார்சிலர்.76 766 அந்தண் மாடத் தறிவன் விடுத்தன
வந்து வீழ மறிந்துரு மேறெனச்
சிந்த வேயுகு செம்பொறி மெய்ப்பட
வெந்து சின்னம் விரவுறு வார்சிலர்.77 767 வரங்கொள் வீர மகேந்திரத் தின்னணந்
தரங்க மெய்திச் சனங்களெல் லாமிரீஇ
உரங்கள் சிந்தி அழிந்துழி ஒல்லென
இரங்கும் ஓதை எழுகடல் உண்டதே.78 768 மன்றி னிற்கரி பொய்த்து மனுநெறி
கொன்று வாழுங் கொடியர்தம் மில்லெனத்
துன்று மாடத் தொகைவௌ¢ ளிடையதாய்ப்
பொன்றி வீழ்ந்தன புல்லென வாகியே.79 769 நீறு பட்ட நெடுநகர் எங்கணும்
ஊறு பட்ட உயிர்கடஞ் சோரிநீர்
ஆறு பட்டிட அங்கவை யோடளாய்ச்
சேறு பட்டன செக்கர்விண் போலவே.80 770 மலிந்த சீர்த்தி மகேந்திர மாபுரம்
அலைந்து தொல்லைத் திருமுழு தற்றதால்
மெலிந்தி டும்படி விண்ணவர் தம்மெலாம்
நலிந்த வன்வளம் நன்றுறு மேகொலாம்.81
ஆகத் திருவிருத்தம் - 770
------------
16. சகத்திரவாகுகள் வதைப் படலம் (771- 803)
640 ஏயின பான்மையின் இவன்மூதூ£¢
மாயத்ரும் எல்லையின் வருகின்ற
ஆயிர வாகுள அடல்வீரர்
மேயின தன்மை விளம்புற்றாம்.1 771 ஓலம் உடைக்கடல் உமிழகின்ற
நீல விடத்தினை நிகர்மெய்யார்
மாலை யுடைப்பல வடவைத்தீக்
கோல மெனச்சிகை கொண்டுற்றார்.2 773 தீங்களி றாதிய திறல்மாக்கள்
தாங்குவை யோடு தலைப்பெய்தே
ஆங்குள சோரி அறாதீமப்
பாங்கா¢கள் அன்னதொர் பகுவாயார்.3 774 எல்லையின் நேமிகள் யாவுந்தாம்
ஒல்லொலி நீரின் உடைந்தென்னக்
கல்லுறை சிந்து கருங்கொண்மூச்
செல்லென ஆர்த்தனர் செல்கின்றார்.4 775 வேறு
மைவரு நீல வரைத்தொகை தாங்கும்
மொய்வரு கின்ற முடிக்குழு வென்ன
ஐவகை நூற்றின் அமர்ந்தகல் வானைத்
தைவரு கின்ற தலைத்தொகை கொண்டார்.5 776 மராமர மானவை மாதிர மெங்கும்
பராவ விடுத்திடு பலகவ டென்ன
விராவிய அங்கத மேவிய விளங்கும்
ஒராயிர மாகிய ஒண்புய முள்ளார்.6 777 எழுக்கொடு முத்தலை எ·கம்பில் நாஞ்சில்
கழுக்கடை சங்கொடு கப்பணம் வெவ்வாள்
மழுக்கதை சக்கரம் வச்சிர மாதி
விழுப்படை யாவும் விராவிய கையார்.7 778 எண்டகு நேமிகள் ஏழும் அளக்கர்
மண்டல மானவு மன்னுயிர் யாவுங்
கொண்டிடி னுங்குறை வின்றி நிரம்பா
தண்டம தென்ன அகன்ற வயிற்றார்.8 779 விழுமிய ப·றலை வெம்பணி யேனைக்
குழுவொடு போற்றினர் கொண்டுற லாற்றா
தழுதிட நாடிய தற்கயர் வார்போல்
கழல்கள் அரற்று கழற்றுணை கொண்டார்.9 780 இருபுயம் ஓர்முகம் எய்திய வானோன்
ஒருவனை வெல்ல ஒராயிர ரானேம்
பொருவகை சென்றிடல் புன்மைய தென்னா
வருபழி யுன்னி மனந்தளர் கின்றார்.10 781 மாகர வான்முன மாயையின் வந்தான்
ஆகையி னால்இவன் ஐதென வானிற்
போகுவ னால்இது பொய்யல வல்லே
ஏகுமின் ஏகுமின் என்றுசெல் கின்றார்.11 782 மீளிகை யாலெறி மேதகு வேர
மாளிகை கோபுர மண்டபம் வீழ்வ
காளிக ரன்னக ரங்கள்கொ டேற்றுத்
தூளிகள் செய்தனர் தூர்த்திடு கின்றார்.12 783 எய்யென மெய்யிடை எங்கும் வியர்ப்பச்
செய்யன கண்வழி செந்தழல் சிந்த
வெய்ய உயிர்ப்பெழ வேர்வுள மூள
ஒய்யென ஓடினர் உற்றிடு கின்றார்.13 784 நாகர் தமக்கொர் நமன்றனை யன்னோர்
ஆகிய ஆயிரர் ஆயிர மொய்ம்பர்
வேகம தாகி விழுத்தகு வீர
வாகுவை எய்தி மடங்கலின் ஆர்த்தா£¢.14 785 ஆர்த்திடும் ஓதை அகன்செவி செல்லத்
தார்த்தொகை தூங்கு தடம்புய வீரன்
பார்த்தனன் மூவெயில் பண்டெரி செய்த
தீர்த்தனெ னச்சிறி தேநகை செய்தான்.15 786 மேனிமிர் மந்தர வெற்பென நின்றே
வானள வோங்கு மராமரம் ஒன்றைத்
தேனினம் வான்றிசை சிந்தி யரற்ற
ஊன்முதிர் கைகொ டொசித்தனன் மன்னோ.16 787 அண்டம் இருண்டிட ஆதவ ரானோர்
மிண்டிய பேரொளி வீந்திட வீரன்
வண்டழை துன்று மராமரம் அங்கை
கொண்டது பன்முறை கோட்புறல் செய்தான்.17 788 வேறு
மாயிர மருப்புள மராமரம் இறுத்தே
தூயன்அம ராடல் முயல் தொன்னிலைமை நோக்கி
ஆயிரம் அடுத்தபுயர் ஆயிரரும் அங்கண்
மூயினர்கள் அண்ணலை முரட்படை சொரிந்தார்.18 789 தொடுத்தனர்கள் வார்கணைகள் தொட்டனர்கள் வைவேல்
எடுத்தபல தோமரம் எறிந்தனர்கள் ஆலம்
விடுத்தனர்கள் முத்தலை வியன்கழுமுள் உய்த்தார்
அடற்குலிசம் வீசினர்கள் ஆழிகள் துரந்தார்.19 790 இப்பரிசி னுள்ளபடை யாவுமுறை தூங்கு
மைப்புயல்க ளென்னவரை வின்றிவிரை வாக
ஒப்பரிய வீரன்மிசை உய்த்திடலும் அன்னோன்
துப்பொடு மரந்தனி சுழற்றிஅடல் உற்றான்.20 791 விட்டபடை யாவையும் வெறுந்துகள வாகப்
பட்டிட மரங்கொடு பராகமவை செய்ய
உட்டௌ¤வின் மானவர் ஒராயிரரும் வீரற்
கிட்டினர் வளைந்தனர் கிளர்ந்தமர் முயன்றார்.21 792 ஒட்டியம ராடிய ஒராயிரவர் தாமுங்
கெட்டிரிய மேருநிகர் கேழ்கிளர் புயத்தோன்
மட்டுநனை வார்சினை மரங்கொடு புடைத்தே
சட்டக மிறந்துபடு தன்மைபுரி குற்றான்.22 793 செக்கர்புரை குஞ்சிகெழு சென்னிகள் கிழிந்தார்
நெக்கனர் கபோலவகை நெற்றிபிள வுற்றார்
அக்கநிரை சிந்தினர் அலங்குகுழை யற்றார்
உக்கனர்கள் பல்லெயி றுடைந்தனர்கள் துண்டம்.23 794 வாய்நிரை பகிர்ந்தனர்கள் மாழைதிகழ் கண்ட
மானவு முரிந்தனர்கள் அற்றனர்கள் பொற்றோள்
ஊனமகல் அங்கைகள் ஒசிந்தனர் தசைந்தே
பீனமுறு மார்பினை பிளந்தனர் தளர்ந்தார்.24 795 உந்திகள் குடங்கரின் உடைந்துகுடர் யாவுஞ்
சிந்தினர் மருங்கெழில் சிதைந்தனர் புறங்கண்
முந்துதொடர் என்பொடு முரிந்தனர்கள் வாமஞ்
சந்துபொரு கின்றமுழந் தாளடிகள் அற்றார்.25 796 வீந்தனர்க ளோர்சிலவர் வீழ்ந்துமிதி பட்டுத்
தேய்ந்தனர்க ளோர்சிலர் செய்யகுடர் சிந்திச்
சாய்ந்தனர்க ளோர்சிலர் தங்குருதி ஆற்றுள்
தோய்ந்தனர்க ளோ£¢சிலர் துடித்தனர்கள் சில்லோர்.26 797 எறிந்திடு படைத்தொகுதி ஏகுமுனம் வீழ்ந்து
மறிந்தனர்க ளோர்சிலவர் மாய்ந்துகக னம்போய்ச்
செறிந்தனர்க ளோர்சிலர் சிதைந்துதலை போயும்
முறிந்தவுடல் கொண்டமர் முயன்றனர்கள் சில்லோர்.27 798 ஏரகலும் வீரர்தமி யாக்கையிது வண்ணஞ்
சேரவிறல் உற்றுடைய செவ்வியின் எழுந்த
சோரிநதி மாநகர் தொலைத்துவளன் வாரி
வாரிதி நிறைந்தவனி மீதினும் மடுத்த.28 799 வேறு
அறந்தெ ரிந்துணர் ஆண்டகை அகன்மரம் புடைப்பக்
குறைந்த சென்னிவான் திரிவன எயிற்றொடு குலவிச்
செறிந்த தேவரோ டமிர்தொளித் துண்டவர் சென்னி
நிறைந்தி டாமதித் துணைகவர்ந் துலவுதல் நேரும்.29 800 அடல்கொள் மொய்ம்பினன் மரம்புடைத் தலுஞ்சில அவுணர்
உடல்சி னப்பரி முகத்தவர் தலைதுமிந் துதிர
நெடிதும் வாய்வழி சிந்தவீழ்ந் தனர்நெடுங் கடலுள்
வடவை மாமுக மங்கிகான் றிடுவதே மான.30 801 வள்ளல் மாமரத் தண்டுகொண் டடித்தலும் வலியோர்
பிள்ளை மாமதி எயிற்றணி சிந்துவிண் பெயர்ந்தே
அள்ளல் வேலையின் முறைமுறை வீழ்வன அதன்கண்
துள்ளு மீன்கணம் உகண்டுவீழ் கின்றதோர் தொடர்பின்.31 802 வலிந்த வூழ்முறை யாவரே கடந்தவர் மரத்தாற்
பொலந்த யங்குபூண் மார்பினன் எற்றிடும் பொழுதிற்
கலந்து போர்செய்தார் ஓர்சிலர் வாளடு கரம்போய்த்
தொலைந்து ளார்செலும் நெறியின்வீழ்ந் தவர்சிரந் துணிப்ப.32 803 இனைய பற்பல நிகழந்திட இணையிலா ஒருவன்
தினையின் வேலையில் ஆயிரம் புயமுடைத் திறலோர்
அனைவர் தம்மையும் ப·றுணி படுந்திறன் அட்டுத்
தனிமை தன்னொடு நின்றனன் அமர்க்களந் தன்னில்.33
ஆகத் திருவிருத்தம் - 803
--------
17. வச்சிரவாகு வதைப் படலம் (804 - 904)
804 கூடி ஆரமர் இயற்றினார் தம்வலி குறைந்து
வீடி ஆவிபோய் விளிதலும் அன்னது விரைவின்
நேடி விண்ணிடை நணுகிய தூதுவர் நில்லா
தோடி யாளுடை அவுணர்கோன் முன்புசென் றுரைப்பார்.1 805 துன்றும் ஆயிர மொய்ம்புடை நின்படைத் தொகைஞர்
சென்று சில்லமர் புரிந்தனர் அவனது தெரியா
ஒன்றொர் பாதவம் பறித்தனன் புடைத்தலும் ஒருங்கே
பொன்றி வீழ்ந்தனர் புகுந்தவா றீதெனப் புகன்றார்.2 806 புகன்ற வேலையின் அவுணர்கோன் புரையிலோன் வன்மை
புகன்ற வேலையின் வடவையார் அழலெனப் பொங்கி
அகன்ற னன்பெரு மிதத்துடன் ஆணையுந் திறலும்
அகன்ற னன்பெருந் துயர்கொளீஇ யினையன அறைவான்.3 807 உமைய ளித்திடு சிறுமகன் தூதுவன் ஒருவன்
எமது முன்னம்வந் தவமதி செய்தனன் ஏகி
அமரில் யாரையும் அட்டுநின் றின்னமும் அகலான்
நமது கொற்றமும் நன்றுநன் றாலென நகைத்தான்.4 808 முச்ச கம்புகழ் அவுணர்கோன் முனிவினை முன்னி
யச்சே னக்கிளர்ந் தெழுந்துசென் றவனடி வணங்கி
மெய்ச் சிரங்கள் ஓரையிரு திறலுடை விறல்சேர்
வச்சி ரத்திரு மொய்ம்புடைக் காதலன் வகுப்பான்.5 809 நொய்ய தூதுவன் பொருட்டினால் இத்திறம் நுவறல்
ஐய கேட்கநிற் கியலுமே இறையிவண் அமா¢தி
மொய்யில் யான்சென்று மற்றவன் பெருமுரண் முருக்கிக்
கைய கப்படுத் துய்ப்பனால் அன்னது காண்டி.6 810 வேறு
என்ன லோடும் இறப்பெதிர் உற்றிடா
மன்னன் மைந்தனை நோக்கி மகிழ்வுறா
அன்ன தன்மையை ஆற்றுதி நீயெனப்
பன்னி யேகும் படிபணித் தானரோ.7 811 விடைபு ரிந்திட மெய்வழித் தாதைதன்
அடிவ ணங்கி யகன்றுமன் கோயிலிற்
புடையி ருந்தன போர்ப்படைச் சாலையின்
இடைபு குந்தனன் யாரும் வழுத்தவே.8 812 அட்டல் இன்றி அமர்தரு சாலிகை
இட்டு மார்பின் இறுக்கி வயத்தகு
பட்டி கைக்கலன் பாலத் துறுத்தியே
புட்டில் அங்குலி பூண்டு பொருக்கென.9 813 ஆணி கொண்ட அயிற்கணை பெய்தபொற்
தூணி கொண்டுபின் தும்பை மிலைச்சியே
நாணி கொண்டு நலந்தரு கார்முகம்
பாணி கொண்டு படைபிற ஏந்தியே.10 814 கொற்ற மாரமர்க் கோலங்கள் உள்ளன
முற்ற வேகொண்டு மூரிவில் வெஞ்சமர்
கற்ற காளை கதுமென நோக்கியே
சுற்று கம்மியர்க் கின்னன சொல்லுவான்.11 815 மிக்க நம்படை வௌ¢ளத்தி லோர் சில
தொக்க பூசல் தொழிலினை முற்யி
இக்க ணந்தரு வீர்இவண் என்றலுந்
தக்க தேயெனத் தாழ்ந்தவர் போயினார்.12 816 ஆங்கு நின்றிடும் ஏவலர் அப்பணி
தாங்கி யேகத் தகுவர்தங் கோமகன்
நீங்க லின்றுதன் நீழலின் வந்திடும்
பாங்கர் யாரையும் நோக்கிப் பகருவான்.13 817 குமர வேள்விடு கோற்றொழில் தூதனைச்
சமரில் வென்றொரு தாம்பில் தளைபுரீஇ
இமையொ டுங்குமுன் எந்தைமுன் உய்க்குவன்
அமைதிர் போருக் கனைவிரும் என்றனன்.14 818 பாலன் மற்றிவை பன்னலும் நன்கெனா
ஏலு கின்ற இளைஞரும் மள்ளரும்
மேலை வெஞ்சமர் செய்ய விரைந்துபோர்க்
கோல மெய்திக் குழீஇயினர் கோட்புற.15 819 தாறு கொண்டவன் தன்குறிப் பிற்செலும்
நூறு நூறு நொறில்பரி மான்பெறீஇ
வீறு பண்ணமை தேரொன்றின் வெய்தென
வேறி னான்மொய்ம் பிருபது கொண்டுளான்.16 820 தந்தி ரத்துத் தலைவர் தம் மைந்தரும்
மந்தி ரத்து மதிஞர்தம் மைந்தருஞ்
சுந்த ரத்துத் தொடர்பினில் சுற்றுறா
எந்தி ரப்பெருந் தேர்களில் ஏறினார்.17 821 ஆன வேலை அரசன் சுதன்விடப்
போன கம்மியர் போர்வினை கூறியே
யானை மேல்கொண் டிரும்பணை எற்றலுஞ்
சேனை தம்முட் சிலதிரண் டுற்றவே.18 822 ஒருங்கு தாம்பல ஓடலின் அன்னவை
பரங்கொ ளற்கரி தாகிப் படிமகள்
புரங்கி ழிந்திடு புண்கொண் டரற்றல்போல்
இரங்கும் ஓதைகொண் டேகுவ தேர்களே.19 823 கருவி வானங் கடலுண்டு செல்லுறும்
வரைக ளாமென வந்துதம் மேலுறீஇ
உருமி னத்தை உகுத்தொலி கேட்டலும்
வெருவி வீழ விரைவன வேழமே.20 824 கிட்டி நாடு நயனமுங் கேடுசெய்
தொட்ட லார்தம் உளமுஞ் சுழன்றிட
வெட்டு மாதிரத் தெல்லையுஞ் சாரிகை
வட்ட மாகி வருவன வாசியே.21 825 ஆடல் வேல்கதை ஆழி அலப்படை
பாடு சேர்ந்த பலகைஔ¢ வாள்சிலை
நீடு சூலம் நெடுமழு ஆதியாக்
கூடு பல்படை கொண்டிடு கையினார்.22 826 இடித்த சொல்லர் இமையவர் போர்பல
முடித்த மொய்ம்பர் முரணிய பல்படை
வடித்த கற்பினர் மால்வரை யானவை
படித்த லத்திற் படர்ந்தன்ன காட்சியார்.23 827 விசும்பின் மாலை மிலைச்சிய குஞ்சியர்
பசும்பொன் வீரமெய்ப் பட்டிகை நெற்றியர்
நிசும்பர் அன்னதொர் நேரலர் சோரியின்
அசும்ப றாத அகன்பில வாயினார்.24 828 தீம டங்கல் திறலினர் தென்புலக்
கோம டங்கலின் கொள்கையைர் தங்கிளை
தாம டங்கத் தறிபிளந் தார்த்தெழு
மாம டங்கல் தனைப்பொரும் வன்மையார்.25 829 ஏகும் வெஞ்சமா¢க் கென்றலும் பூண்பரீஇ
மாகம் அஞ்ச வளர்ந்தெழு தோளினார்
மோகம் இல்லவர் மொய்ம்பினின் மேலவ
ராகும் வீரர் அளப்பிலர் எய்தினார்.26 830 ஐந்து நூறெனும் வௌ¢ளம் அழுங்குதேர்
தந்தி யின்குழுத் தானும் அனையதே
உந்து மாக்கள ராயிரம் வௌ¢ளமாம்
பந்த மிக்க பதாதி இரட்டியே.27 831 இத்தொ கைப்படும் ஈரிரு தானையும்
மைத்தி ரைக்கடல் வாரியின் ஆர்ப்புறீஇப்
பத்தி ரட்டி படர்புயத் தண்ணலைத்
தத்த மிற்கலந் தொன்றித் தழீஇயின.28 832 துடிவ லம்புரி துந்துபி சச்சரி
கடிகொள் மொந்தை கரடிகை தண்ணுமை
இடிகொள் பேரி இரலைகள் ஆதியாம்
முடிவி லாவிய முற்று முழங்கிய.29 833 இற்ற எல்லையின் ஈரிரு தானையும்
நெற்றி யேகடை நீடய லிற்செல
மற்று ளார்களும் வந்திட வச்சிரப்
பொற்ற டம்புயன் பொள்ளென வேகினான்.30 834 வல்லி யக்கடு மான்பொரு மானவா¢
செல்லி யக்கமுஞ் செல்லினை மாறுகொள்
சொல்லி யக்கமுந் துண்ணெனத் தொக்கெழு
பல்லி யக்கடல் ஆர்ப்பும் பரந்தவே.31 835 ஊழி மால்படை ஒல்லென வேயெழப்
பூழி ஈண்டிவிண் பொள்ளென மூடிய
வேழ மால்வரை வீழ்தரு தானநீர்
ஆழி யென்ன அகன்புவி கொள்ளவே.32 836 திகந்தம் எட்டுந் திருநிழல் ஓச்சியே
உகந்த தேர்களின் ஒண்கொடி ஆடுவ
குகன்வி டுத்திடு கொற்றவன் ஆற்றல்கண்
டகன்சி ரங்கள் அசைப்பன போன்றவே.33 837 ஆகும் எல்லை அவுணர்மன் தேர்மிசைப்
பேய்கள் சூழ்ந்து பிணங்கி மலைந்தன
காகம் யாவுங் கழுகும்வெஞ் சேனமுங்
கூகை யோடு குழீஇயிரங் குற்றவே.34 838 மடிந்த வாயுடை வச்சிர மொய்ம்பினான்
பிடித்த கையிற் பெருஞ்சிலை வீழ்ந்தது
தொடுத்த வெந்நுறு தூணியும் இற்றதால்
துடித்த வால்இடக் கண்களுந் தோள்களும்.35 839 அண்ணல் மைந்தன தாழியந் தேர்மிசைக்
கண்ண கன்கொடி கையற வீழ்ந்தன
விண்ணின் ஏறு விசும்பின்றி ஆர்ப்பன
எண்ணில் தீக்குறி இவ்வகை யுற்றவே.36 840 உற்ற காலவை உள்ளுறக் கொள்கிலன்
செற்ற மேல்கொண்டு சென்னியோர் பத்துளான்
மற்றொர் தூணியும் வா£¢சிலை யுங்கொளாப்
பொற்ற டங்கை புறந்தனிற் சேர்த்தினான்.37 841 மொய்கொள் வச்சிர மொய்ம்பன்இத் தன்மையால்
வெய்ய தன்படை வௌ¢ளமொ டேகியே
செய்ய வேலுடைச் சேவகன் ஏவல்செய்
ஐயன் நின்ற அடுகளம் எய்தினான்.38 842 வண்டு லாந்தொடை வச்சிர வாகுதன்
தண்ட மோடு சமர்க்களஞ் சேர்தலும்
அண்டர் நாயகன் தூதுவன் அன்னவை
கண்டு நின்று கழறுதல் மேயினான்.39 843 வேறு
இந்திர ஞால வையத் திறைவனே அல்லன் மற்றை
மைந்தரில் ஒருவ னாகும் வருபவன் வருவான் றன்னை
முந்திய தானை யோடு முரணற முருக்கி வீட்டி
அந்திவான் புகுமுன் எந்தை அடிதொழப் போவன் என்றான்.40 844 எறிதிரை அளக்கர் என்ன ஈண்டுறும் அனிகம் யாவும்
முறைமுறை சாடி வந்த முதல்வனை முடித்து மாலை
உறுதல்முன் விசய மோடும் ஒய்யென மீளேன் என்னின்
அறுமுக ஐயன் தூதன் ஆவனோ அடிய னென்றான்.41 845 எண்டிசை புகழும் வீரன் இனையன விளம்பிச் செவ்வேள்
புண்டரீ கத்துப் பொற்றாள் புந்தியால் இறைஞ்சிப் போற்றி
மண்டமர் முயன்று நேமி மறிதர வரைகள் கீற
அண்டமுந் திசையும் வானுங் குலுங்கத்தோள் கொட்டி ஆர்த்தான்.42 846 ஆர்த்திடும் ஓதை கேளா அமர்குறித் தெழுதேர் மேலோர்
கார்த்திடு தந்தி மேலோ£¢ கவனமாப் புரவி மேலோர்
பேர்த்திடு நிலத்தின் மேலோர் பிறங்குசீ ரவுணர் யாரும்
வேர்த்தனர் தி£¤ந்து சிந்தை வெருவினர் விளம்பு கின்றார்.43 847 வாழிய உலகம் யாவும் மன்னுயிர்த் தொகையு மாய
ஊழியில் தனிநின் றா£¢க்கும் உருத்திரன் ஆர்ப்போ அன்றேல்
ஆழிகட் கரசன் ஆர்ப்போ அண்டங்கள் நெக்க ஆர்ப்போ
ஏழ்கட லுடைந்த ஆர்ப்போ இத்திறம் ஆர்ப்ப தென்றார்.44 848 செருவலி கொண்ட சீற்றச் செங்கணான் ஆர்க்கும் ஓதை
மருமலர்த் தொடைய லாக வச்சிர வாகு வென்போன்
இருபது செவியி னூடும் இரவியம் புழைகள் புக்க
உருமெனச் சேற லோடும் உளம்பனித் துரைக்கல் உற்றான்.45 849 ஈரெழு திறத்த வான உலகினுள் இன்று காறிப்
பேரொலி கேட்ட தின்றால் பிறந்ததித் துழனி யாதோ
தேருதி ரென்று பாங்கர் உழையரில் செப்பத் திண்டேர்ச்
சாரதி விசய னென்பான் தாழ்ந்திவை புகலல் உற்றான்.46 850 தெற்றென உணர்தி மான்தேர் செலுத்திய வலவ னென்றே
மற்றென துரையை எள்ளல் வல்லைமேற் காண்டி எந்தை
அற்றமில் படையி னோடும் அமர்செய வருதல் நாடி
ஒற்றென நின்றோன் போர்வேட் டார்த்திடும் ஒலியீ தென்றான்.47 851 தூதுவன் ஆர்ப்பி தென்று சொல்லுமுன் உருத்துக் கண்கள்
மீதெரி பொங்க நக்கு வெய்துயிர்த் துரப்பி யான்போய்
ஈதொரு கணத்தின் அன்னான் இகல்முரண் அழித்துப் பற்றித்
தாகைமுன் உய்ப்பன் காண்டி சரதம்இத் தன்மை யென்றான்.48 852 என்றிவை உரைத்துப் போதும் எல்லையின் முன்ன மாகச்
சென்றிடும் அவுண வீரர் சேனையை வகுத்துச் சீறித்
தன்றுணைத் தாளுந் தோளுந் தடக்கையும் அனிக மாக
நின்றதோர் வீரன் றன்னை நேமியிற் சுற்றி ஆர்த்தார்.49 853 கைதனில் இருந்த செம்பொற் கார்முகங் குனித்து வெங்கோல்
எய்தனர் முசலம் நாஞ்சில் எறிந்தனர் தண்டஞ் சூலம்
பெய்தனர் கணிச்சி விட்டார் பிண்டிபா லங்கள் தூர்த்தார்
நெய்தவழ் அயில்வேல் தொட்டார் நேமிகள் உருட்டு கின்றார்.50 854 வேறு
தஞ்செனக் கொடுமைசெய் தானவப் படைஞர்கள்
வெஞ்சினத் தன்மையால் விடுபடைக் கலமெலாங்
கஞ்சனைச் சிறைசெயுங் காரணன் தூதுவன்
செஞ்சுடர்ப் படிவமேற் செவ்வண்வந் துற்றவே.51 855 துய்யன்மேல் வ