தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு >  புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவாபுத்தகம் 7. நீதித்தலைவர்கள்புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14  - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 -  நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்

Holy Bible - Old Testament
Book 2. Exodus

விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 2 - விடுதலைப் பயணம்


Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006.   
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



அதிகாரம் 1.

1.    யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை:
2.    ரூபன், சிமியோன், லேவி, யூதா:
3.    இசக்கார், செபுலோன், பென்யமின்:
4.    தாண், நப்தலி, காத்து, ஆசேர்.
5.    யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர். யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார்.
6.    பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.
7.     இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்: ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்: இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.
8.     இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
9.     அவன் தன் குடிமக்களை நோக்கி, ””இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
10.     அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்: நம்மை எதிர்த்துப் போரிடுவர்: இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்”” என்று கூறினான்.
11.    எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
12.    ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்: பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.
13.    எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்:
14.    கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.
15.    எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:
16.    ””எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்””.
17.     ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
18.     எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்? என்று கேட்டான்.
19.     அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, ””எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்: ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்: மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது”” என்று காரணம் கூறினர்.
20.     இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.
21.    இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
22.    பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, ””பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்”” என்று அறிவித்தான்.

அதிகாரம் 2.



1.    இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.
2.    அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.
3.    இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.
4.    அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.
5.    அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது.
6.    அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். ””இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று”” என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,
7.     ””உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?”” என்று கேட்டாள்.
8.     பார்வோனின் மகள் அவளை நோக்கி, ””சரி. சென்று வா”” என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
9.     பார்வோனின் மகள் அவளை நோக்கி, ””இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்”” என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.
10.     குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன் என்று கூறி அவள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
11.    அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்: அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்: மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்:
12.    சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.
13.    அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்: குற்றவாளியை நோக்கி ””உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?”” என்று கேட்டார்.
14.    அதற்கு அவன், ””எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்? என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்: ””நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே”” என்று சொல்லிக் கொண்டார்!
15.    இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.
16.    அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர்.
17.     அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர். உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.
18.     அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், ””என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?”” என்றார்.
19.     அவர்கள், ””எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்: ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்”” என்றார்கள்.
20.     அவர் தம் புதல்வியரிடம், ””எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்”” என்று கூறினார்.
21.    அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.
22.    அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன் என்று கூறி மோசே அவனைக் கேர்சோம் என்று பெயரிட்டழைத்தார்.
23.    இந்த நீண்ட காலத்தில் எகிப்திய மன்னன் இறந்துவிட்டான். இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர். அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று.
24.    அவர்களது புலம்பலைக் கடவுள் கேட்டார். ஆபிரகாமுடனும், ஈசாக்குடனும், யாக்கோபுடனும் தாம் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25.    கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்களது நிலைமைகளையும் கடவுள் அறிந்து கொண்டார்.

அதிகாரம் 3.



1.    மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.
2.    அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.
3.    ””ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்”” என்று மோசே கூறிக்கொண்டார்.
4.    அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். மோசே, மோசே என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் ””இதோ நான்”” என்றார்.
5.    அவர், ””இங்கே அணுகி வராதே: உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு: ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்”” என்றார்.
6.    மேலும் அவர், ””உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே”” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.
7.     அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்: அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்: ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.
8.     எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு-அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு-அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.
9.     இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.
10.     எனவே இப்போதே போ: இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.
11.    மோசே கடவுளிடம், ””பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?”” என்றார்.
12.    அப்போது கடவுள், ””நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே”” என்றுரைத்தார்.
13.    மோசே கடவுளிடம், ””இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, அவர் பெயர் என்ன? என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?”” என்று கேட்டார்.
14.    கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ””நீ இஸ்ரயேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்”” என்றார்.
15.    கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””நீ இஸ்ரயேல் மக்களிடம், உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்: தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!
16.    போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.
17.     எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு-பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு-உங்களை நடத்திச் செல்வேன் என்று அறிவிப்பாய்.
18.     அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, ””எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.
19.     கைவன்மையை கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும்.
20.     எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தினைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.
21.    அப்போது இம்மக்களை எகிப்தியர் பார்வையில் விரும்பத்தக்கவர் ஆக்குவேன். நீங்கள் வெறுமையாய்ப் போகப்போவதே இல்லை.
22.    ஏனெனில் ஒவ்வொருத்தியும் தன் அண்டை வீட்டுக்காரியிடமும், தன் வீட்டிலுள்ள அன்னியப் பெண்ணிடமும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் மேலாடைகளையும் கேட்டு வாங்கிக் கொள்வாள்.
23.    அவற்றை உங்கள் புதல்வருக்கும், உங்கள் புதல்வியருக்கும் அணிவியுங்கள். இவ்வாறு நீங்கள் எகிப்தைச் சூறையாடிச் செல்வீர்கள்””.

அதிகாரம் 4.



1.    மோசே மறுமொழியாக, ””இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்: என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில் ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை என்று சொல்வார்கள்”” என்று கூறினார்.
2.    ஆண்டவர் அவரை நோக்கி, ””உன் கையில் இருப்பது என்ன?”” என்று கேட்டார். ஒரு கோல் என்றார் அவர்.
3.    அதைத்தரையில் விட்டெறி என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
4.    ஆண்டவர் அவரை நோக்கி, ””நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு”” என்றார். -அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.-
5.    ””இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே””.
6.    மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, ””உன் கையை உன் மடிக்குள் இடு”” என்றார். அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார். அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.
7.     பின்னர் ஆண்டவர், ””உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு”” என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார். மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.
8.     அப்போது ஆண்டவர், ””அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
9.     அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய். நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்”” என்றார்.
10.     மோசே ஆண்டவரிடம்: ””ஜயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்: நாவும் குழறும்”” என்றார்.
11.    ஆண்டவர் அவரிடம், ””மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!
12.    ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்: நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்”” என்றார்.
13.    அதற்கு அவர், ””வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!”” என்றுரைத்தார்.
14.    இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: ””லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.
15.    நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய். நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.
16.    உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.
17.     இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய். இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!””
18.     மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, ””எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்”” என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, ””சமாதானமாய்ப் போய்வா”” என்றார்.
19.     மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, ””எகிப்திற்குத் திரும்பிப் போ: ஏனெனில் உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்”” என்றுரைத்தார்.
20.     எனவே மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.
21.    ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு.
22.    நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேல் என் மகன்: என் தலைப்பிள்ளை.
23.    நான் உனக்குக் கூறிவிட்டேன்: என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன் என்று சொல்வாய்””.
24.    ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.
25.    அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, ””நீர் எனக்கு இரத்த மணமகன்”” என்றாள்.
26.    பின்பு ஆண்டவர் அவரைவிட்டு விலகினார். அப்போது அவள், விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன் என்றாள்.
27.     இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, ””மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் பேர்”” என்றார். அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.
28.     தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப்பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.
29.     மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.
30 ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார். அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார். மக்களும் நம்பினர்.
31.    ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர்.

அதிகாரம் 5.



1.    பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, ””பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்”” என்று அறிவித்தனர்.
2.    அதற்குப் பார்வோன், ””யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன்: இஸ்ரயேலரை நான் போகவிடவும் மாட்டேன்”” என்று கூறினான்.
3.    அதற்கு அவர்கள், ””எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார். பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும். இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ அவர் எங்களைத் தாக்கிவிடுவார்”” என்று கூறினர்.
4.    எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, ””மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்”” என்று கூறினான்.
5.    மேலும், பார்வோன், ””பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள்”” என்றான்.
6.    அதே நாளில், பார்வோன் மக்களிடம் அடிமைவேலை வாங்கும் அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளருக்கும் ஆணைவிடுத்து,
7.     ””செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்! அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.
8.     ஆயினும் இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை. அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது. ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள். இதனால்தான், நாங்கள் போகவேண்டும்: எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும் என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
9.     அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள். வெற்றுப் பேச்சுகளை நம்பாமல் அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்”” என்றான்.
10.     எனவே வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் சென்று அவர்களை நோக்கி, ””பார்வோன் கூறுவது இதுவே: நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.
11.    நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக் கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்”” என்று அறிவித்தனர்.
12.    எனவே வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.
13.    ””வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்”” என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.
14.    ””முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச் செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும் ஏன் செய்துமுடிக்கவில்லை?”” என்று கேட்டு, பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள் தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக நியமித்திருந்தவர்கள் அடித்தனர்.
15.    இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, ””ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?
16.    உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே செங்கல் அறுங்கள் என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்”” என்று கதறினர்.
17.     அதற்கு அவன், ””சாம்பேறிகள்: நீங்கள் சோம்பேறிகள்: அதனால்தான் நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
18.     எனவே இப்போதே வேலைக்குச் செல்லுங்கள். வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது. எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்”” என்று கூறினான்.
19.     அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது என்று சொல்லக் கேட்டபோது, தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.
20.     பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது, தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து அவர்களை நோக்கி,
21.    ””ஆண்டவர் உங்களைக் கவனித்துக் கொள்ளட்டும்! உங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்! ஏனெனில், பார்வோன் முன்னிலையிலும் அவனுடைய அலுவலர் முன்னிலையிலும் நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்! நம்மைக் கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்துவிட்டீர்கள்”” என்றனர்.
22.    அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, ””என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?
23.    உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை”” என்று கூறினார்.

அதிகாரம் 6.



1.    ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்: என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்: தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்”” என்றார்.
2.    கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
3.    ””நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் யாக்கோபுக்கும் ஆண்டவர் என்ற என்பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையெனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே!
4.    மேலும் அவர்கள் அன்னியராக அலைந்தபோது தங்கியிருந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களுடன் உடன்படிக்கை நிலைநாட்டியதும் நானே!
5.    மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்தி வைத்துள்ள இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு என் உடன்படிக்கையை நினைவுகூர்ந்துள்ளேன்.
6.    நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: நானே ஆண்டவர். எகிப்தியரின் பாரச் சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன். அவர்கள் உங்களை அடிமைப்படுத்துவதிலிருந்து விடுவிப்பேன். ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும் நான் உங்களுக்கு மீட்பளிப்பேன்.
7.     உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8.     ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் யாக்கோபுக்கும் நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்வேன். அதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன். நானே ஆண்டவர்!””
9.     இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும், மன ஏக்கத்தையும் வேலையின் கொடுமையையும் முன்னிட்டு அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை.
10.     ஆண்டவர் மோசேயை நோக்கி,
11.    ””எகிப்திய மன்னனாகிய பார்வோன் தன் நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிடும்படி நீ அவனிடம் போய்ச் சொல்”” என்றுரைத்தார்.
12.    மோசே ஆண்டவரிடம் பேசி, ””இஸ்ரயேல் மக்களே எனக்குச் செவிசாய்க்காதிருக்க, பார்வோன் எவ்வாறு எனக்குச் செவிசாய்க்கப் போகிறான்? நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்”” என்று சொன்னார்.
13.    ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
14.    அவர்களின் மூதாதையர் வழிவந்த குடும்பத் தலைவர்கள் இவர்களே: இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி. இவைகளே ரூபன் வழிவந்த குடும்பங்கள்.
15.    சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள்.
16.    தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்: கேர்சோன், கோகாத்து, மெராரி. லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.
17.     கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி. இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.
18.     கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள்.
19.     மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள்.
20.     அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள். அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.
21.    இட்சகாரின் புதல்வர்: கோராகு, நெபேகு, சிக்ரி.
22.    உசியேலின் புதல்வர்: மீசாவேல், எல்சாபான், சித்ரி.
23.    அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமான எலிசபாவை ஆரோன் மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு அவள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
24.    கோராகின் புதல்வர்: அசீர், எல்கானா, அபியசாபு. இவைகளே கோராகின் குடும்பங்கள்.
25.    ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள் ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான். அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள். தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே.
26.    தம்தம் அணிவகுப்பின்படி இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்யுங்கள் என்று ஆண்டவரிடம் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27.     இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்வதற்காக எகிப்திய மன்னனாகிய பார்வோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களும் மோசே, ஆரோன் ஆகிய இவர்களே!
28.     அக்காலத்தில் எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேயுடன் பேசியருளினார்.
29.     ஆண்டவர் மோசேயுடன் பேசி, ””நானே ஆண்டவர். நான் உன்னோடு பேசுவதையெல்லாம் எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு”” என்று அறிவித்தபோது,
30 மோசே ஆண்டவரிடம், ””பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன். பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?”” என்றார்.

அதிகாரம் 7.



1.    ஆண்டவர் மோசேயை நோக்கி, ””பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான்.
2.    நான் உனக்குக் கட்டளை இடுவதையெல்லாம் நீ எடுத்துச் சொல்வாய். பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களைப் போகவிடும்படி அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான்.
3.    நான் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்துவதோடு எகிப்து நாட்டில் என்னுடைய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் பெருகச் செய்வேன்.
4.    பார்வோன் உங்களுக்குச் செவிசாய்க்க மாட்டான். எனவே நான் எகிப்திற்கு எதிராகக் கை ஓங்குவேன். பெரும் தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றியபின் என் மக்களாகிய இஸ்ரயேல் என்னும் படைத்திரளை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்வேன்.
5.    எகிப்திற்கு எதிராகக் கை ஓங்கி அவர்கள் நடுவினின்று இஸ்ரயேல் மக்களை நான் வெளியேறச் செய்யும்போது நானே ஆண்டவர் என எகிப்தியர் அறிந்து கொள்வர்”” என்றார்.
6.    தங்களுக்கு ஆண்டவர் என்ன கட்டளையிட்டாரோ அதையே மோசேயும் ஆரோனும் செய்தனர்.
7.     பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மோசேக்கு வயது எண்பது: ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்று.
8.     ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி,
9.     ””அருஞ்செயல் ஒன்று காட்டி உங்களை மெய்ப்பியுங்கள்”” என்று பார்வோன் உங்களை நோக்கிக் கூறினால் நீ ஆரோனிடம், உன் கோலை எடுத்து, பார்வோன் முன்னிலையில் விட்டெறி. அது பாம்பாக மாறும் என்று சொல்”” என்றார்.
10.     மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்கச் செயல்பட்டனர். ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அதுபாம்பாக மாறியது.
11.    பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.
12.    அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின. ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.
13.    பார்வோனின் மனமோ கடினப்பட்டது. ஆண்டவர் முன்னுரைத்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
14.    ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது. மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான்.
15.    எனவே காலையில் நீ பார்வோனிடம் போ. அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான். அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்: பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.
16.    நீ அவனிடம் கூற வேண்டியது: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பிவைத்துள்ளார்: அவர் சொல்வது: பாலைநிலத்தில் எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு. நீயோ இதுவரை செவிசாய்க்கவில்லை.
17.     கையிலுள்ள கோலால் நானே நைல்நதி நீரை அடிப்பேன். அது இரத்தமாக மாறும்.
18.     நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுக்கும். எகிப்தியர் நைல்நதி நீரைக் குடிக்க முடியாமல் திணறுவர். இவற்றால் நானே ஆண்டவர் என நீ அறிந்துக்கொள்வாய். என்று ஆண்டவர் கூறுகிறார்”” என்று சொல்.
19.     மேலும் ஆண்டவர் மோசேயிடம், ””நீ ஆரோனை நோக்கி உனது கோலை எடு: எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு! அவை இரத்தமாக மாறும். ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும் கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும் என்று சொல்”” என்றார்.
20.     அவ்வாறே, ஆண்டவர் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் செய்தனர். ஆரோன் கோலை உயர்த்திப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் நைல்நதி நீரில் அடித்தார். நைல்நதி முழுவதும் இரத்தமாக மாறியது.
21.    நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுத்தது. எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று. எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.
22.    இது போலவே எகிப்திய மந்திரவாதிகளும் தம் வித்தைகளால் செய்து காட்டினர். எனவே பார்வோனின் மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்திருந்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
23.    பார்வோன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். அவன் மனம் இதையும் பொருட்படுத்தவில்லை.
24.    எகிப்தியர் எல்லோரும் நைல்நதிப் பகுதிகளில் குடிநீருக்காகத் தோண்டினர். ஏனென்றால், நைல்நதி நீரைப் பருக அவர்களால் முடியவில்லை.
25.    ஆண்டவர் நைல்நதியை அடித்து நாள்கள் ஏழு கடந்தன.

அதிகாரம் 8.



1.    ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது: ””நீ பார்வோனிடம் போய் அவனிடம், ஆண்டவர் கூறுகிறார்: எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு .
2.    அவர்களை அனுப்ப நீ மறுத்தால், இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன்.
3.    தவளைகள் நைல்நதியை நிரப்பி, பின்னர் உன் வீட்டிற்குள்ளும், உன் படுக்கை அறைக்குள்ளும், உன் படுக்கையிலும், உன் அலுவலர் உன் குடிமக்கள் வீட்டிலும், உன் அடுப்புகளிலும், மாவுபிசையும் தொட்டிகளிலும் ஏறிவந்துவிடும்.
4.    உன் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் அலுவலர் அனைவர் மேலும் தவளைகள் ஏறும் என்று சொல்.””
5.    மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீ ஆரோனிடம், கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய் என்று சொல்”” என்றார்.
6.    ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.
7.     மந்திரவாதிகளும் தங்கள் வித்தைகளால் இது போலவே செய்து எகிப்திய நிலத்தின்மேல் தவளைகள் ஏறிவரச் செய்தனர்.
8.     பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து, ””என்னிடமிருந்தும், என் குடிமக்களிடமிருந்தும் தவளைகளை அகற்றிவிடுமாறு ஆண்டவரை மன்றாடுங்கள். ஆண்டவருக்குப் பலியிடுமாறு நான் மக்களை அனுப்பிவிடுவேன்”” என்று கூறினான்.
9.     மோசே பார்வோனை நோக்கி, ””தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்”” என்று கூறினார்.
10.     அவன், ””நாளைக்கு”” என்றான். அதற்கு மோசே, ””எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யாரும் இல்லை என நீர் அறிந்து கொள்வதற்காக உம் சொற்படியே ஆகும்:
11.    உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும், உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும் தவளைகள் ஒழிந்துபோகும்: ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்”” என்றார்.
12.    மோசேயும், ஆரோனும் பார்வோனை விட்டகன்றனர். பின்பு, பார்வோனின் மேல் ஆண்டவர் வரவிட்டிருந்த தவளைகளைக் குறித்து மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
13.    ஆண்டவரும் மோசேயின் மன்றாட்டின்படியே செய்தருளினார். ஆக, வீடுகள், முற்றங்கள், வயல்கள் ஆகியவற்றில் தவளைகள் மடிந்து போயின.
14.    அவற்றைக் குவியல் குவியலாக திரட்டினர்: எனவே அந்நாடு நாற்றமெடுத்தது.
15.    தொல்லை ஓய்ந்தது என்று கண்ட பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். ஆண்டவர் சொன்னபடி அவன் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை.
16.    மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீ ஆரோனிடம், நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி! அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும் என்று சொல்”” என்றார்.
17.     அவ்வாறே அவர்களும் செய்தனர். கோல் ஏந்திய தம் கையை நீட்டி ஆரோன் நிலத்தின் புழுதியை அடிக்க, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொசுக்கள் தோன்றின. எகிப்து நாடெங்கும், நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறிற்று.
18.     கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும் தங்கள் வித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்: ஆனால், அது அவர்களால் இயலாமற் போயிற்று. கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன.
19.     மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, ””இது கடவுளின் கைவன்மையே”” என்றனர். ஆயினும் பார்வோனுடைய மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்தபடியே அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
20.     மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்து நில். அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான். அப்போது அவனை நோக்கிச் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு:
21.    என் மக்களை நீ போகவிடவில்லையென்றால், இதோ உன்மேலும், உன் அலுவலர் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் வீட்டின் மேலும், ஈக்கள் வரச் செய்வேன். எகிப்தியருடைய வீடுகளும், அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும்.
22.    அந்நாளில், என் மக்கள் தங்கியிருக்கும் கோசேன் நிலப்பகுதியை வேறுபடுத்திக் காட்டுவேன். அங்கு ஈக்கள் எவையுமே இரா. இதனால் இந்நாட்டில் நானே ஆண்டவர் என நீ அறிந்து கொள்வாய்.
23.    மேலும் என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும் ”” என்றார்.
24.    அவ்வாறே ஆண்டவரும் செய்து முடித்தார். ஈக்கள் பார்வோன் வீட்டிலும், அவனுடைய அலுவலர் வீட்டிலும், எகிப்துநாடெங்கும் திரளாய்ப் பெருகின. ஈக்களால் நாடே பாழாகிவிட்டது.
25.    பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, ””போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்குப் பலியிடுங்கள்”” என்றான்.
26.    அதற்கு மோசே, ””அது முறையல்ல: அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும். எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படிப் பலியிட்டால் அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?
27.     பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்”” என்றார்.
28.     அப்பொழுது பார்வோன், ””உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நீங்கள் பாலைநிலத்தில் பலியிட நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால், வெகுதூரம் சென்று விடாதீர்கள்: மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்”” என்றுரைத்தான்.
29.     மோசே மறுமொழியாக, ””நான் உம்மிடமிருந்தும் போய், பார்வோனிடமிருந்தும் அவன் அலுவலரிடமிருந்தும் அவன் குடிமக்களிடமிருந்தும் நாளைய தினமே ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என ஆண்டவரை நோக்கி மன்றாடுவேன். ஆனால் ஆண்டவருக்குப் பலியிடுமாறு மக்களை அனுப்பாமல் பார்வோன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம்”” என்று கூறினார்.
30 மோசே பார்வோனை விட்டு அகன்றார்: ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
31.    மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார். பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும் அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின. ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.
32.    இம்முறையும் பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். மக்களை அவன் போகவிடமாட்டேன்.

அதிகாரம் 9.



1.    மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””நீ பார்வோனிடம் சென்று அவனிடம் சொல்: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு வழிபாடு செலுத்துவதற்காக என் மக்களைப் போகவிடு!
2.    நீ அவர்களைப் போகவிடாமல் இன்னும் தடைசெய்தால்,
3.    நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.
4.    ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும், எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டுவார். எனவே இஸ்ரயேல் மக்களுக்குரியவை அனைத்திலும் எவையுமே மடிந்துபோகா.
5.    நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார் என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்.””
6.    அதன்படி எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன. இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை.
7.     பார்வோன் ஆளனுப்பி விசாரித்தான். இஸ்ரயேலரின் கால்நடைகளில் ஒன்றுகூடச் சாகவில்லை. ஆயினும் பார்வோனின் மனம் கடினப்பட்டது. மக்களை அவன் போகவிடவில்லை.
8.     மேலும் ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, ””அடுப்பிலிருந்து சாம்பலை உங்கள் கைகள் நிறைய வாரிக் கொள்ளுங்கள். பார்வோன் முன்னிலையில் மோசே அதனை வானத்தில் தூவட்டும்.
9.     எகிப்து நாடெங்கும் அது மெல்லிய தூசியாகப் பரவி மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொப்புளங்களாகி வெடித்துப் புண்ணாகும்”” என்றார்.
10.     அவர்களும் அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர். மோசே வானத்தில் அதனைத் தூவினார். மனிதர் மேலும் விலங்குகள்மேலும் அது வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறிற்று.
11.    கொப்புளம் தோன்றியதால் மந்திரவாதிகள் மோசேயின் முன் நிற்க இயலவில்லை. ஏனெனில், மந்திரவாதிகள் மேலும் எல்லா எகிப்தியர்மேலும் கொப்புளம் கண்டிருந்தது.
12.    ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.
13.    மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: அதிகாலையில் எழுந்து பார்வோன் முன்னிலையில் வந்துநின்று அவனை நோக்கிச் சொல்: எபிரேயரின் கடவுளான ஆண்டவர் சொல்வது இதுவே. எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு.
14.    இல்லையெனில் இம்முறை கொள்ளைநோய்களை எல்லாம் உன்மேலும் உன் அலுவலர்மேலும் உன் குடிமக்கள்மேலும் நானே ஏவி விடுவேன். இந்நாடெங்கும் எனக்கு நிகர் யாருமே இல்லை என்பதை இதனால் நீ அறிந்து கொள்வாய்.
15.    கையை ஓங்கி, உன்னையும் உன் குடிமக்களையும் கொள்ளை நோய்களால் இதற்குள் தாக்கியிருப்பேன். நீயும் இந்நாட்டிலிருந்து ஒழிந்து போயிருப்பாய்.
16.    எனினும், என் வல்லமையைக் காட்டவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.
17.     நீயோ, என் மக்களைப் போகவிடாத அளவுக்கு இன்னும் தலைதூக்கி நிற்கின்றாய்.
18.     எகிப்து நிறுவப்பட்டது தொடங்கி இன்றுவரை அங்கே இருந்திராத அளவுக்கு மிகக் கொடிய கல்மழையை அதில் நாளையதினம் இந்நேரத்தில் பெய்யச் செய்வேன்.
19.     எனவே, உன் கால்நடைகளையும் வயல் வெளியில் உனக்குரிய எல்லாவற்றையும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகச்செய்ய இப்போதே ஆளனுப்பிவிடு! வீட்டிற்குக் கொண்டு சேர்க்கப்படாமல் வயல்வெளியில் விடப்பட்ட மனிதர் அனைவர் மேலும் விலங்குகள் அனைத்தின் மேலும் கல்மழை பெய்ய, எல்லோரும் மடிவர்.
20.     பார்வோனின் அலுவலரில் ஆண்டவரின் வார்த்தையை மதித்தவர் தம் அடிமைகளையும், தம் கால்நடைகளையும் வீடுகளுக்குள் ஓட்டிவிட்டனர்.
21.    ஆண்டவர் வார்த்தையை மதிக்காதவர் தங்கள் அடிமைகளையும் கால்நடைகளையும் வயல்வெளியில் விட்டுவிட்டனர்.
22.    ஆண்டவர் மோசேயை நோக்கி, எகிப்து நாடெங்கும் எகிப்து நாட்டிலுள்ள மனிதர், விலங்கு, வயல்வெளியிலுள்ள பயிர்பச்சை இவற்றின் மேல் கல்மழை பொழியுமாறு உன்கையை வானோக்கி நீட்டு என்றார்.
23.    மோசே தம்கோலை வானோக்கி நீட்டவே, ஆண்டவர் இடி முழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார். நிலத்தில் நெருப்பு பாய்ந்து வந்தது. எகிப்து நாடெங்கும் கல்மழை பெய்வித்தார் ஆண்டவர்.
24.    கல்மழை பெய்தது. ஒரு நாடாக எகிப்து உருவான காலந்தொடங்கி அந்நாள்வரை அங்கு இருந்திராத அளவு மிகக் கடுமையான கல்மழை பெய்ய அதனிடையே மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது.
25.    எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை வயல்வெளியில் இருந்த அனைத்தையும் கல்மழை தாக்கியது: மேலும் வயல்வெளியில் பயிர்பச்சை யாவற்றையும் பாழ்படுத்தியது: வயல்வெளி மரங்கள் அனைத்தையும் முறித்தெறிந்தது.
26.    இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.
27.     பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டான். அவன் அவர்களை நோக்கி, ””நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர்.
28.     எனவே ஆண்டவரிடம் மன்றாடுங்கள். இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்: நான் உங்களைப் போக விடுவேன். இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்”” என்றான்.
29.     மோசே அவனை நோக்கி, ””நாளைக்கு வெளியே போனபின், நான் என் கைகளை ஆண்டவரை நோக்கி எழுப்புவேன். இடிமுழக்கங்கள் ஓய்ந்து போகும். கல்மழையும் நின்றுவிடும். இதனால் இந்நாடு ஆண்டவருடையது என்பதை நீர் அறிந்து கொள்வீர்.
30 ஆனால் உம்மையும் உம் அலுவலரையும் பொறுத்தமட்டில், இன்னும் நீங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அஞ்சிநடப்பதாகவே இல்லை என்பது எனக்குத் தெரியும்”” என்றார்.
31.    அப்போது சணல் பயிரும், வாற்கோதுமைப் பயிரும் அடிபட்டுப் போயின. வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது. சணல் பூத்து இருந்தது.
32.    ஆனால் கோதுமையும், மாக்கோதுமையும் அடிபட்டுப் போகவில்லை: ஏனெனில் அவை பின்னர் கதிர்விடுவன.
33.    மோசே பார்வோனை விட்டகன்று நகருக்கு வெளியே வந்தார். தம் கைகளை ஆண்டவர்பால் நீட்டினார். உடனே இடிமுழக்கங்களும் கல்மழையும் ஓய்ந்தன. நாட்டில் மழை பெய்வதும் நின்றது.
34.    மழையும் கல்மழையும் இடிமுழக்கங்களும் ஓய்ந்து போனதைக் கண்டான் பார்வோன். ஆயினும் அவன் மேலும் தொடர்ந்து பாவம் செய்தான்: தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். அவனைப் போலவே அவனது அலுவலரும் நடந்து கொண்டனர்.
35.    பார்வோனின் மனம் இறுகிவிட்டதால், மோசே வழியாய் ஆண்டவர் அறிவித்தபடியே அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

அதிகாரம் 10.



1.    மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீ பார்வோனிடம் போ. நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும் கடினப்படுத்தியதன் நோக்கம்,
2.    என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்”” என்றார்.
3.    மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்று அவனை நோக்கி, ””எபிரேயரின் கடவுளான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எவ்வளவு காலம் நீ எனக்குப் பணிய மறுப்பாய்? எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு.
4.    ஏனெனில், நீ என் மக்களை அனுப்பிவிட மறுத்தால்,
5.    நாளைய தினமே உன் எல்லைகளுக்குள் வெட்டுக்கிளிகள் வரச்செய்வேன். யாருமே தரையைப் பார்க்கமுடியாத அளவுக்கு அவை நாட்டை நிரப்பிவிடும். கல்மழைக்குத் தப்பி உங்களுக்கென எஞ்சி நிற்பதை அவை தின்று தீர்க்கும். வயல்வெளியில், தளிர்விடும் உங்கள் மரங்கள் அனைத்தையும் அவை தின்றழிக்கும்.
6.    வீடுகளும், உன் அலுவலர் அனைவரின் வீடுகளும், எகிப்தியர் அனைவரின் வீடுகளும் அவற்றால் நிரம்பும். இது, உன் தந்தையரும் உன் தந்தையரின் தந்தையரும் இந்நாட்டில் வாழத் தொடங்கிய நாள்முதல் இன்று வரை கண்டிராத ஒன்றாகும்”” என்றார். பின்னர் மோசே பார்வோனை விட்டகன்றார்.
7.     பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி, ””எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ? தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும். எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?”” என்றனர்.
8.     மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர். அவன் அவர்களை நோக்கி, ””போங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால், போகவேண்டியவர் யார் யார்?”” என்று கேட்டான்.
9.     அதற்கு மோசே, ””எங்களிடையேயுள்ள இளைஞரோடும் முதியவரோடும் நாங்கள் போவோம். எங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும், எங்கள் ஆட்டுமந்தையோடும் எங்கள் மாட்டு மந்தையோடும் நாங்கள் போவோம். ஏனெனில் இது எங்களுக்கு ஆண்டவரின் திருவிழா ஆகும்”” என்றார்.
10.     பார்வோன் அவர்களை நோக்கி, ””உங்களை உங்கள் குழந்தைகளோடு நான் அனுப்பி வைத்தால், ஆண்டவர் தாம் உங்களைக் காக்க வேண்டும்! பாருங்கள், உங்கள்முன் உள்ளது தீமையே!
11.    இதெல்லாம் வேண்டாம். உங்களில் ஆண்கள் மட்டும் போய் ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். நீங்கள் விரும்பியதும் இதுவே!”” என்றான். இதன் பின் பார்வோன் அவர்களைத் தன் முன்னிலையிலிருந்து துரத்திவிட்டான்.
12.    ஆண்டவர் மோசேயை நோக்கி, ””கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப் பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக எகிப்து நாட்டின் மேல் உன்கையை நீட்டு”” என்றார்.
13.    மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கோலை நீட்டவே, ஆண்டவரும் அன்றைய பகல் இரவு முழுவதும் நாட்டில் கீழ்க்காற்று வீசச்செய்தார். காலையானபோது கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.
14.    மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின. இதுபோன்று அதற்கு முன்போ பின்போ இருந்ததில்லை.
15.    அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருண்டு போயிற்று. கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும், மரத்தின் பழங்கள் அனைத்தையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடெங்குமே மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும் பச்சையாக எதுவுமே விட்டுவைக்கப்படவில்லை.
16.    பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து அவர்களை நோக்கி, ””உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் தவறு செய்து விட்டேன்.
17.     இந்த ஒருமுறையும் என்பிழையைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்”” என்றான்.
18.     மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.
19.     அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில் வீசியெறிந்தது. வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.
20.     ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார். அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
21.    மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், ””எகிப்து நாட்டின்மேல் இருள் ஏற்படவும் இருளில் அவர்கள் தடுமாறவும் உன் கையை வானோக்கி நீட்டு”” என்றார்.
22.    மோசே வானத்தை நோக்கித் தம் கையை நீட்டினார். மூன்று நாள்களாக எகிப்து நாட்டைக் காரிருள் கவ்வியிருந்தது.
23.    மூன்று நாள்களாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. தான் அமர்ந்த இடத்திலிருந்து எவனும் எழும்பவும் இல்லை. மாறாக, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் உறைவிடங்களில் வெளிச்சம் இருந்தது.
24.    பார்வோன் மோசேயை வரவழைத்து, ””நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள். உங்கள் ஆட்டுமந்தையையும் மாட்டு மந்தையையும் மட்டும் விட்டுச் செல்லுங்கள். உங்களுடன் உங்கள் குழந்தைகளும்கூடப் போகலாம்”” என்று சொன்னான்.
25.    அதற்கு மோசே, ””எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் செலுத்துவதற்கான பலிகளையும் எரிபலிகளையும் எங்கள் கையில் விட்டுவிடும்.
26.    எங்கள் கால்நடைகள் எங்களோடு வரவேண்டும்: ஒன்றுகூட இங்கே தங்கலாகது. எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செலுத்தத் தேவையானதை நாங்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்வோம். ஆண்டவருக்கு எப்படி வழிபாடு செலுத்துவோம் என்று நாங்கள் அங்குச் செல்லும்வரை எங்களுக்கே தெரியாது”” என்றார்.
27.     ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப் போகச் செய்ததால், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.
28.     பார்வோன் மோசேயை நோக்கி, ””என்னிடமிருந்து போய்விடு. இனிமேல் நீ என் முகத்தில் விழிக்காதபடி பார்த்துக்கொள். ஏனெனில், என் முகத்தில் விழிக்கும் நாளில் நீ சாவாய்”” என்றான்.
29.     அதற்கு மோசே, ””நீர் கூறியதற்கேற்ப நான் இனிமேல் உம் முகத்தில் விழிக்கப்போவதில்லை”” என்றார்.

அதிகாரம் 11.



1.    மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””பார்வோன் மேலும் எகிப்தின்மேலும் இன்னும் ஒரு கொள்ளை நோய் வரச்செய்வேன். அவன் உங்களை முற்றிலும் போகவிடுவதோடு இங்கிருந்து உங்களைத் துரத்தி விரட்டிவிடுவான்.
2.    எனவே மக்கள் கேட்கும்படி அறிவியுங்கள். ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவனிடமிருந்தும் ஒவ்வொருத