பாயிரம்
பூமிசை நடந்த
வாமனை வாழ்த்தி வடமலைச் சென்னி
ஈண்டிய கடவுளர் வேண்டலிற் போந்து
குடங்கையின் அலைகடல் அடக்கி ஈண்டிய
தென்மலை இருந்த இருந்தவன் இயற்றமிழ்
கெழீய அகப்பொருள் தழீய நோக்கி
வழிகொடுத்து நிறீஇ வகுத்துப் புலப்படுத்தாங்கு
இகப்பில் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி
செந்தமிழ் நாட்டு மைந்தன் குரிசில்
பாற்கடல் பலபுகழ் பரப்பிய
நாற்கவிராச நம்பி என்பவனே
[பழம் பாயிரம்]
பூமலி நாவன் மாமலைச் சென்னி
ஈண்டிய இமையோர் வேண்டலின் போந்து
குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த்து
அலைகடல் அடக்கி மலையத்து இருந்த
இருந்தவன் தன்பால் இயல் தமிழ் உணர்ந்த
புலவர் பன்னிருவருள் தலைவனாகிய
தொல்காப்பியன் அருள் ஒல்காப் பெரும்பொருள்
அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ
இகப்பரும் சான்றோர் இலக்கிய நோக்கித்
தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்கு
அகப்பொருள் விளக்கம் என்று அதற்கு ஒரு நாமம்
புலப்படுத்தி இருள் அறப் பெருள் விரித்து எழுதினன்
மாந்தரும் தேவரும் வாழ்த்த முக்குடைக்கீழ்
ஏந்தெழில் அரிமான் ஏந்து பொன்அணைமிசை
மதி மூன்று கவிப்ப உதய மால்வரைக்
கதிர் ஒன்று இருந்தெனக் காண் தக இருந்து
தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய
உத்தமன் புளிங்குடி உய்யவந்தான் எனும்
முத்தமிழ் ஆசான் மைந்தன் இத்தலத்து
இருபெரும் கலைக்கும் ஒருபெரும் குரிசில்
பாற்கடல் புகழ் பரப்பிய
நாற்கவிராச நம்பி என்பவனே
[சிறப்புப் பாயிரம்]
நூல்
1 அகத்திணை இயல்
1.1 இதன் வகை
மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
பெருந்திணை என எழு பெற்றித்து ஆகும் 1
1.2 இதன் திறன்
அதுவே
பு¨¨ந்துரை உலகியல் எனும் திறன் இரண்டினும்
தொல் இயல் வழாமல் சொல்லப் படுமே 2
1.3 கைக்கிளை இன்னது
அவற்றுட்
கைக்கிளை உடையது ஒருதலைக் காமம் 3
1.4 ஐந்திணை இன்னது
ஐந்திணை உடையது அன்புடைக் காமம் 4
1.5 பெருந்திணை இன்னது
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் 5
1.6 ஐந்திணை வகை
குறிஞ்சி பாலை முல்லை மருதம்
நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே 6
1.7 ஐந்திணைக்கு உரிய பொருள் வகை
அவைதாம்
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எனமுறை
நுதற்பொருள் மூன்றினும் நுவலப் படுமே 7
1.8 முதற்பொருள் வகை
நிலமும் பொழுதும் என முதல் இருவகைத்தே 8
1.9 நிலத்தின் வகை
வரையே சுரமே புறவே பழனம்
திரையே அவைஅவை சேர்தரும் இடனே
என ஈர் ஐவகைத்தனை இயல் நிலமே 9
1.10 பொழுதின் வகை
பெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா
இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே 10
1.11 பெரும்பொழுதின் வகை
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர் இளவேனில் வேனில் என்றாங்கு
இருமூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே 11
1.12 சிறுபொழுதின் வகை
மாலை யாமம் வைகறை எற்படு
காலை வெங்கதிர் காயு நண்பகல் எனக்
கைவகைச் சிறுபொழுது ஐவகைத்து ஆகும் 12
1.13 குறிஞ்சியில் பெரும்பொழுது சிறுபொழுது
கூதிர் யாமம் முன்பனி என்றிவை
ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும் 13
1.14 பாலையில் பெரும்பொழுது சிறுபொழுது
வேனில் நண்பகல் பின்பனி என்று இவை
பான்மையின் உரிய பாலைதனக்கே 14
1.15 முல்லையில் பெரும்பொழுது சிறுபொழுது
மல்கு கார் மாலை முல்லைக்கு உரிய 15
1.16 மருதத்தில் சிறுபொழுது
இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே 16
1.17 நெய்தலில் சிறுபொழுது
வெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே 17
1.18 மருதத்தில் நெய்தலில் பெரும்பொழுது
மருதம் நெய்தல் என்றிவை இரண்டிற்கும்
உரிய பெரும்பொழுது இருமூன்றும்மே 18
1.19 கருப்பொருள் வகை
ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு
ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண்
தொழில் எனக் கருவி ஈர் எழு வகைத்து ஆகும் 19
1.20 குறிஞ்சியின் கருப்பொருள் நிரல்
விறல்சேய் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளி மயில் மறப்புலி குடாஅடி
கறைஅடி சீயம் சிறுகுடி அருவி
நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்தள்
ஆர் அம்தேக்கு அகில் அசோகம் நாகம்
வேரல் ஐவனம் தோரை ஏனல்
கறங்கிசை தொண்டகம் குறிஞ்சியாழ் குறிஞ்சி
வெறிகொள் ஐவனம் வித்தல் செறிகுரல்
பைந்தினை காத்தல் செந்தேன் அழித்தல்
செங்கிழங்கு அகழ்தல் முழங்கு வீழ் அருவியொடு
கொழுஞ்சுனை ஆடல் குறிஞ்சிக் கருப் பொருளே 20
1.21 பாலையின் கருப்பொருள் நிரல்
கன்னி விடலை காளை மீளி
இன்நகை எயிற்றி எயினர் எயிற்றியர்
மறவர் மறத்தியர் புறவு பருந்து எருவை
கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு
குழி அறும்கூவல் குராஅ மராஅ
உழிஞ்சில் பாலை ஓமை இருப்பை
வழங்கு கதிக்கொண்டன செழும்பதி கவர்ந்தன
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகல் சூறை ஆடல் பாலைக் கருப் பொருளே 21
1.22 முல்லையின் கருப்பொருள் நிரல்
நெடுமால் குறும்பொறை நாடன் தோன்றல்
வடுவில் கற்பின் மனைவி கிழத்தி
இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர்
கான வாரணம் மான் முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை
நிறங்கிளர் தோன்றி பிறங்குஅலர்ப் பிடவம்
கொன்றை காயா மன்றலம் குருந்தம்
தாற்று கதிர் வரகொடு சாமை முதிரை
ஏற்றுப்பறை முல்லை யாழ் சாதாரி
சாமை வரகு தரமுடன் வித்தல்
அவைகளை கட்டல் அரிதல் கடாவிடல்
செவிகவர் கொன்றைத் தீங்குழல் ஊதல்
மூஇனம் மேய்த்தல் சேஇனம் தழுவல்
குழுமிய குரவையொடு கான்யாறு என்று இவை
முழுதுடல் ஆடல் முல்லைக் கருப் பொருளே 22
1.23 மருதத்தின் கருப்பொருள் நிரல்
இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்
கெழுதகு கற்பின் கிழத்தி மனைவி
உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர்
மழலை வண்டு ஆன மகன்றில் நாரை
அன்னம் போதா நன்னிறக் கம்புள்
குருகு தாரா எருமை நீர்நாய்
பெருகிய சிறப்பின் பேரூர் முதூர்
யாறு மனைக்கிணறு இலஞ்சி தாமரை
நாறுஇதழ் கழுநீர் நறுமலர்க் குவளை
காஞ்சி வஞ்சி பூஞ்சினை மருதம்
செந்நெல் வெண்ணெல் அந்நெல் அரிகிணை
மன்றன் முழவம் மருதயாழ் மருதம்
மன்றணி விழாக்கோள் வயல் களைகட்டல்
அரிதல் கடாவிடல் அகன்குளம் குடைதல்
வருபுனல் ஆடல் மருதக் கருப்பொருளே 23
1.24 நெய்தலின் கருப்பொருள் நிரல்
வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன்
பரும அல்குல் பரத்தி நுளைச்சி
நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர்
அளவர் அளத்தியர் அலைகடல் காக்கை
சுறவம் பாக்கம் பெறல்அரும் பட்டினம்
உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டகம் அடம்பு
கண்டல் புன்னை வண்டுஇமிர் ஞாழல்
புலவு மீன் உப்பு விலைகளில் பெற்றன
நளிமீன் கோட்பறை நாவாய் பம்பை
விளரியாழ் செவ்வழி மீன் உப்புப் படுத்தல்
உணங்குஅவை விற்றல் மீன் உணக்கல் புள் ஓப்பல்
நெடுங்கடல் ஆடல் நெய்தல் கருப்பொருளே 24
1.25 உரிப்பொருள் வகை
புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும்
இரங்கலும் இவற்றின் நிமித்தமும் எனஆங்கு
எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே 25
1.26 கைக்கோளின் வகை
அளவில் இன்பத்து ஐந்திணை மருங்கில்
களவு கற்பு என இரு கைக்கோள் வழங்கும் 26
1.27 களவுப் புனர்ச்சி வகை
இயற்கைப் புணர்ச்சி இடம்தலைப்பாடு
பாங்கற் கூட்டம் பாங்கியிற் கூட்டம் என்று
உணர்த்திய களவில் புணர்ச்சி நால் வகைத்தே 27
1.28 கைக்கிளை இயலும் காலம்
மெய்க்கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சிமுன்
கைக்கிளை நிகழ்தல் கடன் என மொழிப 28
1.29 கைக்கிளை இ·தெனல்
அதுவே
காமம் சான்ற இளமையோள் வயில்
குறிப்பறிகாறும் குறுகாது நின்று
குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும் 29
1.30 கைக்கிளை ஆற்றும் தலைமக்கள்
மறையோர் மன்னவர் வணிகர் சூத்திரர் எனும்
இறையோர் தத்தமக்கு எய்தும் மற்று அதுவே 30
1.31 கைக்கிளையில் மற்றோர் வகை
அதுவே
மொழிந்தோர் நால்வரும் ஒழிந்த ஐந்நிலத்துறை
இழிந்தோர் தம்முள் உயர்ந்தோரும் எயதுப 31
1.32 இயற்கைப் புணர்ச்சி இ·தெனல்
தெய்வம் தன்னின் எய்தவும் கிழத்தியின்
எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி 32
1.33 இயற்கைப் புணர்ச்சியில் சிறப்பு
இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி
முயற்சி இன்றி முடிவது ஆகும் 33
1.34 களவினுள் புணர்ச்சி வகை
உள்ளப் புணர்ச்சியும் மெய்உறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்கு உரிய 34
1.35 உள்ளப் புணர்ச்சி நிகழ்வு களம்
பொருவிறந்தோற்கு பெருமையும் உரனும்
நல்நுதல் கச்சமும் நாணும் மடனும்
மன்னிய குலங்கள் ஆதலின் முன்னம்
உள்ளப் புணர்ச்சி உரியது ஆகும் 35
1.36 மெய்உறு புணர்ச்சி நிகழ்வு களம்
காட்சி முதலாச் சாக்காடு ஈறாக்
காட்டிய பத்தும் கைவரும் எனினே
மெய்உறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே 36
1.37 களவுப் புணர்ச்சி நிகழ்வு களம்
பகற்குறி இரவுக்குறி எனும் பான்மைய
புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழ் இடனே 37
1.38 பகல் இரவுக்குறி ஈதெனல்
இல்வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி
இல்வரை இகவா இயல்பிற்று ஆகும் 38
1.39 களவில் பிரிவு வகை
ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்வயில் பிரிதல் என்று இருவகைத்து ஆகும்
நிறைதரு காதல் மறையினிற் பிரிவே 39
1.40 ஒருவழித் தணத்தலின் இயல்
அவற்றுள்
ஒருவழிதணத்தற்குப் பருவம் கூறார் 40
1.41 வரைவிடைவைத்துப் பொருள்வியின் பிரிவின் இயல்
வரைவிடைவைத்துப் பொருள்வியின் பிரிவோர்
இருதுவின் கண் உடைத்து என்மனார் புலவர் 41
1.42 வரைவு நிகழ் களம்
களவு வெளிப்படா முன்னும் பின்னும்
விளையு நெறித்தென விளம்பினர் வரைவே 42
1.43 களவு அறியப்படுமுன் வரைவிற்கு களம்
நான்கு வகைப் புணர்வினும் தான்றெருண்டு வரைதலும்
களவு வெளிப்படா முன் வரைதல் ஆகும் 43
1.44 களவு அறியப்பட்ட பின் வரைவிற்கு இயல்
உடன் போய் வரைதலும் மீண்டு வரைதலும்
உடன் போக்கிடை ஈடுற்று வரைதலும்
களவு வெளிப்பட்ட பின் வரைதல் ஆகும் 44
1,45 உடன்போய் வரைதல்
அவற்றுள்
உடன்போய் வரைதல் ஒருவகைத்தாகும் 45
1.46 மீண்டு வரைதல்
அவண்மனை வரைதலும் தன்மனை வரைதலும்
என மீண்டு வரைதல் இருவகைத் தாகும் 46
1.47 அறத்தொடு நிலை களம்
ஆற்றுற அஞ்சினும் அவன் வரைவு மறுப்பினும்
வேற்று வரைவு நேரினும் காப்புக்கை மிகினும்
ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே 47
1.48 அறத்தொடு நிற்றலின் நெறியும் உரியாரும்
தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும்
பாங்கி செவிலக்கு அறத்தொடு நிற்கும்
செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும்
நற்றாய் தந்தை தன்னையார்க்கு அறத்தொடு
நிற்கும் என்ப நெறி உணர்ந்தோரே 48
1.49 தலைவி அறத்தொடு நிற்கும் களம்
ஒருபுணர் ஒழிந்தவற்று ஒருவழி தணப்பவும்
வரைவிடைவைத்துப் பொருள் வயிற் பிரியவும்
இறைவனைச் செவிலி குறிவயில் காணவும்
மனவயிற் செறிப்பவும் வருத்தம் கூறின்
வினைவயிற் கண்ணும் வினவாக் கண்ணும்
அனநடைக்கிழத்தி அறத்தொடு நிற்கும் 49
1.50 பாங்கி அறத்தொடு நிற்கும் களம்
முன்னிலைப் புறமொழி முன்னிலை மொழிகளில்
சின்மொழிப் பாங்கி செவிலிக்கு உணர்த்தும் 50
1.51 செவிலி அறத்தொடு நிற்கும் களம்
செவிலி நற்றாய்க்குக் கவலையின்றி உணர்த்தும் 51
1.52 நற்றாய் அறத்தொடு நிற்கும் களம்
நற்றாய் அறத்தொடு நிற்குங் காலைக்
குரவனும் தன்னையும் குறிப்பின் உணர்ப 52
1.53 அறத்தொடு நிற்போர் வினா எழு களம்
பாங்கி தலைவியை வினவும் செவிலி
பாங்கியை வினவும் பாங்கி தன்னையும்
நற்றாய் தானும் வினவும் செவிலியில்
பொன்தொடி கிழத்தியை உற்று நோக்கின் 53
1.54 உடன்போக்குக் களத்து அறத்தொடு நிற்போர்
ஆங்குடன் போய்உழி அறத்தொடு நிற்ப
பாங்கியும் செவிலியும் பயந்த தாயும் 54
1.55 கற்பின் வகை
களவின் வந்த கற்பும் பொற்புஅமை
களவின் வழிவாராக் கற்பும் என்றாங்கு
முற்படக் கிளந்த கற்பு இருவகைத்தே 55
1.56 கற்பினுள் புணர்ச்சி வகை
குரவரில் புணர்ச்சி வாயிலில் கூட்டம் என்று
இருவகைத்து ஆகும் கற்பின் புணர்ச்சி 56
1.57 களவுவழி கற்புப் புணர்ச்சியில் ஓர் சிறப்பு
அவற்றுள்
களவின் வழிவந்த கற்பின் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய வரைதலும் உண்மையான 57
1.58 கற்பில் தலைவன்கண் நிகழ்வு
மறையில் புணர்ச்சியும் மன்றப் புணர்ச்சியும்
இறைவற்கு எய்தல் உண்டு இருவகை கற்பினும் 58
1.59 அத்தலைவன் கண் நிகழ்வுக்கு உரியர்
காதல் பரத்தையர் காமக் கிழத்தியர்
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தி என்று
அன்னவர் உரியர் அவை இரண்டிற்கும் 59
1.60 இவருள் களவில் புணர்ச்சிக்கு உரியோர்
அவருள்
காதல் பரத்தையர் களவிற்கு உரியர் 60
1.61 மன்றப் புணர்ச்சிக்கு உரியோர்
ஒழிந்தோர் மன்றப் புணர்ச்சிக்கு உரியர் 61
1.62 கற்பில் பிரிவு
பரத்தையின் பிரிதல் ஓதற்குப் படர்தல்
அருள்தகு காவலொடு துதில் ககறல்
உதவிக்கு ஏகல் நிதியில் கிகத்தல் என்று
உரைபெறு கற்பில் பிரிவு அறுவகைத்தே 62
1.63 பரத்தையின் பிரிதல்
அயன்மனைப் பிரிவயற் சேரியின் அகற்சி
புறநகர்ப் போக்கு இவை புரவலர்க்கு உரிய
பரத்தையின் பிரியும் பருவத்தான 63
1.64 அயன்மனைப்பிரிவு
கெழீஇய காமக் கிழத்தியர் பொரட்டாத்
தழீஇய அயல்மனைத் தலைவன் பிரியும் 64
1.65 அயல்சேரிப்பிரிவு
பின்னர் வரைந்த பெதும்பையும் பரத்தையும்
இன்னியல் விழவும் ஏதுவாக
அவன் அயல் சேரியின் அகலும் என்ப 65
1.66 புறநகர் போக்கு
விருந்தியல் பரத்தையை பெருந்தேர் மிசைகொண்டு
இளமரக்காவின் விளையாடற்கும்
புனல் ஆடற்கம் புறநகர்ப் போகும் 66
1.67 தலைவியின் ஊடல் களம்
ஊடல் அவ்வழிக் கூடும் கிழத்திக்கு 67
1.68 உடல் தணி வழி
கொளை வல் பாணன் பாடினி கூத்தர்
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர்
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக்கிழத்தி காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல்
மருந்தாய் தீர்க்கும் வாயில்கள் ஆகும் 68
1.69 ஓதற்பிரிவிற்கு உரியோர்
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும் 69
1.70 கல்வி பிரிவிற்கு உரியோர்
அல்லாக் கல்வி எல்லார்க்கும் உரித்தே 70
1.71 படைபயில் பிரிவிற்கு உரியோர்
படைக்கலம் பயிறலும் பகடுபிற ஊர்தலும்
உடைத்தொழில் அவர்க்கு என உரைத்திசினோரே71
1.72 காவல் பிரிவின் வகை
அறப்புறம் காவல் நாடு காவல் எனச்
சிறப்புறு காவல் திறம் இருவகைத்தே 72
1.73 அறப்புறம் காவல்
அவற்றுள் அறப்புறம்காவல் அனைவர்க்குமுரித்தே 73
1.74 நாடுகாவல்
மற்றைக் காவல் கொற்றற்கு உரித்தே 74
1.75 தூதில் பிரிவு
வேதமாந்தர் வேந்தர் என்று இருவர்க்கும்
தூது போதல் தொழில் உரித்து ஆகும் 75
1.76 பிரிவில் சிறப்பு
சிறப்புப் பெயர் பெறில் செப்பிய இரண்டும்
உறற்குரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும் 76
1.77 துணைவயில் பிரிவு
உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே 77
1.78 யாவர்க்கும் உரிய பிரிவு
பரத்தையில் பிரிவும் பொருள்வயில் பிரிவும்
உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும் 78
1.79 நில மக்களுக்கு உரிய பிரிவு
இழிந்தோர் தமக்கும் இவற்றுண் மேம்பட்டவை
ஒழிந்தனவாம் என மொழிந்தனர் புலவர் 79
1.80 தலைமகன் பிரிவு இயல்
கல்வி முதலா எல்லா வினைக்கும்
சொல்லி அகறலும் சொல்லாது அகறலும்
உரியன் கிழவோன் பெருமனைக் கிழத்திக்கு 80
1.81 ஓர் பிரிவு வகை
சொல்லாது அகலினும் சொல்லும் பாங்கிக்கு 81
1.82 மற்றோர் பிரிவு வகை
குறிப்பின் உணர்த்தலும் பெறற்கரும் கிழத்திக்கு 82
1.83 நாடு இடைபெயர் காலத்து அறிவிக்கும் நெறி
காலில் சேறலும் கலத்தில் சேறலும்
ஊர்தியில் சேறலும் நீதியாகும் 83
1.84 அந்தணர்க்குரிய நெறி
புலத்தில் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக்
காலத்தில் சேர்தல் கடன் என மொழிப 84
1.85 மன்னர் குலமாதரொடு செல்லல் ஆகா
வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்
குலமட மாதரொடு கலமிசைச் சேறலும்
பாசறைச் சேறலும் பழுது என மொழிப 85
1.86 தலைமகன் செலவு அழுங்கல் ஆதல்
ஓதல் முதலா ஓதின ஐந்துனும்
பிரிவோன் அழுங்கற்கும் உரியன் ஆகும் 86
1.87 செலவு அழுங்கல் களம்
இல்லத்து அழுங்கலும் இடைச்சுரத்து அழுங்கலும்
ஒல்லும் அவற்கு என உரைத்திசினோரே 87
1.88 செலவு அழுங்கல் ஏது
தலைவி தன்னையும் தன் மனந்தன்னையும்
அலமரல் ஒழித்தற்கு அழுங்குவது அல்லது
செல்த் தோன்றல் செல்வான் அல்லன் 88
1.89 ஓதல் பிரிவு காலம்
அவற்றுள்
ஓதற் பிரிவு உடைத்து ஒரு மூன்றியாண்டே 89
1.90 மூவகைப் பிறிவு காலம்
துதிற் பிரிவும் துணைவயின் பிரிவும்
பொருள்வயிற் பிரிவும் ஓர் ஆண்டுடைய 90
1.91 பரத்தையர் பிரிவு காலம்
பூத்த காலை புனை இழை மனைவியை
நீராடியபின் ஈராறு நாளும்
கருவயிற்று உறூஉங் காலம் ஆதலின்
பிரியப் பெறாஅன் பரத்தையின் பிரிவோன் 91
1.92 ஓதற்பிரிந்தேனுக்கு தகாதன
ஓதற்கு அகன்றோன் ஒழிந்திடை மீண்டு
போதற்கு இயையவும் புலம்பவும் பெறாஅன் 92
1.93 தூது துணை சென்றார்க்கு நெறி
தூதும் துணையும் ஏதுவாகச்
சென்றோன் அவ்வினைநின்று நீட்டித்துழிப்
புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே 93
1.94 கற்பில் தலைமகளுக்கு உரிய நெறி
பூத்தமை சேடியில் புரவலர்க்கு உணர்த்தலும்
நீத்தமை பொறாது நின்று கிழவோனைப்
பழிக்கும் காமக்கிழத்தியைக் கழறலும்
கிழவோர் கழறலும் வழிமுறை மனைவியைக்
கொழுநனொடு வந்து எதிர் கோடலும் அவனொடு
பாங்கொடு பரத்தையை பழித்தலும் நீங்கிப்
புறநகர்க் கணவனெடு போகிச் செறிமலர்ச்
சோலையும் காவும் மாலையும் ழனியும்
மாலை வெள்அருவியும் மலையும் கானமும்
கண்டுவிளையாடலும் கடும்புனல் யாறும்
வண்டு இமிர் கமல வாவியும் குளனும்
ஆடிவிளையாடலும் கூடும் கிழத்திக்கு 94
1.95 பாணற்கு உரியன
வாயில் வேண்டலும் வாயின் ஓர்வித்தலும்
சேயிழை ஊடல் தீர்த்தலும் போய் உழி
அவள் நலம் தொலைவு கண்டு அழுங்கலும் அவன்வயின்
செல்ல விரும்பலும் சென்றவற்கு உணர்த்தலும்
சொல்லிய கூற்றெனச் சொல்லும் கிழவோன்
வரவு மீண்டு வந்து அரிவைக்கு உணர்த்தலும்
அணிநலம் பெற்றமை அறியான் போன்றவட்
பணிவொடு வினாதலும் பாணற்கு உரிய 95
1.96 விறலிக்கு உரியன
செலவில் தேற்றலும் புலவியில் தணித்தலும்
வாயில் வேண்டலும் வாயில் நேர்வித்தலும்
தெரியிழை விறலிக்கு உரிய ஆகும் 96
1.97 கூத்தர்கு உரியன
செல்வம் வாழ்த்தலும் நல்லறிவு கொளுத்தலும்
கலன்அணி புணர்த்தலும் காமநுகர்பு உணர்த்தலும்
புலவி முதிர் காலைப் புலங்கொள ஏதுவில்
தேற்றலும் சேய்மை செப்பலும் பாசறை
மேற்சென்று உரைத்தலும் மீண்டுவர உணர்த்தலும்
கூற்றரு மரபின் கூத்தற்கு உரிய 97
1.98 இளையோர்க்கு உரியன
மடந்தையை வாயில் வேண்டலும் வாயில்
உடன்படுத்தலும் அவள் ஊடல் தீர்த்தலும்
கொற்றவற்கு உணர்த்தலும் குற்றேவல் செய்தலும்
சென்று முன் வரைவு செப்பலும் அவன்திறம்
ஒன்றிநின்று உரைத்தலும் வினைமுடி புரைத்தலும்
வழிஇயல்பு கூறலும் வழிஇடைக் கண்டன
மொழிதலும் இளையோர் தொழில் என மொழிப 98
1.99 கண்டோர்கு உரியன
தீதுடைப் புலவி தீர்த்தலும் அவன்வரல்
காதலிக்கு உரைத்தலும் கண்டோர்க்கு உரிய 99
1.100 பார்ப்பன பாங்கற்கு உரியன
இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலை எடுத்து உரைத்தலும்
செலவு அழுங்குவித்தலும் செலவு உடன் படுத்தலும்
பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய 100
1.101 சூத்திரப் பாங்கற்கு உரியன
நன்மையின் நிறுத்தலும் தீமையின் அகற்றலும்
சொன்னவும் பிறவும் சூத்திரர்கு உரிய 101
1.102 பாகற்கு உரியன
சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும்
வாயின் நேர்வித்தலும் வயங்கு துனி தீர்த்தலும்
வினைமுடித்ததன்பின் வியன்பதி செய்த்து என
இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே 102
1.103 பாங்கிக்கு உரியன
பிரிவுழி விலக்கலும் பிரிவு உடன்படுத்தலும்
பிரிவுழித் தேற்றலும் பிரிவுழி அழுங்கலும்
பிறவும் உரிய இறைவளை பாங்கிக்கு 103
1.104 செவிலிக்கு அசிவர்கு உரியன
முன்வரும் நீதியும் உலகியல் முறைமையும்
பின்வரும் பெற்றியும் பிறவும் எல்லாம்
தெற்றெனக் கூறல் செவிலித் தாய்க்கும்
உற்றறிவர்க்கும் உரியன ஆகும் 104
1.105 காமக்கிழத்திக்கு உரியன
குடிபிறந்தோரை வடுப்படுத்து உரைத்தலும்
மனைவியைப் பழித்தலும் வாடா ஊடலுள்
தலைவற் கழறலும் மனைவிக்கு அமைந்த
ஒழுக்கமும் காமக் கிழத்திக்கு உரிய 105
106 பரத்தையர்க்கு உரியன
கிழவோன் தன்னையும் கிழத்தி தன்னையும்
இகழ்தலும் தம்மைப் புகழ்தலும் நிகழ்பெருள்
கரத்தலும் பரத்தையர் கடன் என மொழிப 106
1.107 பரத்தையர்க்குரிய ஓர் சிறப்பு
பரத்தையர் காதற் பரத்தையைப் புகழ்தலும்
தம்மை இகழ்தலும் தம்முளும் கூறுப 107
1.108 இளையர் தலைமகன்பால் உரியன
இளையர் கிழவோர்க்கு இரவும் பகலும்
களைதல் இல்லாக் கவசம் போல்வர் 108
1 109 இருவகைப் பாங்கர்க்கு உரியன
இருவகைப் பாங்கரும் ஒருபெருங் குரிசிற்கு
இன்னுயிர்த் துணையா இருபெரும் குரவரும்
தன்னை அளித்த தகைமையோரே 109
1.110 தோழிக்கு உரியன
தோழி செவிலி மகளாய்ச் சூழ்தலோடு
உசாத்துணையாகி அசாத்து அணிவித்தற்கு
உரிய காதல் மருவிய துணையே 110
1.111 செவிலிக்கு உரியன
செவிலி நற்றாய் தோழி ஆகி
அவலம் நீக்கி அறிவும் ஆசாரமும்
கொளுத்தி தலைவியை வளர்த்த தாயே 111
1.112 அறிவர்க்கு உரியன
அறிவர் கிழவோன் கிழத்தி என்று இருவர்க்கும்
உறுதி மொழிந்த உயர் பொரம் குரவர் 112
1.113 காமக் கிழத்தியர் இயல்
ஒருவன் தனக்கே உரிமை பூண்டு
வருகுலப் பரத்தையர் மகளிர் ஆகிக்
காமக்கு வரைந்தோர் காமக் கிழத்தியர் 113
1.114 காதற் பரத்தையர் இயல்
யாரையும் நயவா இயல்பில் சிறந்த
சேரிப் பரத்தையர் மகளிர் ஆகிக்
காதலில் புணர்வோர் காதல் பரத்தையர் 114
1.115 காதல பரத்தையரில் சிறப்பு
அவர் உளும் வரைதற்கு உரியோர் உளரே 115
1.116 துறவரம் மேற்கொள் காலம்
மக்களொடு மகிழ்ந்து மனைஅறம் காத்து
மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவரம் காப்ப 116
2 களவியல்
2,1 களவின் இயல்
உளமலி காதல் களவு எனப் படுவ
தொகுநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப 117
2.2 கைக்கிளையின் வகை
காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவு என
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை 118
2.3 காட்சியின் இயல்
புணர்ப்பதும் பிரிப்பதும் ஆகிய பால்களுள்
புணர்க்கும் பாலில் பொருவிறந்து ஒத்த
கறைவேல் காளையும் கன்னியும் காண்ப
இறையோன் உயரினும் குறைவின்று என்மனார் புலவர் 119
2.4 ஐயத்தின் இயல்
மடமான் நோக்கி வடிவம் கண்ட
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம் 120
2.5 துணிவின் இயல்
எழுதிய வல்லியும் தொழில்புனை கலனும்
வாடிய மலரும் கூடிய வண்டும்
நடைபயில் அடியும் புடைபெயர் கண்ணும்
அச்சமும் பிறவும் அவன்பால் நிகழும்
கச்சம்இல் ஐயம் கடிவன ஆகும் 121
2.6 குறிப்பு அறிதலின் இயல்
அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை
தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப 122
2.7 களவின் கிளவி நிரல்
இயற்கைப் புணர்ச்சி வன்புறை தெளிவே
பிரிவுழி மகிழ்ச்சி பிரிவுழிக் கலங்கல்
இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம்
பாங்கி மதிஉடன்பாடு பாங்கியற் கூட்டம்
பாங்கமை பகற்குறி பகற்குறி இடையீடு
இரவுக்குறியே இரவுக்குறி இடையீடு
வரைவு வேட்கை வரைவு கடாதல்
ஒருவழி தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்வயிற் பிரிதல் என்று ஒரு பதினேழும்
களவிற்கு உரியகிளவித் தொகையே 123
2.8 இயற்கைப் புணர்ச்சியின் இயல்
தெய்வம் புணர்ப்பச் சிந்தை வேறாகி
எய்தும் கிழத்தியை இறையோன் என்ப 124
2.9 இதன் விரி
கலந்துழி மகிழ்தலும் நலம் பாராட்டலும்
ஏற்புற அணிதலும் என்னும் இம்மூன்றும்
போற்றிய தெய்வப் புணர்ச்சியின் விரியே 125
2.10 தலைவியின்கண் புணர்ச்சி வகை
வேட்கை உணர்தல் மறுத்தல் உடன்படல்
கூட்டம் என்று இறைவியில் கூட்ட நால் வகைத்தே 126
2.11 இதன் விரி
இரந்துபின் நிற்றற்கு எண்லும் இரந்து
பின்னிலை நிற்றலும் முன்னிலை ஆக்கலும்
மெய்தொட்டுப் பயிறலும் பொய் பாராட்டலும்
இடம் பெற்றுத் தழாலும் வழிபாடு மறுத்தலும்
இடையூறு கிளத்தலும் நீடுநினைந்து இரங்கலும்
மறுத்துஎதிர் கோடலும் வறிதுநகை தோற்றலும்
முறுவல்குறிப்பு உணர்தலும் முயங்குதல் உறுத்தலும்
புணர்ச்சியில் மகிழ்தலும் புகழ்தலும் பிறவும்
உணர்த்திய தலைவியின் புணர்ச்சியின் விரியே 127
2.12 வன்புறையின் வகை
ஐயம் தீர்த்தல் பிரிவு அறிவுறுத்தல் என்று
எய்திய வன்புறை இருவகைத்து ஆகும் 128
2.13 இதன் விரி
அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தலும்
பெருநயப்பு உரைத்தலும் தெய்வத்திறம் பேசலும்
பிரியேன் என்றலும் பிரிந்து வருக என்றலும்
இடம் அணித்து என்றலும் என்று இவை ஆறும்
மடன்அறத்தெரிந்த வன்புரை விரியே 129
2.14 தெளிவின் இயல்
தலைவன் மாற்றம் தலைவி தேற்றம்
தெளிவாம் என்பர் தெளிந்திசினேரே 130
2.15 பிரிவுழி மகிழ்ச்சியின் விரி
செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு
சொல்லலும் பாகனோடு சொல்லலும் இரண்டும்
பிரிவுழி மகிழ்ச்சியின் விரி எனக் கொளலே 131
2.16 பிரிவுழி கலங்கல்¢ன் வகை
மருள்உற்று உரைத்தல் தெருள் உற்று உரைத்தல் என்று
இருவகைத்து ஆகும் பிரிவுழி கலங்கல் 132
2.17 பிரிவுழி கலங்கல்¢ன் விரி
ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது
மாயமோ என்றலும் வாயில் பெற்று உய்தலும்
பண்பு பாராட்டலும் பயந்தோர் பழிச்சலும்
கண்பெடை பெறாது கங்குல் நோதலும் எனும்
ஐந்தும் பிரிவுழி கலங்கல்¢ன் விரியாகும்மே 133
2.18 இடந்தலைப்பாட்டின் வகை
தெய்வம் தெளிதல் கூடல் விடுத்தல் என்று
இவ்ஓர் மூவகைத்து இடந்தலைப்பாடே 134
2.19 இதன் விரி
தந்த தெய்வம் தரும் எனச் சேறலும்
முந்து உறக் காண்டலும் முயங்கலும் புகழ்தலும்
உடன்புணர் ஆயத்து உய்த்தலும் என ஐந்து
இடந்தலைப்பாட்டின் இலக்கண விரியே 135
2.20 பாங்கற் கூட்ட வகை
சார்தல் கேட்டல் சாற்றல் எதிர்மறை
நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டல் என்று
ஆங்கு ஏழு வகைத்தே பாங்கற் கூட்டம் 136
2.21 இதன் விரி
தலைவன் பாங்கனைச்சார்தலும் பாங்கன்
தலைவனை உற்றது வினாதலும் தலைவன்
உற்றது உரைத்தலும் கற்றறி பாங்கன்
கழறலும் கிழவோன் கழற்று எதிர் மறுத்தலும்
கிழவோன் பழித்தலும் கிழவோன் வேட்கை
தாங்கற்கு அருமை சாற்றலும் பாங்கன்
தன்மனத்து அழுங்கலும் தலைவனோடு அழுங்கலும்
எவ்விடத்து எவ்வியற்று என்றலும் அவன·து
இவ்விடத்து இவ்வியற்று என்றலும் பாங்கன்
இறைவனைத் தேற்றலும் குறிவழிச் சேறலும்
இறைவியைக் காண்டலும் இகழ்ந்தற்கு இரங்கலும்
தலைவனை வியத்தலும் தலைவியை வியத்தலும்
தலைவன் தனக்கு தலைவிநிலை கூறலும்
தலைவன் சேறலும் தலைவியைக் காண்டலும்
கலவியின் மகிழ்தலும் புகழ்தலும் தலைவியைப்
பாங்கியொடு வருகஎனப் பகர்தலும் பாங்கிற்
கூட்டலும் என்றுஈங்கு ஈட்டுநாலாறும்
காட்டிய பாங்கற் கூட்டத்து விரியே 137
2.22 பாங்கிமதி உடன்பாட்டின் வகை
முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வரவு உணர்தல் என்று
ஒருமூன்று வகைத்தே பாங்கிமதி உடன்பாடு 138
2.23 முன்னுற உணர்தலின் இயல்
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பும் செலவும் பயில்வும் என்று
இவ்வகை ஏழினும் ஐயம் உற்று ஓர்தலும்
அவ்வகை தன்னால் ஐயம் தீர்தலும்
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் சொல்லின் ஆடலும் என
முன்னுற உணர்தல் மூன்றாகும்மே 139
2.24 குறையுற உணர்தலின் இயல்
பெட்ட வாயில் பெற்று இரவு வலியறுத்தோன்
கண்ணியும் தழையும் ஏந்தி நண்ணி
ஊர்பேர் கெடுதியோடு ஒழிந்தவும் வினாவுழி
யாரே இவர் மனத்து எண்ணம் யாது எனத்
தேர்தலும் என்னம் தெளிதலும் என ஆங்கு
ஓர் இரண்டாகும் குறை உணர்தல் 140
2.25 இருவருமுள்வழி அவன்வரவு உணர்தலின் இயல்
கையுறை ஏந்தி வந்து அவ்வகை வினாவுழி
எதிர்மொழி கொடுத்தலும் இறைவனை நகுதலும்
மதியின் அவர்அவர் மனக்கருத்து உணர்வும் என்று
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல்
ஒரு மூன்று ஆகும் தெரியும் காலே 141
2.26 பாங்கிமதி உடன்பாட்டின் விரி
ஈங்ஙணம் இயம்பிய இருநான்கு(*) கிளவியும்
பாங்கிமதி உடன்பாட்டது விரியே 142
(*) 2.22=3, 2.23=2, 2.24=3 == 8
2.27 பாங்கியற் கூட்ட வகை
இரந்து பின்நிற்றல் சேட்படை மடற்கூற்று
மடல் விலக்கு உடன்படல் மடல்கூற்று ஒழிதல்
குறை நயப்பித்தல் நயத்தல் கூட்டல்
கூடல் ஆயம் கூட்டல் வேட்டல் என்று
ஈராறு வகைத்தே இகுளையிற் கூட்டம் 143
2.28 இரந்து பின்நிற்றல்-சேட்படை விரி
தலைவனுள் கோள் சாற்றலும் பாங்கி
குலமுறை கிளத்தலும் தலைவன் தலைவி
தன்னை உயர்த்தலும் நன்நுதல் பாங்கி
அறியாள் போன்று வினாதலும் இறையோன்
இறைவித் தன்மை இயம்பலும் பாங்கி
தலைவி அருமை சாற்றலும் தலைவன்
இன்றிஅமையாமை இயம்பலும் பாங்கி
நின்குறை நீயே சென்று உரை என்றலும்
பாங்கியைத் தலைவன் பழித்தலும் பாங்கி
பேதைமை ஊட்டலும் காதலன் தலைவி
மூதறிவு உடைமை மொழிதலும் பாங்கி
முன்னுறு புணர்ச்சி முறைஉறக் கூறலும்
தன்னிலை தலைவன் சாற்றலும் பாங்கி
உலகியல் உரைத்தலும் தலைமகன் மறுத்தலும்
பாங்கி அஞ்சி அச்சுறுத்தலும் ஆங்கு அவன்
கையுறை புகழ்தலும் தையல் மறுத்தலும்
ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தலும் அவள்
ஆற்றுவித்து அகற்றலும் ஆகும் நாலைந்தும்
இரந்து பின்நிற்றற்கும் சேட்படுத்தற்கும்
பொருந்துவ என்மனார் தெரிந்திசினோரே 144
2.29 மடற்கூற்று-மடல் விலக்கின் விரி
இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன்
மடலே பொருள் என மதித்தலும் பாங்கிக்கு
உலகின் மேல்வைத்து உரைத்தலும் அதனைத்
தன்மேல் வைத்தச் சாற்றலும் பாங்கி
தலைமகள் அவயவத்து அருமை சாற்றலும்
தலைமகன் தன்னை தானே புகழ்தலும்
அலர்முலைப் பாங்கி அருள்இயல் கிளத்தலும்
கொண்டுநிலை கூறலும் என்று இவை ஏழும்
மடற்கூற்றிற்கும் மடல் விலக்கிற்கும்
கடவ என்பர் கற்றறிந்தோரே 145
2.30 குறைநேர்தல்-மடல்கூற்று ஒழிதலின் விரி
தலைவி இளமைத் தன்மை பாங்கி
தலைவற்கு உணர்fதலும் தலைவன் தலைவி
வருத்திய வண்ணம் உரைத்தலும் பாங்கி
செவ்வி அருமை செப்பலும் தலைவன்
செவ்வி எளிமை செப்பலும் பாங்கி
என்னை மறைப்பின் எளிதென நகுதலும்
அந்நகை பொறாது அவன் புலம்பலும் அவள்
தேற்றலும் கையுறை ஏற்றலும் கிழவோன்
ஆற்றலும் என்னும் அவ்வொன்பானும்
குறைநேர்தற்கும் மடற்கூற்று ஒழிதற்கும்
முறைமையின் உரிய முனனுங்காலே 146
2.31 குறை நயப்பித்தல்-குறைமறுத்தலின் விரி
இறைவன் தனக்கு குறைநேர் பாங்கி
இறைவிக்கு அவன் குறை உணர்த்தலும் இறைவி
அறியாள் போன்று குறியாள் கூறலும்
பாங்கி இறையோர் கண்டமை பகர்தலும்
பாங்கியைத் தலைவி மறைத்தலும் பாங்கி
என்னை மறைப்பது என்எனத் தழாஅலும்
கையுறை புகழ்வும் என்று இவ்விரு மூன்றும்
மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தற்கும்
வலிதாகச் சொல்லி மறுத்தற்கும் உரிய 147
2.32 குறை நயப்பித்தல்-நயத்தலின் விரி
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தலும்
மறுத்தற்கு அருமை மாட்டலும் தலைவன்
குறிப்பு வேறாக நெறிப்படக் கூறலும்
தலைவியை முனிதலும் தலைவி பாங்கி
தன்னை முனிதலும் தன்கைக் கையுறை
ஏற்றலும் எனமுறை சாற்றிய ஆறும்
வலிதாகச் சொல்லி குறை நயப்பித்தற்கும்
மெலதாகச் சொல்லி மேவற்கும் உரிய 148
2.33 கூட்டல்-கூடல்-ஆயம்கூட்டல்-வேட்டலின் விரி
இறைவி கையுறை ஏற்றமை பாங்கி
இறைவர்க்கு உணர்த்தலும் குறிஇடம் கூறலும்
குறிஇடத்து இறைவியை கொண்டு சேறலும்
குறிஇடத்து உய்த்து நீங்கலும் இறையோன்
இடத்து எதிர்ப்படுத்தலும் இயைதலும் புகழ்தலும்
விடுத்தலும் பாங்கி மெல்லியல் சார்ந்து
கையுறை காட்டலும் மையுறைக் கண்ணியைப்
பாங்கிற் கூட்டலும் நீங்கித் தலைவற்கு
ஓம்படை சாற்றலும் உலகியல் மேம்பட
விருந்து விலக்கலும் பெருந்தகை விருந்திறை
விரும்பலும் எனத் தெரிந்த பன் மூன்றும்
கூட்டல் முதலா வேட்டல் ஈறாப்
பாங்கிற்கு வகுத்த நான்கிற்கு உரிய 149
2.34 பாங்கியிற் கூட்டத்தின் விரி
அற்றம்இல் சிறப்பின் இவ்அறுபத்தொன்றும்(*)
குற்றம்இல் பாங்கியிற் கூட்டத்து விரியே 150
(*) 2.27=20, 2.28=7, 2.29=9, 2.30=6, 2.31=6, 2.32=13 == 61
2.35 பகற்குறியின் வகை
கூட்டல் கூடல் பாங்கிற் கூட்டல்
வேட்டல் என்று ஒருநால் வகைத்தே பகற்குறி 151
2.36 இதன் விரி
குறிஇடம் கூறல் முதலாப் பெறல் அரும்
விருந்திறை விரும்பல் ஈறாப் பொருந்தப்
பகர்ந்த பன்னிரன்டும்(*) பகற்குறியே 152
(*) 2.32 அதனில் காடப்பெற்றுள்ள (மேற்படி
குறித்த-12) விரிகளை மீண்டும் இங்கு கொள்க
2.37 ஒரு நோக்கு பகற்குறியின் வகை
இரங்கல் வன்புறை இல்செறிப் புணர்த்ல் என்று
ஒருங்கு மூவகைத்து ஒருசார் பகற்குறி 153
2.38 இதன் விரி
கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்
பொழுது கண்டு இரங்கலும் பாங்கி புலம்பலும்
தலைவன் நீடத் தலைவி வருந்தலும்
தலைவியைப் பாங்கி கழறலும் தலைவி
முன்னிலைப் புறமொழி மொழிதலும் இன்னுயிர்ப்
பாங்கியொடு பகர்தலும் பாங்கி அச்சுறுத்தலும்
நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கலும்
தலைவிக் கவன் வரல் பாங்கி சாற்றலும்
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தலும்
முன்னிலைப் புறமொழி மொழிந்து அறிவுறுத்தலும்
முன்னின் உணர்தலும் முன்னின் உணர்த்தி
ஓம்படை சாற்றலும் மேம்படு கிழவோன்
தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும்
என்ற ஈரேழும் எல்லுக் குறியே 154
2.39 பகற்குறி இடையீ£ட்டின் வகை
விலக்கல் சேறல் கலக்கம் என்று ஆங்கு
இகப்பின் மூவகைத்§து பகற்குறி இ¨யீடு 155
2.40 இதன் விரி
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலும்
இறைவியைக் குறிவரல் விலக்கலும் இறைமகள்
ஆடிட நோடுக்கி அழிதலும் பாங்கி
ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறலும் பின்னாள்
நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கலும்
வறுங்களம் நாடி மறுகலும் குறுங்தொடி
வாழும் ஊர் நோக்கி மதிமயங்கலும் எனும்
ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே 156
2.41 இரவுக்குறி வகை
வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல்
கூடல் பாராட்டல் பாங்கியிற் கூட்டல்
உயங்கல் நீங்கல் என்று ஒன்பது வகைத்தே
இயம்பிப் போந்த இரவுக் குறி§யே 157
2.42 இதன்விரி
இறையோன் இருட்குறி வேண்டலும் பாங்கி
நெறியினது அருமை கூறலும் இறையோன்
நெறியின் தெளிமை கூறலும் பாங்கி
அவன் நாட்டு அணிஇயல் வினாதலும் கிழவோன்
அவள்நாட்டு அணிஇயல் வினாதலும் அவற்குத்
தன்நாட்டு அணிஇயல் பாங்கி சாற்றலும்
இறைவிக்கு இறையோன் குறிஅறிஉறுத்தலும்
நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும்
நேரிழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தலும்
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தலும்
குறியிடை நிறீஇத் தாய் துயில் அறிதலும்
இறைவிக்கு இறைவன் வரவு அறிஉறுத்தலும்
அவள் கொண்டு சேறலும் குறிஉய்த்து அகறலும்
வண்டுறை தாரோன் வந்து எதிர்ப்படுதலும்
பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கலும்
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும்
இறைமகள் இறைவனை குறிவிலக்கலும் அவன்
இறைவியை இவ்வயின் விடுத்தலும் இறைவியை
எய்திப் பாங்கி கையுறை காட்டலும்
இல்கொண்டு ஏகலும் பின்சென்று இறைவனை
வரவு விலக்கலும் பெருமகன் மயங்கலும்
தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தலும்
திருமகள் புணர்ந்தவன் சேறலும் என்று ஆங்கு
இருபத்தேழும் இரவுக்குறி விரியே 158
2.43 இரவுக்குறிஇடையீட்டின் வகை
அல்லற்குறி வருந்தொழிற்கு அருமை என்று ஆங்கு
எல்லிக்குறி இடையீடுஇருவகைத்து ஆகும் 159
2.44 அல்லற்குறி
இறைவிக்கு இகுளை இறைவரைவு உணர்த்துழித்
தான்குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும்
பாங்கி தலைவன் தீங்கு எடுத்து இயம்பலும்
புலந்து அவன் போதலும் புலந்தபின் வறுங்களம்
தலைவி கண்டு இரங்கலும் தன்துணைக்கு உரைத்தலும்
தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும்
இறையோன் மேல் பாங்கி குறிபிழைப் போற்றலும்
இறைவிமேல் இறைவன் குறிபிழைப் போற்றலும்
அவள் குறி மருண்டமை அவள் அவற்கு இயம்பலும்
அவன்மொழிக் கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பலும்
என்பிழை பற்றென்று றைவி நோதலும் எனும்
ஒன்று பன்னொன்றும் அல்லகுறிக்குரிய 160
2.45 வருந்தொழிற்கு அருமை வகை
தாயும் நாயும் ஊருந்தும் சாமை
காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல்
கூகை குழறுதல் கோழி குரல் காட்டுதல்
ஆகிய ஏழும் அல்லுக்குறித் தலைவன்
வருந்தொழிற்கு அருமை பொருந்துதல் உரிய 161
2.46 இரவுக்குறிஇடையீட்டின் விரி
திரட்டி இவ்வாறு செப்பிய ஒன்பதிற்று
இரட்டியும்(*) இரவுக்குறி இடையீட்டு வகையே 162
(*) 2.44=11, 2.45=7 == 18
2.47 வரைதல் வேட்கை வகை
அச்சம் உவத்தல் ஆற்றாமைஎன
மெச்சிய வரைதல் வேட்கை மூவகைத்தே 163
2.48 இதன் விரி
பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி
அருமறை செவிலி அறிந்தமை கூறலும்
தலைமகன் வருந்தொழிற்கு அருமை சாற்றலும்
தலைமகன் ஊர்க்குச் செல ஒருப்படுதலும்
பாங்கி இறைவனைப் பழித்தலும் பூங்கொடி
இறையோன் தன்னை நொந்து இயல்பட மொழிதலும்
கனவு நலிபு உரைத்தலும் கவின்அழி உரைத்தலும்
தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டலும்
துன்புறல் பாங்கி சொல் எனச் சொல்லலும்
அலர்பார்த்து உற்ற அச்சக் கிளவியும்
ஆறுபார்த்து உற்ற அச்சக்கிளவியும்
காமம் மிக்க கழிபடர் கிளவியும்
தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்
நெறிவிலக்கு வித்தலும் குறிவிலக்கு வித்தலும்
வெறிவிலக்கு வித்தலும் பிறவிலக்கு வித்தலும்
குரவரை வரைஎதிர் கொள்ளுவித்தலும் என
உரைபெற வகுத்த ஒன்பதிற் றிரட்டியும்
வரைதல் வேட்கை விரி எனப்படுமே 164
2.49 வரைவுகடாதலின் வகை
பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தல் என்று
ஒருநால் வகைத்தே வரைவு கடாதல் 165
2.50 இதன் விரி
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பலும்
அலர் அறிஉறுத்தலும் தாய்அறி உணர்த்தலும்
வெறி அச்சுறுத்தலும் பிறர்வரை உணர்த்தலும்
வரைஎதிர் உணர்த்தலும் வரையுநாள் உணர்த்தலும்
அறிவறிஉறுத்தலும் குறிபெயர்த்து இடுதலும்
பகல் வருவானை இரவுவருக என்றலும்
பகலினும் இரவினும் பயின்று வருக என்றலும்
பகலினும் இரவினும் அகல் இவண் என்றலும்
உரவோன் நாடும் ஊரும் குலனும்
மரபும் புகழும் வாய்மையும் கூறலும்
ஆறுபார்த்து உற்ற அச்சம் கூறலும்
ஆறாத்தன்மை ஆற்றக் கூறலும்
காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும்
கனவுநலி உரைத்தலும் கவின்அழி உரைத்தலும்
எனமுறை நாடி இயம்பிய இருபதும்
வரைவு கடாதல் விரி எனப் படுமே 166
2.51 ஒருவழித்தணத்தல் வகை
செலவு அறிஉறுத்தல் செலவு உடன்படாமை
செலவு உடன் படுத்தல் செலவு உடன் படுதல்
சென்றுழிக் கலங்கல் தேற்றி ஆற்றுவித்தல்
வந்துழிநொந்துரை என்று எழுவகைத்தே
ஒன்றக் கூறிய ஒருவழித் தணத்தல் 167
2.52 இதன் விரி
தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றலும்
மென்சொல் பாங்கி விலக்கலும் தலைவன்
நீங்கல் வேண்டலும் பாங்கி விடுத்தலும் தலைவி
நெஞ்சொடு புலத்தலும் சென்றோன் நீடலில்
காமம் மிக்க கழிபடர் கிளவிவியும்
கோல்தொடிபாங்கி ஆற்றுவித்தலும் அவன்
வந்தமை உணர்த்தலும் வந்தோன் தன்னொடு
நொந்து வினாதலும் வெந்திறல் வேலோன்
பாங்கியொடு நொந்து வினாதலும் பாங்கி
இறைவியை ஆற்றுவித்திருந்த அருமை
கூறலும் என்னும் ஆரிரு கிளவியும்
ஒருவழித் தணத்தலின் விரி எனப்படுமே 168
2.53 வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவின் வகை
பிரிவு அறிஉறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன் படுத்தல் பிரிவு உடன்படுதல்
பிரிவுழிக் கலங்கல் வன்புரை வன்பொறை
வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று
ஒருமையிற் கூறிய ஒன்பது வகைத்தே
வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவே 169
2.54 இதன் விரி
என்பொருள் பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்றலும்
நின் பொருள் பிரிவு உரை நீஅவட்கு என்றலும்
நீடேன் என்று அவன் நீங்கலும் பாங்கி
ஓடரிக்கண்ணிக்கு அவன் செலவு உணர்த்தலும்
பூங்குழை இரங்கலும் பாங்கி கொடுஞ்சொல்
சொல்லலும் தலைவி கொடுஞ்சொல் சொல்லலும்
வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தலும்
பருவம்கண்டு பெருமகள் புலம்பலும்
இகுளை வம்பு என்றலும் இறைமகள் மறுத்தலும்
அவர் தூதாகி வந்து அடைந்தது இப்போழுது என
துணைவி சாற்றலும் பிணைவிழி ஆற்றலும்
அவனவண் புலம்பலும் அவன்வருங்காலைப்
பாகன் தன்னொடும் மேகம் தன்னொடும்
சோகம் கொண்டு அவன் செல்லலும் பாங்கி
வலம்புரி கேட்டு அவன் வரவு அறிஉறுத்தலும்
வலம்புரி கிழத்தி வாழ்த்தலும் வந்துழி
நினைத்தமை வினாதலும் நினைத்தமை செப்பலும்
அனைத்தகை அவளை ஆற்றுவித்து இருந்தமை
பாங்கி கூறலும் என ஆங்கு எழு மூன்றும்
வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவின்
விரி என விளம்பினர் தெரிமொழிப் புலவர் 170
3 வரைவியல்
3.1 வரைவின் இயல்
வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும்
கரணமொடு புணரக் கடி அயர்ந்து கொளலே 171
3.2 வரைவின் கிளவி நிரல்
வரைவு மலிவே அறத்தொடு நிற்றல் என்று
உரையமை இரண்டும் வரைவிற்கு உரிய
கிளவித் தொகை எனக் கிளந்தனர் புலவர் 172
3.3 வரைவு மலிதல் வகை
வரைவு முயல் உணர்தல் வரைவு எதிர் உணர்த்தல்
வரைவு அறந்து மகிழ்தல் பராவல் கண்டு உவத்தல் என்று
ஒருநான்கு வகைத்தே வரைவு மலிதல் 173
3.4 இதன் விரி
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி
காதலிக்கு உணர்த்தலும் காதலி நற்றாய்
உள்ள மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி
தமர்வரை எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தலும்
அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும்
தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் தலைவி
மணப்பொருட்டாகப் அணங்கைப் பராநிலை
காட்டலும் கண்டோன் மகிழ்வும் என்று ஈட்டிய
இருமூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம்
விரி என விளம்பினர் மெய் உணர்ந்தோரே 174
3.5 அறத்தொடுநிலையின் வகை
முன்னிலை முன்னிலைப் புறமொழி என்று ஆங்கு
அன்ன இருவகைத்து அறத்தொடு நிலையே 175
3.6 தலைவி அறத்தொடு நிற்றல்
கையறு தோழி கண்ணீர் துடைத்துழிக்
கலுழ்தல் காரணம் கூறலும் தலைவன்
தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை
எய்தக் கூறலும் இகந்தமை இயம்பலும்
இயல் பழித்து உரைத்துழி இயல்பட மொழிதலும்
தெய்வம் பொறைகொளச் செல்குவம் எனறலும்
இல்வயில் செறித்தமை சொல்லலும் செவிலி
கனைஇருள் அவன் வரக் கண்டமைக் கூறலும்
என்முறை இயம்பிய ஏழும் புனையிழைத்
தலைவி அறத்தொடு நிலைதனக்கு உரிய 176
3.7 பாங்கி அறத்தொடு நிற்றல்
எறிவளை வேற்றுமைக்கு ஏது வினாவினும்
வெறி விலக்கிய வழி வினாவினும் பாங்கி
பூவே புனலே களிறே என்று இவை
ஏதுவாகத் தலைப்பாடு இயம்பும் 177
3.8 செவிலி அறத்தொடு நிற்றல்
மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வின்வுழி
முன்னிலை மொழியான் மொழியும் செவிலி 178
3.9 அறத்தொடு நிற்றலின் விரி
என்றுடன் விளம்பிய எல்லாம் களவியல்
நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே 179
3.10 களவு வெளிப்பாட்டின் வகை
போக்கே கற்பொடு புணர்ந்த கவ்வை
மீட்சி என்று ஆங்கு விளம்பிய மூன்றும்
வெளிப்பாட்டுக் கிளவியின் வழிபடு தொகையே 180
3.11 உடன்போக்கின் வகை
போக்கு அறிஉறுத்தல் போக்கு உடன்படாமை
போக்கு உடன்படுத்தல் போக்கு உடன்படுதல்
போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என்று
யாப்பமை உடன்பொக்கு இருநான்கு வகைத்தே 181
3.12 இதன் விரி
பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தலும்
ஆங்கு அவன் மறுத்தலும் அவள் உடன்படுத்தலும்
தலைவன் போக்குடன் படுதலும் பாங்கி
தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும் தலைவி
நாண்அழிபு இரங்கலும் கற்பு மேம்பாடு
பூண்முலைப் பாங்கி புகறலும் தலைவி
ஒருப்பட்டு ஒழுகலும் விருப்பு உடைப் பாங்கி
சுரத்தியல் வைத்துழி ச் சொல்லலும் பாங்கி
கையடை கொடுத்தலும் வைகிருள் விடுத்தலும்
அவன் சுரத்து உய்த்தலும் அசைவு அறிந்து இருத்தலும்
உவந்து அலர் சூட்டி உண் மகிழ்ந்து உரைத்தலும்
கண்டோர் அயிர்த்தலும் காதலின் விலக்கலும்
தன்பதி அணிமை சாற்றலும் தலைவன்
தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தலும்
என்று இவை ஒன்பதற்று இருவகைக் கிளவியும்
ஒன்றிய அன்பின் உடன் போக்கு விரியே 182
3.13 கற்பொடு புணர்ந்த கவ்வை வகை
செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல்
கவர்மனை மருட்சி கண்டோர் இரக்கம்
செவிலி பின் தேடிச் சேறல் என்றாங்குக்
கற்பொடு புணர்ந்த கவ்வை வகைத்தே 183
3.14 செவிலி புலம்பல்
வினவிய பாங்கியின் உணர்ந்த காலை
இணையல் என்போர்க்கு எதிர் அழிந்து மொழிதலும்
தன்னறிவு இன்மை தன்னை நொந்து உரைத்தலும்
தெய்வம் வாழ்தலும் இவ்ஒரு மூன்றும்
இலங்கிழைச் செவிலி புலம்புதற்கு உரிய 184
3.15 நற்றாய் புலம்பல்
செவிலி அறத்தொடு நிற்றலிற் கவலையிற்
பாங்கி தன்னொடும் பாங்கியர் தம்மொடும்
அயலார் தம்மொடும் பயில்இடம் தம்மொடும்
தாஙகலள் ஆகிச் சாற்றிய எல்லாம்
பூங்கொடி நற்றாய் புலம்பற்கு உரிய 185
3.16 மனைமருட்சி
நிமித்தம் போற்றலும் சும் தணிவித்தலும்
தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கலும்
இளமைத் தன்மைக்கு உளமெலிந்து இரங்கலும்
அச்சத்தன்மைக்கு அச்சம்உற்று இரங்கலும்
எனஇவை ஐந்தும் மனைமருட்சிக்குரிய 186
3.17 கண்டோர் இரங்கல்
ஆயமும் தாயும் அழுங்கக் கண்டோர்
காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம் 187
3.18 செவிலி பின்தேடல்
ஆற்றா தாயை தேற்றலும் ஆற்றிடை
முக்கோர் பகவரை வினாதலும் மிக்கோர்
ஏதுக் காட்டலும் எயிற்றியொடு புலம்பலும்
குராவொடு புலம்பலும் சுவடு கண்டு இரங்கலும்
கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டலும் அவர்
புலம்பல் தேற்றலும் புதல்வியைக் காணாது
கவலை கூர்தலும் எனும் இவை ஒன்பானும்
செவிலி பினதேடிச் சேறற்கு உரிய 188
3.19 கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரி
முற்பட மொழிந்த முறை எழு முன்றும்
கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே 189
3,20 மீட்சியின் வகை
தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பல் என
வெளிப்பட உரைத்த மீட்சி நால் வகைத்தே 190
3.21 மீட்சியின் விரி
தலைவி சேண்அகன்றமை செவிலிதாய்க்கு உணர்த்தலும்
தலைவன் தம்ஊர் சார்ந்தமை சாற்றலும்
தலைவி முன்செல்வோர் தம்மொடு தன்வரல்
பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும் ஆங்கவர்
பாங்கியர்க்கு உணர்த்தலும் ஆங்கவர் கேட்டு
நற்றாய்க்கு உணர்த்தலும் நற்றாய் கேட்டவன்
உளங்கோள் வேலனை வினாதலும் எனவுடன்
விளம்பி இருமுன்று மீட்சியின் விரியே 191
3.22 மீளுதலும் ஏனவையும்
மடந்தையை உடன் போய் வரைந்து மீடற்கும்
அவள்மனை வரைதற்கும் தன்மனை வரைதற்கும்
இவை ஐந்தும் உரிய செவிலிக் கூற்று ஒழித்தே 192
3.23 தன்மனை வரைதலின் வகை
வினாதல் செப்பல் மேவல் என்று இறைவன்
தனாதில் வரைதல்தான் மூவகைத்தே 193
3.24 இதன் விரி
பணிமொழி நற்றாய் மணனயர் வேட்கையில்
செவிலியை வினாதலும் செவிலிக்கு இகுளை
வரைந்தமை உரைத்தலும் வரைந்தமை செவிலி
நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும்
தலைவி இல் வந்துழி தலைவன் பாங்கிக்கு
யான் வரைந்தமை நுமக்கு இயம்பு சென்று என்றலும்
தானது முன்னே சாற்றியது உரைத்தலும்
என்னும் இவ்வைந்து மின்னிலை வேலோன்
மன்னிய தன் மனை வரைதலின் விதியே 194
3.25 உடன்போய் வரைந்து மீளுதலின் விரி
ஆதி ஒன்று ஒழித்து அல்லன நான்கும்
மாதினியுடன் உடன்போய் வரைந்து மீடற்கு
நீதியின் உரிய நினையும் காலை 195
3..26 இதனில் மற்றோர் வகை
இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும்
ஒருவகை மீண்டு வரைதலின் விரியே 196
3.27 உடன்போக்கு இடையீட்டின் வகை
போக்கு அறிஉறுத்தல் வரவு அறிஉறுத்தல்
நீக்கம் இரக்கமொடு மீட்சி என்று ஆங்கு
உடன்போக்கு இடையீடு ஒருநால் வகைத்தே 197
3.28 இதன் விரி
நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத்
தன் செலவு உணர்த்தி விடுத்தலும் தலைமகள்
தன் செலவு ஈன்றாளுக்கு உணர்த்தி விடுத்தலும்
ஈன்றாட்கு அந்தணர் மொழிதலும் ஈன்றாள்
அறத்தொடு நிற்றலின் தமர் பின் சேறலைத்
தலைவி கண்டு தலைவர்க்கு உணர்த்தலும்
தலைமகள் தன்னை தலைமகன் விடுத்தலும்
தமருடன் செல்பவள் அவன்புற நோக்கிக்
கவன்றாற்றலும் என நுவன்றவை ஆறும்
உடன்போக்கு இடையீட்டிற்கு விரியாகும்மே 198
3.29 அந்தணர் சான்றோர்முன் வரைதல்
தன்ஊர் வரைதலும் தன்மனை வரைதலும்
என்னும் இவ்விரண்டு ஒழித்து எவற்றினும் கிழவோன்
அந்தணர் சான்றோர் முன்னிட்டு அருங்கலம்
தந்து வரைதல் தகுதி என்ப 199
4 கற்பியல்
4.1 கற்பின் இயல்
பொற்பமை சிறப்பில் கற்பெனப் படுவது
மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும்
பிரிவும் பிறவும் மருவியது ஆகும் 200
4.2 கற்பின் கிளவி நிரல்
இல்வாழ்க்கையே பரத்தையர் பிரிவே
ஓதல் பிரிவே காவல் பிரிவே
தூதில் பிரிவே துணைவயிற் பிரிவே
பொருள்வயிற் பிரிவே எனப் பொருந்திய ஏழும்
வளமலி கற்பின் கிளவித்தொகையே 201
4.3 இல்வாழ்க்கையின் வகை
கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி என்று
ஈங்கு நால்வகைத்து ழ்ல்வாழ்க்கையே 202
4.4 இதன் விரி
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தலும்
தலைவனைப் பாங்கி வாழத்தலும் தலைவியை
வரையு நாளளவும் வருந்தாது இருந்தமை
உரையாய் என்றலும் பெருமகளுக்கு உரைத்தலும்
தலைவனை பாங்கி வரையு நாளளவும்
நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும்
மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை
அன்புற உணர்த்தலும் வாழ்க்கை நன்றுஅறைதலும்
மணமனைச் சென்று வந்த செவிலி
பொற்றொடி கற்பியல் நற்றாய்க்கு உணர்த்தலும்
நன்மனை வாழ்க்கைத் தன்மனை உணர்த்தலும்
அன்னவர் காதல் அறிவித்தலும் எனும்
இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே 203
4.5 பரத்தையிற் பிரிவின் வகை
வாயில் வேண்டல் வாயில் மறுத்தல்
வாயினேர் வித்தல் வாயின் நேர்தல் என்று
ஆய பரத்தையின் அகற்ச்சி நால் வகைத்தே 204
4.6 ஊணர்த்த உணரும் ஊடல் கிளவி நிரல்
காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு
ஏது ஈதாம் இவ்விறைவிக்கு என்றலும்
தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கலும்
ஈங்கு இது என் என பாங்கி வினாதலும்
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுக்குணர்த்தலும்
தலவியைப் பாங்கி கழறலும் தலைவி
செவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறலும்
பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர்
உலகியல் நோக்கி விடுத்தலில் தலைவன்
வரைவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதலும்
வரவுணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும்
முதிரா மென்முலை எதிர் கொண்டு பணிதலும்
புணர்ச்சியின் மகிழ்வும் என்றுரைத்த பன்னொன்றும்
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய 205
4.7 ஊணர்த்த உணரும் ஊடல் கிளவி நிரல்
வெள்ளணி அணிந்து விடுத்துழிப் புள்ளணி
மலைவேல் அண்ணல் வாயில் வேண்டலும்
தலைவி நெய்யாடியது இகுளை சாற்றலும்
தலைவன் தன் மனத்து உவகை கூறலும்
தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றலும்
தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும்
பாணன் முதலாப் பாங்கன் ஈறாப்
பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி
மறுத்தலும் விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண்டு
இறையோன் மகிழ்தலும் இறைமகள் விருந்து கண்டு
ஒளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்
சீறேல் என்றிவள் சீறடி தொழலும் இ·து
எங்கையர் காணின் நன்று என்றலும்
அங்கு அவர் யரையும் அறியேன் என்றலும்
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தலும்
தாமக் குழலியை பாங்கி தணித்தலும்
தனி யாளாகத் தலைமகன் ஊடலும்
அறிவளைப் பாங்கி அன்பிலை கொடியை என்று
இணர்தார் மார்பனை இகழ்தலும் பிறவும்
ஊணர்த்த உணரா ஊடற்கு உரிய 206
4.8 இதன் தொடர்
ஆயிழை மைந்தனும் ஆற்றாமையுமே
வாயிலாக வரவு எதிர் கோடலும்
மணந்தவன் போனபின் வந்த பாங்கியோடு
இணங்கிய மைந்தனை இனிதில் புகழ்தலும்
தலைவனைப் புகழ்தலும் சிலைநுதல் பாங்கி
மனைவியைப் புகழ்தலும்இனையவை பிறவும்
அனைவகை மொழிந்த அதன்பாற்படுமே 207
4.9 பரத்தையின் பிரிவின் விரி
மூன்று சூத்திரத்து மொழிந்தவை எல்லாம்
ஆன்ற பரத்தையின் அகற்சியின் விரியே 208
4.10 பல்வகைப் பிரிவினுக்குரிய கிளவிகள்
பிரிவு அறிஉறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன் படுத்தல் பிரிவு உடன் படுதல்
பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை
வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று
ஒருமையிற் கூறிய ஒன்பது வகைய
கல்வி முதலா எல்லாப் பிரிவும் 209
5 ஒழிபியல்
5.1 ஒழிபின் இயல்
ஒழிபெனப் படுவ தகப்பாட்டு உறுப்பும்
வழுவும் அமைவும் தழுவியது ஆகும் 210
5.2 அகப் பாட்டு உறுப்பு இவை
திணையே கைக்கோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் பயனே முன்னம்
மெய்ப்பாடு எச்சம்பொருள்வகை துறை என்று
அப்பால் ஆறிரண்டு அகப் பாட்டு உறுப்பே 211
5.3 திணை-கைக்கோள்
அவற்றுள்
முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும் 212
5.4 களவில் கூற்றில் உரிமை
தலைவன் தலைவி பார்ப்பான் பாங்கன்
பாங்கி செவிலி என்று ஈங்கு இவ்அறுவரும்
சாற்றிய களவில் கூற்றிற்கு உரியர் 213
5.5 கற்பில் கூற்றில் உரிமை
நற்றாய் கண்டோர் பாணன் கூத்தர்
விறலி பரத்தை அறிவர் என்று எழுவரும்
அறுவர் என்ற அவரும் ஆகிய அனைவரும்
குறைவறு கற்பில் கூற்றிற்கு உரியர் 214
5.6 கூற்றில் உரிமை இன்மை
பயந்தோன் தன்னை உயங்கு நோய் அறிவொர்
ஊரவர் அயலோர் சேரியோர் என்று இவர்
முகத்துரை நிகழா அகப்பொருள் அகத்தே 215
5.7 தலைவன் கூற்று ஓர் வகை
தமர் வரின் இ¨Sடச்சுரம் தன்னில் கிழத்தியோடு
அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும் 216
5.8 தலைவி கூற்று ஓர் வகை
உடன்போய் மீண்ட கொடுங்குழை மடந்தை
பிரிவுழித் தலைவனொடு சுரத்தியல் பேசலும்
பிரிவுழி நெஞ்சொடும் பிறரெடும் வருந்திச்
சொல்லும் உரியள் சொல்லுங் காலை 217
5.9 நற்றாய் கூற்று இன்மை
தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள் 218
5.10 நற்றாய் கூற்று
புணர்ந்து உடன்போயது உணர்ந்த பின்னர்
அந்தணர் தெய்வம் அயலோர் அறிவர்
சிந்தைநோவு அறிவோர் செவிலி பாங்கியொடு
கண்டோர்க்கு உரைக்கும் பண்புடை நற்றாய் 219
5.11 செவிலிக் கூற்று
தாயொடும் பாங்கி தான் முதலாரொடும்
சேயிழை செவிலியும் செப்பும் ஆங்கே 220
5.12 கண்டோர் கூற்று
தாயர் பாங்கியர் தலைவன் தலைவியோடு
ஏயும் என்ப கண்டோர் கூற்றே 221
5.13 ஏனையோர் கூற்று
சாற்றா எழுவரும் தலைவன் தலைவியோடு
ஏற்றன கூறுப இடந்தொறும் இடந்தொறும் 222
5.14 தலைவி கூற்று-வேறு
நெஞ்சு நாணு நிறைசேர் அறிவும்
செஞ்சுடர் பருதியும் தங்களும் மாலையும்
புள்ளும் மாவும் புணரியும் கானலும்
உள்ளுறுத்தியன்றவும் ஒழிந்தவை பிறவும்
தன்சொல் கேட்குந போலவும் ஏவல்
செய்குந போலவும் தோற்றுந போலவும்
மொய்குழல் கிழத்தி மொழிந்தாங்கு அமையும் 223
5.15 யாவரின் கூற்று-வேறு
இறையோன் முதலோர் யாரொடும் இன்றித்
தம்மொடு தாமே சாற்றியும் அமைப 224
5.16 கிழவன்/கிழத்தி கூற்று கேட்போர்
கிழவோன் கூற்றும் கிழத்திக் கூற்றும்
பழமறையொன் முதல் பதின்மரும் கேட்ப 225
5.17 மறையோன் /அறிவர் கூற்று
இறையோன் முதலா எனைவரும் கேட்ப 226
5.18 இடம்
நெற்¢ப்படு கருமம் நிகழ்வழி இடமே 227
5.19 காலம்
சென்றதும் நிகழ்வதும் எதிர்வதும் எனமுறை
நின்று பொருஞ் உணர நிகழ்வது காலம் 228
5.20 பயன்
இப்பொருள் பயக்கும் இ·து என்பதுவே 229
5.21 முன்னம்
இன்னார்க்கு இன்னுழி இன்னது பயக்கும் எனும்
முன்னம் தருவது முன்னம் ஆகும் 230
5.22 மெய்ப்பாடு
நகை முதலாம் இருநான்கு மெய்பாடும்
நிகழ்பொருள் மெய்ப்பட நிற்ப மெய்ப்பாடே 231
5.23 எச்சம்
சொல்லே ஆயினும் குறிப்பே ஆயினும்
செல்லி முடித்தல் வேண்டுவது எச்சம் 232
5.24 பொருள்
ஒருதிணைக்கு உரிமை பூணா நிலைமை
பொருள்வகை என்மனார் புலமையோரே 233
5.25 துறை
சொல்லிய அல்ல ஒன்றினும் அவற்றோடு
ஒல்லும் வகைதேர்ந்து உணர்த்தி இயல் வழாமல்
உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி
உரைக்கும் கவியே உரைப்பது துறையே 234
5.26 எச்சம் வேறு
அவற்றுள்
எச்சம் இன்றியும இயையும் என்ப 235
5.27 அகப்பாட்டு பொருளாவன
உவமைப் பொருளும் இறைச்சிப் பொருளும் என்று
இருவகைப் பொருளும் எய்தும் அகப்பாட்டினுள் 236
5.28 உவம வகை
உள்ளுறை உவமம் வெளிப்படை உவமம் என
எள்ளரும் உவமம் இருவகை உடைத்தே 237
5.29 உள்ளுறை உவம இயல்
அவற்றுள் உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும் 238
5.30 வெளி உவமம்
வெளிப்படை உவமம் வினை பயன் மெய்யுரு
வெளிப்பட நின்று விளங்குவது ஆகும் 239
5.31 இறைச்சிப் பொருள் இயல்
கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே 240
5.32 அகப்புற கைக்கிளை
காமம் சாலா இளமையோள் வயில்
குறிப்பு அறிவுறாது குறுகி ஆங்கு அவளோடு
இறப்பக் கூறுவது அகப்புறக் கைக்கிளை 241
5.33 இதனுக்கு உரியோர்
அதுவே
இறைமையில்லோர்க்கும் இழிகுலத்தோர்க்கும்
முறைமையின் உரித்தே முன்னுங்காலை 242
5.34 அகப்பொருள் பெருந்திணை
அகன்றுழிக் கலங்கலும் புகன்ற மடற்கூற்றும்
குறியிடையீடும் தெளிவிடை விலங்கலும்
வெறிகோள் வகையும் விழைந்து உடன் போக்கும்
பூப்பியல் உரைத்தலும் பொய்ச்சூள் உரையும்
தீர்ப்பு இல் ஊடலும் போக்கழுங்கு இயல்பும்
பாசறைப் புலம்பலும் பருவம் ஆறுபடுதலும்
வன்புறை எதிர்ந்து மொழிதலும் அன்புறு
மனைவியும் தானும் வனமடைந்து நோற்றலும்
பிறவும் அகப்பொருள் பெருந்திணைக்கு உரிய 243
5.35 அகப்புறப் பெருந்திணை
மடல் ஏறுதலொடு விடைதழால் என்றா
குற்றிசை தன்னொடு குறுங்கலி என்றா
சுரநடைதன்னொடு முதுபாலை என்றா
தாபத நிலையொடு தபுதார நிலை எனப்
புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின்
அகன்ற அகப்புற பெருந்திணை ஆகும் 244
5.36 அகப்பாட்டுடைத் தலைவர்
பாட்டுடைத்தலைவன் கிளவித் தலைவன் எனப்
பாட்டினுள் பாடப் படுவோர் இருவர் 245
5.37 இதனுள் உயர்வு
அவருள்
உயர்ந்தோர் பாட்டுடைத் தலைவன் ஆகும் 246
5.38 பாட்டுடைத் தலைவர்க்கு இடுவன
நிலைப்பெயர் வினைப்பெயர் பண்புகொள் பெயரொடு
குலப்பெயர் இயற்பெயர் கூறுப அவர்க்கே 247
5.39 இசையா பெயர்
அவற்றுள்
இயற்பெயர் கிளவித் தலைவற்கு இசையார் 248
5.40 தலைமக்கள் வருகை
இருவரும் ஒருங்கே வருதலும் தனித்தனி
வருதலும் இருவரும் வாராது ஒழிலும்
உரிய என்மனார் உணர்ந்திசினோரே 249
5.41 அகப்புறப்பாட்டிற்காகும் நெறி
அகப்புறப்பாட்டும் இகப்பில அவையே 250
5.42 முதல் கரு உரி இவையின் வழு அமைதி
முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய 251
5.43 அதிகார புறநெறி
கூறிய அல்ல வேறு பிற தோன்றினும்
கூறிய அவற்றொடும் கூட்டிமெய்கொளக்
கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே 252
நாற்கவிராச நம்பியின்
அகப்பொருள் விளக்கம் முற்றிற்று