தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > உமறுப் புலவரின் சீறாப்புராணம் - காண்டம் 1  (விலாதத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 596) > பாடல்கள் (597-1240)  > காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்)  பாடல்கள் (1-698 ) > பாடல்கள் (699 - 1104) > காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 607)பாடல்கள் (608-1403)


ciRAppurANam of umaRup pulavar
Canto 2 part 2 (verses 699 - 1104)
 

உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்)
படலங்கள் 9 -21 / பாடல்கள் (699 - 1104)



Acknowledgements:
Etext preparation: Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Dr. Ram Ravindran, Indianapolis, Indiana, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


2.9

தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்

(699 - 733)

மின்பதிப்பு

2.10

ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்

(734 - 774)

மின்பதிப்பு

2.11

ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம்

(775- 811)

மின்பதிப்பு

2.12

மானுக்குப் பிணை நின்ற படலம்

(812 - 883 )

மின்பதிப்பு

2.13

ஈத்தங்குலை வரவழைத்த படலம்

(884 - 900 )

மின்பதிப்பு

2.14

ஒப்பெழுதித் தீர்ந்த படலம்

(901- 939)

மின்பதிப்பு

2.15

புத்து பேசிய படலம்

(940 - 951 )

மின்பதிப்பு

2.16

பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்

(952- 967)

மின்பதிப்பு

2.17

பருப்பத ராஜனைக் கண்ணுற்ற படலம்

(968-1002)

மின்பதிப்பு

2.18

அத்தாசு ஈமான் கொண்ட படலம்

(1003 -1014)

மின்பதிப்பு

2.19

ஜின்கள் ஈமான் கொண்ட படலம்

(1015 - 1057)

மின்பதிப்பு

2.20

காம்மாப் படலம்

(1058 - 1086)

மின்பதிப்பு

2.21

விருந்தூட்டுப் படலம்

(1087-1104)

மின்பதிப்பு


2.9 தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் (699 - 733)

699

மருமலர் சுமந்து தேன்வழிந் தொழுகு
மணிப்புய முகம்மது நபியுந்
தெரிதருந் தீனி னெறிமுறை யவருஞ்
சிந்தையிற் களிப்பொடுஞ் சிறப்ப
வரியமெய்ப் பொருளை முறைமுறை வணங்கி
யற்றையிற் கடன்கழித் தமரர்
திருவடி பரவத் தம்முயி ரனைய
செல்வரோ டுறைந்திடுங் காலை.

2.9.1

700

பூரணக் களப கனதன மடவார்
பொருதிரைக் கவரிகா லசைப்ப
வாரணி முரச மதிர்தரச் சீறு
மடங்கலின் கொடிமுனங் குலவ
வாரணத் தலைவர் மருங்கினிற் பிரியா
தரசர்க ளுடன்வரத் தொலையாக்
காரணக் குரிசின் முகம்மதி னிடத்தில்
வந்தனன் ஹபீபெனு மரசன்.

2.9.2

701

செம்மலர்ப் பதத்தில் வெண்கதிர் குலவுஞ்
செழுமணி முடிசிரஞ் சேர்த்தித்
தம்மினத் தவர்க ளூடன்சலா முரைத்துத்
தக்கதோ ரிடத்துநின் றவனை
வம்மெனத் திருவா யுரையருள் கொடுத்து
முகம்மது மருங்கினி லிருத்தி
வெம்மையி னமுதக் கனியெனுங் கலிமா
விளம்புக வெனவிரித் துரைத்தார்.

2.9.3

702

நன்றெனப் புகழ்ந்து மனங்களித் தெழுந்து
நரபதி திமஷ்கினுக் கரசன்
வென்றிகொ ளரசே யினமொரு வசனம்
வினவுதல் வேண்டுமென் னிடத்தி
லென்றவ னுரைப்ப முகம்மது நபியு
மின்புறு முறுவல்கொண் டினிதாய்த்
துன்றுமென் மனத்திற் றெரிந்துன் மகடன்
றொல்வினை தௌிப்பதற் கென்றார்.

2.9.4

703

ஆண்டகை யுரைத்த புதுமொழி நறுந்தே
னகத்தினிற் புகுந்துடல் களித்து
வேண்டுநற் பதவி படைத்தனன் சிறியேன்
விளைத்திடும் பவக்கட றொலைத்தேன்
காண்டகாப் புதுமை யனைத்தையுந் தெரிந்தேன்
கடிகம ழணிமலர்ப் பதத்தைத்
தீண்டவும் பெற்றே னினியரும் பொருளொன்
றிலையென வுரைத்தனன் றிறலோன்.

2.9.5

704

புதியவன் றூதர் முகம்மதுந் திமஷ்கைப்
புரந்திடு மருந்தவத் தவனு
மதுரமென் மொழியா லளவளா யுளங்கண்
மகிழ்ந்தினி திருக்குமக் காலை
ககனிழிந் தரிய பெருஞ்சிறை யொடுக்கிக்
கடிதினிற் கண்ணிமைத் திடுமுன்
செகதலத் துறைந்த நபியிடத் துவந்தார்
தெரிமறை கொடுஜிபு ரீலே.

2.9.6

705

மருங்கினி லெவர்க்குந் தோன்றிடா துறைந்து
வல்லவன் சலாமெடுத் தியம்பிப்
பெருங்குலம் விளக்கு முகம்மதை நோக்கிப்
பிறழ்ந்துருத் தோன்றிலாத் தசையை
நெருங்குவெண் கொடிக்கஃ பாவிடத் தேகி
நிரைமயிர்ப் போர்வையான் மூடி
யருங்கதிர்க்கல சத் தாபுஸம் ஸத்தி
னரியநீர் கரங்கொடு தௌித்தே.

2.9.7

706

இறைவனை நோக்கித் துஆவிரந் தினிரே
லிலங்குருத் தோன்றுமென் றிசைத்துச்
சிறைநிறந் தோன்றா தமருல கதனில்
ஜிபுறயீ லேகிய பின்னர்
கறைநிறங் குலவுஞ் செழுங்கதிர் வடிவேற்
கரதல முகம்மது நயினா
ரறைமுர சதிரத் திமஷ்கிறை யவனு
மெழுந்தன ரரியகஃ பாவில்.

2.9.8

707

வானவ ரிறையோ னருட்படி யமைத்த
மக்கமா நகரியி னாப்பண்
கானலர் பொதுளுங் ககுபத்துல் லாவிற்
கடிமதிட் புறத்தொரு பாலில்
தீனவ ருடனு மணிபெற விருந்து
செவ்வியன் ஹபீபினை நோக்கி
யீனமற் றுனது மகவெனுந் தசையை
யிவண்கொடு வருகவென் றிசைத்தார்.

2.9.9

708

அந்தநன் மொழிகேட் டடற்படை மாலிக்
கருளிய ஹபீபெனு மரசன்
சிந்தையிற் களித்து மருங்குநின் றவரைத்
திண்ணிய தசையினைக் கொணர்கென்
றுந்திட வுரைப்ப வோடினர் சிலவ
ருறுபொருட் பொதிந்தெனப் பொதிந்து
தந்தபெட் டகத்தி னொடுமெடுத் துவந்தார்
தனுவிடு சரத்தினுங் கடிதின்.

2.9.10

709

முன்னுறப் பணித்த பெட்டகத் திருந்த
முதிர்தசைக் கட்டியை யெடுத்து
மன்னிய குரிசின் முகம்மது நபிமுன்
வைத்தனர் சுரிகுழற் கருங்கண்
மின்னெனப் பிறழு மடந்தைய ருடனும்
விரிதிரைப் பசுங்கட லனைய
வந்நகர் மாக்க ளனைவரும் விரைவி
னடுத்ததி சயித்திட வன்றே.

2.9.11

710

கடல்கிடந் துடுத்த பெரும்புவி யிடத்திற்
கண்டறி யாப்பெருங் காட்சி
மடலவிழ் கமல வாவிசூழ் திமஷ்கு
மன்னவன் மகவெனப் பிறந்து
மிடலுறுங் கதிர்வாண் முகம்மது பொருட்டால்
விளைக்குங்கா ரணத்தினுக் கிருந்த
வுடலெனுந் தசைத னுயிரலா தியைந்தோ
ருறுப்பெனும் வடிவுபெற் றிலவே.

2.9.12

711

பொருந்துறுங் குறிப்பொன் றணுவினு மிலதாய்ப்
பொருவறும் புதுமையி னெதிரி
னிருந்தவத் தசையை முகம்மது நோக்கி
யிறைவ னருளெனக் குறித்துத்
திருந்துற மயிரின் போர்வையிற் போர்த்துச்
செங்கரத் தரியநீ ரேந்தி
மருந்தினு மமர ரமுதினுஞ் சிறப்ப
மகிழ்வொடுந் தௌித்துநின் றனரால்.

2.9.13

712

மணியெனச் சிறந்து மலரின்மென் மையவா
மழைச்செழுங் கரங்களை யேந்தி
யணிதரப் போற்றிக் கனிந்தற நெகிழ்ந்த
வகத்தினி லரியநா யகனைத்
தணிவிலா துயர்த்திப் பலபல புகழாற்
சாற்றிநன் னெறிமுறை தவறாப்
பணிபணிந் திரந்தார் தீனிலை நிறுத்தும்
பதுமமென் பதமுகம் மதுவே.

2.9.14

713

பூதலத் தெவர்க்கு மறைநெறி புதுக்கிப்
பொருவருஞ் சுவனநா டளிப்பத்
தூதென வுதித்த முகம்மதின் துஆவைத்
துய்யவ னுறக்கபூ லாக்கப்
பாதகக் குபிரர் மனம்பதை பதைப்பப்
பலன்படாப் பெருந்தசைத் திரட்சி
தீதறத் தோன்று மவயவஞ் சிறப்பத்
தெரிவையின் றிருவுரு வெடுத்த.

2.9.15

714

வரியிழை மயிர்ப்போ ருவையெனுங் கரிய
வல்லிரு ளிடையெழு மதிபோல்
விரிகடற் பெருநீ ருண்டுசூ லுளைந்த
விசும்பிடை யுதித்தமின் குலம்போ
லரியின நறவுண் டலம்புகுங் குமத்தா
ரணிபுய முகம்மதின் கலிமாத்
தெரிதரப் பவள விதழ்திறந் தோதிச்
செறிதரு மவையிடத் தெழுந்தாள்.

2.9.16

715

விண்ணகத் தரம்பைக் குலத்தினும் வடிவாய்
விரிகடன் மகளினும் வியப்பாய்
மண்ணகத் துறையு மெழுவகைப் பருவ
மடந்தைய ரணிந்திடு மணியாய்க்
கண்ணினுக் கடங்கா தழகினைச் சுமந்த
கனியுரு வெடுத்தகாட் சியதாய்ப்
பெண்ணலங் கனிந்து நலனெழில் பிறங்கப்
பெருநிலத் தெழுந்துநின் றனளே.

2.9.17

716

மங்குலிற் பெருகி விடத்தினுங் கருகி
வரியற லினுமினு மினுத்துத்
தங்கிய யிதழித் திரளினுந் திரண்டு
சைவலத் தொடரினுந் தழைத்துக்
கொங்குறக் குழன்று நெறித்துவார்த் தொழுகிக்
குவலயத் திளைஞர்கண் வழுக்க
வெங்கணன் னயினார் முன்னைநா ளழைத்த
விருளினு மிருண்டமைக் குழலாள்.

2.9.18

717

கீற்றிளம் பிறையுங் கணிச்சியின் வளைவுங்
கிளர்ந்தசெவ் வகத்தின்மென் மலருந்
தோற்றிடத் தோற்றி விளங்குநன் மலருந் தோற்றிடத்
தோற்றி விளங்குநன் னுதலாள் சுடருமுள் வாரணத் தலகு
மாற்றருந் தனுசுங் கருங்கொடி யெதிர்வு
மாற்றிமைக் கட்கடற் கரையின்
மேற்றிகழ் கரிய பவளமென் கொழுந்தாய்
விளங்கிய செழும்புரு வத்தாள்.

2.9.19

718

மடற்குழை கிழித்துத் தடக்குழல் குழைத்து
வரியளி யினச்சிறைப் படுத்திக்
கடற்குளந் தேறா தலைதரச் செய்து
கணையயில் கடைபடக் கறுவி
விடத்தினை யரவப் படத்திடை படுத்தி
மீனினம் பயப்படத் தாழ்த்தித்
திடக்கதிர் வடிவா ளெனக்கொலை பழகிச்
செவந்தரி படர்ந்தமை விழியாள்.

2.9.20

719

வள்ளையை வாட்டி யூசலை யசைத்து
மண்ணெழி லாடவ ருயிரைக்
கொள்ளைகொண் டுடலங் குழைப்பதற் கன்றோ
குழையெனும் பெயரிடுங் குழையா
ளெள்ளையுஞ் சிறந்த குமிழையும் வாசத்
தினியசண் பகமலர் தனையும்
விள்ளருங் கானத் திடையலர் படுத்தி
விலங்கிட விலங்கிய குமிழாள்.

2.9.21

720

வெண்னிலாத் தரள நகைநிரை பொதிந்து
விரிந்தசெம் பவளமோ விலவோ
வண்ணவாய்ச் செழுஞ்சே தாம்பலின் மலரோ
வடிவுறு தொண்டையங் கனியோ
வெண்ணிநோக் கினருக் குவமையி னடங்கா
தெழில்குடி யிருந்தமு தொழுகிப்
பண்ணெலாஞ் சுவற்றி யாடவ ரிருகட்
பார்வையிற் செவந்தமெல் லிதழாள்.

2.9.22

721

முல்லையு முருந்து நிரைத்தன போன்று
முத்தெனத் திகழ்ந்தற நெருங்கி
மெல்லெனச் செவந்த மணியினிற் பிரித்து
விளக்கியொப் பித்துவைத் தனபோல்
வில்லிடக் கவின்கொண் டிருபுறத் தொழுங்கும்
விரிந்தபூங் காவிகள் படர்ந்து
சொல்லரு மனத்தா டவர்மய லிருளைத்
துணித்திட நகைக்குமென் னகையாள்.

2.9.23

722

பாலென வௌிறாக் கனியென வழியாப்
பசுமடற் றேனெனச் சிதறா
வேலவார் குழலார் செழுங்கரத் தேந்து
மிளங்கிளி மொழியெனக் குழறா
வேலைவா ழமுதம் பிறந்தென வுலகம்
விளங்கிடப் பொன்மழை பொழியச்
சாலவு மிறந்த தருவினந் தழைப்பத்
தரவரு மினியமென் மொழியாள்.

2.9.24

723

வெய்யவ னலர்த்த விகசிதம் பொருந்தி
விரிநறைக் கமலமென் மலரிற்
செய்யவ ளிருப்ப தெனவெழில் சிறந்து
செழுங்களைக் கதிர்கள்கான் றொழுக
வையக மதிப்பத் திமஷ்கிறை யுரைத்த
வழிமுறை முகம்மதங் கழைத்த
துய்யவெண் மதிய நிகரென வுலகிற்
சொலும்படிச் சிறந்தமா முகத்தாள்.

2.9.25

724

திரளினின் மணியாய் முரல்வினின் வளையாய்ச்
செவ்விநெய்ப் பினிற்கமு கெனலாய்
விரிகதிர் மணிப்பூண் டாங்குமென் கழுத்தாள்
வேயினைக் கரும்பைமெல் லணையச்
சருவிடப் பசந்து திரண்டுமென் மையவாய்த்
தழைத்தெழில் பிறங்கிய தோளாள்
வரிவளை சுமந்தி யாழினும் வியந்து
மயிர்நிரைந் தொளிருமுன் கையினாள்.

2.9.26

725

குலிகமார்ந் தனபோ லரக்கினுஞ் சிவந்த
கொழுமடற் காந்தளங் கரத்தாள்
மலிசினைக் கௌிற்றின் வனப்பினும் வனப்பாய்
மணியணி சுமந்தமெல் விரலாள்
பொலிவுறச் சிவந்தீந் திலையெனக் கிளர்ந்து
புனக்கிளி நாசியின் வடிவாய்
நலிவிலா திளைத்த வயிரவொண் கதிராய்
நலங்கிடந் திலங்கிய வுகிராள்.

2.9.27

726

தடித்தடி பரந்திட் டெழுந்தபூ ரித்துத்
தளதளத் தொன்றொடொன் றமையா
தடர்த்திமை யாத கறுத்தகண் ணதனா
லருந்தவத் தவருயிர் குடித்து
வடத்தினு ளடங்கா திணைத்தகச் சறுத்து
மதகரிக் கோட்டினுங் கதித்துப்
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி படர்ந்த
பருமிதத் துணைக்கன தனத்தாள்.

2.9.28

727

பரிமளச் சிமிழோ குலிகச்செப் பினமோ
பசுமதுக் கலசமோ வமிர்தம்
பெருகிய குடமோ காமநீ ருறைந்த
பேரிளங் குரும்பையோ கதிரின்
முருகுகொப் பளிக்கும் வனசமென் முகையோ
முழுமணி பதித்தமென் முடியோ
கரையிலா வழகா றொழுகிய வரையோ
கவலுதற் கரிதெனுந் தனத்தாள்.

2.9.29

728

தனமெனு மிருகோட் டத்தியோ ராலிற்
றளைபடப் பிணித்தசங் கிலியோ
மனநிலை கவருங் கடிதட வரவின்
வாலணி கிடந்ததோ வலது
சினவுவிற் காமன் மலைக்குந்தன் மனைக்குஞ்
சேர்த்திய மயநடு நூலோ
வினனுட னழகு நிறைகுடி யிருந்த
விவள்வயி றணிமயி ரொழுங்கே.

2.9.30

729

பெருவரை யிடத்தி னடியுறைந் திலங்கும்
பேரெழிற் சுமந்தபொற் கொடியோ
விரிகதிர் மணிமே கலைநடுக் கோத்து
விளங்கிட நுடங்குமெல் லிழையோ
குருமுகம் மதுநன் மொழிவழி யடங்காக்
குபிர்க்குலந் தேய்ந்தெனத் தேய்ந்து
தெரிவரி தெனலா யுவமையிற் பொருவாச்
சேயிழை மடந்தைசிற் றிடையே.

2.9.31

730

கதிரொளி வழுக்கி னரம்பையைப் பழித்துக்
கவினுறுந் திரட்சியிற் கதத்த
மதமலைக் கரத்தின் வனப்பினை யழித்து
மாறரு மிருதுமென் மையினி
லிதமுறச் சிவந்த விலவினைக் கடைந்திட்
டிணையடி யணையெனப் படுத்திப்
புதுமையின் விளங்கித் தவத்துறை யவரும்
புகழ்ந்திடச் சிறந்தபொற் குறங்காள்.

2.9.32

731

அணிமுகட் டலவன் றனைமுகந் தடுத்த
வரிவரிச் சினைவராற் போன்று
மணியினிற் செறித்த தூணியும் பொருவா
வடிவதாய் வெற்றிமன் னவர்முன்
றணிவிலா திசைக்குங் காளமும் பொருவாத்
தன்மைய வாகிமென் மையவாய்ப்
பணிபல சுமந்து சிறுமயிர் நெருங்காப்
பண்புறு மிணைக்கணைக் காலாள்.

2.9.33

732

நிறைதரு தராசின் வடிவறும் பரடாள்
நிறைமணிப் பந்தெனுங் குதியாள்
பொறையொடுங் கமடத் தினம்வனம் புகுந்து
பொருவறா தைந்தையு மொடுக்கி
மறைபடத் தவஞ்செய் திணைபடற் கரிதான்
மதித்திடற் குறும்புறந் தாளாள்
கறைதரா மணியின் குலமென விரல்கள்
கவின்கொளச் சிவந்தமென் பதத்தாள்.

2.9.34

733

வனமயிற் சாயற் குலமென வெழுந்து
மரைமல ரிதழின்மேற் குலவு
மனமென நடந்து நபிமுகம் மதுத
மடிமலர்ப் பதத்தினி லிறைஞ்சி
யினியன புகழ்ந்து பலரதி சயிப்ப
வினமுகிற் கருங்குழ னெகிழப்
புனைமணி பிறழ மின்னென நுடங்கிப்
புதுமையிற் றோன்றநின் றனளால்.

2.9.35


தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 9க்குத் திருவிருத்தம்... 733



2.10 ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் (734 - 774)

734

பூங்கொடி யெனமுன நின்ற பூவையைத்
தேங்கம ழமுதவாய் திறந்து நந்நபி
வாங்குதெண் டிரைத்தடக் திமஷ்கு மன்னவன்
பாங்கினி லுறைகெனப் பரிவிற் கூறினார்.

2.10.1

735

வரிவிழிச் சிறுநுதன் மடந்தை நன்னெறிக்
குருவிடம் விடுத்தெழில் குலவச் சென்றணி
விரிகதி ரிலங்கிலை வேற்கை மன்னவன்
றிருவடி கருங்குழற் சென்னி சேர்த்தினான்.

2.10.2

736

தெண்டனிட் டெழுந்தபொன் மயிலைச் சீர்பெறக்
கண்டன னுவகையங் கடற்கு ளாயினன்
விண்டலத் தினிலாப் பதவி வெற்றியைக்
கொண்டன னெனமனக் குறைவு நீக்கினான்.

2.10.3

737

தெரிவைபின் வரத்திமஷ் கிறைவர் செவ்விய
குருசினந் நபிகொழுங் கமல மெல்லடி
பரவிநற் புகழ்சில பகர்ந்து வாக்கொடும்
வரிசையி னெறிக்கலி மாவை யோதினார்.

2.10.4

738

அரசரு மமைச்சருந் திமஷ்கி னாதிபர்
பரிகரி வீரரும் படைக்கு ழாங்களுந்
தெரிவையின் றொகுதியுஞ் சிறந்த நந்நபிக்
குரிமையி னொடுங்கலி மாவை யோதினார்.

2.10.5

739

ஈனமொன் றில்லதோ ரிறைவ னாகிய
தானவன் றனையுளத் திருத்தித் தக்கதோர்
வானவர் புகழ்முகம் மதுவை வாழ்த்திநற்
றேனெனுங் கடற்பெருந் தீனி லாயினார்.

2.10.6

740

மறைமுறை யொடுந்தின வணக்க நீங்கிலா
திறைவனைக் தொழுதிசு லாத்தி னேர்வழி
குறைவறப் படித்தருங் குபிரை நீக்கியே
முறைதவ றாப்பெரு முசுலி மாயினார்.

2.10.7

741

மானகர் திமஷ்குமன் னவருந் தம்பெருஞ்
சேனையு முகம்மதின் றிருமு னாகிச்செங்
கான்மல ரடியிணை யிறைஞ்சிக் கைகொடுத்
தானநல் லறிவராய்ப் புறப்பட் டாரரோ.

2.10.8

742

நபியெனு முகம்மதை வாழ்த்தி நன்னெறிப்
புவியெனு நகரினோர் புறத்தி னீங்கிநின்
றபுஜகில் தனையழைத் தரசர் நாயகர்
கவினுறும் பலமொழி யெடுத்துக் காட்டினார்.

2.10.9

743

மந்திர மறைமுகம் மதுவை வாக்கினிற்
சிந்தையி லிகழ்ந்தவர் நரகஞ் சேர்குவ
ரந்தமி னாயகன் றூத ராமெனப்
புந்தியிற் புகழ்வர்பொன் னுலகம் போதுவார்.

2.10.10

744

மலையென நிமிர்திமிள் திமஷ்கு மன்னவர்
நிலைகுலை மனத்தபூ ஜகில்த னெஞ்சினிற்
கலைமறை தௌிவினுங் கார ணத்தினும்
பலதர முரைத்துத்தம் பதியை நோக்கினார்.

2.10.11

745

மதகரி யிருபுற னெருங்க மாப்படை
கதழ்வொடுங் கதியொடுங் கனைத்து முன்செலப்
பதலையு முரசமும் பம்பக் கானக
நதிகளுங் கடந்தய னடந்து போயினார்.

2.10.12

746

கரித்திர ளொலித்தகம் பலையுங் காவளர்
பரித்திர ளொலித்தகம் பலையும் பண்முர
சிரைத்துந் தீன்கலி மாவை யின்புற
வுரைத்திடுந் தொனிக்கட லுடைத்துக் காட்டுமால்.

2.10.13

747

கனியினுந் தேனினுங் காய்ந்த பாகினு
மினியன புதுமறை யியற்று நாவினர்
நனிபல சூழ்வர நகரை நண்ணினார்
பனிவரை யினும்புகழ் பரித்த பான்மையார்.

2.10.14

748

விண்ணுறை கொடிமதிள் திமஷ்கு மேவிய
வண்ணலும் பதிமுதி யவருக் கன்பொடு
பண்ணருந் தீன்மொழி பயிற்றி நன்னெறி
யெண்ணிலை பெறவிசு லாத்தி லாக்கினார்.

2.10.15

749

தீன்முறை நடத்திய திமஷ்கு மன்னவர்
மான்மதங் கமழ்ந்தமெய் நபிக்கு மாசிலாப்
பான்மதிக் கலைகலை பணிபொன் பட்டிவை
கூன்வெரிந் தொறுவினிற் கொடுத்த னுப்பினார்.

2.10.16

750

நிதிமணி பணிபல நிறைந்த வொட்டகப்
பொதிபதிற் றொடுபரற் புடவி நீந்திவான்
மதிநடந் துலவிய மக்க மாகிய
பதியினுக் கடுத்தொரு பாலுற் றாரவர்.

2.10.17

751

அருமறை நபிமுகம் மதுவுள் ளன்புறக்
குருமணி யொடுநிதி திமஷ்கிற் கொற்றவர்
வரவிடுத் தனரென வழங்கும் வாசகந்
தெரிதர அபூஜகில் செவியிற் சார்ந்ததே.

2.10.18

752

மடித்தசிந் தையினெழுந் தேகி மன்னவன்
கொடுத்தனுப் பியநிதிக் குவையும் பண்டமும்
விடுத்ததிங் கெமக்கென வெகுண்டு வெஞ்சொலாற்
றடுத்தடுத் தனனபூ ஜகிலென் பானரோ.

2.10.19

753

ஹபீபா சனுப்பிய கனக மியாவையு
மபுஜகில் தடுத்தன னென்ன வாதிநூற்
புவியினில் விளக்கிநற் புகழ்ந டாத்திய
நபிதிரு முனஞ்சிலர் நவின்றிட் டாரரோ.

2.10.20

754

வேறு
உரைவி ளக்கிட முகம்மதுந் தோழர்க ளுடனும்
விரைவி னேகிப்பொன் றடுத்தவ ரெவரென வினவத்
தரையி லியானல திலையென வபூஜகில் சாற்ற
வருள்கி டந்தகட் கடைசிவப் புண்டவப் போதில்.

2.10.21

755

உனக்கு வந்தது மோங்கிய தீன்முகம் மதுசீர்
தனக்கு வந்ததுங் கொணர்ந்தவர் சொல்குவர் சரதஞ்
சினக்க வந்திவண் மறிப்பது தகுவதோ செலுநின்
மனைக்கெ னச்சிலர் கூறலு மனத்திடைக் கொதித்தான்.

2.10.22

756

மட்டு வார்பொழிற் றிமஷ்குமன் னவர்வர விடுத்த
பெட்ட கத்தையும் பொன்னையும் பிணக்கறக் கரியாய்ப்
பட்ட றத்தௌிந் துமக்கெமக் கெனப்பல ரறிய
வொட்டை வாய்திறந் துரைக்குமென் றபூஜகி லுரைத்தான்.

2.10.23

757

உரைத்த வாய்மையிங் கெமக்கியை வதுபடி றுளத்தோய்
விரித்துக் கேட்டரு ளென்றன ரபூஜகில் விரைவி
னிருத்தி யிப்பொரு ணாளையிவ் வூரவ ரறியப்
பரித்த வொட்டகங் கரிபகர்ந் திடுமெனப் பகர்ந்தான்.

2.10.24

758

நன்று நன்றெனத் தோழரு முகம்மது நபியும்
பொன்றி கழ்ந்தெழில் குலவிய மனையிடைப் புகுந்தார்
கன்று புன்மனத் தபூஜகில் கிளையுடன் கடிதிற்
சென்று வெண்மலர் செறிதரு மாலயஞ் சேர்ந்தான்.

2.10.25

759

ஆல யம்புகுந் தழியுரு வெடுத்தபுத் ததற்குச்
சால மென்மலர்த் தொடையொடும் பலபணி தரித்துக்
கோல மார்ந்தெழத் தீபமுந் தூபமுங் கொடுத்துத்
தால மீதினிற் சிரம்பட விருகரந் தாழ்த்தான்.

2.10.26

760

விழுந்து தெண்டனிட் டெழுந்திரு கரம்விரித் தேந்திப்
பொழிந்த நீர்விழி தரவிரந் தேத்திய புகழான்
மொழிந்து வல்வினை தொடுத்திடு முகம்மதின் வாய்மை
யழிந்தென் சொற்பழு தறவர மருள்கவென் றறைந்தான்.

2.10.27

761

மரைத்த டந்திகழ் திமஷ்கிறை வரவிடு நிதியந்
தரைத்த லம்புகழ்ந் திடவபூ ஜகில்தனக் கெனவே
நுரைத்துத் தூங்கித ழொட்டைவாய் திறந்தெனை நோக்கி
யுரைத்த ளித்திட வேண்டுமென் பதுமெடுத் துரைத்தான்.

2.10.28

762

எதிரி னின்றுதன் றேவதை தனைப்புகழ்ந் தேத்திக்
கதிர்கொள் பொன்முடிக் கோயிலின் வாயிலைக் கடந்த
சதியன் றன்முக நோக்குத றவறெனச் சிவந்து
கொதிகொ தித்தழன் றருக்கன்மேற் கடலிடைக் குதித்தான்.

2.10.29

763

அற்றை நாளகன் றிடமறு தினத்தபூ ஜகில்தன்
சுற்ற மோடடைந் தான்றுணைத் தோழர்க ளோடும்
வெற்றி நன்னெறி முகம்மதும் விரைவினி லேகிக்
கொற்ற மன்வர விடுத்தவ ரிடத்தினிற் கூண்டார்.

2.10.30

764

ஒட்டை வாய்திறந் துரைப்பதற் கெவர்முன முரைப்ப
திட்ட மாயுரை யெனவபூ ஜகிலுட னியம்பக்
கட்டு ரைப்படிக் கரியினை யெவர்களுங் களிப்ப
விட்டு ரைத்திடென் றுரைப்பதி யானென விரித்தான்.

2.10.31

765

நன்று கூறுமு னென்றலு மபூஜகில் நடந்து
சென்று பூம்பொழி லொட்டகை யனைத்தையுந் திரட்டி
நின்று நீவிர்கள் சுமந்திவ ணிறக்கிய நிதியம்
வென்றி மன்னவ னெவர்க்கனுப் பியதென விரித்தான்.

2.10.32

766

கேட்ட பூஜகில் நிற்பவொட் டகக்கிளை பதிற்றும்
நாட்டி வைத்திடுஞ் சிலையென நவின்றில மறுகி
மீட்டுங் கேட்டலு நவின்றில வீரமும் வலியும்
போட்டுக் கேட்டனன் பிற்றையும் புகன்றிசைத் திலவே.

2.10.33

767

பரித்த வொட்டகை பகர்ந்தில கரியெனப் பலரு
மிரைத்து மாமறை முகம்மதின் றிருமுகத் தெதிர்ந்து
பிரித்தி டாக்கரி யாய்ப்பெரு வாயினைப் பிளந்து
விரித்து ரைத்திட விளம்புமென் றெடுத்துரை விரித்தார்.

2.10.34

768

நிகர ரும்பதி முதியவர் நிகழ்த்திடும் வசன
முகம்ம தின்செவிப் புகுதலு மனமிக மகிழ்ந்து
மிகுவி தப்புது மைகடர வொட்டையை விளித்துப்
புகலு மென்றன ரபூஜகில் கெடுமனம் புழுங்க.

2.10.35

769

உரைத்த சொல்லுளந் தரித்திடக் கிடந்தவொட் டகங்க
ணிரைத்தெ ழுந்தற வளைநெடுங் கழுத்தினை நீட்டி
விரித்த வாலசைத் துவந்திரு விழிகளை விழித்துப்
பெருத்த வாய்திறந் தறபெனு மொழியினிற் பேசும்.

2.10.36

770

வரிசை நாயகன் றூதெனு முகம்மது நபியே
யரசர் கேசரி ஹபீபெனுந் திமஷ்கினுக் கரச
ரிரசி தம்பணி மணிதம னியமிவை யனைத்தும்
பரிச னத்தொடு நுமக்கனுப் பினரெனப் பகர்ந்த.

2.10.37

771

உரைத ராவிலங் கினங்கரி யுரைத்ததென் றுரவோர்
தெரித ராப்பெரும் புதுமைகொ லெனச்சிர மசைத்து
விரித ராநிறை பெருங்கடன் மேதினி யனைத்தும்
புரித ராதிப ரிவரெனப் புகழ்ந்தயல் போனார்.

2.10.38

772

மருந்தி லாப்பெரும் பிணிவளைத் தெனமதி மயங்கிக்
கரிந்து மாமுகம் வாய்வெளுத் தறத்தலை கவிழ்ந்து
திருந்தி லாமனத் தொடுஞ்சினத் தொடுஞ்செய லழிந்து
பொருந்தி லாதுதன் கிளையொடு மபூஜகில் போனான்.

2.10.39

773

கன்ன லஞ்சுவை தீனிலை நிறுத்திய ஹபீபு
மன்னர் மன்னவர் வரவிடு நிதியமு மணியு
நன்ன யம்பெறுந் தோழர்கள் சூழ்வர நயினார்
தந்ந கத்தினிற் செறித்தனர் செழும்புகழ் தழைப்ப.

2.10.40

774

மல்ல லம்புவி யிடத்தினில் தீனெறி வழுவா
தில்ல றத்தொடு முதிர்மறை யவரிர வலர்க
ளல்ல ளற்றிடப் பெருநிதி யெடுத்தினி தருளிப்
பல்ல ரும்புகழ் தரநபி யிருந்தனர் பரிவின்.

2.10.41


ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 10க்குத் திருவிருத்தம்...774



2.11 ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் (775- 811)

775

மாசி லானருள் பெருகிய மக்கமா நகரி
லாசி லாநபி தீனினை நிறுத்துமந் நாளிற்
பாச மற்றவ னபூஜகில் கிளைபல பகுப்பாய்ப்
பூச லிட்டனர் பெரும்பழி நடுநிலை புகுந்தே.

2.11.1

776

சிகையி னீண்முடி குயிற்றிவெண் கதைநடுத் தீற்றி
நகைநி லாத்தரு மேனிலை மக்கமா நகரின்
மிகைம னத்தொடு காபிர்க டினந்தொறும் விளைக்கும்
பகையி னோடரும் பஞ்சமு முடன்பரந் ததுவே.

2.11.2

777

வெறுத்த காலமுங் காபிர்க டொடுத்தவல் வினையு
மறுத்தி லாமையும் பீஸபீ லாற்களை மாய்த்து
நிறுத்துந் தீனென வேவலு மில்லையா னிதமும்
பொருத்தி ருப்பதெவ் வழியென வகத்திடைப் பொறுத்த.

2.11.3

778

சொலத்த காப்பெரும் பகைதொடுத் தினத்தொடுஞ் சூழ்ந்து
குலத்தி னும்பிரித் தறநெறி தீனிலைக் குரியோ
ரிலத்தி னும்வரப் பொருந்திலா நமரினா லினியிந்
நிலத்தி ருப்பது பழுதென மனத்திடை நினைத்தே.

2.11.4

779

மறுவி லாதநன் னெறிமறை தேருது மானை
யறிவி னாய்ந்தகு மதுதனித் தழைத்தரு கிருத்திப்
பிறவு முற்றதும் வருவது நிகழ்வதும் பேசி
யுறையு மிப்பதி பெரும்பகைக் காவன வுரைத்தார்.

2.11.5

780

உற்ற நும்மனத் துடன்பட வுறைபவ ருடனும்
வெற்றி மன்னஜா சிய்யுறை திருநகர் மேவிக்
குற்ற மின்றியங் குறைவது கருத்தெனக் குறிப்ப
மற்று வேறுரை யாதுது மானுஞ்சம் மதித்தார்.

2.11.6

781

ஷரகி றங்கிநன் னபியெனும் பெரும்பெயர் தரித்த
வருட மைந்தென வரவரு மிறஜபு மாதந்
தரும நேருது மானொடு றுக்கையா தமையு
மிருளும் போதனுப் பினர்ஹப ஷாவெனுந் தேயம்.

2.11.7

782

திருத்துந் திண்புய நபிதிரு மகளுடன் சிறப்ப
விரிந்த பூங்குழன் மடந்தையர் மூவரும் வியப்பப்
பொருந்துந் தீனவர் பதின்மரும் புகழுது மானும்
பிரிந்தி டாதுசென் றந்தநா டடைந்ததற் பின்னர்.

2.11.8

783

சந்த னந்திகழ் புயவபித் தாலிபு தவத்தால்
வந்த ஜஃபறு மவருடன் மைந்தர்கள் சிலரு
நந்து வெண்டர ளந்திகழ் நதிஹப ஷாபாற்
பிந்தி டாதொரு முறைமறை தனித்தனுப் பினரே.

2.11.9

784

அன்ன மன்னமென் னடையினர் சிறுவர்க ளல்லான்
மன்னு மாடவ ரெண்ணொரு பஃதிரு வருமாய்ப்
பொன்னு லாஹப ஷாவள நாடணி புரத்தி
லின்ன லில்லெனச் சேர்ந்தவன் மகிழ்வொடு மிருந்தார்.

2.11.10

785

உறைந்த மாந்தருக் கபஷிய ரசெனு முரவோர
னிறைந்த நன்கலை யொடும்பல வரிசையு நிதியுங்
குறைந்தி டாதெடுத் தருளிநன் மொழிபல கொடுத்துச்
சிறந்த தன்முத லினத்தினு மினத்தராய்ச் செய்தார்.

2.11.11

786

விதித்த தீனிலைக் குரியரை ஹபஷியர் வேந்தன்
மதித்து நன்கொடு முயர்த்தின னெனும்வர லாற்றைக்
கொதித்த சிந்தைய னபூஜகில் குழுவொடுங் கேட்டுக்
கதித்த சூழ்ச்சியின் வேறொரு வினைகரு தினனே.

2.11.12

787

வில்லு மிழ்ந்தசெம் மணித்தொடை திரண்டவெண் டரளம்
பல்ல வம்பொரு வாத்தம னியத்துகில் பலவுஞ்
சொல்ல ரும்மிர தச்சுவை யொட்டகச் சுமையா
மல்லு றும்புயன் கரத்தின்முத் திரையொடும் வைத்தான்.

2.11.13

788

ஓதிக் கேட்டறிந் தொழுகிமுக் காலமு முணர்ந்த
மூத றிஞரி லிருவரை யழைத்துமுன் னிருத்தி
யாத ரத்தொடு சேர்த்தநல் வரிசையு மளித்துக்
கோத றத்தௌிந் தொழுதுபத் திரத்தையுங் கொடுத்தான்.

2.11.14

789

கொடுத்து நன்மொழி கொடுத்துந ஜாசிய்யாங் கோவுக்
கடுத்து நின்றளித் திடும்வரி சைகளிவை யவன்சொற்
படுத்தி டாமதி மந்திரர்க் கிவையெனப் பகுத்து
விடுத்த னன்பெரு வஞ்சமும் படிறும் விடாதான்.

2.11.15

790

அறும னத்தின னபூஜகில் கொடுத்தவை யனைத்து
மெறுழின் மிக்குய ரொட்டக மீதினி லேற்றித்
தறுகி லாதெழுந் திருவரு மரிதினிற் சார்ந்தார்
நறவு யிர்த்ததண் டலைதிகழ் ஹபஷிநன் னாட்டில்.

2.11.16

791

சென்ற தூதுவர் வரிசைக ளனைத்தையுந் திருந்தக்
குன்றெ னத்திரள் புயனஜா சியின்முனங் குவித்து
முன்றி லிற்றனித் தெழுதிய முடங்கலை யெடுத்து
நின்று நீட்டினர் நிருபர்க ணெருங்கிய சபையில்.

2.11.17

792

வரைந்த பத்திரப் பாசுர மக்கமா நகரி
லிருந்த ஹாஷிமா குலத்தொரு வன்றலை யெடுத்து
விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளத்துத்
தெரிந்த வேதமுஞ் சமயமு நிலைகெடச் சிதைத்தும்.

2.11.18

793

குடிபொ ருந்திலா திந்நகர்க் குலம்பழு தாக்கிப்
படிப குத்திடக் கொலையொடு பாதகம் விளைத்து
முடிவி லாப்பெருந் தேவத மாலய முழுது
மடிய றுத்திடத் துணிந்தனன் முகம்மதென் பவனே.

2.11.19

794

அங்க வன்மொழிக் கொழுகின நவனினுங் கொடியோர்
பொங்கு மவ்வுழை புகுந்தனர் ஹபஷிமா புரத்தைப்
பங்க மாக்கமு னவர்களைத் தண்டனைப் படுத்தி
யெங்கி ருக்கினு மிருக்கொணா தகற்றிடு மெனவே.

2.11.20

795

இன்ன வாசக மனைத்தினுங் கேட்டவ ரெவருந்
துன்ன லார்கொலோ சிட்டரோ வெனச்சிரந் தூக்கிப்
பன்னு வாரதின் மந்திரர் பகைத்தவா சகத்தாற்
சொன்ன வாற்றினின் முடிப்பது துணிவெனத் துணிந்தார்.

2.11.21

796

அரசர் நாயகர் ஹபஷிந ஜாசியா மரசன்
பரிச னத்தவர் மொழியினும் மறிவினும் பார்த்தே
யுரைச மர்ப்பக முகம்மதின் வழியினுக் குரிய
வரிசை செய்திவ ணிருத்தலே கடனென வகுத்தான்.

2.11.22

797

மலைம னத்தபூ ஜகிலனுப் பியவெகு மானத்
தலைவ ரைத்தன திரும்பதி யிடையினிற் சாராக்
குலனு டனுமர் பதிக்கடைந் திடுமெனக் குறித்து
விலகி யங்கவர் கொண்ர்ந்தபல் பொருளையும் வெறுத்தான்.

2.11.23

798

சதும றைப்பொருண் முகம்மதின் வழியவர் தமைநல்
லிதம னத்தொடு மனுசரித் தபூஜகி லிடத்திற்
புதிய ரைப்புறம் போக்கின னெனுமொழிப் புகழை
மதுகை வேந்தபித் தாலிபு கேட்டுள மகிழ்ந்தார்.

2.11.24

799

வணக்க வாசகத் தொடும்ஹப சரசனை வாழ்த்தி
யிணக்கி நற்பொருள் பெறப்பல பயித்தெடுத் தெழுதி
யுணக்கும் புன்மனத் தபூஜகி லெழுதிய வோலைப்
பிணக்க றுத்தபித் தாலிபு கொடுத்தனுப் பினரால்.

2.11.25

800

புதிய நற்பொருள் பெறத்தெரி கவிதையின் புகழான்
மதுர வாசக மெழுதிய துணர்ந்துள மகிழ்ந்து
துதிசெ யுங்கலி மாநெறிப் படுமறைத் தூயோர்க்
கதிவி தப்பல வரிசைசெய் தபஷா சிருந்தார்.

2.11.26

801

அந்த நாளையின் மக்கமா நகரவ ரெவரும்
வந்து நற்கலி மாவுரைத் தனரெனும் வசனம்
புந்தி கூர்தரக் கேட்டனர் சிலரதிற் பொருவாச்
சிந்தை யாயினர் நகர்க்கெனத் திரும்பினர் சிலரே.

2.11.27

802

படைக்கை வேந்துது மானுடன் மனைவியும் பலருந்
தொடைக்கி ணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியி
னடக்க முன்மொழி பழுதென நவிறர நடுங்கி
யடைக்க லத்தினுங் கரவினும் பதியைவந் தடைந்தார்.

2.11.28

803

புதிதின் மூவொரு பதின்மரு மூவரும் புறத்திற்
சதிய றத்தினி யவரவர் சார்பினிற் சார்ந்தா
ரதில பூசல்மா வென்பவ ரறிவினி லுயர்ந்த
மதியின் மிக்கபித் தாலிபை யடுத்துவந் திருந்தார்.

2.11.29

804

சினத்து வன்கொலைக் காபிர்க டிரண்டிகல் செகுக்கு
மனத்தின் மிக்கபித் தாலிபு மதிமுக நோக்கி
யினத்தி னைத்தவிர்த் தபூசல்மா வென்பவன் றனைநும்
மனைத்த லத்தில்வைத் திருப்பது பழுதென வகுத்தார்.

2.11.30

805

பொய்த்த மாமறை முகம்மதை மனையிடைப் புகுத்தி
வைத்தி ருந்தனை யபூசல்மா தனையுநும் மனைக்கு
ளெய்த்து வைத்திருப் பதுபழு தெனவிக லிடராய்
மொய்த்த டர்ந்தன ரபூஜகி லொடுமுரண் மதத்தார்.

2.11.31

806

எடுக்கும் வாளயில் படைக்கலம் பலகரத் தேந்தித்
தொடுக்குங் பூசலிட் டடலபித் தாலிபைத் துரத்தி
விடுக்கு மென்பது மனையுட னகரையும் வெறுப்பக்
கெடுக்கு மென்பது மபூலகு பெனுமவன் கேட்டான்.

2.11.32

807

எனக்கு முன்னவன் றனையிடர் விளைத்திட லெனது
மனக்கு றைப்பட ரிவைதவிர்த் திடீரெனின் மதியை
நினைக்கு முன்பகி ரகுமது நெறிநிலை நிறுவிக்
கனக்க வைத்தலியா னலதிலை யெனக்கழ றினனால்.

2.11.33

808

மோதும் வாய்மையி னபூலகு பெனுமவன் முரணி
யோதும் வாசகங் குபிரவ ருளங்களை யுருவிப்
போது கின்றதென் றடர்ந்துநின் றவர்பொறி கலங்கித்
தீத கற்றியங் கவரவர் மனைவயிற் சேர்ந்தார்.

2.11.34

809

கறைத விர்ந்திடா மனக்குறை ஷியங்குலக் காபி
ரறவு நொந்தகத் தடங்கின ரெனவற முதிர்ந்து
நிறையுந் தீனிலைக் குரியவர் மகிழ்ந்தநெஞ் சினராய்
மறைப டாமுகம் மதின்வழி வளர்த்திருந் தனரால்.

2.11.35

810

அரிய நாயகன் றூதுவா னவர்க்கிறை யணுகிக்
கிரியின் மீதுநின் றரும்பெயர் நபியெனக் கிளத்தும்
வருட மாறினின் மாறுகொண் டவர்மனங் கலையத்
தெருளு மேன்மையின் முகம்மதுஞ் சிறந்திருந் தனரால்.

2.11.36

811

பொருந்த மானிலத் துலவிய புகழுசை னயினா
ரருந்த வத்தினுட் பொருளென வருமபுல் காசிம்
விரிந்த மெய்நெறிச் சிந்தையி னடுவுற விளங்கி
யிருந்த மென்மலர்ப் பதமுகம் மதுமினி திருந்தார்.

2.11.37


ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 11க்குத் திருவிருத்தம்...811



2.12 மானுக்குப் பிணை நின்ற படலம் (812 - 883 )

812

குயினிழல் பரப்பச் செவ்விக் கொழுந்தடை நறவஞ் சிந்தும்
வயிரவொண் வரையின் விம்மி வளர்ந்ததிண் புயத்து வள்ளல்
செயிரறு மறையின் றீஞ்சொற் செழுமழை பொழிந்து தீனின்
பயிர்வளந் தேறச் செய்து பரிவுட னிருக்கு நாளில்.

2.12.1

813

அரியினஞ் செறிந்த போன்ற அறபிகள் குழுவி னாப்ப
ணொருதனிச் சீய மொப்ப வுடையவன் றூதர் செல்வத்
திருநகர்ப் புறத்து நீங்கிச் செழுமுகின் முடியிற் றாங்கி
மருமலர் செறியுஞ் சோலை சூழ்ந்ததோர் வரையைச் சார்ந்தார்.

2.12.2

814

கொன்றையுங் குருந்துங் கார்க்கோற் குறிஞ்சியும் வேயுந் தற்றித்
துன்றிய நிழலு நன்னீர் சொரிதரு மிடமுஞ் செந்தேன்
மன்றலொண் மலரு நீங்கா வனந்திகழ் வரையின் கண் ண
சென்றன நெறிக்குங் காந்தி செவ்விமெய் முகம்ம தன்றே.

2.12.3

815

வனந்தரி விலங்கு மாய்த்து வன்றசை வகிர்ந்து வாரித்
தினந்தொறுங் கோலிற் கோலித் தீயிடை யமிழ்த்திக் காய்த்தித்
தனந்தனி யிருந்து நின்று தன்றசைக் பெருக்க லன்றி
யனந்தலிற் பொழுதும் வேறோ ரறிவென்ப தறிந்தி லானே.

2.12.4

816

காலினிற் கழலு நீண்ட கரியகா ளத்தின் வீக்கும்
பாலினில் வலையுங் கையிற் பருவரைத் தனுவுங் கூருங்
கோல்வெறி நணியுந் தோளிற் கூன்பிறை வாளு மென்மை
வாலுடைப் பறவை சேர்த்துங் கண்ணியு மருங்கிற் கொண்டோன்.

2.12.5

817

குறுவெயர்ப் புதித்த மெய்யுங் கொழுந்தசை மணத்த வாயும்
பறிதலை விரிப்புங் கூர்ந்த படுகொலை விழியு மாக
வறபினி லறபி வேட னடவியிற் றொடர்ந்தோர் மானைக்
கறுவொடும் வலையிற் சேர்த்திக் கட்டிவைத் திருப்பக் கண்டார்.

2.12.6

818

குழைகுழைத் தெரியுஞ் செந்தேன் கொழுமலர்க் காவை நோக்கார்
பொழிமலை யருவி நோக்கார் புறத்துநன் னிழலை நோக்கார்
செழுமுகிற் கவிகை வள்ளல் செறிதரு மீந்தின் செங்காய்
மறையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்.

2.12.7

819

அருளடை கிடந்த கண்ணு மழகொளிர் முகமுஞ் சோதி
சொரிநறை கமழ்ந்த மெய்யுஞ் சூன்முகிற் கவிகை யோடும்
வருவது தூயோன் றூதர் முகம்மது வென்னத் தேறிப்
பருவர லுழக்கு முள்ளத் தொடும்பிணை பகரு மன்றே.

2.12.8

820

நெடியவன் றூதர் வந்தார் வேடனா னிலத்தி னந்த
முடலுயிர்க் கிறுதி யில்லை யுழையினத் தோடுஞ் சேர்ந்து
கடிதினிற் கன்றுங் காண்போ மெனமுகம் மதுவைக் கண்ணா
னொடிவரை யிமைமூ டாம னோக்கியே கிடந்த தன்றே.

2.12.9

821

பொருப்பிடைத் துறுகற் சார்பிற் பொரியாரைத் தருவி னீழன்
மருப்புடைப் படலைத் திண்டோன் மன்னவ ருடனும் புக்கு
நெருப்பிடைத் தசைவா யார்ந்து நின்றவே டனையுஞ் செம்மான்
றிருப்புதற் கருங்கட் டுண்டு கிடப்பதுஞ் சிறப்பக் கண்டார்.

2.12.10

822

இடைநிலத் துருக்கி விட்ட விரசிதம் பரந்த தென்ன
மடிசுதை யமுதஞ் சிந்த வடிக்கணீர் பனிப்பத் தேங்கு
முடலகந் துருத்தி யொப்ப நெட்டுயிர்ப் புயிர்த்துக் காலிற்
றுடரொடுங் கிடப்பத் தூயோன் றூதுவ ரடுத்து நின்றார்.

2.12.11

823

கொடியடம் பிலையை மானும் குளம்பின்மேற் சுருக்கும் புள்ளிப்
பொடியுடற் பதைப்பும் வீங்கிப் புதையுநெட் டுயிர்ப்பு நோக்கி
நெடியவ னிறசூ லுல்லா நெஞ்சுநெக் குருகிக் கானின்
பிடிபடு மானின் றன்பாற் பேரருள் சுரப்ப நின்றார்.

2.12.12

824

கதிர்விரி ஹபீபு நிற்பக் கானகத் தருக்க ளியாவும்
புதுமல ரலர்த்திச் செந்தேன் பொழிவமான் வருத்த நோக்கி
விதிர்சினைக் கரங்கள் சாய்த்து மென்றழைக் கூந்தல் சோர
மதியழிந் திரங்கிக் கண்ணீர் வடிப்பன போன்ற தன்றே.

2.12.13

825

குலத்தொடும் பறவை தத்தங் குடம்பையிற் புகுதன் மானை
நிலத்திடைக் கிடத்திக் கட்டி நின்றவேட் டுவனைக் கண்ணா
னலத்தொடுங் காண்ப தாகா தெனநடு நடுங்கி யுள்ள
முலைத்தறப் பெடையி னோடு மொளிப்பன போன்ற தன்றே.

2.12.14

826

ஏட்டலர் நறவ மாந்தி யிருஞ்சுரும் பிசைக்குந் தோற்றம்
வாட்டமின் முகம்ம திங்ஙன் வந்தனர் வருந்து மானை
மீட்டனர் வேட னீமான் விரும்பினன் பயங்க டீர்த்தார்
கூட்டுறைந் தொளித்தன் மாற்று மெனப்பல கூய போலும்.

2.12.15

827

நிறைவளஞ் சுரந்த கானி னின்றநந் நபியை நோக்கிக்
குறியவா லசைத்து நீண்ட கொழுங்கழுத் துயர்த்தி நீட்டி
மறைபடா மதியே வண்மை முகம்மதே யென்னப் போற்றித்
தறுகிடா தெவர்க்குங் கேட்பச் சலாமெடுத் துரைத்துக் கூறும்.

2.12.16

828

வல்லவ னுண்மைத் தூதே மன்னுமா நிலத்தின் மாந்த
ரல்லலை யகற்றி வேதத் தறநெறி பயிற்றிச் சொர்க்கத்
தில்லிடைப் புகுத்தப் பூவி னிடத்தினி லுதித்த கோவே
யொல்லையி னெனது சொற்கேட் டுவந்தரு ளளிக்க வேண்டும்.

2.12.17

829

என்னுயி ரெனநீங் காத வினமுமென் கலையுங் கன்றுந்
துன்னிடத் திரண்டு பைம்புற் றுறைதொறு மேய்ந்து நாளு
முன்னிய பசிக டீர்த்தோர் மிருகங்கட் குயிர்கொ டாமன்
மன்னிய மலையின் சார்பு மனப்பய மகற்றி வாழ்ந்தேம்.

2.12.18

830

இருநிலத் தாசைக் காயோ ரிளங்கன்றென் வயிற்று றாதான்
மருவிய கலையு நானும் வருத்தமுற் றிருக்குங் காலம்
பெருகுதீன் முகம்ம தேநும் பெயரினைப் போற்றல் செய்தே
னுருவமைந் திளஞ்சூன் முற்றி யுதரமும் வளர்ந்த தன்றே.

2.12.19

831

தனியனென் னுயிருங் காக்குங் கலையுயிர் தானு மொன்றா
யினிதினொன் றாய தென்ன விளங்கன்றொன் றீன்றே னின்ப
நனிகளி கடலி லாழ்ந்து நறுமலை யிடத்திற் சேர்ந்து
துனிபல வகற்றி னேன்முன் சூழ்வினை யறிகே லேனே.

2.12.20

832

உள்ளுயி ரனைய கன்று மொருத்தலு மியானு மோர்நாள்
வெள்ளமொத் தனைய மானி னினமோர் வெற்பின் சார்பி
னள்ளிலை யள்ளி வாய்கொண் டரும்பசி தடிந்து நீருண்
டெள்ளள வெனினு மச்ச மின்றிநின் றுலவு நேரம்.

2.12.21

833

அத்திசைக் கெதிரின் மேல்பா லடுத்தொரு குவட்டின் கண்ணே
மத்தகக் கரியு மாய்க்கும் வரிப்புலி முழக்க நீண்ட
குத்திரத் தசனித் தாக்கின் குவலய மதிரக் கேட்டுத்
தத்தியெத் திசையுந் திக்குந் தனித்தனிச் சிதறி னேமால்.

2.12.22

834

கூடிய தூறும் பாரிற் குளித்திடக் குதித்து வல்லே
யோடிய திசையி னொன்றை யொன்றுகாண் கிலதா யானும்
வாடிய மனத்தி னோடு மறியையு நோக்கா தாக்கை
யாடியிற் றுரும்பாய் வேறோ ரடவியி னடைந்திட் டேனால்.

2.12.23

835

அடவியி னடையுங் காலை யவ்வுழைக் கரந்திவ் வேடன்
றுடரிடும் வலையைச் சுற்றிச் சுருக்கிடப் புலிவாய்த் தப்பி
மிடலரி யுழையிற் சிக்கி மிடைந்தென மிடைந்து செவ்வி
யுடலுயிர் பதைப்பத் தேம்பி யுணர்வழிந் தொடுங்கா நின்றேன்.

2.12.24

836

வலையிடத் துறைந்த தென்ன மகிழ்ந்தெழுந் தோடி வந்து
நிலைபெற வடுத்துச் சாய்த்து நின்றெனை நோக்கி யாகத்
துலைவுறும் பசிக்கின் றென்பா லுற்றனை யென்னக் கூறிச்
சிலகணை நிலத்திற் சேர்த்தித் தெரிந்தொரு பாசந் தொட்டான்.

2.12.25

837

திருக்கற நாலு தாளுஞ் செவ்விதிற் கூட்டி யங்கை
வரிக்கயி றதனாற் சுற்றி மாறுகொண் டீழ்த்துக் கட்டிக்
சரிக்கர மென்ன நீண்ட கரத்தினாற் றாங்கி முன்னர்ச்
சுருக்கிய வலையை நீக்கித் தோளினி லெடுத்துக் கொண்டான்.

2.12.26

838

சுவைமுனைக் கோட்டுச் செவ்விக் கலையுட லுயிரு மீன்ற
நவியுட லுயிரு மோர்மா னுடன்கொண்டு நடப்ப தொத்துச்
சவிபுறந் தவழுங் கோட்டுச் சார்பிலிவ் வனத்தின் கண்ணே
சுவையறு மொழியா னென்னைச் சுமந்திவ ணிறக்கி வைத்தான்.

2.12.27

839

கட்டுடன் கிடந்து நெஞ்சிற் கவலையுள் ளழிந்து மாறா
நெட்டுயிர்ப் பெறிந்து சோர்ந்து நிலத்திடைக் கிடக்கு நேரம்
வட்டவெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே யும்மைத்
திட்டியிற் றெரியக் கண்டேன் றிடுக்கமுந் தீர்ந்த தன்றே.

2.12.28

840

எனவினை யுரைத்துப் பின்னு மெழினபி முகத்தை நோக்கி
மனநிலை வாக்கி னோடு முகம்மதே யென்னப் போற்றிப்
புனமுறை விலங்கின் சாதி யாயினுந் தமியேன் புன்சொற்
றனையருட் படுத்திக் கேட்பீ ரென்றுரை சாற்றிச் சாற்றும்.

2.12.29

841

இச்சிலை வேடன் கையி னிறத்தலை யுளத்தி லெண்ணி
யச்சமுற் றுரைப்ப தன்றிவ் வவனியிற் சீவ னியாவு
நிச்சய மிறத்த லல்லா லிருப்பவை நிலத்தி லுண்டோ
முச்சகம் விளங்குந் தீனின் முதன்மறை முறைமைச் சொல்லோய்.

2.12.30

842

கலையெனப் பிரிவி லாது கண்ணிமை காப்ப தென்ன
வலைவறக் காப்பச் சின்னா ளவனியிற் கலந்து வாழ்ந்தேன்
குலவிய மறியு மீன்றேன் குறித்தினி யிருப்ப தென்கொ
லிலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன் மன்னோ.

2.12.32

843

அடவியிற் கிரியில் வீணி லவதியுற் றிறந்தி டாமல்
வடிவுடைக் குரிசி லேநும் மலர்ப்பதச் செவ்வி நோக்கிப்
படுபரற் கானில் வேடன் பசிப்பிணி தீர்ப்ப தாக
வுடலிறத் திடுத லெவ்வெவ் விறப்பினு முயர்ச்சி மேலோய்.

2.12.33

844

வரிப்புலி முழக்கங் கேட்டு மானினஞ் சிதறித் தத்தந்
தரிப்பிட மறியா தொன்றுக் கொன்றுடன் சாரா தெங்கு
முரைப்பரி தென்னப் போந்த தாலென தொருத்த றேடி
யிரைப்பறா நெடிக்கான் போய்ப்போ யிருந்ததோ விறந்த தேயோ.

2.12.33

845

ஒல்லையி னோடி நீங்கா தொருத்தலின் றளவு மோந்து
புல்லினைக் கறியா நீரும் புசித்திடா திருந்து தேடி
யல்லலுற் றழுங்கிக் கண்ணி னருவிநீர் சொரிய வாடிப்
பல்லவ மெரியிற் புக்க தெனவுடல் பதைக்கு மன்றே.

2.12.34

846

பிடிபடு மிதற்கு முன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின்
கொடிநுனை மேய்ந்து நீருங் குடித்தறி யாது பாவி
மடிமுலை யிறங்கிப் பாலும் வழிந்தது குழவி சோர்ந்து
படிமிசை கிடந்தென் பாடு படுவதோ வறிகி லேனே.

2.12.35

847

கோட்டுடைக் கலையி னோடுங் கூடிற்றோ வலதோர் பாலின்
மீட்டதோ வினத்தைச் சேர்ந்து விம்மிநின் றேங்கிற் றோகான்
காட்டிடைப் புலிவாய்ப் பட்டுக் கழிந்ததோ வென்னைத் தேடி
வாட்டமுற் றலறி யோடி மறுகிற்றோ வறிகி லேனே.

2.12.36

848

தேங்கிய பசியால் வாடித் திரிந்ததோ விறந்த தோவென்
றேங்கிய வருத்த மல்லா லிவ்விட ரதனி லாவி
நீங்குமென் றுள்ளத் துள்ளே னெட்டுட லுடுப்பி னாவி
தாங்கிய தரும வேந்தே தவறன்று சாத மன்றே.

2.12.37

849

மன்னிய கலிமா வென்னும் வழிநிலை மாந்த ரியாரும்
பொன்னிலம் புகுதச் செய்யும் புண்ணியப் புகழின் மிக்கோய்
கொன்னிலைச் சிலைக்கை வேடன் கொடும்பசி தணிப்பே னென்றாட்
பின்னிய பிணிப்பு நீக்கிப் பிணையென விடுத்தல் வேண்டும்.

2.12.38

850

விடுத்திரேற் கலையைச் சேர்ந்து விழைவுறுங் கவலை தீரப்
படுத்தியென் னினத்துக் கோதிப் பறழினுக் கினிய தீம்பால்
கொடுத்தரும் பசியை மாற்றிக் குலத்தொடுஞ் சேர்த்து வல்லே
யடுத்தொரு கடிகைப் போதிலடைவ னென் றைந்த தன்றே.

2.12.39

851

மானுரை வழங்கக் கேட்டு மனத்தினிற் கருணை பொங்கிக்
கானவேட் டுவனை நோக்கிக் கன்றிடை வருத்தந் தீர்த்துத்
தான்வரு மளவு மியானே பிணையெனச் சாற்ரி நின்றார்
தீனெனும் பயிரைக் காத்துச் செழும்புகழ் விளக்குஞ் செம்மல்.

2.12.40

852

பிரியமுற் றிரங்கிக் காட்டின் பிணக்கியான் பிணையென் றோது
முரையினைக் கேட்டு வேட னொண்புயங் குலுங்க நக்கித்
தெரிதரு மறிவி னோடுஞ் சினத்தொடுங் கலந்து தேர்ந்து
கருமுகிற் கவிகை வள்ளல் கவின்முக நோக்கிச் சொல்வான்.

2.12.41

853

முள்ளுடைக் கானி லேகி முகமழிந் துச்சி வேர்வை
யுள்ளங்கா னனைப்ப வோடி யுடலுலைந் தொன்றுங் காணா
விள்ளரும் பசியான் மீளும் வேளையிப் பிணையை நோக்கி
யொள்ளிழை வலையிற் றாக்கிப் பிடித்திவ ணொருங்கு சார்ந்தேன்.

2.12.42

854

பெருத்தமான் றசையா லிற்றைப் பெரும்பசி தவிர்ந்த தென்று
ளிருத்தியிங் கிருந்தே னந்த விருமனக் களிப்பை நீக்க