|
nAlaTiyAr -
நாலடியார்
[see also Naladiyar - Translation in English of
Selected Verses by Rev.F.J.Leeper, Tranquebar ]
The Etext file has been contributed by Ms. Vidya Pattabiraman. .
©Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact..
கடவுள் வாழ்த்து
வான் இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று.
1. அறத்துப்பால்
1.1 செல்வம் நிலையாமை
1. அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று உண்டாக வைக்கற்பாற் றன்று.
2. துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.
3. யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள.
4. நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று.
5. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம்.
6. இழைத்தநாள் எல்லை இகவா பிழைத்தொணஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை - ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின், நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.
7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் - ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் யாரும் பிறந்தும் பிறவாதா
ரில்.
8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும்.
9. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ இழந்தான்என் றெண்ணப் படும்.
10. உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட உய்த்தீட்டும் தேனீக் கா.
1.2 இளமை நிலையாமை
11. நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங் கெழுந்திருப் பார்.
12. நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன - உட்காணாய் வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன் ன கலி.
13. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே ஏம நெறிபடரு மாறு.
14. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டுன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
15. எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய் ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு ஏகும் அளித்திவ் வுலகு.
16. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல்.
17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம் கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபொதும் வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோல்கண்ண ளாகும் குனிந்து.
18. பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று - வாசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார்.
19. மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா - தறம்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு.
20. ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
1.3 யாக்கை நிலையாமை
21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் துற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில்.
22. வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும் நிலவார் நிலமிசை மேல்.
23. மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம்.
24. சென்றே எறிப ஒருகால் சிறுவரை நின்றே எறிப பறையினை - நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து.
25. கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை.
26. நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துடும் கூத்தன் புறப்பட்டக் கால்.
27. படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.
28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும்.
29. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை - இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச் சென்றான் எனப்படுத லால்.
30. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து.
1.4 அறன் வலியுறுத்தல்
31. அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறாஅர் பறங்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பரே மேலைத் தவத்தால் தவம்செய்யா தார்.
32. ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள் சென்றன செய்வ துரை.
33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத் தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்து எல்லை இகந்தொருவு வார்.
34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு.
35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பாவ திலர்.
36. இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம்.
37. மக்களா லாய பொரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க உடம்பிற்கே ஒப்புராவு செய்தொழுகா தும்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும்.
38. உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்.
39. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்.
40. மான அருங்கலம் நீக்கி இரவென்னும் ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின்.
1.5 துய்தன்மை
41. மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை-யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோல்அறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்.
42. தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும் மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப் படும்.
43. தக்கோலம் தின்று தலைநிறையப் பூச் சூடி பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும் உண்டி வினையுள் உறைக்கும் எனப்பொயோர் கண்டுகை விட்ட மயல்.
44. தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை கண்டொழுகு வேன்.
45. முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன3
46. குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள் எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
47. ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும் கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
48. பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும் கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப் பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும் முடைச்சாகா டச்சிற் றுழி.
49. கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக் குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து.
50. உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச் செயிர்தீர்க்கும் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார் கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர் பண்டத்துள் வைப்ப திலர்.
1.6 துறவு
51. விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது.
52. நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித் தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும் பித்தான் பேதையார் இல்.
53. இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாம்உய்யக் கொண்டு.
54. துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம் இடைதொந் தின்னாமை நோக்கி மனையாறு அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.
55. கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ நன்னெறி சேர நமக்கு.
56. மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும் பூண்டான் கழித்தற் கருமையால் - பூண்ட மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந் தார்.
57. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத் தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால் நீக்கி நிறுஉம் உரவோரே நல்லொழுக்கம் காக்கும் திருவத் தவர்.
58. தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பாவதுஉம் சான்றோர் கடன்.
59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய் கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான் விலங்காது வீடு பெறும்.
60. துன்பமே மீதுரக் கண்டும் துறவுள்ளார் இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம் இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப் பசைதல் பாயாதாம் மேல்.
1.7 சினம் இன்மை
61. மதித்திறப் பாரும் இறக்க மதியா மதித்திறப் பாரும் இறக்க - மதித்தேறி ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் சுதமின்மை நன்று.
62. தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத் தவர்.
63. காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
64. நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித்துண் முட்டுமாம் கீழ்.
65. இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை.
66. கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஓல்லை இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு.
67. மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று.
68. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம்.
69. உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
70. கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - ஈர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
1.8 பொறையுடைமை
71. கோதை யருவிக் குளர்வரை நன்னாட பேதையொடு யாதும் உரையற்க - பேதை உரைக்கிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் வழக்கிக் கழிதலே நன்று.
72. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதிமற் - றோரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும்.
73. காதலார் சொல்லும் கடுஞ்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம் மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப ஆவ தறிவார்ப் பெறின்.
74. அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது.
75. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா ஓழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின் துற்றாதே துர விடல்.
76. இன்னா செயினும் இனிய ஒழிகென்று தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட விலங்கிற்கும் விள்ளல் அரிது.
77. பொயார் பெருநட்புக் கோடல்தாம் செய்த அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட நல்லசெய் வார்க்குத் தமர்.
78. வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு அற்றம் அறிய உரையற்க - அற்றம் மறைக்கும் துணையார்க் குரைப்பவே தம்மைத் துறக்கும் துணிவிலா தார்.
79. இன்பம் பயந்தாங் கிழிவு தலைவானும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம் ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட பழியாகா ஆறே தலை.
80. தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த வையக மெல்லாம் பெறினும் உரையற்க பொய்யோடு இடைமிடைந்த சொல்.
1.9 பிறர்மனை நயவாமை
81. அச்சம் பொதால் அதற்கின்பம் சிற்றளவால் நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம் நம்பற்க நாணுடை யார்.
82. அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும் பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று அச்சத்தோடு இந்நாற் பொருள்.
83. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல்.
84. காணின் குடிப்பழியாம் கையுறின் கால்குறையும் ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் - நீள்நிரயத் துன்பம் பயக்குமால் துச்சாரி, நீகண்ட இன்பம் எனக்கெனைத்தால் கூறு.
85. செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க் கொம்மை வாமுலையாள் தோள்மாணஇ - உம்மை வலியால் பிறர்மனைமேல் சென்றாரே, இம்மை அலியாகி ஆடிஉண் பார்.
86. பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல் காதல் மனையாளும் இல்லாளா என்ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு.
87. அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பாணஇ வம்பலன் பெண்மாணஇ மைந்துற்று - நம்பும் நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின் தலைநக்கி யன்ன துடைத்து.
88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா உரவோர்கண் காமநோய் ஓஓ. கொடிதே. விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும் உரையாதுஉள் ஆறி விடும்.
89. அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறம்சுடும் - வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப் படும்.
90. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு நீருள் குளித்தும் உயலாகும் - நீருள் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி ஒளிப்பினும் காமம் சுடும்.
1.10 ஈகை
91. இல்லா விடத்தும் இயைந்த அளவினால் உள்ள விடம்போல் பொதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு
92. முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள - கொன்னே பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.
93. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால்.
94. இம்மி யாசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக் கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்(து) அடாஅ அடுப்பி னவர்.
95. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால் ஈதல் இசையா தெனினும் இரவாமை ஈதல் இரட்டி யுறும்.
96. நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார் குடிகொழுத்தக் கண்ணுங்கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
97. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப. என்னை உலகுய்யு மாறு.
98. ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையாது ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல் பொலிகடன் என்னும் பெயர்த்து.
99. இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும்.
100. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர் இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தா ரெனப்படும் சொல்.
1.11 பழவினை
101. பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு.
102. உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்(பு)இட்டு நின்றுவீழ்ந் தக்க(து) உடைத்து.
103. வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை அளந்தன போகம் அவர்அவர் ஆற்றால் விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்.
104. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா, பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல்.
105. தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர் நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை வினைப்பயன் அல்லால் பிற.
106. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார் சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால் கோதென்று கொள்ளாதாம் கூற்று.
107. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ அன்னம் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப முன்னை வினையாய் விடும்.
108. அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும் பழியோடு பட்டவை செய்தல் - வளியோடி நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப செய்த வினையான் வரும்.
109. ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும் வேண்டார்மன் தீய விழைபயன் நல்லவை வேண்டினும் வேண்டா விடினும் உற்றபால தீண்டா விடுதல் அரிது.
110. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத் துற்றாகா ஆமிடத்தே யாகும் சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத் தென்னை பாவூ.
1.12 மெய்ம்மை
111. இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ. செய்ந்நன்றி கொன்றாரின் குற்ற முடைத்து.
112. தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை எக்காலும் குன்றல் இலராவர் - அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு.
113. காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலராவர் - ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட தொடர்புடையேம் என்பார் சிலர்.
114. விடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த இருதலையும் எய்தும் நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்து அடுவது போலும் துயர்.
115. நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறுஉம் கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும் புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
116. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய் உப்போடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
117. தம்மை இகழ்வாரைத் தாமவான் முன்னிகழ்க என்னை அவரொடு பட்டது - புன்னை விற்றபூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உற்றபால யார்க்கும் உறும்.
118. ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம் - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு.
119. யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர் இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர் கடைபோகச் செல்வம்உய்த் தார்?
120. தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று யாங்கணும் தோன் பிறிதில்லை - ஆங்குத்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றும்கொண் டோ டும் பொழுது.
1.13 தீவினையச்சம்
121. துக்கத்துள் துங்கித் துறவின்கட் சேர்கலா மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு.
122. இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க் கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும் காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூமும் கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித் துக்கத் தொழுநொய் எழுபவே - அக்கால் அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால்.
124. நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதுஉம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து.
125. பொயவர் கேண்மை பிறைபோல நாளும் வாசை வாசையா நந்தும் - வாசையால் வானுர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு.
126. சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் - சார்ந்தாய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து.
127. யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேருந் துணைமை யுடையவர் - சாரல் கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு.
128. உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட மனத்துக்கண் மாசாய் விடும்.
129. ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால் ஊக்கம் அழிப்பதுஉம் மெய்யாகும் - ஆக்கம் இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு.
130. மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி எனைத்துழி வாழ்தியோ, நெஞ்சே - எனைத்தும் சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு.
2. பொருட்பால்
2.14 கல்வி
131. குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு.
132. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாம்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து.
133. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோ ராயினும், கற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப் படும்.
134. வைப்புழிக் கோட்படா வாய்த்தீயின் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற.
135. கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதன் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தொந்து.
136. தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய் அவன்துணையா ஆறுபோ யற்றேநுல் கற்ற மகன்துணையா நல்ல கொளல்.
137. தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்(து) உம்ப ருறைவார் பதி.
138. கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித் துரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா ஈரமி லாளர் தொடர்பு.
139. கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
140. அலகுசால் கற்பின் அறிவுநுல் கல்லா(து) உலகநு லோதுவ தெல்லாம் - கலகல கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவா
ரில்.
2.15 குடிப்பிறப்பு
141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார் இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புல் கறிக்குமோ மற்று.
142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இநவ்முன்றும் வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும் மைதவழ் வேற்ப. படாஅ பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
143. இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோடு ஒன்றா வுணரற்பாற் றன்று.
144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை பல்லவர் துற்றம் பழியாகும் - எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ, புணரும் ஒருவர்க் கெனின்?
145. கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம் சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் - எல்லாம் இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந் தார்.
146. இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி முத்தோ டிமைக்கு முழங்குவாத் தண்சேர்ப்ப இற்பிறந்தார் கண்ணே யுள.
147. செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும் பெய்யா ஒருசிறை போல் உடைத்தாகும் எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பா லவை.
148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறுஉம் - திங்கள்போல் செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார்.
149. செல்லா விடத்தும் குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய் பருமம் பொறுப்பினும் பாய்பா மாபோல் பொருமுரண் ஆற்றுதல் இன்று.
150. எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார் அற்றத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் துற்றாவர் அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால் தெற்றெனத் தெண்ணீர் படும்.
2.16 மேன்மக்கள்
151. அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து தேய்வர் ஒருமா சுறின்.
152. இசையும் எனினும் இசையா தெனினும் வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின் நாமா உளங்கிழித்த அம்பினின் தீதோ, அரிமாப் பிழைப்பெய்த கோல்?
153. நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினும் சான்றோர் குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார் - உரங்கவறா உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால் செய்வர் செயற்பா லவை.
154. செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர் தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர் நல்வரை நாட. சிலநாள் அடிப்படின் கல்வரையும் உண்டாம் நெறி.
155. புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன் பல்லாருள் நாணல் பாந்து.
156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நுறி இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும் வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார் கூறார்தம் வாயிற் சிதைந்து.
157. கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொணஇ, எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும் வாயில்பொய் கூறார், வடுவறு காட்சியார் சாயிற் பாவ திலர்.
158. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து ஏதிலா ரிற்கண், குருடனாய்த் தீய புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும் அறங்கூற வேண்டா அவற்கு.
159. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும் வேண்டினும் நன்றுமற் றென்று விமுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு.
160. உடையார் இவரென் றொருதலையாப் பற்றிக் கடையாயார் பின்சென்று வாழ்வா - உடைய பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல குலந்தலைப் பட்ட விடத்து.
2.17 பொயாரைப் பிழையாமை
161. பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின் ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட பேர்க்குதல் யார்க்கும் அரிது.
162. பொன்னே கொடுத்தும் புணர்தற் காயாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல நயமில் அறிவி னவர்.
163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்தநு லார்.
164. விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும் அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார் பெருமை யுடையார் செறின்.
165. எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று தம்மைத்தாம் கொள்வது கோளன்று - தம்மை அரியரா நோக்கி அறனறியும் சான்றோர் பொயராக் கொள்வது கோள்.
166. நளிகடல் தண்சேர்ப்ப. நாணிழல் போல விளியும் சிறியவர் கேண்மை - விளிவின்றி அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே தொல்புக ழாளர் தொடர்பு.
167. மன்னர் திருவும் மகளிர் எழினலமும் துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம் உழைதங்கண் சென்றார்க் கொருங்கு.
168. தொயத் தொயும் தொவிலார் கண்ணும் பிரியப் பெரும்படர் நோய்செய்யும் - பொய உலவா இருங்கழிச் சேர்ப்பயார் மாட்டும் கலவாமை கோடி யுறும்.
169. கல்லாது போகிய நாளும் பொயவர்கண் செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின் படாஅவாம் பண்புடையார் கண்.
170. பொயார் பெருமை சிறுதகைமை ஒன்றிற் குரியா ருரிமை யடக்கம் - தொயுங்கால் செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார் அல்லல் களைப வெனின்.
2.18 நல்லினம் சேர்தல்
171. அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
172. அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பொயார்வாய்ச் சொல்.
173. அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும் உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.
174. இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும் பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள் பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின்.
175. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓருங் குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.
176. ஒண்கதிர் வாள்மதியும் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம் குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர், குன்றன்னார் கேண்மை கொளின்.
177. பாலோ டளாயநீர் பாலாகு மல்லது நீராய் நிறம்தொந்து தோன்றாதாம் - தோன் சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல பொயார் பெருமையைச் சார்ந்து.
178. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல் ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேல் செல்லாவாம் செற்றார் சினம்.
179. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர் - கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினம் சேரக் கெடும்.
180. மனத்தான் மறுவில ரேனுந்தாம் சேர்ந்த இனத்தால் இகழப் படுவர் - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனம் தீப்பட்டக் கால்.
2.19 பெருமை
181. ஈத லிசையா திளமைசேண் நீங்குதலால் காத லவரும் கருத்தல்லர் - காதலித்து ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள்.
182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப் பொச்சாந் தொழுகுவர் பேதையார் - அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பாவ திலர்.
183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய் நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம் இன்றிப் பலவு முள.
184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்துணினும் ஊராற்றும் என்பர் - கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பொயார்போல் மற்றையார் ஆஅயக் கண்ணும் அரிது.
185. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும் கல்லுற் றுழியூறும் ஆறேபோல் - செல்வர் பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்காற்றிச் செய்வர் செயற்பா லவை.
186. பெருவரை நாட பொயோர்கட் டீமை கருநரைமேற் சூடேபோல் தோன்றும் - கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும்.
187. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண், பசைந்த துணையும் பாவாம் - அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண் பகையேயும் பாடு பெறும்.
188. மெல்லிய நல்லாருள் மென்மை அதுவிறந்(து) ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை - எல்லாம் சலவருட் சாலச் சலவே நலவருள் நன்மை வரம்பாய் விடல்.
189. கடுக்கி யொருவன் கடுங்குறளைப் பேசி மயக்கி விடினும் மனப்பிரிப் பொன்றின்றித் துளக்க மிலாதவர் துய மனத்தார் விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
190. முற்றுற்றும் துற்றினை நாளும் அறஞ்செய்து பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர் - அத்துற்று முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம் துக்கத்துள் நீக்கி விடும்.
2.20 தாளாண்மை
191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போல் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க் குண்டோ தவறு.
192. ஆடுகோ டாகி அதாடை நின்றதுஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும் வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான் தாழ்வின்றித் தன்னைச் செயின்.
193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும் - அறிவினால் காற்றொழில் என்று கருதற்க கையினால் மேற்றொழிலும் ஆங்கே மிகும்.
194. இசையா தெனினும் இயற்றியோ ராற்றால் அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால் கண்டால் திரையலைக்கும் கானலந் தண்சேர்ப்ப பெண்டிரும் வாழாரோ மற்று.
195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லள வல்லால் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவம்கல்வி யாள்வினை என்றிவற்றான் ஆகும் குலம்.
196. ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.
197. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றிற்றான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்.
198. ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும் மானும் தலைவருவ செய்பவோ? - யானை வாமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகை யவர்.
199. தீங்கரும் பீன்று திரள்கால் உளையலா தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு - ஓங்கும் உயர்குடி யுள்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை.
200. பெருமுத் தரையர் பொதுவந் தீயும் கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும்.
2.21 சுற்றந்தழால்
201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும்.
202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன்.
203. அடுக்கல் மலைநாட. தற்சேர்ந் தவரை எடுக்கல மென்னார் பொயோர் - அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையோ தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை - நிலைதிரியா நிற்கும் பொயோர் நெறியடைய நின்றனைத்தால் ஒற்கமி லாளர் தொடர்பு.
205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல் என்னும் இலராம் இயல்பினால் - துன்னித் தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்க ளாகற்பா லார்.
206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு எக்காலத் தானு மினிது.
207. நாள்வாய்ப் பெறினும்தந் நள்ளாதா ரில்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும் - கேளாய், அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும் தமராயார் மாட்டே இனிது.
208. முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டியுண் பாரும் குறடுபோல் கைவிடுவர் சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டார் எனப்படு வார்.
209. நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார் மறுமையும் செய்வதொன் றுண்டோ - இறுமளவும் இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவ துன்புறாக் கால்.
210. விருப்பிலார் இல்லத்து வேறிருந் துண்ணும் வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம் - விருப்புடைத் தன்போல்வா
ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போ டியைந்த அமிழ்து.
2.22 நட்பாராய்தல்
211. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங் குருத்தின் கரும்புதின் ற்றறே - குருத்திற்கு எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும் மதுர மிலாளர் தொடர்பு.
212. இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர் நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ் புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட மனமறியப் பட்டதொன் றன்று.
213. யானை யனைவர் நண்பொணஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும், - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்.
214. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோ டொட்டார் - பலநாளும் நீத்தா ரெனக்கை விடலுண்டோ , தந்நெஞ்சத் தியாத்தாரோ டியாத்த தொடர்பு.
215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல்.
216. கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை இடையாயார் தெங்கி னனையர் - தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு.
217. கழுநீருள் காரட கேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் - விழுமிய குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார் கைத்துண்டல் காஞ்சிரங் காய்.
218. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.
219. தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல் விளியா அருநோயின் நன்றால் - அளிய இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல புகழ்தலின் வைதலே நன்று.
220. மாணஇப் பலரோடு பன்னாள் முயங்கிப் பொணஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும் பாணஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மாணஇஇப் பின்னைப் பிரிவு.
2.23 நட்பிற் பிழை பொறுத்தல்
221. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும். நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
222. செறுத்தோ றுடைப்பினும் செம்புனலோ டுடார், மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.
223. இறப்பவே தீய செயினுந்தந் நட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்றோ - நிறக்கோங்கு உருவவண் டார்க்கு முயர்வரை நாட ஒருவர் பொறையிருவர் நட்பு.
224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம் கடுவசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப விடுதற் காயா
ரியல்பிலரேல் நெஞ்சம் சுடுதற்கு மூட்டிய தீ.
225. இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு நல்லிற் சிதைத்ததீ நாடோ றும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால்.
226. இன்னா செயினும் விடுதற் காயாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப. களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை.
227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப. இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர் - கலந்தபின் தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார் தாமும் அவாற் கடை.
228. ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும் நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் - காதல் கழுமியார் செய்த கறங்கருவி நாட விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.
229. தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தா ராயின், - அவரைத் தமானும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல்.
230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க அறைகடல்சூழ் வையம் நக.
2.24 கூடா நட்பு
231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம் பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட தங்கரும் முற்றுந் துணை.
232. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல் மாண்ட பயத்ததாம் -
மாரி வறந்தக்கால் போலுமே வாலருவி நாட சிறந்தக்கால் சீரிலார் நட்பு.
233. நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணுல் உணர்வில ராகிய ஊதியம் இல்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று.
234. பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல் ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம் சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட பந்தமி லாளர் தொடர்பு.
235. செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச் செய்யாது தாழ்த்துக்கொண் டோ ட்டலும் - மெய்யாக இன்புறுஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே துன்புறுஉம் பெற்றி தரும்.
236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா பெருநீரார் கேண்மை கொளினுநீர் அல்லார் கருமங்கள் வேறு படும்.
237. முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட இன்னாதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான் கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க நெடுமொழி வையம் நக.
239. ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு நல்வரை நாட நயமுணர்வார் நண்பொணஇப் புல்லறிவி னாரொடு நட்பு.
240. உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை பருகற் கமைந்தபால் நீரளா யற்றே தொவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம் விரிபெடையோ டாடிவிட் டற்று.
2.25 அறிவுடைமை
241. பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய் இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது அணங்கருந் துப்பின் அரா.
242. நளிகடல் தண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்கு அணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர் மாத்திரை யின்றி நடக்குமேல் வாமுர் கோத்திரம் கூறப் படும்.
243. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் தன்னாற்றா னாகும் மறுமை வடதிசையும் கொன்னாளர் சாலப் பலர்.
244. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம் ஆங்கே இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது.
245. கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும் உப்பீண் டுவா பிறத்தலால் தத்தம் இனத்தனையர் அல்லர் எறிகடற்றண் சேர்ப்ப மனத்தனையர் மக்களென் பார்.
246. பராஅரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? - நல்ல ம்ருஉச்செய் தியார்மாட்டும் தங்கு மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை நன்று.
247. உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரப் புணருமாம் இன்பம் - புணான் தொயத் தொயும் தொவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய்.
248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும் மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான்.
249. கரும வாசையால் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப பேதைமை யன்ற தறிவு.
250. கருமமு முட்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம்.
2.26 அறிவின்மை
251. நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் - எண்ணுங்கால் பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ, கண்ணவாத் தக்க கலம்.
252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து அல்ல லுழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின் நாவின் கிழத்தி யுறைதலால் சேராளே பூவின் கிழத்தி புலந்து.
253. கல்லென்று தந்தை கழற அதனையோர் சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா வழுக்கோலைக் கொண்டு விடும்.
254. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று.
255. புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக் கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல் படாஅ விடுபாக் கறிந்து.
256. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல் வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை யொலி.
257. பன்றிக்கூழ்ப் பத்தால் தேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால் குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகுஞ் செவிக்கு.
258. பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று கோலால் கடாஅய்க் குறினும் புகலொல்லா நோலா உடம்பிற் கறிவு.
259. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறுஉம் ஈப்போல், - இழிந்தவை தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
260. கற்றா ருரைக்கும் கசடறு நுண்கேள்வி பற்றாது தன்னெஞ் சுதைத்தலால் - மற்றுமோர் தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
2.27 நன்றியில் செல்வம்
261. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா பொதணிய ராயினும் பீடிலார் செல்வம் கருதும் கடப்பாட்ட தன்று.
262. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பொதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார்.
263. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும், வல்லுற் றுவால் கிணற்றின்கண் சென்றுண்பர் செல்வம் பொதுடைய ராயினும் சேண்சென்றும் நல்குவார் கட்டே நசை.
264. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே பட்டும் துகிலும் உடுத்து.
265. நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லை வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய் நினைப்ப வருவதொன் றில்.
266. நாறாக் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ - வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து.
267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல் வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே நயவாது நிற்கு நிலை.
268. வலவைக ளல்லாதார் காலாறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள் காலாறும் செல்லார் கருனையால் துய்ப்பவே மேலாறு பாய விருந்து.
269. பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும் வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து.
270. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார் - துய்தாக நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும் நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
2.28 ஈயாமை
271. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல் - ஆட்டது அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
272. எத்துணை யானும் இயைந்த அளவினால் சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் - மற்றைப் பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார் அழிந்தார் பழிகடலத் துள்.
273. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் றீகலான் வைத்துக் கழியும் மடவோனை - வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து அருளும் அவனை நகும்.
274. கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும்.
275. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற் றுறல்பார்த் துண்பர் மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.
276. எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும் - தனதாயின் தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனை அது.
277. வழங்காத செல்வான் நல்கூர்ந்தார் உய்ந்தார் இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக் காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ யாப்புயந்தார் உய்ந்த பல.
278. தனதாகத் தான்கொடான் தாயத் தவரும் தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக முன்னே கொடுப்பின் அவர்கடியார் தான்கடியான் பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
279. இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக விரகிற் சுரப்பதாம் வண்மை - விரகின்றி வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ்.
280. ஈட்டலும் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல் குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள்.
2.29 இன்மை
281. அத்திட்ட கூறை அரைச்சுற்ற வாழினும் பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும் ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார் செத்த பிணத்தின் கடை.
282. நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும் யாரும் அறிவர் புகைநுட்பம் - தோன் நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும் புகற்காய பூழை நுழைந்து.
283. கல்லோங் குயர்வரைமேல் காந்தள் மலராக்கால் செல்லாவாம் செம்பொறி வண்டினம் - கொல்லைக் கலாஅற் கிளிகடியுங் கானக நாட இலாஅஅர்க் கில்லை தமர்.
284. உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல் தொண்டரா யிரவர் தொகுபவே - வண்டாய்த் திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார் ஒருவரும் இல்வுலகத் தில்.
285. பிறந்த குலமாயும் பேராண்மை மாயும் சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி கன்மேல் க்ழுஉங் கணமலை நன்னாட இன்மை தழுவப்பட் டார்க்கு.
286. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூ ரிருந்துமோன் றாற்றாதான் - உள்ளூர் இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய் விருந்தினன் ஆதலே நன்று.
287. நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங் கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர் - கூர்மையின் முல்லை அலைக்கும் எயிற்றாய். நிரப்பென்னும் அல்லல் அடையப்பட் டார்.
288. இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின் நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று.
289. கடகம் செறிந்ததங் கைகளால் வாங்கி அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே, துப்புரவு சென்றுலந்தக் கால்.
290. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட வாழாதார்க் கில்லை தமர்.
2.30 மானம்
291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக் கானந் தலைப்பட்ட தீப்போல் கனலுமே, மான முடையார் மனம்.
292. என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார் - தம்பாடு உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு உரையாரோ தாமுற்ற நோய்.
293. யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின் காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப் புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால் மறந்திடுக செல்வர் தொடர்பு.
294. இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின் நானம் கமழும் கதுப்பினாய். நன்றேகாண் மான முடையார் மதிப்பு.
295. பாவமும் ஏனைப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார் - சாதல் ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று.
296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம் செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே, செல்வரைச் சென்றிரவா தார்.
297. கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த விற்புருவ வேனெடுங் கண்ணாய் தலையெல்லாம் சொற்பழி அஞ்சி விடும்.
298. நல்லர் பொதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன் உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ, தலையாய சான்றோர் மனம்.
299. நச்சியார்க் கீயாமை நாணன்று நாணாளும் அச்சத்தால் நாணுதல் நாணன்றாம் - எச்சத்தின் மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது சொல்லா திருப்பது நாண்.
300. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் - இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் மழுங்க வான்.
2.31 இரவச்சம்
301. நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும் தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும் தெருண்ட அறிவி னவர்.
302. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ? விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு.
303. இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?
304. திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால் அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று எருத்திறைஞ்சி நில்லாதாம் மேல்.
305. கரவாத திண்ணன்பின கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.
306. இன்னா இயைக இனிய ஒழிகென்று தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல் காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்டு ஏதி லவரை இரவு.
307. என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத் தென்று மவனே பிறக்கலான் - குன்றின் பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட இரப்பாரை எள்ளா மகன்.
308. புறுத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன் நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே மாயானோ மாற்றி விடின்.
309. ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுத லல்லால் - பாசழிந்து செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே பையத்தான் செல்லும் நெறி?
310. பழமைகந் தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதானும் செய்க - கிழமை பொறார் அவரென்னின் பொத |