செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது.
செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே,
உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத்
தனிமையிலே மாண்டு போனாள்.
நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை,
கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக
இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும்
இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து
வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை
நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ்
சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள்
என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப்
புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.
ஒரு பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது
மனசிலிருந்து பெரும்பளு இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப்
பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை.
சகதர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது
என்பதிலே அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி.
பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது. சாவின் சாயையிலே
அவரது மனம் நிலை குலையவில்லை. அதனால் பிரமநாயகம் பிள்ளையைப்
பந்தவினையறுத்த யோகி என நினைத்து விடக் கூடாது; அல்லது, அவரது மனசுக்கு
வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, 'போதி' மரம் வரையில் கொண்டுவிடும்
ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை, நோய்,
சாக்காடு மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.
பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார்
என்றால், அவர் ஏறிய சிறுசிறு மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக்
கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம்
அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.
குடும்பத்தின் சகல செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும்
நிலபுலன்களைப் பங்கிட்டால், பட்டினி கிடக்காமல் பார்த்துக்
கொள்ளக்கூடிய அளவு துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும்
அளவுக்கு வம்ச விருத்தி உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா.
பிரமநாயகம் பிள்ளை நான்காவது குழந்தை. சிறு வயசில் படிப்பில் சற்றுச்
சூடிகையாக இருந்ததால், மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும்வரையில்
கைகாட்டிவிட்டு அவரைப் படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த
பொருள் வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும்,
பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி
வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள்
கையைப் பிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம்
கிடைத்தது.
பிரமநாயகம் பிள்ளையின் தகப்பனார் காலமானார். சொத்து பாகமாயிற்று.
குடும்பக் கடன் விவகாரம் வியாச்சிய எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த
சமாளிக்க, பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக்
கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.
சென்னை அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை
செய்தது. செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக்
கொடுத்துச் சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு உடம்பு
நைந்துவிட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர
அரிக்கும் ரணம்.
பிரமநாயகம் பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறார். ஜவுளிக்கடை
முதலாளி, ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய
அளவு ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத்
தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரில் வெளியிலும் படருகிறது.
பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி,
பிறகு ஆறி மரத்துப் போன வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை.
தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது
தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து, அதற்காக முதலாளியின் மனசைப்
பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக் கேட்டு,
வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது,
நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு
வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை.
இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப்
பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக
முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே
விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின்
ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம்
செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.
செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும்
பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும். காலையில் கண்ட
ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும் சிக்கனத்தை
உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து, சற்றுக்
கலகலப்புக் குறைவாக உள்ள, மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து
வந்தார். அதிகாலையில் பசியை ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால்
நடையாகவே புறப்பட்டுத் தமது வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு
வந்துவிடுவார்.
பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள்
சாப்பிட்டுக் களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார்.
செல்லம்மாள் அன்றைப் பொழுதைக் கழித்த நிலைதான் அவரது சாப்பாட்டுக்கு
மூலாதார வசதி. வரும்போது வீடு இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல்
சாத்திக் கிடந்தது என்றால் அவர் உள்ளே சென்று கால் முகம் கழுவி
அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு அடுப்பு மூட்டினால் தான் இரு
ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர் வீடு அடையும் தருணத்தில்
அந்தப் பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக் கிடக்குமாகையால் வீட்டில்
உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில சமயங்களில் வீட்டில் உள்ளது
என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட் பொலிவுக்குள் பந்தப்பட்டுக்
கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம் குலைந்துவிடாது.
வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.
இப்படியாக, பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து வருஷங்களையும்
கழித்துவிட்டார். அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா
என்ற துணிச்சலான நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம்,
சக்தியின்மை மனசில் ஆழ்ந்த ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும்.
மேலும் அங்கு எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை
வெருட்டியது.
சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ
கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத
சில சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப்
பற்றிப் பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம்
உற்சாகமிகுதியால் களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக்
கொள்வாள். ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக,
போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு
வந்தது.
அன்று பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில்
பழஞ்சோற்று மூட்டையுடன் நடைப்படியைத் தாண்டும்பொழுது செல்லம்மாளுக்கு
எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர் திரும்பும்போது திருப்தியுடன்
சாப்பிட, அவருக்குப் பிரியமான காணத் துவையலும் ஒரு புளியிட்ட கறியும்
வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, கையில் உமிக்கரிச் சாம்பலுடன்
புழைக்கடைக்குச் சென்றாள்.
"இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ
அலெட்டிக்கிடாதே" என்று நடைப்படியைத் தாண்டிய திரு. பிள்ளை திரும்பி
நின்று மனைவியை எச்சரித்துவிட்டு, வெளிப் புறமாகக் கதவை இழுத்துச்
சாத்தி, ஒரு கையால் அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து, நிலைக்கும்
கதவுக்கும் இருந்த இடைவெளியில் விரலை விட்டு உள்தாழ்ப்பாளைச்
சமத்காரமாகப் போட்டார். பிறகு தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா
என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்து விட்டு, தெருவில் இறங்கி நடந்தார்.
அன்று வழி நெடுக அவரது மனசு கடைக்காரப் பிள்ளையின் மனப் பக்குவத்தையும்
செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.
செல்லம்மாள், பேச்சின் போக்கில், அதாவது முந்திய நாள் இரவு, நெஞ்சு
வலிக்கு ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போது, "வருகிற பொங்கலுக்கு வீட்டு
அரிசி சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போது
நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு
வரணும்" என்று சொல்லி விட்டாள்.
பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப்
பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம வித்தை கற்று வரும்படி
சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா.
"அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம் புரட்டாசி களியலியே;
அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும்?" என்றார்.
"அது சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!" என்று
அவகாச அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். 'அவுக' என்றது கடை முதலாளிப்
பிள்ளையைத்தான்.
"தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே; கடையிலேயிருந்து வரும்; இந்த
வருஷம் எனக்கு என்னவாம்?" என்று கேட்டாள்.
"எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு.
மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு" என்று சிரித்தார்
பிரமநாயகம்.
வழி நெடுக, 'அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு
எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும்
மேலும் கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா?' என்றெல்லாம்
எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப்
பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.
"என்னடே பெரமநாயகம், ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத்
தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே? வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே
போயி அரைப் பீசு 703 எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே,
பனியன் கட்டு இருக்கு பாரு, அதையும் அப்படியே தூக்கியா" என்ற முதலாளி
ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில் இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன்,
பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளேகாலம், பாப்லின், டுவில் - என்றெல்லாம்
பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார்
பிரமநாயகம் பிள்ளை.
மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித்
தமது தேவையை எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப்
பதிவு செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி
நடந்தார்.
நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து
மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல்
விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய
நாய் ஒன்று உறக்கக் கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல்
அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது.
பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
வீட்டில் விளக்கில்லை. 'உறங்கி இருப்பாள். நாளியாகலே...' என நினைத்துக்
கொண்டே நிலைமாடத்தில் இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த
சிமினி விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத்
திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான வெளிச்சம் அவரது
ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.
முதல் கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை
விரித்து, கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள்.
வலதுகை பின்புறமாக விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை,
தூக்கமல்ல என்பதை உணர்த்தியது. பிரமநாயகம் பிள்ளை குனிந்து முகத்துக்கு
நேரே விளக்கைப் பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது.
நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு; சுவாசம் மெல்லிய இழைபோல்
ஓடிக்கொண்டிருந்தது.
நிமிர்ந்து பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது
பார்வை சமையற் கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக
எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக்
கொண்டிருந்தது.
சாவகாசமாக, கிணற்றில் ஜலம் மொண்டு கால் கைகளைச் சுத்தம்
செய்துகொண்டார். திரும்ப உள் நுழைந்து அடுப்படியிலிருந்த அகல்
விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த
மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும்
எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி வந்தார்.
சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்துவிட்டு,
செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும்
ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி, சூடு
ஏறும்படித் தேய்த்துவிட்டு, கமறலான அதன் நெடியை மூக்கருகில்
பிடித்தார். பிரயோஜனம் இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப் பதற்றத்துடன்
மூக்கின் மேலும் கபாலத்திலும் தடவினார். பிறகு எழுந்து சென்று
கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து, கையிலும்
காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார். அதிலும் பிரயோஜனம் இல்லை.
சுக்குத் துண்டை விளக்கில் கரித்துப் புகையை மூக்கருகில் பிடித்தார்.
முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால் வாக்காக இல்லை. மெதுவாக அவளைப்
புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார். மறுபடியும் சுக்குப் புகையைப்
பிரயோகித்தார்.
இரண்டு முறை ஊதியதும் செல்லம்மாள், புகையைத் தவிர்க்கச் சிறிது தலையை
அசைக்க ஆரம்பித்தாள். உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல்.
மறுபடியும் மயக்கம். மறுபடியும் புகையை ஊத, முனகி, சிறு குழந்தை மாதிரி
அழுதுகொண்டே, "தண்ணி..." என்று கேட்டாள் செல்லம்மாள்.
"இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ" என்று சிறு தம்ளரில்
வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள் மறுபடியும் பல்
கிட்டிவிட்டது; மயக்கம்.
பிரமநாயகம் பிள்ளை, தாம் அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும்
பிரயோகித்தார்.
செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள். எங்கிருக்கிறோம்
என்பது அவளுக்குப் புரியாததுபோல அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது.
"நீங்க எப்ப வந்திய? அம்மெயெ எங்கே? உங்களுக்காகச் சமைச்சு
வச்சிக்கிட்டு எத்தனை நேரமாக் காத்துக்கிட்டு இருப்பா?" என்றாள்.
பிரமநாயகம் பிள்ளை இம்மாதிரியான கேள்விக்குப் பதில் சொல்லி, இதமாக,
புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச்
சரியான பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில்
சொன்னால் போதும்.
திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, "அம்மா,
அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப்
போட்டு விடுவான்... துரோகி! துரோகி..." என்று உச்ச ஸ்தாயியில் கத்திக்
கொண்டு போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம் பிள்ளை இடது கையால்
ஒரு துணியைக் குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார்.
செல்லம்மாள் மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தாள். எதிரிலிருப்பது யார்
என்பது அவளுக்குப் புலப்படவில்லை. "அம்மா, அம்மா... நீ எப்போ வந்தே?...
தந்தி கொடுத்தாங்களா...?" என்றாள்.
"ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி வந்தது. உடம்புக்கு எப்படி
இருக்கிறது?" என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக நடித்தார். செல்லம்மாளின்
தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு இம்மாதிரிப் பிதற்றல்
வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை தொடர்ந்து
ஏற்படும்.
"அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா ... இவுங்க இப்படித்தாம்மா...
என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக் கடைக்குப் போயிடுதாக... எப்ப
ஊருக்குப் போகலாம்?... யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப்
போட்டா?... இனிமே நான் பொடவெயே கேக்கலே... என்னைக் கட்டிப் போடாதிய...
மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ! என்னெவிட்டிடுங்
கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?... கொஞ்சம் அவுத்துவிட
மாட்டியளா?... நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு வந்திடுதேன்...
அப்புறம் என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க."
மறுபடியும் செல்லம்மாளுக்கு நினைவு தப்பியது.
வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை.
'இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது? கொஞ்ச தூரமா?'
மறுபடியும் சுக்குப் பிரயோகம் செய்தார்.
நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில்
லேசாக ஊசலாடியது.
அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை.
வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு
நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு
மலைப்பு.
செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து படுத்தாள்.
என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு ஒற்றடமிட்டுச் சூடு
உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, "என்ன வேண்டும்?" என்று
கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன், சுவாசம் சரியாக ஓட
ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க
ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி அகன்றது.
பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.
மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு
சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள்.
"தலையை வலிக்கிறது" என்றாள் சிணுங்கிக் கொண்டே.
"மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது" என்று சொல்லிவிட்டுக் கண்களை
மெதுவாக மூடினாள்.
"மனசை அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு; காலையில் சரியாகப்
போய்விடும்" என்றார்.
"உம்" என்று கொண்டு கண்களை மூடியவள், "நாக்கை வறட்டுது; தண்ணி"
என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.
"ஏந்திரியாதே; விளப்போறே" என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை
ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "அது
வாண்டாம். பச்சைத் தண்ணி கொடுங்க. நாக்கை வறட்டுது" என்றாள்.
"பச்சைத் தண்ணி குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு நல்லது" என்று
சொல்லிப் பார்த்தார்; தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த
ஜலத்தைக் கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு
மெதுவாகப் படுக்க வைத்தார்.
கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும், "உங்களைத்தானே; எப்ப வந்திய?
சாப்பிட்டியளா?" என்றாள்.
"நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை
நெனச்சுக்காதே" என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில்
விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட்டாள்.
பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல் கதவுப் புறமாக விரித்துக்
கொண்டு, "முருகா" என்று கொட்டாவியுடன் உட்காரும்பொழுது, ஒரு கோழி
கூவியது. உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச்
சரிக்க இடம் கொடுக்கவில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து
கொண்டிருந்தார். மனம் மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத்
தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.
பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு
எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை
வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல்
பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று
குனிந்து கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை
கொடுத்து, உதடுகள் ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில்
இருந்தாள்.
எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று
நினைத்தவராய் உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு,
புழைக்கடைப்புறம் சென்றார்.
அவர் திரும்பிவந்து "முருகா" என்று விபூதியை நெற்றியில்
இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து எழுந்திருந்து
படுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய
வண்ணம் உள்ளே ஏறிட்டுப் பார்த்தாள்.
"இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ போல இருக்கே" என்றார்
பிரமநாயகம் பிள்ளை.
"மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது...
சுடச்சுட ஏதாவது இருந்தாத் தேவலை" என்று செல்லம்மாள், தலையைச் சற்று
இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.
"அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத்
தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத்
தரட்டுமா?" என்றார்.
"வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த்
தேச்சுக்கிடுதேன்" என்றாள் செல்லம்மாள்.
"நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த கெடப்பெ மறந்து போனியா?
நடமாடப் படாது."
"ஒங்களுக்குத்தான் என்ன, வரவர அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது"
என்று சொல்லிக் கொண்டே சுருட்டி வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால்
தள்ளாடியது.
மூசுமூசென்று இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள்.
பிரமநாயகம் பிள்ளை சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக்
கொண்டார்.
"பைய என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும்.
நிக்க முடியல்லே" என்றாள்.
அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக் கொடுத்து, கைத்தாங்கலாகப்
புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.
பல்லைத் தேய்த்துவிட்டு, "அப்பாடா" "அம்மாடா" என்ற அங்கலாய்ப்புகளுடன்
செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள் உடல்
தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.
பிள்ளையவர்கள் காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு, "பதமாக இருக்கு,
குடி; ஆறிப்போச்சுன்னு சொல்லாதே" என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல
முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக்
கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து
உட்கார்ந்தாள். தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு,
"சூடே இல்லையே! அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து
வாருங்க" என்றாள்.
"அதெ அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்" என்று வேறு ஒரு
பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.
காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக
ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "நீங்க என்ன
சாப்பிட்டிய?" என்றாள்.
"பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம்
குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்"
என்றார்.
"வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன இப்ப? வீணாக்
காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை. புளிச்ச
தோசைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய?" என்றாள்.
"புளிப்பாவது கத்திரிக்காயாவது? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப்
படுத்திரு. நான் வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த
கெடப்பு மறந்து போச்சுப் போலே!" என்று எழுந்தார்.
"அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய? நீங்க சாப்பிடுங்களேன்" என்றாள்
செல்லம்மாள்.
வைத்தியனைத் தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன்
போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக்
கொண்டு வந்தார். இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக்
காணவில்லை.
அடுப்பங்கரையில் 'சுர்' 'சுர்' என்று தோசை சுடும் சப்தம் கேட்டது.
வைத்தியரைப் பாயை விரித்து உட்காரவைத்துவிட்டு, "என்னத்தைச் சொன்னாலும்
காதுலே ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?" என்று குரல்
கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.
வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய காரியத்தில்
ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை மாவு சிந்திக் கிடந்தது.
தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று
எண்ணெய் மிளகாய்ப் பொடி முதல&