Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Jeyakantan > Short Story Collections of Jeyakantan - ஜெயகாந்தனின் சிறுகதைகள் > யுக சந்தி > இல்லாதது - எது > இரண்டு குழந்தைகள் > நான் இருக்கிறேன்பொம்மை > தேவன் வருவாரா?. > துறவு > பூ உதிரும் > குறைப் பிறவி > யந்திரம் > டிரெடில் > பிணக்கு > நந்தவனத்தில் ஓர் ஆண்டி > நீ இன்னா ஸார் சொல்றே? >  புதிய வார்ப்புகள் > சுயதரிசனம் > அக்ரஹாரத்துப் பூனை > அக்கினிப் பிரவேசம் > புது செருப்புக் கடிக்கும் > நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

TAMIL LANGUAGE & LITERATURE

Short Story Collections of Jeyakantan in Unicode
ஜெயகாந்தன் - புது செருப்புக் கடிக்கும் (1971)

அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வெளியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக வேண்டுமா என்றோவெல்லாம் அவன் நினைக்கவே இல்லை. அவள்மீது கொண்ட கோபமும், தன்னை அவமதிக்கிற மாதிரி தனது உணர்ச்சிகளை அசட்டை செய்துவிட்டுச் சுவரோரமாகத் திரும்பிக் கொண்டு தூங்குகிற அவளுக்குத் துணையாக விழித்துக்கொண்டிருக்கிற - 'ஏன் படுக்கவில்லையா?' என்று அவள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிற - அவமானம் தாங்கமாட்டாமல்தான் அவன் வெளியில் வந்து கோபமாகக் கதவை அறைந்து மூடினான்.

அவள் நிஜமாகவே தூங்கியிருந்தால் இந்தச் சத்தத்தில் விழித்திருக்க வேண்டும். இந்தச் சத்தத்தில் பக்கத்துப் போர்ஷன்காரர்கள் யாரேனும் விழித்துக் கொண்டுவிட்டார்களோ என்று தன் செய்கைக்காக அவன் அவமானத்தோடு அச்சம் கொண்டு இருள் அடர்ந்த அந்த முற்றத்தில் மூடியிருக்கும் எதிர் போர்ஷன் கதவுகளைப் பார்த்தான். உள்ளே விடிவிளக்கு எரிவது கதவுக்கு மேலுள்ள 'வென்டிலேட்டர்' வழியாய்த் தெரிந்தது. டேபிள்·பேன் சுற்றுகிற சத்தம் 'கும்'மென்று ஒலித்தது. மணி பதினொன்று இருக்கும். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இருட்டில் தெரியவில்லை. எங்காவது போய்விட்டு விடிந்த பிறகு வந்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. எப்படிக் கதவைத் திறந்து போட்டுவிட்டுத் தனிமையில் இவளை விட்டுப் போவது என்ற தயக்கமும் ஏற்பட்டது. அவள் வேண்டுமென்றே அடமாகப் படுத்துக் கொண்டு அழும்பு செய்கிறாள் என்று மனத்துக்குப் புரிந்தது.

அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தன் மீதே ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது. இதெல்லாம் தனக்கு வீண் தலைவிதிதானே என்று மனம் புழுங்கிற்று. தானுண்டு, தன் வேலையும் சம்பாத்தியமும் உண்டு என்று சுதந்திரமாகத் திரிகிற வாழ்க்கையின் சந்தோஷத்தை அல்லது வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவனை, அப்படியே வாழ்ந்து விடுவது எனத் தீர்மானித்திருந்தவனை இந்தக் கல்யாணம், பெண்டாட்டி, குடும்பம் என்றெல்லாம் இதில் ஏதேதோ பெரிய சுகம் இருப்பதாகவும், மனுஷ வாழ்க்கையின் அர்த்தமே அதில் அடங்கி இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிற பைத்தியக்காரத்தனத்தில் சிக்க வைத்த அந்தச் சைத்தானின் தூண்டுதலை எண்ணிப்பார்த்த பெருமூச்சுடன் வீட்டிற்குள் போகாமல் வாசற்படியில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு இருளும் நட்சத்திரமும் கவிந்த வானத்தைப் பார்த்தான்.

'அந்தச் சைத்தான்' என்ற முனகலில் அவனுக்குக் கிரிஜாவின் நினைவு வந்தது. அவள் எவ்வளவு இனியவள். இங்கிதம் தெரிந்தவள். சைத்தானைக் கட்டிக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக்கொண்டு அவளைப் போய்ச் சைத்தான் என்று நினைக்கிறேனே- என்று அந்த நினைவைக் கடிந்து கொண்டான் நந்தகோபால். ஆனாலும், தான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தக் காரணமாக இருந்தவள் அந்த கிரிஜாதான் என்பதால் தனக்கு அவள் மீது வருகிற இந்தக் கோபத்துக்கு நியாயம் இருப்பதாக நினைத்தான் அவன்.

'இப்போது, இந்த நேரத்தில் அவளைப் போய்ப் பார்த்தால் என்ன?' என்ற எண்ணம் வந்தது அவனுக்கு. அவளை எப்போது வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். இந்த ஆறுமாத காலமாக - கல்யாணமாகி ஒவ்வொரு நாளும் இவளோடு மனஸ்தாபம் கொண்டு 'ஏன் இப்படி ஒரு வம்பில் மாட்டிக் கொண்டோம்' என்று மனம் சலிக்கிற போதெல்லாம் அவன் கிரிஜாவை நினைத்துக் கொள்ளுவது உண்டு. என்றாலும் அங்கே போகலாம் என்ற எண்ணம் இப்போதுதான் தோன்றியது.

'தான் இவளைக் கல்யாணம் செய்து கொள்ளுவதற்கு முன்பு எப்படியெல்லாம் இருந்தபோதிலும், இப்போது இவளை இங்கு தனியே விட்டுவிட்டு, அங்கே போவது இவளுக்குச் செய்கிற துரோகமில்லையா?' என்று நினைத்துப் பார்த்தான். இவள் என்னதான் சண்டைக்காரியாக இருந்தாலும், இவள் மீது தனக்கு எவ்வளவுதான் கோபம் இருந்தபோதிலும், தன் மீதுள்ள வெறுப்பினால், அதற்கு ஆறுதலாக இருக்கும் பொருட்டு, இவள் அந்த மாதிரி ஏதாவது செய்தால் அதைத் தன்னால் தாங்க முடியுமா என்றும் எண்ணி அந்த எண்ணத்தையே தாங்க முடியாமல் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

கடிகாரத்தின் ஒற்றை மணியோசை கேட்டது. மணி இன்னும் ஒன்றாகி இருக்காது. மூடியிருந்த கதவை லேசாகத் திறந்து கைக்கடிகாரத்தை உள்ளே இருந்து வீசும் வெளிச்சத்தின் ஒரு கீற்றில் பார்த்தான். இவனது வாட்சில் மணி பதினொன்றரை ஆகவில்லை. அடித்தது பதினொன்றரைதான் என்ற தீர்மானம் கொண்டு கதவின் இடைவெளி வழியாக அவளைப் பார்த்தான். அவள் அசையாமல் புரண்டு படுக்காமல் முன் இருந்த நிலையிலேயே முதுகைத் திருப்பிக் கொண்டு படுத்திருந்தாள். இவனுக்குக் கோபம் வந்தது. எழுந்து போய் முதுகிலே இரண்டு அறையோ, ஓர் உதையோ கொடுக்கலாமா என்று ஆங்காரம் வந்தது. "சீ" என்று தன்னையே அப்போது அருவருத்துக் கொண்டான் அவன்.

அப்படிப்பட்ட குரூரமான ஆபாசமான சம்பவங்களை அவன் சிறுவயதில் அடிக்கடி சந்தித்திருக்கிறான். திடீரென நள்ளிரவில் அவனுடைய தாயின் தீனமான அலறல் கேட்கும். விழித்தெழுந்து உடலும் உயிரும் நடுங்க இவன் நின்றிருப்பான். இவனுடைய தந்தை வெறி பிடித்தாற்போல் ஆவேசம் கொண்டு இவனுடைய தாயை முகத்திலும் உடலிலும், காலாலும் கையாலும் பாய்ந்து பாய்ந்து தாக்க, அவள் "ஐயோ பாவி சண்டாளா..." என்று அழுதுகொண்டே ஆக்ரோஷமாகத் திட்டுவாள். இவள் திட்டத் திட்ட அவர் அடிப்பார்...

அந்த நாட்கள் மிகக் குரூரமானவை. மறுநாள் ஒன்றுமே நடவாத மாதிரி அவர்கள் இருவரும் நடந்து கொள்ளுவது - அவள் அவருக்குப் பணிவிடை புரிவதும், அவர் அவளைப் பேர் சொல்லி அழைத்து விவகாரங்கள் பேசுவதும் - இவனுக்கு மிக ஆபாசமாக இருக்கும். இதெல்லாம் என்னவென்றே புரியாத அருவருப்பைத் தரும்.

பதினைந்து வயது வரைக்கும் இந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறான் அவன். அவர்களது சண்டையை விடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனசை மிகவும் அசிங்கப்படுத்தியிருக்கின்றன. அவன் தகப்பனாரை மனமார வெறுத்திருக்கிறான். 'குடும்ப வாழ்க்கையும் தாம்பத்தியம் என்பதும் மிகவும் அருவருப்பானவை' என்ற எண்ணம் இள வயதிலே அவனுக்கு ஏற்பட இந்த அனுபவங்கள் காரணமாயின போலும்.

இப்போது அவன் தகப்பனார் இல்லை. அவனுடைய விதவைத் தாய் வயோதிக காலத்தில் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தான் சாகுமுன் இவனுக்குக் கல்யாணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற தன் ஆசையை இவனிடம் தெரிவிக்கும் போதெல்லாம் அவளது வாழ்க்கையைச் சுட்டிக் காட்டித் தாயைப் பரிகாசம் செய்வான். அவளுக்கு அப்போது வருத்தமாகவும் கோபமாகவும் கூட இருக்கும். விட்டுக் கொடுக்காமல், 'நான் வாழ்ந்ததற்கு என்ன குறை?' என்று பெருமை பேசுவாள். கடைசியில் ' கலியாணம் பண்ணிக்க முடியாது' என்று அவள் முகத்தில் அடித்துப் பேசிவிட்டு வந்துவிடுவான் நந்தகோபால்.

பட்டனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு தனி வாழ்க்கைக்குப் பழகி இப்படியே முப்பது வயது கடத்திவிட்ட அவனுக்குக் கல்யாண ஆசையையும் குடும்பத்தைப் பற்றிய சுய கற்பனைகளையும் வளர்த்து அதற்குத் தயாராக்கியது கிரிஜாவின் உறவுதான். கிரிஜாவுக்கு முன்னால் அவனுக்கு அது மாதிரியான உறவு வேறு எந்தப் பெண்ணோடும் ஏற்பட்டிருந்ததில்லை. அவளுக்கு இவன் மிகவும் புதியவனாக இருந்தான். ஆனால், அவள் அப்படியல்ல என்று இவனுக்கு மாத்திரமல்லாமல் வேறு பலருக்கும் பிரசித்தமாகி இருந்தது. அவளும் அதையெல்லாம் மறைக்கக் கூடிய நிலையில் இல்லை. எனினும் இவனோடு இருந்த நாட்களில் அவள் மிகவும் உண்மையாகவும் அன்பாகவும், ஒரு பெண்ணின் உடனிருப்பும் உறவும் ஓர் ஆணுக்கு எவ்வளவு இன்பமானது, வசதியானது என்பதை உணர்த்துகின்ற முறையிலும் வாழ்ந்தாள். அந்த இரண்டு மாத காலம் மிக மேன்மையான இல்லறம் என்று இந்த நிமிஷம் - இவனை அவமதித்தும் புறக்கணித்தும் வாசற்படிக்கு வெளியே இந்த நள்ளிரவில் நிறுத்தி வைத்துவிட்டு இறுமாப்போடு படுத்துக் கொண்டிருக்கிறாளே, அவள் மீது பற்றிக்கொண்டு வருகிற கோபத்தில் - நினைத்துப் பெருமூச்சும் கண்ணீருமாய்ப் பரிதாபமாக மறுபடியும் உள்ளே திரும்பிப் பார்த்தான் நந்தகோபால்.

நிச்சயம் அவள் எழுந்திருக்கவோ சமாதானமுறவோ போவதில்லை. இந்த ஆறு மாத அனுபவத்தில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அவனுக்குப் பழக்கமாகிப் போனதால் இதன் தொடக்கமும் இதன் போக்கும் இதன் முடிவும் அவனுக்கு ஒவ்வொரு தடவையும் முன் கூட்டியே தெரிகிறது. என்றாலும் இதனைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. பிறகு யோசித்துப் பார்க்கையில் அவனது அறிவுபூர்வமான எந்த நியாயத்துக்கும் இந்தச் சச்சரவுகள் ஒத்து வருவதில்லை. நாளுக்கு நாள் இந்த வாழ்க்கை அவமானகரமானதாகவும் துன்பம் மிகுவதாகவும் மாறிக்கொண்டே இருப்பதை எப்படித் தாங்குவது என்று புரியவில்லை.

உள்ளே மங்கிய விளக்கொளியில், கொடிகளில் கிடக்கும் துணிகளும், நிழலில் தெரிகிற சமையலறையினுள் பாத்திரங்களின் பளபளப்பில் அவை இறைந்து கிடக்கிற கோலமும் மிகச் சோகமாய் அவனுக்குத் தெரிந்தன.

ஒரே அறையும் அதைத் தொடர்ந்து கதவில்லாத ஒரு சுவரால் பிரிகிற சிறு சமையல்கட்டும் அதனுள்ளேயே அடங்கிய தொட்டி முற்றமாகிய பாத்ரூம் உள்ள அந்தப் போர்ஷனுக்கு நாற்பத்தைந்து ரூபாய் வாடகை. குடும்பச் செலவுக்கு மாதம் நூற்றைம்பது ரூபாய் ஆகிறது. நந்தகோபாலுக்கு சம்பளம் கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய். மனமொத்து வாழ்ந்தால் இந்த நெருக்கடி ஒரு துன்பமல்ல. ஆறேழு பேர் சேர்ந்து ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து எல்லா வசதிகளோடும் வாழ்ந்த அந்த 'மெஸ்' வாழ்க்கைக்கு இப்போது மனசு ஏங்க ஆரம்பிப்பதன் பரிதாபத்தை நினைத்து அவன் மனம் கசந்தான்.

ஒரு பெருமூச்சுடன் எழுந்தான். கிரிஜாவைப் போய்ப் பார்த்துவிட்டு இரவை அவளுடன் கழிப்பது மனதுக்கு ஆறுதல் தரும் என்று தோன்றியது. 'வேறு எதற்காகவும் இல்லை' என்ற நினைப்பில் இதைப் பற்றிய உறுத்தலை உதறி ' அவளோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கு நிம்மதியைத் தரும்' என்கிற சமாதானத்தோடு புறப்பட்டான். உள்ளே போய் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான். நைட்லாம்ப் எரிந்து கொண்டிருந்த மங்கிய வெளிச்சத்துடன் நாற்பது வோல்ட் விளக்கையும் போட்டவுடன் வெளிச்சம் கண்ணைக் கூசிற்று.

"ஏய்!..." என்று அவளை மெல்லத் தட்டினான். அவள் அசையவில்லை.

"இப்ப உன்னை கொஞ்சறதுக்கு எழுப்பலே; நான் வெளியே போறேன். கதவைத் தாப்பாப் போட்டுக்க" என்று அவள் புஜத்தைக் கொஞ்சம் அழுத்தி வலிக்கிற மாதிரிப் பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பினான்.

அவள் எழுந்து உட்கார்ந்து அவனை வெறுப்புடன் முகம் சுளித்த எரிச்சலுடன் பார்த்தாள்.

இவ்வளவு நேரம் எழுந்திருக்காதவள், தான் போகிறோம் என்றதும் கதவைத் தாழிடத் தயாராய் எழுந்து உட்கார்ந்திருப்பது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது.

'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்' என்று கேட்பதுதானே நியாயம்? ஆனால், அவள் கேட்கவில்லை. 'போறதானால் தொலைய வேண்டியதுதானே... நான் நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுவேன்' என்கிற மாதிரி அவள், அவன் சட்டையை மாட்டிக்கொண்டு நிற்பதைப் பொருட்படுத்தாமல் எழுந்து எரிச்சலுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவன் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடினான். கட்டிலின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிற அவளது சேலையின் நிழலோ காலின் நிழலோ மறைத்தது. தான் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடும்போது அவள் இப்படி மறைத்துக் கொண்டு - தான் மறைக்கிற விஷயம் அவளுக்குத் தெரியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது - கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிற காரியம் அவமரியாதை என்று அவனுக்குத் தோன்றியது. அந்தக் கோபத்துடன் அவன் செருப்பைத் தேடி எடுத்துக் கொண்டு நிமிரும்போது கட்டிலின் விளிம்பில் தலையை இடித்துக் கொண்டான். கண்ணில் தண்ணீர் வருகிற மாதிரி வலித்தது. அவள் கொஞ்சம்கூடப் பதட்டம் காட்டாதிருந்தாள். இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கு இப்படித் தலையில் ஓர் இடியோ, விரலில் ஒரு காயமோ ஏற்பட்டால் தன்னால் பதட்டமுறாமலிருக்க முடியாதே என்று எண்ணிய நினைப்பில் அவன் தன்னிரக்கத்தோடு முகம் திருப்பிக் காலில் செருப்பை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.

திறந்த கதவை மூடாமல் நிதானமாக அவன் முற்றத்தில் நடந்து தாழ்வாரத்தில் தூணோரமாக நிறுத்தியிருந்த சைக்கிளின் 'லாக்'கைத் திறக்கையில் இருட்டில் நிற்கிற தன்னை அவள் பார்க்க முடியாது என்பதால் அவள் வெளியே தலை நீட்டிப் பார்க்கிறாளா என்று கவனித்தான். அவன் மனம் சோர்வு கொள்ளத் தக்க வண்ணம் அவள் கதவைப் பட்டென்று மூடித் தாழிட்டுக் கொண்டாள். அவள் வெளியே தலை நீட்டிப் பார்க்காதது மிகவும் வருத்தம் தந்தது இவனுக்கு. அறைக்குள் எரிந்த நாற்பது வோல்ட் வெளிச்சம் அணைந்து நைட்லாம்பின் வெளிச்சம் வெண்டிலேட்டர் வழியே தெரிந்தது.

நந்தகோபால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான். வாசற்புறத்தில் முறைவாசல் செய்கிற கிழவி தன் படுக்கையில் உட்கார்ந்து இருமிக்கொண்டிருந்தவள், அவன் வெளியே சென்றதும், 'திரும்பி எப்போ வருவே அப்பா' என்று கேட்டு, இவன் 'இல்லை' என்று சொன்னதும் பிறகு கதவைத் தாழிட்டாள். வெளியில் வந்து நின்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டபோது, தெரு விளக்குகள் திடீரென அணைந்தது. டைனமோ வெளிச்சம் பளீரென்று வழிகாட்ட அவன் சைக்கிளில் ஏறி மிதித்தான்.

---···---···---···---···

கிரிஜாவின் வீடு மேற்கு மாம்பலத்தில் குண்டும் குழியும் சாக்கடையும் எருமை மாடும் நிறைந்த ஒரு தெருவில் இருக்கிறது. தெருப்புறம் மாடிப் படியுள்ள ஒரு வீட்டின் மேல் போர்ஷனில் அவள் சுதந்திரமாக வாழ்கிறாள். அவளுக்குத் தாய் இருக்கிறாள். அவள் எங்கோ ஒரு பணக்காரர் வீட்டில் ஆயாவாக வேலை செய்கிறாள். எப்போதாவது வந்து மகளைப் பார்த்துவிட்டு அசைவச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போவாள். அவள் வேலை செய்கிற வீட்டில் அது கிடைக்காதாம். கிரிஜாவுக்கு இருபத்தைந்து வயதான தம்பி ஒருவன் உண்டு. அவனுக்கு ஏதோ ஒரு சினிமாக் கம்பெனியில் வேலை. அவனும் எப்போதாவது தான் வருவான். அவள் பத்தாவதுவரை படித்திருக்கிறாள். நிரந்தரமாக இல்லாவிட்டாலும் டெம்ப்ரரியாகவே அவள் ஒவ்வோரிடமாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். முப்பது வயதாகிறது. இப்படியரு நிராதரவான நிலையற்ற வாழ்க்கையிலும் அவள் நிறைவோடும் மலர்ச்சியோடும் இருக்கிறாள்.

நந்த கோபால் வேலை செய்கிற காஸ்மெடிக்ஸ் கம்பெனியார் எக்ஸிபிஷனில் ஒரு ஸ்டால் போட்டிருந்தார்கள். அங்கு அவள் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் போன டிசம்பரில் அவளை இவன் சந்திக்க நேர்ந்தது. அவளைப் பார்த்தவுடன் அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்த மாதிரியானதொரு இணக்கம் அவள் முகத்தில் இவனுக்குத் தோன்றியது. இந்த ஸ்டாலில் விற்பனைப் பணிப் பெண்ணாக வேலை செய்வதற்காகக் கொண்ட முகபாவமோ அது என்றுதான் முதலில் அவன் நினைத்தான். பிறகுதான் தெரிந்தது; அவன் டெஸ்பாட்சிங் கிளார்க்காக வெலை செய்யும் அந்த காஸ்மெடிக்ஸ் கம்பெனியில் நாள்தோறும் பார்சல் பார்சல்களாக அனுப்பப்படுகிற அந்தப் பவுடர் டின்களின் மேல் இருக்கின்ற உருவமே அவளுடையதுதான் என்று. இரண்டு மாத காலம் மாலை நேரத்தில் மட்டும் 'பார்ட் டய' மாக அவனும் எக்ஸிபிஷனிலே வேலை செய்த காலத்தில் அவளுடன் ஏற்பட்ட நட்பின்போது அவளைப் பற்றி அவன் தெரிந்து கொண்டான். ஒரு கெளரவமான நிரந்தர உத்தியோகத்துக்காக அவள் ஒவ்வொருவரிடமும் சிபாரிசு வேண்டியபோது இவன் அவளுக்காகப் பரிதாபப்பட்டான். ஆனாலும் அவளுக்கு உதவும் காரியம் தனது சக்திக்கு மீறியது என்று அவளைப் பற்றிய கவலையிலிருந்து ஒதுங்கியே நின்றான்.

அவள் எல்லோருடனும் கலகலவென்று பேசுவாள். இவனை அவள்தான் முதலில் டீ சாப்பிட அழைத்தாள். இவனோடு பேச்சுக் கொடுத்தாள். இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பும்போது சில நாட்களில் அந்த ஸேல்ஸ் மானேஜர் தான் காரில் போகும் வழியில் இவளை இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் செல்வார். அவரைப் பற்றி ஆபிசில் ஒரு மாதிரி பேசிக் கொள்வார்கள். அவருடன் அவள் போவது இவனுக்கு என்னமோ மாதிரி இருக்கும். ஒருநாள் அதுபோல் மானேஜர் தன்னுடன் அவளை அழைத்தபோது அவள் நந்தகோபாலைக் காட்டி, " மிஸ்டர் நந்தகோபால் எங்க வீட்டுக்குப் போற வழியிலேதான் சார் இருக்காரு. நாங்க பேசிக்கிட்டே போயிடுவோம் சார்... என்னாங்கோ மிஸ்டர்?" என்று இவனைப் பார்த்துச் சிரித்தபோது இவனும் சம்மதித்தான்.

அவள் பேசுவது இவனுக்கு வேடிக்கையாக இருக்கும். 'என்னாங்கோ, சரீங்கோ... ஆமாங்கோ..' என்று அவள் கொஞ்சம் நீட்டிப் பேசுவாள். அவள் வீட்டில் பேசுகிற பாஷை தெலுங்கு என்று பின்னால் தெரிந்தது இவனுக்கு. படித்ததெல்லாம் தமிழ்தான். தெலுங்கு என்றால், மெட்ராஸ் தமிழ் மாதிரி மெட்ராஸ் தெலுங்காம்.

- 'அவள் எப்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள்!' என்று நினைத்துக் கொண்டு சைக்கிளை வேகமாய் மிதித்தான் நந்தகோபால்.

அவள் நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறாள் என்று, அவளோடு பழகிய பிறகுதான் இவன் தெரிந்து கொண்டான். எக்ஸிபிஷன் ஸ்டால் வேலை முடிந்த பிறகு டெலிபோன் சுத்தம் செய்து அதில் ஸென்ட் போடுகிற ஒரு கம்பெனியில் வேலைக்கமர்ந்து டெலிபோன் இருக்கிற வீடுகளிலும் கம்பெனிகளிலும் ஏறி இறங்கி வருகையில் ஒருநாள் தெருவில் அவளை இவன் பார்த்தான். இப்படி ஏதாவதொரு கெளரவமான உத்தியோகம் செய்து அவள் சம்பாதித்தாள். வயது முப்பது ஆவதால் இதற்கிடையில் நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கிறது என்றாலும் அதை ஒரு பிழைப்பாகக் கொள்ளும் இழி மனம் அவளுக்கு இல்லை என்று அவன் அறிந்தான்.

எப்போதாவது இவன் அவளைத் தேடிக் கொண்டு போவான். இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள். இவனுக்கு அவள் காபி மட்டும் தருவாள். அவள் சினிமாப் பத்திரிகைகள் எல்லாம் வாங்குவாள். கையில் காசு இருக்கும் போதெல்லாம் சினிமாவுக்குப் போவாள். நேரம் இருக்கும்போதெல்லாம் சினிமாக்களைப் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் ரொம்பத் தெரிந்தவள் மாதிரி சுவாரஸ்யமாக அரட்டை அடிப்பாள். சினிமா கம்பெனியில் வேலை செய்கிற அவளுடைய தம்பி ' நீ என்ன வேணும்னாலும் செய்... ஆனா சினிமாவிலே சான்ஸீ குடுக்கறேன்னு எவனாவது சொன்னா - அத்தெ நம்பிக்கினு மட்டும் போயிடாதே... நான் அங்கே இருக்கறதுனாலே என் மானத்தெக் காப்பாத்தறதுக்கோசரம் அந்தப் பக்கம் வராதே' என்று எப்போதோ சொல்லி வைத்திருந்ததைத் தான் உறுதியாகக் கடைபிடிப்பதை இவனிடம் அவள் ஒரு முறை கூறினாள்.

- அவளோடு அவன் இரண்டு மாதம் வாழ்ந்திருக்கிறான். அதை நினைக்கையில் இப்போதும் மனசுக்குச் சுகமாக இருக்கிறது.

அருமையாக நேர்ந்த அந்த வாழ்க்கையை விடுத்து வேறு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட குற்றத்துக்கான தண்டனைதானோ இப்போது தான் அனுபவிக்கிற வேதனைகளும் அவமானங்களும் என்று எண்ணியவாறே அவன் சைக்கிளை மிதித்தான். இன்னும் ஒரு மைலாவது இருக்கும்.

தொடர்ந்து ஒரு வேலையும் கிடைக்காமல் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நந்தகோபால் வேலை செய்யும் இடத்துக்கு இவனைத் தேடி வந்தாள் கிரிஜா. ஆபீஸ் முடிகிற நேரமானதால் இவளைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் செய்த பின் இவளுடனே அவனும் வெளியில் வந்தான். இருவரும் ஓட்டலுக்குப் போயினர். அவள் மிகவும் களைத்திருந்தாள். இவன் இரண்டு காபிதான் சொல்ல இருந்தான். அதை எப்படியோ புரிந்து கொண்டு அவள் சொன்னாள்: "எனக்கு வெறும் காபி மட்டும் போதாதுங்கோ... எதனாச்சும் சாப்பிடணுங்கோ"

அவள் மனசின் வெண்மை இவனைக் கனிய வைத்தது. அன்று அவளை மிகுந்த அன்போடு இவன் உபசரித்தான். பகல் முழுதும் அவள் சாப்பிடாதிருந்தாள் என்றும் இப்போது வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறாள் என்றும் தெரிந்தபோது அவளுக்காக மனம் வருந்தினான். அவள் அவனிடம் ஏதாவது வேலைக்குச் சிபாரிசு செய்யச் சொன்னாள். நம்பிக்கை இல்லாமலே அவன் அவளுக்கு வாக்குறுதி தந்தான். மாலையில் அவளுடன் அவனும் அவள் வீடுவரைச் சென்று சமையலுக்கான பொருள்களைக் கூட இருந்து வாங்கி, அதற்கு இவன் பணம் கொடுத்தான். அன்றிரவு இவனை இவள் தன்னுடன் வீட்டில் சாப்பிடச் சொன்னாள்.

அவள் சமையல் செய்கிற அழகைப் பக்கத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு அங்கு அவன் சாப்பிட்டான். அவனுக்குத் தன் தாயின் பரிவும் அவள் கைச் சமையலின் ருசியும் நினைவுக்கு வந்தது. அவள் தன் சமையல் அவன் ருசிக்கு ஏற்கிறதா என்று மிகவும் பக்தி சிரத்தையுடன் வினவி வினவிப் பரிமாறினாள்.

அன்றிரவு இவன் அங்கே தங்க நேர்ந்தது. அந்த இரவில் தான் அவள் தன்னைப் பற்றியும் தன் தாய் தம்பி வாழ்க்கை நிலைமைகளைப் பற்றியெல்லாம் இவனோடு மனம் விட்டுப் பேசினாள். திடீரென்று தோன்றிய ஒரு யோசனையை அவனிடம் அவள் வெளியிட்டாள். அவள் சொன்னாள்: "நீங்க மெஸ்ஸீக்குக் குடுக்கிற பணத்தை இங்கே கொடுத்தால் உங்களுக்கும் சமைச்சுப் போட்டு நானும் சாப்பிடுவேன்... என்னாங்கோ- உங்களுக்கு செளகரியப்படுமாங்கோ?..."

அவன் வெகுநேரம் யோசித்த பிறகு சம்மதித்தான். இதுவரை அவர்களிடையே வெறும் நட்பாக இருந்த உறவு அன்று அவனுக்கொரு புதிய அனுபவமாயிற்று. அது வாழ்க்கையிலேயே அவனுக்குப் புதிது. அதே மாதிரி ஒரு புதிய மனிதனைச் சந்திப்பது அவளுக்கும் முதலும் புதிதுமான அனுபவம்.

தான் எதனாலோ வெறுத்தும் பயந்தும் ஒதுக்கி வைத்த குடும்ப வாழ்க்கை என்பது, ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்தல் என்பது எவ்வளவு சுகமான, சுவையான, அர்த்தமுள்ள அனுபவம் என்பதை அவன் கண்டு மயங்கினான்.

அந்த வீடும் அந்த வாழ்க்கையும் மிக மிக எளிமையானது. மாடியின்மீது கூரை போட்ட ஒரே அறையில் தான் சமையல், படுக்கை எல்லாம். குளிப்பதற்குக் கீழே வரவேண்டும். குண்டும் குழியுமான தரையில் பாய் விரித்துப் படுக்க வேண்டும். அவளுடைய அம்மாவோ, தம்பியோ - அவர்கள் பகலில்தான் வருவார்கள் - அப்போது அங்கே இருக்க நேர்ந்தால் இப்போதுதான் வந்ததுபோல் நடிக்க வேண்டும். இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தான் கல்யாணமே வேண்டாம் என்று பயந்திருந்த காரணங்களை அவளிடம் சொன்னபோது அவள் சிரித்தாள். "உங்க நைனா, அம்மாவைக் கொடுமைப்படுத்தினாருன்னா பயந்துகினு இருந்தீங்கோ? ஒரு பொண்ணுக்கு இந்த பயம் வந்தா நாயம்... ஆம்பளைக்கு இதிலே என்னாங்கோ பயம்?... அவரை மாதிரி நீங்க உங்க பெண்சாதியே அடிக்காம இருந்தா சரியாப்பூடுது..."

அவன் அவளிடம் கல்யாணத்தைப் பற்றியும், ஊரிலிருந்து அம்மா எழுதுகிற கடிதங்களைப் பற்றியும் பேசினான். இருவரும் ஒன்றாக வாழ்ந்துகொண்டு தான் இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்கிற விஷயமாக அவன் அவளிடம் பேசுவதும், அதற்கு உடன்பாடாக அவளும் அவனை வற்புறுத்துவதும் முரண்பாடான விஷயமாகவோ பொருத்தமற்றதாகவோ இருவருக்குமே தொன்றவில்லை. தனித்தனியாக இருக்கிற நேரத்தில் மனசின் ஆழத்தில் அந்த முரண்பாடு தோன்றியதன் காரணமாகவே அவர்கள் அது குறித்து மிகச் சாதாரணமாகவும் அதிகமாகவும் பேசினார்கள் போலும்.

கடைசியில் ஒருநாள் நந்தகோபால் தன் தாய் வற்புறுத்திச் சொல்கிற, தனது சொந்தத்துப் பெண்ணும், பத்தாவது படித்தவளும், மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டவளூம், இதற்கு முன்னால் இவனே பார்த்து அழகிதான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவளுமான வத்ஸலாவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துக் கடிதம் எழுதியபின் அந்தச் செய்தியை கிரிஜாவிடமும் கூறினான்.

அவள் மனத்தினுள் அவளே உணராத வண்ணம் ரகசியமான ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தாலும் மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் சிரிப்புடனும் அவனைப் பாராட்டினாள். 'புது மாப்பிள்ளை புது மாப்பிள்ளை' என்று பரிகாசம் செய்தாள். என்னென்னவோ புத்திமதிகள் கூறினாள். அவனைவிட அனுபவமும் முதிர்ச்சியும் உடையவள் என்பதால் அவனுக்கு நிறையவும் கற்றுத் தந்தாள். அதற்காக அவன் அவளிடம் மிகுந்த நன்றி பாராட்டினான். பெண் என்றாலே பயந்தும் வெறுத்தும் ஓடிய தன்னைக் கல்யாணத்துக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் தயார்ப்படுத்திய பொறுப்பு அவளுடையதுதான் என்று அவன் நம்பியது மாத்திரமல்லாமல் அவளிடமே அதைத் தெரிவித்தான். அப்போதெல்லாம் என்னவென்று விளங்காத ஓர் உணர்ச்சியுடன் வாய்க்குள் அவள் சிரித்துக் கொள்வாள்.

அவளோடு சேர்ந்து இவன் இருந்த அந்த இரண்டு மாத காலத்தில், பக்கத்திலுள்ள ஒரு நர்சரி பள்ளியில் 'அன்ட்ரெயின்ட்' டீச்சராக, ஒரு டெம்பரரி வேலையும் அவள் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரங்களில் தையல் கிளாசுக்குப் போனாள். ஏற்கனவே அவளுக்கு டெய்லரிங் கொஞ்சம் தெரியுமாம்.

அவனுடைய கல்யாணத்துக்குத் தேதி குறிக்கும்வரை அவன் அவளோடுதான் இருந்தான். பின்னர் அவளேதான் கூறினாள். "நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்கோ. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கிறது கல்யாணத்துக்கு. நீங்க உங்க மெஸ்ஸீக்கே போயிடுங்கோ. உடம்பெ நல்லாப் பாத்துக்குங்கோ... நல்லாச் சாப்பிடுங்கோ... கல்யாணத்துக்கு அப்பாலே ஒரு ·பிரண்டு மாதிரி வந்து பாருங்கோ. எனக்குச் சந்தோஷமா இருக்கும்."

- அப்போது அவள் கண் கலங்கியதை எண்ணி இப்போது மனம் பொருமிய நந்தகோபால் அவள் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு மாடியை அண்ணாந்து பார்த்தான். மாடி மீதுள்ள கூரையின் சிறிய ஓட்டைகளினூடே உள்ளே விளக்கு எரிவது தெரிந்தது. தீக்குச்சியைக் கிழித்து வாட்சில் மணி பார்த்தான். பன்னிரண்டு.

திடீரென்று தன்னைப் பார்க்கும் அவளுடைய ஆச்சரியத்தை எண்ணிக்கொண்டு, அவளைப் பார்க்கப் போகிற ஆவலில் நெஞ்சு படபடக்க அவன் படியேறினான்.

மேல் படியிலிருந்து அவன் தலை தெரியும்போது காலடிச் சத்தம் கேட்டுத் தையல் மிஷின் அருகே ஸ்டூலில் உட்கார்ந்து, எதையோ ஊசியால் பிரித்துக் கொண்டிருந்த கிரிஜா, "யாரது?" என்ற அதட்டல் குரலுடன் எழுந்தாள்.

"நான் தான்" என்று இவன் பேரைச் சொல்லுவதற்கு முன் அவள் சந்தோஷம் தாங்க முடியாமல் "ஹை! நீங்களா! வாங்கோ" என்று வரவேற்றாள். அவனைத் தழுவிக் கொள்ளப் பரபரத்த கைகளின் விரல்களைத் திருகித் திருகி நெட்டி முறித்துக் கொண்டே, "என்ன இந்த நேரத்திலே? உக்காருங்கோ. சாப்பாடெல்லாம் ஆச்சா?" என்று பலவாறு கேட்டுக்கொண்டே பாயை எடுத்து விரித்து உட்காரச் சொன்னாள்.

"திடீர்னு உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சு - வந்தேன்" என்றான். அவள் கலவரமடைந்தாள். அது அவனுக்குத் தெரியாத வண்ணம் சமாளித்துச் சிரித்தாள். "தாகத்துக்குச் சாப்பிடுங்கோ" என்று தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.

இருவருக்குமே திகைப்பும் படபடப்பும் அடங்கச் சற்று நேரம் பிடித்தது. அவன் அந்தப் புதிய தையல் மிஷினைப் பார்த்து அதைப் பற்றி விசாரித்தான். அவள் தான் டெய்லரிங் பாஸ் பண்ணியதையும், இன்ஸ்டால்மெண்டில் இதை வாங்கி இருப்பதையும், இதில் நிறையச் சம்பாதிப்பதையும், இந்த மாதம் மூணு பவுனில் ஒரு செயின் வாங்கிப் போட்டுக் கொண்டதையும் காட்டி - "ஸ்கூல் வேலையை விட்டுடலீங்கோ" என்று கூறித் தனது நல்ல நிலைமையை விளக்கி அவனைச் சந்தோஷப்படுத்தினாள். அவன் மனசுக்கு அவள் கூறியவை மிகவும் இதமாக இருந்தன. அவன் ரொம்ப மகிழ்ச்சியடைந்தான்.

"நீங்க எப்படி இருக்கிறீங்கோ?... உங்க 'வய்ப்' நல்லா இருக்காங்களாங்கோ?" என்று குதூகலமாய் அவள் விசாரித்தபோது அவன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்து வருத்தமாகச் சிரித்தான்.

அவள் தையல் மிஷின் மீது குவிந்து கிடந்த தைத்த, தைக்க வேண்டிய, வெட்டிய, வெட்ட வேண்டிய புதுத்துணிகளையெல்லாம் எடுத்துப் பிரித்து ஒவ்வொன்றாக ஒரு பெட்டியினுள் மடித்து வைத்து இவனோடு பேசிக் கொண்டிருப்பதற்காக வேலைகளை 'ஏறக் கட்டி'க் கொண்டிருந்தாள். அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. அதற்காகத்தான் அவன் சந்தோஷப்படத்தக்க விஷயங்களை முந்திக்கொண்டு அவள் சொன்னாள். இதனை புத்திசாலித்தனத்தால் செய்ய வில்லை; நல்லியல்பால் செய்தாள். எனவே இப்போது அவன் வருத்தம் அறிவுக்குப் புரிய, தானும் வருந்தினாள்.

அவன், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நெஞ்சு நிறையப் புகையிழுத்துக் கூரையை நோக்கி நீளமாக ஊதிவிட்டான். சிகரெட்டின் சாம்பலை மிகக் கவனமாக விரலிடுக்கில் உருட்டி தட்டிக்கொண்டே அவள் முகத்தைப் பாராமல் வருத்தம் தோய்ந்த குரலின் சொன்னான்: "நான் உனக்குச் செஞ்ச பாவத்துக்கு இப்ப அனுபவிக்கிறேன். நான் உன்னையே கல்யாணம் பண்ணிக் கிட்டிருக்கலாம். ஓ! இப்ப என்ன பண்றது?" என்று புலம்பிக்கொண்டிருந்தவனின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டாள் கிரிஜா.

கல்யாணம் முடிந்து தன்னோடு புறப்பட்டபோது அவள் ஆரம்பித்த அழுகையை இன்னும் நிறுத்தவில்லை என்றும், அவளுக்குத் தன்னோடு வாழ்வதில் சந்தோஷமில்லை என்றும், தன்னை அவள் அவமதிப்பதையும், இன்று கூடத் தலையில் அடித்துக் கொண்டதையும் அவன் வாய் ஓயாமல் வத்ஸலாவைப் பற்றிப் பேசித் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான்.

தையல் மிஷினுக்குப் பக்கத்திலிருந்து எண்ணெய் போடுகிற 'ஆயில் கேனை' எடுத்துக் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையேயுள்ள புண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டே, அவன் புலம்புவதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் கிரிஜா.

"பாவங்கோ அது. அறியாப் பொண்ணு தானேங்கோ?" என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் ஒன்றும் புரியாமல் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

"உங்களைக் கல்யாணம் பண்ணிக்கினதுனாலேயே உங்களுக்குச் சமமா ஆயிடுவாங்களாங்கோ அவுங்க?... அப்பா அம்மாவுக்கு ரொம்பச் செல்லப் பொண்ணுன்னு நீங்க தானேங்கோ சொல்லியிருக்கீங்கோ? எல்லாரையும் விட்டுட்டு வேற ஒரு ஊரிலே தனியா உங்களேட வந்து வாழறப்ப அந்தக் கொழந்தை மனசு எப்படிங்கோ இருக்கும்? அதெப் புரிஞ்சு நீங்கதான் - அட்ஜஸ்ட் பண்ணி நடக்கணும். நீங்க 'டிரெய்ன்ட்' இல்லீங்களா? ஒரு ஆம்பிளைங்கறதே அவுங்களுக்குப் புதுசு இல்லீங்களா? பயமா இருக்கும்ங்கோ; அருவருப்பாகூட இருக்கும்ங்கோ... நான் உங்ககிட்ட அப்படியெல்லாம் இருந்தேன்னா அதுக்குக் காரணம் என்னாங்கோ? நான் 'எக்ஸ்பீரியன்ஸ்ட்' இல்லீங்களா? யாருங்கோ 'வய்·பா' இருக்கிறதுக்கு டிரெய்ன்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே - என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு - அப்ப ஏங்க அது தோணலே? நான் ஏற்கனவே 'டிரெய்ன்ட்'ங்கற 'டிஸ்குவாலி·பிகேஷன்' தாங்கோ அதுக்குக் காரணம்! அதனாலே, உங்க வய்·பை விட நீங்க அனுபவஸ்தர்ங்கிறதை நெனைப்பிலே வெச்சிக்கணும். அவுங்க கொழந்தைன்னு புரிஞ்சுக்கணும். நான் உங்ககிட்டே இருந்த மாதிரி நீங்க அவுங்ககிட்டே இருக்கணும். அப்படித்தான் போகப் போக எல்லாம் சரியாப் போயிடுங்கோ..." என்று அவள் எல்லாவற்றையும் லேசாக்கி விட்டதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான். இவளிடம் வரவேண்டுமென்று தான் நினைத்தது எவ்வளவு சரியானது என்று எண்ணினான்.

அவன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த - கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற - காரியத்தில் மறுபடியும் முனைந்தாள்.

"என்ன காலிலே?" என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.

"போன வாரம் புதுசா செருப்பு வாங்கினேன். கடிச்சிடுச்சுங்கோ. மிஷின் தைக்கறதிலே விரல் அசையறதனாலே சீக்கிரம் ஆற மாட்டேங்குது" என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்: "பார்த்தீங்களாங்கோ... செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ... அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?"

அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான்.

(எழுதப்பட்ட காலம்: 1971)
நன்றி: குருபீடம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - ஏழாம் பதிப்பு: 1995
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home