|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Jeyakantan > Short Story Collections of Jeyakantan - ஜெயகாந்தனின் சிறுகதைகள் > யுக சந்தி > இல்லாதது - எது > இரண்டு குழந்தைகள் > நான் இருக்கிறேன் > பொம்மை > தேவன் வருவாரா?. > துறவு > பூ உதிரும் > குறைப் பிறவி > யந்திரம் > டிரெடில் > பிணக்கு > நந்தவனத்தில் ஓர் ஆண்டி > நீ இன்னா ஸார் சொல்றே? > புதிய வார்ப்புகள் > சுயதரிசனம் > அக்ரஹாரத்துப் பூனை > அக்கினிப் பிரவேசம் > புது செருப்புக் கடிக்கும் > நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
Short Story Collections of Jeyakantan in Unicode
ஜெயகாந்தன் - புதிய வார்ப்புகள் (1965)
| மாடியறையில் இந்துவைக் காணாமல் அவளது செல்லப் பூனை குறுக்கும்
நெடுக்கும் அலைந்துகொண்டு இருந்தது. வராந்தா வழியாக-அவளைத்
தேடியவாறு-சுவரோரமாய் நடந்து மாடிப் படியருகே வந்து நின்று, கீழே
ஹாலைக் குனிந்து பார்த்தது அந்தக் கருப்புப் பூனை. பொழுது மங்கி வெகுநேரம் ஆகியும் விளக்கைப் பொருத்த வேண்டுமென்ற உணர்வுகூட அற்றவளாய், முன் ஹாலில் இருண்ட மூலையில் கிடந்த ஸ்டூல் ஒன்றில், யாருக்கோ அஞ்சிப் பதுங்கியவள் மாதிரி உட்கார்ந்திருந்த இந்துவின் தாய் குஞ்சம்மாள், தலை நிமிர்த்தி மாடி வராந்தாவைப் பார்த்தாள். இருளில் ஜொலிக்கின்ற அந்தக் கறுப்புப் பூனையின் இரண்டு கொள்ளிக் கண்களையும் காண அவள் அச்சம் கொண்டாள். அந்தப் பூனையும் 'இந்து எங்கே? . . . இந்து எங்கே . . .?' என்று சினம் மிகுந்து அவள் மீது பாய்ந்து குதறுவதுபோல் அலறியவாறு மாடிப் படிகளில் வாலை நெளித்துச் சுழற்றியவண்ணம் இறங்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பூனையின் அலறல் மனிதக் குரல்போல் அவளுக்கு 'உருவகம்' கொண்டது. குஞ்சம்மாள் தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள். அவள் கண்களுக்கு அந்தப் பூனையின் விழிகள், தன் கணவரின் விழிகளைப் போன்று அச்சம் விளைத்தன. அந்தச் சமயத்தில் தன் கணவரின் பிரசன்னத்தைக் கற்பனை செய்தே அவள் உடல் நடுங்கினாள். மாடிப் படிகளில் அலறியவாறே இறங்கி வந்த கறுப்புப் பூனை, குஞ்சம்மாளின் காலைச் சுற்றிச் சுற்றிப் பரிதாபமாய் அழுதது. குஞ்சம்மாள் குனிந்து பூனையைக் கையில் எடுத்தாள். முகத்தோடு அணைத்துக்கொண்டு அழுதாள். தன்னைக் காணும்போதெல்லாம் விரட்டித் துரத்தும் அவளது இந்தப் புதிய செய்கையில் அந்தப் பூனை ஆச்சரியம் கொண்டதுபோல் அமைதியடைந்தது. இந்தப் பூனையின் தவிப்பை அவள் உதாசீனப்படுத்திவிடலாம். இதுபோல் மற்றவர்களின் தவிப்பை உதாசீனப்படுத்த தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும், சமாதானப்படுத்தி அவர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதிலாவது தான் வெற்றி காணமுடியுமா என்று எண்ணியபோது, அவள் மலைத்துப்போய்க் குழம்பினாள். அந்தக் குழப்பத்திலும் மலைப்பிலும் அவள் கையிலிருந்து நழுவிக் குதித்தப் பூனை, மீண்டும் இந்துவைத் தேடி அழைத்தவாறு ஒரு குழந்தைபோல் பின்கட்டை நோக்கி ஓடிற்று. அந்தப் பூனையின் குரல் குஞ்சம்மாள் நெஞ்சத்தைக் குடைத்தது. பாவம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்துவுக்கு - மாடியறையில் சிறையிடப்பட்டு நாலு வருஷமாய்த் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த இந்துவுக்கு - இந்தப் பூனைதான் உற்ற துணையாய் உடன் இருந்தது. அந்த நாலு வருஷத்தின் ஆரம்ப காலத்தில் - தன் குற்றத்தின் பயங்கரத்தையும், அந்தத் தண்டனையின் கொடுமையையும் அறியக்கூட முடியாத அந்த வயதில் - அவள் நாளெல்லாம் பாடிக்கொண்டும் பூனையோடு விளையாடிக் கொண்டும் இருந்தாள் . . பிறகு சில காலத்தில் பாட்டும் ஆட்டமும் குறைந்து, சதா நேரமும் படித்துக்கொண்டே இருந்தாள் . . சின்னவள் விஜயாவும் லைப்ரரியிலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து அவளுக்காகக் குவிப்பாள். ஆனால் சமீப காலங்களில் அவள் இவற்றிலெல்லாம் நாட்டமின்றி, தன்னுள்ளேயே அரிக்கப்பட்டவள்போல் குன்றிப் போய், சதா நேரமும் ஆழ்ந்த சிந்தனையும், வானத்தை வெறித்த பார்வையும், குமுறி விடுகின்ற பெருமூச்சுகளுமாய்ச் சாம்பிக் கிடந்தாள். அப்போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாய் அருகில் இருந்து அவள் தனிமையை மாற்றியது இந்தக் கறுப்புப் பூனைதான். அவளும் தனது ஆழ்ந்த சோகங்களின் நடுவே இந்தப் பூனையை எவ்வளவோ அன்போடு பாலூற்றி வளர்த்தாள். இதைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வ்ந்தது! போகும்போது இதைப்பற்றி நினைத்திருப்பாளா? கதறிக் கதறி அழுதாளே . .அந்த அழுகையில் இந்தக் கறுப்புப் பூனைக்கும் பங்கு உண்டா? அவள்தான் சொல்லிவிட்டாளே! 'யாருக்காகவும் தனது வாழ்க்கையைத் தான் பலியிட முடியாது' என்று . . . 'அவள் சொன்னது இருக்கட்டும். அப்படி ஒரு காரியத்தை என்னால் எப்படிச் செய்ய முடிந்தது' என்ற பிரமிப்பில் குஞ்சம்மாளின் விழிகள் வெறித்தன. செய்த காரியம் சரிதான். ஆனால் சரியான காரியங்களையெல்லாம் செய்துவிட முடிகிறதா? அவ்விதம் தனக்குச் செய்வதற்கான துணிச்சலைத் தந்த அந்த விநாடிகளை அவள் மனத்துள் வாழ்த்தினாள். அதன் விளைவுகளைக் கற்பனை செய்து இப்போது அவள் நடுங்கிக்கொண்டிருக்கும் இந்தநேரத்தில்கூட, அது 'சரி' தான் என்று தோன்றும் அளவுக்கு இந்தக் காரியம் சரியானதாய் இருந்தது. எனினும் அந்த நிலைமை இப்போது இருந்தால் - இந்த நிமிஷம் அந்தத் துணிச்சல் தனக்கு இருக்காது என்றே அவளுக்குத் தோன்றியது. அந்த நிமிஷத்தின் நிர்ப்பந்தம், அந்த நேரத்தில் அவளைப் புதிதாய் வார்த்து, அந்தப் புதுமையான துணிச்சலைத் தந்து அந்தக் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டுவிட்டது . . . அப்படி ஒரு நேரத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் நான்கு வருஷத்துக்கு முன் பதினேழு வயதில் இந்து அவனுடன் ஓடிப்போய் இருக்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆமாம்; ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன. நிர்ப்பந்தங்கள் நேர்ந்த நிமிஷங்கள் தளர்ந்தாலும் அதன் நியாயங்கள் நிலைத்தே விடுகின்றன. அவளுக்கு நேர்ந்த அந்த நிர்ப்பந்தத்தை நாலு வருஷங்களுக்குப் பிறகுதான் தன்னால் உணரமுடிந்திருக்கிறது என்று நினைத்தபோது, தன்னைப்போல் தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இதை உணர்ந்துகொள்ள முடியுமா? என்ற் அச்சம் பிறந்தது அவளுக்கு. 'இந்து எங்கே? இந்து எங்கே?' என்று அலறியவாறே மீண்டும் அந்தக் கறுப்புப் பூனை கண்களில் பந்தம் கொளுத்தித் தேடிக்கொண்டு அவள் எதிரே வந்து நின்றது. இன்னும் சற்று நேரத்தில் இதே மாதிரி தன்னைச் சூழ்ந்து நெருக்கிக் கேட்கப்போகும் தன் குடும்பத்தினருக்கு அவள் என்ன பதில் சொல்லப்போகிறாளோ? இந்தக் குடும்பத்தின் அதிகாரமும் பொறுப்பும் மிக்க தலைவி அவளே எனினும், குடும்பம் என்ற கூட்டுக்குள் தனக்குத் தரப்பட்ட, தனக்குரிய, அதிகாரத்தைத் தான் வரம்பு மீறி உபயோகித்து விட்டோம் என்ற பயமே தோன்றி எல்லோர் முன்னிலையிலும் தான் குற்றவாளியாகி நிற்பது போலிருந்தது அவளுக்கு. ஓடிப்போன-தன்னால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்ட இந்துவைத் தவிர, தற்சமயம் வெளியில் போயிருக்கும் மற்றவர்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராய் நிச்சயம் திரும்பி வருவார்கள். கோயிலுக்குப் போயிருக்கும் மாமியாரோ, டியூஷனுக்குப் போயிருக்கும் அம்பியோ, காலேஜுக்குப் போய்விட்டு ஊர் சுற்றியபின் ஏதேதோ காரணங்கள் கூறிக்கொண்டுவரும் விஜயாவோ, அல்லது இந்நேரம் கிளப்பில் சீட்டாடிக் கொண்டிருக்கும் அவள் கணவரோ - யாரையேனும் அவள் முதலில் சந்திக்க வேண்டியிருக்கும். முதலில் யாரைச் சந்தித்தாலும் மொத்தமாக எல்லோரயும் அவள் சமாளித்தே தீரவேண்டும்! குஞ்சம்மாளுக்கு மீண்டும் முகமெல்லாம் வியர்வை கண்டது. வீடு இருண்டே கிடந்தது. விளக்கைப் பொருத்தவேண்டும் என்ற உணர்வுகூட அவளுக்கு இல்லை. பாட்டிதான் முதலில் வந்தாள். நாளெல்லாம் மழை பெய்து கோயிலின் பிரகாரமெல்லாம் சேறும் சகதியும் குழம்பி நின்றதோடல்லாமல் எந்த நிமிஷமும் மீண்டும் மழைபெய்யகூடும் என்ற அறிகுறியோடு பகலே ஒரு அந்தியாய் இருண்டு கிடந்ததால் வழக்கமாகக் கோயிலில் நடைபெறும் உபன்யாசம் இன்று உட்பிரகாரத்தில்-சாஸ்திரத்துக்குச் சற்று நேரம் - சுருக்கமாகவே நடந்து முடிந்திருந்தது. இல்லாவிட்டால் பாட்டிதான் எப்போதுமே கடைசியாக வருவாள். காம்பவுண்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த பாட்டி, வீடு முழுவதும் இருண்டு கிடப்பதை கண்ணுற்று, "என்னடி பொண்ணே, ஒரே இருளோன்னு கெடக்கே? . . கரண்டு கட்டா? இந்து . . இந்து போன் பண்றத்துக்கு என்ன?" என்று கூப்பாடு போட்டவாறே இருளில் துழாவியவாறு மாடிப்படிகளின் கைப்பிடிச் சுவரை ஒரு கையாலும் வலது முழங்காலை ஒரு கையாலும் தாங்கி விசுக் விசுக்கென்று ஏறி மேலே போனாள். ஒரு நாளைக்கு நூறு தடவை மாடிப்படி ஏறி இறங்குவதானாலும் பாட்டிக்கு அலுக்காது. அந்தக் குடும்பத்திலேயே சின்ன உருவம் பாட்டிதான். ராமபத்திர ஐயருக்கு இவள் அம்மா என்று நினைக்க யாருக்கும் ஒரு வியப்பும் சிரிப்பும் நிச்சயம் வரும். ராமபத்திரனுக்கு இந்த மாடியை நினைத்தாலே பயம்; ஒரு முறை ஏறி இறங்குவதற்குள் அவருக்கு மேல்மூச்சு வாங்கும். அதுவும் இரண்டு வருஷமாய் ரத்த அழுத்த நோயும் ஹிருதய பலவீனமும் ஏற்பட்ட பிறகு, காரைக்கூடப் பதினைந்து மைல் வேகத்திற்கு மேல் அவர் ஓட்டுவதில்லை. ஆகவே மாடிக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. குஞ்சம்மாளுக்கோ மாடியை நினைத்தாலே குடலைப் பிடுங்கிக்கொண்டு வரும். அவ்வளவு ஆத்திரம் இந்துவின்மீது. விஜயாவுக்குப் படிக்க இடைஞ்சலா யிருக்கக்கூடாது என்பதற்காக கீழே பின் கட்டில் தனி அறை. பாட்டியும் அம்பியும் மாடி ஏறி இறங்க அலுக்காதவர்கள். ஏறி இறங்கக் களைப்புத் தெரியாமல் இருக்க பாட்டுப் பாடுவதுபோல் 'இந்து இந்து' என்று பாட்டி அழைப்பாள். குழைந்து குழைந்து பேத்தியை இந்தப் பாட்டி அழைப்பதைக் கேட்கும் போதெல்லாம் குஞ்சம்மாளின் முகம் சுருங்கும். அந்தப் பெயரின்மீதே அவளுக்கு அத்தனை வெறுப்பு. நாலு வருஷத்துக்கு முன் எங்கோ ஓடிப்போன இந்துவை ஒன்றரை மாதத்திற்குப்பின் - ஒரு நாள் கண்டு பிடித்துக்கொண்டு வந்து அந்த அறையில் போட்டு அடைத்தாரே ராமபத்திரன், அன்றைக்கு மாடிக்குப் போய் அவள் எதிரே நின்று, உதட்டைக் கடித்து இரண்டு கைகளையும் அவள் எதிரே நீட்டிக்கொண்டு சப்தமில்லாமல் கனத்த குரலில், "செத்துப் போயேண்டி . . இந்த மானங்கெட்ட உயிரை ஏன் வெச்சிண்டிருக்கே? தூ! நீ ஒரு ஜென்மமா?' என்று இந்துவின் முகத்தில் காறித் துப்பிவிட்டு வந்தாளே, அவ்வளவுதான்! அதன்பிறகு அவளை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது இன்றுதான்; இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான். பாட்டி மாடிக்குப் போய் அறையையும் வராந்தாவையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்த வீடுகளில் விளக்கு எரிவதைக்கண்டு "ஊரெல்லாம் எரியறதே! நம்மாத்திலே மட்டும் என்னடி கோளாறு?" என்று முனகிக்கொண்டே சுவரைத் தடவி ஸ்விட்ச்சைப் போட்டாள். பளீரென்று வீசிய வெளிச்சத்தில் அறை கிடந்த அலங்கோலத்தைப் பார்த்தாள் பாட்டி. அலமாரியின் கதவுகள் இரண்டும் யோரோ அள்ளிக்கொண்டு போய்விட்டதுபோல் விரியத் திறந்து, துணிகளும் பொருள்களும் இறைந்து கிடந்தன. "இந்து . . . அடியே இந்து!" என்று கூவியவாறே மாடிப்படிகளில் இறங்கிவந்த பாட்டி, சமையல் அறையில் தெரிந்த சிறு வெளிச்சத்தைக் கண்டு "குஞ்சு . . . குஞ்சம்மா . . எல்லோரும் எங்கேடி போயிட்டேள்? இந்து . . உள்ளேயா இருக்கே? என்று கேட்டவாறே சமையல் அறையை நோக்கி நகர்ந்தபோது அவள் முதுகுக்குப் பின்னாலிருந்து . . . "இந்து இல்லே . . ." என்று துயரத்தின் கனமேறிய குரல் இருளிலிருந்து ஒலிக்கக் கேட்டு, நின்ற நிலையிலேயே தோள் வழியே முகம் திருப்பிப் பார்த்தாள் பாட்டி. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சுவரைத் தடவி ஹால் விளக்கின் ஸ்விட்ச்சைப் போட்டாள். "இருட்டிலே உட்கார்ந்துண்டு என்னடி செய்யறே?" என்று கேட்டவாறே குஞ்சம்மாளின் அருகே பாட்டி நெருங்கி வந்தாள். குஞ்சம்மாள் துயரத்தால் உதடுகள் துடிக்க ஒரு விநாடி தலைக்குனிந்து அழுகையை விழுங்கிக்கொண்டு முகம் நிமிர்த்தி மாமியாரைப் பார்த்தாள். சில விநாடிகள் ஒன்றுமே பேசாமல் சிவந்த விழிகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். பாட்டியும் ஒன்றுமே விசாரிக்காமல் எதையோ விவர விளக்கங்களற்றுப் பொதுப்படையாகப் புரிந்து கொண்டவள்போல் இடுப்பில் ஒரு கையை ஊன்றி மெளனமாக கலவரத்தோடு குஞ்சம்மாளின் முகத்தைப் பார்த்தாள். "எங்கே இந்து?" என்று குரலை அடக்கித் தனது கன்னங்களிரண்டிலும் உள்ளங் கைகளை வைத்து அழுத்திக்கொண்டு கேட்டாள் பாட்டி. "அவன் வந்தான்;அவனோட அவளும் போயிட்டா" என்று கரகரத்தக் குரலில் கூறினாள் குஞ்சம்மாள். "அந்தப் பாவி மகன் எதுக்கு வரணும் இங்கே? இவளை நீ எப்படிப் போகவிட்டே? அவள் அப்பன் கிளப்லே தானே இருப்பான்? போன் பண்ணிருக்கபடாதோ? முன்னே பிடிச்சு ஜெயில்லே போட்ட மாதிரி இந்தத் தடவை தூக்கிலேயே போடுவானே?இப்பிடி அறிவு கெட்டவளா, பயித்தியம் புடிச்ச மாதிரி உட்காந்துண்டு, 'அவ அவனோட போயிட்டா'ங்கரயே? அவ அப்பன் வந்தா உன்னைக் கொன்னுடுவானேடி?" என்று பாட்டி கைகளைப் பிசைந்து, தலையிலடித்துக் கொண்டு அங்கலாய்த்தவாறே பக்கத்தில் கிடந்த சோபாவில் உட்கார்ந்தாள். குஞ்சம்மாள் எல்லாவற்றுக்கும் துணிந்தவள்மாதிரி, எதற்கும் அஞ்சாதவள் போல் தலைக் குனிந்து மெளனமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். பாட்டியம்மாள் அங்கலாய்த்து ஓய்ந்தபின் தரையைக் கால் விரல்களால் தேய்த்தவாறே குஞ்சம்மாள் தெளிவான குரலில் கேட்டாள்: "அவனைப் பிடிச்சு ஜெயில்லே போட்டோம் . . .அவன் செய்யாத குத்தமெல்லாம் சொல்லி, அவனுக்குத் திருடன்னு பட்டம் கட்டி, அதுக்கு அவளையே அவனுக்கு எதிரா சாட்சிச் சொல்ல வச்சு, நாலு வருஷம் ஜெயில்லே போட்டோம். என்ன வாழ்ந்தோம்? என் பொண்ணுக்கு என்ன விமோசனம் ஏற்பட்டது? யோசிக்க வேண்டாமா? நகைக்கு ஆசைப்பட்டு மைனர் பொண்ணைக் கடத்திண்டு போனான்னு நாம்ப சொன்னாலும் - ஒரு மாதத்துக்கு மேலே அவா ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்திருக்காங்கறதை நாம்ப மறைக்கப் பார்த்தாலும் - ஊரிலே யாரு நம்பறா? என்னத்தான் காசு பணத்தைக் காட்டினாலும், ரொம்ப வேண்டியவாகூட விஜயாவைத்தான் பார்க்க வராளே தவிர, இவளை யாரு சீந்தரா? . . . அப்புறம் இவ என்னதான் ஆறது? உங்க பிள்ளை அவனைத் தூக்கிலேகூடப் போடுவார் . . . அவருக்கு வர்ர கோபத்திலே தானே தன் கையாலே அவனைக் கொன்னாலும் கொன்னுடுவார் . . சரி, அப்புறம் இந்துவோட பிரச்னை அத்தோடு நமக்குத் தீர்ந்துடுமா? அவ நமக்கு ஒரு பிரச்னை இல்லையா? அந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்த நாலு வருஷமா நாம்ப என்ன பண்ணினோம்? என்னப் பண்ணப்போறோம்? என்ன பண்ண முடியும்? யோசிங்கோ மாமி . . ." என்று யோசித்து யோசித்து ஆழமான தொனியில் குஞ்சம்மாள் கூறுவதைக் கவலையோடும் கலங்குகின்ற கண்களோடும் கேட்ட பாட்டிக்கு சில யோசனைகள் பிறக்க ஆரம்பித்தன. மீண்டும் சில நிமிஷ மெளனத்தில் இருவருமே தலை குனிந்து அமர்ந்திருந்தனர். திடீரென்று இருவருமே ஒரே சமயத்தில் தலை நிமிர்ந்து பார்த்தனர். இப்போது பாட்டியின் கண்களுக்கு தனது மருமகள் அறிவு கெட்டவளாகவோ, பைத்தியம் பிடித்தவளாகவோ தோன்றவில்லை; ஆனால் இவ்வளவு நேரம் குஞ்சம்மாளை மட்டும் தனியாகப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த பயமும் 'எப்படிச் சமாளிக்கப் போகிறோம், இதை' என்ற பிரச்னையும் பாட்டியைப் பிடித்து ஆட்ட ஆரம்பின. "என்ன நடந்தது? எதுக்கு அப்படிப் பண்ணினே . . இனிமே என்னடி பண்றது? நேக்கு வயத்தையெல்லாம் என்னமோ பண்றதே . . . முன்னேயே அவ ஓடிப்போனப்போ - எல்லாத்துக்கும் நீயும் நானும்தான் காரணம்னு அவன் பேசல்லியா? நீயும் நானும்தான் அவனோட ஆபீஸ் அட்டண்டரை ஆபீஸ் வேலைக்கே விடாம வீட்டுக்குக் கூப்பிட்டுக் கூப்பிட்டு வேலை வாங்கினமாம். ராத்திரி பகல்னு இல்லாம அந்த வேணுவை உக்காத்திவைச்சு சாப்பாடும் பலகாரமும் காபியும் குடுத்துக் குடுத்து இந்த வீட்டிலே ஒருத்தன் மாதிரி ஆக்கினோமாம் . . இப்படி எவ்வளவு பேசினான் . . இப்போ அவன் வந்து கேப்பானடி? ஏண்டி, நோக்கு பயமா இல்லையா?" என்று உடல் நடுங்க, நடுங்குகின்ற கைகளால் மருமகளைத் தொட்டாள் பாட்டி. குஞ்சம்மாள் தைரியம் அளிப்பவள்போல் தன் கரத்தின் மேல் வைத்த பாட்டியின் கரத்தைப் பற்றிக்கொண்டு பெருமூச்செறிந்தாள். அவள் மனத்தில் ஒரு தைரியமே பிறந்தது. பயந்து நடுங்குகிறவர்களுக்குக் கூடத் தன்னைவிடப் பயந்து நடுங்குகிற இன்னொரு துணை இருந்தால் ஒரு தைரியம் பிறக்கும். பயத்தையும் துயரத்தையும் சமாளிக்கவேண்டுமானால் முதலில் அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். குஞ்சம்மாள் நடுங்கிக் கொண்டிருந்தது அதற்குத்தான். தனது பயத்தைப் பகிர்ந்து கொள்ளத் தக்கவர்கள் வராமால், யாரை எண்ணிப் பயந்துகொண்டு இருந்தாளோ அந்தக் கணவரே வந்து விடுவாரோ என்றுதான் அவள் தவிக்க வண்ணமிருந்தாள். இப்போது பாட்டியம்மாளும் தன்னைப்போல், 'இந்துவின் அந்த ஓடிப்போன குற்றத்துக்குத் தண்டனை தந்தது தவிர அவள் எதிர்கால வாழ்க்கைக்காக இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே எதுவும் செய்யவில்லை . . செய்ய முடிந்ததுமில்லை' என்று பொறுப்பான சிந்தனை வயப்பட்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள் குஞ்சம்மாள். சில மணி நேரங்களுக்கு முன் திடீரெனச் சமையல் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வேணுவும் இந்துவும் நின்றிருந்த முன் வராந்தாப் பகுதியை அவள் பார்வை இப்போது வெறித்தது. அவளுக்கும் முதலில் அவனைப் பார்த்தபோது தன் மகளின் வாழ்வைக் கெடுத்த பாவி வந்திருக்கிறானே என்றுதான் வயிற்றைப் பிடுங்கிக் கொண்டு ஆத்திரம் வந்தது --- அப்போது வெளியே மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது;
சாரலைத் தடுப்பதற்காக வராந்தாவின் முன்புறத்தில் தொங்கிய மூங்கில்
தட்டியின் மறைவில் கிடந்த பெஞ்சின் மீது அவன் உட்கார்ந்திருந்தான்.
இந்து அவன் அருகே மிகவும் உரிமையோடு நின்று புடவைத் தலைப்பால் முகத்தை
மூடி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். |