'அதை' அவன் மறந்து வெகு நாட்களாயிற்று.
இந்தப் பிரபஞ்சத்துக்கே மூல வித்தான 'அதை' மறந்து---ஏன் அதை
மறுத்தும்---இந்தப் பிரபஞ்சத்தையே தனதாக்கிக் கொள்ளப் போட்டியிட்டு
முன்னேறி முன்னேறி வெற்றி கொள்ளும் அவன், வெறியும் கொண்டு, அந்த
வெறியில் தன்னை மறந்து தன், பிறவியை மறந்து, தன் காரியத்தில் கண்ணாய்
இருந்து கொண்டிருப்பதைக் கண்ட 'அது' தானே அவன் எதிரில் வந்து
திடீரென்று பிரசன்னமாயிற்று.
அப்பொழுதும் அவன் 'அதை'க் கவனிக்கவில்லை.
அணுவைப் பிளப்பதில் வெற்றி கண்ட அவனது தீட்சண்ய மிக்க விழிகள்,
அண்டங்களையெல்லாம் துருவி ஆராய்வதில் முனைந்திருந்தன. அவனைச்
சுற்றிலும் நவ நவமான, மிக நவீன யந்திரங்களும்,
வேகத்தை---தூரத்தை---காலத்தைத் துல்லியமாய் அளக்கும் கருவிகளும்
இருந்தன. கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் சுழலும் கிரகங்களில் என்னென்ன
நிகழ்கின்றன என்று கண்முன் காட்டும் கருவி ஒன்றில், அவன் முகம்
குனிந்திருந்தது. அவனது இரு செவிகளையும் அடைத்திருந்த கருவியின்
வாயிலாக அவன் மற்றொரு உலகத்துச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் எதிரில் வந்து தனது பிரசன்னத்தை உணர்த்தியும் அவன் தன்னை
ஏறிட்டுக் காணாதிருப்பதைக் கண்டு, 'அது' கோபம் கொள்ளும் நேரத்தில்;
குனிந்திருந்த அவன் தலையும், அதில் பஞ்சாய் நரைத்திருந்த சிகையும்,
'அதன்' பார்வையில் பட்டது.
'ம்.....இன்னும் இவன் இதை வெல்லக் கற்றுக்கொள்ளவில்லையே' ' என்ற
நினைவில் கொஞ்சம் சமாதான முற்றது அது; மூப்பையும் மரணத்தையும் வெல்ல
இயலாத இந்த மனித ராசியிடம் போய் நமது கோபத்தைக் காட்ட வேண்டாம் என்று
அமைதி அடைந்தது அது.
ஒரு காலத்தில் தனது பிரசன்னத்துக்காக, வாழ்க்கையையும், மனித
பந்தங்களையும் துறந்து, வனமேகி, எண்ணற்ற காலம் கண்மூடித் தவமிருந்து
காணமுயன்று தோற்ற ---அல்லது வென்ற அந்த மனிதனின் வாரிசா இவன்?......
'எதிரில் வந்து---வலுவில் நிற்கும் என்னை ஏறிட்டுப் பாராத இவன் விழிகள்
குருடோ?..... இல்லை..... இல்லை;..... இவன் பார்வை, இவனுக்கு எட்டாத
தூரத்தில் நான் இருத்திய கிரகங்களை--- எனது திரைகளையும் விலக்கிப்
பார்க்கின்றன.... அந்த விஷயத்தில் இவன் வென்றுதான் விட்டான்.....
"ஏ' ஜீவாத்மாவே என்னைப்பார்'...."
'அது' அழைத்த குரல், அவன் செவியுட் புகாதவாறு அந்தக் கருவிதான் அவன்
காதை அடைத்துக் கொண்டிருக்கிறதே....'
ஔ¢யுருவாய், ஒலியுறுவாய், உருவற்ற உருவாய் அவன் எதிரே
பிரசன்னமாகியிருந்த 'அது', தன் இருப்பை அவனுக்கு உணர்த்த முயன்றது.
திடீரென்று கண்களைப் பறிக்கும் பிரகாசமும், செவிப்புலனைப் போக்கும்
இடியோசையும்--- அவனது காரியத்துக்கு இடைஞ்சல் விளைவித்தன.
'அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் யந்திரங்களிலோ, அந்தக் கருவிகளிலோ ஏதேனும்
கோளாறு நிகழ்ந்து விட்டிருக்குமோ' என்ற பதைபதைப்பில் அவற்றின்
இயக்கத்தை அவசர அவசரமாய் நிறுத்திவிட்டு, அந்த ஆராய்ச்சிக் கூடத்தின்
கேந்திர ஸ்தானத்தைப் பரிசீலித்தான், அந்தக் கிழட்டு விஞ்ஞானி.
எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. 'பின் எங்கிருந்து வந்தன அந்தப்
பெரு வௌ¢ச்சமும், இடி முழக்கமும்' என்று அவன் தனது நரைத்த
தலையை--நரம்புகள் நௌ¢ந்து சருமம் சுருங்கிய கரத்தால் சொறிந்து கொண்டே
யோசித்தான். அப்பொழுது....
"ஏ ஜீவாத்மாவே...." என்ற குரல் கேட்டுத் தனது நரைத்த சிறிய தாடியை ஒரு
விரலால் நெருடிக்கொண்டே, புருவத்தைச் சுளித்தவாறு கண்களை மூடி சிரம்
நிமிர்த்தி அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் நடுவில் ஒற்றை மரமாய் நின்று
திகைத்தான் அவன்.
"ஏ ஜீவாத்மாவே, என்னைப்பார்' " என்ற அதன் குரல் எட்டுத்
திக்குகளிலிருந்தும் பிறந்து எதிரொலியின் கனபரிமாணங்களுடன்
அவ்வாராய்ச்சிக் கூடத்தின் மையத்தில் நின்றிருந்த அந்த மனிதனை வியூகம்
அமைத்துத் தாக்குவது போல் ஒலித்தது.
"யார் நீ?...." என்று முகட்டை நோக்கி நிமிர்ந்த தலையைத் தாழ்த்தாமல்,
இமைகளையும் திறக்காமல் கேட்டான்.
"நான்தான் பரமாத்மா' "
"ஓ' வழி தவறி வந்து விட்டாய்....இந்த உன் சுய அறிமுகம், அதோ
பக்கத்திலிருக்கிறதே மாதா கோயில், அல்லது தூரத்தில் இருக்கிறதே ஒரு
மசூதி, அல்லது உன்னையே கல்லாக்கி சிறை வைத்திருக்கிறதே கலைக்கோயில்
ஒன்று, அங்கே ஔ¢த்தால் அவர்கள் சாபல்ய முறுவார்கள்.....போ, என்
காரியத்துக்குக் குந்தகம் செய்யாதே' "
"ஏன் விஞ்ஞானியான உன்னிடத்தில் வேலை இல்லை என்கிறாயா?"
"ஆம்; எனக்குத்தான் உன்னிடம் வேலை இருக்கிறது" என்றான் அவன். அவன்
பதில் அதற்குப் புரியவில்லை.
அதன் மௌனத்தைக்கண்டு, வாய் அடைத்து நிற்கும் பரமாத்மாவின் நிலையைக்
கண்டு அந்தக் கிழவன் தனக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்:
"உனக்கு தெரியாத பாஷையை-- தெரிய அவசியமில்லாத பாஷையை நீ ஏன்
பேசுகிறாய்? மனிதனின் பாஷையை பேச நீ முயன்றால், அதுவும் மனிதனிடமே பேச
முயன்றால், நீ தோற்றுத்தான் போவாய். உனது பாஷையையும், உனது பேச்சையும்
உற்றுக் கேட்டு உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். மலையில் தவழும்
அருவியில் உன் பேச்சைக் கேட்டு, அதன் ரகசியத்தை அறிந்து, அதிலிருந்து
மின்சாரம் கண்டோம். இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ஊதி
ஊதி சுழலும் வாயு மண்டலத்தில் உன் மொழியைக் கேட்டு இருதயத்தின்
துடிப்பெல்லாம் அதில் பிரதிபலிக்கும் அதிசயத்தைக் கண்டுபிடித்து
வானொலியையும், அதைச் சார்ந்த எண்ணற்ற பல சாதனைகளையும் சாதித்தோம்.
புரியாதா பாஷையாய் எட்டாத் தொலைவிலிருந்து கண் சிமிட்டும் தாரகைகள்
என்னும் உனது நயன பாஷைகளையும் புரிந்து செயல்பட முயன்று, எங்களுக்கு நீ
விதித்த எல்லையையும் மீறி, உன்னால் பூட்டி வைக்கப்பட்ட கோடானு கோடி
வானத்து ரகசியங்களை எல்லாம் கொண்டு வந்து, இந்த எளிய புழுதிபடிந்த
பூமியில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் எங்கள் பாஷையை நீ பேச
முயல்வது வீண். நீ உனது பாஷையை பேசிக்கொண்டே இரு. ஒரு நாள் உன்
குரலிலிருந்து நீயே சிக்கிக் கொள்வாய். உன்னைத் தேடி வந்து உன்னைச்
சிறைப் பிடிப்பதோ, அல்லது நீயே இல்லை என்று உணர்த்துவதிலோதான் எனக்குப்
பெருமை. உனது பிரசன்னம் எங்களுக்குத் தேவையற்றது. அதைத்தான் நான்
குறிப்பிட்டேன். உனக்கு என்னிடம் வேலையில்லை. எனக்கு உன்னிடம் வேலை
இருக்கிறதென்று."
அவன் இன்னும் தன் கண்களை மூடிக்கொண்டே பேசுவது அதற்கு வியப்பளித்தது.
"என்னைப் பார், பிறகு நம்புவாய்" என்றது அது.
"முடியாது. நீ என் கண்களுக்குத் தெரிந்தால், அது வெறும் ஜாலமாகிவிடும்.
கண்ணும், செவியும், வாயும், மூக்கும், மெய்யுணர்வும் அல்ல உன்னை
நிர்ணயிப்பது. இவற்றுக்கெல்லாம் எஜமான் என் அறிவு. அறிவின் கருவிகளே
இந்தப் புலன்கள் யாவும், என் கண்ணுக்கு நீ தெரிந்தால், என் அறிவு உன்னை
மறுத்து உன்னை தோலுரித்து நீ யார் என்று எனக்குச் சொல்லிவிடும்; இந்த
நிமிஷம் வரை நீ, நீயல்ல; நீ எனது பிரமை."
"நீ நாஸ்திகனா?" என்று கேட்டது அது.
"இல்லை" என்றான் அவன்.
"நீ ஆஸ்திகன்தானே?" என்றது அது.
"அதுவுமில்லை" என்றான் அவன்.
அது மீண்டும் வாயடைத்து மௌனமாயிற்று.
அவன் சிரித்தவாறே சொன்னான்:
"நான் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன். நீ போய் உனக்கு தெரிந்த
உனது பாஷையில் பேசிக் கொண்டிரு. அல்லது அறிவின் பாஷையை நம்பாது
அர்த்தமற்ற முணுமுணுப்புடன் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
'ஆஸ்திகர்'களிடம் போய்ப் பேசு. அல்லது உன்னை மறுத்து உன்னைப் பற்றியே
தர்க்கித்துக் கொண்டிருக்கும் 'நாஸ்திகர்'களிடம் போய்ப்
பேசு---இருவரும் நம்பிவிடுவார்கள். அவர்களின் தீராத விவகாரமாவது
தீர்ந்து தொலையும் ஆம்; அகண்டத்திலுள்ள கோளங்கள் ஒன்றை ஒன்று
ஈர்த்து--அந்த ஆகர்ஷணத்தில் ஸ்திதி பெற்றிருப்பது போலத்தான், இந்த
ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஒருவரின் தர்க்கத்தில் மற்றொருவர்
இழுத்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் இருப்பதால் இருக்கை
கொண்டுள்ளனர். என் காரியம் அதுவல்ல, அறிவும் கரமும்தான் மனிதருக்குத்
தேவை. அவற்றின் காரியங்கள் முற்றிலும் முடிந்த பிறகு, ஆத்மாவைப் பற்றி
யோசிக்கலாம். நீ போ' "
"ஏ' அறிவாத்மாவே.....உன் அறிவின் வல்லமையும் கரங்களின் நுண்மையும்
ஒருபுறம் இருக்கட்டும். நீ துருவித் துருவி ஆராய்வதாகவும்
கண்டுபிடிப்பதாகவும் பெருமையடித்துக் கொள்கிறாயே, அந்தப் பிரபஞ்சத்தின்
இயக்கத்தையும் அவற்றின் நியதிக்குட்பட்ட போக்கையும் காண உன் மனம்
வியப்படைய வில்லையா? அந்த வியப்புக்கு மூல வித்தான அர்த்தமுள்ள ஓர்
வஸ்துவைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், உனக்கொரு பிரமிப்பு
விளையவில்லையா? அந்த பிரமிப்பால் உன் அறிவும் கரமும் குவிந்து
அடக்கமுறவில்லையா? அந்தச் சக்தியின்முன் தாளத்திற்குட்பட்ட
சங்கீதம்போல், பிரபஞ்ச இயக்கத்தையே ஒரு நியதிக்குட்படுத்தி, இணைத்து
இயக்கும் அந்தப்பேராற்றலின் முன் நீ மிகவும் அற்பம் என்று உனது
கண்டுபிடிப்பே உணர்த்தவில்லையா?"
"இல்லை, 'நான்' எனபது முன்னு மற்ற பின்னு மற்ற இடைநிலை என்று எண்ணி,
தனக்கு இருபுறமும் தொடர்ந்து வந்ததும் வருவதுமான சங்கிலிகளைத்
துண்டித்துக்கொண்டு, தன்மயமான 'நான்' மட்டுமே ஸ்திரப்படுத்த முயன்று
உன்னைத் தொழுதுகொண்டு இருக்கும் மூடாத்மாக்களுக்குத்தான் அவ்வித
பிரமிப்பு உண்டாவது சாத்தியம். ஆனால் நான், இந்த நூற்றாண்டில் வாழும்
'நானா'கிய எனக்கு வெகு சாதாரணமாய் இருக்கும் எத்தனையோ விஷயங்கள்,
எனக்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த 'நான்'களுக்குப் பிரமிப்பாய்த்
தோன்றி, அந்த மயக்கத்தில் உன் காலடியில் அவர்கள் வீழ்ந்தனர் என்று
அறிந்தவன். ஆனால் இன்று எனக்குப் புரியாத புதிர்கள் எத்தனை கோடி
இருப்பினும் அவற்றுக்காக இந்த வினாடி நான் பிரமிப்புற்ற போதிலும் இவை
யாவும் தௌ¢வடையும், எனக்குப் பின்னால் வரும் 'நான்'களுக்கு ரொம்ப
அற்பமான உண்மைகளாய் விளங்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் எவ்வித
மயக்கத்துக்கும் ஆளாகாமல், உன் காலில் விழாமல் என் காரியத்தை நான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் அடிப்படை எங்கள் அறிவுப்
புலன். ஒரு நீண்ட முடிவற்ற சங்கிலியின் ஒரு கண்ணியாக விளங்கும் நான்,
எனது கருமத்தை நிறைவேற்றுவதைத் தவிர மற்ற எதைப்பற்றிய பிரமைகளையும்
லட்சியப்படுத்த மறுக்கிறேன். எனக்குப் பின்னால் வரும் 'நான்'என்ற கண்ணி
ஒவ்வொன்றும் அவ்விதமே செயல்படும். இந்த 'நானென்னும்' கண்ணிகளில் ஏதோ
ஒன்று, வரப்போகும் ஏதோ ஒரு காலத்தில் ஆற்ற வேண்டிய காரியங்கள்
அனைத்தையும் முடித்து. பின், வழி தெரியாமல் திகைத்து நின்றுவிடுமானால்,
அப்போது நீ எதிர்ப்படுவாயானால், அந்த 'நான்' ஒருவேளை உன் காலில்
விழலாம். ஆனால் அவ்விதம் நிகழப் போவதில்லை. ஏனெனில் அறிவு என்ற எமது
மகத்தான புலன், எந்த அமைப்பிலும் சிக்கி 'இவ்வளவே' என்ற வரையறையில்
நிற்கத் தகுந்தது அல்ல. இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விரிந்ததோ, அத்தகைய
விரிவு மிகுந்தது அறிவு. ஆகையினால் அந்த 'நான்' என்ற அறிவின் முன் 'நீ'
என்ற பிரமைதான் மண்டியிட வேண்டும்---ஆம்; மானுடம் வெல்லும். பிரமைகள்
நீங்கும்; அல்லது விளக்கப்படும்."
'அது' அவனது பிரசங்கத்தைக் கேட்டு, அரை மனத்துடன் சிரித்துவிட்டு,
பின்னர் கேட்டது.
"அறிவின் அடிமையே...உன் சர்வ வல்லமை பொருந்திய அறிவு, உனது ஊன் பொதிந்த
உடம்புக்கு உட்பட்டதுதானே?"
"ஆம்' "
"சரி, உன் உடம்புக்கு ஏற்படும் நோய், மூப்பு, மரணம் என்ற விதியின்படி
அதுவும் செத்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அந்த அறிவால்
இந்த விபத்துகளைத் தடுத்துவிட முடியும் என்றுகூட நீ நம்புகிறாயா?"
"இல்லை, நான் அவ்விதம் நம்பவில்லை; அதற்கு அவசியமுமில்லை. ஏனெனில்
என்னை மட்டுமே---எனது அறிவை மட்டுமே--முன்னுமற்ற பின்னுமற்ற அனாதியாய்
எண்ணித் தவிக்கும் மூடாத்மா அல்ல நான். எனக்கு நோயும், மூப்பும்,
மரணமும் ஏற்படலாம். அதனால் என்ன? நான் இளமை இழந்து மூப்படைவதால் மனித
குலமே இளமை இழந்து மூப்படைந்து விடுகிறதா? நான் மரணமுற்று
விடுவதால்--உலகமே அஸ்தமித்துவிடப் போகிறதா? என் அறிவு நைந்து போவதால்,
மனித குலத்தின் அறிவே நைந்துவிடப் போகிறதா? அப்படி இருக்கும்
பட்சத்தில் எங்கள் அறிவு அதற்கும் ஒரு மார்க்கம் அமைத்திருக்கும். அது
அவசியமில்லை என்பதினாலேயே அந்த முயற்சியில் நாங்கள் இறங்கவில்லை. தனி
மனிதன் இறந்து படலாம். அவனது அறிவும், அதன் ஆற்றலும்
அழிந்துவிடுவதில்லை. மனித அறிவே ஸ்திரமாய், சிரஞ்சீவியாய் இந்தப்
பிரபஞ்சத்தில் வாழும் சக்தி பெற்றது......"
"போதும் போதும் உங்கள் அறிவின் பெருமை' விஷயத்துக்கு வருவோம்" என்று
சொல்லிவிட்டு, 'அது' சில வினாடிகள் அமைதியாய் இருந்தது.
அந்த அமைதியான வினாடிகளில் 'அது' மனிதனின் அறிவின் மீது கொண்டுவிட்ட
பொறாமையும், அந்த அறிவை அபகரிக்க வழி தெரியாமல் பொருமும் ஏக்கமும்
வௌ¢ப்பட்டன.
சற்று நேரத்துக்குப் பின் வஞ்சகமும், தன்னகங்காரமும் மிகுந்து கர
கரக்கும் குரலில் 'அது' அவனை மிரட்டியது.
"அற்ப மனிதனே, சாகப் பிறந்தவனே இந்த நிமிஷம் உன் உயிரை நான்
எடுத்துக்கொள்ள முடியும். சம்மதம்தானா?"
அந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த கிழட்டு விஞ்ஞானி ஒரு வினாடி திகைத்தே
போனான். தனது அனுபவத்தை நம்பவும் முடியாமல், தன் உயிரை இழக்கவும்
மனமில்லாமல், குழம்பி நின்றவன் 'சரி விவகாரம் என்று வந்தாகிவிட்டது.
பார்த்துவிடுவோம்' என்று எண்ணி, தௌ¢வான குரலில் சொன்னான்:
"நான் சாவதற்கு அஞ்சவில்லை. நான் முக்கியமான சில கண்டுபிடிப்புகளைக்
குறித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு பல
சாதனைகளைப் புரியலாம்; அவற்றை முடித்தபின் நான் சாகத் தயார்" என்று
அவசர வேகமாய் ஓடித் தன் இருக்கையில் அமர்ந்து, 'போனை' எடுத்துத்
தலையில் மாட்டிக் கொண்டு அந்தக் கருவிகளை இயக்க ஆரம்பித்தான்.
"நில்....நில்' சாவு என்றதும் அவ்வளவு அவசரமா? அப்படி முன்னறிவிப்போடு
சாவு வருவதில்லை. நான் வந்ததற்கான காரியத்தை உன்னிடம் இன்னும் பேச
ஆரம்பிக்கவில்லை....என்னை நீ கண் திறந்து பார்க்காவிட்டாலும் போகிறது.
செவி திறந்து, கவனமாய்க் கேள் நான் உன் உயிரைப் பறித்துச் செல்ல
வரவில்லை. உனக்கு, மனிதர்களாகிய உங்களுக்கு முன் யோசனை இல்லாமல்
அதிகப்படியான புலன்களை அளித்து விட்டதாக நான் உணர்கிறேன். அதனால்
நீங்கள் துன்பப்படுகிறீர்கள். ஆகையினால் உனக்கு இருக்கும் புலன்களில்
ஒன்றை எடுத்துக் கொண்டு விடுவது என்று தீர்மானித்து விட்டேன். என்
தீர்மானத்தின்படி உனது ஆறு புலன்களாகிய கண், மூக்கு, வாய்....செவி,
மெய், அறிவு ஆகியவற்றில் ஒன்றை நான் எடுத்துக் கொள்ளப் போவது நிச்சயம்.
ஏனெனில் எதை நீ இழக்கப் போகிறாயோ, அது எனக்கு அவசியம் தேவை. ஆனால், ஒரு
சலுகை தருகிறேன். இவற்றில் எதை நீயே இழக்கச் சம்மதிக்கிறாயோ, அதையே
நான் எடுத்துக் கொள்வேன். சீக்கிரம் சொல்" என்றது 'அது'
'ஒன்றை நான் எடுத்துக் கொள்ளப் போவது நிச்சயம்' என்ற அதன் குரலும்,
'அது எது என்று நீ தீர்மானம் செய்' என்ற சலுகையும் அவனை வெகுவாய்ச்
சிந்திக்க வைத்தன.
'அறிவை இழக்கக் கூடாது. கண்களை இழக்க முடியாது. அதைப்போலவே செவிப்
புலன், மெய்யுணர்வு வாய்---ம். இவற்றில் எதை இழந்தாலும் பயனற்றுபோகும்
வாழ்க்கை. வேண்டுமானால், மூக்கை இழந்து விடலாமா? மோப்ப உணர்வு
இல்லாவிட்டால் உண்ண முடியாதே; உண்ணா விட்டால் உடல் நைந்து
போகும்---நோய், மூப்பு, மரணம்--இவ்விதம் குழம்பிய கிழவன் 'அது'
இவ்விதம் கேட்பதில் ஏதோ சூது இருக்கிறது என்று சந்தேகப்பட்டான்.
ஆம்; மனிதனின், அவன் அறிவின் மிகச் சிறப்பான அம்சமே இந்தச்
சந்தேகப்படும் குணம்தான். சந்தேகம் ஆராய்ச்சிக் கருவியாய் அமைகிறது.
அதிலிருந்தே யூகம் பிறக்கிறது; செயல் விளைகிறது.
ஆகையால் 'உன் சித்தத்துக்கு ஏற்ப எதையாயினும் எடுத்துக் கொள்' என்று
கூறி விடலாமா, என்று யோசித்தான். அவ்விதம் சொன்னால் அடுத்த வினாடியே
தான் இழக்கப் போவது தன் அறிவு என்பதையும் அவன் உணர்ந்தான்....அறிவினும்
உயர்ந்த புலன் ஒன்று தனக்கு விளையலாகாதா என்று கற்பனை செய்தான்.
கிழவனின் முகத்தில் புன்னகை ஔ¢வீசிற்று; "ஏ பரமாத்மாவே, உனது
சித்தப்படி என்னிடம் இப்போதுள்ள ஆறு புலன்களில் எதை வேண்டுமானாலும் நீ
எடுத்துக் கொள்ளலாம். ஆனால்....ஆனால்....."
"சீக்கிரம் சொல்...." என்று தன் விருப்பத்துக்கே அவன் விட்டு விட்ட
மகிழ்ச்சியில், அவனது அறிவுப் புலன் மீது எண்ணம் கொண்டுவிட்ட அது,
பேராசையுடன் பரபரத்தது.
அதன் பேராசையை அறிந்து கொண்ட கிழவன் மூடிய கண்களுடன், முகத்தில்
விளைந்த ஏளனச் சிரிப்புடன் சொன்னான்.
"உனக்கு இவ்வளவு அவசரம் கூடாது. சொல்வதை முழுக்கக் கேள். மனிதன்
தானடைந்ததைத் திரும்பத் தர மாட்டான். கேட்பது நீயாக இருப்பதால்
சம்மதிக்கிறேன். சரி, என்னிடம் இருக்கும் புலன் ஒன்றை, எனக்கு அது
தீங்கு பயக்கிறது என்பதாலும், உனக்கு வேண்டுமென்பதாலும் நீ
எடுத்துக்கொள்ளப் போகிறாய். என்னையே 'எது' என்று தீர்மானித்து நான்
தருவதைக் கொள்வதாகச் சலுகை தந்தாய். அந்தச் சலுகையை நான் விட்டுக்
கொடுக்கிறேன். உன் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சலுகையை நான்
விட்டுக் கொடுப்பதால் எனது ஒரு வேண்டுகோளை நீ புறக்கணிக்காமல்
இருக்கவேண்டும்" என்றான் அவன்.
'இவனுடைய சர்வ சக்தியான அறிவையே நாம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். இவன்
வேறு எதை வைத்துக் கொண்டு என்ன செய்து விடப் போகிறான்' என்று எண்ணி
"உனது வேண்டுகோள் என்ன?" என்றது 'அது'
கிழவன் அமைதியாக ஒவ்வொரு வார்த்தையாய்ச் சொன்னான். "எனது புலனை
எடுத்துக் கொள்ள வந்து விட்ட மூல சக்தியே....நான் அனுமதித்து விட்டேன்.
எனது வேண்டுகோளை நிறைவேறுவதற்கு முன்பே, உனது காரியத்தை நீ நடத்திக்
கொள்ளலாம். எனது புலன்களில் ஒன்றை நீ எடுத்துக் கொள்வதற்கு முன், எனது
வேண்டுகோளைத் தீர்க்கமாய்ப் பரிசீலித்துவிட்டுக் காரியம் செய். எனது
வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் எடுத்துக் கொண்டதையே திருப்பித் தந்து
பெரும் தோல்விக்கு உள்ளாகாதே, கேள்; இதுவே என் வேண்டுகோள்; என்னிடம்
இருக்கின்ற புலன்களில் ஒன்றை எடுத்துக் கொள்; என்னிடம் இல்லாத புலன்
ஒன்றை பதிலுக்குத் தா'...."
பரமாத்மா பேரமைதியில் ஆழ்ந்து யோசித்தது: 'இல்லாத புலன்....இல்லாத
புலன்....இல்லாத புலன். இல்லாததை எப்படிச் சிருஷ்டிப்பது....?'
'அறிவுப் புலனை எடுத்துக் கொண்டு பதிலுக்கு என்ன புலனைத் தருவது....தர
முடியுமா? தந்தால் அறிவினும் சக்தி மிக்கதாய் அது
மாறினால்?......இல்லாதது எது?....ம், மானுடன் சொல்வான்; அவன் பாஷையை
நான் பேச முயன்றது சரியன்று...இருக்கிறவனிடம் இருக்கின்றதை கேட்டால்,
இல்லாதவனிடம் இல்லாததைக் கேட்டது சரிதான்...' என்ற என்ற கடைசி முணு
முணுப்புடன் 'அது' தன் பிரசன்னத்தைக் கலைத்துக் கொண்டு, அங்கு
இல்லாமலாகி எங்கும் நிறைந்து கலைந்தது.....
கிழவன் இடி போன்ற குரலில் சிரித்தான்.
"நீ சாவாய்....அதை நீ வெல்ல முடியாது" என்று பதில் குரல் எங்கிருந்தோ
வந்து ஒலித்தது.
"என்னால் தான் சாக முடியும்.....உன்னால் முடியுமா? நான் செத்தால்
எனக்கு சந்ததி உண்டு. உனக்கு யாரிருக்கிறார்கள்" என்று சிரித்தவாறே,
திடீரென்று மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு--மரணத்திற்கு முன்
ஏற்பட்ட இந்த கற்பனைகளிலிருந்து விடுபட்டு, அந்த ஆராய்ச்சிக்
கூடத்தில், தன் இருக்கையினின்றும் கீழே விழுந்தான் அந்தக் கிழட்டு
விஞ்ஞானி. முன்னறிவிப்பு இல்லாமல் வந்த கோழை மரணம், விஞ்ஞானியின்
உடலைக் குளிரத் தழுவிக் கொண்டது.
அந்த ஆராய்ச்சிக் கூடத்தில், கரு கருவென சுருண்ட சிகையுடன் ஒரு
இளைஞன்---முன்னவனின் சந்ததி--இப்பொழுது அமர்ந்திருந்தான். அவன் விழிகள்
ஏகாந்த வௌ¢யில் சுழலும் எண்ணற்ற ரகஸியங்களின் புதிய உண்மைகளைக் கண்டு
கொண்டிருக்கின்றன. அவன் செவிகளை அடைத்திருந்த கருவியின் மூலம், புதிய
புதிய செய்திகளை முதன் முதலில் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இதுவரை எங்கேயும் ஔ¢யாகவோ, ஒலியாகவோ 'அது' இவன் வழியில்
குறுக்கிடவில்லை.
'அது' தன் பாஷையில் தன் விதியை நொந்து கொள்கிறது. அந்த பாஷையின்
அர்த்தத்தையும் இவனே கண்டு தேர்கிறான். அதன் பெருமையை தானும் அறிந்து,
அதற்கும் உணர்த்துகிறான். இவனே மானுடன்'
முன்னும் பின்னும் உள்ள மனிதகுல வம்சாவளிச் சங்கிலியில் ஒரு கண்ணி
இவன். இவனுக்கு இல்லாதது எது, மரணம் உட்பட?.......
|