தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > கவிப்பேரரசு வைரமுத்து - Kavi Perarasu Vairamuthu > தண்ணீர் தேசம் - part 1 >  தண்ணீர் தேசம் - part 2

thaNNiir dEcam of Vairamuthu -part II
(in tamil script, Unicode/UTF-8 format)

தண்ணீர் தேசம் -II
கவிஞர் வைரமுத்து


Etext input: Major part (90%) provided by Anantha Vikatan in Anjal font format. Input of missing 10% by Mr. A. Arasu of IGCAR,Kalpakkam, Tamilnadu. Proof-reading and coordination: Mr. S. Srinivasan of IGCAR, Kalpakkam, Tamilnadu. This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
C - Project Madurai 2002. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

thaNNiir dEcam of Vairamuthu - originally published in 1996 as a 24-part series in the tamil weekly magazine Anantha Vikatan. Our sincere thanks go to Kavinjar Vairamuthu for giving permission (through his son Mr. Madhan Karky Vairamuthu )to release this Etext version free in the Internet and to the Publishers of Anantha Vikatan for providing us with the Etext file of this work.

This aRiviyal kaaviyam is about the 'sea odyssey'. KalaivaNNan is the hero;Tamilrojaa is the heroine. A lot of scientific facts about the sea, water,and the universe are sown in this modern poetry(pudhukk kavidhai). The work depicts the adventure of fishermen's life at sea.


13

இந்த மண் யாருக்குச்
சொந்தம் என்ற கேள்வி
எழும்வரைக்கும் பூகோளப்
படத்தில் அடித்தல்கள் இல்லை.
திருத்தல்கள் இல்லை.

வறுமை என்னும் ஒரு தத்துவம்
செயற்கையாகச்
சிருஷடிக்கப்படும்வரை
சரித்திரத்தின் முகத்தில்
தழும்புகள் இல்லை.

என்னுடையது என்னும்
வலிமையும்,
இல்லாமை என்னும் வெறுமையும்
வந்த பிறகுதான் மனிதகுலம்
யுத்தங்களைச் சந்தித்தது.

கனவுகள் உயிர்களின்
அனுபவங்கள். கிரகங்கள் கனாக்
காண்பதில்லை.
ஆனால், பூமி என்னும்
கிரகத்துக்கு மட்டும்
நிறைவேறாத
ஒரு நெடுங்கனவு உண்டு.

யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும்
சத்தங்களுக்கும் மத்தியில்
அந்த நெடுங்கனவு
நீண்டு கொண்டேயிருக்கிறது.

என்ன கனவு அது?
எப்பொருள் பற்றியது?

ஒரு திருடன் - ஒரு பிச்சைக்காரன் -
ஒரு விலைமகள் -ஒரு கொலைகாரன்
இந்த நால்வரும் அற்ற
சமுதாயம்தான் இந்த உலகம்
கடைவிழியில்
நீர்வடியக் கண்டுவரும் கனவு.

மனிதன் அந்தப் புதிய
பிரதேசத்துக்குத்தான் பூமி
என்னும் கிரகத்தைச் செலுத்த
விழைகிறான்.

அரசியல் - அரசுகள் -
மதங்கள் - அறிவியல்
கண்டுபிடிப்புகள் - எண்ணங்கள்
- இலக்கியங்கள் - கலைகள்
இவையெல்லாம் அந்தக் கனவுப்
பிரதேசத்துக்கு இந்தப்
பூமியை நகர்த்தும் உருளைகள்
என்றே அவன் இன்னும்
நம்புகிறான்.

ஆனால், பூமியென்னும்
கிரகத்தை முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய அந்த
உருளைகள் பல நேரங்களில்
நகராமலும் நகரவிடாமலும்
சுற்றிய இடத்திலேயே சுற்ற
வைக்கின்றன. சில நேரங்களில்
பின்னோக்கியும்
செலுத்திவிடுகின்றன.

எனவே களையப்பட வேண்டிய
திருடனும் பிச்சைக்காரனும்
விலைமகளும் கொலைகாரனும்
மாறுவேஷத்தில் வாழ்ந்து
கொண்டேயிருக்கிறார்கள்.

மனிதன் வெவ்வேறு வடிவங்களில்
திருடுகிறான். வெவ்வேறு
வடிவங்களில்
பிச்சையெடுக்கிறான்.
வெவ்வேறு வடிவங்களில்
விபசாரம் நடக்கிறது. வெவ்வேறு
வடிவங்களில் கொலையும்
விழுகிறது.

பூமி மட்டும்
சுற்றிக்கொண்டேயிருக்கிறது தன்
நிறைவேறாத கனவை
நெஞ்சில் சுமந்துகொண்டே.

அந்த நள்ளிரவில் கையும்
கஞ்சியுமாய்ப் பிடிபட்ட
சலீம், இசக்கியின் பிடியிலிருந்து
தன்னை இதமாய்
விடுவித்துக் கொண்டான்.

விழித்துக்கொண்டு சூழ்ந்தவர்கள்
அவனையே உற்று உற்றுப்
பார்த்தார்கள் உடைந்த
நிலாவெளிச்சத்தில்.

அவன் திருடன்போல் குனிந்து
நிற்கவில்லை.
தியாகிபோல் நிமிர்ந்து
நின்றான்.

உனக்கு மட்டுந்தான்
வயிறா? இல்லை உனக்கு
மட்டுந்தான் உயிரா? இத்தனை
பேரும் கும்பிகருகிக் குடல்
வெந்து கிடக்கையில் உனக்கு
மட்டும் எப்படித் திருடத்
தோன்றியது?
சொல் சலீம்.
சொல்....

திருடப் போனது
உண்மைதான். ஆனால், என்
பசிக்குத்
திருடவில்லை...

பிறகு யார் பசிக்கு..?

ஒருவேளை கடல்மீன்களின்
பசிபோக்கத்தான் கஞ்சிப்
பானைக்குள்
கைவிட்டாரோ?

இல்லை. ஓர் ஏழை
ஜீவனின் பசிக்கு.

இப்போது இந்தப்
படகிலுள்ள ஒவ்வொரு ஜீவனும்
ஏழை ஜீவன்தான்.

நம் பசியை நமக்குச்
சொல்லத் தெரிகிறது. நான்
திருடியது அதைச் சொல்லத்
தெரியாத
ஒரு ஜீவனுக்கு.

சொல்லத் தெரியாத
ஜீவனென்றால்..?

சுண்டெலிக்கு.

அவர்கள் ஒரே இடத்தில்
சிரிக்க ஆரம்பித்து வெவ்வேறு
இடத்தில் முடித்தார்கள்.

வெயிலடித்துக் கொண்டே மழை
பெய்தது மாதிரி இன்பம்,
துக்கம் இரண்டும் இழையோடிய
சிரிப்பு அது.

இங்கே மனிதனுக்கே
சோற்றைக் காணோம். நீ
சுண்டெலிக்குச்
சோறு வைக்கிறாயோ?

நம் தேவை பெரிது.
அதன் தேவை சிறிது.

அது இருக்கட்டும்.
நீ சுண்டெலிக்குத்தான் சோறு
திருடப் போனாய் என்பது
என்ன நிச்சயம்?

சரியான கேள்வி. சாட்சி
கிடைக்காத கேள்வி.

பட்டாசுத் திரியில்
முதன்முதலாய்த் தீ வைத்துவிட்டு
அது வெடிக்கும்வரை
பரபரக்கும் சிறுவனைப் போல
அவன் பதில் கேட்க
ஆவலானார்கள்
ஐந்து பேரும்.

சலீம் மோவாய் தடவி முகம்
கவிழ்ந்தான். யோசித்தான்.
பற்றிக் கொண்ட
தீக்குச்சிகளாய்ப் பளிச்சென்று
வெளிச்சம்
காட்டின கண்கள்.

நான் சுண்டெலியின் தினசரி
சிநேகிதன். நானும்
சுண்டெலிக்குச் சோறு
வைக்கிறேன். நீங்களும் சோறு
வையுங்கள். யார் வைத்த
கவளத்தைச் சுண்டெலி வந்து
உண்டு செல்கிறது
பார்ப்போம்.

அதையும் பார்ப்போம்.

சத்திய சோதனை
தொடங்கியது.

ஒரு கவளம்
சோறெடுத்து ஒவ்வொருவரும்
வெவ்வேறு இடத்தில்
வைத்தார்கள்.

சுண்டெலி தன் தலைமறைவு
வாழ்க்கையைவிட்டு
வெளியேறவில்லை.

எல்லா முகங்களிலும்
ஏமாற்றக் கோடுகள்.
சரி. சரி. இப்போது
நீ சோறு வை.

வைரங்களை எண்ணும் ஒரு
வியாபாரியைப் போல்
கவளத்தில் ஒரு பருக்கையும்
சிதறிவிடாமல் சேர்த்தெடுத்து,
கடுகுபுட்டியின் முடிமேல்
கவனமாய்
வைத்தான் சலீம்.

அடுத்த நிமிடம் அந்த அதிசயம்
நிகழ்ந்தது.

கண்ணுக்குத் தெரியாத ஒரு
சந்துவழி வந்து ஒரு க்ரீச்
வணக்கம் சொல்லி கவளத்தில்
வாய் வைத்தது சுண்டெலி.

உயிர்த்தெழுந்த ஏசுநாதரைப்
பார்த்தவனைப்போல் வியந்து
நின்றான் இசக்கி.

அந்தத் துள்ளலென்ன.
அதன் மகிழ்ச்சியென்ன.
ஒரு சிற்றுயிரின்
ஜீவததும்பல் என்ன.

கலைவண்ணன் காதில்
தமிழ்ரோஜா முணுமுணுத்தாள்.
பசியாறும் ஒரு ஜீவனின்
சந்தோஷம் பார்த்தாலே
பசியாறிவிடும்
போலிருக்கிறதே.

பாரதீ. மகாகவி.
உன் செல்ல அனுமதியோடு
உன் கவிதையில் ஒரு
சின்னத் திருத்தம்.
அனுமதிப்பாயா?

வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் - இங்கு வாழும்
மனிதருக்கெல்லாம் என்றாய்.

அந்த ஆறாம் சீரில் மட்டும்
உனக்கு வருத்தம் வராமல் ஒரு
திருத்தம் செய்வோமா?

வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் - இங்கு வாழும்
உயிர்களுக்கெல்லாம்.

சம்மதமா?

ஓர விழி கசிந்தபடி ஓர்
ஓரமாய் நின்றான் சலீம்.

எங்களை மன்னித்துவிடு
சலீம்.
- ஐவர் மொழியை
ஒருவன் பேசினான்.

உறக்கம் துரத்தும் இரவுகள்.
உடம்பு எரிக்கும் பகல்கள்.
இரைப்பை சுருக்கும் பசி.
இதயம் அறுக்கும் வெறுமை.

முன்று டம்ளர் கஞ்சித் தண்ணீரில்
ஆறு ஜீவன்கள்.

படகைப் போலவே ஒரே
இடத்தில் நின்றுபோன
வாழ்க்கை.

நடக்கவும் சக்தியில்லாமல்
நலிந்து சாயத் தொடங்கிய
உடல்கள்.

ஒரே ஒரு படகுகூட இந்தக்
கடலில் வெள்ளைக்கோடு
கிழிக்காதா?

வங்காள விரிகுடாவில் கப்பல்
போகக் கூடாதென்று
கட்டளையா?

ஓர் ஆறு பேரைக் காணோம்
என்று தமிழ்நாட்டின்
ஜனத்தொகை இன்னும்
கவலைப்படவில்லையா?

விடியாத இரவைப் பார்த்து
சூரியன் செத்துவிட்டானா?
என்று தனிப்பாட்டில் ஒரு
தமிழச்சி புலம்பினாளே.
அப்படி அங்கே பூகம்பம்
நேர்ந்து பூமி புரண்டு
புதைந்துவிட்டதா?

ஒருவேளை சவப்பெட்டிக்கு
வாங்கிய மரத்தில்
இந்தப் படகு
தயாரிக்கப்பட்டுவிட்டதா?

அழுத பிள்ளைக்குத்தான்
பாலா?
அபயக்குரல் கொடுத்தால்தான்
உதவியா?

சரி. கத்துவோம்என்று
முடிவெடுத்தார்கள். பரதன்
ஏறினான் பாய்மரத் தட்டில்.

அய்யா உதவிக்கு
வருவீர்களா? படகு பழுது.
அய்யா உதவிக்கு வருவீர்களா?
படகு பழுது.

முன்றாம் முறை குரலெடுக்க
முடியவில்லை. தொண்டையின்
கடைசி ஈரம் வற்றிவிட்டது.

அடுத்து இசக்கி ஏறினான். ஒரு
கரத்தால் காதுபொத்தி
ஓங்கிக் கத்தினான்.
அதற்குமேல் அவனுக்கும் சக்தி
இல்லை. வயிற்றைப் பிடித்துக்
கொண்டு இறங்கிவிட்டான்.

சலீம். நீ போ அவன்
கத்திக் கத்திப் பார்த்தான்.
சத்தமே வரவில்லை. அவன்
நாவிலிருந்த எச்சிலைக்
கடற்காற்று குடித்துவிட்டுப்
போய்விட்டது.

அடுத்து பலங்கொண்ட மட்டும்
பாண்டி கத்தினான். எந்தத்
திசையிலும் எதிரொலியில்லை.

போங்கள். உயிருக்கு குரல்
கொடுங்கள் - தமிழ்
கலைவண்ணனை அனுப்பினாள்.
கலைவண்ணனும் கத்திப்
பார்த்தான். அவன் குரல்
காற்றில் குதித்துத் தற்கொலை
செய்ததுதான் மிச்சம்.

தமிழ். நீ வா.

வேண்டாம். தங்கை கத்த
வேண்டாம் - பாண்டி
தடுத்தான்.

ஏன்?

சேவல் கூவி விடியாத
பொழுது குயில் கூவியா விடியப்
போகிறது?

தமிழ் சினந்தாள்.
இல்லை. இது எனக்கு
நீங்கள் காட்டும்
சலுகையில்லை.
அவமரியாதை. நானும்
கத்துவேன்.

தட்டுத் தடுமாறி ஏறினாள்.
பாய்மரத்தையும் வயிற்றையும்
பிடித்துக் கொண்டு கத்தினாள்.

அந்தக் குரல் படகைக்கூடத்
தாண்டவில்லை.

கலைவண்ணன் அவளைக்
கைத்தாங்கலாய் இறக்கினான்.

கத்திய களைப்பு. வறண்ட
தொண்டை. அன்றைய பங்கைப்
பிரித்துக் கொள்ள
அவசரமானார்கள். கஞ்சிப்
பானையில் கூடினார்கள்.

கஞ்சிப் பானை திறந்து
கிடந்தது.

ஏன்? எப்படி?

சுண்டெலிக்குச் சோறு வைத்த
பரபரப்பில் அதை முடிவைப்பது
மறந்துவிட்டது.

உள்ளே பார்த்தால் -
அவர்களின் அமுதத்தில் இரண்டு
கரப்பான் பூச்சிகள்
இறந்துகிடந்தன.

அது -
அவர்கள் வயிற்றில் விழுந்த
கடைசி இடி.

பீப்பாய் திறந்தார்கள்.

அவர்கள் தாகத்தின் கடைசித்
தவணை ஆளுக்கு அரை
டம்ளராய் ஆழத்தில் சிரித்தது.

இரவு.

எலிகடித்த ரொட்டியாய்
வடிவிழந்த
நிலா.
நாலா திசையிலும்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரப்
பருக்கைகள்.

மீனவர் நால்வரும் தூங்கிப்
போயினர். மீன்விழி மங்கை
தூங்கவில்லை.

உறங்கிவிட்டீர்களா?
இல்லை. கண்கள் இமைத்துக்
கொண்டிருக்கும்போது உறங்க
முடியுமா?

புரியவில்லை.

என் கண்ணே நீதானே. நீ
விழித்துக் கிடக்கையில் என்னால்
எப்படி உறங்க முடியும்?

நாளைக்கு மரணமென்றாலும்
இன்றுவரைக்கும் கவிதை
பேசுவீர்கள்
போலிருக்கிறதே.

ஆமாம் மரணத்தை வரவேற்கக் கவிதைகள்
வேண்டாமா?

போதும். போதும். நாளைப்பொழுதாவது நம்
பொழுதாக விடியுமா?

நாளைப் பொழுது நம் பொழுதோ இல்லையோ
ஆனால் உன்பொழுது.

என் பொழுதா?
ஆமாம் விடிந்தால் உன் பிறந்த நாள்.

அப்படியா. என்று ஆச்சரியம் காட்டியவள்,
நான் தேதி பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்றாள்.

ஏன்? என்றான்.

கோமாவில் கிடப்பவனுக்குத் தேதி எதற்கு?

அவநம்பிக்கை அடையாதே. நாளை
உன் பிறந்தநாள். ஒரு நல்ல சேதி வரலாம்

வருமா?

வராவிட்டாலும் பரவாயில்லை. நீ பூமிக்கு
வந்ததே ஒரு நல்ல சேதிதானே?

எனக்கென்ன பிறந்தநாள் பரிசு தருவீர்கள்?

பொறுத்திருந்து பார்.

சூரியன் தாம்பூலம் போட்டு வெளியேறத்
தயாரானபோது -

அவள் கன்னத்திலும் காதுகளிலும் சுட்டுவிரல்
கோலமிட்டு எழுப்பினான்

தமிழ். உனக்கென்ன பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்ன பரிசு தருவீர்கள்? அவள் விழிக்காமல்
புரண்டபடி வினவினாள்.

இதோ.

அவள் விழித்துப் பார்த்தாள்.

அவன் கையில் - அரை டம்ளர் தண்ணீர்.

நேற்றுப் பருகாமல் வைத்திருந்த அவன் பங்கு.

அவள் உணர்ச்சிவசமானாள்.. பரவசப்பட்டுப்
பாய்ந்தெழுந்து அவன் தோள்கட்டினாள்.

அந்த வேகத்தில் தவறி விழுந்து டம்ளர்
உருண்டது, தண்ணீர் சிதறியது.
---------------------------------------------------------------------
14

அது ஒன்பதாம் நாள்.
இதயத் துடிப்பு குறையத்
தொடங்கும் இரண்டாம்
வாரம்.

தண்ணீர் குறையக் குறைய
உயிர்த்தாமரை உலரும்
காலம்.

ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல்
ஈரப்பதம் இல்லாத
பாலைவனத்தில் இரண்டு நாள்
இருக்கலாம்.

ஈரப்பதமுள்ள கடலில்
ஏழுநாள்வரை பொறுக்கலாம்.

ஆனால் - அது ஒன்பதாம்
நாள்.

காலக்கெடு முடிந்துவிட்டது.
எச்சில் சுரப்பி வறண்டுவிட்டது.

தார்ச்சாலையில் அசைவற்றுக்
கிடக்கும் செத்தபிராணியாய்
உள் அண்ணத்தில்
ஒட்டிக்கொண்டது நாக்கு.

சூரியன் வந்துவந்து
போனாலென்ன. விடியல்
மட்டும் வரவே இல்லையே.

இன்னும் சொல்லப்போனால்
இரவுகூடக் கொஞ்சம்
இதமாயிருக்கிறது.
விடிந்தால்தான்
பயமாயிருக்கிறது.

சாரமற்ற இந்த
வாழ்க்கையைச்
சகிப்பதெப்படி?

கடற்காற்றின் ஒரேமாதிரியான
ஓசை. காது மடலடியில்
படியும் உப்புப் பிசுபிசுப்பு.
கொஞ்சம் கொஞ்சமாய்
எடையிழக்கும் உடல்கள்.
உடம்பின் ஏதோ ஒரு
துவாரத்தின் வழியே, உயிர்
பகுதி பகுதியாய்
வெளியேறுவதாய் ஒரு பயம்.
மோகனமாய்த் தொடங்கி
முகாரியாய் நிறம்மாறிய
தளக் தளக்
அலைச்சத்தம்.

நரகத்தை உருவகித்தவன் அது
கடலுக்கு மத்தியில்தான்
கட்டப்பட்டிருக்கிறது என்று ஏன்
கற்பனை செய்யவில்லை?
இதுதான் நரகம். இதுதான்
மரணத்தின் முன்னோட்டம்.

இந்த நிமிஷத்தின் முதல் தேவை
தண்ணீர்தான். சுருங்கிக்
கொண்டிருக்கும் உயிரைச் சில
மில்லி மீட்டர்களாவது
விரியவைப்பது தண்ணீர்
மட்டும்தான்.

மீனவர் சற்றே தாங்குவர்.
அவை உழைத்த தேகங்கள்.

தமிழ்ரோஜா தாங்குவாளோ?
அது செம்பருத்திப் பூக்களையும்
செண்பகப் பூக்களையும்
செதுக்கிச் செதுக்கி இழைத்த
தேகம்.

கிரேக்கச் சிற்பம்போல்
பளபளத்த பருவமகள்,
மொகஞ்சதாரோ
ஒவியம்போல் முகம்
சிதைந்து போனாளே.
மீனுக்குக் கொண்டுவந்த
பனிக்கட்டி இருந்திருந்தாலும்
ஊனுக்கும் உயிருக்கும்
கொஞ்சம் நீர்
வார்த்திருக்கலாம்.

ஆனால் - கலக்கத்தில் -
உள்ளறைக் கதவு திறந்து
கிடந்ததில் உஷணக்காற்று உள்
நுழைந்து பனிக்கட்டிகளை
அழவைத்துவிட்டுப்
போய்விட்டது.

இனி என்ன வழி? உறைந்த
கடல்நீரில் உப்பிருக்காதாமே.
அதை உறைய வைத்துப்
பருகலாமா?

அய்யோ.
கடல்நீர் உறைய இது
வடதுருவம் அல்லவே.

இனி இருக்கும் ஒரே ஓர்
எதிர்பார்ப்பு வானம்தான்.

இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை
- ஓரிடத்தில் குவிந்ததை அள்ளி
ஊருக்குப் பகிர்ந்தளிக்கும்
காம்ரேட் மேகம்தான்.

ஏ, திட்டுத்திட்டாய் மிதக்கும்
மேகங்களே. நீங்களும்
நாங்களும் ஒரே ஜாதிதான்.
ஆமாம்.

இருவருமே விட்டுப்புறப்பட்டு
விலாசம் தப்பியவர்கள்.
கொள்ளை கொள்ளையாய்
மிதக்கும் வெள்ளை
மேகங்களே. எங்களுக்காகக்
கொஞ்சம்
கறுப்பாகுங்களேன்.

மழைத்துளிகளை
உண்டுவாழுமாமே
சாதகப்பட்சிகள். நாங்களும்
இப்போது சாதகப்பட்சிகளே.
இந்தச் சாதகப்பட்சிகளின்
ஜாதகம், இப்போது உன்
கையில் மழையே... உன்
கையில். ஓராண்டுக்கு
எண்பத்தாறு சென்டிமீட்டர்
உலகத்துக்காக ஒழுகும்
மழையே. எங்கள் மீது ஒரே
ஒரு மில்லிமீட்டர் உதிர்க்கக்
கூடாதா? திருடிய பொருளைத்
திருப்பித்தர மறுக்கும் ஒரு
திருடனைப் போல -
உயரத்தில் ஏறிக்கொண்டு ஏன்
எங்கள் உயிர் குறைக்கிறாய்?

கொஞ்சம் அவிழ்த்துவிடு. உன்
வைரப்பை சிந்தட்டும்.
முத்துக்கள் எங்கள் முகத்தில்
தெறிக்கட்டும். மாட்டாயா?

காட்டில் நிலாவும் - கடலில்
மழையும் விரயமா? ஏன்?
காட்டில் நிலவடித்தால் என்ன?
விலங்குகளும் பறவைகளும்
நிலாவின் எதிரிகளா?
பூக்களுக்கு நிலவின் புளகம்
பிடிக்காதா?

கடலில் மழை பெய்தால்
என்ன? இந்த உலர்ந்த
தேகங்கள் உயிர்
நனையக்கூடாதா?

இரக்கமில்லையா
இளையமேகமே? யாராவது
ஒரு விஞ்ஞான தேவதை வந்து
உன்மீது சில்வர் அயொடைடு
தெளித்தால்தான் சில்லென்று
சிரிப்பாயா?

காற்று வந்து மண்ணைச்
சுரண்டாமலிருக்க மழை
வேண்டுமாமே. மரணம் வந்து
எங்கள் உயிரைச்
சுரண்டாமலிருக்கவும் இப்போது
மழைதான் தேவை.

அவர்கள் மானசீகமாக
யாசித்தார்கள். என்ன
செய்வது? காது கேட்காது -
வானத்திற்கு. கண் தெரியாது
- மேகத்திற்கு.

கடல்
அமைதியாகத்தானிருந்தது.
கரையில் ஒரு புயலடித்தது.

அந்தப் புயலின் பெயர்
அகத்தியர். தமிழ்ரோஜாவின்
தந்தை.

தன் எதிர்காலச்
செலவுப்பட்டியலை எண்ணிக்
கிடந்தபோதுதான்
தமிழ்ரோஜா அவர்
ஞாபகங்களில் மின்னி
மறைந்தாள்.

ஓ. என்னவானாள் என் மகள்?

வாரத்தில் ஒருநாள் மட்டும்
சலவைச்சட்டை அணிந்து
கொள்ளும் ஒரு பழைய
தமிழ்வாத்தியாரைப் போல
அந்த வாரத்தில் அன்றுதான்
மகளை நினைந்தார்
அகத்தியர்.

அது ஒன்றும் அதிசயமல்ல.
முன்பெல்லாம் அவர்
அனுமதியோடு இருவரும்
விடை கொள்வார்கள்.
சிலநாள் சென்று
திரும்புவார்கள்.

அப்போதெல்லாம் அவர்
கொண்ட வருத்தம் முன்று
நாட்களாகத் தன் மகளைக்
காணவில்லையே என்பதல்ல.
தன் மகளின் முகத்தில்
முத்தத்தின் அடையாளங்கள்
காணவில்லையே என்பதுதான்.

இத்தனை நாள் இல்லாமல்
போனது இதுவே முதல் முறை.

அவர் மீசையில் தோன்றிய
நரைகளைப் போலவே
மனதிலும் அங்கங்கே
அச்சரேகைகள்.

சுழற்றினார் -
பத்திரிகை அலுவலகம் -
கலைவண்ணன் இல்லை.

சுழற்றினார் -
பல்கலைக்கழகம் -
தமிழ்ரோஜா இல்லை.

சின்னச் சந்தேகக்கோடு
சீனத்துப் பெருஞ்சுவரானது.

அடுத்ததென் செய்வது?
காவல்துறைக்கு எப்போதும்
அவர் தூரத்து உறவினர்.

பல காக்கிச்
சட்டைகளுக்கெல்லாம்
அவர்தான் கஞ்சி உபயம்.

அடுத்த பத்தாம் நிமிடத்தில்
ஐந்தாறு ஜோடி பூட்ஸகால்கள்
அழகிய கிரானைட் படிகளை
அழுக்காக்கின.

சற்று நேரத்தில் செய்திகள்
பறக்க - அங்கங்கே
தீப்பிடிக்க - ராயபுரம்
காவல்நிலையத்தில் உண்மையின்
மங்கிய கைரேகைகள் பதிவாக
- அகத்தியர் கண்களுக்கு ஒரு
மெல்லிய நம்பிக்கை பிறந்தது.

கரையிலிருந்த அவருக்கு
மட்டுமல்ல - கடலில் சிக்கிய
ஜீவன்களுக்கும் ஒரு தூரத்து
நம்பிக்கை
வானத்தில் தெரிந்தது.

உடம்பு நிற்பது உயிரின்
தலத்தில். உயிர் நிற்பது
நம்பிக்கை பலத்தில்.

அந்த
நம்பிக்கை அவர்களைக்
கைவிடவில்லை. பரதன்தான்
முதலில் அதைப் பார்த்தான்.

அதோ.

தன் உயிரையெல்லாம் உருட்டி
- சுட்டு விரலில் திரட்டி அவன்
காட்டிய திசையில் ஓர் இருண்ட
மேகத்தீவு திரண்டு நின்றது
தென்கிழக்கே.

ஓ.
கருணையின் நிறம் கறுப்பு.
சூரியன்கூட அதன்மீது சுள்ளென்று
அடிக்கவில்லை.

ஒரு மார்கழி மாதத்து
மாலையில் அருகம்புல் மேய்ந்து
திரும்பும் ஒரு தாய்ப்பசுவின்
கொழுத்த காம்பாய் அந்த
மேகம் செழித்து நின்றது.

ஒரு தென்றல்கன்று
வாய்வைத்தால் போதும் -
திமுதிமுவென்று சொரிந்துவிடும்
போலிருந்தது.

சிந்தி விழப்போகும் அந்த
மேகம் இந்த வேளை இங்கு
வருமா?

வாராது.

காற்று அவர்களுக்கு மேகத்தை
அழைத்துவரும் திசையில்
வீசவில்லை. அந்த மேகமிருக்கும்
தென்கிழக்கை நோக்கித்தான்
காற்று வீசுகிறது.

அந்த மேகம் உடைந்து விழும்
நேரத்தில் அதை
அடைந்துவிட்டால் - இருக்கும்
பாத்திரத்தில் சிதறும்
உயிர்த்துளிகளைச் சேமித்துக்
கொள்ளலாமே.

சரிசரி. எப்படி அடைவது?

அதோ அதோ.

எட்டிவிடும் தூரத்தில் வானம்.
தொட்டுவிடும் தூரத்தில்
மேகம்.

கலைவண்ணன் கண்ணில் ஒரு
மின்னல்.
பாண்டி. பரதன்.
பாய்மரம் செய்வோமா? பாய்மரம்...

பாய்மரம் செய்தால் பசி
தீருமா? - இசக்கி.

பசி தீருமோ இல்லையோ,
தாகம் தீரலாம். அதோ
பாருங்கள் ஒரு தாய்மேகம்.
நல்ல வாய்ப்பு நமக்கு.
காற்றும் அதை நோக்கி.
நீரோட்டமும் அதை நோக்கி.
பாய்மரம் மட்டும் கட்டிவிட்டால்
பயணம் கொள்ளலாம். முயற்சி.
முயற்சிதான் முன்னேற்றம். என்ன
சொல்கிறீர்கள்? கடலின்
அடிமைகளாய்ச் சாவதைவிடக்
கடலின் வேட்டைக்காரர்களாய்ச்
சாவோமே.

சரி. அதுதான் சரி
தமிழ்ரோஜா வழிமொழிந்தாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
ஒரு பாய்மரம் அங்கே
பிரசவமானது.

தளத்தின் மேற்கூரை கழற்றி -
அதை செளகரியமாய்ச் சாய்த்து
- அதன் ஓரங்களில் கழிகள்
நட்டு - ஆணிகள் அறைந்து -
அந்தக் கழிகளில் லுங்கிகள் -
போர்வைகள் தார்ப்பாய் கட்டி
வீணையின் தந்திகளாய் இழுத்து
நிறுத்தி - பரபரவென்று
பாய்மரம் தயாரித்து, நங்கூரம்
களைய - பாய்மரத்தில்
மோதிய காற்று விசுக்கென்று
நகர்த்தியது விசைப்படகை.

எல்லோரும் கலகலவென்று
ஒலிசெய்து கைதட்டினார்கள்.

ஆகா. அதுவரை செத்துக்கிடந்த
வாழ்க்கை ஜிவ்வென்று
சிறகடித்ததா?

ஓ.

இயங்காத வாழ்க்கையில்
இன்பமில்லை. இயங்கு. இயங்கு
மனிதனே. இயங்கு. வெற்றியை
நோக்கியாவது - தோல்வியை
நோக்கியாவது
இயங்கிக்கொண்டே இரு.
இயக்கமே வாழ்க்கையின்
முதல் அடையாளம்.

வீசு காற்றே வீசு. விரைக
படகே விரைக. எங்கள் உயிரின்
தூரம்
சில கிலோமீட்டர்.
அதோ.
அந்தக் கறுத்த மேகம்தான்
எங்கள் குறிக்கோள். கடலுக்கு
வந்து வானத்தில் தூண்டில்
போட்டவர்கள்
நாங்களாகத்தானிருப்போம்.
வீசு காற்றே வீசு. விரைக
படகே விரைக.

அவர்களின் மனோவேகம்
பாய்மரத்திற்குப் புரியவில்லை.

காற்றுப் பேசினால் மட்டும்தான்
அதற்குக் காது கேட்கும்
போலிருக்கிறது.

காற்று சொல்லியபடி
அது மெதுவாகவே நகர்ந்தது.

ஏ, பாய்மரமே. பாய்மரமே.
உன்னைத்தான் நம்புகிறோம்.
உனக்கு வேரில்லை.
கிளையில்லை. மலரில்லை.
கனியில்லை. ஆனாலும்
பாய்மரமே. எங்கள் உயிர்
ஒதுங்கியிருப்பது உன்
நிழலில்தான்.

நின்று - நின்று - அசைந்து -
அசைந்து - விரைந்து -
விரைந்து - வேகம் குறைந்து -
அலைகள் கடந்து அவர்களின்
லட்சிய மேகத்தை அந்தப் படகு
அடைந்தபோது - அந்த
மாயமேகம் ஏற்கெனவே சில
துளிகளைப் பொழிந்துவிட்டுக்
கலைந்து போயிருந்தது.

இரண்டு முரட்டு அலைகள்
விசைப்படகின் விலா துழாவியதில்
அது அப்படியும் இப்படியும்
ஆடியது.

ஓங்கியடித்த ஒரு காற்றின்
வேகத்தில் பாய்மரத்தின்
தார்ப்பாய் கழன்று தண்ணீரில்
விழுந்தது.

கிரீச். கிரீச். கிரீச்.
கிரீச். - எங்கோ கத்திய
சுண்டெலியின் பாதிக் குரலில் பசி
தெரிந்தது.
---------------------------------------------------------------------
15

வெற்றி தோல்வி இரண்டுமே
மனதின் விகாரங்கள்.
இன்னொரு வகையில் சொல்லப்
போனால் வெற்றி தோல்வி
இரண்டுமே ஒட்டிப்பிறந்த
இரட்டைக் குழந்தைகள்.
இரண்டும் ஒன்றுக்கொன்று
உள்ளுறவுகொண்டவை.
தோல்வியின் முடிவுதான்
வெற்றி. வெற்றியின் முடிவுதான்
தோல்வி.

துரத்தி வந்த கருமேகம்
தொலைந்து போனதற்காய்
அவர்கள் வருந்தவில்லை.
தோல்வி அவர்களுக்குப்
புதிதில்லை. இந்தியர்களாக
வாழ்ந்து வாழ்ந்து
ஏமாறுவதற்குத்
தயாரிக்கப்பட்டவர்கள்
அவர்கள்.

அதனாலென்ன.
கோடுகளும் சித்திரங்களே.
எமாற்றங்களும் அனுபவங்களே.
வெற்றியால் தரமுடியாத
விளைச்சலைத் தோல்வி தரும்.
எவரெஸட்டைத் தொடுவதற்கு
ஏறி, இமயமலையின்
இடுப்பிலிருந்து வழுக்கி
விழுந்தாலும் அது தோல்வி
அல்ல. ஏறுதல் - விழுதல்
என்ற அனுபவம் வெற்றி.

துவண்டு விழுந்த மனதை
எல்லோரும் தூக்கி நிறுத்திக்
கொண்டாலும் தமிழ்ரோஜா
மட்டும் வாடித்தான்
போனாள்.
ஏ பொழியாத வானமே.
பொய் வானமே.
உண்மை சொல்.
எங்கள் கண்களில் நீ
கறுப்பாய்க் காட்டியது
மேகமா? புகையா?

வானம் செய்யாத வேலையை
அவள் கண்கள் செய்தன.

தூறலிட்டன.

சரி. சரி. நம்பி வந்தது
போதும். நங்கூரமிடுங்கள்.

உணர்ச்சியில்லாமல் அவர்கள்
அந்த வேலையைச்
செய்தார்கள்- ஒரு பிணத்திற்குக்
குழிவெட்டும் வெட்டியானைப்போல.

கிரீச். கிரீச். கிரீச்.
கிரீச். தொடர்ந்தது
சுண்டெலியின் சோகக்
கச்சேரி.

சலீம் அதன்மீது பார்வை
பதித்தான்.
பஞ்சு மிட்டாயாய்ப்
பருத்திருந்த சுண்டெலி
இளைத்துவிட்டது இப்போது.

தண்ணீர் வற்றியதும்
தலைகாட்டும் ஏரிமரங்களைப்
போல அதன் உடம்பில்
விறைத்து நின்றன
குருத்தெலும்புகள்.

கோரிக்கை விடுக்கும் ஓர்
அகதியின் குரலாய்க் குறுகிப்
போன அதன் கிரீச் ஓசை
அதன் மரண வாக்குமுலமாகவே
ஒலித்தது சலீமுக்கு.

சட்டென்று ஒரு சிந்தனைச்
சிறுமின்னல் அவன் முளையின் ஒரு
முலையில் மின்னிமறைந்தது.

கரப்பான்பூச்சி விழுந்த
கஞ்சி நமக்குத்தான் ஆகாது.
ஆனால் அந்தச் சோறு
சுண்டெலிக்கு ஆகுமில்லையா?

எல்லோரும் யோசித்தார்கள்.

உண்மைதான். மனிதன்
தனக்குப் பசிக்கும்போது
மற்றவன் பசியை
மறந்துவிடுகிறான். சரி சரி.
சுண்டெலிக்குச் சோறு வை.

அவன் கஞ்சிப் பானையில்
கைவிட்டான். நைந்த
சோற்றை நசுங்காமல்
பிழிந்தான். அதை உருண்டை
திரட்டினான். கடுகுபுட்டி மேல்
வைத்துவிட்டுக் காத்திருந்தான்.

சோற்றுவாசங்கண்டு சுண்டெலி
வந்தது. முக்கை நீட்டி
முகர்ந்து பார்த்தது. அதன்
வால் அதிருப்தியை அபிநயம்
பிடித்தது.

மீண்டும் முகர்ந்து பார்த்தது.
அப்படியும் இப்படியும்
தலையாட்டியது. ஒரு
பருக்கையும் உண்ணவில்லை.
ஓசைப்படாமல் உள்ளே
போய்விட்டது.

அடடே. இது தன்மானச்
சுண்டெலி. பசித்தாலும்
புலிமட்டும்தான் புல்லைத்
தின்னாது என்றிருந்தோம்.
எலிகூடத் தின்னாது என்பதை
இப்போது கண்டுகொண்டோ ம்.
சுண்டெலியே வாழ்க. உன்
சுயமரியாதை வாழ்க.

அது அமாவாசை இரவு.
தேய்பிறை நிலவும்
தீர்ந்துவிட்டது.
நட்சத்திரங்களின் ஊசிக்கிரண
ஒளியில் விளையாட்டுக் காட்டின
வெள்ளலைகள்.

வியர்வைத் துவாரங்களின்
வழியே உள்ளே புகுந்து
உயிர்குடிக்கப் பார்த்தது
வாடைக்காற்று.
கொழிக்கும் நுரைகளோடு
அடிக்கும் அலைகளோடு
தடுமாறத் தொடங்கியது
படகு.

அலைகளின் கனமும் உயரமும்
வரவர வளரத்
தொடங்கியபோது நங்கூரம்
கழன்றுவிடுமோ என்ற நடுக்கம்
வந்தது.

ஏ சமுத்திரமே.
எங்களுக்கெதிராக என்ன
போர்ப் பிரகடனம்?
உனக்கு யுத்த தர்மம்
தெரியாதா?
நிராயுதபாணிகளோடு போர்
தொடுப்பது நியாயமில்லை
தெரியுமா?

ஏ. ஏ. நிறுத்து.
இந்தக் கறுப்பு இரவிலென்ன
வெள்ளை யுத்தம்?

அச்சம் நனைந்த குரலில்
என்னவாயிற்று கடலுக்கு?
என்றாள் தமிழ்ரோஜா.

இன்று அமாவாசை.
அதுதான் இந்தப்
பொங்குதல்.

பெளர்ணமியில்தானே கடல்
பொங்கும்?

இல்லை அமாவாசையிலும்
பொங்கும்

ஏன்... எப்படி?

பெளர்ணமியில் - சூரியனும்
சந்திரனும் எதிரெதிர் திசையில்
பூமியை இழுக்கின்றன -
அதனால் அலைகள்.
அமாவாசையில்- சூரியனும்
சந்திரனும் ஒரே திசையிலிருந்து
பூமியை இழுக்கின்றன.
அதனாலும் அலைகள்.

அடிக்கும் அலை அடித்துக்
கொண்டேயிருந்தது. ஆடும்
படகு ஆடிக்
கொண்டேயிருந்தது.

எங்கள் வானத்தில் உலகத்தின்
இருளையெல்லாம் ஊற்றிவிட்டுப்
போனது யார்?

எங்கள் நிலாவைத்
திருடிக்கொண்டு
நட்சத்திரங்களின் கண்களைக்
குருடாக்கிவிட்டது யார்?

கயிறில்லாத ஊஞ்சலான இந்தப்
படகில் உயிரில்லாத
உருவங்களை ஊசலாட்டுவது
யார்?

கலக்கம். மயக்கம்.
குழப்பம்.

நள்ளிரவுக்குப் பிறகு அலைகள்
மெள்ள மெள்ளக் குறையத்
தொடங்கியபோது -
நம்பிக்கை உள்ளவர்கள்
உறங்கிப் போனார்கள்.
நம்பிக்கையற்றவர்கள் விழித்தே
கிடந்தார்கள்.

மேகக் கிழிசல் வழியே சில
நட்சத்திரங்கள் மட்டும்
இவர்கள் படகை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த
வேளையிலே...

பனைமர உயரத்திற்குப்
பளிச்சென்று கடல்
தீப்பற்றியது.

பாதித்
தூக்கத்திலிருந்த சலீம்தான்
அதை முதலில் பார்த்தான்.

அவன் உயிரே உறைந்துவிட்டது.
உலர்ந்த நாக்கில் வார்த்தை
ஒட்டிக்கொண்டது.

பேய். பேய். கடல்பேய். என்று
அலறிக்கொண்டே பரதனையும்
பாண்டியையும் ஓங்கியடித்து
உசுப்பினான். அவர்கள்
எழுவதற்குள் அச்சங்காட்டிய
அக்கினிப்பேய் அணைந்துவிட்டது.

எங்கே? எங்கே? என்ன
உளறுகிறாய்?

அதோ.. அங்கேதான்.
பேய். நெருப்புப் பேய்.
அதோ. அதோ.

மீண்டும் அந்தப் பனைமர உயர
நெருப்பு பயங்காட்டியது.

எழுந்து - வளர்ந்து -
வளைந்து - நீண்டு -
நெகிழ்ந்து - அகன்று அக்கினி
வாய்திறந்து மீண்டும்
அணைந்தது.

இப்போது பாண்டிக்கும்
பரதனுக்கும்கூடப் பயம் என்ற
தொற்றுநோய் பரவிவிட்டது.

மொத்தப் படகும் விழித்துக்
கொண்டது முன்று பேரின்
தத்தளிப்பில்.

பேய். பேய். கடல்
பேய்.

தண்ணீரில் முழ்கிப்போன பேய்
மீண்டும் தலைகாட்டியது.

நெருப்பாய் - பளபளப்பாய்
- சுடரொழுகும் ஜொலிப்பாய்
ஆடியது அக்கினிப் பேய் -
கடலுக்கு மேலே கனல்
பற்றியது போல.

ஆ. அய்யோ.
அய்யய்யோ.
அலறியபடி கலைவண்ணனின்
உடம்பில் உயிர்போல
ஒட்டிக்கொண்டாள்
தமிழ்ரோஜா.

வாடைக்காற்றிலும் வியர்த்து
நின்றார்கள் சலீமும் பரதனும்.

அவர்களின் கலக்கங்கண்டு
குழப்பம்கொண்ட கலைவண்ணன்
- அந்தப் பேயின்மீது ஒரு
தூரப்பார்வை வீசித்
துப்பறிந்தான்.

சலீமின் இருதயம்
மரணவேகத்தில் துடித்தது.
அய்யோ. நம்
மண்டையோடுகூடக்
கரைசேராதா?

கலைவண்ணன் உண்மைகண்டு
தெளித்தான். ஒரு பொய்ச்
சத்தம் போட்டு அவர்களின்
அச்சம் அடக்கினான்.

அஞ்சாதீர்கள். அது பேயின்
விஸவருபம் அல்ல. அக்கினியும்
அல்ல. பூச்சிகளின் உயர
ஊர்வலம்.

எப்படி?
சற்றே பெருமுச்சு விட்டவர்கள்
அந்த ஒரே வார்த்தையை
ஐந்துநாவுகளால்
உச்சரித்தார்கள்.

அவை கடல்மேல் மிதக்கும்
மெல்லிய வெளிச்சப் பூச்சிகள்
- பெயர் நாக்டிலூக்கா
கோப்பை அளவுத் தண்ணீரில்
கோடானுகோடி எண்ணிக்கை
கொண்டவை. அலைகளுக்கு
உற்சாகம் வருகிறபோது
இந்தப் பூச்சிகளுக்கும் ஆவேசம்
வந்துவிடும். அலையோடு
பயணம் கொண்டு மெர்க்குரி
விளக்குகளாய் மின்னும்.
தொட்டால் சுடுவதில்லை.
பற்றினால் எரிவதில்லை.
போலி நெருப்புப் பூச்சிகள்.
போய் உறங்குங்கள்.

அவ்வளவுதான். படகைப்
பிடித்திருந்த பிசாசு
இறந்துவிட்டது.

நிம்மதி. நிம்மதி. கரைகடந்த
புயலாய் மனங்கடந்தது பயம்.

அறிவே உனக்கு வணக்கம்.
நீதான் மனிதஜாதியின் அச்சம்
களைந்தாய். நீதான் பூமியின்
இருட்டுக்குப் புதுப்பகல்
கொண்டு வந்தாய்.

இடியும் மழையும் புயலும்
இயற்கையின் கோபங்கள்
என்றிருந்தபோது - அவை
சீதோஷணத்தின்
சிலிர்ப்புகள்... சிரிப்புகள்
என்ற செய்தி அறிவித்தாய்.

அறியாமையே அச்சம். அறிவே
பலம். காரணம்
கண்டறியாதவரை ஆன்மீகம்.
காரணம் கண்டறிந்தால்
விஞ்ஞானம். காரணங்கள்
கண்டறிவோம். நன்றி அறிவே.
நன்றி.

விடியாதே இரவே.
விடியாதே.
எங்கள் துயரத்திற்கு இரவாவது
திரைபோடுகிறது. நீ ஏன்
வெளிச்சம் போடுகிறாய்?

எங்கள் நாவுகளில்
வாடைக்காற்று பூசிய ஈரத்தை
சூரியனே நீ வந்து
சுண்டவைக்கப் போகிறாயா?

தகிக்கும் பகலே. உன்னைத்
தவிர்க்கமுடியாதா? இந்தக்
கடலில் எங்கள்
சம்மதத்துடன்தானா எல்லாம்
நடக்கிறது?

விடிந்து தொலை இரவே.
விடிந்து தொலை.

இதோ பாருங்கள். என்
கைப்பையில் ஒரே ஒரு
சாக்லெட்.. துழாவியபோது
ஆழத்தில் அகப்பட்டது.

மீட்சிக்கு ஒரு படகு வந்தது
போல் துள்ளிக்குதித்தாள் தமிழ்
ரோஜா.

கண்ணாடித்தாள்
சுற்றப்பட்டிருந்த அந்தச் சின்ன
சாக்லெட். செத்துப்போய்ச்
சில நாட்கள் இருக்கும்.

ஆனாலும், அது ஒவ்வொரு
நாவிலும் மிச்சமிருந்த எச்சிலை
ஊறவைத்தது.

சரி சரி. பங்கிடுங்கள்.
ஆறு பங்கு.

இல்லை. இல்லை. ஏழு
பங்கு.

மன்னிக்க வேண்டும்.
மறந்துவிட்டேன்
சுண்டெலியை.

ஆறு பங்காய்ப் போடுவது
எளிது. ஏழு பங்காய்ப்
போடுவது கடிது.

சரி.. சரி. ஆறு
பங்காகவே போடுங்கள். என்
பங்கைச் சுண்டெலிக்குக்
கொடுத்துவிடுகிறேன்
என்றான் சலீம்.

சாக்லெட் பிளக்கப்பட்டது.
இந்தியா-பாகிஸதான்
பிரிவினையைவிட அது
கவனமாகவே
கையாளப்பட்டது.

அவரவர் துண்டு அவரவர்
கைக்கு வந்ததும், உயிருக்கு
அது ஓர் அமிர்தச் சொட்டு
என்றே அறியப்பட்டது.

சலீமைக் காணோம்.

தன் பங்கோடு அவன் சுண்டெலி
தேடி ஓடினான்.

கடுகுபுட்டியின் முடியில்
வைத்தான். காணவில்லை
சுண்டெலியை.

வாய்குவித்து ஒலிசெய்தான்.
வரவில்லை. சின்னச் சின்னச்
சந்துகளில் கண்களைப்
போட்டான். சுண்டெலியின்
அடையாளம் தோன்றவில்லை.

சுக்கான் அறையை ஒட்டிக்
கவலையோடு நடந்தபோது
அவன்
கால்களில் ஏதோ
பிசுக்கிட்டது.

தீயை மிதித்தவன்போல விசுக்கென்று
காலெடுத்தான், குனிந்து பார்த்தான்.

சுண்டெலியின் உரிக்கப்பட்ட தோலும்,
துண்டிக்கப்பட்ட தலையும் தனித்தனியே
கிடந்தன.

அவ்வளவுதான.

தன் உயிரையெல்லாம் குரல்வளையில்
திரட்டி எவனடா. எவனடா என
சுண்டெலியைக் கொன்றவன் என்று கண்ணீர்
தெறிக்கக் கதறினான் சலீம்.

சில விநாடிகள் அங்கே மரணமெளனம்
நிலவியது.

அந்த மெளனம் கிழித்து இசக்கி மெல்ல
எழுந்துவந்தான்.
நான் கொன்றேன், நான்தான் தின்றேன்.
பசி, உயிர்போகும் பசி.
என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?

அவன் மார்பில் ஓங்கிக் குத்தி, சட்டை
பிடித்துலுக்கி, கண்ணீர்விட்டுக் கதறியபடி -
அடப்பாவி. நீ என்னைத் தின்றிருக்கலாமே
என்றான் சலீம்.

அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.
என்றான் இசக்கி.
---------------------------------------------------------------------
16

ஒரு மனிதன் -
எத்தனை நாடுகள் கடந்தான்.
எத்தனை கடல்கள்
கடைந்தான்.
எத்தனை பேரைக்
கொன்றான்.
எத்தனை மகுடம் கொண்டான்.
எத்தனை காலம் இருந்தான்.
எத்தனை பிள்ளைகள் ஈன்றான்
- என்பவை அல்ல அவன்
எச்சங்கள்.

இவையெல்லாம் நான் என்ற
ஆணவத்தின் நீளங்கள்.

அவன் இன்னோர் உயிருக்காக
எத்தனைமுறை அழுதான்
என்பதுதான், அவன் மனிதன்
என்பதற்கான மாறாத
சாட்சி.

சலீம் அழுதான்.

அது சுயசோகத்திற்காகச்
சொட்டிய கண்ணீரன்று.
சுண்டெலியின் மரணத்திற்காகச்
சிந்தப்பட்ட சுத்தக் கண்ணீர்.

காணவும் தூங்கவும் மட்டுமே
கண்கள் என்று பலபேர்
தப்பாகக் கருதிக்
கொண்டிருக்கிறார்கள்.

இல்லை - கண்ணீருக்கும்
சேர்த்துத்தான் கண்கள்.

பார்த்தல் என்பது
கண்களின் வேலை.
கண்ணீர் என்பதே
கண்களின் தியானம்.

இதயம் கொதித்து
ஆவியாகும்போது இமைகளின்
முடி திறந்து கொள்கிறதே...
அதுதான் கண்ணீர்.

ஒருவன் தனக்காக அழும்
கண்ணீர் அவனைமட்டுமே
சுத்திகரிக்கிறது.
அடுத்த உயிருக்காக அழும்
கண்ணீர்
அகிலத்தையே சுத்திகரிக்கிறது.

அழாதே சலீம். அழாதே.
இசக்கியின்
தவறுக்காக நான் மன்னிப்புக்
கேட்கிறேன்
- கலைவண்ணன் சலீமின்
கரங்கள் பற்றிக் கெஞ்சினான்.

அவன் நிறுத்தவில்லை.
அவன் கண்களிலிருந்து
அறுந்துபோகாத அருவி
வடிந்து கொண்டேயிருந்தது.

இவன் எவ்வளவு மெல்லியவன்.
அனிச்சப்பூ மனசு கொண்டவன்.

பிள்ளை மாதிரி
வளர்த்தேனே.
பிடித்துத் தின்றுவிட்டானே.
- அவன் எழுத்துக் கூட்டி
அழுதான்.

விடு சலீம். ஒரு
சுண்டெலிக்காக இவ்வளவு
சோகப்படுகிறாயே.
- பாண்டியின் சொற்களில்
அலட்சியம் சொட்டியது.

சொல்லாதே. அதை
வெறும் சுண்டெலி என்று
சொல்லாதே. இந்தப் படகின்
ஏழாவது ஜீவன் என்று
சொல். உருவங்கள்
மாறலாம். ஆனால், உனக்கும்
எனக்கும் அதற்கும் உயிர்
ஒன்றுதான். நம் ஆறுபேரில்
யாராவது ஒருவர்
செத்திருந்தால் நீ அழாமல்
இருப்பாயா?
அப்படித்தான் அதுவும்

அவன் வாக்கிலிருந்த தர்க்கம்
அவர்களை
வாயைடைத்துவிட்டது.

அவன் அழுகை நிற்கவில்லை.

தண்ணீர் குடிக்காத தேகத்தில்
எப்படித்தான் அவ்வளவு
கண்ணீர் இருந்ததோ.
பாண்டியும் பரதனும் அவனைத்
தங்கள் மார்பில்
சாய்த்துக்கொண்டு வேர்வைப்
பிசுக்கில் சிக்கலாகிப்
போன அவன் கேசத்தில்
சிக்கெடுத்தார்கள்.

அந்த ஸபரிசம் அவனுக்குத்
தேவைப்பட்டது.

இசக்கி மட்டும்
பேசவேயில்லை.

அவன் தன்னைத் துண்டித்துத்
தனியனானான்.

ஆடும் படகின் விளிம்பில்
அசையாது உட்கார்ந்து
பிரமைப் பிடித்தவன்போல்
கடல் பார்த்தான்.

தன்னைத் தாங்கிய
மார்புகளுக்கு மத்தியில்
அழுது கொண்டேயிருந்தான்
சலீம்.

ஒரு முரட்டுக்கூட்டத்தில்
இப்படி ஓர் இதயமா?
தன் தாகம், பசி இரண்டையும்
மறந்து வியந்தாள்
தமிழ்ரோஜா.

உரிக்கப்பட்ட சுண்டெலியின்
தோலை மட்டும் சலீமால்
தூக்கி எறிய முடியவில்லை.

தான் வருவதற்கு முன்பே
அடக்கம் செய்யப்பட்டுவிட்ட
தாயின் பழைய புடவையைத்
தொட்டுப் பார்க்கும்
ஒரு பாசமுள்ள மகனைப்
போல - சுண்டெலியின்
தோலை
அவன் தடவிக்கொண்டிருந்தான்.

கைகளில் ஒட்டிய
ரத்தம்பார்த்துத் திடீரென்று
ஆவேசமானான்.

டேய், மனிதனாடா. நீ
மனிதனா? என்று கண்கள்
பிதுங்கக் கத்தி, இசக்கியை
நோக்கி
முன்னேறினான்.

இழுத்துக் கொண்டோ டியவனின்
வயிற்றில் கைவைத்து வளைத்து
நிறுத்தினான் கலைவண்ணன்.
அவனைத் தழுவித் தடவிச்
சாந்தம் செய்தான்.

இதோ பார் சலீம்.
சுண்டெலியைக் கொன்றது
பாவம்தான். உன் உணர்ச்சி
நியாயம்தான். ஆனாலும்
உனக்கொன்று சொல்வேன்.
இதை உன் உள்ளத்தில்
எழுதிக்கொள்.
எது நியாயம், எது பாவம்,
என்று தீர்மானிப்பவன்
மனிதனல்லன்.
இடமும் காலமும்தான்.

தாகத்தில் சாகப் போகும்
பாலைவனப் பயணிகள்,
தங்கள் ஒட்டகத்தையே
கொன்று அதன் உள்ளிருக்கும்
நீரை அருந்துவார்களாம்.
அங்கே ஒட்டகவதை என்பது
பாவமல்ல. பாலைவன
நியாயம்.

பசி உடம்பைத் தின்னத்
தொடங்கும் பஞ்சநாட்களில்
எறும்புப் புற்றை இடித்து,
அதன் மாரிக்காலச்
சேமிப்பான
தானியம் எடுத்துச்
சமைப்பார்களாம்.
அங்கே அது திருட்டு அல்ல.
அது பசியின் நியாயம்.

உணவு கிட்டாத காலத்தில்
உயிர்காக்க நினைக்கும்
இருளர்கள், களிமண்
தின்பார்களாம்.
அங்கே மண் தின்பது என்பது
பாவமல்ல.
பழக்க நியாயம்.

பயிர் செய்ய முடியாமல்
வருஷத்தில் பாதி நாட்கள்
பனிமுடிக் கிடக்கும்
பிரதேசங்களில்
துருவக்கரடிகளும் நாய்களும்கூட
அன்றாட உணவாகுமாம்.
அங்கே அசைவம் என்பது
பாவமல்ல. பூகோள
நியாயம்.

சோமாலியாவின் பஞ்சத்தில்
எலும்பும் உயிரும் வெளியேறத்
துருத்திக் கொண்டிருக்கும்
உடம்புக்குச்
சொந்தக்காரர்கள்
ஒன்றும் கிடைக்காமல்
உடைகளையே தின்னத்
தொடங்கினார்களாம்.
அவர்கள் உடை தின்றது
பாவமல்ல. கால நியாயம்.

இசக்கி சுண்டெலியைக் கொன்று
தின்றதை நான்
நியாயப்படுத்த விரும்பவில்லை.
ஆனால், அவன் செய்தது
கொலை என்று
குற்றம்சாட்டவும்
முடியவில்லை.

சலீம் தன் அழுக்குச் சட்டையில்
வாய் புதைத்து
அழுகை அடக்கினான்.

அழுகை மெல்ல மெல்லக்
குறைந்து விசும்பலானது.

விசும்பல் மெல்ல மெல்லத்
தேய்ந்து மெளனமானது.

சுண்டெலியின் இறுதிச்
சடங்குக்குப்
படகு தயாரானது.

இறந்த உடம்பை இரண்டு
வகையில்
நிறைவு செய்யலாம்.

ஒன்று எரிப்பது அல்லது
புதைப்பது.

எரிப்பதென்றால் ஒரு தீக்குச்சி
செலவாகும்.
இருக்கும் சில தீக்குச்சிகளில்
ஒன்றை இழப்பது
அறிவுடைமை ஆகாது.

புதைத்தல் என்றால் அங்கே
பூமியில்லை.

யோசித்தார்கள்.

வீசுவது என்று
முடிவெடுத்தார்கள்.

எந்தக் கடுகுப்புட்டியின் முடியில்
அது ஆசையாக
உணவருந்துமோ அதே
கடுகுப்புட்டியில், அதன்
தோலையும் தலையையுமிட்டுக்
காற்றுப் புகாமல் முடினான்
கலைவண்ணன்.

அந்தக் கடுகுப் புட்டியைக்
கட்டிக் கொண்டு அழுதான்
சலீம்.

தாயின் மார்பகத்தோடு
ஒட்டிக் கொண்ட
குழந்தையைப் போல்
அவனிடமிருந்து அதைப் பிரிக்க
முடியவில்லை.

பாவம். அன்புள்ள அப்பாவி.

அவனைச் சிரமப்படுத்திப்
பிரித்து, அவன் விரல்களில்
ஒவ்வொன்றாய் விலக்கி, அதை
அத்தனை பேரும் பறித்துக்
கண்ணை முடிக்கொண்டு
கடலில் வீசினார்கள்.

சலீமோடு சேர்ந்து அலைகள்
சிலவும் அழுதன.

இசக்கி மட்டும் பிரமைப்
பிடித்தவன் போல்
உணர்ச்சியில்லாமல்
உட்கார்ந்திருந்தான்.

ஏ தமிழ்ரோஜா.
தலை கவிழ்ந்திருக்கும் என்
தங்கமே.
என்னை மன்னித்துவிடு.
ஆறுதலும் நம்பிக்கையும் தவிர
எதையும் தர முடியாத
ஏழையாகிவிட்டேன்.
உடுத்துவதற்கு மாற்று
ஆடையுமில்லை. உயிர்
பிழைப்பதற்கு
மாற்று வழியுமில்லை.
என்ன கலக்கம். ஏனிந்தக்
குழப்பம்.
உன் முகத்தில் என்ன பயத்தின்
முற்றுகை.
மீண்டும் தண்ணீர் பயமா?

இல்லை. மரணபயம்
- அவள் லேசாய்ச்
சிரித்தாள்.

சாவின் புன்னகை
இப்படித்தானிருக்குமோ?

அவன் ஒற்றைவிரல் கொண்டு
அவள் உதடு பொத்தினான்.

பேதையாய்க்கூட இரு.
கோழையாய் இருக்காதே.
இயற்கை அளவற்ற
கருணையுடையது.
நம்மை உயிரோடு வரவேற்ற
கடல் நம் பிணங்களைக்
கரை சேர்க்காது.

எனக்கும் அதுதான்
சந்தேகம்.
இங்கே இறந்தால் கரை
சேர்வதற்கு நம் உடலே
இருக்காது

நம்பிக்கை இழக்காதே
தமிழ்.
நாளை நம்முடையதே.

நாளை நம்முடையதென்றால்
இன்று யாருடையதோ?

அவளுக்குத் தலை சுற்றியது.
மயக்கம் வந்தது.
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா?
கொஞ்சம் தண்...
மிச்ச எழுத்துக்களை அவள்
சைகையில்
உச்சரித்துவிட்டு
முர்ச்சையானாள்.

தமிழ். தமிழ். -
அவன் பதறினான்

தமிழ். தமிழ். -
அவன் கதறினான்.

கலைவண்ணன் முதன் முதலாய்
அச்சப்பட்டான்.

எல்லோரும் ஓடி வந்தார்கள்
- இசக்கியைத்தவிர.

சலீம் தன் மேல்துண்டைக்
கடல்நீரில் நனைத்துப்
பிழிந்து நீட்டினான்.

கலைவண்ணன் அவள் முகத்தில்
அதை ஒற்றி ஒற்றி
ஈரப்பசை காட்டினான்

முர்ச்சை தெளிந்து அவள்
முனகினாள்.

தலைக்குமேலே நாரைகளின்
மந்தை ஒன்று படபடவென்று
சிறகடித்துப் போனது.
அத்தனைபேரும் மொத்தமாய்
அண்ணாந்து பார்த்தார்கள்.

ஏ மனிதர்களே.
சிறகுகொண்டு கடல்கடக்கத்
தெரியாத நீங்கள்
எங்களைவிட எப்படி
உயர்ந்தவர்கள்?

உப்புத் தண்ணீர் பருகி
உயிர்வாழ முடியாத நீங்கள்
மீன்களைவிட எப்படி
உயர்ந்தவர்கள்.

ஒருவார தாகம் பொறுக்க
முடியாத நீங்கள்
ஒட்டகத்தைவிட எப்படி
உயர்ந்தவர்கள்.

எங்களைக் கொல்லுவதற்கும்
வெல்லுவதற்கும் ஆயுதம்
கண்டுபிடித்தீர்கள்.
அதனால் மட்டும்தானே நீங்கள்
உயர்ந்தவர்கள்?
இருந்துவிட்டுப் போங்கள்.

கொஞ்சம் தண்ணீர்...
கொஞ்சம் தண்ணீர்

முர்ச்சை தெளிந்தும்
தெளியாமலும்
அவள் புலம்பிக் கிடந்தாள்.

எங்கு போவது தண்ணீருக்கு?
என்ன செய்வது தண்ணீருக்கு?

கலைவண்ணனால் அப்போது
கொடுக்க முடிந்தது
தண்ணீரல்ல. தன்னை
மட்டும்தான்.

இசக்கி மட்டும் பிரமை
பிடித்தவனாய்க் கடலையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான்.

அந்தி வானத்தில் அஸதமனக்
கோடுகள் விழத் தொடங்கிய
வேளையில், படகின் விளிம்பில்
உட்கார்ந்திருந்த பரதன்
கடலிலும் வானத்திலும் தன்
கண்களை வீசி, ஆபத்தில்
உயிர் காக்கும் அடையாளம்
தேடினான்.

இருப்பது இறப்பது இந்த
இரண்டுக்கும் இடையிலான
வித்தியாசங்கள், அங்குலம்
அங்குலமாக அழிந்துகொண்டே
வருவதை அவன் உணர்ந்தான்.

தற்செயலாய்த் தலை
தாழ்த்தினான்.
ஆ. அவை என்ன?

தண்ணீர் மட்டத்துக்கு மேல்
தலைதூக்கும் அந்தப்
பிராணிகள் கடற்பாம்புகளா?

சற்றே உற்றுப் பார்த்தான்.
ஆமைகள். கடல்
ஆமைகள். என்று
கத்தினான்.

எல்லோரும் அவன் குரல்
கேட்டுக்
கூடுவதற்குள் அவன் கடலில் குதித்தான்.

வெயிலில் ஒதுங்கவும். படகின் வயிற்றில்
படிந்திருக்கும் பாசிதின்னவும் படகை உரசிய
அந்த ஆமைகளை ஒவ்வொன்றாய்த்
தலைபற்றித் தளத்தில் வீசியெறிந்தான்..

தப்பித்தவை போகத் தளத்தில் விழுந்தவை
முன்று ஆமைகள். ஒவ்வொன்றும்
ஆறு கிலோ எடை இருக்கும்.

தலையும் காலும் வாலும் தவிர ஓட்டுக்கு
வெளியே ஒன்றும் தெரியவில்லை.

ஆகா. ஆகா. ஆமைகள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்
படகில் பசிக்குரல் மறைந்து உயிர்க்குரல் கேட்டது.
கடலில் கிடந்த பரதன் தாவிக்குதித்து
மேலே வந்தான்.

சமையல்கட்டு சென்றான்.

கத்தியும் சட்டியும் கொண்டுவந்தான்.

ஆமைகளை நெருங்கினான்.

பார்த்து. கையைக் கடித்துவிடப்போகிறது
ஆமை.

அடப்போடா. ஆமைக்குப் பல்லில்லை
என்பது எனக்குத் தெரியாதா?

வெள்ளையாய்த் தெரிந்தது அடிவயிறு.

அதன் இதயப்பகுதியில் கத்தி வைத்தான்.
குத்தினான் - அழுத்தினான் - கீறினான் - கிழித்தான்.

முதலில் கசிய ஆரம்பித்த கருஞ்சிவப்பு
ரத்தம் குபுகுபுவெனக் கொட்டத் தொடங்கியது.

ஆமையின் தலைதுடிப்பதை அவனால் தாங்க
முடியவில்லை. அதை வெட்டி எறிந்தான்.

அப்படியே தூக்கிப் பிடித்துக் கவிழ்த்து
அதன் ரத்தத்தைச் சட்டியில் கொட்டினான்.

அவ்வாறே மற்ற ஆமைகளையும் பிளந்து
ரத்தமெடுக்க, நிரம்பிவிட்டது. பாதிச்சட்டி
பரதன் உற்சாகத்தில் கத்தினான்.
இப்போது இது ரத்தமல்ல. சிவப்பு தண்ணீர்
குடியுங்கள் - எல்லோரும் குடியுங்கள்.

அதுவரை இறந்துகிடந்த டம்ளர்களுக்கெல்லாம்
உடனே உயிர் வந்தது.

சட்டியில் விட்டு ஆளுக்கொரு டம்ளர்
ஆமை ரத்தம் அவசரமாய் மொண்டான்.

இந்தா பாண்டி. இது உனக்கு.
இந்தா சலீம். இது உனக்கு.
இதோ பேனாக்காரரே. இது உங்களுக்கு.

தூரத்தில் பிரமை பிடித்துப் பேசாதிருந்தான்
இசக்கி.

இந்தா இசக்கி இது உனக்கு.

அதுவரை திரும்பாதிருந்த இசக்கி திரும்பினான்.

அவன் கண்ணிலிருந்து ஒரு துளிக் கண்ணீர்
ஆமை ரத்தத்தில் விழுந்தது.

என்னை மன்னித்து விடுங்கள்.
இன்றுமுதல் நான் சாகும் வரைக்கும்
அசைவம் தொடமாட்டேன். நான் கொன்ற
சுண்டெலிக்கு ஆயுள் முழுதும் நான்
செலுத்தும் அஞ்சலி அதுதான்.

அசையவில்லை யாரும், அப்படியே
நின்றார்கள்

இசக்கி சைவமாகிவிட்டானா?

வேங்கைக்கு வெற்றிலை மட்டும் போதுமா?

இது என்ன புது அதிர்ச்சி.

அவர்கள் எதிர்பாராத திசையிலிருந்து
இன்னோர் அதிர்ச்சியும் வந்தது.

எனக்கும் கொடுங்கள் ஒரு டம்ளர்
ஆமை ரத்தம்.

திகைத்து திரும்பினார்கள்.
கேட்டவள் தமிழ்ரோஜா.
---------------------------------------------------------------------

---------------------------------------------------------------------
17

இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும்
நேரலாம். இன்று காண்பது
நாளை மாறலாம்.

மாற்றமே பரிணாமம்.
மாறுதல் ஒன்றுதான் உலகில்
மாறாதிருப்பது.

இந்தக் கிரகத் தொகுதியும்
கட்சி மாறலாம்.

வியாழனை முட்டித் துளைத்த
வால்நட்சத்திரத்தால் அங்கே
தண்ணீரும் உயிர்களும்
உற்பத்தியாகலாம்.

என்றேனும் ஒரு நாள் -
இந்தப் பூமி என்னும் கிரகம்
இடிகொண்ட முட்டையாய்ச்
சிதறுண்டு போக, இங்கிருந்து
தப்பிக்க வசதிகொண்ட
மனிதர்கள் வியாழன் கிரகத்தில்
வீடு வாங்கலாம்.

இதுவரைக்கும் பூமிக்கு வெயில்
தந்த பழைய சூரியனைப்
புறந்தள்ளிவிட்டு, இன்னொரு
சூரியக் குடும்பத்துக்கு
ஜீவராசிகள் இடம்
பெயரலாம்.

நிகழும் வரைக்கும்தான் ஒன்று
அதிசயம். நிகழ்ந்த பிறகு அது
சம்பவம்.

தொப்பூழ்க்கொடி அறுத்தது
முதல் அசைவக்
கலாசாரத்திலேயே வளர்ந்த
இசக்கி, அன்று முதல் தன்னைச்
சைவன் என்று
பிரகடனப்படுத்திக் கொண்டதும்
- எறும்பு செத்து மிதக்கும்
பாலைக்கூட அசைவமென்று
ஒதுக்கிய தமிழ் ரோஜா,
அன்று ஆமை ரத்தம் பருகக்
கேட்டதும் பழகியவர்களுக்கு
அதிர்ச்சியே தவிர
பண்பாட்டுக்கு அதிர்ச்சி அல்ல.

மனிதன் இயற்கையின் குழந்தை.
அவனது உணவை, உடையை,
உறையுளை ஏற்படுத்திக்
கொடுப்பதும் இயற்கைதான்.

மதுரையில் சட்டையில்லாத
உழவனைப் பார்த்து, இனி
சட்டை அணிவதில்லை என்று
வடநாட்டு உழவன் சபதம்
செய்தால், அது சரியான
சிந்தனை என்று கருத
முடியாது.

அந்த வெயில் பூமியில்
சட்டையில்லாமலிருப்பது ஓர்
உழவனின் செளகரியம்.

வடநாட்டுக் குளிரில் ஓர்
உழவன் சட்டையும்
தலைப்பாகையும்
அணிந்தே ஆக வேண்டும்.. அது
அவன் தேவை.

எனவே, சட்டை அணிவது -
அணியாதிருப்பது என்பதை
வானிலை தீர்மானிக்கிறது.

மனிதனின் ஆணைகள்,
மீறுவதற்காகவே
பிறப்பிக்கப்படுகின்றன.
இயற்கையின் ஆணைகள்
தேவைக்காகவே
படைக்கப்படுகின்றன.

ஆமைரத்தம் சைவமா
அசைவமா என்று
வாதாடுவதற்கான வாய்ப்பை,
தமிழ்ரோஜாவின் தாகம்
அவளுக்குத் தரவில்லை.

அவளைப் பொறுத்தவரை
அப்போது அவளுக்கு அது
திடதிரவம்.

குடித்தாள்.

குடித்துவிட்டுப் பால்குடித்த
குழந்தைபோல் இதழ்க்கடை
துடைத்தாள்.

அடுத்தொரு கேள்வியும் அவளே
கேட்டாள்.

அந்த ஆமைக்கறியைச்
சமைக்க முடியுமா?

மீனவர் நிமிர்ந்தனர்.

அதைப் பச்சையாகவே
சாப்பிடுவது என்று அவர்கள்
நெஞ்சுக்குள் நிறைவேற்றிக்
கொண்ட மெளனத் தீர்மானம்
சற்றே ஒத்தி வைக்கப்பட்டது.

இதைச் சமைக்கத்தான்
வேண்டுமா?

பச்சையாய் உண்டாலும்
அடிவயிற்றில் எரியும் அக்கினியில்
இது வெந்து போகாதா?

நெருப்பு என்பது அந்த
நிமிடத்தில் அவர்களுக்கு
ஆடம்பரம்.

அவர்களின் அந்த நேரத்து
அகராதியில் சமைத்தல் என்ற
சொல்லுக்கு நேரே,
காலவிரயம் அல்லது
படாடோ பம் என்று பொருள்
போட்டிருந்தது.

ஆனாலும், ஒரு சைவப்
பெண்ணின் அசைவத்
தேவைக்காக அவர்கள்
சமைக்க ஆயத்தமானார்கள்.

முன்று வருடங்கடந்து மழை
பெய்த ஒரு திருநாளில், தன்
பழைய கலப்பையைத் தேடுகிற
ஓர் ஏழை விவசாயியைப்போல
அவர்கள் திசைக்கொருவராய்ப்
பறந்து தீப்பெட்டி
தேடினார்கள்.

ஒரு குடியானவன் வீட்டு
உண்டியலின் கடைசிக்
காசைப்போல அது ஏதோ
ஓர் ஆழத்தில் அகப்பட்டது.

அது சற்றே ஈரம்பூத்திருந்தது.

உள்ளே- ரஷயப்
படையெடுப்பில் தோற்றுத்
திரும்பிய நெப்போலியனின்
படைவீரர்களைப் போல
எண்ணிக்கையில் குறைவாகவே
இருந்தன தீக்குச்சிகள்.

பற்றவைக்க முயன்றான்
பாண்டி.

முதலாம் தீக்குச்சி -
உடைந்தது.

இரண்டாம் தீக்குச்சி -
பட்டையில் ஒரு பாதி கிழித்துத்
தானும் தேய்ந்தது.

முன்றாம் தீக்குச்சி - சற்றே
பற்றிச் சட்டென்று அணைந்தது.

தீக்குச்சி நாலாவது -
பற்றியது. ஏமாற்றாமல்
எரிந்தது.

அடுப்பும் முகங்களும் ஒரே
நேரத்தில் ஒளிகொண்டன.

தண்ணீர் இல்லாததால் அதன்
ரத்தம் ஊற்றப்பட்டு
அவசரமாய்ச் சமைக்கப்பட்டது
ஆமைக்கறி.

தட்டேந்தி நிற்கவோ
பங்கிட்டுக் கொள்ளவோ
பொறுமையின்றி, ஆளுக்கொரு
துண்டாய் அவர்கள் அவசரமாய்
உண்ட பிறகுதான்
தெரிந்தது... வெந்திருப்பது
கறி அல்ல - அவர்களின்
நாக்குகள் என்று.

அவர்களின் உடம்பின் ஆழத்தில்
வற்றி வண்டலாகிப் போன
உயிர் ஒவ்வொரு சொட்டாய்
ஊறத் தொடங்கியது.

கரை.

மீனவர் சங்கம் மிதந்தது
சத்தத்தில்.

காணவில்லை என் மகனை.
கண்டுபிடிக்க மாட்டீர்களா?
- அந்தக் கோடையிலும்
நடுங்கியது ஒரு முதாட்டியின்
குரல்.

காணவில்லை என் கணவனை.
செத்தாரா இருக்கிறாரா...
செய்தி
சொல்லமாட்டீர்களா? -
இது ஒரு
கைக்குழந்தைக்காரியின்
கதறல்.

பதறாதீர்கள், ஒன்றும்
ஆகாது அவர்கள் உயிர்களுக்கு.
இன்றைக்கே தேட ஏற்பாடு
செய்வோம். எப்படியும்
கிடைப்பார்கள் - ஒரு
பிசிறில்லாத ஆண்குரல்
பேசியது.

அவனுக்கு மட்டும்
ஏதாவதானால் நான்
கடலாத்தா மடியில்
விழுந்துதான் செத்துப்
போவேன்.
தரையில் செத்தால் எனக்குக்
கொள்ளிவைக்கத்தான் வேறு
பிள்ளை இல்லையே.

பாவம். கிழவியின் பீளைக்
கண்களில் ஏழைக்கண்ணீர்.

கடல்.

நேற்றுச் சொன்னேனே..
அது நிஜமாகிவிட்டது தமிழ்.

என்ன சொன்னீர்கள்?

இயற்கை அளவற்ற
கருணையுடையது என்றேன்.
இயற்கை தன் கருணையை ஆமை
வடிவில் அனுப்பி வைத்ததா
இல்லையா?

ஒரு பட்டமரத்தில்
புறப்படும் முதல் தளிரைப்
போல எனக்குள் புதிய
நம்பிக்கை பூத்திருக்கிறது.

பூமியைப் பற்றிக்கொள்ளும்
வேர்களைப்போல நீ
நம்பிக்கையைப் பற்றிக்கொள்.
ஒரு பறவை உன் தலைக்கு
மேலே பறப்பதை உன்னால்
தடுக்க முடியாது. ஆனால்,
அது உன் தலையில்
கூடுகட்டாமல் உன்னால் தடுக்க
முடியும்.

அவள் பாதி உதட்டில்
புன்னகைத்தாள்.
அதில் தேவையான சதவிகிதம்
சிருங்காரம் இருந்தது.

அதுவரைக்கும் பசியில் உலர்ந்து
கிடந்த காதல், சின்னதாய்ச்
சிலிர்த்துச் சிறகு விரித்தது.

அவன் நெருங்கி வந்தான்.
பட்டாம்பூச்சி பிடிக்கும்
சிறுவனைப் போல அசையாமல்
அவளையே பார்த்தான்.

சட்டென்று குனிந்தான்.
அவள் அசைவ உதடுகளில்
அவசரமாய் முத்தமிட்டான்.

உதடுகளின் ஓப்பந்தம் சில
நிமிடங்கள் நீடித்தது.
கடைசியில் பார்த்தால்
கரித்தது முத்தம்.

அவனுக்குத் தெரியாமல் அவளும்
அவளுக்குத் தெரியாமல் அவனும்
அழுத துளிகள் பரஸபரம்
உதடுகளில்
பரிமாறப்பட்டிருந்தன.

ஆனந்தக் கண்ணீர் மட்டும்
இனிக்குமா என்ன?

மேகமற்ற ராத்திரி.

மெல்லிய பிறை. ஒற்றை
உதட்டால் சிரித்தது மேற்கு
வானத்தில்.

கலங்காதிரு பிறையே.
உனக்குள்தான்
பூரணச்சந்திரன்
புதைந்திருக்கிறான்
- மகாகவி இக்பாலின் இந்தக்
கவிதை சலீமுக்குத் தெரியாது.

தெரிந்திருந்தால் பிறையை
அவன் முழுமையாய்
ரசித்திருப்பான்.

வயிற்றுக்குள் ஆமையை
நிரப்பிக்கொண்ட ஆனந்தக்
களிப்பில் - ஒரு மயக்க
போதை போன்ற பாதி
உறக்கத்தில் தளத்தில் அவர்கள்
சுதந்திரமாய்ச் சிதறி,
உருண்டும் நெளிந்தும் புரண்டும்
கொண்டிருந்தபொழுதில்
தூரத்தில் தெரிந்தது ஓர் ஒளி
ஊர்வலம்.

தன் உள்ளங்கைகளால் கண்களை
உரக்கத் தேய்த்துக்கொண்டு
மீண்டும் மீண்டும் பார்த்தான்
பாண்டி.

தன்னை மறந்து கத்தினான்.
கப்பல். கப்பல்.

தீப்பிடித்த வீடாய் அந்த
ஒரே சத்தத்தில்
விழித்துக்கொண்டது படகு.

கப்பல்தான். அது
கப்பல்தான். மென்மையாய்
மிதந்துபோகும் ஒரு
வெளிச்சத்தீவு.

அவர்கள் காத்துக்கிடந்த
நம்பிக்கை அதோ
கண்படுதூரத்தில்.

அதோ. அவர்களை உரசாமல்
போகிறது அவர்களின்
ஒளிமயமான எதிர்காலம்.

எப்படி அதை எட்டுவது?

ஒன்று - கப்பலை, அவர்கள்
சென்றுசேர வேண்டும்.
அல்லது -
கப்பல் அவர்களிடம்
வரவேண்டும்.

கப்பலை அவர்கள் சென்று
அடைய முடியாது.

அவர்களின் இருப்பையோ
கப்பல் அறியாது.

அது கெட்டிச்சாயம்
போட்டுக்கொண்ட ராத்திரி.

அவர்களின் இருப்பை
அவர்கள்தான் அறிவிக்க
வேண்டும்.

அவர்களாய் அறிவிப்பதற்கு
இரண்டே வழிகள்.

ஒன்று - ஒலி.
இன்னொன்று - ஒளி.

கப்பல் செல்வதோ ஒலி
எட்டாத தூரம்.
அப்படியே உயிரைத் திரட்டி
ஒலி செய்தாலும் கப்பலின்
எந்திர ஓசைகிழித்து அவர்களை
எட்டுமோ? எட்டாதோ?

அடுத்துள்ள ஒரே வழி - ஒளி.

வெளிச்சம் காட்டுவோம்-
அவர்கள் வேகமான,
விவேகமான முடிவுக்கு
வந்தார்கள்.

படகின் மின்கலம் சில
நாட்களுக்கு முன்பே
செத்துவிட்டது.

ஒரு தீப்பந்தம்
தயாரிக்கலாம் அவசரத்
தீர்மானம் நிறைவேறியது.

அடுத்த விநாடியே
பாய்மரக்கழி ஒன்று
உருவப்பட்டது.

துணி. துணி.

பாய்மரம் பிரிக்கப்பட்டது.

துண்டுகள் - துணிகள் -
லுங்கிகள்
கழியில் சுற்றப்பட்டன.

சற்று நேரத்தில் கழிக்குத்
தலை முளைத்தது.

சரி... சரி.
கொளுத்து.

இரு... இரு. டீசலில்
நனை.

நனைத்தார்கள்.

கொளுத்து.

நிறுத்து.

ஏன் தடுக்கிறாய்?

ஒருவேளை பந்தம்
பற்றாமல் போனால்..?

முதலில் அடுப்பைப்
பற்றவைப்போம். அதிலிருந்து
நெருப்பெடுப்போம்.

அதுதான் சரி.

அவசரமாய் அடுப்படியில்
கூடினார்கள்.

தீப்பெட்டி திறந்தார்கள்.
உள்ளே-
இரண்டே குச்சிகள் இருந்தன.

ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.

சுற்றி அடிக்கும் காற்று
சுழற்றியது படகை.

தீக்குச்சிகளின் இரண்டு
நுனிகளிலும் அவர்களின்
எதிர்காலம்
திரண்டிருந்தது

ஏ தீக்குச்சிகளே. எங்கள் எதிர்காலத்தின்
மந்திரக்கோல்களே. கைகூப்புகிறோம்
உங்களை, கைவிட்டு விடாதீர்கள்.

நெருப்பை ஒரு சின்னக்குச்சியின் உச்சியில்
சேமித்து வைத்தவனே. உனக்கு எங்கள்
நன்றி.

இந்த நெருப்பை அடைவதற்கு எமக்கு
முன்னிருந்த மனிதஜாதி என்னென்ன
பாடுபட்டிருக்கும்?

ஒரு முங்கில்காடு பற்றுகிறவரைக்கும்
நெருப்புக்குக் காத்திருந்த
ஆதிமனிதர்களைப் போல் -சிக்கிமுக்கிக்
கல்லுக்குள்ளும் தீக்கடைகோலுக்குள்ளும்
நெருப்பைப் பிரசிவிக்கப் பாடுபட்ட
மனிதர்களைப் போல் - உரசியும் - தேய்த்தும்
-கடைந்தும் - குடைந்தும் தீயைத்தேடி
அடைந்த மனிதர்களைப்போல் - இதோ
நாங்களும் எங்கள் உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு, எங்கள் ஜீவநெருப்பின்
ஜனனத்துக்குக் காத்திருக்கிறோம்.

தீக்குச்சியே பற்றிக்கொள்.
காற்றே அணைத்துவிடாதே.
தீப்பந்தமே எரி.
கப்பலே நில்.

பாண்டி முதல் குச்சியை எடுத்தான்,
அவனுக்குக் கை நடுங்கியது.
எல்லோரும் வட்டமாய் நின்று காற்றை
மறைத்து வீடு கட்டினார்கள்.

கப்பல் கடந்துவிடப்போகிறது..
உரசு பாண்டி. உரசு.

மென்மையாய் உரசினான்.

அது பற்றவில்லை.

சற்றே அழுத்தினான், ஒரு பாதி மருந்து
உராய்ந்து தேய்ந்தது,

மறுபக்கம் உரசினான்,

அவ்வளவுதான், அது சிரச்சேதமானது.
எல்லோரும் பதறினார்கள்.
இன்னும் ஒரே ஒரு குச்சி..
அவர்களின் உயிர்க்குச்சி.

ஒதுங்கு. என்னிடம் கொடு
தீப்பெட்டியைப் பரதன் வாங்கினான்.

அம்பின் நுனியில் மனம் குவிக்கும் ஒரு
வில்வீரனைப்போல முழு கவனத்தோடு
முனைந்தான்.

தன் உள்ளங்கை உஷணத்தைப்
பட்டைக்கும் தீக்குச்சிக்கும் பரிமாறித்
தீப்பெட்டியை இடக்கையில் இறுக்கிப் பற்றி,
வலக்கையில் தீக்குச்சி ஏந்தித் தன் ஒரு
விரலால் அதற்குப் பக்கபலம் சேர்த்துத்
தன் உள்ளத்தையெல்லாம் தீக்குச்சியில்
வைத்து உரசியபோது முன்றாவது உரசலில்
பொசுக்கென்று பூத்தது நெருப்பு.

ஆகா. உயிரின் ஒளிவடிவம்.

அந்தப் பரவசத்தோடு அதை அடுப்புத்
திரியில் பற்றவைக்கப் போன அந்த
விநாடியின் இரண்டாம் பாகத்தில், சந்துவழி
வந்த சுழற்காற்று அந்த உயிரின் சுடரைப்
பொசுக்கென்று அணைத்துவிட்டுப்
போய்விட்டது.

ஆ. அய்யோ. அய்யய்யோ.

எல்லோரும் பரபரவென்று ஒடிவந்து
விளிம்பில் நின்று பார்த்தபோது கப்பல்
கடந்துவிட்டது.

அவர்கள் நம்பிக்கையின் இறுதி
ஊர்வலமாய் அது தூரத்தில்
மறைந்துகொண்டிருந்தது.
---------------------------------------------------------------------
18

ஏ பகலே.
நாங்கள் என்ன தவறு
செய்தோம்?
பூமிக்கே வெளிச்சம்
கொண்டுவரும் நீ,
எங்களை மட்டும்
ஏன் விட்டுவிட்டு விடிகிறாய்?

எங்கள் ஒவ்வொரு
நம்பிக்கையையும் நீரில்
விழுந்த நிலவின் பிம்பமாய்க்
காட்டுவதுபோல் காட்டி
ஏன் கலைத்துவிடுகிற