கல்கி - பார்த்திபன் கனவு
பாகம் 3 (அத்தியாயங்கள்
11-20)
kalkiyin pArttipan kanvu - part-3
Acknowledgements:
Our Sincere thanks go to tiru Bhaskaran
Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet
Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's
Works and for the help to publish them in PM with conversion to
TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms.
Gracy & Ms Parimala of Anna Univ.-MIT Campus.
Web Version and TSC proof reading : tiru N D LogaSundaram, selvi L
Selvanayagi Chennai;
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
© Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை அத்தியாயங்கள்
3.011 பழகிய குரல்
3.012 சூரிய கிரகணம் 3.013 கபால பைரவர்
3.014 காளியின் தாகம் 3.015 திரும்பிய குதிரை
3.016 ஆற்றங் கரையில் 3.017 தீனக்குரல்
3.018 பராந்தக புரத்தில் 3.019 பொன்னனின் சிந்தனைகள்
3.020 பொன்னனும் சிவனடியாரும்
அத்தியாயம் பதினொன்று பழகிய குரல்
குதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு
முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று
வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக்
கடித்துக் கொண்டு விக்கிரமன் தன்னுடைய பூரண பலத்துடன் சமாளித்துத் தண்ணீர்
மட்டத்துக்கு வந்தான். பின்னர், வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத்
தொடங்கினான். சட்டென்று குதிரையின் ஞாபகம் வந்தது. "ஐயோ! அது வெள்ளத்தில்
போயிருக்குமே?" என்ற எண்ணத்தினால் அவன் திடுக்கிட்டான். திரும்பிப்
பார்த்தபோது, வெகு தூரத்தில் தான் ஆற்றில் இறங்கிய இடத்துக்கருகில் குதிரை
வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். "நல்ல வேளை! குதிரையாவது
பிழைத்ததே!" என்று அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஏனெனில், தான்
தப்பிக் கரையேறலாம் என்ற ஆசை அவனுக்கு வரவரக் குறைந்து வந்தது. அக்கரையை
நெருங்க நெருங்க, வெள்ளத்தின் வேகம் அபரிமிதமாயிற்று. யானைகளையும்
குன்றுகளையும் கூடப் புரட்டித் தள்ளிவிடக்கூடிய வேகத்துடனும் 'ஓ' வென்ற
இரைச்சலுடனும் அந்த வெள்ளம் அலைமோதிக் கொண்டு வந்தது. விக்கிரமனுடைய கைகள்
களைப்படையத் தொடங்கின. நீந்திக் கரை ஏறுவது அசாத்தியம் என்றே விக்கிரமன் முடிவு
செய்துவிட்டான். ஆகா! விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம்
பகற் கனவு கண்டோம்! ஆகாசக் கோட்டைகள் கட்டினோம்? எல்லாம் இப்படியா முடியவேணும்!
தந்தை பார்த்திப மகாராஜா கண்ட கனவைப் போலவே தன்னுடைய கனவும் முடிந்துவிட்டதே!
அவராவது போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். தான் ஆற்று வெள்ளத்தில் அகால
மரணமல்லவா அடைய வேண்டியிருக்கிறது! இதற்காகவா இவ்வளவு அவசரமாகத்
தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம்? ஐயோ? அம்மாவைப் பார்க்காமலேயல்லவா
போகிறோம்! ஒரு தடவையாவது அவளைப் பார்த்து, "அம்மா! தகப்பனாருக்கு நான் கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர
இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்" என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே! -
அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா!
திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து,
அவள் யாராயிருந்தாலும் சரிதான், "என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச்
சம்மதமா!" என்று கேட்க எண்ணியிருந்தோமே? அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக்
கொண்டிருப்பாளோ? அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள்? - ஆகா, கம்பீரத்
தோற்றமுள்ள அந்த ஒற்றர் தலைவனை மறுபடியும் பார்த்து, அவனிடம் குதிரையை
ஒப்புவிக்காமல் அல்லவா போகிறோம்?
விக்கிரமனுடைய கைகள் அடியோடு களைத்துவிட்டன. அவனுடைய உடம்பு இரும்பினால்
ஆனதுபோல் கனத்தது. முடியாது, இனி ஒரு கணமும் முடியாது... அதோ வெள்ளத்தில்
உருண்டு புரண்டு கறுப்பாய் வருகிறதே, அது என்ன? பெரிய மரம் ஒன்றை வெள்ளம்
அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை! அதைப் பிடித்துக் கொள்ளலாம்... ஐயோ!
மரம் அதோ போய் விட்டதே! இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை....
விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத்
திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது! இளம் பிராயத்தில் காவேரியில்
நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும்
தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து
காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா?... இது என்ன
பைத்தியக்கார எண்ணம்? ஒரு வேளை பொன்னன்தானோ?.... இது என்ன வீண் பிரமை?...
அம்மா! அம்மா!..." விக்கிரமனை ஒரு பெரிய அலை மோதிற்று; அவன் நீரில் அமிழ்ந்து
நினைவிழந்தான்.
விக்கிரமனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்து கொண்டிருந்தது. எங்கேயோ
வெகு தூரத்திலிருந்து, பாதாள உலகத்திலிருந்து வருவது போல், - "மகாராஜா" என்ற
மெல்லிய குரல் கேட்டது. இது யாருடைய குரல்? கேட்டுப் பழகிய குரல் மாதிரி
இருக்கிறதே! ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா?
கனவில்லையா! பிரமையில்லையா! கடைசியாக, காட்டாற்று வெள்ளத்தில் தான்
இறங்கியதும், நீந்திக் கை களைத்து நீரில் மூழ்கியதும் விக்கிரமனுக்கு நினைவு
வந்தன. ஒரு வேளை இது மரணத்திற்குப் பிறகு மறு உலகத்தில் கேட்கும் குரலோ?-
இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம்
செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது! மழையில் நனைந்து
வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக்
கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து
கொண்டிருந்தது. "பொன்னா! நீ தானா? இதெல்லாம் நிஜமா? அல்லது கனவா?" என்றான்
விக்கிரமன். "மகாராஜா! நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா?
அல்லது? அல்லது இது கனவா? பிரமையா? நிஜமாக விக்கிரம மகாராஜாவையா நான்
வெள்ளத்திலிருந்து கரையேற்றினேன்... உயிர் பிழைத்துக் கண் விழித்து என்னுடன்
பேசுவது நீங்கள்தானா?- ஒன்றுமே நம்ப முடியவில்லையே! - ஆகா! வள்ளி மட்டும் இங்கே
இச்சமயம் இருந்தாளானால்..."
ஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான்.
அவனுடைய மடியின் மீது விக்கிரமனுடைய தலை இருந்தது. மழை நின்று சிறு தூறல்
போட்டுக் கொண்டிருந்தது. குளிர்ந்த வாடை வீசிற்று. இரவு சமீபித்துக்
கொண்டிருந்தபடியால் நாலாபுறமும் இருள் அடர்ந்து வந்தது. விக்கிரமன் சட்டென்று
எழுந்து உட்கார்ந்தான். "பொன்னா! நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக்
கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா?
கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக்
கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில்
எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய்? அது எனக்கு
நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே
ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது-
இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே
இருந்துவிட்டாயே! என்ன அற்புதம் - அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு
வந்து சேர்ந்தாய்?" என்றான்.
"எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாயிருக்கிறது மகாராஜா....!" அதோ பாருங்கள்,
அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு
மண்டபம் காணப்பட்டது. "பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில்
ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப்
பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது
தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக்
கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது
நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில்
குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு
வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில்
குதித்தேன். மகாராஜா! அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- 'இந்தப் பெரும்
வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது?" என்று கொஞ்சம் யோசனை
உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன்.
அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ!" என்று பொன்னன் கண்களை மூடிக்
கொண்டான். அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று.
"பொன்னா! அதை ஏன் இப்போது நினைக்கிறாய்? நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான்
அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்... இல்லை! இல்லை!
காலஞ்சென்ற பார்த்திப மகாராஜாதான் தோன்றாத் துணையாயிருந்து ஆபத்து வரும்
சமயங்களிலெல்லாம் என்னைக் காப்பாற்றி வருகிறார்... இருக்கட்டும், பொன்னா! என்ன
வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன்! - மகாராணி சௌக்கியமா?" என்று ஆவலுடன்
கேட்டான் விக்கிரமன். மகாராணி என்றதும் பொன்னன் திடீரென்று கண்ணைக் கைகளால்
பொத்திக் கொண்டு விம்மத் தொடங்கினான். இதை பார்த்ததும் விக்கிரமனுக்கு ஏற்பட்ட
நெஞ்சத் துடிப்பை விவரிப்பது இயலாத காரியம். "ஐயோ, பொன்னா! என்ன விபத்து
நேர்ந்துவிட்டது? மகாராணி இறந்துவிட்டாரா" என்று பதைபதைப்புடன் கேட்டான்.
அப்போது பொன்னன், "இல்லை மகாராஜா இல்லை. மகாராணி எங்கேயோ உயிரோடுதான்
இருக்கிறார். ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை...." என்றான்.
விக்கிரமனுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது! "அதெப்படி! பொன்னா! உன்னிடந்தானே நான்
மகாராணியை ஒப்புவித்துவிட்டுப் போனேன்? நீ எப்படி அஜாக்கிரதையாயிருந்தாய்?..."
"மகாராஜா! எல்லாம் விவரமாய்ச் சொல்ல வேண்டும். மறுபடியும் மழை வலுக்கும்
போலிருக்கிறது. தாங்கள், ஏற்கெனவே நனைந்திருக்கிறீர்கள். குளிர் காற்றும்
அடிக்கிறது! அதோ அந்த மண்டபத்துக்குப் போகலாம் வாருங்கள். எவ்வளவோ சொல்ல
வேண்டும்; எவ்வளவோ கேட்கவேண்டும். இரவும் நெருங்கி விட்டது." இருவரும்
எழுந்திருந்து மண்டபத்தை நோக்கிப் போனார்கள்.
அத்தியாயம் பன்னிரண்டு சூரிய கிரகணம்
விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி
ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை
அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய
கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற பெயர்
வழங்கி வந்தது. மண்டபத்துக்கு வெளிப்புறம் இருந்த திண்ணையில் விக்கிரமனை
இருக்கச் செய்து, பொன்னன் உள்ளே சென்று தான் அங்கு வைத்திருந்த உலர்ந்த துணிகளை
எடுத்து வந்தான். விக்கிரமன் அவற்றை உடுத்திக் கொண்டான். அந்த மழைக்கால
இருட்டில் இனி வழி நடப்பது அசாத்தியமாதலால், அன்றிரவை அந்த மண்டபத்திலேயே
கழிப்பது என்று இருவரும் சேர்ந்து தீர்மானித்தார்கள்.
பிறகு, பொன்னன் அருள்மொழி ராணியைப் பற்றிய பின்வரும் அதிசயமான வரலாற்றைக்
கூறினான்:- விக்கிரமன் தேசப் பிரஷ்ட தண்டனைக்கு உள்ளாகிக் கப்பல் ஏறிச் சென்ற
பிறகு, அருள்மொழி ராணிக்கு உயிர் வாழ்க்கை பெரும்பாரமாயிருந்தது. மீண்டும் தன்
புதல்வனை ஒரு முறை காணலாம் என்ற ஆசையினாலும் நம்பிக்கையினாலுமே உயிரைச் சுமந்து
கொண்டிருந்தாள். ஆனாலும், முன்னர் கணவனுடனும் பிறகு புதல்வனுடனும் வசித்திருந்த
வசந்த மாளிகையில் தன்னந்தனியாக வசிப்பது அவளுக்கு நரக வேதனையாயிருந்தது.
இச்சமயத்தில்தான், பார்த்திப மகாராஜாவின் தோழரும் பழைய பல்லவ சேனாதிபதியுமான
பரஞ்சோதி அடிகள் தமது தர்ம பத்தினியுடன் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு
உறையூருக்கு வந்தார். அவர்கள் வசந்த மாளிகைக்கு வந்து அருள்மொழி ராணியைப்
பார்த்துத் தேறுதல் கூறினார்கள். அருள்மொழி, அவர்களுடன் தானும் ஸ்தல யாத்திரை
வருவதாகச் சொல்லவே, அவளையும் அழைத்துக் கொண்டு பிரயாணம் கிளம்பினார்கள். காஞ்சி
நகர் ஒன்று நீங்கலாகத் தமிழகத்திலுள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்ழூகெல்லாம்
அவர்கள் சென்றார்கள். இரண்டு வருஷகாலம் இவ்விதம் யாத்திரை செய்த பிறகு சென்ற
வருஷம் தை மாதத்து அமாவாசையில் காவேரி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் பொருட்டு
அவர்கள் பரஞ்சோதி அடிகளின் சொந்த ஊராகிய திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து
சேர்ந்தார்கள்.
சென்ற வருஷம் தை அமாவாசையில் மகோதய புண்ணிய காலம் சேர்ந்தது. அதனுடன் அன்று
சூரிய கிரகணம் - சம்பூர்ண கிரகணம் - பிடிப்பதாயுமிருந்தது. இந்த விசேஷ புண்ணிய
தினத்தை முன்னிட்டு அன்று காவேரி சங்கமத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதற்காக
நாடெங்கும் இருந்து ஜனங்கள் திரள் திரளாக வந்தார்கள். பொன்னனும் வள்ளியுங்கூட
உறையூரிலிருந்து நெடுநாள் பிரயாணம் செய்து காவேரி சங்கமத்துக்கு வந்து
சேர்ந்தனர். உறையூர் வாழ்க்கை அவர்களுக்கும் பிடிக்காமற் போயிருந்தபடியாலும்,
அருள்மொழி ராணியை ஒரு வேளை சந்திக்கலாம் என்ற ஆசையினாலுந்தான் அவர்கள்
வந்தார்கள். அவர்களுடைய ஆசையும் நிறைவேறியது. திருச்செங்காட்டாங்குடியிலேயே
அருள்மொழித்தேவியை அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். புண்ணிய தினத்தன்று
காலையில் பரஞ்சோதி அடிகள், அவர்களுடைய பத்தினி திருவெண்காட்டு நங்கை, அருள்மொழி
ராணி, பொன்னன், வள்ளி எல்லாருமாக காவேரி சங்கமத்துக்குக் கிளம்பினார்கள்.
சங்கமத்தில் அன்று கற்பனைக்கடங்காத ஜனத்திரள் கூடியிருந்தது. உலகத்திலுள்ள
மக்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றிற்று. ஜன சமுத்திரத்தைக்
கண்ட உற்சாகத்தினால் ஜல சமுத்திரமும் பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
சமுத்திரம் பொங்கிக் காவிரிப்பூம்பட்டினத்தைக் கொள்ளை கொண்ட காலத்துக்குப்
பிறகு, காவேரி நதியானது மணலைக் கொண்டு வந்து தள்ளித் தள்ளிச் சமுத்திரத்தை
அங்கே வெகு தூரத்துக்கு ஆழமில்லாமல் செய்திருந்தது. இதனால் சமுத்திரத்தில் வெகு
தூரம் விஸ்தாரமாக ஜனங்கள் பரவி நின்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள்.
அலைகள் வரும்போது ஜலத்தில் முழுகியும், அலைகள் தாண்டியவுடன் மேலே கிளம்பியும்,
இவ்வாறு அநேகர் சமுத்திர ஸ்நானத்தின் குதூகலத்தை அநுபவித்துக் கொண்டே
புண்ணியமும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட ஜனக் கூட்டத்தின்
மத்தியில் பரஞ்சோதி அடிகள், அருள்மொழி ராணி ஆகியவர்களும் ஸ்நானம் செய்வதற்காகச்
சமுத்திரத்தில் இறங்கிச் சென்றார்கள்.
இப்போது சூரிய கிரகணம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிக வேகமாகச் சூரியனுடைய
ஒளி குறைந்து கொண்டு வந்தது. கிரகணம் முற்ற முற்ற வெளிச்சம் குன்றி வந்ததுடன்,
சமுத்திரத்தின் கொந்தளிப்பும் கோஷமும் அதிகமாகி வந்தன. பட்டப் பகலில்,
மேகமில்லாத துல்லிய ஆகாயத்தில் திடீரென்று சூரிய ஒளி குன்றி இருள் சூழ்ந்து
வந்த காட்சியினால் சகலமான ஜனங்களும் மனத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித
அச்சம் உண்டாயிற்று. அப்போது இயற்கையிலேயே தெய்வ பக்தியுள்ளவர்கள் அண்ட
சராசரங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனுடைய லீலா
விபூதிகளையெண்ணிப் பரவசம் அடைந்தார்கள். பரஞ்சோதி அடிகள் அத்தகைய நிலையைத்தான்
அடைந்திருந்தார். ராணி அருள்மொழித் தேவியும் கண்களை மூடிக் கொண்டு கிழக்குத்
திசையை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்தாள்.
வள்ளி சமுத்திரத்தையே அன்று வரையில் பார்த்தவள் இல்லை. ஆகையால் அவள் நெஞ்சு
திக்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. அவளை அலை அடித்துக் கொண்டு போகா
வண்ணம் பொன்னன் அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். வள்ளி
பொன்னனிடம், "எனக்குப் பயமாயிருக்கிறதே! கரைக்குப் போகலாமே!" என்றாள்.
"இவ்வளவுதானா உன் தைரியம்?" என்று பொன்னன் அவளிடம் சொல்லிக்
கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த அதிசயமான துயரச் சம்பவம்- யாரும்
எதிர்பாராத காரியம் நடந்து விட்டது. ராணி அருள்மொழி மூடியிருந்த கண்களைத்
திறந்தாள். 'குழந்தாய், விக்கிரமா! இதோ வந்து விட்டேன்!" என்று கூவினாள்.
ராணியின் அந்த அலறும் குரல் ஒலி, அலைகளின் பேரிரைச்சலையெல்லாம் அடக்கிக்கொண்டு
மேலெழுந்து பொன்னன், வள்ளி இவர்களின் செவியில் விழுந்தது. அந்த அலறல் ஒலி
கேட்டது ஒரு கணம்; மறுகணத்தில் அருள்மொழி ராணி கிழக்கு நோக்கிக் கடலிலே
பாய்ந்தாள். ஒரு பேரலை வந்து மோதி அவளை மூழ்கடித்தது.
பொன்னனும், வள்ளியும் 'ஓ'வென்று கதறினார்கள். தியானத்திலிருந்து கண் விழித்த
பரஞ்சோதி அடிகள், "என்ன? என்ன?" என்றார். பொன்னன், "ஐயோ! மகாராணி அலையில்
போய்விட்டாரே!" என்று அலறினான். உடனே, பரஞ்சோதி அடிகள் தமது பத்தினியையும்
வள்ளியையும் நோக்கி, "நீங்கள் உடனே கரை ஏறிவிடுங்கள்!" என்றார். அச்சமயத்தில்
சூரிய கிரகணம் சம்பூரணம் ஆயிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன.
இருட்டினால் கலவரமடைந்த ஜனங்களின் மத்தியில் "அப்பா!" "அம்மா!" "மகனே!" என்ற
கூக்குரல்கள் கிளம்பின. பக்தர்களுடைய பரவசக் குரலில், "ஹரஹர" "சம்போ" என்னும்
கோஷங்களும் எழுந்தன. அந்தக் கிரகண அந்தகாரத்தில் கடல் அலைகளுடன் போராடிக்
கொண்டு பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியைத் தேடத் தொடங்கினார்கள்.
அத்தியாயம் பதிமூன்று கபால பைரவர்
அருள்மொழித்தேவி "குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!" என்று அலறிக்
கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய
கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால்
எங்கேயோ தான் இருக்கும் விஷயம் தன் தாயின் நினைவுக்கு வந்து அதன் பயனாகத்தான்
அப்படி அவள் வெறிகொண்டு பாய்ந்திருக்க வேண்டும் என்று விக்கிரமன் எண்ணினான்.
பொன்னன், தானும் பரஞ்சோதி அடிகளும் தேவியைத் தேடியதைப் பற்றிச் சொல்லி வந்தபோது
விக்கிரமன், "பொன்னா! சீக்கிரம் சொல்லேன்? மகாராணி அகப்பட்டாரா?" என்று
கதறினான். "இல்லையே, மகாராஜா! அகப்படத்தானே இல்லை! அப்புறம் மகாராணியைத்
தரிசிப்பதற்கு இந்தப் பாழும் கண்கள் கொடுத்து வைக்கவில்லையே!" என்று பொன்னனும்
கண்ணீர் விட்டான். "பின்னே மகாராணி உயிரோடுதான் இருக்கிறார் என்று சற்று முன்பு
சொன்னாயே? எனக்கு ஆறுதலுக்காகச் சொன்னாயா? - ஐயோ! இந்தச் செய்தியைக் கேட்கவா
நான் கப்பலேறி கடல் கடந்து வந்தேன்!" என்று விக்கிரமன் புலம்பினான். அப்போது
பொன்னன், "பொறுங்கள் மகாராஜா! குறையையும் கேளுங்கள். மகாராணி உயிரோடுதான்
இருக்கிறார்; சந்தேகமில்லை, அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கத்தான்
முயன்று கொண்டிருக்கிறேன். நீங்களும் வந்துவிட்டீர்கள், இனிமேல் என்ன கவலை?"
என்றான் பொன்னன்.
பிறகு நடந்த சம்பவங்களையும் தான் அறிந்த வரையில் விவரமாகக் கூறலுற்றான்.
அலைகளுக்கு மத்தியில் அடர்ந்த இருளில் பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி
ராணியை வெகுநேரம் தேடினார்கள். மகாராணி அகப்படவில்லை. "பொன்னா! தேவியைச்
சமுத்திரராஜன் கொண்டு போய் விட்டான்!" என்று பரஞ்சோதி அடிகள் துக்கம் ததும்பும்
குரலில் கூறினார். பொன்னன் 'ஓ' என்று அழுதான். இனிமேல் ஒருவேளை அகப்பட்டாலும்
உயிரற்ற உடல்தான் அகப்படுமென்று இரண்டு பேருடைய மனத்திலும் பட்டுவிட்டது.
உயிரற்ற உடலை அலைகளே கரையில் கொண்டு வந்து தள்ளிவிடும். இனியும் தேடுவதில் ஒரு
உபயோகமுமில்லை. இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு இரண்டு பேரும் கரை ஏறினார்கள்.
அவர்கள் கரைக்கு வந்த சமயத்தில் கிரகணம் விட ஆரம்பித்திருந்தது. கொஞ்சம்
கொஞ்சமாக அந்தகாரத்தை அகற்றிக் கொண்டு சூரியனுடைய ஒளி நாலாதிக்குகளிலும்
ஸ்தாபித்து வந்தது. மாரிக்காலத்து மாலை வேளையைப்போல் தோன்றிய அச்சமயத்தில்,
பரஞ்சோதியாரும் பொன்னனும் கரையேறியபோது அங்கே வெடவெடவென்று குளிரில் நடுங்கிக்
கொண்டு நின்ற பரஞ்சோதியாரின் பத்தினியும் வள்ளியும், "வாருங்கள்! சீக்கிரம்
வாருங்கள்!" என்று கூவினார்கள்.
அவர்கள் விரைவில் அருகில் நெருங்கியதும், யாரோ ஒரு ஒற்றைக் கை மனிதன்
அப்போதுதான் கடலிலிருந்து கரையேறியதாகவும், அவன் அந்த ஒற்றைக் கையினால் ஒரு
ஸ்திரீயைக் தூக்கிக் கொண்டு போனதாகவும், மங்கிய வெளிச்சத்தில் பார்த்தபோது,
அருள்மொழி ராணி மாதிரி இருந்ததென்றும், தாங்கள் கையைத்தட்டிக் கூச்சல் போட்டுக்
கொண்டிருக்கும்போதே அம்மனிதன் ஜனக் கூட்டத்தில் சட்டென்று மறைந்து
போய்விட்டதாகவும் சொன்னார்கள். ஒரே படபடப்புடன் பேசிய அவர்களிடமிருந்து
மேற்கண்ட விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கே சற்று நேரம் ஆகிவிட்டது. முன்னால்
அலைகடலில் அருள்மொழி ராணியைத் தேடிய பொன்னனும் பரஞ்சோதியாரும் இப்போது
மறுபடியும் ஜனசமுத்திரத்தில் ராணியைத் தேடத் தொடங்கினார்கள், இதுவும் நிஷ்பலனே
ஆயிற்று. மாநிலத்திலுள்ள மாந்தர் யாவரும் திரண்டு வந்திருந்தது போல் தோன்றிய
அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில் ஒற்றைக் கை மனிதனையும் அவர்கள் காணவில்லை! அவன்
ஒரு கையினால் தூக்கிச் சென்ற அருள் மொழி ராணியையும் காணவில்லை. எவ்வளவோ
தேடியும் அகப்படாமற் போகவே, திருவெண்காட்டு நங்கையும் வள்ளியும் பார்த்ததாகச்
சொன்னதிலேயே அவர்களுக்கு அவநம்பிக்கை உண்டாயிற்று. அது ஒரு வேளை அவர்களுடைய
பிரமையாயிருக்கலாமென்று நினைத்தார்கள். ஆனால், அம் மூதாட்டியும் வள்ளியுமோ
தாங்கள் நிச்சயமாய்ப் பார்த்ததாக ஆணையிட்டுக் கூறினார்கள்.
மற்கண்ட வரலாற்றைச் சொல்லி முடித்தபிறகு அருள்மொழி ராணி இன்னும்
உயிரோடுதானிருக்கிறார் என்று தான் நம்புவதற்குக் காரணம் என்னவென்பதையும்
பொன்னன் கூறினான். வள்ளியும் அவனும் சில தினங்கள் வரையில்
திருச்செங்காட்டாங்குடியிலிருந்து விட்டு, அருள்மொழி ராணியைப் பற்றிய
மர்மத்தைத் தெரிந்து கொள்ளாமலே திரும்பி உறையூர் சென்றார்கள். அங்கே போய்ச் சில
நாளைக்கெல்லாம் சிவனடியார் வந்து சேர்ந்தார். மகாராணியைப் பற்றிய வரலாற்றைக்
கேட்டு அவர் பெருந்துயரம் அடைந்தார். ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய விவரம்
அவருக்குப் பெரும் வியப்பையளித்தது. வள்ளியைத் திரும்பத் திரும்ப அவளுக்கு
ஞாபகம் இருக்கும் விவரத்தையெல்லாம் சொல்லும்படி கேட்டார். கடைசியில் அவர்,
"பொன்னா! வள்ளி சொல்லுவதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. ராணியை
ஒற்றைக் கை மனிதன்தான் கொண்டு போயிருக்கிறான். ராணி உயிருடன் இருக்கிறாள்
என்பதிலும் சந்தேகமில்லை. அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டியது
நம்முடைய பொறுப்பு" என்றார். பிறகு அவர், "அந்த ஒற்றைக் கை மனிதன் யார்,
தெரியுமா?" என்று கேட்டார். "தெரியாதே சுவாமி!" என்று பொன்னன் சொன்னபோது
சிவனடியார், "அவன்தான் கபாலருத்திர பைரவன், கபாலிக மதக் கூட்டத்தின்
தலைமைப்பூசாரி. தமிழகத்தில் நரபலி என்னும் பயங்கரத்தை அவன் பரப்பிக் கொண்டு
வருகிறான். அதைத் தடுப்பதற்குத்தான் நான் பிரயத்தனப்பட்டுக் கொண்டு வருகிறேன்.
எங்கேயோ ஒரு இரகசியமான இடத்தில் அவன் ரணபத்திர காளி கோயில்
கட்டியிருக்கிறானாம். அந்த இடத்தைக் கண்டு பிடித்தோமானால், அங்கே அநேகமாக நமது
ராணியைக் காணலாம்" என்றார்.
இதைக் கேட்டுப் பொன்னன் நடுநடுங்கிப் போனான். "ஐயோ! மகாராணியை ஒரு வேளை
காளிக்குப் பலி கொடுத்திருந்தால்...." என்று அலறினான். "இல்லை பொன்னா, இல்லை!
கேவலம் ஒரு பலிக்காகக் கபால பைரவன் இவ்வளவு சிரமம் உள்ள ஒரு காரியத்தில்
தலையிட்டிருக்க மாட்டான். வேறு ஏதோ முக்கிய அந்தரங்க நோக்கம் இருக்கிறது.
ஆகையால், ராணியை உயிரோடு பத்திரமாய் வைத்திருப்பான். ரணபத்திர காளி கோயில்
இருக்குமிடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்' என்றார் சிவனடியார். இதன்மேல்
பல்லவ, சோழநாடுகளைப் பொன்னனும் சிவனடியாரும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்
கொண்டு, ஒவ்வொரு பகுதியை ஒவ்வொருவர் தேடுவது என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
பொன்னன் வள்ளியைத் தன்னுடைய அத்தை வீட்டில் விட்டுவிட்டு, சோழநாடு முழுவதும்
தேடி அலைந்தான். பிறகு, காவேரியின் அக்கரைக்கு வந்து தேடத் தொடங்கினான்.
மாதக் கணக்காகத் தேடி அலைந்ததற்குக் கடைசியாக நாலு நாளைக்கு முன்புதான் பலன்
கிடைத்தது. அந்தக் காட்டாற்றின் கரையோடு பொன்னன் மேற்கே மூன்று, நாலு காத தூரம்
போன பிறகு ஒரு பெரிய மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த மலை
அடிவாரத்தில் வெகுதூரம் அடர்த்தியான காடு சூழ்ந்திருந்தது. அவன் வழி பிடித்துக்
கொண்டு வந்த காட்டாறானது அந்த மலை உச்சியிலிருந்துதான் புறப்பட்டிருக்க
வேண்டுமென்றும், அந்த மலை கொல்லி மலையின் ஒரு பகுதியாயிருக்கலாமென்றும் பொன்னன்
ஊகித்தான். அந்த வனப்பிரதேசத்தைப் பார்த்தவுடனேயே, இதற்குள் எங்கேயாவது
ரணபத்திர காளியின் கோயில் இருக்க வேண்டுமென்று பொன்னனுக்குத் தோன்றியது. அந்த
மலைக்கு உட்புறத்தில் காட்டுமிராண்டி ஜனங்கள் வசிப்பதாகப் பொன்னன்
கேள்விப்பட்டிருந்தான். அவர்கள் சில சமயம் மலைக்கு வெளியில் வந்து நரபலி
கொடுப்பதற்காக மனிதர்களைக் கொண்டு போவதுண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தான்.
ஆகவே, பொன்னன் அந்த வனப் பிரதேசத்தில் நாலாபுறத்திலும் தேடி அலைய ஆரம்பித்தான்.
ஆனால், எந்தப் பக்கத்திலும் அதிக தூரம் காட்டுக்குள் புகுந்து போ |