தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > பார்த்திபன் கனவு - பாகம் - 1 (அத்தியாயங்கள் 10)பார்த்திபன் கனவு - பாகம் - 2 (அத்தியாயங்கள் 27) > பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 1-10) >  பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 11-20) > பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 21-40)


கல்கி - பார்த்திபன் கனவு
 பாகம் 3 (அத்தியாயங்கள் 1-10)
kalkiyin pArttipan kanvu - part-3a
Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM with conversion to TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala of Anna Univ.-MIT Campus. Web Version and TSC proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai; PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

 © Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.   


உள்ளுறை அத்தியாயங்கள்

3.001 இரத்தின வியாபாரி 
3.002 சந்திப்பு 
3.003 மாரப்பன் புன்னகை 
3.004 வழிப்பறி 
3.005 ஒற்றர் தலைவன் 
3.006 சிற்பியின் வீடு 
3.007 சிதறிய இரத்தினங்கள் 
3.008 வேஷதாரி 
3.009 விபத்தின் காரணம் 
3.010 காட்டாற்று வெள்ளம் 
 



அத்தியாயம் ஒன்று
இரத்தின வியாபாரி

அமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் வெள்ளைப் பாய் விரித்த கப்பல் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரியன் உதயமாகும் நேரம். அவனுடைய தேஜோ மயமான வரவை எதிர்பார்த்துக் கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள். கப்பலில் இருந்தவர்களிடையே பரபரப்பு அதிகமாய்க் காணப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகக் காணப்பட்டார்கள். எல்லாரும் அவரவர்களுடைய மூட்டைகளை எடுத்து வைத்து, கப்பலிலிருந்து இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந் தார்கள். சிலர் கப்பல் மேல் தளத்தின் ஓரமாக வந்து, மேற்குத் திசையை ஆவலுடன் நோக்கினார்கள்.

இப்படி மேற்குத் திக்கை நோக்கி நின்றவர்களில் வாலிப வர்த்தகன் ஒருவன் காணப்பட்டான். பிராயம் இருபது, இருபத்தொன்று இருக்கலாம். அவனுடைய உடையிலிருந்தும் அவன் பக்கத்தில் கிடந்த மூட்டையிலிருந்தும் தான் அவனை வியாபாரி என்று சொல்லலாமே தவிர, மற்றபடி தோற்றத்தை மட்டும் கவனித்தால் அவன் இராஜ குலத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்படியிருந்தது. அவன் வியாபாரியாயிருக்கும் பட்சத்தில், சாதாரண வியாபாரியாயிருக்க முடியாது; பெருஞ் செல்வனான இரத்தின வியாபாரியாகத் தான் இருக்க வேண்டும். கப்பலி லிருந்த மற்றவர்கள் அடிக்கடி அந்த இளம் வர்த்தகன் நிற்கும் இடத்தை நோக்கினார்கள். அப்போது அவர்களுடைய கண்களில் பயபக்தி காணப்பட்டது; சிறிது கவலையும் தோன்றியது.

அந்த வாலிப வர்த்தகனோ மற்றவர்களை யெல்லாம் சிறிதும் கவனிக்கவில்லை. கண்கொட்டாமல் மேற்குத் திக்கையே நோக்கிக் கொண்டு நின்றான். அவனுடைய முகத்திலேதான் எத்தனை ஆவல்? எவ்வளவு கிளர்ச்சி? அவ்வளவு ஆவலுக்கும் கிளர்ச்சிக்கும் என்னதான் காரணமாயிருக்கும்? நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன்? ஜன்ம பூமியின் தோற்றம் எப்போது கண்ணுக்குப் புலனாகும் என்றுதான் இவ்வளவு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறானோ? "ஆமாம்; அதுதான் உண்மை யாயிருக்க வேண்டும். ஏனென்றால், அதோ கொஞ்ச தூரத்தில் கருநிறமாக வரம்புபோல் காணப்படும் பூமியைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்வதைக் காண்கிறோம். சூரியனைக் கண்ட தாமரை இப்படித்தான் மலரும் போலும்! சற்று நேரம் அப்படியே அசைவின்றி நிற்கிறான் அந்த வாலிப வியாபாரி. ஆரம்பத்தில் வெறும் வரம்பாக மட்டும் தோன்றிய காட்சியானது வரவர மரங்கள், குன்றுகள், கோவில் கோபுரங்களாக மாறிவரும்போது, அவனுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்குவதை முகம் காட்டுகிறது. இதற்கிடையில் கிழக்கே சூரியனும் ஜகஜ்ஜோதியாக உதயமாகித் தன் வன யாத்திரையைத் தொடங்கினான்.

கரையையே பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று திரும்பி நோக்கினான். கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலோர் அச்சமயம் அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்களாதலால், அவன் சமிக்ஞை செய்ததும் உடனே நெருங்கி அவனருகில் வந்து பயபக்தியுடன் நின்றார்கள். "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா?" என்று வாலிபன் கேட்டான். "இருக்கிறது மகா...!" என்று சொல்லத் தொடங்கிய ஒருவன், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான். "பார்த்தீர்களா? இதுதானா நீங்கள் என் கட்டளையை நிறைவேற்றுகிற லட்சணம்?" என்று வாலிபன் கோபமாய்க் கேட்டான். "மன்னிக்க வேண்டும், சுவாமி!" "என்னுடைய கட்டளையைச் சத்தியமாய் நிறைவேற்றுவீர்களா?" "நிறைவேற்றுவோம். சுவாமி!" "தாய் நாட்டில் இருக்கும்போது என்னை நீங்கள் சந்திக்க முயலவே கூடாது, தெரியுமா?" "தெரியும் சுவாமி!" "ஒருவேளை தற்செயலாய்ச் சந்தித்தால் என்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது." "சித்தப்படி நடக்கிறோம்." "அடுத்த அமாவாசையன்று எல்லாரும் இந்தத் துறைமுகத்திற்கு வந்துவிடவேண்டும்." "வந்துவிடுகிறோம்!" "அன்று நான் எக்காரணத்தினாலாவது கப்பலுக்கு வந்து சேராவிட்டால் என்னைப் பற்றி எவ்விதம் விசாரிப்பீர்கள்?" "இரத்தின வியாபாரி தேவசேனர் என்று விசாரிக்கிறோம்."

"இதிலெல்லாம் கொஞ்சங்கூடத் தவறக்கூடாது." "இல்லை, சுவாமி!" மேற்படி வாலிப இரத்தின வியாபாரி உண்மையில் யார் என்பதை நேயர்கள் இதற்குள்ளாக ஊகித்துக் கொண்டிருக்கலாம். ஆம்; பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வனும், தற்போது செண்பகத் தீவின் அரசனுமான விக்கிரமன் தான் அவன். சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருஷத்தில் விக்கிரமனுடைய ஆட்சியில் செண்பகத் தீவு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து பேரும் புகழும் அடைந்து வந்தது. விக்கிரமனுடைய வரவுக்குப் பிறகு ஒரே தடவை செண்பகத் தீவின் மீது பகைவர் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகு செண்பகத் தீவின் மீது படையெடுக்க யாரும் துணியவில்லை. அதற்கு மாறாக, விக்கிரமனுடைய தலைமையில் செண்பகத் தீவின் படை வீரர்கள் வேறு தீவுகளின் மேல் படையெடுத்துச் சென்று அந்தத் தீவுகளிலெல்லாம் புலிக்கொடியை நாட்டி விட்டுத் திரும்பினார்கள். விக்கிரமனுடைய வீரப் பிரதாபங்களையும், மேதா விலாசத்தையும், மற்ற உயர் குணங்களையும் பற்றிய கீர்த்தியானது தூர தூரத்திலேயுள்ள தீவாந்திரங்களிலெல்லாம் பரவத் தொடங்கியது. பல தீவுகளிலுள்ள ஜனங்கள் நல்லாட்சியையும், பாதுகாப்பையும், விரும்பித் தாங்களே விக்கிரமனுடைய ஆட்சிக்குள் வந்து கொண்டிருந்தார்கள்.

இந்த மூன்று வருஷ காலத்தில் விக்கிரமன் தன்னுடைய தாயாரையாவது, தாய்நாட்டையாவது மறந்து விடவில்லை. மற்றும், பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரின் வீதியில் அவன் கண்ட இளநங்கையின் சந்திர வதனத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. செண்பகத்தீவின் பிரஜைகள் தங்களுடைய பாக்கிய வசத்தினால் கிடைத்த புதிய அரசனின் வம்சம் நீடூழி விளங்க வேண்டுமென்னும் ஆசையுடன், விக்கிரமனுடைய விவாகத்தைக் குறித்துச் சிலமுறை விக்ஞாபனம் செய்து கொண்டார்கள். மகாராஜா விடை கொடுத்தால், தாய்நாட்டுக்குச் சென்று சிறந்த அரசர் குலத்துப் பெண்ணை மணம் பேசி வருவதாகவும் சொன்னார்கள். அப்போதெல்லாம் விக்கிரமன் அவர்களுடைய விக்ஞாபனத்தை மறுதளித்து, விவாகத்தைப் பற்றிப் தன்னுடைய பரிபூரண வெறுப்பையும் தெரிவித்தான். இதற்கு அடிப்படையான காரணம், அந்தக் காஞ்சி நகர்ப் பெண்ணினுடைய கருவிழிகள் ஞாபகந்தானோ, என்னவோ, யாருக்குத் தெரியும்?

நாளாக ஆக, விக்கிரமன் செண்பகத் தீவில் தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் துணையின்றித் தனித்திருப்பதை அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது. 'நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் இருந்தால்?' - என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத வேதனையையளித்தது. அந்த வேதனை தரும் எண்ணத்தை அவனால் மறக்க முடியாமலிருந்ததோடு, அந்த வேதனையின் நடுவிலேயே ஒருவித இன்பமும் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னை அறியாமல் அடிக்கடி அவன் பெருமூச்சு விட்டான். சில சமயம் அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும்போது, அவனுடைய இருதயமானது விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் உணர்ச்சி உண்டாகும்.

வேதனையுடன் இன்பமும் கலந்து உண்டாக்கிய இந்த ஞாபகத்தை அவன் ஓரளவு மறப்பதற்கு உதவியான ஒரு சம்பவம் இரண்டு மாதத்திற்கு முன்பு நேர்ந்தது. ஒருநாள் இரவு விக்கிரமனுடைய கனவில் அருள்மொழி ராணி தோன்றினாள். மகாராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லாமல், தூயவெள்ளைக் கலையுடுத்தி விபூதி ருத்திராட்சமணிந்து அவள் சிவபக்தியில் கனிந்த சிவவிரதையாகக் காட்சி தந்தாள்! முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்கிரமனைக் கனிவு ததும்ப நோக்கி "குழந்தாய் எனக்கு விடை கொடு!" என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து "அம்மா! இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன்? அதற்குள் போக விடை கேட்கிறாயே? எங்கே போகப் போகிறாய்?" என்றான். அருள்மொழி ராணி அதற்கு விடை கூறாமல், "அப்பா குழந்தாய்! நான் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டேன். அதை நீ நிறைவேற்றித் தரவேண்டும். முக்கியமாக அதன் பொருட்டே உன்னைப் பார்க்க வந்தேன்" என்றாள்.

"என்ன வாக்குறுதி, அம்மா? யாருக்குக் கொடுத்தாய்?" "சக்கரவர்த்தியின் மகள் குந்தவியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்!" விக்கிரமன் திடுக்கிட்டு, "இது என்ன அம்மா சொல்கிறாய்? சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய்?" என்று கேட்டான். "சிவனடியாருக்கு வாக்குக் கொடுத்தேன். குழந்தாய்! இராமபிரான் தகப்பனாரின் வாக்கை நிறைவேற்றியது போல் நீ என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும்." இவ்விதம் சொல்லிவிட்டு, அருள்மொழித் தேவி விக்கிரமனுடைய அருகில் நெருங்கி அவனுடைய சிரசின் மீது கையை வைத்து ஆசீர்வதித்தாள். உடனே, விக்கிரமன் கண் விழித்து எழுந்தான். "நல்ல வேளை! இதெல்லாம் கனவாய்ப் போயிற்றே!" என்று சந்தோஷப்பட்டான். கனவில் கண்டதெல்லாம் வெறும் சித்தப்பிரமை என்பதில் ஐயமில்லை. பழைய பேச்சுகளும் நினைவுகளும் குழம்பி இப்படிக் கனவாகத் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடில் இத்தனையும் நடந்த பிறகு, "சக்கரவர்த்தி மகளைக் கல்யாணம் செய்துகொள்" என்று தாய் தனக்குக் கட்டளையிடுவாளா? இதைப் பற்றிச் சிவனடியாருக்கு அவள் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும்?

ஆனாலும் இந்தக் கனவுதான் விக்கிரமன் காஞ்சி நகர்ப் பெண்ணின் நினைவை ஒருவாறு மறப்பதற்கு உதவி செய்தது. கனவு கண்டது முதல், அவனுக்குத் தன் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மிகுந்தது. அவள் எங்கே இருக்கிறாளோ? தன்னைக் காணாமல் எவ்விதம் பரிதவிக்கிறாளோ? அன்று முதல், தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஆர்வம் விக்கிரமனுடைய உள்ளத்தில் பொங்கத் தொடங்கிற்று. போய், அன்னையை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்; தந்தை கொடுத்து விட்டுப்போன சோழர் குலத்து வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொண்டு வரலாம் - இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மந்திரி பிரதானிகளிடமும் மற்றுமுள்ள முக்கிய பிரஜைகளிடமும் தன் தீர்மானத்தைத் தெரிவித்தான். அவர்கள் எவ்வளவோ ஆட்சேபித்தும் விக்கிரமனுடைய உறுதியை மாற்ற முடியவில்லை. "ஒருவேளை திரும்பி வரும்போது உங்களுக்கு ஒரு மகாராணியை அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவேன்" என்று விக்கிரமன் விளையாட்டாகச் சொன்னது அவர்களுக்கு ஒருவாறு திருப்தி அளித்தது. ஆகவே, தாய் நாட்டுக்குப் போகச் சகல வசதிகளுடன் வர்த்தகக் கப்பல் ஒன்று சித்தமாயிற்று. அந்தக் கப்பலில் இரத்தின வியாபாரியாக வேஷம் பூண்டு விக்கிரமன் பிரயாணமானான். வர்த்தக வேஷம் தரித்த மெய்க்காவலர் சிலரும், செண்பகத் தீவின் நிஜ வியாபாரிகள் சிலரும் அவனுடன் கப்பலில் புறப்பட்டார்கள்.

தாய் நாட்டில் எந்தத் துறைமுகத்தில் இறங்குவது என்பது பற்றிக் கொஞ்சம் சர்ச்சை நடந்தது. விக்கிரமன் முக்கியமாகப் போக விரும்பிய இடம் உறையூராதலால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், விக்கிரமனோ மாமல்லபுரத்துக்கே போகவேண்டும் என்றான். அவன் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து மாமல்லபுரத்துச் சிற்ப வேலைகளைப் பற்றிக் கேட்டிருந்தான். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு நெடுநாளாக உண்டு. பல்லவ வீரர்கள் அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து மாமல்லபுரத்துக் கடற்கரையில் கப்பலேற்றியபோதே, "ஐயோ! இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே?" என்று வருந்தினான். இப்போது அங்கே இறங்கினால் அந்த ஆசை நிறைவேறுமல்லவா?

இதுவன்றி, இன்னொரு முக்கிய நோக்கமும் இருந்தது. தாய் நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளையும், சித்திரக்காரர்களையும் செண்பகத்தீவுக்கு அழைத்துப்போக அவன் விரும்பினான். நாளடைவில் செண்பகத் தீவை ஓர் அற்புத சிற்பக் கூடமாகவே செய்துவிட வேண்டுமென்பது அவன் கொண்டிருந்த மனோரதம். அத்தகைய சிற்பங்களையும் சித்திரக்காரர்களையும் மாமல்லபுரத்திலல்லாமல் வேறு எங்கே கண்டுபிடிக்க முடியும்? சோழநாடுதான் இப்போது பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே! இதையெல்லாந் தவிர, ஒருவேளை விக்கிரமன் மாமல்லபுரத்தில் இறங்க விரும்பியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். காஞ்சிநகர் வீதியிலும், பின்னர் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அவன் பார்த்த இளநங்கையை மீண்டும் ஒருகால் பார்க்கக் கூடுமோ என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் கிடந்திருக்கக்கூடும். இது விக்கிரமனுக்குக் கூடத் தெரியாமலும் இருக்கலாம். மனித உள்ளத்தின் அந்தரங்க மர்மம் அனைத்தையும் அறிந்து விட்டதாக யார் தான் சொல்ல முடியும்?




அத்தியாயம் இரண்டு
சந்திப்பு

மாமல்லபுரத்தில் கலைத் திருவிழா வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. இவ்வருஷம் சக்கரவர்த்தி திருவிழாவுக்கு விஜயம் செய்யவில்லை. சில காலமாகச் சக்கரவர்த்தி ஏதோ துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அதனால் தான் கலைவிழாவுக்கு வரவில்லையென்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், சக்கரவர்த்தி கொஞ்ச காலமாகப் பல்லவ நாட்டிலேயே இல்லையென்றும், அவருடைய குமாரன் இலங்கையிலிருந்து திரும்பிய பிறகு அவனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டு மாறுவேஷத்துடன் தேச யாத்திரை போயிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால், சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவி தேவியும் இவ்வருஷம் கலைவிழாவுக்கு விஜயம் செய்திருந்தபடியால், மாமல்லபுர வாசிகள் சிறிதளவும் உற்சாகம் குன்றாமல் விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். கலைவிழாவின் காட்சிகளையும், கற்பாறைகளில் செதுக்கிய அற்புதமான சித்திரங்களையும், ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விருந்து, நாட்டியம், கூத்து ஆகியவைகளையும் பார்த்து அனுபவித்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கிய நமது இரத்தின வியாபாரி குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தான்.

அவனுடைய முகத்தில் அபூர்வமான கிளர்ச்சி தோன்றியது; கண்களில் அளவில்லாத ஆர்வம் காணப்பட்டது. எவ்வளவுதான் பார்த்த பிறகும் கேட்ட பிறகுங்கூட அவனுடைய இருதய தாகம் தணிந்ததாகத் தெரியவில்லை. பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, அந்தத் தாகம் அடங்காமல் பெருகிக் கொண்டிருந்ததென்று தோன்றியது. அந்த அதிசயமான சிற்பக் காட்சிகளையும், உயிருள்ள ஓவியங்களையும் பார்க்கும்போது, ஊனையும் உள்ளத்தையும் உருக்கும் இசை அமுதத்தைப் பருகும் போதும் அவன் அடைந்த அனுபவம் ஆனந்தமா? அல்லது அசூயையா? அல்லது இரண்டும் கலந்த உணர்ச்சியா? இரத்தின வியாபாரிக்குப் பக்கத்தில் தலையிலும் தோளிலும் மூட்டைகளைச் சுமந்து கொண்டு ஒரு குள்ளன் போய்க் கொண்டிருந்தான். அவனுடன் இரத்தின வியாபாரி ஜாடை காட்டிப் பேசுவதைப் பார்த்தால் குள்ளனுக்குக் காது செவிடு என்று ஊகிக்கலாம். அவன் செவிடு மட்டுமல்ல - ஊமையாகக்கூட இருக்கலாமென்றும் தோன்றியது. தன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி வேறு யாருக்கும் தெரியப்படுத்த முடியாமலிருக்கும் பொருட்டே நமது இரத்தின வியாபாரி அத்தகைய ஆளைப் பொறுக்கி எடுத்திருக்க வேண்டும்.

ஆமாம்; அந்த இளம் வர்த்தகங்களின் நடவடிக்கைகள், கவனித்துப் பார்ப்பவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணுவனவாய்த் தான் இருந்தன. அவன் ஆங்காங்கு சிற்பக் காட்சியோ, சித்திரக் காட்சியோ உள்ள இடத்தில் சிறிது நேரம் நிற்பான். சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்ப்பதோடல்லாமல் பக்கத்தில் நிற்கும் சிற்பிகளையும் கவனிப்பான். அவர்களில் யாராவது ஒருவன் தனித்து நிற்க நேர்ந்தால் அவனை நெருங்கி முதுகைத் தட்டி "உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்; கொஞ்சம் ஒதுக்குப்புறமாக வருகிறாயா?" என்று கேட்பான். இரத்தின வியாபாரியின் கம்பீரத் தோற்றத்தையும் களையான முகத்தையும் பார்த்த யாருக்குத்தான் அவன் பேச்சைத் தட்ட மனம் வரும்? அவன் சொற்படியே கொஞ்சம் தனியான இடத்துக்கு அவர்கள் வருவார்கள். அவர்களிடம் அவ்வர்த்தகன் கடல்களுக்கு அப்பால் தான் வசிக்கும் தேசத்தைப் பற்றியும், அந்த தேசத்தின் வளத்தையும் செல்வத்தைப் பற்றியும் பிரமாதமாக வர்ணிப்பான். கரிகாலச் சோழச் சக்கரவர்த்தியின் காலத்தில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் தான் அத்தேசத்தில் வசிக்கிறார்களென்றும், அவர்களுக்குத் தாய்நாட்டிலுள்ளவை போன்ற திருக்கோயில்களும் சிற்பங்களும் இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறையே கிடையாதென்றும் எடுத்துச் சொல்வான்.

"அந்தத் தேசத்துக்கு நீ வருகிறாயா? வந்தால் திரும்பி வரும்போது பெருஞ் செல்வனாகத் திரும்பி வரலாம். அந்த நாட்டில் தரித்திரம் என்பதே கிடையாது. தெருவெல்லாம் இரத்தினக் கற்கள் இறைந்து கிடக்கும்!" என்று சொல்லி, குள்ளன் தூக்கிக் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பிடி இரத்தினக் கற்களை எடுத்து அவர்களிடம் காட்டுவான். இரத்தின வியாபாரியின் பேச்சிலேயே அநேகமாக அந்தச் சிற்பி மயங்கிப் போயிருப்பான். கை நிறைய இரத்தினக் கற்களைக் காட்டியதும் அவன் மனத்தை நிச்சயப்படுத்திக் கொண்டு தன்னுடைய சம்மதத்தைத் தெரிவிப்பான். அப்படிச் சம்மதம் தெரிவிக்கும் ஒவ்வொருவரிடமும் பெரிய இரத்தினம் ஒன்றைப் பொறுக்கிக் கொடுத்து, "அடுத்த அமாவாசையன்று புலிக் கொடி உயர்த்திய கப்பல் ஒன்று இந்தத் துறைமுகத்துக்கு வரும். அந்தக் கப்பலுக்கு வந்து இந்த இரத்தினத்தைக் காட்டினால் கப்பலில் ஏற்றிக் கொள்வார்கள்" என்பான் நமது இளம் வர்த்தகன்.

கலைத் திருவிழா நடந்த மூன்று தினங்களிலும் ரத்தின வியாபாரி மேற்சொன்ன காரியத்திலேயே ஈடுபட்டிருந்தான். மூன்றாவது நாள் விஜயதசமியன்று அவன் வீதியோடு போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டான். (எதிர்பாராததா? அல்லது ஒரு வேளை எதிர்பார்த்தது தானா? நாம் அறியோம்.) ஆம்; அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நங்கை முன் போலவே பல்லக்கில் சென்ற காட்சிதான். மூன்று வருஷத்துக்கு முன்பு பார்த்ததற்கு இப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் சிறிது மாறுதல் தோன்றியது. அன்றைக்கு அவளுடைய முகம் சூரியன் அஸ்தமித்த பிறகு நீலக் கடலில் உதயமாகும் பூரண சந்திரனைப்போல் பசும்பொன் காந்தியுடன் பிரகாசித்தது. இன்றோ அதிகாலை நேரத்தில் மேற்குத் திசையில் அஸ்தமிக்கும் சந்திரனைப் போல் வெளிறிய பொன்னிறமாயிருந்தது. அப்போது முகத்தில் குடிகொண்டிருந்த குதூகலத்துக்குப் பதிலாக இப்போது சோர்வு காணப்பட்டது. விஷமம் நிறைந்திருந்த கண்களில் இப்போது துயரம் தோன்றியது. இந்த மாறுதல்களினாலே அந்த முகத்தின் சௌந்தரியம் மட்டும் அணுவளவும் குன்றவில்லை; அதிகமாயிருந்ததென்றும் சொல்லலாம்.

வீதியோடு போய்க் கொண்டிருந்த இரத்தின வியாபாரி தனக்குப் பின்னால் கூட்டத்தில் ஏதோ கலகலப்புச் சத்தம் உண்டாவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். காவலர் புடைசூழ ஒரு சிவிகை வருவதைக் கண்டான். அச்சிவிகையில் இருந்த பெண் தன் இருதய மாளிகையில் குடிகொண்டிருந்தவள்தான் என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொண்டான். அச்சமயத்தில் அவன் நெஞ்சு விம்மிற்று, கண்களில் நீர் தளும்பிற்று. இம்மாதிரி சந்தர்ப்பம் நேருங்கால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவன் யோசித்து வைத்திருந்ததெல்லாம் சமயத்துக்கு உதவவில்லை. வீதி ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டான். பல்லக்கின் பக்கம் பார்க்காமல் திரும்பி வேறு திசையை நோக்கினான். அவன் இருந்த இடத்தைச் சிவிகை தாண்டியபோது தன்னை இரண்டு விசாலமான கரிய கண்கள் கூர்ந்து நோக்குவதுபோல் அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் அளவு மீறிப் பொங்கிற்று. பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வேறு திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல்லக்கு கொஞ்சதூரம் முன்னால் போன பிறகுதான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். பல்லக்கில் உட்கார்ந்திருந்த பெண் தன்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அடுத்த கணம் அவனுடைய கண்கள் மறுபடியும் கீழே நோக்கின.

ஆனால் பல்லக்கு மேலே போகவில்லை; நின்றுவிட்டது. பல்லக்குடன் போய்க் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் இரத்தின வியாபாரியை நோக்கி வந்தான். அருகில் வந்ததும், "அப்பா! தேவிக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டுமாம்; கொஞ்சம் வந்துவிட்டுப்போ!" என்றான். இரத்தின வியாபாரி அவனுடன் பல்லக்கை நோக்கிப் போனான். அந்தச் சில வினாடி நேரத்துக்குள் அவனுடைய உள்ளத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் கொந்தளித்தன. 'இந்தப் பெண் யாராயிருக்கும்? எதற்காக நம்மை அழைக்கிறாள்? நம்மை அடையாளங் கண்டு கொண்டாளோ? அப்படியானால் இத்தனை நாளும் நம்மை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்ததாக ஏற்படுகிறதே? இவள் உயர் குலத்துப் பெண் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை சக்கரவர்த்தியின் மகளாகவே இருக்குமோ? ஐயோ! அவ்விதம் இருந்துவிட்டால்...! இரத்தின வியாபாரி பல்லக்கை நெருங்கி வந்து அந்தப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அப்பப்பா! அவளுடைய பார்வைதான் எவ்வளவு கூரியது? பெண்களின் கண்களை வாளுக்கும் வேலுக்கும் இதனால்தான் ஒப்பிடுகிறார்கள் போலும்! ஆமாம்; குந்தவி அவனுடைய கண்களின் வழியாக அவனது இருதயத்தையே ஊடுருவி அதன் இரகசியத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறவளைப் போலேதான் பார்த்தாள். இவ்விதம் சற்று நேரம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "ஐயா! நீர் யார்? இந்த தேசத்து மனுஷர் இல்லை போலிருக்கிறதே?" என்றாள்!

"ஆம். தேவி! நான் கடலுக்கப்பால் உள்ள செண்பகத்தீவில் வசிப்பவன் இரத்தின வியாபாரம் செய்வதற்காக இவ்விடம் வந்தேன். என் பெயர் தேவசேனன்" என்று மளமளவென்று பாடம் ஒப்புவிக்கிறவனைப்போல் மறுமொழி கூறினான் இரத்தின வியாபாரி. அவனுடைய படபடப்பு குந்தவி தேவிக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். மறுபடியும் சிறிது நேரம் மௌனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, "எந்த தீவு என்று சொன்னீர்?" என்றாள். "செண்பகத் தீவு - செண்பகத் தீவு - செண்பகத் தீவு - கேட்ட ஞாபகமாய் இருக்கிறதே! அந்தத் தீவை ஆளும் அரசன் யாரோ?" "செண்பகத் தீவின் பூர்வீக அரச வம்சம் நசித்துப் போயிற்று. சோழ நாட்டு இளவரசர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் அரசர்." இவ்விதம் சொன்னபோது குந்தவியின் முகத்தில் உண்டான பிரகாசத்தை இரத்தின வியாபாரி கவனிக்காமல் போகவில்லை. அந்தத் தேசப் பிரஷ்டனை இன்னும் இவள் நினைவு வைத்துக் கொண்டுதானிருக்கிறாள்! ஆனால் இவள் யார்? இவ்வளவு முககாந்தியும் சௌந்தரியமும் உள்ளவள் ஒருவேளை...? அத்தகைய சந்தேகமே இரத்தின வியாபாரிக்குத் திகில் உண்டாக்கிற்று.

அப்போது குந்தவி, "நீர் இரத்தின வியாபாரி என்பதாகச் சொன்னீரல்லவா?" என்று கேட்டாள். "ஆம், அம்மா; இதோ இந்தக் குள்ளன் தலையில் உள்ள மூட்டைகளில் மேன்மையான இரத்தினங்கள் இருக்கின்றன. வேணுமானால் இப்போது எடுத்துக் காட்டுகிறேன்." "இப்போது வேண்டாம், வீதியில் கூட்டம் சேர்ந்து போகும். சாயங்காலம் அரண்மனைக்கு வாரும்" என்றாள் குந்தவி. அரண்மனை! இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த இளம் வர்த்தகனுடைய முகமானது அப்படி ஏன் சிணுங்குகிறது? அந்தச் சிணுக்கத்தைக் குந்தவி கவனித்தாளோ, என்னவோ தெரியாது. எதையோ மறந்து போய் நினைத்துக் கொண்டவள் போல், "ஆமாம்; சாயங்காலம் கட்டாயம் அரண்மனைக்கு வாரும். சக்கரவர்த்தியின் குமாரி குந்தவி தேவிக்கு இரத்தினம் என்றால் ரொம்பவும் ஆசை கட்டாயம் உம்மிடம் வாங்கிக் கொள்வாள். ஒருவேளை இந்த மூட்டையிலுள்ள இரத்தினங்கள் அவ்வளவையும் வாங்கிக் கொண்டாலும் வாங்கிக் கொள்ளலாம்" என்றாள். இரத்தின வியாபாரி பெருமூச்சு விட்டான். மனத்திலிருந்த பெரிய பாரம் ஏதோ ஒன்று நீங்கியவன் போலத் தோன்றினான். "அப்படி எல்லாவற்றையும் ஒரே இடத்தில் விற்றுவிட வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை. இந்தத் தேசத்தில் இன்னும் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டிய இரத்தினங்களை நீங்கள் வாங்கி&#