தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > பார்த்திபன் கனவு - பாகம் - 1 (அத்தியாயங்கள் 10) >  பார்த்திபன் கனவு - பாகம் - 2 (அத்தியாயங்கள் 27)> பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 1-10) > பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 11-20) > பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 21-40)


கல்கி - பார்த்திபன் கனவு
பாகம் - 2 (அத்தியாயங்கள் 27)
kalkiyin pArttipan kanvu - part -2

Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM. TAB Etext preparation, proof reading by Ms. Gracy & Ms Parimala, Anna University - KBC Research Center.

Conversion to TSCII format with his conversion tools, TSC proof reading and TSCWeb Version by tiru N D LogaSundaram and his daughter selvi L Selvanayagi Chennai, India PDF version : Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

 © Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


உள்ளுறை அத்தியாயங்கள்

இரண்டாம் பாகம்
2.001 சிவனடியார் மின்பதிப்பு 2.015 கடற் பிரயாணம் மின்பதிப்பு
2.002 வம்புக்கார வள்ளி மின்பதிப்பு 2.016 செண்பகத் தீவு மின்பதிப்பு
2.003 சதியாலோசனை மின்பதிப்பு 2.017 குந்தவியின் சபதம் மின்பதிப்பு
2.004 மாமல்லபுரம் மின்பதிப்பு 2.018 பொன்னனின் அவமானம் மின்பதிப்பு
2.005 உறையூர்த் தூதன் மின்பதிப்பு 2.019 மாரப்பனின் மனோரதம் மின்பதிப்பு
2.006 கலைத் திருநாள் மின்பதிப்பு 2.020 சக்கரவர்த்தி சந்நிதியில் மின்பதிப்பு
2.007 திருப்பணி ஆலயம் மின்பதிப்பு 2.021 வள்ளியின் சாபம் மின்பதிப்பு
2.008 குந்தவியின் கலக்கம் மின்பதிப்பு 2.022 சிறுத்தொண்டர் மின்பதிப்பு
2.009 தந்தையும் மகளும் மின்பதிப்பு 2.023 நள்ளிரவில் மின்பதிப்பு
2.010 துறைமுகத்தில் மின்பதிப்பு 2.024 மாரப்பனின் மனக் கலக்கம் மின்பதிப்பு
2.011 பொன்னனின் சந்தேகம் மின்பதிப்பு 2.025 சமய சஞ்சீவி மின்பதிப்பு
2.012 ராணியின் துயரம் மின்பதிப்பு 2.026 குடிசையில் குதூகலம் மின்பதிப்பு
2.013 சிவனடியார் கேட்ட வரம் மின்பதிப்பு 2.027 கண்ணீர்ப் பெருக்கு மின்பதிப்பு
2.014 "வயதான தோஷந்தான்!" மின்பதிப்பு



அத்தியாயம் ஒன்று
சிவனடியார்

பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப் பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கெண்டிருந்தன. உச்சிவானத்தில் வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த ரிஷி மண்டலம் அலங்காரக் கோலம் போட்டதுபோல் காட்சியளித்தது. தெற்கு மூலையில் சுவாமி நட்சத்திரம் விசேஷ சோபையுடன் தனி அரசு புரிந்தது. அந்த மனோகரமான அதிகாலை நேரத்தில், காவேரி பிரவாகத்தின் 'ஹோ' என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் ஒன்று மேயில்லை. திடீரென்று அத்தகைய அமைதியைக் கலைத்துக் கொண்டு 'டக் டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்கலாயிற்று. ஆமாம்; இதோ ஒரு கம்பீரமான உயர்ந்த ஜாதிக் குதிரை காவேரி நதிக்கரைச் சாலை வழியாகக் கிழக்கேயிருந்து மேற்கு நோக்கி வருகிறது. அது விரைந்து ஓடி வரவில்லை; சாதாரண நடையில் தான் வருகிறது. அந்தக் குதிரைமீது ஆஜானுபாகுவான ஒரு வீரன் அமர்ந்திருக்கிறான். போதிய வெளிச்சமில்லாமையால், அவன் யார், எப்படிப் பட்டவன் என்று அறிந்து கொள்ளும்படி அங்க அடையாளங்கள் ஒன்றும் தெரியவில்லை. நெடுந்தூரம் விரைந்து ஓடிவந்த அக்குதிரையை இனிமேலும் விரட்ட வேண்டாமென்று அவ்வீரன் அதை மெதுவாக நடத்தி வந்ததாகத் தோன்றியது. அவன் தான் சேர வேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவும் காணப்பட்டது.

அவனுக்கு வலதுகைப் புறத்தில் காவேரி நதியில் பிரவாகம். இடது புறத்திலோ அடர்ந்த மரங்களும் புதர்களும் நிறைந்த காடாகத் தோன்றியது. வீரன், இடது புறத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். ஓரிடத்துக்கு வந்ததும் குதிரையை இடதுபுறமாகத் திருப்பினான். குதிரையும் அந்த இடத்தில் திரும்பிப் பார்க்கப் பழக்கப்பட்டது போல் அநாயாசமாகச் செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றது. கவனித்துப் பார்த்தால் அந்த இடத்தில் ஒரு குறுகிய ஒற்றையடிப் பாதை போவது தெரியவரும். அந்தப் பாதை வழியாகக் குதிரை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு தான் சென்றது. இரண்டு பக்கங்களிலும் நெருங்கி வளர்ந் திருந்த புதர்களும், கொடிகளும், மேலே கவிந்திருந்த மரக் கிளைகளும் குதிரை எளிதில் போக முடியதபடி செய்தன. குதிரை மீதிருந்த வீரனோ அடிக்கடி குனிந்தும், வளைந்து கொடுத்தும், சில சமயம் குதிரையின் முதுகோடு முதுகாய்ப் படுத்துக் கொண்டும் மரக்கிளைகளினால் கீழே தள்ளப்படாமல் தப்பிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பாதை வழியாகக் கொஞ்சதூரம் சென்ற பிறகு திடீரென்று சிறிது இடைவெளியும் ஒரு சிறு கோயிலும் தென்பட்டன. கோயிலுக்கெதிரே பிரம்மாண்டமான யானை, குதிரை முதலிய வாகனங்கள் நின்றதைப் பார்த்தால், அது ஐயனார் கோயிலாயிருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். வேண்டு தலுக்காக பக்தர்கள் செய்துவைத்த அந்த மண் யானை - குதிரைகளில் சில வெகு பழமையானவை; சில புத்தம் புதியவை. அவற்றின் மீது பூசிய வர்ணம் இன்னும் புதுமை அழியாமலிருந்தது. பலிபீடம், துவஜ்தம்பம் முதலியவையும் அங்குக் காணப்பட்டன.

கீழ்வானம் வெளுத்துப் பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் மேற்சொன்ன வீரன் குதிரையின்மீது அங்கே வந்து சேர்ந்தான். வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து அவசர அவசரமாகச் சில அதிசயமான காரியங்களைச் செய்யத் தொடங்கினான். மண் யானைகளுக்கும் மண் குதிரைகளுக்கும் மத்தியில் தான் ஏறிவந்த குதிரையை நிறுத்தினான். குதிரைமீது கட்டியிருந்த ஒரு மூட்டையை எடுத்து அவிழ்த்தான். அதற்குள் இருந்த புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகளை எடுத்துத் தரித்துக் கொள்ளத் தொடங்கினான். சற்று நேரத்தில் பழைய போர் வீரன் உருவம் அடியோடு மாறி, திவ்ய தேஜஸுடன் கூடிய சிவ யோகியாகத் தோற்றம் கொண்டான். ஆம்; வெண்ணாற்றங் கரையில் ரணகளத்தில் பார்த்திபனுக்கு வரமளித்த சிவனடியார்தான் இவர். தம்முடைய பழைய உடைகளையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும் மூட்டை யாகக் கட்டி, உடைந்து விழுந்திருந்த மண் யானை ஒன்றின் பின்னால் வைத்தார் அந்தச் சிவயோகி. குதிரையை ஒரு தடவை அன்புடன் தடவிக் கொடுத்தார். குதிரையும் அந்தச் சமிக்ஞையைத் தெரிந்து கொண்டது போல் மெதுவான குரலில் கனைத்தது. பிறகு அங்கிருந்து அச்சிவனடியார் கிளம்பி ஒற்றையடிப்பாதை வழியாகத் திரும்பிச் சென்று காவேரிக் கரையை அடைந்தார். மறுபடியும் மேற்கு நோக்கித் நடக்க ஆரம்பித்தார்.

ஒரு நாழிகை வழி நடந்த பிறகு சூரியன் உதயமாகும் தருணத்தில் இந்தச் சரித்திரத்தின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்திருக்கும் தோணித் துறைக்கு வந்து சேர்ந்தார். அங்கே படகோட்டி பொன்னனுடைய குடிசைக்கு அருகில் வந்து நின்று, "பொன்னா!" என்று கூப்பிட்டார். உள்ளிருந்து "சாமியார் வந்திருக்கிறார் வள்ளி" என்று குரல் கேட்டது. அடுத்த விநாடி பொன்னன் குடிசைக்கு வந்து சிவனடியார் காலில் விழுந்தான். அவன் பின்னோடு வள்ளியும் வந்து வணங்கினாள். பிறகு மூவரும் உள்ளே போனார்கள். வள்ளி பயபக்தியுடன் எடுத்துப் போட்ட மணையில் சிவனடியார் அமர்ந்தார். "பொன்னா! மகாராணியும் இளவரசரும் வஸந்தமாளிகையில்தானே இருக்கிறார்கள்?" என்று அவர் கேட்டார். "ஆம் சுவாமி! இன்னும் கொஞ்ச நாளில் நமது இளவரசரையும் 'மகாராஜா' என்று எல்லோரும் அழைப்பார்களல்லவா?" "ஆமாம்; எல்லாம் சரியாக நடந்தால், நஉடனே போய் அவர்களை அழைத்துக் கொண்டுவா!" என்றார் சிவனடியார். "இதோ போகிறேன், வள்ளி சுவாமியாரைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிவிட்டுப் பொன்னன் வெளியேறினான். சிறிது நேரத்திற்கெல்லாம் படகு தண்ணீரில் போகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.



அத்தியாயம் இரண்டு
வம்புக்கார வள்ளி

பொன்னன் போனதும், வள்ளி சிவனடியாருக்கு மிகுந்த சிரத்தையுடன் பணிவிடைகள் செய்யத் தொடங்கினாள். அவருடைய காலை அனுஷ்டானங்கள் முடிவடைந்ததும், அடுப்பில் சுட்டுக் கொண்டிருந்த கம்பு அடையைச் சுடச்சுடக் கொண்டுவந்து சிவனடியார் முன்பு வைத்தாள். அவர்மிக்க ருசியுடன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே வள்ளியுடன் பேச்சுக் கொடுத்தார். "வள்ளி! ராணி எப்படி இருக்கிறாள், தெரியுமா?" என்று கேட்டார் சிவனடியார். "இளவரசர் பக்கத்தில் இருக்கும்போதெல்லாம் தேவி தைரியமாகத்தான் இருக்கிறார். அவர் அப்பால் போனால் கண்ணீர் விடத் தொடங்கி விடுகிறார்" என்றாள் வள்ளி. பிறகு, "சுவாமி! இதெல்லாம் எப்படித்தான் முடியும்? இளவரசர் நிஜமாக மகாராஜா ஆகிவிடுவாரா? அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ராணி பொறுக்க மாட்டாள்; உயிரையே விட்டுவிடுவார்" என்றாள். "எனக்கென்ன தெரியும் அம்மா! கடவு ளுடைய சித்தம் எப்படியோ அப்படித் தான் நடக்கும். உனக்குத் தெரிந்த வரை ஜனங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?" "ஜனங்கள் எல்லோரும் இளவரசர் பக்கந்தான் இருக்கிறார்கள். பல்லவ அதிகாரம் ஒழிய வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார்கள். பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றித் தெரியாத பிஞ்சு குழந்தைகூடக் கிடையாது. சுவாமி! அந்தச் செய்தியைத் தாங்கள் தானே ஆறு வருஷத்துக்கு முன்னால் எங்களுக்கு வந்து சொன்னீர்கள்? அதை நானும் ஓடக்காரரும் இதுவரையில் லட்சம் ஜனங்களுக்காவது சொல்லியிருப்போம்" என்றாள்.

நானும் இன்னும் எத்தனையோ பேரிடம் சொல்லியிருக்கிறேன். இருக்கட்டும்; மாரப்ப பூபதி எப்படியிருக்கிறான்? இப்போது உன் பாட்டனிடம் ஜோஸியம் கேட்க அவன் வருவதுண்டா?" என்று கேட்டார் சிவனடியார். "ஆகா! அடிக்கடி வந்துகொண்டுதானிருக்கிறான்" என்றாள் வள்ளி. உடனே எதையோ நினைத் துக் கொண்டவள் போல் இடி இடி என்று சிரித்தாள். சிவனடியார் "என்னத்தைக் கண்டு அம்மா இப்படிச் சிரிக்கிறாய்? என்னுடைய மூஞ்சியைப் பார்த்தா?" என்றார். "இல்லை சுவாமி! மாரப்ப பூபதியின் ஆசை இன்ன தென்று உங்களுக்குத் தெரியாதா? காஞ்சி சக்கரவர்த்தியின் மகளை இவன் கட்டிக் கொள்ளப் போகிறானாம்! கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேண்டியது தான் பாக்கி" என்றாள். சிவனடியார் முகத்தில் ஒரு விநாடி நேரம் இருண்ட மேகம் படர்ந்தது போல் தோன்றியது. உடனே அவர் புன்னகையை வருவித்துக் கொண்டு "ஆமாம்; உனக்கென்ன அதில் அவ்வளவு சிரிப்பு?" என்று கேட்டார். "சக்கரவர்த்தியின் மகள் எங்கே? இந்தப் பேதை மாரப்பன் எங்கே? உலகத்தில் அப்படி ஆண் பிள்ளைகளே அற்றுப் போய்விடவில்லையே. நரசிம்ம பல்லவரின் மகளை இந்தக் கோழைப் பங்காளிக்குக் கொடுப்பதற்கு?" என்றாள் வள்ளி. "ஆனால், உன் பாட்டன்தானே மாரப்பனை இப்படிப் பைத்தியமாய் அடித்தது வள்ளி, இல்லாத பொல்லாத பொய் ஜோசியங்களையெல்லாம் சொல்லி?" என்றார் சிவனடியார். "அப்படிச் சொல்லியிராவிட்டால், அந்தப் பாவி என் பிராணனை வாங்கியிருப்பான்; சுவாமி! போகட்டும்; சக்கரவர்த்தியின் குமாரி ரொம்ப அழகாமே, நிஜந்தானா! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள்.

"சிவனடியார் புன்னகையுடன் பார்த்திருக்கிறேன் அம்மா, பார்த்திருக்கிறேன். ஆனால் அழகைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? நான் துறவி!" என்றார். "எங்கள் ராணியை விட அழகாயிருப்பாளா? சொல்லுங்கள்." "உங்கள் ராணி அவ்வளவு அழகா என்ன?" "எங்கள் ராணியா? இல்லை! இல்லை! எங்கள் ராணி அழகேயில்லை. சுத்த அவலட்சணம், உங்கள் சக்கரவர்த்தி மகள்தான் ரதி..." "என்ன வள்ளி, இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்?" "பின்னே என்ன? எங்கள் ராணியை நீங்கள் எத்தனையோ தடவை பார்த்திருந்தும் இப்படிக் கேட்கிறீர்களே? அருள்மொழித் தேவியைப் போல் அழகானவர் இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது...." "நான்தான் சொன்னேனே, அம்மா! ஆண்டியாகிய எனக்கு அழகு என்ன தெரியும். அவலட் சணந்தான் என்ன தெரியும்?" "உங்களுக்குத் தெரியாது என்றுதான் தெரிகிறதே! ஆனால் காஞ்சி சக்கர வர்த்தியை எப்போதாவது பார்த்தால் கேளுங்கள்; அவர் சொல்லுவார். அருள்மொழித் தேவிக்கும் பார்த்திப மகாராஜாவுக்கும் கலியாணம் ஆவதற்கு முன்னால் நடந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா? அருள்மொழித் தேவியின் அழகைப் பற்றி நரசிம்மவர்மர் கேள்விப்பட்டு "அருள்மொழியைக் கல்யாணம் செய்து கொண்டால் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் தலையை மொட்டையடித்துக் கொண்டு புத்த சந்நியாசியாகப் போய் விடுவேன்" என்று பிடிவாதம் செய்தார். ஆனால் அருள்மொழித் தேவிக்கு அதற்கு முன்பே பார்த்திப மகாராஜாவுடன் கலியாணம் நிச்சயமாகி விட்டது. இன்னொரு புருஷனை மனதினால்கூட நினைக்கமாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி, கடைசியில் பார்த்திப மகாராஜாவையே கலியாணம் செய்து கொண்டார்."

சிவனடியார் முகத்தில் மந்தகாசம் தவழ, "ஆமாம் அம்மா! நரசிம்மவர்மர் அப்புறம் என்ன செய்தார்? தலையை மொட்டை அடித்துக்கொண்டு பௌத்த பிக்ஷு ஆகிவிட்டாரா?" என்று கேட்டார். "ஆண் பிள்ளைகள் சமாசாரம் கேட்க வேண்டுமா? சுவாமி! அதிலும் ராஜாக்கள், சக்கரவர்த்திகள் என்றால் மனது ஒரே நிலையில் நிற்குமா? அப்புறம் அவர் பாண்டிய ராஜகுமாரியைக் கல்யாணம் செய்து கொண்டார். இன்னும் எத்தனை பேரோ, யார் கண்டது? நான் மட்டும் ராஜகுமாரியாய்ப் பிறந்திருந்தால் எந்த ராஜாவையும் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன். அரண்மனையில் பத்துச் சக்களத்திகளோடு இருப்பதைக் காட்டிலும், கூரைக் குடிசையில் ஒருத்தியாயிருப்பது மேலில்லையா?" சிவனடியார் கலகலவென்று சிரித்தார். "நீ சொல்வது நிஜந்தான், அம்மா! ஆனால் நரசிம்மவர்மன் நீ நினைப்பது போல் அவ்வளவு பொல்லாதவனல்ல..." என்றார். "இருக்கட்டும் சுவாமி! அவர் நல்லவராகவே இருக்கட்டும். அவர்தான் உங்களுக்கு ரொம்ப வேண்டி யவர் போலிருக்கிறதே! ஒரு காரியம் செய்யுங்களேன்? சக்கரவர்த்தியின் மகளை எங்கள் இளவரசருக்குக் கலியாணம் செய்து வைத்து விடுங்களேன்! சண்டை, சச்சரவு எல்லாம் தீர்ந்து சமாதானம் ஆகிவிடட்டுமே." "நல்ல யோசனைதான் வள்ளி! ஆனால் என்னால் நடக்கக்கூடிய காரியம் அல்ல. நீ வேண்டுமானால் சக்கர வர்த்தியைப் பார்த்துச் சொல்லேன்...." "நான் சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் நிச்சயமாய்ச் சொல்லத்தான் போகிறேன் எனக்கு என்ன பயம்?" என்றாள். அச்சமயத்தில் படகு கரைக்கு வந்து சேர்ந்த சத்தம் கேட்டது. வள்ளி, "படகு வந்துவிட்டது" என்று சொல்லிக் கொண்டு குடிசைக்கு வெளியே வந்தாள்.



அத்தியாயம் மூன்று
சதியாலோசனை

சற்று நேரத்துக்கெல்லாம் அருள்மொழித் தேவியும் இளவரசர் விக்கிரமனும் குடிசைக்குள் வந்து "சுவாமி!" என்று சொல்லி சிவனடியாரின் பாதத்தில் வணங்கினார்கள். சிவனடியார் விக்கிரமனைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு ஆசீர்வதித்தார். ஆறு வருஷத்துக்கு முன் அறியாப் பாலகனாயிருந்த விக்கிரமன் இப்போது, இளங்காளைப் பருவத்தை அடைந்து ஆஜானுபாகுவாக விளங்கினான். அவன் முகத்தில் வீரக் களை திகழ்ந்தது. உள்ளத்தில் பொங்கிய ஆர்வத்தின் வேகம் கண்களில் அலையெறிந்தது. படபட வென்று பேசத் தொடங்கினான்:- "சுவாமி! நேற்றிரவு கனவில் என் தந்தை வந்தார். என்னை அழைத்துக் கொண்டு சிராப்பள்ளி மலைக்குப் போனார். அங்கே உச்சியில் பறந்து கொண்டிருந்த பல்லவர்களின் சிங்கக் கொடியைக் காட்டினார்.... சுவாமி! இனிமேல் என்னால் பொறுத்திருக்க முடியாது. நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என்றான். என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கிறது. விக்கிரமா! சரியான காலம் வரையில் காத்திருக்கும்படி தானே சொன்னேன்? இப்போது காலம் வந்துவிட்டது. நீ என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் சொல்லு. வெறும் பதற்றத்தினால் மட்டும் காரியம் ஒன்றும் ஆகிவிடாது. தீர யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். உன் தந்தை உனக்குக் கொடுத்து விட்டுப்போன குறள் நூலில் தெய்வப் புலவர் என்ன சொல்லியிருக்கிறார்? "எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்ப(து) இழுக்கு" இதை நீ எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்."

"ஆம், சுவாமி! எண்ணித்தான் துணிந்திருக்கிறேன். வரப்போகும் புரட்டாசிப் பௌர்ணமியன்று சிராப்பள்ளி மலைமீது பறக்கும் பல்லவர் கொடியை எடுத்தெறிந்து விட்டு அங்கே புலிக்கொடியைப் பறக்க விடப் போகிறேன். யார் என்ன சொன்ன போதிலும் இந்தத் தீர்மானத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை." "மிக்க சந்தோஷம் விக்கிரமா! உன் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளும்படி நானும் சொல்லப் போவதில்லை. இந்த நாள் எப்போது வரப்போகிறதென்றுதான் நான் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உன் தீர்மானத் தைக் காரியத்தில் நிறைவேற்ற என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்? அதைத் தெரிந்து கொள்ள மட்டும் விரும்புகிறேன். புலிக்கொடியைப் பறக்க விட்டுவிட்டால் போதுமா? அதைக் காத்து நிற்கப் படைகள் வேண்டாமா? பல்லவ தளபதி அச்சுதவர்மன் சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா?" "சுவாமி! அந்தக் கவலை தங்க ளுக்கு வேண்டவே வேண்டாம். சோழநாட்டு மக்கள் எல்லோரும் சித்தமாயிருக்கிறார்கள். பொன்னனைக் கேளுங்கள், சொல்லுவான். புரட்டாசிப் பௌர்ணமியில் வீரர்கள் பலர் உறையூரில் வந்து கூடுவார்கள்; புலிக்கொடி உயர்ந்ததும் அவர்கள் என்னுடைய படையில் பகிரங்கமாய்ச் சேர்ந்து விடுவார்கள்.

உறையூரிலுள்ள பல்லவ சைன்யத்தைச் சின்னாபின்னம் செய்து அச்சுதவர்மனையும் சிறைப்படுத்தி விடுவோம்...!" "இந்த அபாயகரமான முயற்சியில் உனக்கு யார் ஒத்தாசை செய்கிறார்கள்? யார் உனக்காகப் படை திரட்டுகிறார்கள்? நீயோ வசந்த மாளிகையை விட்டு வெளியே போனது கிடையாதே...." "என் சித்தப்பா மாரப்ப பூபதிதான் எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார். அவர் இரகசியமாக ஒரு பெரிய படை திரட்டி வந்திருக்கிறார்...." மாரப்ப பூபதி என்றதுமே சிவனடியாரின் முகம் கறுத்தது. அவர் விக்கிரமனை நடுவில் நிறுத்தி "யார்? மாரப்ப பூபதியா இதெல்லாம் செய்கிறான்; அவனிடம் உன் உத்தேசத்தை எப்போது சொன்னாய்?" என்று கேட்டார். "சித்தப்பா முன்மாதிரி இல்லை! நீங்கள் கவலைப்பட வேண்டாம். அடியோடு புது மனிதர் ஆகிவிட்டார். என் தகப்பனார் விஷயத்தில் நடந்து கொண்டதற்காக மிகவும் பச்சாதாபப்படுகிறார். அதற்குப் பரிகாரமாக இப்போது சோழநாட்டின் விடுதலைக்கு உயிரையும் கொடுக்கக் சித்தமாயிருக்கிறார்" என்றான் விக்கிரமன். சிவனடியார் அருள்மொழியைப் பார்த்து, "தேவி! இது நிஜந்தானா?" என்று கேட்டார். "ஆம், சுவாமி! மாரப்ப பூபதி மனந்திருந்தியவராகத் தான் காணப்படுகிறார்" என்றாள் அருள்மொழி. மிக்க சந்தோஷம். விக்கிரமா! உன்னுடைய முயற்சி நிறைவேறட்டும். சேனாதிபதியான கார்த்திகேயர் உன்னைக் காத்து நிற்கட்டும். உன் தோளுக்கும் வாளுக்கும் பராசக்தி பலம் அளிக்கட்டும். அவசியமான சமயத்தில் மறுபடியும் வருவேன். இப்போது போய் வருகிறேன்" என்று எழுந்தார் சிவனடியார்.

"சுவாமி! என் சித்தப்பா இப்போது வருவதாகச் சொல்லியிருக்கிறாரே; அவர் தங்களைப் பார்க்க மிகவும் ஆவலாயிருக்கிறார்; தாங்கள் கொஞ்சம் இருந்து போக வேண்டும்" என்றான் விக்கிரமன். "இல்லை, விக்கிரமா எனக்கு இருக்க நேரமில்லை. எது எப்படியானாலும் நீ உன் உறுதியைக் கைவிடாதே. உன் தந்தை வாக்கை மறந்து விடாதே" என்றார். அருள்மொழித் தேவி அப்போது பொன்னனைப் பார்த்து, "பொன்னா! இளவரசரை அழைத்துக் கொண்டு நீ படகுக்குப் போ; இதோ நான் வந்துவிடுகிறேன்" என்று சொல்ல, பொன்னனும் விக்கிரமனும் உடனே வெளியேறினார்கள். அருள்மொழித் தேவி அப்போது சிவனடியார் பாதத்தில் நமஸ்கரித்து, அந்தப் பாதங்களைப் பிடித்துக் கொண்ட வண்ணம் சொன்னாள்:- "சுவாமி தாங்கள் யாரோ எனக்கு தெரியாது. என்னவெல்லாமோ தங்களைப்பற்றி நான் சந்தேகித்தது உண்டு. ஆனால் தாங்கள் எங்கள் நன்மையை நாடுகிறவர் என்பதில் சந்தேகப்பட்டதே இல்லை; அதனால் தங்களை யாரென்று தெரிந்து கொள்ளவும் நான் ஆசைப்படவில்லை. தாங்கள் யாராயிருந்தாலும் சரி, அடியாளுக்கு ஒரு வரந்தர வேண்டும். எனக்குத் தங்களைத் தவிர வேறு கதி கிடையாது." சிவனடியாரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. "என்னால் முடிகிற காரியமாயிருந்தால் கட்டாயம் செய்கிறேன், அம்மா! கேள்" என்றார். "தாங்கள் மகான், தங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்க முடியாது. வேறென்ன நான் கேட்கப் போகிறேன்? என் பிள்ளையின் உயிரைத் தாங்கள் காப்பாற்றித் தரவேண்டும்

சுவாமி! இவன் இப்போது செய்யப் போகிற காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மகா சக்தி வாய்ந்த பல்லவ சக்கரவர்த்தியை எதிர்த்து இளம் பிள்ளையால் என்ன செய்ய முடியும்? எல்லாம் தெரிந்த தாங்களும் இந்தக் காரியத்தில் இவனை ஏவி விட்டிருக்கிறீர்கள். தங்களுடைய நோக்கம் என்னவோ தெரியாது. சுவாமி! என்னவாயிருந்தாலும், அவனுடைய உயிரைக் காப்பாற்றிக் கொடுக்கும் பொறுப்பு தங்களுடையது" என்று ராணி தழுதழுத்த குரலில் கூறினாள். "உயிரைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தவர் கடவுள் ஒருவர்தான் அம்மா! ஆனாலும் உனக்கு ஒரு உறுதி சொல்லுகிறேன். விக்கிரமனுடைய வீரத் தந்தையின் ஆத்மா அவன் பக்கத்திலிருந்து அவனைக் காப்பாற்றும். நீ கவலைப்படாதே. எழுத்திரு!" என்றார். அச்சமயம் மேற்குத் திசையில் தூரத்தில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்கவே, சிவனடியார் விரைவாக விடைபெற்றுக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிச் சென்றார். சிவனடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மாரப்ப பூபதி குதிரை மீது வந்து இறங்கினான். உடனே, "விக்கிரமா! சிவனடியார் வரப்போகிறாரென்று சொன்னாயே? வந்துவிட்டாரா?" என்று கேட்டான். "இப்போதுதான் போனார்! சித்தப்பா! போய்ச் சில விநாடி நேரங்கூட ஆகவில்லை. சற்று முன்னால் வந்திருக்கப்படாதா!" என்று விக்கிரமன் சொல்லிக் சிவனடியார் போன திசையை நோக்கினான். அதைப் பார்த்த மாரப்பன். "இந்தச் சாலை வழியாகத் தானே போனார்? இதோ அவர் முகத்தைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்று கூறி, மறுபடியும் குதிரை மேலேறி விரைந்து சென்றான். ஆனால், அவன் அந்த நதிக்கரைச் சாலையோடு வெகுதூரம் குதிரையை விரட்டிக் கொண்டு போயும் சிவனடியார் தென்படவில்லை. அவர் மாயமாய் மறைந்து விட்டார்.



அத்தியாயம் நான்கு
மாமல்லபுரம்
கடற்கரைப் பட்டினமாகிய மாமல்லபுரத்தில் அன்று அல்லோலகல்லோலமாயிருந்தது. வீடுகள் எல்லாம் மாவிலைகளினாலும், தென்னங் குருத்துக்களினாலும் சிங்க உருவந் தாங்கிய கொடிகளினாலும், பல வர்ணத் தோரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. தெரு வீதிகளில் சித்திர விசித்திரமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. தேர்கள், யானைகள், குதிரைகள், கோபுரங்கள், பலவித விருட்சங்கள், பூஞ்செடிகள் - இவை போலெல்லாம் போட்ட கோலங்கள் கண்ணுக்கு விருந்தாயிருந்தன. அதிகாலையிலிருந்து ஸ்திரீகளும், புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் பட்டுப் பட்டாடைகளினாலும், பசும் பொன் ஆபரணங்களினாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு தெருவீதிகளிலும் திண்ணைகளிலும் கூட்டங் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எங்கே பார்த்தாலும் பேரிகை முழக்கம், மற்றும் மங்கள வாத்தியங்களின் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த ஒலிகளுக்கிடையில் " சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து கிளம்பி விட்டாராம்!" "பாதி வழி வந்தாகி விட்டதாம்!" "சக்கரவர்த்தியின் கோமகள் குந்தவி தேவியும் வருகிறாராம்!" என்றெல்லாம் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் கலகல சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. மாமல்லபுரம் வாசிகள் அத்தனை அதிக உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் அன்று உற்சவம் கொண்டாடியதின் காரணம் என்னவென்றால், அந்நகருக்கு அன்று மாமல்ல நரசிம்மவர்ம சக்கரவர்த்தி விஜயம் செய்வதாக இருந்தது தான். சக்கரவர்த்தி விஜயம் செய்து, ஏழெட்டு வருஷங் களுக்கு முன்னால் நின்றுபோன சிற்பப் பணியை மறுபடியும் ஆரம்பித்து வைப்பார் என்றும் அறிவிக்கப் பட்டி ருந்தது.

சக்கரவர்த்தியுடன் கூட அவருடைய செல்வக் குமாரி குந்தவி தேவியும் வரப்போவதாகத் தெரிந்திருந்தபடியால் மாமல்லபுர வாசிகள் எல்லையற்ற குதூகலத்துடன் அந்த நாளைத் திருநாளாகக் கொண்டாடினார்கள். அந்தக் காலத்தில், காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் புகழ் எண்டிசையிலும் பரவியிருந்தது. பாரத நாடெங்கும் அவருடைய கீர்த்தி வியாபித்திருந்ததோடு, கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தது. தெற்கே காவேரியாற்றங்கரையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதிக்கரை வரையில் பல்லவர்களின் சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்தது. அந்தப் பிரதேசத் திலுள்ள ஜனங்கள் எல்லாரும் நரசிம்மவர்மரிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தார்கள். அறிவிலும் வீரத்திலும் தயாள குணத்திலும் நடுக் கண்ட நீதி வழங்குவதிலும், குடிகளின் நலங்களைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாப்பதிலும், சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலிய கலைகளை வளர்ப்பதிலும் நரசிம்மவர்மர் மிகச் சிறந்து விளங்கியது பற்றி அவருடைய பிரஜைகள் மிக்க பெருமை கொண்டிருந்தார்கள். வடக்கே நர்மதை நதி வரையில் படையெடுத்துச் சென்று பொல்லாத புலிகேசியைப் போரில் கொன்று, வாதாபி நகரையும் தீக்கிரையாக்கி விட்டு வந்ததன் பின்னர், மாமல்ல சக்கரவர்த்தியைப் பற்றி அவருடைய குடிகள் கொண்டிருந்த பெருமை பன்மடங்கு பெருகியிருந்தன.

"தட்சிண தேசத்தில் நரசிம்மவர்மரைப் போல் ஒரு சக்கரவர்த்தி இதுவரையில் தோன்றியதுமில்லை; இனிமேல் தோன்றப் போவதுமில்லை! என்று அந்தக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் நம்பினார்கள். முன்னூறு வருஷத்துக்குப் பிறகு தஞ்சையில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் என்னும் மகாசக்கரவர்த்திகள் தோன்றப் போகிறார்கள் என்பதை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்க முடியாதல்லவா? இவ்விதம் பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் எல்லாருமே நரசிம்மவர்ம சக்கரவர்த்தியிடம் பக்தி விசுவாசம் கொண்டிருந்தவர்களாயினும், மாமல்லபுரம் வாசிகளுக்குச் சக்கரவர்த்தியிடம் ஒரு தனித்த உறவு ஏற்பட் டிருந்தது. அந்தப் பட்டினத்துக்குப் பெயரும் புகழும் அளித்தவர் அவரே யல்லவா? மகேந்திரவர்ம சக்கரவர்த் தியின் காலத்தில், நரசிம்மவர்மர் இளம் பருவத்தினராயிருந்தபோது, ஒரு தடவை மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்ற மல்லர்களையெல்லாம் தோற்கடித்து வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 'மகாமல்லன்' என்ற பட்டம் அவருடைய தந்தை மகேந்திரவர்மரால் அளிக்கப்பட்டது. சில காலத்திற்குப் பிறகு இந்தப் பட்டப் பெயரை வைத்தே அந்தக் கடற்கரைப் பட்டினத்துக்குப் பெயர் வழங்கலாயிற்று. "அப்பா! இந்தப் பட்டினத் துக்கு உங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்?" என்று கோமகள் குந்தவி தேவி, தந்தை நரசிம்மவர்மரைப் பார்த்துக் கேட்டாள். இருவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை மீது அம்பாரியில் வீற்றிருந்தார்கள்.

அந்தப் பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் வேலும் வாளும் தாங்கிய போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இன்னும் பலவகைப்பட்ட விருதுகளும் சென்றன. எல்லாருக்கும் முன்னால் பெரிய ரிஷபங்கள் முதுகில் முரசுகளைச் சுமந்து கொண்டு சென்றன. சற்று நேரத்துக்கொரு தடவை அந்த முரசுகள் அடிக்கப்பட்டபோது உண்டான சத்தம் அலைமோதிக்கொண்டு நாலாபுறமும் பரவியது. அம்பாரியின் மீது வீற்றிருந்த நரசிம்மவர்ம சக்கரவர்த்தியையும் அவர் அருமைப் புதல்வியையும் ஏக காலத்தில் பார்த்தவர்கள், உதய சூரியனையும் பூரணச் சந்திரனையும் அருகருகே பார்த்தவர்களைப் போல் திணறித் திண்டாடிப் போவார்கள். இருவருடைய திருமுகத்திலும் அத்தகைய திவ்ய தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களிலும், மற்ற ஆபரணங்களிலும் பதிந்த நவரத்தினங்களின் காந்தி பார்ப்பவர்களின் கண்களைக் கூசச் செய்தன. பல்லவ சக்கரவர்த்தி ஆஜானுபாகுவாய், கம்பீரமான தோற்றமுடையவராகயிருந்தார். வலிமையும் திறமையுங் கொண்ட அவருடைய திருமேனியில் மென்மையும் சௌந்தரியமும் கலந்து உறவாடின. இராஜ களை ததும்பிய அவருடைய முகத்தில் காணப்பட்ட காயங்களின் வடுக்கள், அவர் எத்தனையோ கோர யுத்தங்களில் கைகலந்து போரிட்டு ஜயபேரிகை முழக்கத்துடன் திரும்பி வந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன. கோமகள் குந்தவி தேவியோ பெண் குலத்தின் அழகெல்லாம் திரண்டு உருக்கொண்டவள் போலிருந்தாள்.

பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்த மகா சிற்பிகளும் ஓவியக்காரர்களும் குந்தவி தேவியிடம் தங்கள் கலைத்திறன் தோற்றுவிட்டதென்பதை ஒப்புக் கொண்டார்கள். "கோமகளின் கருவிழிகளில்தான் என்ன மாய சக்தி இருக்கிறதோ தெரியவில்லை. தேவி தமது அஞ்சனந் தீட்டிய கண்களை அகல விரித்து எங்களைப் பார்த்தவுடனேயே நாங்கள் உணர்விழந்து மெய்ம்மறந்து போய் விடுகிறோம். அப்புறம் சிற்பம் அமைப்பதெங்கே? சித்திரம் வரைவதெங்கே?" என்றார்கள். "எங்களையெல்லாம் கர்வ பங்கம் செய்வதற்கென்றே பிரம்மன் குந்தவி தேவியைப் படைத்திருக்க வேண்டும்!" என்று அவர்கள் சொன்னார்கள். "அப்பா! இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்? சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்" என்று மறுபடியும் கேட்டாள் குந்தவி. "அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம் இறங்கியாக வேண்டும்" என்றார் சக்கரவர்த்தி. "இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா" என்றாள் குந்தவி. "நீ சாதாரண மனுஷியாகயிருந்தால் குதிக்கலாம் அம்மா! குதித்துக் காலையும் ஒடித்துக் கொள்ளலாம்! சக்கரவர்த்தியின் மகளாயிருப்பதால் அப்படி யெல்லாம் செய்யக்கூடாது!" என்றார் சக்கரவர்த்தி. "எதற்காக அப்பா, அப்படி. சக்கரவர்த்தின் மகளாயிருப்பதால், யானை மேலிருந்து குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக்கூடவா பாத்தியதை இல்லை?" என்று சிரித்துக் கொண்டே குந்தவி கேட்டாள்.

"ஆமாம், ஆமாம்! அப்படி நீ இருந்தால் 'காஞ்சி சக்கரவர்த்தியின் மகள் குந்தவி யானை மேலிருந்து குதித்தாளாம்" என்ற செய்தி உலகமெல்லாம் பரவிவிடும். அப்புறம் அங்க, வங்க, கலிங்கம் முதலான ஐம்பத் தாறு தேசத்து இராஜ குமாரர்களில் யாரும் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள முன் வரமாட்டார்கள்! அப்புறம் உன் கலியாணத்துக்குச் சீதை விஷயத்தில் ஜனகர் செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்." "ஜனகர் தந்திரம் செய்தாரா? என்ன தந்திரம் அப்பா?" என்று குந்தவி கேட்டாள். "அது தெரியாதா உனக்கு? சீதை சிறு பெண்ணாயிருந்த போது ஒரு நாள் வில்லைத் தெரியாத்தனமாய்த் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களும் கலியாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். கடைசியில் சீதையின் தகப்பனார் என்ன செய்தார் தெரியுமா? விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய் அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில் முறித்து, முறிந்தது தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார்! இராமன் அந்த வில்லை விளையாட்டாக எடுத்ததும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்து விட்டது! உடனே ஜனகர், "ஐயையோ! எங்கள் குல சம்பத்தாகிய வில்லை ஒடித்து விட்டாயே! ஒன்று ஒடிந்த வில்லைச் சேர்த்துக் கொடு; இல்லாவிட்டால் என் மகள் சீதையைக் கலியாணம் பண்ணிக் கொள்" என்றார்.

இராமன் வேறு வழியில்லாமல் சீதையைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று!" "குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, "அப்பா! நானும் இராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லுவது புதிய இராமாயணமாயிருக்கிறதே!" என்றாள். சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், "ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிக் கவலை வேண்டாம் அப்பா! நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை" என்று சொன்னாள். சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டு, "அது என்ன சமாசாரம்? கலியாணம் உன்னை என்ன பண்ணிற்று? அதன்மேல் ஏன் அவ்வளவு கோபம்? என்று கேட்டார். அப்போது குந்தவி "கலியாணம் செய்து கொண்டால் நான் உங்களை விட்டுப் பிரியத்தானே வேண்டும்? உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு இஷ்டமில்லை. உங்களுடனேயே நான் எப்போதும் இருப்பேன்" என்றாள். அப்படி யா சமாசாரம் குந்தவி? இன்னொரு தடவை சொல்லு" என்றார் சக்கரவர்த்தி. "அதெல்லாம் ஒரு தடவைக் குமேல் சொல்ல மாட்டேன் அப்பா! நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே! ஒரு தடவைக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள்?" "ஓ ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! இந்த வாயாடிப் பெண்ணைக் கட்டிக் கொண்டு எந்த இராஜகுமாரன் திண்டாடப் போகிறானோ? யார் தலையில் அவ்விதமிருக்கிறதோ? அவனை நீதான் காப்பாற்றியருள வேண்டும்" என்று சொல்லியபடி சக்கரவர்த்தி தலைமேல் கைகூப்பி வானத்தை அண்ணாந்து நோக்கினார்.

"உங்களுடைய பரிகாசம் இருக்கட்டும். இப்போது யானையை நிறுத்துகிறீர்களா, இல்லையா? இல்லாவிடில் நான் கீழே குதித்து விட்டேனானால், அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும் கலியாணம் செய்து கொள்ள மாட்டான். எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக் கொண்டிருப்பேன்" என்று குந்தவி சொல்லி எழுந்து நின்று அம்பாரியிலிருந்து கீழே குதிப்பது போல் பாசாங்கு செய்தாள். "வேண்டாம், வேண்டாம் அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி வைக்காதே!" என்று கூறி பல்லவ சக்கரவர்த்தி யானைப்பாகனைக் கூப்பிட்டு யானையை நிறுத்தச் சொன்னார். யானை நின்றதும், தந்தையும் மகளும் கீழே இறங்கினார்கள். சக்கரவர்த்தி குதிரையும் பல்லக்கும் கொண்டு வரும்படி சமிக்ஞை காட்டினார். அவை அருகில் வந்ததும், பரிவாரத் தலைவனை அழைத்து, "நீங்கள் நேரே போய் நகர் வாசலருகில் நில்லுங்கள். நாங்கள் அங்கே வந்து சேர்ந்து கொள்கிறோம்" என்றார். பிறகு, குதிரைமீது ஆரோகணித்து இராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகப் போகத் தொடங்கினார். இளவரசி ஏறியிருந்த பல்லக்கும் அவரைத் தொடர்ந்து சென்றது. சக்கரவர்த்தி இம்மாதிரியெல்லாம் எதிர்பாராத காரியங்களைச் செய்வது சர்வ சகஜமாய்ப் போயிருந்தபடியால், அவரைத் தொடர்ந்து வந்த பரிவாரங்கள் சிறிதும் வியப்பு அடையாமல் இராஜ மார்க்கத்தோடு மேலே சென்றன.



அத்தியாயம் ஐந்து
உறையூர்த் தூதன்

இயற்கையாகப் பூமியிலெழுந்த சிறு குன்றுகளை அழகிய இரதங்களாகவும் விமானங்களாகவும் அமைத்திருந்த ஓர் இடத்திற்குச் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து சேர்ந்தார்கள். அந்த விமானக் கோயில்களையொட்டி, ஒரு கல்யானையும் கற்சிங்கமும் காணப்பட்டன. இவையும் இயற்கையாகப் பூமியில் எழுந்த பாறைகளைச் செதுக்கிச் செய்த வடிவங்கள்தாம். அவற்றுள் யானையின் சமீபமாகச் சக்கரவர்த்தி வந்தார். "குந்தவி! இந்த யானையைப் பார்த்தாயா? தத்ரூபமாய் உயிருள்ள யானை நிற்பது போலவே தோன்றுகிறதல்லவா? முப்பது வருஷத்துக்கு முன்னால் இங்கே இந்த யானை இல்லை; ஒரு மொட்டைக் கற்பாறைதான் நின்றது!" "இந்தக் கோயில்கள் எல்லாமும் அப்படித்தானே மொட்டை மலைகளாயிருந்தன?" என்று குந்தவி கேட்டாள். "ஆமாம் குழந்தாய்! இன்று நீயும் நானும் வந்திருப்பது போல் முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தகப்பனாருடன் நான் இங்கு வந்தேன். உன் தாத்தாவைப் பற்றித் தான் உனக்கு எல்லாம் தெரியுமே. சிற்பம் சித்திரம் என்றால் அவருக்கு ஒரே பைத்தியம்!" "உங்களுக்குப் பைத்தியம் ஒன்றும் குறைவாயில்லையே?" என்று குந்தவி குறுக்கிட்டாள். சக்கரவர்த்தி புன்னகையுடன் "என்னைவிட அவருக்குத்தான் பைத்தியம் அதிகம். செங்கல்லினாலும் மரத்தினாலும் அவர் ஆயிரம் கோயில்கள் கட்டினார். அப்படியும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. என்றும் அழியாத பரம்பொருளுக்கு என்றும் அழியாக் கோயில்களைக் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார். மலையைக் குடைந்து கோயில்கள் அமைக்க விரும்பினார்.

அந்தக் காலத்திலே தான் ஒருநாள் அவரும் நானும் இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டு வந்தோம். அப்போது எனக்கு உன் வயது தானிருக்கும். தற்செயலாக ஆகாசத்தைப் பார்த்தேன். வெண்ணிறமான சிறு சிறு மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் அவ்வப்போது வெவ்வேறு ரூபங் கொண்டு தோன்றின. ஒரு சிறு மேகம் யானையைப் போல் காணப்பட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பாறையண்டை வந்தேன். கையில் கொண்டு வந்திருந்த காசிக் கட்டியினால் யானையின் உருவத்தை இதன்மேல் வரைந்தேன். அதை அப்பா பார்த்துக் கொண்டேயிருந்தார். யானை உருவத்தை நான் எழுதி முடித்ததும் என்னைக் கட்டி தூக்கிக் கொண்டு கூத்தாடத் தொடங்கினார். "நரசிம்மா! என்ன அற்புதமான யோசனை உன் யோசனை! இங்குள்ள பெரிய பாறைகளை யெல்லாம் கோயில்களாக்கி விடுவோம். சின்னச்சின்னப் பாறைகளையெல்லாம் வாகனங்களாகச் செய்துவிடுவோம். இந்த உலகமுள்ள அளவும் அழியாதிருக்கும் அற்புதச் சிற்பங்களை எழுப்புவோம்! என்று வெறி பிடித்தவர்போல் கூறினார். அவ்விதமே சீக்கிரத்தில் இங்கே சிற்ப வேலைகளை ஆரம்பித்தார். அதுமுதல் இருபது வருஷகாலம் இந்தப் பிரதேசத்தில் இடைவிடாமல் ஆயிரக்கணக்கான கல்லுளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வட தேசத்துக்குப் படை யெடுத்துப் போன போதுதான் நின்றது..." இவ்விதம் சொல்லிச் சக்கரவர்த்தி நிறுத்தி ஏதோ யோசனையிலாழ்ந்தவர் போல் இருந்தார். சற்றுப் பொறுத்துக் குந்தவி, "ஆமாம் அப்பா, இருபது வருஷமாய் நடந்து வந்த சிற்பப் பணியை நிறுத்தி விட்டீர்களே என்ற சந்தோஷத்தினால்தான் உங்கள் பெயரை இந்தப் பட்டினத்துக்கு வைத்தார்கள் போலிருக்கிறது!" என்று சொல்லிவிட்டுக் குறும்பாக புன்னகை செய்தாள்.

அதைக் கேட்ட சக்கரவர்த்தி உரக்கச் சிரித்துவிட்டு "இல்லை அம்மா! இந்தச் சிற்பப்புரி தோன்றுவதற்கு நான் காரணமாயிருந்த படியினால் என் தகப்பனார் இப்பட்டினத்துக்கு என் பெயரை அளித்தார். 'நரசிம்மன்' என்ற பெயருடன் எத்தனையோ இராஜாக்கள் வரக்கூடும். 'மாமல்லன்' என்ற பட்டப் பெயர் வேறொருவரும் வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்று யோசித்து, அப்பா இந்தப் பட்டினத்துக்கு 'மாமல்லபுரம்' என்று பெயர் சூட்டினார். அப்பாவுக்கு என்மேலே தான் எவ்வளவு ஆசை!" என்று கூறி மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தார். "ஆமாம்; தாத்தாவுக்கு உங்கள் பேரில் இருந்த ஆசையில் நூறில் ஒரு பங்குகூட உங்களுக்கு என் அண்ணா மேல் கிடையாது. இருந்தால் அண்ணாவைக் கப்பல் ஏற்றிச் சிங்களத்துக்கு அனுப்புவீர்களா?" என்று கேட்டாள் குந்தவி. "குழந்தாய், கேள்! என்னுடைய இளம்வயதில் எனக்கு எத்தனையோ மனோரதங்கள் இருந்தன. அவற்றில் பல நிறைவேறின, ஆனால் ஒரே ஒரு மனோரதம் மட்டும் நிறைவேறவில்லை. கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தூர தேசங்களுக் கெல்லாம் போய்வர வேண்டுமென்று நான் அளவில்லாத ஆசை கொண்டிருந்தேன். அதற்கு என் தந்தை அனுமதிக்கவில்லை. நான் இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறிய பிறகு கடற்பிரயாணம் செய்வதென்பது முடியாத காரியமாகி விட்டது. எனக்குக் கிடைக்காத பாக்கியம் என் பிள்ளைக்காவது கிடைக் கட்டுமே- என்றுதான் உன் தமையனைச் சிங்கள தீவுக்கு அனுப்பினேன். இன்னும் எனக்கு எந்தச் சிறுபிள்ளையினிடமாவது அதிகமான பிரியம் இருந்தால், அவனையும் கடற் பிரயாணம் செய்து வரும்படி அனுப்புவேன்" என்றார் சக்கரவர்த்தி.

"அப்படியானால் உங்களுக்கு என்னிடம் மட்டும் பிரியம் இல்லை போலிருக்கிறது" என்று குந்தவி சொல்வதற் குள்ளே, "உன்னைக் கப்பல் ஏற்றி அனுப்ப எனக்குப் பூர்ண சம்மதம்! ஆனால் நீ பெண்ணாய்ப் பிறந்து விட்டாயே, என்ன செய்கிறது? ஒவ்வொரு சமயம் நீ பிள்ளையாய்ப் பிறந்திருந்து, உன் தமையன் பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா? - என்று எனக்குத் தோன்றுவதுண்டு" என்றார் சக்கரவர்த்தி. "நான் மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், உங்களை இத்தனைக் காலமும் இந்தச் சிம்மாசனத்தில் வைத்திருப்பேனா? கம்சன் செய்ததைப் போல் உங்களைச் சிறையில் போட்டுவிட்டு நான் பட்டத்துக்கு வந்திருக்க மாட்டேனா? அண்ணாவுக்கு ஒன்றுமே தெரியாது, சாது! அதனால் நீங்கள் சொன்னதும் கப்பலேறிப் போய்விட்டான்" என்று குந்தவி சொல்லிவிட்டு அந்த மலைக் கோயில்களைச் சுற்றி ஓடியாடிப் பார்க்கத் தொடங்கினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கரவர்த்தி "வா! குழந்தாய்! இன்னொரு தடவை சாவகாசமாய்ப் பார்க்கலாம், ஊரில் ஜனங்கள் எல்லோரும் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்" என்றதும் குந்தவி வரண்டை வந்து "அப்பா! இந்தக் கோயில்கள் இன்னும் அரைகுறையாகத்தானே இருக்கின்றன? மீண்டும் நீங்கள் ஆரம்பிக்க போகும் திருப்பணி வேலை இங்கேயும் நடக்குமல்லவா? இந்தக் கோயில்களுக்குள்ளே எல்லாம் என்னென்ன சுவாமியைப் பிரதிஷ்டை செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள். சற்று தூரத்தில் பல்லக்கும் குதிரையும் ஒரு மரத்தடியில் நிறுத்தப் பட்டிருந்தன. அந்த மரத்தை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

குந்தவியின் கேள்விக்குப் பதிலாகச் சக்கரவர்த்தி பின்வருமாறு சொன்னார்:- "இல்லை, குழந்தாய்! இந்தக் கோயில்கள் இப்படியே தான் பூர்த்தி பெறாமல் இருக்கும். இந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வேலை நடக்கும். குந்தவி! ஆயனர் என்ற மகாசிற்பி இந்த ஊரில் இருந்தார். அவருடைய தலைமையில்தான் இந்தக் கோயில்களின் வேலை ஆரம்பமாயிற்று. அவர்தான் இவ்வளவு வரை செய்து முடித்தவர். பிறகு அவர் சில துரதிர்ஷ்டங்களுக்கு ஆளானார்; கொஞ்ச நாளைக்கு முன் சொர்க்கம் சென்றார். அவர் தொடங்கிய வேலையைச் செய்து முடிக்கக்கூடிய சக்தியுள்ளவர்கள் இப்போது யாரும் இல்லை, இனிமேல் வரப்போவதும் இல்லை!" "ஆயனரைப் பற்றிக் கேட்டிருக்கிறேன் அப்பா! அவருடைய மகள்....?" என்று குந்தவி சொல்வதற்குள் "அதோ யாரோ குதிரைமேல் வருகிறானே யாராயிருக்கும்?" என்றார் மகாமல்லர். பேச்சை மாற்றுவதற்காகவே அவர் சொன்ன போதிலும் உண்மையில் கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டுதானிருந்தது. சக்கரவர்த்தியும் குந்தவியும் மரத்தடிக்குப் போய் நின்றதும், அங்கே குதிரை வந்து நின்றதும் சரியாயிருந்தன. குதிரைமேலிருந்தவன் விரைவாக இறங்கிப் பயபக்தியுடன் சக்கரவர்த்தியின் அருகில் வந்து ஓர் ஓலையை நீட்டினான். "அடியேன் தண்டம்! உறையூரிலிருந்து வந்தேன்! அச்சுத பல்லவராயர் இந்த ஓலையை ஒரு கணமும் தாமதியாமல் சக்கரவர்த்தியின் திருச் சமூகத்தில் சேர்ப்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்!" என்றான். சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக் கொண்டார்.

அதில் என்ன எழுதியிருக்கிறதென்று பார்க்காமலே தூதனை நோக்கி "நீ போகலாம்! இதில் அடங்கிய விஷயத்தைப் பற்றிய கட்டளை நேற்றே அனுப்பிவிட்டோ ம்" என்றார். தூதன் தண்டம் சமர்ப்பித்துவிட்டுத் திரும்பி விரைந்து சென்றான். "நன்றாயிருக்கிறது அப்பா, நீங்கள் ராஜ்ய பாரம் செய்கிற இலட்சணம்? ஓலை வந்தால் அதைப் படித்துக் கூடப் பார்க்கிறதில்லையா?" என்று கோமகள் கேட்டாள். "என்னுடைய ஞான திருஷ்டியில் உனக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது! இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல்லட்டுமா? சோழராஜ குமாரன் விக்கிரமன் இந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்று சோழ நாட்டின் சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான். அவனை என்ன செய்வது என்று தளபதி அச்சுத பல்லவராயன் கேட்டிருக்கிறான். நீ வேணுமானால் படித்துப் பார்!" என்று ஓலையைக் குந்தவியிடம் கொடுத்தார். குந்தவி அதைப் படித்துவிட்டு வியப்புடன் சக்கரவர்த்தியை நோக்கினாள். "உங்களிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது, அப்பா! அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?" என்றாள். சக்கரவர்த்தி குதிரையின் மேலும், குந்தவி பல்லக்கிலும் அமர்ந்தார்கள். வழியில் கோமகள், "அப்பா! அந்த இராஜகுமாரனுக்கு என்ன அவ்வளவு அகந்தை? மாமல்ல சக்கரவர்த்தியின் கீழ் கப்பம் கட்டிக் கொண்டு வாழக் கொடுத்துவைக்க வேண்டாமா? அவனை நீங்கள் சும்மா விடக்கூடாது; தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்" என்றாள். "ஆமாம், குழந்தாய்! ஆமாம்! அவனைச் சும்மாவிடப் போவதில்லை. காஞ்சிக்கு அழைத்து வரச் செய்து நானே தகுந்த தண்டனை விதிக்கப் போகிறேன்" என்றார் சக்கரவர்த்தி.



அத்தியாயம் ஆறு
கலைத் திருநாள்
மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர் களுடைய வீட்டு வாசலில் தரிசித்து உபசரித்து மகிழ்ந்தார்கள். மறுநாள் சரஸ்வதி பூஜையன்று காலையில் நகர வாசிகள் தத்தம் வீடுகளில் வாணி பூஜை நடத்தினார்கள். பிற்பகலிலும் சாயங் காலத்திலும் பொது இடங்களில் கலைமகளின் திருநாளைக் கொண்டாடினார்கள். கோயில்கள், மடாலயங்கள், கலா மண்டபங்கள், வித்யாசாலைகள் எல்லாம் அமோகமான அலங்காரங்களுடன் விளங்கின. அன்று சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன் கோயில்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சகர்களுக்குக் சன்மானம் அளித்தார்கள். கலைக் கூடங்களுக்கும், வித்யாசாலைகளுக்கும் விஜயம் செய்து, ஆசாரியர்களுக்குப் பொன்னும் புதுவஸ்திரங்களும் பரிசளித்தார்கள். அவர்கள் நகரில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் போகும் போதெல்லாம் வீதியில் ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று பலவித வாழ்த்தொலிகளினால் தங்களுடைய குதூகலத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால், மாமல்லபுர வாசிகளுடைய குதூகலத்தின் முழு அளவையும் மறுநாள் விஜய தசமியன்றுதான் பார்க்கக் கூடியதாயிருந்தது. அன்று திருவிழா நகருக்கு வெளியே நடந்தது. மாமல்ல புரத்துக்குத் தெற்கே நெடுந் தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி நின்ற சிறு குன்றுகளும், பாறைகளும் அன்று அற்புதமான தோற்றங்கொண்டு விளங்கின. பாறைகளின் சுவர்களிலெல்லாம் விதவிதமான வர்ண வேறுபாடுகளுடன் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருந்தன.

ஒரு விசாலமான பாறையிலே, நந்த கோகுலத்தில் பாலகோபாலன் செய்த லீலைகள், பூதனை சம்ஹாரத்திலிருந்து காளிங்க நர்த்தனம் வரையில் வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன. தயிர் கடைந்து கொண்டிருந்த யசோதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெண்ணெய் வேண்டுமென்று கண்ணன் கெஞ்சிக் கொண்டிருந்த சித்திரத்தைப் பார்த்த வண்ணமே வாழ்நாளைக் கழித்துவிடலாமென்று தோன்றியது. இருபிளவாகப் பிளந்திருந்த இன்னொரு பாறையில் ஆகாச கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் கடுந் தவம் செய்த காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய தவ மகிமையினால் கவரப்பட்டுத் தேவர்கள் முனிவர்கள் எல்லாரும் வந்து இருபுறமும் நிற்கிறார்கள். அவர்களுடைய முகங்களில் வியப்பும் பக்தியும் காணப் படுகின்றன. இந்த ஒப்பற்ற சித்திரக் காட்சியை எழுதிய ஓவியக்காரன் நகைச்சுவை நிரம்ப உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மூலையில் கண்ணைமூடிக் கொண்டு தவஞ் செய்வதாகப் பாசாங்கு செய்த ஒரு பூனையின் உருவத்தையும் அவன் எழுதியிருந்தான். இந்த மாதிரி எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் காட்சிகள் ஒவ்வொரு பாறை முகப்பிலும் காணப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பட்டுப் பட்டாடைகளை அணிந்து, திவ்ய ஆபரணங்களைப் பூண்டிருந்தார்கள். ஸ்திரீகள் கூந்தலில் மலர் சூடியிருந்தார்கள். புருஷர்கள் கழுத்தில் பூமாலைகளை அணிந்திருந்தார்கள்.

எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமாகவும் குதூகலமாகவும் இருந்தது. ஜனங்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்குச் சித்திரக் காட்சிகளைத் தவிர இன்னும் பல சாதனங்களும் அங்கேயிருந்தன. ஆங்காங்கு வாழை மரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறு சிறு பந்தல்கள் காணப்பட்டன. அந்தப் பந்தல்களில் இசை விருந்துகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பந்தலிலிருந்து வீணையின் ஒலி எழுந்தது. இன்னொரு பந்தலிலிருந்து குழலோசை வந்து கொண்டிருந்தது. வேறொரு பந்தலில் வேதியர்கள் ஸாமகானம் செய்து கொண்டிருந்தார்கள். மற்றொரு பந்தலில் ஓர் இசைப் புலவர் அப்பர் பெருமானின் தேவாரப் பதிகங்களைப் கல்லுங்கனியப் பாடிக் கொண்டிருந்தார். ஜனங்கள் அவரவர் களுக்கு இஷ்டமான இடத்திலே போய் நின்று சித்திரக் காட்சிகளையும், இசை விருந்துகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவல் பொரியும் சர்க்கரையும் பானகமும் நீர்மோரும் வந்தவர்களுக்கெல்லாம் உபசரிப்புடன் வழங்கப்பட்டன. இவ்விதம் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜன சமுத்திரமாய்த் தோன்றியதாயினும் அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓரிடத்தில் மிகவும் நெருங்கிய ஜனக் கூட்டம் காணப்பட்டது. இக்கூட்டம் ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காட்சியானது சிறு சிறு அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருக்கும் சமுத்திரத்தில் ஒரே ஒரு பெரிய அலை மட்டும் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. இந்தப் பெரிய அலைக்குக் காரணமாயிருந்தவர்கள் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியுந்தான்.

நரசிம்மவர்மர் உயர்ந்த ஜாதிப் புரவி ஒன்றின் மேல் வீற்றிருந்தார். குந்தவி தேவியோ பக்கத்தில் இருந்தாள். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் கூட்டத்தை விலக்கி வழி செய்வதற்காக ஒரு சில வீரர்கள் மட்டுமே சென்றார்கள். அவர்களுக்குச் சற்று முன்னால், சக்கரவர்த்தியின் வருகையை அறிவிப்பதற்காக, ஒரு பெரிய ரிஷபத்தின் மேல் முரசு வைத்து அடித்துக் கொண்டு போனார்கள். ஜனத் திரளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலம் ஆங்காங்கு நின்று நின்று போகவேண்டியிருந்தது. சித்திரக் காட்சியைப் பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை இரைத்தார்கள். சந்தனக் குழம்பை அள்ளித் தெளித்தார்கள். "ஜய விஜயீ பவ!" என்றும், "தர்ம ராஜாதிராஜர் வாழ்க!" "திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க!" "நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க!" "மாமல்ல மன்னர் வாழ்க" என்றும் கோஷித்தார்கள். சக்கரவர்த்தி ஒவ்வொரு சித்திரக் காட்சியையும் விசேஷ சிரத்தை யுடன் பார்வையிட்டு, ஆங்காங்கு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த ஓவியக்காரர்களிடமும், சிற்பக் கலைஞர்களிடமும் தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டு வந்தார். இவ்விதம் சுற்றிப் பார்த்துக்கொண்டு கடைசியாக ஊர்வலம் துர்க்கை ஆலயத்தண்டை வந்து சேர்ந்தது. இந்தத் துர்க்கை ஆலயம் மகேந்திரவர்மனின் காலத்திலே குன்றில் குடைந்து நிர்மாணித்தது. திருப்பணி வேலை இடையில் தடைப்பட்டுப் பூர்த்தியாகாமல் இருந்தது. அன்று நடந்த கோலாகலமான விழாக் கொண்டாட்டத்தில் இந்தத் துர்க்கை ஆலயந்தான் நடுநாயகமாயிருந்தது.

அந்தப் பாறைக் கோயிலுக்கு எதிரே மிகவும் விஸ்தாரமான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலுக்கு உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தால் அமாவாசையன்று நள்ளிரவில் துல்லியமான ஆகாயத்தைப் பார்க்கிறோமோ? என்ற பிரமை உண்டாகும். அவ்விதம் பிரகாசமான நட்சத்திரங்களைப் போல ஜொலித்த எண்கோணப் பொட்டுக்கள் அமைந்த நீலப் பட்டாடையினால் மேல் விதானம் கட்டியிருந்தார்கள். பந்தலின் தூண்களில் விதவிதமான வர்ணப் பட்டாடைகளைச் சுற்றியிருந்தார்கள். பந்தலுக்கு மேலே வரிசையாகச் சிங்கக் கொடிகள் மாலைக் கடற்காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் விளிம்புகளில் இளந்தென்னங் குருத்துக்களினாலான தோரணங்கள் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் மத்தியில், தேவியின் சன்னதிக்கு எதிரே, சக்கரவர்த்திக்கும் அவருடைய புதல்விக்கும் இரண்டு அழகிய சிம்மாசனங்களும், அவற்றைச் சுற்றிலும் வரிசை வரிசையாகிய இன்னும் பல ஆசனங்களும் அமைக்கப் பட்டிருந்தன. புலிகேசியின் படையெடுப்பினால் தடைப்பட்டுப் போன சிற்பத் திருப்பணியை இந்தத் துர்க்கா தேவியின் கோயிலில் விஜயதசமி தினத்தில் மீண்டும் தொடங்குவதற்காக ஏற்பாடாகி இருந்தது. சக்கரவர்த்தி வருவதற்கு நெடுநேரத்திற்கு முன்னமேயே பந்தலில் மந்திரி மண்டலத்தாரும், மற்ற அதிகாரிகளும் வந்து அவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் பந்தலுக்குள் வந்ததும் சபையினர் அனைவரும் எழுந்து நின்றதுடன், ஜய கோஷங்களும் வாழ்த்தொலிகளும் வாத்திய முழக்கங்களும் வானை அளாவி எழுந்தன.



அத்தியாயம் ஏழு
திருப்பணி ஆலயம்

சக்கரவர்த்தியும் குந்தவியும் முதலில் கோவிலுக்குள்ளே சென்று அம்பிகையைத் தரிசித்து விட்டு வந்தார்கள். பந்தலின் நடுவில் அமைந்திருந்த சிம்மாசனங்களில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து அமர்ந்ததும் மந்திரி மண்டலத்தாரும் மற்றவர்களும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தனர். கோயில் குருக் கள்மார் தொடர்ந்து வந்து சக்கரவர்த்திக்கும் மற்றவர்களுக்கும் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, மலர் மாலைகள் சூட்டி முழக்கங்களுக்கிடையே சக்கரவர்த்தி தம் திருக்கரத்தினால் ஆசாரிய ஸ்தபதியின் தலையில் பட்டுப் பரிவட்டம் கட்டினார். பிறகு உயர்ந்த பட்டு வஸ்திரங்களும் நூறு பொன் கழஞ்சுகளும் வைத்திருந்த தாம்பூலத் தட்டையும் அவரிடம் கொடுத்தார். அவற்றை ஆசாரிய ஸ்தபதி வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அவ்விதமே அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் மந்திரி மண்டலத்தாருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தலையில் பரிவட்டம் கட்டிப் பட்டு வஸ்திரங்களையும் பொன் கழஞ்சு களையும் பரிசளித்தார்கள். பின்னர் மந்திரி மண்டலத்தின் தலைவரான விஷ்ணு சர்மர் எழுந்து சபையோரைப் பார்த்துப் பேசினார். பல்லவ ராஜ வம்சத்தில் தோன்றிய பெயர் பெற்ற மன்னர்களின் வீரதீர பராக்கிரமங் களை அவர் வர்ணித்தார். அவர்களில் கடைசி மன்னரான மகேந்திர வர்மரின் அற்புத குணாதிசயங்களைப் புகழ்ந்தார்.

அவருடைய அருந்தவப் புதல்வரான மாமல்ல சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்த பிறகு பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் கடல்களுக்கு அப்பாலும் பரவியிருக்கிறதென்றும், அதற்கு உதாரணமாக இந்தச் சபையிலேயே ஒரு சம்பவம் நடக்கப்போகிறதென்றும், செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் தங்க ளுடைய தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக்கொண்டு பரிபாலிக்கும் படி சக்கரவர்த்தியை வேண்டிக் கொள்ளப் போகிறார் என்றும் விஷ்ணு சர்மர் தெரிவித்த போது, சபையோர் தங்களுடைய குதூகலத்தைப் பலவித கோஷங்களினால் வெளியிட்டனர். மீண்டும் அமைச்சர் தலைவர் கூறியதாவது:- "மகாஜனங்களே! காஞ்சியும் மாமல்லபுரமும் பல்லவ சாம்ராஜ்யத்தின் இரு கண்களாகும். சாம்ராஜ்யத்துக்குத் தலை நகரமான காஞ்சி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு துறைமுகப்பட்டினமான மாமல்லபுரம் நெடுநாளாக முக்கியமாயிருந்து வந்தது. ஆனால் காலஞ்சென்ற மகேந்திர சக்கரவர்த்தி இங்கே சிற்பத் திருப்பணியை ஆரம்பித்த பிறகு, காஞ்சியின் பெருமை சிறிது தாழ்ந்து மாமல்லபுரத்தின் புகழ் ஓங்கிவிட்டது. எட்டு வருஷங்களுக்கு முன்பு நமது சக்கரவர்த்திப் பெருமான் வடதேசத்துக்குப் படையெடுத்துச் சென்ற போது, இங்கு நடந்துவந்த சிற்பத் திருப்பணியை நிறுத்த வேண்டியிருந்தது. பாதகனான புலிகேசியைக் கொன்று வாதாபியைத் தீக்கிரையாக்கி விட்டுத் திரும்பிய பிறகு சில காலம் தேசத்திலிருந்து பஞ்சம் பிணிகளை நீக்கும் முக்கியமான பிரயத்தனங்களிலும், உள்நாட்டுச் சிறு பகைகளை அழிக்கும் முயற்சியிலும் சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பராசக்தியின் அருளினாலும், பல்லவ குலத்தின் பரம்பரையான தர்ம பலத்தினாலும், சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்த அந்தக் காரியங்கள் எல்லாம் இனிது நிறைவேறிவிட்டன.

சக்கரவர்த்தியின் திருப்பெயரைப் பூண்ட இந்தப் பட்டினத்திலே சிற்பத் திருப்பணிகள் இன்று மறுபடியும் ஆரம்பமாகின்றன. இனிமேல் சக்கரவர்த்தியும் இந்த நகருக்கு அடிக்கடி விஜயம் செய்து திருப்பணி வேலைகளை மேற்பார்வை செய்வதாகக் கிருபை கூர்ந்து வாக்களித்திருக்கிறார்." இவ்விதம் அமைச்சர் தலைவர் கூறிச் சபையோரை ஆனந்தக் கடலில் ஆழ்த்திய பிறகு, செண்பகத் தீவின் தூதர்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுடைய தலைவன் பேசியது தமிழ்மொழியேயானாலும் சற்று விசித்திரமான தமிழாயிருந்த படியால், சபையோர்களுக்குப் புன்னகை உண்டு பண்ணிற்று. அந்தத் தூதர் தலைவன் கூறியதின் சாராம்சம் பின்வருமாறு:- செண்பகத் தீவின் வாசிகள், சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கரிகால் சோழரின் காலத்தில் சோழ நாட்டிலிருந்து அங்கே போய்க் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள், அந்தத் தீவை ஆண்டு வந்த ராஜ வம்சம் சந்ததியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு நசித்துப் போய்விட்டது. ஆகவே, செண்பகத் தீவு தற்சமயம