தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கி - சிவகாமியின் சபதம் > பாகம் 1  - அத்தியாயங்கள் 1-47  > பாகம் 2  - அத்தியாயங்கள் 1-55  > பாகம் 3  - அத்தியாயங்கள் 1-57 > பாகம் 4  - அத்தியாயங்கள் 1-50

Acknowledgements: Our sincere thanks go to Mr. Bhaskaran Sankaran and colleagues of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for their dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM with conversion to TSCII format.
Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
Web Version and TSC proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 

கல்கியின் சிவகாமியின் சபதம்
பாகம் - 3:  பிக்ஷுவின் காதல்
(அத்தியாயங்கள் 1-57)

kalkiyin civakAmiyin capatam
part-3 pikshuvin kAtal (chapters 1- 57)


உள்ளுறை
அத்தியாயங்கள்
3.01 - அழியா மதில் மின்பதிப்பு
3.02 - யானைப் பாலம் மின்பதிப்பு
3.03 - உடன்படிக்கை மின்பதிப்பு
3.04 - வேங்கி தூதன் மின்பதிப்பு
3.05 - காஞ்சி ஒற்றன் மின்பதிப்பு
3.06 - பிக்ஷுவின் செய்தி மின்பதிப்பு
3.07 - மகேந்திர ஜாலங்கள் மின்பதிப்பு
3.08 - யோக மண்டபம் மின்பதிப்பு
3.09 -யுத்த நிறுத்தம் மின்பதிப்பு
3.10 -வாக்கு யுத்தம் மின்பதிப்பு
3.11 - வரவேற்பு மின்பதிப்பு
3.12 - மூன்று உள்ளங்கள் மின்பதிப்பு
3.13 - இராஜோபசாரம் மின்பதிப்பு
3.14 - "வாழி நீ மயிலே!" மின்பதிப்பு
3.15 - "நமனை அஞ்சோம்!" மின்பதிப்பு
3.16 - புலிகேசியின் புறப்பாடு மின்பதிப்பு
3.17 - சின்னக் கண்ணன் மின்பதிப்பு
3.18 - சின்னக் கண்ணன் மின்பதிப்பு
3.19 - சுரங்க வழி மின்பதிப்பு
3.20 - காபாலிகர் குகை மின்பதிப்பு
3.21 - கோபாக்னி மின்பதிப்பு
3.22 - புலிகேசி ஆக்ஞை  மின்பதிப்பு
3.23 - அபயப் பிரதானம் மின்பதிப்பு
3.24 - அட்டூழியம் மின்பதிப்பு
3.25 - வேஷதாரி மின்பதிப்பு
3.26 - கர்வ பங்கம் மின்பதிப்பு
3.27 - வெற்றி வீரர் மின்பதிப்பு
3.28 - பட்டிக்காட்டுப் பெண் மின்பதிப்பு
3.29 - காற்றும் நின்றது! மின்பதிப்பு
3.30 - "சிவகாமி எங்கே?" மின்பதிப்பு
3.31 - புலிகேசி ஓட்டம் மின்பதிப்பு
3.32 - இரத்தம் கசிந்தது மின்பதிப்பு
3.33 - இருள் சூழ்ந்தது மின்பதிப்பு
3.34 - இந்தப் பெண் யார்? மின்பதிப்பு
3.35 - கலங்கிய குளம் மின்பதிப்பு
3.36 - சத்ருக்னன் வரலாறு மின்பதிப்பு
3.37 - புலிகேசியும் சிவகாமியும்   மின்பதிப்பு
3.38 - வாதாபி மார்க்கம் மின்பதிப்பு
3.39 - சகோதரர்கள் மின்பதிப்பு
3.40 - அஜந்தா அடிவாரம் மின்பதிப்பு
3.41 - அஜந்தா குகையில் மின்பதிப்பு
3.42 - பிக்ஷுவின் காதல் மின்பதிப்பு
3.43 - புலிகேசியின் வாக்குறுதி மின்பதிப்பு
3.44 - நள்ளிரவுப் பிரயாணம் மின்பதிப்பு
3.45 - மகேந்திரர் அந்தரங்கம் மின்பதிப்பு
3.46 - வாதாபி மின்பதிப்பு
3.47 - வீதி வலம் மின்பதிப்பு
3.48 - நாற்சந்தி நடனம் மின்பதிப்பு
3.49 - பிக்ஷுவின் வருகை மின்பதிப்பு
3.50 - சிவகாமியின் சபதம் மின்பதிப்பு
3.51 - ஜயஸ்தம்பம் மின்பதிப்பு
3.52 - வளையற்காரன் மின்பதிப்பு
3.53 - சந்தேகம் மின்பதிப்பு
3.54 - விபரீதம் மின்பதிப்பு
3.55 - கத்தி பாய்ந்தது! மின்பதிப்பு
3.56 - மகேந்திரர் கோரிக்கை மின்பதிப்பு
3.57 - இராஜகுல தர்மம் மின்பதிப்பு
  

கல்கியின் "சிவகாமியின் சபதம் "
பாகம்-3: பிக்ஷுவின் காதல்

முதல் அத்தியாயம்அழியா மதில்

வாதாபி சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின் காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக் கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல் கம்பீரமாகத் தலைதூக்கி நின்றன. வாதாபிப் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன் கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே கால் வைக்கவும் முடியவில்லை. வாதாபி வீரர்கள் காஞ்சிக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டவுடனே, வைஜயந்தி பட்டணத்தில் செய்தது போலவே ஒரே மூர்க்கமாய்க் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்ற யத்தனித்தார்கள். காலாட் படையைச் சேர்ந்த கணக்கற்ற வீரர்கள் ஏக காலத்தில் கோட்டையின் நாற்புறத்திலும் அகழிகளை நீந்திக் கடக்க முயன்றார்கள். கோட்டை மதில்களின் மேல் மறைவான இடங்களிலிருந்து மழை போல் பொழிந்த அம்புகளும் அகழியிலிருந்த முதலைகளும் அவ்வீரர்களையெல்லாம் எமலோகத்துக்கு அனுப்பின. தப்பித் தவறிக் கரையேறிய வீரர்கள் கோட்டை மதிலோரமாகக் கண்ணுக்குத் தெரியாமல் அமைந்திருந்த பொறிகளில் அகப்பட்டுத் திண்டாடினார்கள். ஆங்காங்கு அகழிகளில் இறங்கிய யானைகளுக்கும் அகழியிலிருந்த முதலைகளுக்கும் பயங்கரமான போராட்டம் நடந்ததில், அகழியில் நிறைந்திருந்த தண்ணீரெல்லாம் செந்நீராக மாறியது.

முதல் முயற்சியில் தோற்ற பிறகு, கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத் தூர்த்துக் கோட்டைக் கதவுகள் மேல் யானைகளை மோதச் செய்ய முயன்றார்கள். காஞ்சியைச் சுற்றியிருந்த பெரிய பெரிய விருக்ஷங்களையெல்லாம் மத்த கஜங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்து அகழியில் போட்டுத் தூர்த்தன. ஆனால், இந்த வேலை அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. கோட்டை வாசலின் மேல் மாடங்களில் மறைவான இடங்களிலிருந்து பல்லவ வீரர்கள் வேகமாய் எறிந்த வேல்கள் யானைகளின் கண்களிலும் மற்றுமுள்ள மர்ம ஸ்தானங்களிலும் தாக்க, அவை வீறிட்டுக் கொண்டு திரும்பியோடிச் சளுக்கர் படைகளுக்குச் சேதமுண்டாக்கின.

பெரும் பிரயத்தனத்தின் பேரில் கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழிகள் தூர்க்கப்பட்டன. யானைகள் கோட்டைக் கதவுகளை முட்டிய போது, வௌிக் கதவுகள் தகர்ந்தன. ஆனால், வௌிக் கதவுகளுக்கு உள்ளே எதிர்பாராத அதிசயம் யானைகளுக்குக் காத்திருந்தது. புதிதாய் அமைக்கப்பட்டிருந்த உட்கதவுகளில் நூற்றுக்கணக்கான வேல் முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த வேல் முனைகளில் வேகமாய் மோதிக் கொண்ட வாதாபி யானைகள், பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு திரும்பி, தங்களுக்குப் பின்னாலிருந்த காலாட் படை வீரர்களையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு ஓடின. பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு வந்து அந்த வேல் முனை பொருந்திய கதவுகளையும் தகர்த்தார்கள். அப்படித் தகர்த்து விட்டுப் பார்த்தால், அக்கதவுகளுக்குப் பின்னால் கோட்டை வாசலை அடியோடு அடைத்துக் கொண்டு கருங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கெட்டிச் சுவர் காணப்பட்டது. இவ்விதமாக, ஏறக்குறைய ஒரு மாதகாலம் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கு முயன்று தோல்வியடைந்த பிறகு, நீடித்து முற்றுகையை நடத்திக் கோட்டையிலுள்ளவர்களைப் பட்டினி போட்டுப் பணியச் செய்வதென்று புலிகேசி தீர்மானித்தான். வாதாபிப் படைகள் காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரம் வரை கூடாரம் அடித்துக் கொண்டு தண்டு இறங்கின.

முற்றுகையை ஆரம்பித்து ஆறு மாத காலம் ஆன போது, கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு என்ன ஆபத்து நேரிடுமென்று புலிகேசி எதிர்பார்த்தானோ அந்த ஆபத்து வாதாபிப் படைகளுக்கே நேரலாயிற்று. அதாவது உணவுப் பஞ்சம் நேர்ந்தது. இலட்சக்கணக்கான வீரர்களும், ஆயிரக்கணக்கான போர் யானைகளும், வண்டி இழுக்கும் மாடுகளும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு எவ்வளவு காலத்துக்கு உணவு பெற முடியும்? வடபெண்ணைக் கரையிலிருந்து காஞ்சி வரையில் உள்ள வழியில் புலிகேசியின் படைகளுக்கு யாதொரு உணவுப் பொருளும் கிடைக்கவில்லை. ஏனெனில் வடபெண்ணையிலிருந்து மெல்ல மெல்லப் பின்வாங்கி வந்த பல்லவ சைனியம், வாதாபிப் படைக்கு உணவுப் பொருள் ஒன்றும் கிடைக்காதபடி நன்றாய்த் துடைத்து விட்டிருந்தது. அவ்வாறே, காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் உள்ள கிராமங்களையெல்லாம் சூனியமாக விட்டு விட்டு ஜனங்கள் போய் விட்டபடியால், வாதாபிப் படைக்கு உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இரண்டு மூன்று மாத காலத்திற்குள் காஞ்சியைச் சுற்றியிருந்த காடுகள், தோட்டங்கள் எல்லாவற்றையும் வாதாபியின் யானைகள் அழித்துத் தின்று விட்டன. அப்புறம் அவற்றுக்கு ஆகாரம் தேடுவதற்காகப் பல காத தூரம் போக வேண்டியிருந்தது. அப்படிப் போனாலும் அந்த வருஷத்துக் கடுங் கோடையில் பசுமையைக் கண்ணால் பார்ப்பதே அபூர்வமாயிருந்தது. இதையெல்லாம் காட்டிலும் மிகப் பயங்கரமான இன்னோர் அபாயம், கோடை முற்றிய போது வாதாபிப் படைகளுக்கு ஏற்பட்டது, அதாவது, குடிதண்ணீருக்கே பஞ்சம் உண்டாகி விட்டது.

அந்த வருஷத்தில் காஞ்சியைச் சுற்றிலும் ஏழெட்டுக் காத தூரம் பரவிய பிரதேசங்களில் சில அதிசயங்கள் நடந்து வந்தன. கார்த்திகை, மார்கழியில் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த பெரிய பெரிய ஏரிகளெல்லாம், தை, மாசி, மாதத்தில் எப்படியோ திடீர் திடீரென்று கரை உடைத்துக் கொண்டு சுற்றுப் பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தன. இது காரணமாக, சித்திரை மாதத்தில் ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஆங்காங்கு இருந்த கிணறுகளும், குளங்களும், ஏரிகள் உடைத்துக் கொண்டு வெள்ளம் வந்த போது தூர்ந்து போய் விட்டன. எங்கேயாவது கொஞ்சம் தண்ணீர் கண்டால் குடிப்பதற்குப் பயனில்லாதபடி அழுகி நாற்றமெடுத்துக் கிடந்தது.

அந்த நாளில் பாலாற்றில் மூன்று இடங்களில் அணைக்கட்டு கட்டித் தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பார்கள். வேனிற்காலத்தில் சிறிது சிறிதாக விடுவார்கள். இந்த வருஷத்தில் அந்தத் தேக்கங்களை முன்னமே உடைத்து விட்டிருந்தபடியால் கோடைக் காலத்தில் பாலாறும் வறண்டு விட்டது. பாலாறு வறண்ட காரணத்தினால் காஞ்சியையும் கடலையும் ஒன்று சேர்த்த கால்வாயிலும் தண்ணீர் வற்றிப் போய் விட்டது. கோட்டையைச் சுற்றியிருந்த அகழித் தண்ணீரோ, இரத்தமும் நிணமும் சேர்ந்த சேற்றுக் குட்டையாக மாறியிருந்தது. எனவே, வாதாபியின் இலட்சக்கணக்கான வீரர்களுக்கும் யானைகள், குதிரைகள், மாடுகள் எல்லாவற்றிற்கும் பாலாற்றில் ஊற்றெடுத்தே குடி தண்ணீர் கிடைக்க வேண்டியிருந்தது. பசி, தாகங்களின் கொடுமையினால் போர் யானைகள் அவ்வப்போது வெறி பிடித்துச் சிதறியோட, அவற்றின் கால்களில் மிதிபட்டு வீரர்கள் பலர் எமலோகம் சென்றார்கள்.

ஆனி மாதத்திலே ஒரு நாள் வராகக் கொடி வானளாவப் பறந்த கூடாரத்திற்குள்ளே புலிகேசியின் யுத்த மந்திராலோசனை சபை கூடிற்று. முன்னே வடபெண்ணை நதிக்கரையில் நாம் பார்த்த அதே படைத் தலைவர்கள் ஏழெட்டுப் பேர், எதிரில் விரித்திருந்த கம்பளத்தில் உட்கார்ந்திருக்க, வாதாபி மன்னன் தந்தச் சிங்காதனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். முன்னைக் காட்டிலும் புலிகேசியின் முகத்தில் கடூரமும் கோபமும் அதிகமாகக் கொதித்துக் கொண்டிருந்தன. படைத் தலைவர்களைப் பார்த்து, அவன் கூறினான்; "இந்த மகேந்திரவர்மனுக்குத் தகப்பன் பெயர் சிம்மவிஷ்ணு; மகன் பெயர் நரசிம்மன். ஆனால், மகேந்திரனோ வெறும் நரியாக இருக்கிறான். வளையில் நரி புகுந்து கொள்வது போல், இவன் கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான். நரி வளையிலிருந்து வௌியே வருமென்று எத்தனை நாளைக்குத்தான் காத்துக் கொண்டிருப்பது? உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை தோன்றுகிறதா?"

படைத் தலைவர்கள் மௌனமாயிருந்தார்கள். ஒருவராவது வாய் திறந்து பேசத் துணியவில்லை. "ஏன் எல்லோரும் மௌனம் சாதிக்கிறீர்கள்! வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்த போது, நான் நீ என்று எல்லோரும் யோசனை சொல்ல முன்வந்தீர்கள். யோசனை தேவையாயிருக்கும் போது வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகா! நமது பிக்ஷு மட்டும் இப்போது இங்கிருந்தால்...." என்று சொல்லிப் புலிகேசி பெருமூச்சு விட்டான். சபையில் ஒருவன், "பிரபு! பிக்ஷுவைப் பற்றி எந்தவிதமான தகவலும் வரவில்லையா?" என்று கேட்டான்.

"பிக்ஷுவிடமிருந்து சேதி வந்து நெடுங்காலம் ஆகிறது. வடபெண்ணைக் கரையில் வஜ்ரபாஹு என்னும் களப்பாளத் தலைவனிடம் அனுப்பிய ஓலைக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மதுரைப் பாண்டியனைப் பார்ப்பதற்கு அவர் போயிருந்த சமயத்தில், ஏதேனும் நேர்ந்து விட்டதோ, என்னவோ? ஆகா! பிக்ஷு மட்டும் இப்போதிருந்தால் உங்களைப் போல விழித்துக் கொண்டு இருப்பாரோ? ஒற்றர் தலைவரே! புத்த பிக்ஷு என்ன ஆகியிருப்பாரென்று கண்டுபிடிக்கும்படியாக எட்டு மாதத்திற்கு முன்னாலேயே சொன்னேனே? இதுவரை ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று கேட்க, ஒற்றர் படைத் தலைவன் தலை குனிந்து கொண்டான்.

பிறகு புலிகேசி அங்கே எல்லோருக்கும் முதலில் இருந்தவனைப் பார்த்து, "சேனாதிபதி, உமக்கு என்ன தோன்றுகிறது? முற்றுகையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதானே? மகேந்திர பல்லவனைப் பணியச் செய்ய இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டான். அதற்கு வாதாபி சேனாதிபதி, "மதில் மேல் காணப்படும் பல்லவ வீரர்கள் கொஞ்சம் கூட வாட்டமின்றிக் கொழுத்தே காணப்படுகிறார்கள். ஆனால், நம்முடைய வீரர்களுக்கு இப்போது அரை வயிறு உணவுதான் கொடுக்கிறோம். இன்னும் ஒரு மாதம் போனால் அதுவும் கொடுக்க முடியாது. சுற்றுப்புறத்தில் பத்துக் காததூரத்திற்கு ஒரு தானிய விதை கூடக் கிடையாது" என்றார்.

புலிகேசியின் முகத்தில் கோபம் கொதித்தது, "ஆமாம்! ஆமாம்! எப்போது பார்த்தாலும் இந்தப் பஞ்சப் பாட்டுத்தான்! இம்மாதிரி மூக்கால் அழுவதைத் தவிர, வேறு ஏதாவது யோசனை சொல்லுவதற்கு இங்கு யாரும் இல்லையா?" என்று கோபக் குரலில் புலிகேசி கேட்க, படைத் தலைவர்களில் ஒருவன், "பிரபு! காவேரிக் கரையில் ஆறு மாத காலமாகப் பாண்டிய ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். சோழ வளநாட்டில் சென்ற வருஷம் நன்றாக விளைந்த தானியம் ஏராளமாக இருக்கிறது. ஜயந்தவர்ம பாண்டியருக்கு ஓலையனுப்பினால், ஒருவேளை அவர் உணவு அனுப்பக்கூடும்," என்றான்.

இதைக் கேட்ட புலிகேசி சற்று நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பிறகு திடீரென்று துள்ளிக் குதித்து எழுந்து, எல்லாரையும் ஒரு தடவை சுற்றிப் பார்த்து விட்டு, "என்ன செய்வதென்று தீர்மானித்து விட்டேன். இனிமேல் நான் இங்கேயே சும்மா உட்கார்ந்திருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும். சேனாதிபதி! நீர் இங்கேயே நமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் முற்றுகையை நடத்திக் கொண்டிரும். ஓர் இலட்சம் வீரர்களுடன் நான் தெற்கே புறப்பட்டுச் சென்று பாண்டிய மன்னனை நேரில் பார்த்து விட்டு வருகிறேன். யானைப் படை என்னுடன் வரட்டும். ஆஹா! வாதாபியிலிருந்து புறப்பட்ட போது கொழு கொழுவென்றிருந்த நம் யானைகள் உணவில்லாமல் எப்படி மெலிந்து போய் விட்டன! காவேரிக் கரையில் நம் யானைகளுக்கு நிறைய உணவு கிடைக்குமல்லவா?" என்றான்.

அப்போது ஒற்றர் படைத் தலைவன், "பிரபு! தாங்கள் அப்படிச் சிறு படையுடன் போவது உசிதமா? பாண்டியனுடைய நோக்கம் எவ்விதம் இருக்குமோ?" என்று கூறியதற்குப் புலிகேசிப், "பாண்டியனுடைய நோக்கம் என்னவாக இருந்தாலும் என்ன? அவன் நம்மோடு போர் செய்யத் துணிய மாட்டான். அவன் மோசக் கருத்துள்ளவனாயிருந்தாலும் என்ன செய்து விடமுடியும்? காவேரிக் கரையில் ஒளிந்து கொள்வதற்குக் கோட்டை ஒன்றும் இல்லை. எதிரி போர்க்களத்தில் நிற்கும் வரையில் எனக்குப் பயமும் இல்லை" என்றான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


இரண்டாம் அத்தியாயம்யானைப் பாலம்

அந்த வருஷத்திலே ஆனி மாதக் கடைசியிலேயே காவேரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளம் வந்துவிட்டது. வாதாபிச் சக்கரவர்த்தியும் அவருடைய சைனியமும் இரண்டு வாரம் பிரயாணம் செய்து கொள்ளிடக் கரைக்கு வந்து சேர்ந்த போது, அந்த நதியில் இரு கரையையும் தொட்டுக் கொண்டு தண்ணீர்ப் பிரவாகம் போய்க் கொண்டிருந்தது. கொள்ளிடத்துக்கு அக்கரையில் சேந்தன் ஜயந்தவர்ம பாண்டியன் தன்னுடைய சைனியத்துடன் தங்கிப் பாசறை அமைத்திருந்தான். அவனோடு கொடும்பாளூர் மாதவக் களப்பாளனும் சேர நாட்டுச் சிற்றரசன் இளஞ்சேரலாதனும் தங்கியிருந்தார்கள்.

பாண்டியன், தன் சகோதரியை மாமல்லர் கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததன் காரணமாகப் பல்லவர் மீது பெரிதும் கோபம் கொண்டிருந்தான். காஞ்சி முற்றுகை ஆரம்பித்த சில தினங்களுக்கெல்லாம் பாண்டிய சைனியம் காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவிலிருந்த பகுதியை அடைந்து விட்டது. பாண்டியனுக்கு அக்காலத்தில் கப்பம் கட்டிக் கொண்டிருந்த கொடும்பாளூர் மாதவக் களப்பாளனும் சேரன் இளஞ்சேரலாதனும் ஜயந்தவர்மன் விருப்பத்தின்படி தாங்களும் தங்கள் சிறு சைனியங்களுடன் வந்திருந்தார்கள். அக்காலத்தில் கொள்ளிடத்திற்குத் தெற்கேயிருந்த தமிழ் மன்னர்கள் அனைவரும் பல்லவர்களிடம் விரோதம் கொண்டிருந்தார்கள். எனவே, ஜயந்தவர்மனும் மற்ற இரு குறுநில மன்னர்களும் இச்சமயம் வாதாபிச் சக்கரவர்த்தியுடன் சேர்ந்து கொண்டு, பல்லவ வம்சத்தாரிடம் தங்களுக்கிருந்த வர்மத்தைத் தீர்த்துக் கொள்ளச் சித்தமாயிருந்தார்கள். இவர்களுடன், சமீபத்திலேதான் உறையூர் சிம்மாசனம் ஏறியிருந்த பார்த்திப சோழன் மாத்திரம் சேர்ந்து கொள்ளவில்லை. பார்த்திப சோழனும் பல்லவர் ஆதிக்கத்தை வெறுத்தானாயினும் வடநாட்டிலிருந்து படையெடுத்து வந்தவர்களுடன் சேர்ந்து கொள்வதற்கோ, அவர்களுடைய தயவை நாடுவதற்கோ அவனுக்கு மனம் வரவில்லை.

மகேந்திர பல்லவரின் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்திலிருந்து கீழைச் சோழ நாடு பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை முன்னமே தெரிந்து கொண்டோமல்லவா? மற்றபடி எது எப்படிப் போனாலும், இந்தச் சந்தர்ப்பத்தில் கீழைச் சோழ நாட்டை, தான் கைப்பற்றிப் பாண்டிய இராஜ்யத்துடன் சேர்த்துக் கொள்ளுவதென்று ஜயந்தவர்மன் தீர்மானித்திருந்தான். ஆனால், கீழைச் சோழ நாட்டு மக்கள் இதைச் சிறிதும் விரும்பவில்லை. அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சைவ சமயப் பற்று உள்ளவர்கள். சமீப காலத்தில் திருநாவுக்கரசருடைய மகிமையினால் மகேந்திர பல்லவர் சைவ சமயத்தைத் தழுவியது முதல், சோழ நாட்டு மக்கள் பல்லவ சக்கரவர்த்தியிடம் விசேஷ பக்தி கொண்டிருந்தார்கள். எனவே, ஜயந்தவர்ம பாண்டியன் எதிர்பார்த்தபடி சோழ நாட்டார் அவனை உற்சாகமாக வரவேற்கவில்லை. இதனாலும் பல மாத காலம் கொள்ளிடக் கரையிலேயே காத்துக் கொண்டிருக்க நேர்ந்ததாலும், ஜயந்தவர்மன் எரிச்சல் கொண்டிருந்தான். காஞ்சி நகர் முற்றுகை நெடுங்காலம் நீடித்ததில் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் அவனுக்கு முன்னமிருந்த மரியாதை குறைந்து போயிருந்தது. எனவே, கொள்ளிடத்துக்கு அக்கரையில் புலிகேசி வந்து விட்டது தெரிந்த பிறகும் அவனைப் போய்ப் பார்க்கப் பாண்டியன் எவ்விதப் பிரயத்தனமும் செய்யவில்லை. கொள்ளிடத்தில் பிரவாகம் அதிகமாயிருந்ததைச் சாக்காக வைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் அக்கரை வருவதற்குத் தன்னிடம் போதிய படகுகள் இல்லையென்று செய்தியனுப்பினான்.

புலிகேசி அதற்கு மறுமொழியாக, கொள்ளிடத்துக்குப் பாலம் கட்டிக் கடந்து நதியின் தென்கரைக்கு வந்து, தானே பாண்டியனைச் சந்திப்பதாகச் சொல்லி அனுப்பினான். இதைக் கேட்ட போது, பாண்டியனுக்கு முதலில் வேடிக்கையாகத் தோன்றியது. "கொள்ளிடத்துக்காவது, பாலம் கட்டவாவது! -இதென்ன பைத்தியம்!" என்று சொல்லிச் சிரித்தான். ஆனால், மறுநாள் பாண்டியன் தான் தண்டு இறங்கிய இடத்திலிருந்து கொள்ளிட நதியை நோக்கிய போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டான். கொள்ளிடத்துக்கு உண்மையாகவே பாலம் போட்டிருந்தது. சாதாரணப் பாலம் அல்ல; நதியில் யானைகளை வரிசையாக நிறுத்தி வைத்து, அவற்றின் முதுகின் மேல் பலகைகளைக் கோத்து அதிசயமான பாலம் அமைத்திருந்தார்கள்! இந்த அபூர்வமான காட்சியானது பாண்டிய மன்னனுக்கு வாதாபிச் சக்கரவர்த்தியின் மேல் மறுபடியும் மரியாதையை உண்டாக்கிற்று. அந்த யானைப் பாலத்தின் வழியாகப் புலிகேசி தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் ஆற்றைக் கடந்து வரவே, பாண்டியனும் மற்ற இரு குறுநில மன்னர்களும் அவனுக்குத் தக்க மரியாதை செய்து இராஜோபசாரத்துடன் வரவேற்றார்கள்.

பேரரசர்கள் இருவரும் மூன்று தினங்கள் பரஸ்பரம் அளவளாவி மகிழ்ந்தார்கள். பல்லவர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதில் இருவருக்கும் பூரண மன ஒற்றுமை இருந்தது. எனவே, பல்லவ வம்சத்தை அடியோடு அழித்து விட வேண்டும் என்றும், காஞ்சி நகரம் வரையில் பாண்டிய ராஜ்யத்துடன் சேர்த்து விடவேண்டுமென்றும், காஞ்சிக்கு வடக்கேயுள்ள பகுதியைச் சளுக்க சாம்ராஜ்யத்துடன் சேர்த்து விடவேண்டுமென்றும் அவர்கள் ஏகமனதாக முடிவு செய்தார்கள். ஜயவந்தர்ம பாண்டியன் தானும் தன் சைனியத்துடன் காஞ்சிக்கு அப்போதே புறப்பட்டு வருவதாகச் சொன்னபோது, காஞ்சியைக் கைப்பற்றும் கௌரவத்தைத் தனக்கே விட்டு விட வேண்டுமென்று புலிகேசி வற்புறுத்தினான். காஞ்சிக் கோட்டை பணிந்ததாகக் கேள்விப்பட்டவுடனே பாண்டியன் அங்கிருந்து கிளம்பிக் காஞ்சிக்கு வரலாமென்றும், இப்போதைக்கு வாதாபிச் சைனியத்துக்கு உணவுப் பொருள் மாத்திரம் கொடுத்து உதவும்படியாகவும் புலிகேசி கூற, பாண்டியனும் அதற்கிணங்கி, தன் சைனியத்துக்காகச் சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருள் அவ்வளவையும் சளுக்கப் படைக்குக் கொடுத்துதவ ஒப்புக் கொண்டான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


மூன்றாம் அத்தியாயம்உடன்படிக்கை

வாதாபிச் சக்கரவர்த்தியும் பாண்டிய மன்னனும் விரைவில் மனமொத்த சிநேகிதர்களாகி விட்டார்கள். ஜயந்தவர்மன் கொள்ளிடத்து வடகரைக்கு வந்து சில நாள் தன்னுடைய விருந்தாளியாயிருக்க வேண்டுமென்று புலிகேசி கேட்டுக் கொண்டான். அவ்விதமே ஜயந்தவர்மன் தன்னுடைய முக்கிய மந்திரி பிரதானிகளுடன் மறுநாள் கொள்ளிடத்தின் வடகரைக்கு வந்தான். புலிகேசி ஆடம்பர இராஜோபசாரங்களுடன் ஜயந்தவர்மனை வரவேற்றதுடன், தன்னுடைய நால்வகைப் படைகளையும் ஜயந்தவர்மனுக்குக் காட்டி அவன் பிரமிக்கும்படி செய்தான். தடபுடலான விருந்துக்குப் பிறகு, வாதாபியின் வில்லாளிகள், வாள் வீரர்கள், மல்லர்கள் முதலியோர் அந்தப் பேரரசர்களின் முன்னிலையில் தத்தம் திறமைகளைக் காட்டினார்கள்.

பிறகு வாதாபியின் அரண்மனைக் கவிஞர், சந்தர்ப்பத்துக்கேற்பத் தாம் புனைந்திருந்த புகழ்ச்சிக் கவிதைகளைப் பாடினார். கணக்கற்ற வெண் கொற்றக் குடைகளினாலும் வெண்சாமரங்களினாலும் அலையெறியும் திருப்பாற்கடலைப் போல் விளங்கிய வாதாபியின் சேனா சமுத்திரமானது துங்கபத்திரை நதிக்கரையிலிருந்து பொங்கித் தெற்கு நோக்கி வந்தது பற்றியும், அந்தச் சேனா சமுத்திரத்தைத் தூரத்தில் கண்டதுமே காஞ்சி மகேந்திர பல்லவன் நடுநடுங்கிப் போய்த் தனது சிறு குட்டையையொத்த படையுடன் காஞ்சிக் கோட்டைக்குள் ஒளிந்துகொண்டது பற்றியும், பிறகு வாதாபிச் சக்கரவர்த்தி அழகிய கயல் மீன்கள் துள்ளி விளையாடும் காவேரி நதியைக் காண ஆவல் கொண்டு தெற்கு நோக்கி வந்தது பற்றியும், காவேரிக் கரையிலே மதுரைப் பாண்டிய மன்னனைச் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தது பற்றியும், வாதாபியின் யானைகள் காவேரியில் வரிசையாக நின்று பாலம் அமைத்தபோது காவேரியின் நீரோட்டம் தடைப்பட்டு நின்றது பற்றியும், யானைகளின் மதநீர் நதியில் விழுந்ததனால் பிரவாகம் மேலும் பெருகிக் கரைகளை மோதியது பற்றியும் வர்ணித்திருந்த பாடல்களை வாதாபியின் இராஜகவி பாடியபோது, பாண்டியனும் மற்ற சிற்றரசர்களும் மது உண்டவர்களைப் போல் மதிமயங்கி நின்றார்கள். எல்லாம் முடிந்து, ஜயந்தவர்ம பாண்டியன் புலிகேசியிடம் விடைபெற வேண்டிய சமயம் வந்தபோது, "சத்யாச்ரயா! பல்லவனை முறியடித்துக் காஞ்சியைக் கைப்பற்றிய பிறகு, அப்படியே தாங்கள் திரும்பிப் போய்விடக் கூடாது. மதுரைக்கும் விஜயம் செய்து விட்டுப் போக வேண்டும்!" என்றான். அந்த நாளில் காஞ்சிக்கு அடுத்தபடியாகத் தென்னாட்டில் பிரசித்தமாக விளங்கிய மதுரைமா நகருக்கும் புலிகேசி வந்தால் பாண்டியர்களின் சீர் சிறப்புக்களையெல்லாம் காட்டி அவனைப் பிரமிக்கச் செய்யலாம் என்பது ஜயந்தவர்மனுடைய எண்ணம்.

அதைக் கேட்ட புலிகேசி ஒரு பெருமூச்சு விட்டான். "ஆம், எனக்கு மதுரையையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் வெகு காலமாக உண்டு. காஞ்சியைப் பற்றி எழுதிய பிக்ஷு மதுரையைப் பற்றியும் எழுதியிருந்தார். ஆனால்...." என்று புலிகேசி சொல்லி வரும்போதே பாண்டியன் குறுக்கிட்டு, "புத்த பிக்ஷுவைப் பற்றித் தங்களை நானே கேட்க வேண்டுமென்றிருந்தேன். அவர் எங்கே? தங்களுடன் அவர் இருப்பார் என்றல்லவா எண்ணினேன்?" என்றான். "பிக்ஷுவைப் பற்றித்தானே தகவல் ஒன்றும் தெரியவில்லை! அவரைப் பற்றி நானே தங்களிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். மதுரைக்கு வந்திருந்தார் அல்லவா? அங்கே என்ன நடந்தது? தங்களிடம் என்ன சொல்லிவிட்டுக் கிளம்பினார்? எங்கே போவதாகச் சொன்னார்?" என்று வாதாபி மன்னன் வினவினான்.

பிக்ஷு மதுரைக்கு வந்த சமயம் தன் தந்தை காலமானதும் அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் பிக்ஷு சிறைப்பட்டதும், தனக்கு முடிசூட்டு விழா நடந்த பிறகு பிக்ஷுவைத் தான் விடுதலை செய்ததும் ஆகிய விவரங்களைக் கூறிவிட்டு ஜயந்தவர்மன் மேலும் சொன்னதாவது: "பிக்ஷு விடுதலையான உடனேயே, வாதாபிச் சைனியம் காஞ்சியை அணுகி விட்டதா என்று அவர் என்னைக் கேட்டார். 'இல்லை! இன்னும் வடபெண்ணைக் கரையிலேதான் இருக்கிறது' என்று நான் தெரிவித்ததும் அவர் பெரிதும் ஆச்சரியமடைந்தார். என்னைச் சைனியத்துடன் கொள்ளிடக் கரைக்கு வந்திருக்கும்படி சொல்லிவிட்டு, தாம் முன்னாலே போவதாக அவர் கிளம்பினார். பின்னர், தங்களை வந்து அவர் சந்திக்கவே இல்லையா?" "இல்லை; அதுதான் மிக்க அதிசயமாயிருக்கிறது. அந்த மூடன் துர்விநீதனால் இருவருக்கும் ஏதாவது நேர்ந்து விட்டதோ, என்னமோ? ஒன்றுமே தெரியவில்லை. பிக்ஷு இல்லாதது எனக்கு ஒரு கை இல்லாதது மாதிரி இருக்கிறது" என்றான் புலிகேசி.

இதற்குப் பாண்டியன், "ஆமாம்; ஒரு சில நாள் பழக்கத்திலேயே பிக்ஷுவிடம் எனக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்தக் கங்க நாட்டான் எதற்காக இப்படி அவசரமாகச் சென்று அகப்பட்டுக் கொண்டான்? பிக்ஷு என்னிடம் சொன்னது ஒன்று, துர்விநீதன் செய்தது வேறொன்றாகவல்லவா இருக்கிறது? ஒருவேளை மகேந்திர பல்லவன் தப்பி ஓட முயன்றால் நான் கொள்ளிடக் கரையில் நின்று தடுக்க வேண்டுமென்றும் துர்விநீதன் மேற்கு எல்லையில் நின்று தடுக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் பிக்ஷு சொன்னார். அப்படி இருக்க, துர்விநீதன் எதற்காக அவசரப்பட்டுக் காஞ்சியை நெருங்கினான்? அதனால் புள்ளலூரில் ஏதோ பிரமாத வெற்றியடைந்து விட்டதாகப் பல்லவன் பறையடித்துக் கொள்ள இடங்கொடுத்து விட்டானே? அதனாலேயல்லவா பல்லவ நாட்டு மக்களும் சோழ நாட்டுக் குடிகளும் கூட மிக்க கர்வம் கொண்டிருக்கிறார்கள்!" என்றான்.

"துர்விநீதன் விஷயம் பெரிய மர்மமாகத்தானிருக்கிறது! அவன் உயிரோடிருக்கிறானா, செத்துப்போய் விட்டானா என்று கூட நிச்சயமாகத் தெரியவில்லை. அவனைப்பற்றித் தெரிந்தால் பிக்ஷுவைப் பற்றியும் ஏதாவது விவரம் அறியலாம். ஆனால், இந்தத் தரித்திரம் பிடித்த பல்லவ நாட்டுக் கிராமங்களில் யாரை என்ன கேட்டாலும், 'எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்கிறார்கள். ஒவ்வொரு சமயம் எனக்கு வருகிற கோபத்தில், பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலே ஒரு வீடு, ஒரு கூரை மிச்சமில்லாமல் எல்லாவற்றையும் கொளுத்தி பஸ்மீகரம் செய்து விடலாமா என்று தோன்றுகிறது!" இவ்விதம் புலிகேசி கூறியபோது ஏற்கெனவே கோவைப் பழம்போல் சிவந்திருந்த அவனுடைய கண்களில் அக்னி ஜ்வாலை வீசிற்று.

"ஆமாம், ஆமாம், நானும் எல்லாம் கேள்விப்பட்டேன். ஏரிகளை எல்லாம் உடைத்துவிட்டு இந்த வருஷம் கோடைக் காலத்தில் சாகுபடியே செய்யாமல் பல்லவ நாட்டு மக்கள் இருந்து விட்டார்களாம். எந்தக் கிராமத்துக்குப் போனாலும் பஞ்சப் பாட்டுப் பாடுகிறார்களாம். தானியத்தை ஒளித்து வைத்துக் கொண்டு 'எங்களுக்கே சாப்பாடு இல்லை; பட்டினி கிடக்கிறோம்' என்று முறையிடுகிறார்களாம்! பொல்லாத ஜனங்கள்!" என்றான் பாண்டியன். "அவர்களுடைய பொல்லாத்தனத்தை அடக்க எனக்கு வழி தெரியும். ஒளித்து வைத்திருக்கும் தானியங்களை எடுத்துக் கொடுக்கும்படி செய்யவும் தெரியும். அதெல்லாம் இப்போது வேண்டாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்."

"இந்தச் சோழ நாட்டுத் திமிர் பிடித்த மக்களுக்கு நானும் ஒருநாள் பாடம் கற்பிக்க வேண்டும். காஞ்சிக் கோட்டை பிடி படட்டும் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இருக்கட்டும்! துர்விநீதனைப் பற்றியல்லவா கேட்டுக் கொண்டிருந்தீர்கள்? என்னுடைய ஒற்றர்கள் ஏதோ சொன்னதாக ஞாபகம் இருக்கிறது; இதோ விசாரிக்கிறேன்" என்று ஜயந்தவர்மன் கூறி தன்னுடைய ஒற்றர் படைத் தலைவனை வரவழைத்துக் கேட்டான்.

ஒற்றர் தலைவன் கூறியதாவது: "நம்முடைய சைனியம் காவேரியைத் தாண்டிக் கொள்ளிடத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது, புள்ளலூர்ச் சண்டையைப் பற்றிய செய்தி வந்தது. உடனே சிலரை நான் அனுப்பி நிலைமையை விசாரித்து வரச் செய்தேன். புள்ளலூரில் தோல்வியடைந்து கங்கராஜா தெற்கு நோக்கி ஓடி வந்தாராம். அவரை மாமல்லர் துரத்தி வந்தாராம். திருப்பாற்கடல் என்னும் பெரிய ஏரி உடைத்துக் கொண்டு மாமல்லரைத் தடை செய்ததாம். இதனால் கங்கராஜா தென்பெண்ணைக்கு இக்கரை வந்து, பாடலிபுரத்துச் சமணர் பள்ளியில் ஒளிந்து கொண்டாராம். பிறகு என்ன நடந்ததென்று தௌிவாகத் தெரியவில்லை. திருக்கோவலூர்க் கோட்டத் தலைவன் சமணப் பள்ளியைத் தாக்கி இடித்துக் கங்க மகாராஜாவைச் சிறைப்பிடித்துக் கொண்டு போனதாகச் சில ஜனங்கள் பேசிக் கொண்டார்களாம். திருக்கோவலூருக்குத் தெற்கேயுள்ள மலைப் பிரதேசத்தில் சிறை வைத்திருப்பதாகவும் வதந்தியாம்."

பிறகு பேரரசர்கள் இருவரும் கலந்தாலோசித்துப் பின்வரும் திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள்; புலிகேசி காஞ்சிக்குத் திரும்பிச் சென்று கோட்டை முற்றுகையை இன்னும் தீவிரமாய் நடத்த வேண்டியது. காஞ்சிக் கோட்டை பணிகிற வரையில் வாதாபிச் சைனியத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பாண்டியன் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டியது. கொள்ளிடத்தில் தண்ணீர் குறைந்ததும் பாண்டியன் தன் சைனியத்துடன் நதியைத் தாண்டி முன்னேறி வந்து தென்பெண்ணை நதி வரையில் கைப்பற்றிக் கொள்ள வேண்டியது. திருக்கோவலூர்க் கோட்டத் தலைவனைப் பிடித்துக் கடுமையாகத் தண்டிப்பதுடன், அங்குள்ள மலைப்பிரதேசத்தில் துர்விநீதன் சிறைப்பட்டிருந்தால், அவனை விடுதலை செய்து அனுப்பி வைக்க வேண்டியது. இந்த உதவிகளையெல்லாம் பாண்டியன் செய்வதற்குக் கைம்மாறாகக் குமரி முனையிலிருந்து தென்பெண்ணை வரை உள்ள பிரதேசத்தின் மகா சக்கரவர்த்தியாக ஜயந்தவர்ம பாண்டியனை புலிகேசி அங்கீகரிக்க வேண்டியது. மேற்கண்டவாறு இரு தரப்புக்கும் திருப்திகரமான உடன்படிக்கையைச் செய்து கொண்ட பிறகு, ஜயந்தவர்ம பாண்டியன் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொண்டு பழையபடி கொள்ளிடத்தின் தென்கரை போய்ச் சேர்ந்தான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


நான்காம் அத்தியாயம்வேங்கி தூதன்

ஜயந்தவர்மன் போய்விட்ட பிறகு புலிகேசி தன்னுடைய பிரதானிகளைப் பார்த்து, "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது எவ்வளவு உண்மை, பார்த்தீர்களா? அந்தப் பல்லவ நரி கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளப் போக, இந்தப் பூனைப் பாண்டியனின் தலை ஒரேயடியாக வீங்கிப் போயிருக்கிறது! உத்தராபதத்தின் ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்திக்கும், மத்தியப் பிரதேசத்தின் வாதாபிச் சக்கரவர்த்திக்கும் இணையாகப் பூனைப் பாண்டியனும் தக்ஷிண தேச சக்கரவர்த்தியாக விளங்க வேண்டுமாம்! ஆசையைப் பாருங்கள், ஆசையை! காஞ்சிக் கோட்டை மட்டும் தகர்ந்து விழட்டும்; பிறகு இந்த அற்பனுக்கும் தக்க புத்தி புகட்டி விட்டு வாதாபிக்குத் திரும்புவோம்" என்றான். இப்படிப் புலிகேசி சொல்லி முடிக்கும் தருவாயில் வேகமாகக் குதிரைகள் நெருங்கி வரும் சத்தம் கேட்டது. காஞ்சி முற்றுகையை நடத்திக் கொண்டிருந்த சளுக்க சேனாபதி அவசரச் செய்தியுடன் தூதர்களை அனுப்பியிருக்கிறார் என்றும், அவர்கள் வேங்கியிலிருந்து வந்த தூதன் ஒருவனையும் அழைத்து வந்திருப்பதாகவும் தெரிந்தது. தாமதமின்றி அவர்களைத் தன் முன்னிலையில் அழைத்து வரும்படி புலிகேசி சொல்ல, சேனாபதி அனுப்பிய தூதர்களின் தலைவனும் வேங்கி நாட்டுத் தூதனும் அழைத்து வரப்பட்டார்கள்.

வேங்கி நாட்டுத் தூதன் தன்னுடைய உடம்பெல்லாம் காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான். தூதர்கள் இருவரும் சக்கரவர்த்திக்கு அடிபணிந்து எழுந்த பிறகு, சேனாபதி தூதன், "பிரபு! இவன் வேங்கியிலிருந்து முக்கியமான செய்தி அடங்கிய ஓலை கொண்டு வந்திருக்கிறான். காஞ்சிக்கு வரும் வழியில் இவனை வழிமறித்துச் சிலர் தடுக்க முயற்சி செய்தார்களாம். அவர்களுடன் சண்டையிட்டுத் தப்பித்துக் கொண்டு வந்தானாம். காஞ்சியிலிருந்து இங்கு வரும் மார்க்கத்தில் இவனுக்கு ஏதும் அபாயம் வரக்கூடாதென்பதற்காகச் சேனாபதி என்னையும் வீரர்கள் எழுவரையும் அனுப்பினார்" என்றான். பிறகு, வேங்கியிலிருந்து வந்த தூதன் தன்னுடைய உடை வாளின் உறையில் பத்திரமாய் வைத்திருந்த ஓலையை எடுத்துப் பயபக்தியுடன் சக்கரவர்த்தியிடம் கொடுத்தான்.

புலிகேசி அதை வாங்கிக் கொண்டதும் சபையில் இருந்த லிகிதனின் முகத்தைப் பார்க்க, அவன் விரைந்து ஓடி வந்து பணிவுடன் ஓலையை வாங்கிப் படிக்கலானான்: "திரிபுவன சக்கரவர்த்தி சத்யாச்ரய புலிகேசி மகாராஜருக்குச் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் பக்தியுடன் எழுதும் லிகிதம். "தாங்கள் காஞ்சிக்குப் போய்ச் சேர்ந்தபிறகு எவ்விதச் செய்தியும் தங்களிடமிருந்து வரவில்லை. நான் பலமுறை அனுப்பிய ஓலைகளுக்கும் மறுமொழி இல்லை. ஒரு வேளை என் ஓலைகள் தங்களுக்கு வந்து சேரவில்லையோ என்று சந்தேகிக்கிறேன்.

"தங்களுடைய கட்டளைப்படி குரு பூஜ்ய பாதரை வரவழைத்து விமரிசையாக மகுடாபிஷேகம் செய்துகொண்டேன். ஆனால், இன்னும் தொல்லைகள் தீர்ந்தபாடில்லை. வேங்கிப் படைகள் இன்னும் மலைப் பிரதேசங்களில் மறைந்து நின்று தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. குடி படைகளும் கறுமுறு என்று இருக்கிறார்கள். "இன்னும் ஒரு அதிசயமான விஷயம்! மகேந்திர பல்லவருடைய சிறிய தந்தை மகன் புத்தவர்மன் எங்கிருந்தோ ஒரு பெரிய சைனியத்துடன் முளைத்திருக்கிறான். கிருஷ்ணை நதியின் தென்கரையில் தண்டு இறங்கி நான் தங்களுக்கு உதவி செய்வதற்காகப் புறப்பட்டால் என்னைத் தடுக்கப் போவதாகக் கறுவிக் கொண்டிருக்கிறானாம்.

"வேங்கி யுத்தத்தில் ஏற்பட்ட காயங்களால் நான் அடைந்த தேக அசௌக்யம் இன்னும் தீரவில்லை. நாளுக்கு நாள் பலஹீனம் அதிகமாகி வருகிறது, குதிரை ஏறக்கூட முடியாதவனாயிருக்கிறேன். "இதெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம்; மகேந்திர பல்லவன் கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளுவதற்கு முன்னால் உத்தராபதச் சக்கரவர்த்திக்கு உதவி கோரி ஓலை அனுப்பினானாம். ஹர்ஷவர்த்தனர், தாங்கள் காஞ்சியிலும் நான் வேங்கியிலும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சமயம் பார்த்து, அசலபுரத்தின் மேலும் வாதாபியின் மேலும் படையெடுக்கத் தீர்மானித்து விட்டதாக வதந்தி உலாவுகிறது. கன்யாகுப்ஜத்திலிருந்து சமீபத்தில் நாகார்ஜுன மலைக்கு வந்த ஒரு யாத்ரிகன் இவ்விதம் சொன்னானாம். அஜந்தா குகைகளையும் சித்திரங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினாலேயே ஹர்ஷவர்த்தனர் மேற்படி யோசனை செய்திருப்பதாக வதந்தியாம்.

"இந்த நிலைமையில் அடியேனுக்குத் தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்க் காத்திருக்கிறேன். எது எப்படியிருந்தாலும், 'படையுடன் புறப்பட்டு வா' என்று கட்டளையிட்டால், உடனே புறப்படச் சித்தமாயிருக்கிறேன். என் அன்புக்குகந்த தமையனும் தந்தையும் குருவும் அரசனும் உற்ற நண்பனுமான தங்களுடைய வார்த்தையே எனக்குக் கடவுளின் கட்டளையைவிட மேலானது. என் உடல், பொருள் ஆவி அனைத்தையும் தங்களுடைய சேவையில் அர்ப்பணம் செய்ய எந்த க்ஷணமும் சித்தமாயிருக்கிறேன். "இன்னும் வெகு காலம் சந்தேகத்திலும் குழப்பத்திலும் என்னை விட்டு வைக்காமல், 'இன்னது செய்' என்று திட்டமாக ஆக்ஞையிடும்படியாக மன்றாடி வேண்டிக்கொள்கிறேன்."

மேற்படி ஓலையை லிகிதன் படித்து வந்தபோது, ஆரம்பத்திலேயெல்லாம் புலிகேசியினுடைய கண்களிலே அனல் பறந்தது. மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட நாகப் பாம்புபோல அடிக்கடி பெரு மூச்சு விட்டான். ஓலையின் கடைசிப் பகுதியை படித்த போது, அவனுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிற்று. "என் அருமைத் தம்பி விஷ்ணுவர்த்தனா, உன்னை மறுபடியும் எப்போது, காணப் போகிறேன்!" என்று அலறினான். சபையில் வீற்றிருந்த தளபதி பிரதானிகள் முதலியோர் யாரும் அவனுக்கு ஆறுதல் கூற முன்வரவில்லை! தாங்கள் ஏதாவது பேசினால் அதன் காரணமாக என்ன விபரீதம் நேருமோ என்னவோ என்று அனைவரும் கதிகலங்கிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று புலிகேசி புலம்புவதை நிறுத்திவிட்டு, கண்களைத் துடைத்துக் கொண்டு சிம்ம கர்ஜனைக் குரலில், "இந்தப் படையெடுப்புக்கு நாள் பார்த்துக் கொடுத்த ஜோஸ்யன் யார்? இங்கே நம்முடன் வந்திருக்கிறானா?" என்று கேட்டான். "நம்முடன் வரவில்லை; வாதாபியிலே தான் இருக்கிறான்!" என்று பிரதானிகளில் ஒருவன் சொன்னான். "அப்படியானால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வாதாபிக்குப் போனதும் முதற்காரியமாக அந்த ஜோஸ்யனை யானையின் காலால் இடறச் செய்ய வேண்டும்!" என்றான் புலிகேசி.

அதே சமயத்தில், புலிகேசியின் கோபத்திற்கு இரையாவதற்காகவே கொண்டு வந்ததுபோல் ஒரு மனிதனை மேலெல்லாம் கயிற்றால் பிணைத்து, கூடாரத்துக்குள்ளே கொண்டு வந்தார்கள். புலிகேசி, "இவன் யார்? இவன் யார்?" என்று கர்ஜிக்க, காஞ்சியிலிருந்து வந்த தூதர் தலைவன், "பிரபு! இவன் காஞ்சி ஒற்றன். நாங்கள் வரும்போது வழியிலே இவனைச் சந்தித்தோம். கட்டிப்பிடித்துக் கொண்டு வந்தோம்" என்றான். "ஆஹா! இந்தப் பாழாய்ப்போன பல்லவ ராஜ்யத்தில் ஒற்றர்களைத் தவிர வேறு யாருமே இல்லை போலிருக்கிறது. நல்லது, ஜோஸ்யனுக்குப் பிரதியாக இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!" என்றான் புலிகேசி. அத்தகைய கடுமையான ஆக்ஞைக்கு உள்ளான மனிதன் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவன்தான். ஆனால் இப்போது அவன் பழைய முரட்டுப் பட்டிக்காட்டுக் குண்டோதரனாயில்லை. நாகரிகமான உடையணிந்திருந்தான், புலிகேசியின் ஆக்ஞையினால் அவன் அதிக மனக்கலக்கத்துக்கு உள்ளானவனாகத் தோன்றவில்லை!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


ஐந்தாம் அத்தியாயம்காஞ்சி ஒற்றன்

வாதாபிச் சக்கரவர்த்தி, குண்டோதரன் விஷயத்தில் நன்கு கவனம் செலுத்தாமலே, "இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!" என்று கட்டளையிட்ட போது அருகிலிருந்த வாதாபியின் ஒற்றர் தலைவன் மிக்க பணிவோடு, "அரசே! இவனைக் கொஞ்சம் விசாரணை செய்து விட்டுப் பிறகு தண்டனை நிறைவேற்றுவது நலம்" என்று தெரிவித்துக் கொண்டான். "ஆம், ஆம், ஏதோ ஞாபகமாகச் சொல்லி விட்டேன். அவனை இப்படி அருகில் கொண்டு வாருங்கள்" என்று புலிகேசி கட்டளையிடவும், குண்டோதரன் அருகில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். "அடே, நீ யார்? என்ன வேலையாகப் புறப்பட்டாய்? உண்மையைச் சொல்!" என்று கேட்போர் உள்ளம் நடுங்கும் அதிகாரத் தொனியில் புலிகேசி வினவினான்.

வாதாபி மன்னன், சென்ற பதினெட்டு மாத காலத்தில் தமிழ் மொழியை நன்றாய்ப் பேசவும், பேசியதைத் தெரிந்து கொள்ளவும் பயின்றிருந்தான் என்பதை இந்த இடத்தில் நாம் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே வாதாபி ராஜ்யத்தில் வழங்கிய பாஷையானது பாதித் தமிழ்ச் சொற்களைக் கொண்டிருந்தபடியால், தமிழ் மொழியைப் பயிலுவதில் புலிகேசிக்கு அதிகச் சிரமம் ஏற்படவில்லை. புலிகேசி கேட்ட கேள்விக்கு விடையாகக் குண்டோதரன், "ஐயா! நான் என் தாயாருடைய மகன். கொள்ளிடத்துக்கு அக்கரையில் திருவெண்காட்டுக்குப் போகலாமென்று கிளம்பினேன். திருவெண்காட்டு வைத்தியரிடமிருந்து மருந்து வாங்கிக் கொண்டு வருவதற்காகப் போகிறேன்" என்றான். "எதற்காகடா மருந்து! உனக்கு என்ன கேடு வந்து விட்டது?" என்று புலிகேசி கேட்டதும், குண்டோதரன் பயத்தினால் நடுங்கியவன் போலப் பாசாங்கு செய்து, "எனக்காக இல்லை, ஐயா! அம்மாவுக்கு மருந்து. என் தாயார் அவல் இடிக்கும் போது உரலை விழுங்கி விட்டாள், அதற்காக!" என்றான்.

இந்த விடை அங்கிருந்தவர்கள் சிலருக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று. புலிகேசியின் முகத்திலும் இலேசான புன்னகை தோன்றியது. "என்னடா உளறுகிறாய்? உன் அம்மா உரலை விழுங்கினாளா?" என்று அதட்டிக் கேட்டான். "இல்லை, உரலை விழுங்கவில்லை, உலக்கையைத்தான் விழுங்கினாள்!" என்றான் அதிக நடுக்கத்துடன் குண்டோதரன். "உரலை விழுங்கினாளா, உலக்கையை விழுங்கினாளா? நிஜத்தைச் சொல்!" என்று கோபமான குரலில் கர்ஜித்தான் புலிகேசி. "இல்லை, இல்லை! என் அம்மாவை உரல் விழுங்கி விட்டது!" என்றான் குண்டோதரன். "அடே, என்னிடம் விளையாடுகிறாயா? உன்னை என்ன செய்வேன், தெரியுமா?"

"ஐயா! மன்னிக்க வேண்டும்; உங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு மிகவும் பயமாய் இருக்கிறது. அதனால் மனத்திலே ஒன்று இருக்க, நாக்கு எதையோ சொல்கிறது." "இப்போது பயம் இல்லாமல் நிதானமாக யோசித்து உள்ளதை உள்ளபடி சொல்லு!" "என் தாயார் அவல் இடித்த போது உலக்கை தவறிக் கையில் விழுந்து விட்டது. அதனால் அம்மாவின் கையில் காயமாகிவிட்டது. காயத்துக்கு மருந்து வாங்குவதற்காகத் திருவெண்காட்டு நமச்சிவாய வைத்தியரிடம் போகிறேன்." "இவ்வளவுதானே, வேறு ஒன்றும் இல்லையே? சத்தியமாய்ச் சொல்!" என்று புலிகேசி கர்ஜித்தான். "ஆம், ஐயா! சத்தியமாகச் சொல்லுகிறேன், உலக்கைக்குத்தான் காயம் பட்டது!" என்று குண்டோதரன் உளறினான்.

வாதாபிச் சக்கரவர்த்திக்குத் திடீரென்று சிரிப்பு பீறிக் கொண்டு வந்தது. சற்று நேரம் விழுந்து விழுந்து சிரித்து விட்டு, பக்கத்திலிருந்த ஒற்றர் தலைவனைப் பார்த்து, "இந்தப் பைத்தியக்காரனை என்ன செய்கிறது?" என்று கேட்டான். "சக்கரவர்த்தி! இவன் பைத்தியக்காரன் அல்ல; காரியப் பைத்தியமாகத் தோன்றுகிறது. மிக்க நெஞ்சழுத்தமுள்ளவனாகக் காணுகிறான், இவனை வேறு விதத்தில் பரிசோதிக்க வேண்டும்" என்றான் வாதாபியின் ஒற்றர் தலைவன். குண்டோதரனைப் பிடித்துக் கொண்டு வந்திருந்த வீரர்களின் தலைவன் சக்கரவர்த்தியின் அருகில் நெருங்கி, "பிரபு! இதோ இந்த ஓலை இவனைச் சோதித்த போது அகப்பட்டது" என்பதாகச் சொல்லி விட்டுக் கொடுத்தான்.

புலிகேசி அதை வாங்கி முன்போலவே அங்கிருந்த லிகிதனிடம் கொடுக்க, அவன் ஓலையைப் படிக்கலானான். "மீனக் கொடியோனுக்கு ரிஷபக் கொடியோன் விடுத்த நிருபம். வடதேசத்துக்கடுவாய் உம்மைக் காண்பதற்காகக் கொள்ளிட நதிக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. புலியின் ஆசை வார்த்தைகளில் மயங்கி விடவேண்டாம். சேற்றில் அகப்பட்டுக் கொண்ட புலி பிராமணனைத் தோத்திரம் செய்து ஏமாற்றிய கதை ஞாபகம் இருக்கட்டும். காஞ்சி ரிஷபத்தை வாதாபிப் புலியினால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உறுதியாக நம்பவும். புலி சேற்றிலேயே கிடந்து பட்டினியால் செத்த பிறகு காஞ்சி ரிஷபத்துக்கும் மதுரையின் பெண் மானுக்கும் நீடித்த உறவு ஏற்பட இடம் இருக்கிறது. ஆனால், புலியின் பசியைத் தீர்க்க உதவி செய்தால் அது மதுரையின் மானுக்குத்தான் முடிவில் ஆபத்தாக முடியும். இதையும் மனத்தில் வைத்துக் கொண்டு உசிதப்படி நடந்து கொள்ளவும்."

இதை லிகிதன் படித்து வரும்போதே வாதாபிச் சக்கரவர்த்திக்கு அதன் உட்கருத்து இன்னதென்று விளங்கி விட்டது. கோபத்தினால் அவனுடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. பற்களை அவன் நறநறவென்று கடித்துக் கொண்ட சப்தம் அருகில் இருந்தவர்கள் எல்லாரையும் நடுங்கச் செய்தது. குண்டோதரன், சற்று முன்னால் பயந்தவன் போல நடித்து 'உரல் உலக்கை' என்றெல்லாம் பேசியதையும், அதைக் கேட்டுத் தான் சிரித்ததையும் நினைத்த போது உண்டான அவமான உணர்ச்சியானது புலிகேசியின் கோபத்திற்கு இன்னும் தூபம் போட்டது. "அடே ஒற்றா! வாதாபிப் புலிகேசியுடனா விளையாடத் துணிந்தாய்? கொண்டு போங்கள் இவனை. இவனுடைய கண்களைப் பிடுங்கி விட்டு, கழுத்தை வெட்டிக் கழுகுக்குப் போடுங்கள்!" என்று கர்ஜித்தான்.

இப்படிக் குரூரமான ஆக்ஞையிட்ட போது, புலிகேசியின் கழல் போலச் சிவந்த கண்கள் குண்டோதரனை உற்று நோக்கின. அவ்விதம் நோக்கிய கண்களில் திடீரென கோபம் தணிந்து, அளவில்லா ஆச்சரியத்தின் அறிகுறி தென்பட்டது. ஏனெனில், குண்டோதரனை வீரர்கள் இழுத்துக் கொண்டு போக முயன்ற போது, அவனுடைய தலையானது விசித்திரமான சில சமிக்ஞைகளைச் செய்தது. உற்றுக் கவனித்த புலிகேசிக்கு, அந்தச் சமிக்ஞைகள் ஸ்வஸ்திகச் சின்னத்தின் கோலமாக அமைந்தன என்பது தெரிய வந்தது. (ஸ்வஸ்திகச் சின்னம் என்றதும், வாசகர்களுக்கு ஜெர்மனியில் நாஸிக் கட்சியின் சின்னமாக அது விளங்குவது ஞாபகம் வரும். ஆனால், ஹிட்லரைப் பார்த்துப் பூர்வீக இந்தியர்கள் காப்பியடிக்கவில்லை. அந்த நாளில் புத்தர்களும் ஜைனர்களும் சில சமயங்களில் ஸ்வஸ்திகச் சின்னத்தை உபயோகப்படுத்தினார்கள் என்பது சரித்திர ஆதாரம் பெற்ற விஷயம்.) அதனாலேதான் அவனுடைய கண்களில் அத்தகைய வியப்புக் குறி தோன்றியது. "நில்லுங்கள்!" என்று புலிகேசி மறுபடியும் கூவினான். "இந்த ஒற்றனிடம் நான் இன்னும் சில விஷயங்கள் கேட்க வேண்டும். இவனை இங்கேயே தனியாக விட்டு விட்டு மற்றவர்கள் கூடாரத்துக்கு வௌியே போங்கள்" என்று கட்டளையிட்டான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


ஆறாம் அத்தியாயம்பிக்ஷுவின் செய்தி

சக்கரவர்த்தியின் கட்டளையைக் கேட்டதும் கூடாரத்திலிருந்த பலர் உடனே வௌியேறினார்கள். ஒற்றர் தலைவனும் இன்னும் சிலரும் வௌியேறுவதற்குத் தயங்கிய போது புலிகேசி அவர்களைக் கோபத்துடன் பார்த்து, "போங்கள்!" என்று கர்ஜனை செய்யவே அவர்களும் போய் விட்டார்கள். தனித்து நின்ற குண்டோதரனைப் பார்த்து, புலிகேசி சாந்தமான குரலில், "அப்பா நீ யார்? யாரிடமிருந்து வந்தாய்? அந்தரங்கச் செய்தி ஏதேனும் கொண்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்டான். "ஆம், மகாப் பிரபு! பிக்ஷுவிடமிருந்து தான் வந்தேன். சேதி கொண்டு வந்திருக்கிறேன்" என்றான் குண்டோதரன். "அப்படியா! என்ன செய்தி கொண்டு வந்தாய்?" என்று பரபரப்புடன் சொல்லிக் கொண்டே புலிகேசி சிம்மாசனத்திலிருந்து துள்ளிக் குதித்து எழுந்தான். "சீக்கிரம் சொல்லு! பிக்ஷு எங்கே இருக்கிறார்? சௌக்கியமாய் இருக்கிறாரா? ஏன் இத்தனை நாளாகச் செய்தி ஒன்றும் அனுப்பவில்லை? உன்னிடம் என்ன சொல்லி அனுப்பினார்?" என்று புலிகேசி சரமாரியாய்க் கேள்விகளை அடுக்கினான்.

குண்டோதரனுடைய கண்களில் திடீரென்று கண்ணீர் பெருகிற்று. விம்முகின்ற குரலில் "சத்யாச்ரயா! என் குருநாதர் காஞ்சியில் பாஷாண்டிப் பல்லவனுடைய சிறையில் இருக்கிறார்!" என்றதும், புலிகேசி "ஆஹா! நான் உயிரோடிருக்கும் போது பிக்ஷு சிறையில் இருப்பதா? என்ன அவமானம்! காவித் துணி அணிந்த பிக்ஷுவைச் சிறையில் இடும் அளவுக்கு மகேந்திர பல்லவன் அவ்வளவு நீசனாகி விட்டானா!" என்று சீறினான். பிறகு, "எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லு! பிக்ஷு எப்படிச் சிறைப்பட்டார்? நீ எப்போது அவரைப் பார்த்தாய்? என்ன செய்தி சொல்லியனுப்பினார்?" என்று கேட்டான்.

குண்டோதரன் சொன்னான்; "ஏழு நாளைக்கு முன்பு சென்ற வெள்ளிக் கிழமையன்றுதான் அவரைப் பார்த்தேன். மதத்துரோகியும், குருத்துரோகியும், பாஷாண்டியுமான மகேந்திர பல்லவன் தனது இராஜ்யத்திலுள்ள புத்த பிக்ஷுக்களையெல்லாம் பிடித்து அடைத்து வைத்திருக்கும் சுரங்க மண்டபத்துக்குள்ளே பிக்ஷுவைப் பார்த்தேன். மன்னர் மன்னா! முதலில் புத்த பிக்ஷு சொல்லியனுப்பிய செய்தியைத் தங்களிடம் சொல்லிவிடுகிறேன். அதுவரையில் இந்தப் பாழும் உயிருக்கு எதுவும் வந்து விடக் கூடாதே என்று எவ்வளவோ கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகா! சென்ற ஏழு நாட்களில் இந்த ஏழைக்கு எவ்வளவு ஆபத்துக்கள் வந்தன? என் குருநாதருடைய செய்தியைத் தங்களிடம் சொல்லி விட்டேனானால், அப்புறம் இந்த அற்ப உயிருக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன். தங்களை எப்படியாவது நேருக்கு நேர் தரிசித்து விட வேண்டுமென்று என்னவெல்லாமோ யுக்தி செய்தேன். தங்களைத் தரிசிக்க வேறுவிதமாய் முடியாதென்று எண்ணிக் காஞ்சியிலிருந்து வந்த நமது வீரர்களிடம் வேண்டுமென்றே அகப்பட்டுக் கொண்டேன். பிரபு! பிக்ஷு தங்களிடம் சொல்லும்படியாக முக்கியமாக நாலு செய்திகளைச் சொல்லியிருக்கிறார் அவற்றைக் கேளுங்கள்." இத்தகைய பூர்வ பீடிகையுடன் குண்டோதரன் புத்த பிக்ஷுவின் நாலு செய்திகளையும் வரிசைக் கிரமமாகச் சொல்லத் தொடங்கினான்.

முதலாவது செய்தி, "மதுரைப் பாண்டியனை நம்ப வேண்டாம்" என்பது. இந்த ஜயந்தவர்ம பாண்டியன்தான் பிக்ஷுவை மதுரையில் சிறைப்பிடித்து வைத்திருந்தவன். அச்சமயம் மகேந்திர பல்லவனுக்கும் ஜயந்தவர்மனுக்கும் ஏதேதோ அந்தரங்க ஓலைப் போக்குவரவு நடந்தது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ துரோகமாகச் சூழ்ச்சி செய்திருக்க வேண்டுமென்று பிக்ஷு கருதுகிறபடியால் பாண்டியனிடம் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியது. அவனை முழுவதும் நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கி விடக்கூடாது.