கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
நான்காம் பாகம் - மணிமகுடம்
நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - கரிகாலன் கொலை வெறி நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - "அவள் பெண் அல்ல!" நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - "புலி எங்கே?" நாற்பத்து நான்காம் அத்தியாயம் - காதலும் பழியும் நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - "நீ என் சகோதரி!" நாற்பத்தாறாம் அத்தியாயம் - படகு நகர்ந்தது!
நாற்பத்தொன்றாம் அத்தியாயம் கரிகாலன் கொலை வெறி
ஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு
காலமாயிற்று என்றும், வில்வித்தையையே மறந்து போயிருக்கக்
கூடும் என்று சொன்னான் அல்லவா? அன்று அவன் வீரநாராயண
ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம்
எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு
அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும்,
மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு
எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது
அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக்
கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக
அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை
இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக
இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம்
இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில்
செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள்
மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக்
கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு
கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான்.
அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, "கந்தமாறா!
நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா? என்னைக் கொல்ல முயன்றாயா?"
என்று கேட்டான். கந்தமாறன் முகத்தில் எள்ளும் கொள்ளும்
வெடித்தன; பிறகு அவன் வில்லை வளைக்கவே இல்லை. ஏறக்குறைய
சூரியன் உச்சி வானத்தை அடைந்த சமயத்தில் எல்லாரும் களைத்துப்
போனார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வீடு திரும்பலாமே
என்ற யோசனை எல்லாருடைய மனத்திலும் தோன்றியது. ஆனால் கரிகாலனோ
களைத்துப் போன குதிரையை மேலும் காட்டு வழிகளில் செலுத்திக்
கொண்டு போனான்.
காலை நேரத்திலெல்லாம் கந்தமாறன்
கரிகாலனையொட்டிப் போய்க்கொண்டிருந்தான். "என்னைக் கொல்லப்
பார்த்தாயா?" என்று கரிகாலன் அவனைக் கேட்ட பிறகு கந்தமாறன்
பின்னால் தங்கிப் பார்த்திபேந்திரனுடன் சேர்ந்து கொண்டான்.
அவனிடம் இளவரசரின் முரட்டுத்தனமான நடத்தையும் பேச்சையும்
பற்றிக் குறை கூறத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அதற்குச்
சமாதானம் கூற முயன்றான். இந்தச் சமயம் பார்த்து வந்தியத்தேவன்
கரிகாலனை அணுகினான். பிறகு அவர்கள் இருவருமே சேர்ந்து முன்னால்
சென்று கொண்டிருந்தார்கள். வந்தியத்தேவன் வில்லும் அம்பும்
எடுத்து வரவில்லை. அவனுக்கு வில்வித்தை அவ்வளவாகப் பழக்கமும்
இல்லை. கையில் வேல் மட்டும்தான் கொண்டு வந்திருந்தான். ஆகையால்
கரிகாலனுடைய வேட்டையில் குறுக்கிடாமல் அவன் ஜாக்கிரதையாகச்
சென்று வந்தான். ஏதாவது அபாயம் நேருவதாக இருந்தால் வேலை
உபயோகிப்பதற்கு மட்டும் எச்சமயமும் ஆயத்தமாகப் போய்க்
கொண்டிருந்தான். அதற்கு அவசியம் உச்சி நேரம் வரை ஏற்படவில்லை.
கந்தமாறன் பார்த்திபேந்திரனிடம், "இன்றைக்கு இவ்வளவு வேட்டை
ஆடியது போதாதா? இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள
விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே.
இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக
வேண்டும். இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்" என்று
சொல்லுங்கள்!" என்று கூறினான்.
அதற்குப்
பார்த்திபேந்திர பல்லவன், "தம்பி! இளவரசரின் உள்ளத்தில் ஏதோ
கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை
விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா? அந்த
ஆத்திரத்தையெல்லாம் வேட்டையில் காட்டுகிறார்; அது வரையில்
நல்லதுதான். இல்லாவிடில் உன் மீதும் என் மீதும் காட்டுவார்.
அவராகச் சலிப்புற்றுப் 'போதும்' என்று சொல்லட்டும்; நாம்
தலையிட வேண்டாம்" என்றான்.
இந்தச் சமயத்தில் அந்த வனம்
வனாந்தரமெல்லாம் நடுங்கும்படியான உறுமல் சத்தம் ஒன்று கேட்டது.
கந்தமாறன் முகத்தில் பீதியின் அறிகுறி காணப்பட்டது. "ஐயோ!
காட்டுப்பன்றி! இளவரசரை நிற்கச் சொல்லுங்கள்!" என்றான்.
"காட்டுப்பன்றிக்கு என்ன அவ்வளவு பயம்? புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட
பாட்டில் பன்றி எந்த மூலை?"என்றான் பார்த்திபேந்திரன்.
"நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள் இந்தக் காடுகளில் உள்ள
பன்றிகள் புலி கரடிகளை சின்னாபின்னமாக்கிவிடும்! யானையை
முட்டிக் கீழே தள்ளிவிடும்! குதிரைகள் இலட்சியமே இல்லை,
அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து
விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது!... ஐயா! ஐயா!
நில்லுங்கள்" என்று கந்தமாறன் கூச்சலிட்டான்.
அதே சமயத்தில் காட்டுப் புதர்களிலே ஒரு சிறிய சுழற்காற்று அடிப்பது போன்ற
அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. மறு நிமிடம் குட்டி யானைகளைப் போன்ற
கரிய பெரிய உருவம் வாய்ந்த இரண்டு காட்டுப்பன்றிகள்
வௌிப்பட்டன. அவை ஒரு கண நேரம் நின்று குதிரைகளையும் அவற்றின்
மீது வந்தவர்களையும் உற்றுப் பார்த்தன. கந்தமாறன், "ஜாக்கிரதை
ஐயா! ஜாக்கிரதை"! என்று கூச்சலிட்டான். பின் தொடர்ந்து வந்த
வேட்டைக்காரர்களில் சிலர் இதற்குள் அங்கு வந்து சேர்ந்து
விட்டார்கள். அவர்கள் தாரை தப்பட்டைகளைப் பிராணன் போகிற
அவசரத்துடன் முழக்கிக் கொண்டு "கா கூ" என்று கூச்சலிட்டார்கள்.
அந்தப் பன்றிகள் என்ன நினைத்துக் கொண்டனவோ என்னமோ தெரியவில்லை.
ஒருவேளை அவற்றின் குட்டிகளை நினைத்துக் கொண்டிருக்கலாம்.
குட்டிகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க வேண்டுமென்ற
உணர்ச்சியினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது தாரை
தப்பட்டைகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டிருக்கலாம். பன்றிகள்
இரண்டும் வெவ்வேறு திசையை நோக்கி பிய்த்துக் கொண்டு ஓடத்
தொடங்கின.
கந்தமாறன் அதைப் பார்த்துவிட்டு, "கோமகனே!
அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு
காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது!" என்றான்.
கரிகாலன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வில்லை வளைத்து
அம்பை விட்டான். அது ஒரு பன்றியின் முதுகில் போய்த் தைத்ததைப்
பார்த்து விட்டு இளவரசன், "ஆஹா!" என்று உற்சாக கோஷம் செய்தான்.
அடுத்த கணத்தில் அந்தப் பன்றி உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது.
அம்பு தெறித்துக் கீழே விழுந்தது; பன்றி மேலே ஓடியது.
கந்தமாறன் அப்போது சிரித்த சிரிப்பில் ஏளனத்தின் தொனி
தெரிந்தது. கரிகாலன் அவனைப் பார்த்து, "கந்தமாறா! எங்கே ஒரு
பந்தயம்! நானும் வந்தியத்தேவனும் அந்தப் பன்றியைத் தொடர்ந்து
போய் அதைக் கொன்று எடுத்துக் கொண்டு வருகிறோம். நீயும்
பார்த்திபேந்திரனும் இன்னொரு பன்றியைத் துரத்திப் போய்க்
கொன்று எடுத்து வாருங்கள்! இந்தப் பன்றிகள் இரண்டையும்
கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது!" என்று சொல்லிக்
கொண்டே குதிரையைத் தட்டி விட்டான்; வந்தியத்தேவனும் அவனுடன்
சென்றான்.
அவர்கள் தொடர்ந்து சென்ற காட்டுப்பன்றி எந்தத் திசையில் எந்த வழியாகப்
போய்க் கொண்டிருக்கிறதென்பது கொஞ்ச நேரம் வரையில் தெரிந்து
கொண்டிருந்தது. ஏனெனில் பன்றி சென்ற வழியிலிருந்த செடி
கொடிகளும் புதர்களும் அந்தப் பாடுபட்டிருந்தன. பின்னர் ஒரு
சிறிய கால்வாய் குறுக்கிட்டது. அது காட்டில் பெய்யும் மழைத்
தண்ணீரை ஏரியில் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்.
அவ்விடத்துக்கு வந்த பிறகு பன்றி எந்தப் பக்கம் போயிற்று என்று
கண்டுபிடிக்க முடியவில்லை. கால்வாயைக் கடந்து அப்பாலுள்ள
காட்டுக்குச் சென்றதா? கால்வாய் ஓரமாக இந்தப் பக்கமாகவோ,
அந்தப் பக்கமாகவோ சென்றதா என்பதை அறிய முடியவில்லை.
அச்சமயம் கால்வாயின் வழியாகத் தெரிந்த ஏரியின் விசாலமான
நீர்ப்பரப்பில் தெரிந்த ஒரு காட்சி அவர்களுடைய கவனத்தைக்
கவர்ந்தது. படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிலிருந்தவர்கள்
பெண்மணிகள் என்றும் அறியக் கூடியதாயிருந்தது. ஆனால் அவர்கள்
யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. வந்தியத்தேவனும்
கரிகாலனும் அச்சமயம் இருந்த இடத்தை நோக்கியே படகு வருவதாக
முதலில் காணப்பட்டது. பிறகு திசை சற்றுத் திரும்பி, ஏரிக்
கரையோரமாக இருந்த இன்னொரு தீவை நோக்கிச் சென்று படகு மறைந்து
விட்டது.
"வல்லவரையா! படகில் வந்தவர்கள்
யாராயிருக்கும்? பெண்மணிகள் போலத் தோன்றினார்கள் அல்லவா?"
என்றான் கரிகாலன்.
"பெண்கள் போலத்தான் தோன்றியது; அதற்குமேல் எனக்கும் தெரியவில்லை" என்றான்
வந்தியத்தேவன்.
"ஒருவேளை சம்புவரையர் வீட்டுப்
பெண்களாயிருக்குமோ?"
"இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும்?"
"ஆமாம்; அவர்களாயிருக்க முடியாதுதான்... காலையில் பழுவேட்டரையர்
புறப்பட்டுப் போய்விட்டார் அல்லவா? நிச்சயந்தானே?"
"நிச்சயந்தான், ஐயா! அரண்மனை வாசல் திறப்பதையும் அவர் யானை
மீது வௌியே போவதையும் நானே பார்த்தேன்."
"அவர் மட்டுந்தான் போனாரா?"
"ஆமாம்; கிழவர் மட்டுந்தான் போனார்;
இளைய ராணி போகவில்லை."
"அந்தக் கிழவரைப் போன்ற
வீராதிவீரனை எங்கே பார்க்கப் போகிறோம்? என் பாட்டனார்
மலையமானைக் கூடப் பழுவேட்டரையருக்கு அடுத்தபடியாகத்தான் சொல்ல
வேண்டும்..."
"ஐயா! அந்தக் கிழவர்களைப் பற்றியெல்லாம்
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். தங்களுடைய வீரத்தைப்
போர்க்களத்தில் நேரில் பார்த்திருக்கிறேன்; கடம்பூர்
அரண்மனையிலும் பார்த்தேன். கிழவர்கள், குமாரர்கள் எல்லாரையும்
எப்படி நடு நடுங்க அடித்துக் கொண்டிருந்தீர்கள்!" என்றான்
வந்தியத்தேவன்.
"அது உண்மைதான். ஆனால் எதற்காக அவ்வளவு
தடபுடல் செய்தேனோ, அந்தச் சந்தர்ப்பம் நெருங்கி
வந்திருக்கும்போது எனக்கு உள்ளமும் உடலும் நடுங்குகின்றன.
என்னைப் போன்ற பயங்கொள்ளிக் கோழையை இந்தச் சோழ நாட்டிலேயே
காணமுடியாது..."
"இளவரசே! இன்று காட்டில்
வேட்டையாடியபோது அப்படித் தாங்கள் பயந்து நடுங்கியதாகத்
தெரியவில்லையே? வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள்
எல்லோரையும் அல்லவா நடு நடுங்கச் செய்தீர்கள்?"
"இவையெல்லாம் ஒரு தைரியத்தில் சேர்ந்ததா? கேவலம் ஒரு வேட்டை
நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி
மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு
தைரியமா? வல்லவரையா, கேள்! நான் செய்த சூழ்ச்சி
பலித்துவிட்டது. பழுவேட்டரையர் நந்தினியைத் தனியாக விட்டு
விட்டுச் சென்று விட்டார். ஆயினும் அவளைத் தனிமையில்
பார்த்துப் பேசுவதைப் பற்றி எண்ணினால் எனக்குப் பீதி
உண்டாகிறது!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"ஐயா! அதற்கு
காரணம் உண்டு; இத்தனை காலமும் பழுவூர் இளைய ராணியைப் பற்றி
ஒருவிதமாக எண்ணி இருந்தீர்கள். இப்போது அவர் தங்கள் சகோதரி
என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவரோ தங்கள் குலத்தையே
அழித்துவிட விரும்பும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு
சேர்ந்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அவரிடம் சொல்வது
கஷ்டமான காரியந்தான். எனக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம்
கிடைத்தும் என்னால் சொல்ல முடியவில்லையே?....
நண்பா!
நீ அறிந்து வந்து கூறிய செய்தி ஒவ்வொன்றும் திடுக்கிடச்
செய்வதாகவே இருக்கிறது. இன்னமும் என்னால் நமப முடியவில்லை.
ஆனால் சிற்சில பழைய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் உண்மையாக
இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் அவளுக்குமிடையில்
எப்பொழுதும் ஒரு மாயத்திரை இருந்து வந்தது. பழையாறை பெரிய
பிராட்டியார் - செம்பியன் மாதேவியார் - நந்தினியுடன் நான்
சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த நாளில்
வற்புறுத்திச் சொன்னார். ஆனால் உண்மை முழுவதையும் சொல்லவில்லை;
சொல்லியிருந்தால் இவ்வளவெல்லாம் நேர்ந்திராது..."
"செம்பியன் மாதேவிக்கு முழு உண்மையும் தெரிந்திராமலிருக்கலாம். யாரோ அநாதை
ஊமை ஸ்திரீ பெற்று போட்டுப் போன பெண் என்று மட்டும்
அறிந்திருக்கலாம். சுந்தர சோழரின் மகள் பழுவூர் இளைய ராணி
என்பது ஒருவேளை தெரியாமலிருக்கலாம்."
பக்க
தலைப்பு
நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
"அவள் பெண் அல்ல!"
இளவரசன் கரிகாலன்
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். இளம் பிராயத்து
நினைவுகள் அவன் உள்ளத்தில் அலை அலையாக மோதிக் கொண்டு தோன்றி,
குமுறிக் கொந்தளித்து விட்டுப் பிறகு வேறு நினைவுகளுக்கு
இடங்கொடுத்து விட்டு மறைந்தன. அந்த நினைவு அலைகளைப்
பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி ஒரு தீர்க்கமான மூச்சு விட்டு
விட்டுக் கரிகாலன்:
"போனதைப் பற்றி இப்போது
பேசவேண்டாம்; நடக்க வேண்டியதைப் பற்றி பேசலாம். அதற்காகவே
உன்னைத் தனியாக அழைத்து வந்தேன். பந்தயத்தில் நாம் தோற்று
விட்டோம்; பன்றி போய்விட்டது. இனி என்ன செய்வது, எப்படிச்
செய்வது என்று யோசித்து முடிவு செய்யலாம். வல்லவரையா!
நந்தினியிடம் அவளுக்கும் எனக்கும் உள்ள உறவை எப்படிச் சொல்வது
என்று நினைத்தாலே எனக்குப் பீதி உண்டாகிறது. அவள் முகத்தை
நன்றாக நிமிர்ந்து பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. தப்பித்
தவறிப் பார்க்கும் போதெல்லாம், வீர பாண்டியனுடைய உயிருக்காக
அவள் மன்றாடிய போது எப்படி முகத்தை வைத்துக் கொண்டாளோ,
அப்படியே வைத்துக் கொள்கிறாள். அவளுடைய பார்வை நெஞ்சை வாள்
கொண்டு அறுப்பது போலிருக்கிறது. என் சகோதரி வீர பாண்டியன் மீது
காதல் கொண்டு அவன் உயிருக்காக என்னிடம் மன்றாடினாள் என்பதை
நினைத்தாலே என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது.
வல்லவரையா! உன் கருத்து என்ன? இன்னமும் அவளுக்கு உண்மை
தெரியாது என்றா நினைக்கிறாய்? அவள் சுந்தர சோழரின் மகள்
என்றும், எங்களுக்கெல்லாம் சகோதரி என்றும் அறியமாட்டாள் என்றா
கருதுகிறாய்?"
"கோமகனே! இவையெல்லாம் தெரிந்திருந்தால், இன்னமும் பாண்டிய நாட்டுச்
சதிகாரர்களுடன் சேர்ந்திருப்பாரா? சோழ குலத்துக்கு விரோதமாக
ஒரு சிறுபிள்ளையைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய நாட்டு
மன்னனாகவும் சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகவும் மணிமகுடம்
சூட்டியிருப்பாரா? அந்த மணிமகுடத்தைத் தாங்கி நிற்பதாகக்
கையில் கத்தி ஏந்திப் சபதம் செய்திருப்பாரா? இவையெல்லாம்
திருப்புறம்பியம் பள்ளிப்படையருகில் நள்ளிரவில் நடந்ததை நானே
பார்த்தேன்.."
"இவ்வளவையும் பார்த்த உன்னை நந்தினி உயிரோடு விட்டு விட்டதை நினைத்தால்
வியப்பாயிருக்கிறது."
"ஐயா! எனக்கு அதில் வியப்பு
இல்லை; பெண் உள்ளத்தில் இயற்கையாகக் குடிகொண்டுள்ள இரக்கம்
காரணமாயிருக்கலாம் அல்லவா?"
"வல்லவரையா! நீ
உலகமறியாதவன்; பெண் உள்ளத்தில் குடிகொண்டுள்ள வஞ்சகமும்
வஞ்சனையும் எத்தகையவை என்பது உனக்குத் தெரியாது. என்ன
நோக்கத்துடன் உன்னை அவள் உயிரோடு விட்டாள் என்பதை நான்
அறியேன். ஆனால் என்னை எதற்காக ஓலை அனுப்பி வரவழைத்தாள் என்பது
என் அந்தரங்கத்துக்குத் தெரிந்திருக்கிறது."
"இளவரசே!
அது என்ன காரணமாயிருக்கும்?"
"என்னைக் கொன்று வீர
பாண்டியனுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்
வரவழைத்திருக்கிறாள்.."
"ஐயா! அப்படி ஏதாவது விபரீதம்
நேர்ந்துவிடப் போகிறதென்று எண்ணித்தான் இளைய பிராட்டியும்
முதன்மந்திரியும் என்னை அவசரமாக அனுப்பி வைத்தார்கள். ஆனால்
அவர்கள் கடம்பூருக்குப் போக வேண்டாம் என்று சொன்னதைத் தாங்கள்
கேட்கவில்லை...."
"வல்லவரையா! இளைய பிராட்டியும்
முதன்மந்திரியும் மிக மிக அறிவாளிகள்தான். ஆனால் விதியை
அவர்களால் கூடத் தடுக்க முடியாது அல்லவா? அருள்மொழிவர்மனைப்
பற்றிச் சோதிடர்கள் சொல்லியிருப்பதையெல்லாம்
உண்மையாக்குவதற்காகவே விதி என்னை இங்கே கொண்டு வந்து
சேர்த்திருக்கிறதோ என்னமோ, யார் கண்டது? வல்லவரையா! கந்தமாறன்
என் பின்னாலிருந்து அம்பை விட்டானே? உண்மையில் அவன் கரடியைக்
குறிப் பார்த்து விட்டானா? என்னைக் குறிப்பார்த்து விட்டானா?
நீ கவனித்தாயா?"
"நான் கவனிக்கவில்லை, ஐயா! ஆனால்
கந்தமாறன் அத்தகைய துரோகம் செய்யக் கூடியவன் என்று நான் ஒரு
நாளும் ஒப்புக் கொள்ளமாட்டேன். வீட்டுக்கு வந்த விருந்தாளியை,
அதிலும் சக்கரவர்த்தியின் குமாரனைப் பின்னாலிருந்து அம்பு
எய்து கொல்லக் கூடியவனா கந்தமாறன்? அவனுடைய அறிவுக் கூர்மையைப்
பற்றி எனக்கு அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் இல்லைதான்.
முதுகில் குத்தப்பட்டு உணர்வற்றுக் கிடந்தவனை நான் தூக்கிக்
கொண்டு போய்க் காப்பாற்றினேன். கண் விழித்ததும் என்னைப்
பார்த்தபடியால் நான்தான் அவனைக் குத்தியதாக எண்ணிக் கொண்டான்.
அப்போது அவன் என் பேரில் கொண்ட பகைமை இன்னும் மாறவில்லை. ஆனால்
அவனுடைய புத்தி கொஞ்சம் கட்டையாயிருந்தாலும், துரோக
சிந்தையுள்ளவன் அல்ல!..."
"நண்பா! ஒரு அழகிய பெண்ணின்
மோகனாஸ்திரத்துக்கு எவ்வளவு சக்தியுண்டு என்று உனக்குத்
தெரியாது. எவ்வளவு நல்லவனையும் அது துரோகச் செயல் புரியச்
செய்துவிடும்..."
"ஐயா! பெண்களின் மோகன சக்தியைப்
பற்றி நானும் சிறிது அறிந்து தானிருக்கிறேன். அதனால் நான் ஒரு
நாளும் துரோகியாகி விடமாட்டேன்..."
"ஆகா! மணிமேகலை
நல்ல பெண், உன்னைத் துரோகமான காரியம் செய்யும்படி
ஏவமாட்டாள்..."
"நான் மணிமேகலையைச் சொல்லவில்லை; பூரண
சந்திரனைப் பார்த்த கண்களுக்கு மின்மினி கவர்ச்சிகரமாகத் தோன்ற
முடியுமா?"
"பூரண சந்திரன் என்று யாரைக் குறிப்பிடுகிறாய்?"
"இளவரசே! கோபிக்க
வேண்டாம்; பழையாறை இளைய பிராட்டியைத்தான் சொல்லுகிறேன்..."
"அடே! அதிகப் பிரசங்கி! உலகிலுள்ள மன்னாதி மன்னர்கள் எல்லோரும்
குந்தவையின் கைப்பிடிக்கத் தவம் கிடக்கிறார்கள். அத்தகைய என்
சகோதரியை நீ மனத்தினாலும் நினைக்கலாமா?"
"ஐயா! பூரண
சந்திரனுடைய மோகனத்தையும் தண்ணொளியையும் பூலோக
சக்கரவர்த்திகளும் பார்த்து அனுபவிக்கிறார்கள்; ஏழை
எளியவர்களுந்தான் நிலவில் நின்று களிக்கிறார்கள்; அவர்களை யார்
தடுக்க முடியும்?"
"ஆமாம்; உன் பேரில் கோபித்துக்
கொள்வதில் பயனில்லை. தெரிந்துதான் நான் உன்னை என் சகோதரியிடம்
ஓலையுடன் அனுப்பினேன். நீயும் அவளுக்குத் திருப்தியாக நடந்து
கொண்டாய். ஆனால் பார்த்திபேந்திரனிடம் மட்டும் இதையெல்லாம்
சொல்லிவிடாதே! அவன் சோழ குலத்துக்கு மருமகனாகித் தொண்டை
நாட்டுக்கு மன்னனாக விளங்கலாம் என்று கனவு கண்டு
கொண்டிருக்கிறான்..."
"ஐயா! அவ்விதம் சில காலத்துக்கு
முன்பு வரையில் இருந்திருக்கலாம். இப்போது கந்தமாறன்,
பார்த்திபேந்திரன் இருவரும் நந்தினி தேவி காலால் இட்ட வேலையைத்
தலையினால் செய்யக் காத்திருக்கிறார்கள்....."
"அதை
நான் கவனித்து வருகிறேன்; ஆகையினால்தான் அவர்கள் விஷயத்தில்
எனக்குப் பயமாயிருக்கிறது."
"எல்லாவற்றையும்
உத்தேசிக்கும்போது, தாங்கள் இளைய ராணியைச் சீக்கிரம் சந்தித்து
எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவது அவசியம் என்று
தோன்றுகிறது."
"நண்பா! எனக்கு அவ்வளவு தைரியம் வரும்
என்று தோன்றவில்லை. எனக்குப் பதிலாக நீயே அவளைச் சந்தித்துச்
சொல்லி விட்டால் என்ன?"
"இளவரசே! நான் சொன்னால் இளைய
ராணிக்கு நம்பிக்கை ஏற்படாது. ஒருமுறை நான் அவரை ஏமாற்றிவிட்டு
தப்பித்துக் கொண்டு சென்றிருக்கிறேன். ஆகையால் இதுவும் ஏதோ ஒரு
சூழ்ச்சி என்று கருதக் கூடும்."
"ஆனால் நான்
நந்தினியைத் தனியாகச் சந்திப்பது எப்படி? அவளோ அந்தப்புரத்தில்
இருக்கிறாள்!"
"ஐயா! மணிமேகலையின் மூலம் அது
சாத்தியமாகும்; அதற்கு வேண்டிய ஏற்பாடு நான் செய்கிறேன்...."
"மணிமேகலையை நீ கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறாய்
போலிருக்கிறது. நல்ல காரியந்தான்! எது எப்படியானாலும்
மணிமேகலையை உனக்குத் திருமணம் செய்து விட்டேனானால், என் உள்ளம்
ஓரளவு நிம்மதி அடையும்."
"ஐயா! மணிமேகலையை நான் என்
உடன் பிறந்த சகோதரியாகக் கருதுகிறேன். அவளுக்கு இன்னும்
பன்மடங்கு மேலான அதிர்ஷ்டம் கிட்டக்கூடும் என்று
எதிர்பார்க்கிறேன்..."
"எதைப் பற்றிச் சொல்லுகிறாய்?"
"தெரியவில்லையா, இளவரசே! சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்து
இளவரசரின் உள்ளத்தில் கன்னி மணிமேகலை இடம் பெற்றிருப்பதாக
ஊகிக்கிறேன். சற்று முன் சம்புவரையர் குமாரியைப் பற்றி ஒரு
மாதிரி பேசினேன். என் மனத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காக
அவ்விதம் சொன்னேன். இளைய பிராட்டி ஒருவரைத் தவிர இந்த உலகில்
பிறந்த வேறு எந்தப் பெண்ணும் மணிமேகலைக்கு அறிவிலும்
குணத்திலும் இணையாக மாட்டார்கள். தாங்கள் மட்டும் மணிமேகலையை
மணந்து கொண்டால் நம்முடைய தொல்லைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
சம்புவரையரும் கந்தமாறனும் நம்முடன் சேர்ந்து விடுவார்கள்.
பழுவேட்டரையர்கள் தனித்துப் போய் விடுவார்கள். இளைய ராணியின்
சக்தியும் குன்றி விடும். மதுராந்தகத் தேவர் பின்னர் இராஜ்யம்
என்ற பேச்சையே எடுக்க மாட்டார். சிற்றரசர்களின் சூழ்ச்சியையும்
பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதியையும் ஒரேயடியாய்
முறியடித்து வெற்றி காணலாம்..."
"எல்லாம் சரிதான்,
தம்பி! ஆனால் கடம்பூருக்கு நான் திருமணம் செய்து கொள்வதற்காக
வரவில்லை. ஏதோ ஒரு பெரிய ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நான் சொல்கிறேன், கேள்! பழுவேட்டரையர் மதுராந்தகனோடு திரும்பி
வரும்போது ஒரு பெரிய படையுடன் வரப்போகிறார்..."
"ஐயா!
அப்படியானால் நாமும் திருக்கோவலூர் அரசருக்குச் சொல்லி
அனுப்பிப் படை திரட்டிக் கொண்டு வரச் செய்தால் என்ன? எதற்கும்
முன் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லதல்லவா?"
"நானும் அதைப் பற்றி யோசித்து வருகிறேன். ஒவ்வொரு சமயம் எனக்கு என்ன
தோன்றுகிறது தெரியுமா? இந்தக் கடம்பூர் அரண்மனையைத் தரை
மட்டமாக்கி, இங்கே சதியாலோசனை செய்தவர்கள் அத்தனை பேரையும்
அரண்மனை வாசலில் கழுவிலேற்ற வேண்டுமென்று தோன்றுகிறது. என்
தந்தையை முன்னிட்டுத்தான் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன். அவரை
மட்டும் நீ காஞ்சிக்கு அழைத்து வந்திருந்தால்...?"
"இளவரசே! அவரிடம் தங்கள் ஓலையைச் சேர்ப்பிப்பதே பிரம்மப்
பிரயத்தனமாகி விட்டதே!"
"ஆமாம்; சக்கரவர்த்தி இந்தப்
பழுவேட்டரையர்களிடம் நன்றாய் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
என் பெற்றோர்களுக்கென்று காஞ்சிமா நகரில் நான் கட்டிய பொன்
மாளிகையில் வௌவால்கள் சஞ்சரிக்கின்றன. நான்
உயிரோடிருக்கும்போது அவர்களை அம்மாளிகையில் வரவேற்கும்
பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ, என்னமோ தெரியாது. இந்தக்
கடம்பூரைவிட்டு உயிரோடு போவேனோ என்று கூடச்
சந்தேகமாயிருக்கிறது..."
"இளவரசே! தாங்கள் இவ்விதம்
பேசப் பேச, மலையமானைப் படைகளுடன் வரச் சொல்வது மிக்க அவசியம்
என்று தோன்றுகிறது.."
"அந்த காரியத்துக்கு உன்னையே அனுப்பலாமா என்று பார்க்கிறேன்.."
"ஐயா! மன்னிக்கவேணும்! தங்களை விட்டு ஒரு கணமும் பிரியவே கூடாது என்று
தங்கள் தமக்கையார் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.."
"அதை நீ இது வரை நன்றாக நிறைவேற்றி வருகிறாய்."
"பார்த்திபேந்திர பல்லவர் இங்கே சும்மாத்தான் இருக்கிறார்;
பொழுது போகாமல் கஷ்டப்படுகிறார்..."
"ஆமாம்; பழுவூர்
இளைய ராணியைப் பாராத ஒவ்வொரு கணமும் அவனுக்கு ஒவ்வொரு யுகமாக
இருக்கிறது. பார்த்திபேந்திரன் பெண்ணழகுக்கு இவ்வளவு
அடிமையானவன் என்று நான் கனவிலும் கருதவில்லை. அவனைத்தான்
மலையமானிடம் அனுப்ப வேண்டும்."
"சரியான யோசனை, ஐயா!"
"அவன் இல்லாதபோது எனக்கு ஏதாவது அபாயம் நேரிட்டால் உதவிக்கு நீ
இருக்கவே இருக்கிறாய்..."
"இளவரசே! யார் இருந்தாலும்
இல்லாவிட்டாலும், தங்களுக்குத் தீங்கு செய்யத் துணிவுள்ளவன்
இந்த உலகில் இருப்பதாக நான் கருதவில்லை. தாங்கள் இல்லாதபோது
தங்களைப் பற்றி ஏதேதோ பேசிய வீரக் கிழவர்கள் தங்களை நேரில்
பார்த்ததும் கைகால் நடுங்கி வாய் குழறித் தடுமாறுவதை நேரில்
பார்த்தேனே?"
"தம்பி! கையில் கத்தி எடுத்துப் போராடக் கூடிய எந்த ஆண் மகனுக்கும் நான்
பயப்படவில்லை. பின்னாலிருந்து முதுகில் அம்பு விடக்கூடிய
கந்தமாறன் போன்றவர்களுக்கும் நான் பயப்படவில்லை..."
"மறுபடி கந்தமாறனைப் பற்றி அப்படிச் சொல்கிறீர்களே.."
"கேள், தம்பி! ஒரு பெண்ணின் நெஞ்சின் ஆழத்தில் உள்ள
வஞ்சகத்துக்குத்தான் அஞ்சுகிறேன். அவள் மனத்தில் என்ன வைத்துக்
கொண்டிருக்கிறாளோ என்று எண்ணும்போதெல்லாம் என் உள்ளம்
பதைபதைக்கிறது. அவள் என்னை மர்மமாகப் பார்க்கும் ஒவ்வொரு
பார்வையும் என் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்துவது போலிருக்கிறது.
அதைப் பற்றி எண்ணிய உடனே என் கை கால்கள் வெடவெடத்துப்
போகின்றன."
"ஐயா! நந்தினிதேவியின் வஞ்சகத்துக்குப் பயப்பட வேண்டியதுதான் என்பதை நானும்
ஒத்துக் கொள்கிறேன். அவருடைய உள்ளத்தில் எவ்வளவு பயங்கரமான
துவேஷம் குடிகொண்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
என்னை அவர் உயிரோடு போகவிட்டதை நினைக்கும்போது சில சமயம் அதில்
என்ன சூழ்ச்சி இருக்குமோ என்று பீதி கொள்கிறேன். ஆனால்
இதெல்லாம் அவருக்கு உண்மை தெரியாமலிருக்கும் காரணத்தினால்தான்
அல்லவா? அவருடைய சகோதரர் தாங்கள் என்பதைத் தெரிவித்து விட்டால்
அதற்குப் பிறகு எந்தக் கவலையும் வேண்டியதில்லையல்லவா?"
"அப்படியா எண்ணுகிறாய்? வல்லவரையா! நீ கெட்டிக்காரன்தான்.
ஆனால் பெண்களின் இயல்பு அறியாத அப்பாவிப் பிள்ளை.
நந்தினிக்குத் தான் சுந்தர சோழரின் குமாரி என்பது தெரிந்தால்,
எங்கள் எல்லோரிடமும் அவளுடைய குரோதம் ஒன்றுக்கு நூறு மடங்கு
ஆகும். தஞ்சை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக அவளுக்குப்
பட்டம் சூட்டுவதாகச் சொன்ன போதிலும் அவளுடைய கோபம் தீராது..."
"இளவரசே! அப்படித் தாங்கள் கருதினால் அந்தப் பொறுப்பை என்னிடமே
ஒப்புவியுங்கள். நானே நந்தினியிடம் உண்மை வரலாற்றைச் சொல்வேன்.
அவருடைய கோபத்தையும் தணிக்க முயல்வேன்...."
"உன்னாலும்
அது முடியாது, நண்பா! நந்தினியின் கோபத்தை யாராலும் தடுக்க
முடியாது. நான் சொல்வதை கேள்! எங்கள் சோழ குலத்தைக் காப்பாற்ற
வேண்டுமானால், ஒன்று நான் சாக வேண்டும்; அல்லது அவள் சாக
வேண்டும்; அல்லது இரண்டு பேரும் சாக வேண்டும். வீர பாண்டியனைக்
கொன்ற வாளினால் அவளையும் கொன்று விடுகிறேன்...."
"இளவரசே! இது என்ன பயங்கரமான பேச்சு?"
"வல்லவரையா! ஒரு சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்காக ஓர் உயிரைக் கொல்லுவது
குற்றமா? அவள் பெண்ணாயிருந்தால் என்ன? என் உடன் பிறந்த
சகோதரியாக இருந்தால்தான் என்ன? உண்மையில் அவள் பெண் அல்ல; பெண்
உருக்கொண்ட மாய மோகினிப் பேய்! அவளை உயிரோடு விட்டுவைத்தால்
விஜயாலய சோழர் காலத்திலிருந்து பல்கிப் பெருகி வந்திருக்கும்
இந்தச் சோழ சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகிவிடும்... ஆகா! அது
என்ன?" என்று ஆதித்த கரிகாலன் திகிலுடன் கேட்டு விட்டுத்
திரும்பிப் பார்த்தான்.
அச்சமயம் அவர்கள் இருந்த
இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் காட்டுப் புதர்களுக்கு
மத்தியில் ஏதோ அல்லோலகல்லோலம் நடந்து கொண்டிருந்தது. இருவரும்
குதிரைகளைத் தட்டிவிட்டு அருகில் சென்று பார்த்தார்கள். மிக
அபூர்வமான காட்சி ஒன்று தென்பட்டது; காட்டுப்பன்றி ஒன்றும்,
சிறுத்தைப் புலி ஒன்றும் கொடூரமாகச் சண்டையிட்டுக்
கொண்டிருந்தன.
"ஆகா! நாம் தேடி வந்தவன் இங்கே இருக்கிறான்!" என்றான் கரிகாலன்.
"சிறுத்தை நமக்கு வேலை இல்லாமல் செய்து விடும் போலிருக்கிறது!" என்றான்
வந்தியத்தேவன்.
"அப்படியா நினைக்கிறாய்? பார்த்துக்
கொண்டே இரு!" என்றான் கரிகாலன்.
சிறுத்தைக்கும்
பன்றிக்கும் நடந்த அகோரமான யுத்தத்தை இருவரும் சிறிது நேரம்
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறுத்தை
பன்றியின் மீது பாய்ந்து அதை நகங்களினாலும் பற்களினாலும் தாக்க
முயன்றது. ஆனால் காட்டுப்பன்றியின் கடினமான தோல், புலி
நகத்திற்கும் பற்களுக்கும் சிறிது அசைந்து கொடுக்கவில்லை.
ஆனால் பன்றி வேகமாக ஓடி வந்து சிறுத்தையை முட்டித் தள்ளித்
தரையிலும் மரங்களின் வேர்களிலும் வைத்துத் தேய்த்த போதெல்லாம்
சிறுத்தை படாதபாடு பட்டது. பன்றியின் கோரைப் பற்கள்
சிறுத்தையின் தோலைச் சின்னாபின்னமாகக் கிழித்தன. கடைசியாக ஒரு
முறை சிறுத்தையைப் பன்றி கீழே முட்டித் தள்ளியபோது அது செத்தது
போலக் கிடந்தது.
"தம்பி! சிறுத்தை செத்து விட்டது! பன்றி இனி நம் பேரில் திரும்பும்! அதற்கு
நாம் ஆயத்தமாக வேண்டும்!" என்று கூறிக் கரிகாலன் வில்லில்
அம்பைப் பூட்டி, விட்டான்.
அம்பு பன்றியின் கழுத்தில்
போய்த் தைத்தது. பன்றி கழுத்தை உதறிக் கொண்டே திரும்பிப்
பார்த்தது. இரு குதிரைகளையும் அவற்றின் மீதிருந்தவர்களையும்
ஒரு கணம் கவனித்தது. பிறகு ஒரு தடவை சிறுத்தையைப் பார்த்தது.
அதனால் இனி ஒன்றும் ஆகாது என்று தெரிந்து கொண்டது போலும்!
மூர்க்க ஆவேசத்துடன் குதிரைகளை நோக்கிப் பாய்ந்து வந்தது.
கரிகாலன் இன்னொரு அம்பை வில்லில் பூட்டுவதற்கு முன்னால் அவன்
ஏறியிருந்த குதிரையைத் தாக்கியது. தாக்குதலின் வேகத்தினால்
சிறிது நகர்ந்த குதிரையின் பின்னங்கால் ஒரு மரத்தின் வேரில்
அகப்பட்டுக் கொள்ளவே குதிரை தடுமாறிக் கீழே விழுந்தது.
குதிரையின் அடியில் கரிகாலன் அகப்பட்டுக் கொண்டான். பன்றி
சிறிது பின்னால் நகர்ந்து வந்து மறுபடியும் தரையில் கிடந்த
குதிரையை நோக்கிப் பாய்ந்து சென்றது.
பக்க
தலைப்பு
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம்
"புலி எங்கே?"
ஆதித்த கரிகாலர்
எப்பேர்ப்பட்ட ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டார் என்பதை
வந்தியத்தேவன் கவனித்தான். கண்மூடித் திறக்கும் நேரத்தில்
குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்து பன்றியின் மீது தன்
கையிலிருந்த வேலைச் செலுத்தினான். வேல் பன்றியின் முதுகுத்
தோலின் மீது மேலாகக் குத்தியது . பன்றி உடம்பை ஒரு குலுக்குக்
குலுக்கிக் கொண்டு திரும்பியது. அந்த வேகத்தில் வந்தியத்தேவன்
கையில் பிடித்திருந்த வேலின் பிடி நழுவிவிட்டது. பன்றியின்
முதுகில் இலேசாகச் சென்றிருந்த வேல் நழுவிக் கீழே விழுந்தது.
பன்றி இப்போது வந்தியத்தேவன் பக்கம் திரும்பி ஓடி வந்தது. அவன்
தன் அபாயகரமான நிலையை உணர்ந்தான். பன்றியின் தாக்குதலுக்கு
அவனுடைய குதிரையினால் ஈடு கொடுக்க முடியாது; கையில் வேலும்
இல்லை. இளவரசரோ இன்னமும் குதிரையின் கீழிருந்து வௌிப்படுவதற்கு
முயன்று கொண்டிருக்கிறார். தான் குதிரை மேலிருந்தபடி ஏதாவது
ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக் கொண்டால்தான் தப்பிப்
பிழைக்கலாம். சீச்சீ! எத்தனையோ அபாயங்களுக்குத் தப்பி வந்து
கடைசியில் கேவலம் ஒரு காட்டுப்பன்றியினாலேயா கொல்லப்பட
வேண்டும்?...
நல்ல வேளையாக அருகாமையிலேயே தாழ்ந்து
படர்ந்த மரம் ஒன்று இருந்தது. வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து
பாய்ந்து மரத்தின் கிளை ஒன்றைத் தாவிப் பிடித்துக் கொண்டான்.
கால் முதல் தோள் வரையில் அவனுடைய பலத்தை முழுவதும் பிரயோகித்து
எழும்பி கிளை மீது ஏறிக் கொண்டான். அதே சமயத்தில் பன்றி
அவனுடைய குதிரையை முட்டியது. குதிரை தட்டுத்தடுமாறி விழப்
பார்த்துச் சமாளித்துக் கொண்டு அப்பால் ஓடியது. கரிகாலர்
இன்னமும் குதிரையின் அடியில் கிடந்தார். வந்தியத்தேவன்
மரக்கிளை மீது இருந்தான். காட்டுப்பன்றி இருவருக்கும் நடுவில்
நின்று இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தது.
இரண்டு எதிரிகளில் யாரைத் தாக்கலாம் என்று அந்தக் காட்டுப்பன்றி யோசனை
செய்கிறது என்பதை வந்தியத்தேவன் அறிந்தான். இளவரசர் இன்னும்
குதிரைக்கு அடியிலிருந்து விடுவித்துக் கொண்டு வௌி
வந்தபாடில்லை. வௌி வந்துவிட்ட போதிலும் பன்றியின் தாக்குதலை
அவரால் அச்சமயம் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகந்தான். அவர்
கையில் உடனே பிரயோகிக்கக் கூடிய ஆயுதம் இல்லை. வில்லை வளைத்து
அம்பு விட வேண்டும். குதிரைக்கு அடியில் விழுந்து அகப்பட்டுக்
கொண்டதில் அவருக்குப் பலமான காயம் பட்டிருந்தாலும்
பட்டிருக்கலாம். எப்படியும் இளவரசருக்குச் சிறிது சாவகாசம்
ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இவ்வளவையும் மின்னல் மின்னும்
நேரத்தில் வந்தியத்தேவன் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தான்.
தான் ஏறியிருந்த மரக்கிளையைப் பலமாக உலுக்கி ஆட்டிக் கொண்டே
"ஆகா ஊ கூ" என்று பெரியதாகச் சத்தமிட்டான்.
அவனுடைய யுக்தி பலித்தது; பன்றி மூர்க்காவேசத்துடன் அவன் ஏறியிருந்த மரத்தை
நோக்கிப் பாய்ந்து வந்தது. "வரட்டும்; வரட்டும் வந்து மரத்தின்
பேரில் முட்டிக் கொள்ளட்டும்" என்று வந்தியத்தேவன் எண்ணிக்
கொண்டிருக்கும்போதே, அவன் ஏறி உட்கார்ந்து உலுக்கிய மரக்கிளை
மடமடவென்று முறிந்தது. கடவுளே! இது என்ன ஆபத்து?... கிளையுடன்
தரையில் விழுந்தால்? அடுத்த நிமிடமே பன்றியின் கோரப் பற்கள்
அவனைச் சின்னாபின்னமாகக் கிழித்துவிடும். வேறு கிளை ஒன்றைத்
தாவிப் பிடித்துக் கொண்டால்தான் பிழைக்கலாம்; அப்படித் தாவிப்
பிடிக்க முயன்றான். பிடிக்க முயன்ற கிளை சற்றுத் தூரத்தில்
இருந்தபடியால் ஒரு கை மட்டுந்தான் பிடித்தது. பிடித்த கிளை
மெல்லியதாயிருந்தபடியால் வளைந்து கொடுத்தது. கைப்பிடி நழுவத்
தொடங்கியது, கால்கள் ஊசலாடின! சரி! கீழே விழ வேண்டியதுதான்,
உடனே மரணந்தான்! சந்தேகமில்லை. ஏதோ, கடைசியாக ஆதித்த
கரிகாலரைக் காப்பாற்ற முடிந்தது அல்லவா? இளைய பிராட்டி இதை
அறியும்போது மகிழ்ச்சி அடைவாள் அல்லவா? தன்னுடைய மரணத்துக்காக
ஒரு துளி கண்ணீர் விடுவாள் அல்லவா?... ஏதோ ஒரு பயங்கரமான
சத்தம் கேட்டது! அதே சமயத்தில் கைப்பிடியும் நழுவி விட்டது!
வந்தியத்தேவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். தடால் என்று கீழே
விழுந்தான்; விழும்போதே நினைவை இழந்தான்.
வந்தியத்தேவன் நினைவு வந்து கண் விழித்துப் பார்த்த போது
ஆதித்தகரிகாலர் அவன் முகத்தில் தண்ணீர் தௌித்துக்
கொண்டிருப்பதைக் கண்டான். சட்டென்று நிமிர்ந்து எழுந்து
உட்கார்ந்து, "இளவரசே! பிழைத்திருக்கிறீர்களா?" என்றான்.
"ஆமாம்; உன்னுடைய தயவினால் இன்னும் பிழைத்திருக்கிறேன்"
என்றார் ஆதித்தகரிகாலர்.
"காட்டுப்பன்றி என்ன
ஆயிற்று?" என்று கேட்டான்.
"அதோ!" என்று இளவரசர்
சுட்டிக் காட்டிய இடத்தில் காட்டுப்பன்றி செத்துக் கிடந்தது.
வந்தியத்தேவன் அதைச் சற்று உற்றுப் பார்த்துவிட்டு, "அரசே!
இவ்வளவு சின்ன உருவமுள்ள பிராணி என்ன பாடுபடுத்தி விட்டது?
கந்தமாறன் காட்டுப்பன்றியைக் குறித்துச் சொன்னது அவ்வளவும்
உண்மைதான். கடைசியில் அதை எப்படித்தான் கொன்றீர்கள்?" என்று
கேட்டான்.
"நான் கொல்லவில்லை உன்னுடைய வேலும்
நீயுமாகச் சேர்ந்துதான் கொன்றீர்கள்!" என்றார் இளவரசர்.
வந்தியத்தேவன் அதன் பொருள் விளங்காதவனைப் போல் இளவரசரின் முகத்தைப்
பார்த்தான்.
"என்னுடைய வேலைத் தாங்கள் நன்றாக
உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள்! ஆனால் நான் ஒன்றும்
செய்யவில்லையே? ஆபத்தான சமயத்தில் தங்களுக்கு உதவி செய்ய
முடியாதவனாகி விட்டேனே?" என்றான்.
"நீ மரக் கிளையைப்
பிடித்து உலுக்கிச் சத்தமிட்டாய் அல்லவா? அப்போது நான் குதிரை
அடியிலிருந்து வௌிவந்து உன் வேலை எடுத்துக் கொண்டேன். என்
மனத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபத்தையெல்லாம் பாவம்,
இந்தப் பன்றியின் பேரில் பிரயோகித்தேன். வேலினால்
குத்தப்பட்டதும் அது பயங்கரமாகச் சத்தமிட்டது.என் காதே
செவிடாகி விடும் போலிருந்தது. ஆனால் வேலினால் மட்டும் அது
சாகவில்லை. நீ மரக் கிளையிலிருந்து நழுவி அதன் பேரில்
விழுந்தாய்; அந்த அதிர்ச்சியினால் தான் செத்தது!" என்று
கரிகாலர் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
வந்தியத்தேவனும்
அதை நினைத்து நினைத்துச் சிரித்தான். உடம்பைத் தடவிப்
பார்த்துக் கொண்டு "பன்றியின் மேல் விழுந்ததினாலேயேதான், காயம்
படாமல் தப்பினேன் போலிருக்கிறது. மகா விஷ்ணு வராக அவதாரம்
எடுத்து இரணியாட்சனைக் கொன்றார் என்பதை இனி என்னால் நம்ப
முடியும். அப்பா! எவ்வளவு மூர்க்கமான பிராணி" என்றான்.
"இந்தச் சிறு காட்டுப்பன்றிப் பார்த்துவிட்டு வராகவதாரத்தை
மதிப்பிடாதே, தம்பி! வடக்கே விந்திய மலையைச் சேர்ந்த காடுகளிலே
தலையிலே ஒற்றைக் கொம்பு உள்ள பன்றி ஒன்று இருக்கிறதாம்.
ஏறக்குறைய யானை அவ்வளவு பெரியதாயிருக்குமாம். அந்த மாதிரி
பன்றியாயிருந்து, நீ ஏறியிருக்கும் மரத்தை முட்டியிருந்தால்,
மரம் என்னபாடு பட்டிருக்கும் என்று யோசித்துப் பார்!" என்றார்
இளவரசர்.
"மரம் அடியோடு முறிந்து விழுந்திருக்கும்,
தாங்கள் எறிந்த வேலும் முறிந்திருக்கும். நம் கதி அதோ
கதியாகியிருக்கும். சோழ குலத்தின் எதிரிகளுக்கு வேலை
மிச்சமாகப் போயிருக்கும்" என்றான் வந்தியத்தேவன்.
"தம்பி! உண்மையைச் சொல்லு! என் குதிரை தடுமாறி விழுந்தவுடனே நீ வேலை
எறிந்தாயே? அந்தக் காட்டுப்பன்றியின் மேல் எறிந்தாயா? என்
பேரில் எறிந்தாயா?" என்று ஆதித்தகரிகாலர் கேட்டார்.
வந்தியத்தேவன் ஆத்திரத்துடன், "ஐயா! உண்மையாகவே தாங்கள் இந்த
கேள்வி கேட்கிறீர்களா? அப்படித் தாங்கள்
சந்தேகப்படுவதாயிருந்தால் பன்றியைக் கொன்று என்னைக்
காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே?" என்றான்.
"ஆமாம்; ஆமாம்! உன் பேரில் சந்தேகப்படக் கூடாதுதான். நீ மரக் கிளையை
ஆட்டிக் கொண்டு கூச்சல் போட்டிராவிட்டால் எனக்கே அந்தப் பன்றி
யமனாக இருந்திருக்கும். ஆனாலும் நீ வேலை எறிந்த போது ஒரு கணம்
எனக்கு அத்தகைய சந்தேகம் உண்டாயிற்று. இப்போதெல்லாம் எனக்கு
எதைப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் வீண் சந்தேகம்
தோன்றுகிறது. யமன் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறான்
என்ற பிரமையைப் போக்கிக் கொள்ளவே முடியவில்லை. யமன் இந்தப்
பன்றியின் உருவத்தில் என்னைக் கொல்ல வந்ததாகவும் எண்ணினேன்..."
"அப்படியானால் மிக நல்லதாய்ப் போயிற்று. அரசே! தங்களைத்
தொடர்ந்து வந்த யமன் செத்து ஒழிந்தான்; இனி என்ன கவலை?
கந்தமாறனோடு நாம் போட்டியிட்ட பந்தயத்திலும் ஜெயித்து
விட்டோம். பன்றியை இழுத்துக் கொண்டு போக வேண்டியது தானே?
புறப்படலாம் அல்லவா?" என்றான் வல்லவரையன்.
"புறப்பட
வேண்டியதுதான்! ஆனால் அவசரம் என்ன? சற்று இங்கே தங்கிக்
களைப்பு ஆறிவிட்டுப் போகலாம்" என்றார் இளவரசர்.
"தாங்கள் களைப்படைந்ததாகச் சொல்லுவதை இப்போதுதான் முதன்
முதலாகக் கேட்கிறேன். ஆம், குதிரையின் அடியில் சிக்கி ரொம்பக்
கஷ்டப்பட்டுப் போயிருப்பீர்கள்.
"அது ஒன்றுமில்லை;
உடலின் களைப்பைக் காட்டிலும் உள்ளத்தின் களைப்புதான்
அதிகமாயிருக்கிறது. வந்த வழியாகவே அவ்வளவு தூரமும் காட்டு
வழியில் திரும்பிப் போக வேண்டுமா? மறுபடியும் அந்த மூடர்களுடன்
சேர்ந்தல்லவா பிரயாணம் செய்ய வேண்டி வரும்? அதைக் காட்டிலும்
இந்த ஏரியைக் கடந்து போய்விட்டால் என்ன?"
"கடவுளே!
இந்தச் சமுத்திரம் போன்ற ஏரியை நீந்திக் கடக்க வேண்டும் என்றா
சொல்கிறீர்கள்? பன்றியிடமிருந்து என்னைத் தப்பவைத்து ஏரியில்
மூழ்கடித்துக் கொல்ல வேண்டும் என்று உத்தேசமா?" என்றான்
வந்தியத்தேவன்.
"உனக்கு நீந்தத் தெரியாது என்பது நினைவிருக்கிறது. என்னால் கூட இவ்வளவு
பெரிய ஏரியை நீந்திக் கடக்க முடியாது. ஒரு படகு கிடைத்தால்
காரியம் சுலபமாகிவிடும். சற்று முன் ஒரு படகு பார்த்தோமே, அது
எங்கேயாவது சமீபத்தில் கரையோரமாகத் தானே தங்கியிருக்கும்?
அதைத் தேடிப் பிடித்தால் என்ன?"
"குதிரைகளின் கதி என்ன
ஆவது? காட்டு மிருகங்களுக்கு உணவாகட்டும் என்று விட்டு
விட்டுப் போய்விடலாமா?" என்றான் வந்தியத்தேவன்.
உடனே
ஏதோ ஞாபகம் வந்து திடுக்கிட்டவன் போல் துள்ளிக் குதித்து
எழுந்து, "ஐயா! புலி எங்கே?" என்று கேட்டான்.
"நானும்
அதை மறந்துவிட்டேன்; பக்கத்தில் எங்கேயாவது மறைந்திருக்கப்
போகிறது. யமன் பன்றி ரூபத்தில் வராமல் ஒரு வேளை புலி
ரூபத்திலும் என்னைத் தொடரலாம் அல்லவா?" என்றார் இளவரசர்.
இருவரும் சுற்றும் முற்றும் உற்றுப் பார்க்கலானார்கள்.
சிறிது நேரம் பார்த்த பிறகு வந்தியத்தேவன் "அதோ!" என்று
சுட்டிக் காட்டினான்.
ஏரியில் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்த அந்த வாய்க்கால் வடக்கே போகப் போக
குறுகலாகிக் கொண்டு சென்றது. அவ்விதம் குறுகலாகியிருந்த
இடத்தில் வாய்க்காலின் மீது ஒரு பெரிய மரம் விழுந்து இரு
கரைகளையும் தொட்டுக் கொண்டிருந்தது. புலி அந்த மரப்பாலத்தின்
மீது மெல்ல ஊர்ந்து சென்று அக்கரையை நெருங்கிக் கொண்டிருந்ததை
இரண்டு பேரும் கவனித்தார்கள். இரண்டு பேருடைய மனத்திலும் ஒரே
எண்ணம் உதித்தது.
"ஆகா! படகிலே வந்த பெண்கள்!" என்று இருவரும் ஏக காலத்தில் வாய்விட்டுக்
கூறினார்கள்.
பின்னர், "இந்த வாய்க்காலை அடுத்துள்ள
தீவின் கரையிலேதான் அந்தப் பெண்கள் இறங்கியிருக்க வேண்டும்"
என்றான் வல்லவரையன்.
"காயம்பட்ட சிறுத்தை மிக
அபாயகரமானது" என்றார் இளவரசர்.
"பன்றியுடன் புலியையும்
கொன்று எடுத்துப் போகத்தான் வேண்டும்."
"இந்த
வாய்க்காலை எப்படித் தாண்டுவது? குதிரைகள் மரப்பாலத்தின் மேல்
போக முடியாதே?"
"தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருக்கும்;
இறங்கிப் போகலாம்."
கரிகாலரின் குதிரையும் அதற்குள்
எழுந்து வந்தியத்தேவன் குதிரைக்கு அருகே போய் நின்று
கொண்டிருந்தது. எஜமானர்கள் அந்தரங்கம் பேசியதுபோல் அவையும்
தங்களுக்குச் சற்று முன் நேர்ந்த அபாயத்தைப் பற்றிப் பேசிக்
கொண்டன போலும். இருவரும் தத்தம் குதிரைமீது தாவி ஏறினார்கள்;
வாய்க்காலில் குதிரைகளை இறக்கினார்கள். வாய்க்காலில் தண்ணீர்
அதிகமாக இல்லைதான். ஆனால் சேறும் உளையும் அதிகமாயிருந்தன.
குதிரைகள் தட்டுத் தடுமாறித் தத்தளித்துச் சென்றன.
கோடிக்கரைப் புதை சேற்றுக் குழிகளை நினைத்துக் கொண்டு வந்தியத்தேவன்
"இந்தச் சேறு ஒன்றும் பிரமாதமில்லை" என்று தைரியமடைந்தான்.
அதைப் பற்றி கரிகாலருக்குச் சொல்லவும் தொடங்கினான்.
"நண்பா! வௌியிலுள்ள சேற்றைப் பற்றிச் சொல்லப் போய்விட்டாயே?
மனிதர்களுடைய உள்ளத்தில் உள்ள சேற்றைக் குறித்து என்ன
கருதுகிறாய்? ஒரு தடவை தீய எண்ணமாகிற சேற்றில் இறங்குகிறவர்கள்
மீண்டும் கரை ஏறுவது எவ்வளவு கடினம் தெரியுமா?" என்று கரிகாலர்
கேட்டார். இளவரசரின் உள்ளம் உண்மையில் சேறு போலக்
குழம்பியிருக்கிறது என்று வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான்.
குதிரைகள் மிகப் பிரயாசையுடன் அக்கரையை அடைந்தன. காட்டுக்குள்ளே மிக
ஜாக்கிரதையுடன் நாலா புறமும் உற்றுப் பார்த்துக் கொண்டு
இருவரும் சென்றார்கள். கரிகாலரின் கையில் வில்லும் அம்பும்
தயாராயிருந்தன. வந்தியத்தேவன் தன் வேலையும் புலியின் பேரில்
எறிவதற்கு ஆயத்தமாக வைத்துக் கொண்டிருந்தான். திடீரென்று,
காட்டில் சாதாரணமாகக் கேட்கும் சத்தங்களை அடக்கிக் கொண்டு ஒரு
பெண்ணின் 'கிறீச்' என்ற குரல், "அம்மா! அம்மா! புலி!" என்று
கதறுவது கேட்டது.
மணிமேகலை மரக் கிளையின் மீது
சிறுத்தையைப் பார்த்த அதே சமயத்தில் வசந்த மண்டபத்தில் சமையல்
வேலையில் ஈடுபட்டிருந்த தோழிப் பெண் ஒருத்தியும் அந்தப்
புலியைப் பார்த்து விட்டு அவ்விதம் அலறினாள். அந்தக் குரல் இரு
நண்பர்களின் செவிகளிலும் விழுந்து ரோமாஞ்சனத்தை உண்டு
பண்ணியது. குதிரைகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு குரல் வந்த
திசையை நோக்கி அவர்கள் சென்றார்கள். ஏரிக் கரையின் ஒரு
திருப்பம் திரும்பியதும் அவர்கள் கண்ட காட்சி இருவரையும்
திடுக்கிட்டுத் திகில் கொள்ளும்படிச் செய்து விட்டது.
நந்தினியும், மணிமேகலையும் படித்துறையில் குளிப்பதற்காக இறங்கிக்
கொண்டிருந்த சமயத்தில், அருகில் சாய்ந்திருந்த மரக்கிளை
ஒன்றின் மீது சிறுத்தை சிறிது சிறிதாக ஊர்ந்து மேலேறிக்
கொண்டிருந்தது. பன்றியோடு போட்ட சண்டையில் நன்றாக அடிபட்டுக்
காயமுற்றிருந்த அந்தச் சிறுத்தை அப்போது தன் உயிரைக்
காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலையில் இருந்தது. ஆனால்
இது அந்தப் புலியைத் தவிர வேறு யாருக்கும்
தெரிந்திருக்கவில்லை. அடுத்த கணம் சிறுத்தை தண்ணீரில் நின்ற
பெண்களின் மீது பாயப் போகிறதென்று கரிகாலரும், வந்தியத்தேவனும்
எண்ணினார்கள்.
வந்தியத்தேவன் வேலை உபயோகிக்கத் தயங்கினான். வேல் தவறிப் பெண்களின் மீது
விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தான். கரிகாலருக்கு
அத்தகைய தயக்கம் ஒன்றும் ஏற்படவில்லை, வளைத்திருந்த வில்லில்
அம்பைக் கோர்த்து நன்றாகக் குறிப்பார்த்து இழுத்து விட்டார்.
அம்பு விர்ரென்று சென்று சிறுத்தையின் அடி வயிற்றில்
பாய்ந்தது. சிறுத்தை பயங்கரமாக உறுமிக் கொண்டு அப்பாலிருந்த
பெண்களின் மீது பாய்ந்தது. அடுத்த கணத்தில் என்ன நேர்ந்தது
என்பதைத் தௌிவாகப் பார்க்க முடியாதபடி ஒரே குழப்பமாகி விட்டது.
சிறுத்தையும் பெண்கள் இருவரும் திடீரென்று மறைந்து
விட்டார்கள். சில கணநேரம் கழித்து மூவரும் வெவ்வேறு இடத்தில்
தண்ணீருக்குள்ளிருந்து வௌியே தலையை நீட்டினார்கள். ஏரியின்
நீரோடு இரத்தம் கலந்து செக்கச் செவேலென்று ஆயிற்று.
பக்க
தலைப்பு
நாற்பத்து நான்காம் அத்தியாயம்
காதலும் பழியும்
இரு நண்பர்களும்
மேற்கூறியவற்றையெல்லாம் திகிலுடன் பார்த்துக்
கொண்டுதானிருந்தார்கள். குதிரைகள் மீதிருந்து குதித்தார்கள்;
தண்ணீர் கரையோரம் பாய்ந்து வந்தார்கள். இதற்குள் சிறுத்தை
தண்ணீரிலே சிறிது தூரம் சென்று விட்டது! அது மிதந்த விதத்தைப்
பார்த்தால் அது ஒரு வழியாகப் பிராணனை விட்டுவிட்டது என்று
தோன்றியது. பெண்மணிகள் இருவரும் புலியினால் எவ்வளவு
காயப்படுத்தப்பட்டார்கள் என்பது ஒன்றும் தெரியவில்லை. இருவரும்
தண்ணீரில் குதித்துப் பெண்மணிகளை நோக்கிச் சென்றார்கள்.
முதலில் வந்தியத்தேவன் மணிமேகலையை அணுகிச் சென்றான். ஏனெனில்
நந்தினியை நெருங்குவதற்கு அவனுக்கு அச்சமாக இருந்தது.
மணிமேகலைக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. புலி விழுந்த
வேகத்தில் அவளும் தண்ணீரில் விழுந்து முழுகியதில் சிறிது
மூச்சுத் திணறியதைத் தவிர வேறொன்றும் அவளுக்கு நேரவில்லை!
வந்தியத்தேவன் தன் அருகில் வருவதைப் பார்த்ததும் அவள்
எல்லையில்லாத உள்ளக் கிளர்ச்சி அடைந்து கண்களை இறுக மூடிக்
கொண்டாள்.
கரிகாலர் வந்தியத்தேவனுடைய கையைப் பிடித்து
நிறுத்தி நந்தினியின் பக்கம் அனுப்பிவிட்டுத் தன்னை நோக்கி
வருவதை அவள் அறியவில்லை. இரண்டு கைகளினாலும் கரிகாலர் அவளைத்
தூக்கி அணைத்துக் கொண்டு படித்துறைப் படிகளில் ஏறி மேலே போய்ச்
சேர்ந்து தரையில் மெதுவாக அவளை வைக்கும் வரையில் கண்ணை
விழித்துப் பார்க்கவில்லை. மூக்கில் சுவாசம் வருகிறதா என்று
கரிகாலர் விரலை வைத்துப் பார்த்தபோதுதான் கண்களை மெல்ல மெல்லத்
திறந்தாள். திறக்கும்போதே வந்தியத்தேவனிடம் தன் கரை காணாக்
காதலைத் தெரிவிக்கும் பொருட்டு அன்பும் ஆர்வமும் ததும்பிய
நோக்குடன் பார்த்தாள். அவளுடைய கண்ணின் முன் தெரிந்தவர்
இளவரசர் கரிகாலர் என்று தெரிந்ததும் துள்ளி எழுந்து நகர்ந்து
உட்கார்ந்து கொண்டாள்.
அவளுடைய முகத்தில் அச்சமயம்
தோன்றிய ஏமாற்றத்தைக் கவனித்த கரிகாலர் கலீர் என்று
சிரித்தார்.
"மணிமேகலை! இது என்ன துள்ளல்? என்னைக்
கண்டு இவ்வளவு அருவருப்பு ஏன்?" என்றார்.
"ஐயா! வேற்று
மனிதர் கை பட்டால் பெண்களுக்குக் கூச்சமாயிராதா?" என்றாள்
மணிமேகலை.
"பெண்ணே! என்னை வேற்று மனிதனாக்கி விட்டாயா? எனக்கும் உனக்கும் கலியாணம்
செய்து வைக்க ஏகப் பிரயத்தனம் நடக்கிறதே?" என்றார் கரிகாலர்.
"சுவாமி! அந்தப் பிரயத்தனம் பலித்த பிறகுதானே சொந்தமாக
முடியும்? அதுவரையில் தாங்கள் வேற்று மனிதர்தானே?" என்றாள்
மணிமேகலை.
"ஆனால் அது உனக்கு இஷ்டமா என்பதை நீ
சொல்லலாம் அல்லவா?"
கடம்பூர் இளவரசி சற்று
யோசித்துவிட்டு, "ஐயா! தாங்கள் சோழ குலத்தோன்றல்; எல்லாம்
அறிந்த புத்திமான்.சிறு பெண்ணாகிய என்னிடம் இவ்விதம் பேசலாமா?
என் தந்தையிடமல்லவா கேட்க வேண்டும்?" என்றாள்.
"பெண்ணே! உன் தந்தை சம்மதித்தால் நீ சம்மதிப்பாயா?"
"என் தந்தை சம்மதித்த பிறகு அவர் கேட்டால் சொல்லுவேன்.
தங்களிடம் இதைப் பற்றிப் பேசவே எனக்குக் கூச்சமாயிருக்கிறது.
புலி என்னைக் கொல்லாமலும், நான் தண்ணீரில் முழுகிப் போகாமலும்
என்னைக் காப்பாற்றினீர்கள். அதனால் தங்களிடம் ஏற்பட்டுள்ள
நன்றி காரணமாக இத்தனை நேரமும் பொறுமையாக இருக்கிறேன்..."
கரிகாலன் சிரித்துவிட்டு, "மணிமேகலை! நீ வெகு கெட்டிக்காரி;
மிக அழுத்தமானவள். ஆனாலும் ஏமாந்து போனாய். அதற்காக என்னை
ஏமாற்றப் பார்க்க வேண்டாம்!" என்றார்.
"ஐயா! இது என்ன
வார்த்தை! தங்களை இந்த அறியாப் பெண் ஏமாற்றுவதா? எதற்காக? எந்த
முறையில்?"
"வீணாக ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்?
எனக்குப் பதிலாக வந்தியத்தேவன் உன்னைத் தூக்கிக் கொண்டு வந்து
கரை சேர்ந்திருந்தால் இவ்வளவு கடூரமாகப் பேசுவாயா?
வந்தியத்தேவன் என்று நினைத்துத்தானே நீ கண்ணை மூடிக் கொண்டாய்?
அதே எண்ணத்துடன்தானே கண்ணைத் திறந்தும் பார்த்தாய்! பாவம்!
ஏமாந்து போனாய்!" என்றான் கரிகாலன்.
மணிமேகலை
வெட்கத்துடனே சிறிது பீதியும் அடைந்தாள். பின்னர்
தைரியப்படுத்திக் கொண்டு, "அரசே, தங்களுக்குத் தான் என் மனது
தெரிந்திருக்கிறதே! அப்படியிருக்கும்போது, இந்தப் பேதைப்
பெண்ணை எதற்காகச் சோதிக்கிறீர்கள்?" என்றாள்.
"மணிமேகலை! உன் மனது எனக்குத் தெரிந்திருக்கிறது. அது போலவே
வல்லவரையனுடைய மனமும் எனக்குத் தெரிந்திருக்கிறது. உன்னுடைய
பரிசுத்தமான அன்புக்கு அவன் பாத்திரன் அல்லவே என்றுதான்
யோசிக்கிறேன். அதோ பார், இளைய ராணி நந்தினியும்
வந்தியத்தேவனும் சல்லாபம் செய்வதை! நந்தினியின் முகத்தில்
குடிகொண்டிருக்கும் குதூகலத்தைப் பார்!" என்றார்.
மணிமேகலை அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். அந்தக் கணத்தில்
அசூயை என்னும் விஷம் அவளுடைய பால் போன்ற நெஞ்சில் ஏறிவிட்டது.
அதே சமயத்தில் வந்தியத்தேவனும் நந்தினியும் பேசிக்
கொண்டிருந்தார்கள். நந்தினியின் தோள் ஒன்றில் புலி நகம் பட்டு
இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மணிமேகலையைப் போல் நந்தினி
கண்ணை மூடிக்கொள்ளவும் இல்லை; வந்தியத்தேவன் கைகளிலிருந்து
விடுவித்துக் கொள்ள அவசரப்படவும் இல்லை. வந்தியத்தேவனோ, தன்
கையைச் சுட்டுக் கொண்டிருந்த நெருப்புத் தணலைக் கீழே
போடுவதுபோல் அவசரமாக இளைய ராணியைக் கரையில் இறக்கிவிட்டான்.
தண்ணீரில் முழுகி இருந்த போதிலும் நந்தினியின் உடம்பு
உண்மையிலேயே சுட்டுக் கொண்டிருந்தது.
வந்தியத்தேவன் உள்ளத்தில் இனந்தெரியாத பீதி குடிகொண்டது; அவன் உடம்பு
பதறியது. நந்தினி புன்னகையுடன் "ஐயா! ஏன் இவ்வளவு பதட்டம்?
என்னைப் புலி என்று நினைத்துக் கொண்டீரா? அல்லது புலியைக்
காக்க நினைத்துத் தவறாக என்னைக் கரை சேர்த்து விட்டதற்காக
வருத்தப்படுகிறீரா?" என்றாள்.
"அம்மணி! இவ்வளவு
கொடூரமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம். தங்களைத் தொட்டு
எடுத்து வரும்படி நேர்ந்து விட்டதை நினைத்து நெஞ்சு சிறிது
கலக்கம் அடைந்தது..."
"குற்றம் உள்ள நெஞ்சு அல்லவா?
அதனால் கலங்குகிறது!"
"தேவி! நான் ஒரு குற்றமும்
செய்யவில்லையே!"
"குற்றம் செய்யவில்லை? தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசிப்பதற்கு என் உதவியை
நாடினீர். முத்திரை மோதிரத்தைக் கொடுத்து உதவினேன். பிறகு என்
அந்தப்புரத்தில் திருட்டுத்தனமாகப் பிரவேசித்தீர். அப்போதும்
உமக்குத் தீங்கு நேராமல் காப்பாற்றினேன். அதற்குக் கைம்மாறு
என்ன செய்தீர்? எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக்
கொள்ளாமல் திருடனைப் போல தப்பி ஓடிப்போனீர். பழையாறை இளைய
பிராட்டியைச் சந்தித்த பிறகு என்னிடம் திரும்பி வருவதாகச்
சொன்னீர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; இவையெல்லாம்
குற்றமல்லவா?"
"அந்தக் குற்றங்களை ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் காரணம் இருக்கிறது. நான் பிறரிடம்
சேவகம் செய்பவன். ஆதித்த கரிகாலருடைய கட்டளைக்குக்
கட்டுப்பட்டவன். இதைத் தாங்கள் எண்ணிப்பார்த்தால் என் பேரில்
குற்றம் சாட்டமாட்டீர்கள்..."
"ஆமாம்; புலியின்
வாயிலிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கூடக்
கரிகாலன் கட்டளை உமக்கு வேண்டும். தண்ணீரில் மூழ்கும் பெண்ணைக்
கரை சேர்ப்பதற்கும் அவருடைய அனுமதி வேண்டும். நான் கவனித்துக்
கொண்டுதானிருந்தேன். அடடா! மணிமேகலையைக் காப்பாற்றுவதில்
இளவரசர் எத்தனை பரபரப்புக் காட்டினார்? நான் நீரில் மூழ்கி
செத்துப் போயிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். அவருடைய மனதை
அறியாமல் நீர் என்னைக் கரை சேர்த்து விட்டீர்..."
"அம்மணி! அவ்வாறு சொல்ல வேண்டாம்! தாங்கள் ஓலை
அனுப்பியபடியால்தான் கரிகாலர் காஞ்சியிலிருந்து இவ்வளவு தூரம்
வந்திருக்கிறார்..."
"ஆனால் அவர் இங்கு வராமல் தடை செய்வதற்காக நீர் அவசர அவசரமாக ஓடி வந்தீர்.
இளைய பிராட்டியின் செய்தியுடன் வந்தீர்.ஆனால் உம்முடைய முயற்சி
பலிக்கவில்லை. என்னுடைய காரியத்தில் நீர் தலையிடுவதற்குச்
செய்யும் முயற்சியெல்லாம் இவ்வாறுதான் தோற்றுப் போகும்!"
நந்தினியின் இந்த வார்த்தைகள் வந்தியத்தேவனின் மனக் குழப்பத்தை
அதிகமாக்கின. அந்த வார்த்தைகளின் உட்கருத்தை நந்தினியின்
முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவளை
உற்றுப் பார்த்தான். ஆனால் நந்தினியின் முகம் எவ்வித மாறுதலும்
இன்றி வழக்கம் போலப் புன்னக |