கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
நான்காம் பாகம் - மணிமகுடம்
இருபத்தொன்றாம்
அத்தியாயம் - பல்லக்கு ஏறும் பாக்கியம் இருபத்திரண்டாம்
அத்தியாயம் - அநிருத்தரின் ஏமாற்றம் இருபத்து
மூன்றாம் அத்தியாயம் - ஊமையும் பேசுமோ? இருபத்து நாலாம்
அத்தியாயம் - இளவரசியின் அவசரம் இருபத்தைந்தாம்
அத்தியாயம் - அநிருத்தரின் குற்றம் இருபத்தாறாம்
அத்தியாயம் - வீதியில் குழப்பம் இருபத்தேழாம்
அத்தியாயம் - பொக்கிஷ நிலவறையில் இருபத்தெட்டாம்
அத்தியாயம் - பாதாளப் பாதை இருபத்தொன்பதாம்
அத்தியாயம் - இராஜ தரிசனம் முப்பதாம்
அத்தியாயம் - குற்றச்சாட்டு
இருபத்தொன்றாம் அத்தியாயம் பல்லக்கு ஏறும் பாக்கியம்
அந்த ஆண்டில் வழக்கமாக மாரிக்காலம் ஆரம்பிக்க வேண்டிய
காலத்தில் ஆரம்பிக்கவில்லை.
இரண்டு தடவை மழை தொடங்குவது போல் தொடங்கிச்
சட்டென்று நின்று விட்டது.
காவேரி ஆற்றிலும் அதன் கிளை நதிகளிலும்
தண்ணீர்ப் பிரவாகம் வர வரக் குறைந்து வந்தது.
புது நடவு நட்ட வயல்களுக்குத்
தண்ணீர் வரத்து இல்லாமல் பயிர்கள் வாடத் தொடங்கின.
"எல்லாம்
வால்நட்சத்திரத்தினால் வந்த விபத்து!" என்று மக்கள் பேசிக் கொள்ளலானார்கள்.
'நாட்டுக்கு எல்லா விதத்திலும் பீடை வரும் போலத் தோன்றுகிறது. இராஜ்ய
காரியங்களில் குழப்பம்; இளவரசரைப் பற்றித் தகவல் இல்லை; அதற்கு மேல் வானமும்
ஏமாற்றி விடும் போலிருக்கிறது" என்பவை போன்ற பேச்சுக்களை வழி நெடுகிலும் சேந்தன்
அமுதனும் பூங்குழலியும் கேட்டுக் கொண்டே வந்தார்கள்.
மழை பெய்யாமலிருந்தது
அவர்களுடைய பிரயாணத்துக்கு என்னமோ சௌகரியமாகத்தானிருந்தது.
அன்று
காலையிலிருந்தே வெய்யில் சுளீர் என்று அடித்தது. பிற்பகலில் தாங்க முடியாத
புழுக்கமாயிருந்தது. இராஜபாட்டையில் மரங்களின் குளிர்ந்த நிழலில் சென்ற போதே
அவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது.
"இது ஐப்பசி மாதமாகவே தோன்றவில்லையே?
வைகாசிக் கோடை மாதிரியல்லவா இருக்கிறது?" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு
போனார்கள்.
பழுவேட்டரையரின் அரண்மனைப் பல்லக்கு அவர்களைத் தாண்டிச் சென்ற
சிறிது நேரத்துக்குப் பிறகு திடீரென்று குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
சாலை மரங்களின் இலைகள் காற்றில் அசைந்தாடிச் சலசலவென்று சத்தத்தை
உண்டாக்கின.
வடகிழக்குத் திக்கில் இருண்டு வருவது போலத் தோன்றியது.
வானத்தின் அடி முகட்டில் இருண்ட மேகத் திரள்கள் தலை காட்டின.
சிறிது நேரத்துக்குள்ளே அந்த மேகக் கூட்டங்கள் யானை மந்தை மதம் கொண்டு ஓடி
வருவது போல் வானத்தில் மோதி அடித்துக் கொண்டு மேலே மேலே வரலாயின.
இளங்காற்று பெருங்காற்றாக மாறியது; பெருங்காற்றில் சிறிய மழைத் துளிகள்
சீறிக் கொண்டு வந்து விழுந்தன.
சிறு தூற்றல் விழத் தொடங்கிக் கால் நாழிகை
நேரத்தில் 'சோ' என்ற இரைச்சலுடன் பெருமழை கொட்டலாயிற்று.
காற்றிலும்
மழையிலும் சாலை ஓரத்து விருட்சங்கள் பட்டபாட்டைச் சொல்லி முடியாது. சடசடவென்று
மரக்கிளைகள் முறிந்து விழத் தொடங்கின. அப்போது அவற்றில் அடைக்கலம் புகுந்திருந்த
பட்சிகள் கீச்சிட்டுக் கொண்டு நாலா திசைகளிலும் பறந்தோடின.
சாலையில் போய்க்
கொண்டிருந்த ஜனங்களும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
காற்று மழையிலிருந்து
தப்புவதற்காகச் சிலர் ஓடினார்கள். மரக்கிளைகள் தலையில் விழுந்து சாக நேரிடுமோ என்ற
பயத்தினால் மற்றவர்கள் ஓடினார்கள்.
அண்ட கடாகங்கள் வெடிப்பது போன்ற இடி
முழக்கத்தைக் கேட்டு அஞ்சி வேறு சிலர் ஓடினார்கள்.
மழை பிடித்துக் கொண்ட
சிறிது நேரத்துக்கெல்லாம், பகற்பொழுது சென்று இரவு நெருங்கி வந்தது.
அன்றிரவே தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசித்து விட வேண்டும் என்ற
எண்ணத்தைச் சேந்தன் அமுதனும், பூங்குழலியும் கைவிட்டு விட்டார்கள்.
சேந்தன்
அமுதனின் நந்தவனக் குடிலுக்கு அன்றிரவு போய்ச் சேர்ந்தால் போதும் என்று
தீர்மானித்தார்கள்.மழைக்கால இருட்டில் ஒருவரையொருவர் தைரியப்படுத்திக் கொண்டு,
ஜாக்கிரதையாக நடந்தார்கள்.
"பூங்குழலி! நடுக்கடலில் எவ்வளவோ புயல்களையும்
பெரு மழையையும் பார்த்தவளாயிற்றே நீ! மலை போன்ற அலைகளுக்கு மத்தியில் படகு விட்டுக்
கொண்டு போகிறவள் ஆயிற்றே! இந்த மழைக்கு இவ்வளவு பயப்படுகிறாயே?" என்றான் சேந்தன்
அமுதன்.
"நடுக்கடலில் எவ்வளவுதான் புயல் அடித்தாலும் மழை பெய்தாலும்
தலையில் மரம் ஒடிந்து விழாதல்லவா? விழுந்தால் இடிதானே விழும்?" என்றாள் பூங்குழலி.
இவ்விதம் பூங்குழலி கூறி வாய் மூடுவதற்குள் அவர்களுக்கு எதிரே சற்றுத்
தூரத்தில் சடசடவென்று மரம் முறிந்து விழும் சத்தம் கேட்டது.
சேந்தன் அமுதன்
பூங்குழலியின் கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு மேலே செல்வதை நிறுத்தினான்.
"இனி அவசரப்பட்டுக் கொண்டு போவதில் உபயோகமில்லை. சாலை ஓரத்தில் இங்கே சில
மண்டபங்கள் இருக்கின்றன, அவற்றில் ஒன்றில் சிறிது நேரம் தங்கி மழையின் வேகம்
குறைந்த பிறகு மேலே போகலாம்!" என்றான் சேந்தன் அமுதன்.
"அப்படியே செய்யலாம்
ஆனால் மண்டபத்தை இந்த இருளில் எப்படிக் கண்டுபிடிப்பது?" என்றாள் பூங்குழலி.
"மின்னல் மின்னும் போது பார்த்தால் தெரிந்து விடும். இருபுறமும் கவனமாகப்
பார்க்க வேண்டும்!" என்றான் சேந்தன் அமுதன்.
வானத்தையும் பூமியையும்
பொன்னொளி மயமாக்கிக் கண்களைக் கூசச் செய்த ஒரு மின்னல் மின்னியது.
"அதோ ஒரு
மண்டபம்!" என்றான் சேந்தன் அமுதன்.
பூங்குழலியும் அந்த மண்டபத்தைப்
பார்த்தாள். அதே மின்னல் வௌிச்சத்தில் அவர்களுக்கு முன்னால் சற்றுத் தூரத்தில் ஒரு
பெரிய மரம் விழுந்து கிடப்பதையும் பார்த்தாள். விழுந்த மரத்தினடியில் சிலர்
சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.
"அமுதா! விழுந்து கிடந்த மரத்தைப்
பார்த்தாயா? அதனடியில்..." என்றாள்.
"ஆமாம், பார்த்தேன், அந்தக் கதி
நமக்கும் ஏற்பட்டு விடப்போகிறது. சீக்கிரம் மண்டபத்துக்குப் போய்ச் சேரலாம்!" என்று
கூறிவிட்டு அமுதன் பூங்குழலியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மண்டபம் இருந்த
திசையைக் குறிவைத்து விரைந்து சென்றான்.
இருவரும் மண்டபத்தை அடைந்தார்கள்;
சொட்ட நனைந்திருந்த துணிகளிலிருந்து தண்ணீரைப் பிழிந்தார்கள். துணியைப் பிழிந்த
பிறகு பூங்குழலி தன் நீண்ட கூந்தலையும் பிழிந்தாள். பிழிந்த ஜலம் மண்டபத்தின்
தரையில் விழுந்து சிறு கால்வாய்களாக ஓடியது.
"அடாடா! மண்டபத்தை ஈரமாக்கி
விட்டோமே?" என்றாள் பூங்குழலி.
"மண்டபத்துக்கு அதனால் தீங்கு ஒன்றுமில்லை.
ஜலதோஜம் காய்ச்சல் வந்திவிடாது! நீ இப்படிச் சொட்ட நனைந்து விட்டாயே?" என்றான்
சேந்தன் அமுதன்.
"நான் கடலிலேயே பிறந்து வளர்ந்தவள், எனக்கு இன்னொரு பெயர்
'சமுத்திர குமாரி'. என்னை மழைத் தண்ணீர் ஒன்றும் செய்து விடாது" என்றாள் பூங்குழலி.
அவளுடைய உள்ளம் அப்போது தஞ்சாவூர்க் கோட்டைக்கு அருகிலிருந்த சாலை ஓர
மண்டபத்திலிருந்து நாகைப்பட்டினத்து சூடாமணி விஹாரத்துக்குப் பாய்ந்து சென்றது.
'சமுத்திரகுமாரி' என்று அவளை முதன் முதலாக அழைத்தவர் அந்தச் சூடாமணி விஹாரத்தில்
அல்லவா இருந்தார்?
"பூங்குழலி என்னுடைய நந்தவனமும் குடிசையும் சிறிது
தூரத்திலேதான் இருக்கிறது. மழைவிட்டதும் அங்கே போய் விடலாம். என் தாயார் உன்னைச்
சரியாகக் கவனித்துக் கொள்ளுவாள்!" என்று அமுதன் கூறிய வார்த்தைகள் பூங்குழலியின்
காதில் அரைகுறையாக விழுந்தன.
மறுபடியும் பளிச்சென்று கண்ணைப் பறித்தது ஒரு
மின்னல்.
அதன் ஒளியில் அவர்கள் முன்னம் அரைகுறையாகப் பார்த்த காட்சி
நன்றாகத் தெரிந்தது. இருவரும் திடுக்கிட்டு போனார்கள்.
சாலையில் ஏறக்குறைய
அந்த மண்டபத்துக்கு எதிரே ஒரு பெரிய ஆலமரம் வேரோடு பறிக்கப்பட்டு விழுந்து
கிடந்தது. விசாலமாகப் படர்ந்திருந்த அதன் கிளைகளும் விழுதுகளும் தாறுமாறாக
முறிந்தும் சிதைந்தும் கிடந்தன.
அவற்றுக்கடியில் இரண்டு குதிரைகளும்
ஐந்தாறு மனிதர்களும் அகப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி அகப்பட்டுக்
கொண்டிருந்தவர்களை விடுதலை செய்து காப்பாற்றுவதற்காக வேறு சிலர் முயன்று
கொண்டிருப்பது தெரிந்தது. அவசரம் அவசரமாக அவர்கள் முறிந்து கிடந்த கிளைகளை
அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
"ஐயோ!" "அப்பா!" "இங்கே!" "அங்கே"
"சீக்கிரம்!" என்பவை போன்ற குரல்கள் மழைச் சப்தத்தினிடையே மலினமாகக் கேட்டன.
இவற்றையெல்லாம் விட அதிகமாகச் சேந்தன் அமுதன் - பூங்குழலியின் கவனத்தை
வேறொன்று கவர்ந்தது. விழுந்து கிடந்த மரத்துக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு பல்லக்கு
தரையில் வைக்கப்பட்டிருந்தது.அதன் அருகில் இரண்டு ஆட்கள் மட்டும் நின்றார்கள்.
மற்றவர்கள் விழுந்த மரத்தினடியில் அகப்பட்டுக் கொண்டவர்களைக் காப்பாற்றுவதில்
முனைந்திருந்தார்கள் போலும்.
"அமுதா! பல்லக்கைப் பார்த்தாயா?" என்று
கேட்டாள் பூங்குழலி.
"பார்த்தேன், பழுவூர் இளையராணியின் பல்லக்குப் போல்
இருந்தது."
"விழுந்த மரம் அந்தப் பல்லக்கின் மேலே விழுந்திருக்கக் கூடாதா?"
"கடவுளே! ஏன் அப்படிச் சொல்கிறாய்? பழுவூர் ராணியைப் பார்த்து அவள் மூலமாக
ஏதோ காரியத்தைச் சாதிக்கப் போகிறதாகச் சொன்னாயே?"
"ஆமாம், இருந்தாலும்,
அந்தப் பழுவூர் இளையராணியை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை!"
"பிடிக்காவிட்டால், அவள் பேரில் மரம் முறிந்து விழ வேண்டுமா, என்ன?"
"சாதாரணப்பட்டவர்களின் தலையிலேதான் மரம் விழ வேண்டுமா? ராணிகளின் தலையிலே
விழக் கூடாதா?... அது போனால் போகட்டும்; இப்போது நாம் பல்லக்கினருகில் சென்று
பழுவூர் ராணியைப் பார்த்துப் பேசலாமா? கோட்டைக்குள் போவதற்கு அவளுடைய உதவியைக்
கேட்கலாமா?"
"அழகுதான்! ராணியைப் பேட்டி காண்பதற்கு நல்ல சமயம்! நல்ல இடம்!
பல்லக்கின் கிட்டப் போனால் மழைக் கால இருட்டில் திருட வருகிறோம் என்றெண்ணி நம்மை
அடித்துப் போட்டாலும் போடுவார்கள்."
"ராணியை நான் பார்த்துவிட்டால்
அப்புறம் காரியம் எளிதாகி விடும்..."
"அது எப்படி?"
"என் அண்ணியின்
பெயரைச் சொல்வேன். அல்லது மந்திரவாதி ரவிதாஸன் அனுப்பினான் என்பேன்."
"நல்ல
யோசனைத்தான்! ஆனால் ராணியின் அருகில் நெருங்க முடிந்தால் அல்லவோ?.. அதோ பார்,
பூங்குழலி.
மீண்டும் ஒரு மின்னல் மின்னியது; அதன் வௌிச்சத்தில் இரண்டு பேர்
பல்லக்கைத் தூக்குவது தெரிந்தது. ஆகா! கிளம்பி விட்டார்களா? இல்லை, இல்லை!
மண்டபத்தை நோக்கியல்லவா பல்லக்கு வருவது போலக் காண்கிறது?
ஆம், சிறிது
நேரத்தில் பல்லக்கு மண்டபத்தின் முகப்புக்கு வந்து சேர்ந்தது. பல்லக்கைச் சுமந்து
வந்தவர்கள் அதை இறக்கி வைத்தார்கள்.
"பழுவூர் இளையராணி நம்மைத் தேடிக்
கொண்டல்லவா வருகிறாள்?" என்றாள் பூங்குழலி.
அமுதன் அவளுடைய கரத்தைப்
பற்றிக் கொண்டு மண்டபத்தின் உட்புறத்தை நோக்கி நகர முயன்றான்; ஆனால் பூங்குழலி
அவ்விதம் நகர மறுத்தாள்.
இதற்குள் "யார் அங்கே?" என்று ஓர் அதட்டும் குரல்
கேட்டது.
பல்லக்கைச் சுமந்து வந்தவர்களில் ஒருவனின் குரல் என்பதைத்
தெரிந்து கொண்டு, "பயப்படாதே, அண்ணே! உங்களைப் போல் நாங்களும் வழிப்போக்கர்கள்தான்.
மழைக்காக மண்டபத்தில் வந்து ஒதுங்கியிருக்கிறோம்!" என்று சொன்னாள் பூங்குழலி.
"சரி, சரி! பல்லக்கின் அருகில் வரவேண்டாம்" என்றது அதே குரல்.
"நாங்கள் ஏன் பல்லக்கின் அருகில் நெருங்கப் போகிறோம்? பல்லக்கில்
ஏறுவதற்குப் பாக்கியம் செய்திருக்க வேண்டாமா!" என்றாள் பூங்குழலி.
சேந்தன்
அமுதன், "வள்ளுவர் பெருமாள் கூட இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். முற்பிறப்பில்
செய்த வினைப் பயனைப் பற்றிக் கூறும்போது..." என்று தொடங்கினான்.
"போதும்,
போதும்! வாயை மூடிக் கொண்டு சும்மா இருங்கள்! நீங்கள் எத்தனை பேர்?"
"நாங்கள் இரண்டு பேர்தான் இன்னும் இரண்டு நூறு பேர் வந்தாலும் இந்த
மண்டபத்தில் மழைக்கு ஒதுங்கலாம்!..." என்றான் அமுதன்.
தான் உண்மையென்று
நம்பியதையே அமுதன் சொன்னான். அதே மண்டபத்தின் உட்புறத்தில் தூணின் மறைவில்
மூன்றாவது மனிதன் ஒருவன் நின்றது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பல்லக்குச் சுமந்தவன், "நான் அப்போதே சொன்னேன். மழை வந்ததும் மண்டபத்தில்
போய் ஒதுங்கலாம் என்றேன்; கேட்கவில்லை. அதனால் இந்தச் சங்கடம் நேர்ந்தது!' என்று
தன் தோழனிடம் சொன்னான்.
"இப்படி ஆகும் என்று யார் அப்பா கண்டது? மழை
வலுப்பதற்குள் கோட்டைக்குள் போய்விடலாம் என்று எண்ணினோம். இந்த மட்டும் பல்லக்கின்
மேல் மரம் விழாமல் போச்சே!" என்றான் அவன் தோழன்.
இச்சமயம் இன்னொரு
பிரகாசமான மின்னல் மின்னியது.
சேந்தன் அமுதன் - பூங்குழலி இருவர்களுடைய
கண்களும் கவனமும் பல்லக்கின் பேரிலேயே இருந்தது.
ஆகையால் அந்த மின்னல்
வௌிச்சத்தில், பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு ஒரு பெண்மணி தாங்கள் நின்ற
திசையை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். அப்படி நோக்கிய
பெண்மணியின் முகம் அவர்களைப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்டு புன்னகை
புரிந்ததையும் கவனித்தார்கள். மறு வினாடி மண்டபத்திலும் வௌியிலும் இருள் சூழ்ந்தது.
மிக மெல்லிய குரலில் பூங்குழலி, "அமுதா! பார்த்தாயா?" என்றாள்.
"ஆம், பார்தேன்"
"பல்லக்கில் இருந்தது யார்?"
"பழுவூர்
இளையராணிதானே?"
"உனக்கு என்ன தோன்றியது?"
"பழுவூர் ராணியைப்
போலத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது."
"சந்தேகமில்லை;
நிச்சயந்தான்."
"எது நிச்சயம்?"
"பழுவூர் ராணி அல்ல;
பித்துப்பிடித்த என் அத்தை ராணி தான் பல்லக்கில் இருக்கிறாள்!"
"உஷ்!
இரைந்து பேசாதே!"
"இரைந்து பேசாவிட்டால் காரியம் நடப்பது எப்படி?"
"என்ன காரியம்?"
"எதற்காக இத்தனை தூரம் வந்தோமோ, அந்தக்
காரியந்தான். அத்தையைக் கண்டுபிடித்து விட்டோம். அவளை விடுவித்து அழைத்துப் போக
வேண்டாமா?"
"இப்போது அது முடியாத காரியம், பூங்குழலி! பல்லக்கு எங்கே
போய்ச் சேர்கிறது என்று பார்த்துக் கொள்வோம். பிறகு யோசித்து விடுதலை செய்வதற்கு
வழி தேடலாம்."
"தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டும் என்கிறாயே?
அதெல்லாம் முடியாது; இப்போது அத்தையை விடுதலை செய்தாக வேண்டும். உனக்குப்
பயமிருந்தால் நீ சும்மா இரு!"
"விடுதலையாவதற்கு உன் அத்தை சம்மதிக்க
வேண்டாமா? பல்லக்கில் ஏறி ஜாம் ஜாம் என்று போய்க் கொண்டிருக்கிறாள். எங்கே
போகிறாள்; எதற்காக, யார் அவளைப் பிடித்து வரச் செய்தது என்றெல்லாம் தெரிந்து கொள்ள
வேண்டாமா?"
"பாதாளச் சிறைக்குக் கொண்டு போகிறார்களோ, என்னமோ? அப்புறம்
நம்மால் என்ன செய்ய முடியும்?"
"ஏன் முடியாது? பாதாளச் சிறையில் நானே
இருந்து வௌி வந்தவன்தான். அரண்மனைகளில் எனக்கும் கொஞ்சம் செல்வாக்கு உண்டு. உன்
அத்தையை எப்படியாவது நான் விடுதலை செய்கிறேன் இப்போது நீ சும்மா இரு!"
பூங்குழலியும் அச்சமயம் பொறுமையுடன் சும்மா இருக்கத்தான் வேண்டும் என்று
தீர்மானித்தாள். அப்போது அவர்கள் சிறிதும் எதிர்பாராத காரியம் ஒன்று நிகழ்ந்தது.
மூடுபல்லக்கின் விலகிய திரை இன்னும் நன்றாய் விலகுவது போலிருந்தது. அதன்
உள்ளிருந்து ஓர் உருவம் வௌியே வந்தது. சத்தம் சிறிதுமின்றிப் பூனை நடப்பது போல்
நடந்தது. அடுத்த வினாடி அவர்கள் அருகில் வந்து விட்டது.
இவ்வளவும் நல்ல
இருட்டில் நடந்தபடியால், மண்டபத்தின் அடிப்படிகளில் நின்ற காவலர்கள் கண்ணில்
படவில்லை.
பல்லக்கிலிருந்து வௌிவந்தவள் ஊமை ராணிதான் என்பதைப் பூங்குழலி
அந்த இருளிலும் நன்றாய்த் தெரிந்து கொண்டு விட்டாள்.
ஊமை ராணி அந்த இரண்டு
பேரின் கைகளையும் பிடித்து இழுத்துக் கொண்டு அம்மண்டபத்தின் பின் பகுதிக்கு
விரைந்து சென்றாள்.
பூங்குழலியைத் தழுவிக் கொண்டு உச்சிமுகந்து, அவளைப்
பார்த்ததில் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.
பின்னர், அத்தைக்கும்
மருமகளுக்கும் சமிக்ஞை பாஷையில் சிறிது நேரம் சம்பாஷணை நடந்தது.
அந்தக்
காரிருளில் அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படித் தான் பேசிக் கொண்டார்களோ? ஒருவர்
கருத்தை ஒருவர் எவ்வாறு தான் தெரிந்து கொண்டார்களோ? அது நம்மால் விளங்கச் சொல்ல
முடியாத காரியம்.
பூங்குழலி சேந்தன் அமுதனிடம், "அத்தை சொல்லுவது உனக்குத்
தெரிந்ததா? என்னைப் பல்லக்கில் ஏறிக் கொண்டு போகச் சொல்கிறாள். அவளை உன் வீட்டுக்கு
அழைத்துப் போகச் சொல்லுகிறாள்!" என்றாள்.
"உன் சம்மதம் என்ன பூங்குழலி?"
என்று அமுதன் கேட்டான்.
"அத்தை சொல்லுகிறபடி செய்யப் போகிறேன். ஆளைப்
பிடித்துக் கொண்டு வரச் சொன்னவர்கள் இன்னார் என்று தெரிந்து கொள்வதற்கு சரியான
உபாயம் அல்லவா?"
"யோசித்துச் சொல்லு! பூங்குழலி! உபாயம் சரிதான்! அதில்
என்ன அபாயம் இருக்குமோ!"
"அமுதா! நீ கவலைப்படாதே! அத்தை சொன்னபடி
செய்வதினால் எனக்கு ஓர் அபாயமும் ஏற்படாது. அப்படி ஏற்படுவதாயிருந்தால், என்
இடுப்பில் இந்தக் கத்தி இருக்கவே இருக்கிறது!" என்று சொன்னாள் பூங்குழலி.
அத்தையை மறுபடி ஒரு முறை தழுவிக் கொண்டு விட்டுப் பூங்குழலி அவளைப் போலவே
சத்தம் செய்யாமல் நடந்து சென்று பல்லக்கில் புகுந்து திரையையும் விட்டுக் கொண்டாள்.
பக்க
தலைப்பு
இருபத்திரண்டாம் அத்தியாயம் அநிருத்தரின் ஏமாற்றம்
முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் சில தினங்களாகத்
தலைநகரிலேயே தங்கியிருந்தார். அவரைக் காண்பதற்கு அரசாங்க அதிகாரிகள், சிற்றரசர்கள்,
சேனைத் தலைவர்கள், அயல்நாட்டுத் தூதுவர்கள், வர்த்தகக் குழுக்களின் பிரதிநிதிகள்,
ஆலய நிர்வாகிகள், தென்மொழி வடமொழி வித்வான்கள் முதலியோர் வந்த வண்ணமிருந்தார்கள்.
ஆதலின் அவருடைய மாளிகையில் ஜே, ஜே என்று எப்போதும் ஜனக்கூட்டமாக இருந்தது.
அநிருத்தர் தமக்கெனத் தனியாக காவல் படை வைத்துக் கொள்ளவில்லை.
பரிவாரங்களும் மிகக் குறைவாகவே வைத்துக் கொண்டிருந்தார். ஆகையால்
பழுவேட்டரையர்களோடு அவருக்குத் தகராறு எழுவதற்குக் காரணம் எதுவும்
ஏற்படாமலிருந்தது.
ஆனபோதிலும், சின்னப் பழுவேட்டரையர் முணு முணுத்துக்
கொண்டிருந்தார். முதன்மந்திரி தஞ்சை நகரில் தங்க ஆரம்பித்ததிலிருந்து கட்டுக்காவல்
குறைந்து போயிருந்தது. முதன்மந்திரியைக் காண வேண்டுமென்ற வியாஜத்தில் கண்டவர்கள்
எல்லாம் கோட்டைக்குள் நுழைந்து கொண்டே இருந்தார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையை
அடுத்து முதல்மந்திரியின் மாளிகை இருந்தபடியால், அரண்மனை வட்டாரத்திலும் ஜனக்
கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. முதன்மந்திரியின் பெயரைச் சொல்லிக் கொண்டும்
அவருடைய இலச்சினையைக் காட்டிக் கொண்டும் அநேகம் பேர் அங்கே வந்து அவரைப் பார்த்த
வண்ணமிருந்தார்கள்.
இதையெல்லாம் ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்று
சின்னப் பழுவேட்டரையர் விரும்பினார். ஆனால் நேரில் முதன்மந்திரியிடம் போய்ச் சண்டை
பிடிப்பதற்கு வேண்டிய துணிச்சல் அவருக்கு இல்லை. பெரிய பழுவேட்டரையரும் இருந்தால்,
இருவருமாக யோசித்து ஏதேனும் செய்யலாம். இந்தச் சமயம் பார்த்துப் பெரிய
பழுவேட்டரையரும் கடம்பூருக்குப் போய் விட்டதனால், சின்னவரான காலாந்தக கண்டருக்கு
ஒரு கை ஒடிந்தது போல் இருந்தது.
கோட்டைக்குள் ஜனக் கூட்டத்தைச் சேர்த்துக்
கட்டுக் காவலுக்கு ஊறு விளைவிப்பது போதாது என்று, முதன்மந்திரி அநிருத்தர் அடிக்கடி
ஏதாவது சின்னப் பழுவேட்டரையரிடம் உதவி கேட்கும் பாவனையில் அவருக்குக் கட்டளை
அனுப்பிக் கொண்டிருந்தார்.
சில நாளைக்கு முன்பு கோடிக்கரைக்கு
அனுப்புவதற்குச் சில வீரர்கள் வேண்டும் என்று கேட்டார். காலாந்தக கண்டரும் ஆட்களைக்
கொடுத்து உதவினார். பிறகு நேற்றைக்கு உயர் குலத்துப் பெண்மணி ஒருவரைத்
திருவையாற்றிலிருந்து அழைத்து வரவேண்டுமென்றும், அதற்குப் பழுவூர் அரண்மனையின்
மூடுபல்லக்கு ஒன்றும், சிவிகை தூக்கிகளும் வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார்.
சின்னப் பழுவேட்டரையர் இந்த கோரிக்கையையும் நிறைவேற்றினார். ஆனால் மனத்திற்குள்
'இந்தப் பிரம்மராயன் ஏதோ சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான். அவ்விதம் மூடுபல்லக்கில்
வைத்து வரவழைக்ககூடிய உயர் குடும்பத்துப் பெண்மணி யார்? எதற்காக இங்கே வருகிறாள்.
இதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில் தமையனார் இங்கே
இல்லாமற் போய் விட்டாரே?' என்று அவர் மனசு சஞ்சலப்பட்டது.
முதன்மந்திரி
அநிருத்தரின் மாளிகைக்கு மூடுபல்லக்கில் வந்தது யார் என்று தெரிந்து கொள்ள இன்னொரு
மனிதனும் ஆவல் கொண்டிருந்தான். அவன் வேறு யாரும் இல்லை; அநிருத்த பிரம்மராயரின்
அருமைச் சீடனான ஆழ்வார்க்கடியான்தான். பெருமழை பெய்த அன்றைக்கு மறுநாள் காலையில்
அநிருத்த பிரம்மராயர் ஸ்நானபானம், ஜபதபம், பூஜை, புனஸ்காரம் ஆகியவற்றை முடித்துக்
கொண்டு மாளிகையில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தம்மைக் காண்பதற்கு யாரார்
வந்து காத்திருக்கிறார்கள் என்று சேவகனைப் பார்த்துகொண்டு வரச் செய்தார்.
காத்திருந்தவர்களில் ஆழ்வார்க்கடியான் ஒருவன் என்று தெரிந்ததும், அவனை உடனே கூட்டி
வரும்படி ஆக்ஞாபித்தார்.
ஆழ்வார்க்கடியான் தன் குருநாதரின் முன்னால்
விரைந்து வந்து பயபக்தி வினயத்துடன் நின்றான்.
"திருமலை! போன காரியம் என்ன
ஆயிற்று?" என்று அநிருத்தர் கேட்டார்.
"குருவே! மன்னிக்க வேண்டும்.
தோல்வியடைந்து திரும்பினேன்" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"ஒருவாறு நான்
எதிர்பார்த்ததுதான். ஆதித்த கரிகாலரைச் சந்திக்கவே முடியவில்லையா?"
"சந்தித்தேன் ஐயா! தாங்கள் சொல்லச் சொன்ன செய்திகளையும் சொன்னேன், ஒன்றும்
பயனில்லை. இளவரசரைக் கடம்பூர் அரண்மனைக்குப் போகாமல் தடுக்க முடியவில்லை..."
"இளவரசர் இப்போது கடம்பூரில்தான் இருக்கிறாரா?"
"ஆம், குருவே!
சம்புவரையரின் மாளிகையில் அவர் பிரவேசித்ததைப் பார்த்துவிட்டு தான் வந்தேன்.
இளவரசருக்கு சம்புவரையர் இராஜோபசார வரவேற்பு அளித்தார். சுற்றுப்புறத்து மக்கள்
காட்டிய உற்சாகத்தை வர்ணிக்க முடியாது."
"அதெல்லாம் எதிர்பார்க்கக்
கூடியதுதான் கடம்பூர் மாளிகைக்கு இன்னும் யார்யார் வந்திருக்கிறார்கள்?"
"இளவரசருடன் பார்த்திபேந்திரனும் வந்தியத்தேவனும் வந்திருக்கிறார்கள்.
இங்கிருந்து பெரிய பழுவேட்டரையர் இளைய ராணியுடன் வந்திருக்கிறார். இன்னும்
நடுநாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் சேர்ந்த பல சிற்றரசர்களையும்
அழைத்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன்..."
"திருக்கோவலூர் மலையமான்..."
"மணிமுத்தா நதி வரையில் இளவரசருடன் வந்து திரும்பி போய்விட்டார்...?"
"அந்த வீரக்கிழவன் சும்மா இருக்கமாட்டான். இதற்குள் சைனியம் திரட்டத்
தொடங்கியிருப்பான். தெற்கேயிருந்து கொடும்பாளூர்ப் பெரிய வேளான் பெரிய சைன்யத்துடன்
வருவதாகக் கேள்விப்படுகிறேன். இந்த ராஜ்யத்துக்கு கேடு ஒன்றும் வராமல் கடவுள்தான்
காப்பாற்ற வேண்டும். திருமலை! நீ வரும் வழியில் சோழ நாட்டு மக்கள் என்ன பேசிக்
கொண்டிருக்கிறார்கள் என்பது ஏதேனும் காதில் விழுந்ததா?"
"சின்ன இளவரசருக்கு
நேர்ந்த கடல் விபத்தைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பழுவேட்டரையர்கள் மீது ஒரே கோபமாயிருக்கிறார்கள். சிலர் தங்களையும் சேர்த்துக் குறை
கூறுகிறார்கள்..."
"ஆம், ஆம்; குறை கூறுவதற்கு அவர்களுக்கு நியாயம்
இருக்கத்தான் செய்கிறது. திருமலை! சீக்கிரத்தில் இந்த முதன்மந்திரி உத்தியோகத்தை
விட்டுவிட எண்ணி இருக்கிறேன்.."
"குருவே! தாங்கள் அப்படி செய்தால் எனக்கும்
விடுதலை கிடைக்கும். ஆழ்வார்களின் பாசுரங்களை நாடெங்கும் பாடி யாத்திரை செய்து
ஆனந்தமாய்க் காலம் கழிப்பேன். எப்போது உத்தியோகத்தை விட்டு விடப் போகிறீர்கள்,
ஐயா!"
"இராஜ்யத்திற்கு விபத்து நேராமல் பாதுகாக்கக் கடைசியாக ஒரு முயற்சி
செய்து பார்க்கப் போகிறேன்; அது முடிந்ததும் விடப் போகிறேன்.."
"அது என்ன
முயற்சி குருவே?"
"அந்த முயற்சியில் மிக முக்கியமான முதற்படி ஏறியாகி
விட்டது. திருமலை! உன்னால் வரமுடியாது என்று நீ கைவிட்டு விட்ட ஒரு காரியத்தில்
நான் வெற்றி பெற்று விட்டேன்..."
"அதில் வியப்பு ஒன்றுமில்லை, ஐயா! அது
என்ன காரியமோ?"
"ஈழத் தீவில் பித்துப்பிடித்தவள் போலத் திரிந்து
கொண்டிருக்கும் ஓர் ஊமை ஸ்திரீயைத் தேடிப் பிடித்து அழைத்து வரச் சொன்னேன் அல்லவா?
உன்னால் அந்தக் காரியம் முடியவில்லை என்று திரும்பி வந்து கூறினாய் அல்லவா?" என்று
அநிருத்தர் கேட்டார்.
"ஆம், ஐயா! அந்த ஊமை ஸ்திரீ..."
"நேற்றிரவு
நம் அரண்மனைக்கு அவளைக் கொண்டு வந்தாகி விட்டது."
"ஆகா! அதிசயம! அதிசயம்!
இதை எப்படிச் சாதித்தீர்கள்?"
"சின்ன இளவரசர் தப்பிப் பிழைத்தாரா இல்லையா
என்று தெரிந்துகொள்ள அந்த ஊமைப் பெண் கோடிக்கரைக்கு வருவாள் என்று எதிர்பார்த்தேன்.
வந்தால் அவளைப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பியிருந்தேன். நல்ல வேளையாக
அவள் அதிக தொந்திரவு கொடுக்காமலே வந்து விட்டாள். இந்த வேடிக்கையைக் கேள், திருமலை!
திருவையாற்றிலிருந்து அவளை மூடுபல்லக்கில் வைத்து அழைத்து வரச் செய்தேன். இதற்காகப்
பழுவூர் ராணியின் மூடுபல்லக்கையே வரச் செய்தேன்...."
"ஐயா நேற்று மாலை
பெரும் புயலும் மழையும் அடித்ததே!"
"ஆம்; அதனால் வழியில் தடங்கல்
ஏற்பட்டது. எனக்குக் கூடக் கவலையாகத்தானிருந்தது. நேற்று நள்ளிரவு நேரத்துக்குப்
பல்லக்கு வந்த பிறகுதான் நிம்மதியாயிற்று."
"ஓகோ! நள்ளிரவு ஆகிவிட்டதா?
தாங்களும் அத்தனை நேரமும் விழித்திருந்து வரவேற்பு அளித்தீர்களா?"
"விழித்திருந்தேன் ஆனால் வரவேற்பதற்கு நான் போகவில்லை. வீட்டுப்
பெண்களைவிட்டே வரவேற்கச் செய்தேன். வெறி பிடித்தவளாயிற்றே; என்ன தகராறு செய்கிறாளோ
என்று கவலையாகத்தானிருந்தது. நல்ல வேளையாக, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நன்றாகச்
சாப்பிட்டு விட்டு, உடனே உறங்கி விட்டாள். திருமலை! உண்மையைச் சொல்லப் போனால்,
இன்னமும் அவளைப் பார்க்கும் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் பயமாய்த்தானிருக்கிறது. நீ
இச்சமயம் வந்தது நல்லதாய்ப் போயிற்று...."
"குருவே! நானும் அந்தப்
பெண்மணியைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலாயிருக்கிறேன்..."
"அப்படியானால், வா!
அந்தப்புரத்துக்குப் போகலாம். உன்னை ஏற்கனவே அவளுக்குத் தெரியும் அல்லவா? நீ சின்ன
இளவரசருக்கு வேண்டியவன் என்பதும் தெரியும். ஆகையால் உன்னிடமும் சிறிது சுகமாக
இருக்கக்கூடும்."
குருவும், சீடனும் மாளிகையின் பின் கட்டுக்குச்
சென்றார்கள். தாதிமார்களிடம் நேற்றிரவு வந்த பெண்மணியை அழைத்து வரும்படி
அநிருத்தப்பிரம்மராயர் கட்டளை இட்டார்.
தாதிமார்கள் அந்த ஸ்திரீயை
அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
அநிருத்தர் அவளைப் பார்த்துத்
திகைத்துப் போய் நின்றார்.
ஆழ்வார்க்கடியானின் முகத்தில் புன்னகை
தவழ்ந்தது.
பக்க
தலைப்பு
இருபத்து மூன்றாம் அத்தியாயம் ஊமையும் பேசுமோ?
அநிருத்தர் சற்று நேரம் பூங்குழலியை உற்று பார்த்துக்
கொண்டிருந்துவிட்டு, அவளைக் கொண்டு வந்த தாதிமார்களை அருகில் அழைத்தார்.
அவர்களிடம் மெல்லிய குரலில் ஏதோ கேட்டார். அவர்கள் மறுமொழி சொன்ன பிறகு
அந்த அறையை விட்டு அப்பால் போகச் செய்தார்.
ஆழ்வார்க்கடியானைப் பார்த்து,
"திருமலை! ஏதோ தவறு நேர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது!" என்றார்.
"ஆம், ஐயா!
அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.
"இவள் இளம் பெண் சுமார் இருபது
பிராயந்தான் இருக்கலாம்."
"அவ்வளவு கூட இராது."
"நான்
எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதரசிக்குப் பிராயம் நாற்பது இருக்க வேண்டும்."
"அதற்கு மேலேயும் இருக்கும்"
"ஆம், ஆம், நீ இலங்கைத் தீவில்
மந்தாகினி தேவியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?"
"ஆம்; ஐயா! பார்த்து,
தங்கள் கட்டளைப்படி இங்கு அழைத்து வரவும் முயன்றேன், முடியவில்லை."
"இந்தப்
பெண் மந்தாகினி தேவி அல்லவே?"
"இல்லை, குருதேவரே! நிச்சயமாக அந்த அம்மையார்
இல்லை!"
"அப்படியானால் இவள் யாராயிருக்கும்? எப்படி இங்கு வந்து
சேர்ந்தாள்?"
"இவளையே கேட்டுவிட்டால் போகிறது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"ஊமையிடம் கேட்டு என்ன பயன்?"
"குருத்தேவரே! இவள் ஊமைதான்
என்பது..."
"அதைத்தான் தாதிமார்களிடம் கேட்டேன் இங்கு வந்ததிலிருந்து இவள்
ஒன்றும் பேசவில்லை என்றார்கள்."
"குருதேவரே! இவளை அடையாளம் கண்டு அழைத்து
வருவதற்கு யாரை அனுப்பியிருந்தீர்கள்?"
"ஆகா! அந்த மூடன் ஏதாவது தவறு
செய்து விட்டானா, என்ன?"
"எந்த மூடன், குருதேவரே! தாங்கள் இத்தகைய
காரியங்களுக்கு மூடனை அனுப்பி வைத்திருப்பீர்களா?"
"புத்திசாலியாக
காணப்பட்டான்; பழையாறைக்கு நான் சென்றிருந்த அன்று, வாணர் குலத்து வல்லவரையனுடன்
ஒரு வாலிபன் சண்டையிட்டான் அல்லவா?"
"ஆம்! பழையாறை வைத்தியர் மகன்
பினாகபாணி."
"அவனேதான்! உன்னையும் வல்லவரையனையும் கரிகாலரைச் சந்திக்க
அனுப்பிய பிறகு அந்த வைத்தியர் மகனைச் சிறையிலிருந்து விடுதலை செய்து அழைத்து வரப்
பண்ணினேன். நம் ஒற்றர் படைக்குத் தகுந்தவன் என்று கண்டு, அவனைக் கோடிக்கரைக்கு
அனுப்பினேன். முன்னம் அவன் கோடிக்கரைக்குப் போய்ப் பழக்கப்பட்டவனாம்.."
"அவன்தான் இந்தப் பெண்ணை இங்கு அழைத்து வந்தானா?"
"அடையாளம்
எல்லாம் சரியாகச் சொல்லி அனுப்பினேன். அவனும் திருவையாற்றில் கொண்டு வந்து
சேர்த்துவிட்டுக் காரியம் வெற்றி என்று செய்தி அனுப்பியிருந்தான்..."
"ஐயா!
நான் தோற்றுப்போன காரியத்தில் வெற்றி அடைந்த அந்தப் புத்திசாலி ஒற்றன் இப்போது
எங்கே? இந்தப் பெண்ணைக் குறித்து அவனையே கேட்டுவிடுவது நல்லதல்லவா?"
"நல்லதுதான்! ஆனால் நேற்றிரவு அவனுக்கு எதிர்பாராமல் ஒரு விபத்து
நேர்ந்துவிட்டது...!"
"அடாடா! அவனுக்கு என்ன விபத்து, எப்படி நேர்ந்தது?"
"சிவிகையின் பின்னால் அவனும் வந்து கொண்டிருந்தான். இருட்டிய பிறகு
கோட்டைக்கு வரவேண்டும் என்று நான் கட்டளையிட்டிருந்தபடியால் அந்தப்படியே அந்திமாலை
நேரத்தில் திருவையாற்றிலிருந்து புறப்பட்டு, முன்னிரவு வேளையில் கோட்டையை
நெருங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று புயல் அடித்த செய்தித்தான் உனக்குத்
தெரிந்திருக்குமே..."
"ஆம், ஐயா! நான் கூடப் புயலுக்குப் பயந்து சாலை
ஓரத்து யாத்திரை மண்டபம் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருக்கும்படி நேர்ந்தது."
"கோட்டைக்குச் சற்றுத் தூரத்தில் சிவிகை வந்தபோது சாலையில் பெரிய மரம்
ஒன்று வேரோடு பெயர்ந்து விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாகப் பல்லக்கின் மீது விழாமல்
பின்னால் வந்தவர்கள் மீது விழுந்தது. வைத்தியர் மகன் பினாகபாணி விழுந்த மரத்தடியில்
அகப்பட்டுக் கொண்டான்.."
இவ்வாறு முதன்மந்திரி கூறியபோது, ஒரு பெண் குரல்
"அந்தச் சண்டாளன் தலையில் மரம் மட்டுந்தானா விழுந்தது? இடி விழவில்லையா?" என்று
ஆத்திரத்துடன் கூறியது கேட்டது.
முதன்மந்திரி அநிருத்தர் அளவிலாத
வியப்புடன் பூங்குழலியை நோக்கினார். அவளைப் பார்த்துக் கொண்டே "திருமலை! இப்போது
பேசியவள் இந்தப் பெண்தானா?" என்றார்.
"ஆம், ஐயா! அப்படித்தான் தோன்றியது."
"இது என்ன விந்தை? செவிடுக்குக் காது கேட்குமா? ஊமையும் பேசுமா?" என்றார்
அநிருத்தர்.
"செவிட்டுக்குக் காது கேட்பதும், ஊமை பேசுவதும் மிகவும்
விந்தையான காரியந்தான். ஆனால் சர்வசக்தி வாய்ந்த விஷ்ணு மூர்த்தியின் பக்தராகிய
தாங்கள் மனது வைத்தால் எந்த அற்புதந்தான் நடவாது? ஆழ்வார் திருவாய்
மலர்ந்தருளியிருப்பது என்னவென்றால்.."
"போதும்! ஆழ்வார்களை இப்போது இங்கே
இழுத்துத் தொந்தரவு செய்யாதே! இது விஷ்ணு பகவானின் கருணையினால் நடந்தது அல்ல; ஏதோ
தவறு நடந்திருக்கிறது. இந்தப் பெண் நம்மை ஏமாற்றியிருக்கிறாள். இவள் யார்? இவளுடைய
நோக்கம் என்ன? எதற்காக இவள் இத்தனை நேரமும் செவிட்டு ஊமை போல நடித்தாள்?"
"குருதேவரே! இந்தப் பெண்ணையே கேட்டு விடலாமே?"
"அப்பனே! உன்
முகத்தில் தவழும் புன்னகையைப் பார்த்தால், உனக்கு ஒருவேளை தெரிந்திருக்கக்கூடுமோ
என்று தோன்றுகிறது. சரி! இவளையே கேட்டு விடுகிறேன்; பெண்ணே! நீ செவிடு இல்லையா?
நான் பேசுவது உனக்குக் காது கேட்கிறதா...?"
"ஐயா! நான் செவிடாயிருக்கக்
கூடாதா என்று சில சமயம் விரும்பியதுண்டு. ஆனால் எனக்குக் காது கேட்பது பற்றி
இப்போது சந்தோஷப்படுகிறேன். அந்தச் சண்டாளன் வைத்தியர் மகன் தலையில் மரம் ஒடிந்து
விழுந்த செய்தியைக் கேட்டேன் அல்லவா? சுவாமி! அவன் செத்து ஒழிந்தானா?" என்றாள்
பூங்குழலி.
"ஆகா! உனக்குக் காது கேட்கிறது; பேசவும் பேசுகிறாய்; நீ ஊமை
அல்ல!" என்றார் அநிருத்தர்.
"நிச்சயமாய் இந்தப் பெண் ஊமை இல்லை!" என்றான்
சீடன்.
"ஆகா! நான் ஊமையில்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்களே! சோழ
சாம்ராஜ்யத்திலேயே மிக்க அறிவாளி முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் என்று நான்
கேள்விப்பட்டது சரிதான்!" என்றாள் பூங்குழலி.
"பெண்ணே! என்னைப் பரிகாசமா
செய்கிறாய்! ஜாக்கிரதை! நீ ஊமையில்லாவிட்டால் நேற்று இரவு இங்கு வந்ததிலிருந்து
பேசாமலிருந்தது ஏன்? ஊமைபோல் நடித்தது ஏன்? உண்மையைச் சொல்லு!" என்று கேட்டார்
முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மாதிராயர்.
"ஐயா! நேற்றிரவு இங்கு நான் வந்து
சேரும் வரையில் பேசத் தெரிந்தவளாக இருந்தேன். என்னை 'வாயாடி' என்று கூடச்
சொல்வதுண்டு. முதன்மந்திரியின் அரண்மனையைப் பார்த்து இங்கு எனக்கு நடந்த
இராஜோபசாரங்களைப் பார்த்ததும் பிரமித்து ஊமையாய்ப் போனேன். உங்கள் அரண்மனைப்
பெண்மணிகள் என்னுடன் சமிக்ஞை மூலமாகப் பேசினார்கள். அவர்கள் எல்லாரும் ஊமை என்று
எண்ணி நானும் சமிக்ஞையாக மறுமொழி சொன்னேன். தங்களுடைய பேச்சைக் கேட்ட பிறகு,
எனக்கும் பேச்சு நினைவு வந்தது...."
"நீ பெரிய வாயாடி என்பதில்
சந்தேகமில்லை; உன்னை எப்படித்தான் வைத்தியர் மகன் பிடித்துக் கொண்டு வந்தான் என்பதை
நினைத்தால் ஆச்சரியமாயிருக்கிறது. அவன் முட்டாளாயிருந்தாலும் சாமர்த்தியசாலிதான்."
"சுவாமி! அந்தப் பாவி மகன் என்னைப் பிடித்துக் கொண்டு வரவில்லை. அதற்குப்
பிரயத்தனப்பட்டிருந்தால், இத்தனை நேரம் அவன் யமலோகத்துக்கு நிச்சயமாக யாத்திரை
செய்து கொண்டிருப்பான்!" என்று கூறிப் பூங்குழலி தன் இடுப்பில் செருகியிருந்த
கத்தியை எடுத்துக் காட்டினாள்.
"பெண்ணே! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்
கத்தியை இடுப்பிலே செருகிக்கொள். அவன் பேரில் உனக்கு ஏன் இத்தனை கோபம்? அவன்தான்
உன்னைப் பிடித்து வரவில்லை என்கிறாயே?"
"என்னை அவன் பிடித்துக் கொண்டு
வரவில்லை; ஆனால் என்னை அவன் ஆட்கள் படகிலே சேர்த்துக் கட்டிப் போட்டு விட்டு
வந்தார்கள். என் அண்ணியை மரத்திலே சேர்த்துக் கட்டி விட்டார்கள். இத்தனைக்கும்
அந்தச் சண்டாள வைத்தியர் மகன் தனக்கு இதில் ஒரு சம்பந்தமும் இல்லையென்று என்னிடம்
சொன்னான்.."
"அந்த வரையில் அவன் புத்திசாலிதான் நான் சொன்னபடியே அவன்
நடந்து கொண்டிருக்கிறான்..."
"ஐயா!, முதன்மந்திரியே! அந்த தூர்த்தனை
அனுப்பியது தாங்கள்தானா? வாயில்லாப் பேதையாகிய என் அத்தையைப் பிடித்துக் கொண்டு
வரக்கட்டளையிட்டதும் தாங்கள்தானா?"
"உன் அத்தையா? கரையர் மகள் மந்தாகினி
உன் அத்தையா? அப்படியானால், நீ...கலங்கரை விளக்கத்துக் காவலர் தியாகவிடங்கருக்கு நீ
என்ன வேணும்?" என்று அநிருத்தர் கேட்டார்.
"ஐயா! அவருடைய அருமைப்
புதல்விதான் நான்!"
"ஆகா! தியாகவிடங்கருக்கு இவ்வளவு வாயாடியான ஒரு மகள்
இருக்கிறாள் என்பது எனக்கு இதுவரை தெரியாமற் போயிற்று!"
"இதை வௌியில் சொல்ல
வேண்டாம், ஐயா!"
"ஏன், பெண்ணே?"
"சோழ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி
பிரம்மராயருக்குத் தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்று நாடெல்லாம்
பிரசித்தமாயிருக்கிறது. தங்களுக்கு ஒன்று தெரியாது என்று ஏற்பட்டால், தங்களிடம்
மக்களுக்குள்ள மதிப்புக்குப் பங்கம் வந்துவிடாதா?"
"பெண்ணே! என் மதிப்பைப்
பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குத் தெரியாத இன்னொரு செய்தியை மட்டும் சொல்லிவிடு.
உன் அத்தையைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றாயே, அவள் இப்போது எங்கே? நான்
அனுப்பிய பல்லக்கில், நீ எப்படி ஏறிக்கொண்டாய்? எவ்விடத்தில் ஏறிக் கொண்டாய்?"
என்று அநிருத்தர் கேட்டார்.
"ஐயா! வாயில்லாத ஊமையாகிய என் அத்தையைத்
தாங்கள் எதற்காகக் கைப்பற்றிக் கொண்டு வர ஆட்களை அனுப்பினீர்கள்?"
"மகளே!
அதை உன்னிடம் சொல்வதற்கில்லை; அது பெரிய இராஜாங்க சம்பந்தமான விஷயம்."
"தந்தையே! அப்படியானால், தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நானும் மறுமொழி சொல்ல
இயலாது."
"சொல்லும்படி செய்வதற்கு வழிகள் இருக்கின்றன!"
"என்னிடம்
பலிக்காது!"
"பெண்ணே! உன்னைப் பாதாளச் சிறைக்கூடத்துக்கு அனுப்புவேன்!"
"எந்தப் பாதாளச் சிறையிலும் என்னை அடைத்து வைத்திருக்க முடியாது."
"பாதாளச் சிறைக்கு ஒரு தடவை போனவர்கள் திரும்பி வருவதில்லை...."
"திரும்பி வந்த ஒருவனை எனக்குத் தெரியும், ஐயா! நேற்றுக்கூடச் சேந்தன்
அமுதனுடன் பேசிக் கொண்டு தான் பிரயாணம் செய்தேன்..."
"அவன் யார் சேந்தன்
அமுதன்?..."
"அவன் என்னுடைய இன்னொரு அத்தையின் மகன். அவனும் நானுமாகத்தான்
கோடிக்கரையிலிருந்து வந்து கொண்டிருந்தோம்."
"எதற்காக மகளே?"
"இந்தத் தஞ்சாவூரிலுள்ள மாடமாளிகை, கூடகோபுரங்களைப் பார்க்க வேண்டுமென்று
வெகு காலமாக ஆசை உண்டு. சக்கரவர்த்தி சுந்தர சோழரைத் தரிசிக்க வேண்டும் என்றும்
ஆவல் கொண்டிருந்தேன். சக்கரவர்த்திக்கு உடல்நலமில்லை என்று சொன்னார்களே? இப்போது
எப்படியிருக்கிறது ஐயா! நான் பார்க்கலாமா?"
"அப்படியேதான் இருக்கிறது,
மகளே! அபிவிருத்தி ஒன்றுமில்லை, ஆகையால் சக்கரவர்த்தியைத் தரிசிக்கும் எண்ணத்தை
மறந்துவிடு!..."
"அது எப்படி மறக்க முடியும் ஐயா! சக்கரவர்த்தியை நான்
பார்த்தேயாக வேண்டும். பார்த்து, அவருடைய தர்மராஜ்யத்தில் பெண்களைப் பலவந்தமாகப்
பற்றிக் கொண்டு வரும் அக்கிரமம் நடக்கும் செய்தியைச் சொல்ல வேண்டும்..."
"பெண்ணே! உன்னோடு வெறும் விவாதம் செய்து கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை.
உன்னைப் பலவந்தமாகப் பற்றிக்கொண்டு வர நான் கட்டளையிடவும் இல்லை. நான் அனுப்பிய
பல்லக்கில் நீ எப்படி ஏறிக் கொண்டாய், அதைச் சொல்! யாராவது உன்னைப் பலவந்தமாகப்
பிடித்துப் பல்லக்கில் ஏற்றினார்களா?"
"இல்லை, சுவாமி! அது மட்டும் இல்லை.
தஞ்சைக் கோட்டைக்கு அருகில் வரும் சமயத்தில் இந்தப் பல்லக்கு வெறுமையாக இருந்தது.
மழையாயிருக்கிறதே என்று நானாகவேதான் பல்லக்கில் ஏறிக் கொண்டேன்..."
முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மராயர் தமது சீடனாகிய ஆழ்வார்க்கடியானைப்
பார்த்து, "ஒருவாறு எனக்கு இப்போது விஷயம் விளங்குகிறது. வழியில் புயலும்
மழையுமாயிருந்தப் போது பல்லக்கை எங்கேயோ இறக்கியிருக்கிறார்கள். அச்சமயம் இவள்
அத்தையைப் பல்லக்கிலிருந்து இறக்கிவிட்டு இவள் ஏறிக் கொண்டிருக்கிறாள். வைத்தியர்
மகன் பேரில் மரம் விழுந்து பிரக்ஞை இழந்துவிட்டபடியால் அவனால் கவனிக்க முடியவில்லை.
சிவிகை தூக்கிய மற்றவர்கள் கவனிக்கவில்லை. கோட்டை வாசலுக்குச் சமீபத்திலேதான் இது
நடந்திருக்க வேண்டும் திருமலை! என்னுடைய ஊகம் சரியாயிருக்கும் என்று உனக்குத்
தோன்றுகிறதா?" என்று கேட்டார்.
"சுவாமி! தாங்கள் இப்போது ஊகித்துச்
சொன்னபடியே தான் நடந்தது; நானே கண்ணால் பார்த்தேன்."
"நீ பார்த்தாயா? அது
ஏன்? இத்தனை நேரம் ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தாய்? சீக்கிரம் சொல்லு!"
"நேற்று முன்னிரவில் மழைக்கால இருட்டில் கோட்டை வாசலை நெருங்கி வந்து
கொண்டிருந்தேன். பெரும் புயலும் மழையும் அடித்தன; மரங்கள் முறிந்து விழுந்தன.
சாலையோரத்து யாத்திரிகர் மண்டபம் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருக்கலாம் என்று
சென்றேன். அங்கே நான் ஒதுங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் இந்தப் பெண்ணும் இன்னொரு
வாலிபனும் வந்தார்கள். இவள் தன் அத்தை மகன் என்று சொன்னாளே, அவனாக இருக்கலாம்.
மின்னல் வௌிச்சத்தில் அவன் கழுத்தில் உருத்திராட்சம் கட்டியிருப்பதைப் பார்த்தேன்.
பிஞ்சிலே பழுத்த சைவன் என்று தெரிந்து கொண்டு அவனிடம் வைஷ்ணவத்தின் பெருமையைச்
சொல்லலாம்; சற்றுப் பொழுது போகும்' என்று எண்ணினேன். இதற்குள் அதே மண்டபத்தின்
முகப்பில் ஒரு சிவிகையைக் கொண்டு வந்து வைத்தார்கள். சிவிகையின் திரையில்
பழுவேட்டரையரின் பனைச் சின்னம் தெரிந்தது. சிவிகையிலிருந்து ஒரு பெண் இறங்கி
இவர்கள் அருகில் வந்தாள். மண்டபத்தில் இருள் கவிழ்ந்த இடத்தில் மூன்று பேரும் ஏதோ
ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டார்கள். பிறகு இவள் போய்ப் பல்லக்கில் ஏறுவதைப்
பார்த்தேன். மின்னல் வௌிச்சத்திலிருந்து 'பல்லக்கிலிருந்து இறங்கியவள் வேறு;
மறுபடியும் ஏறியவள் வேறு' என்று தெரிந்து கொண்டேன். பல்லக்குத் தூக்கிகள்
இதையொன்றும் கவனிக்கவில்லை; மழை சிறிது நின்றதும் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு
புறப்பட்டுப் போய் விட்டார்கள்!..."
"ஆகா! அப்படியா என்னை ஏமாற்றி
விட்டார்கள்? இத்தனை நேரம் சொல்லாமல் சும்மா இருந்தாயே? அந்த இரண்டு பேரும் பிறகு
என்ன செய்தார்கள்?"
"பல்லக்குப் போன பிறகு அவர்களும் போய் விட்டார்கள்;
பின்னர் நானும் புறப்பட்டேன்..."
"திருமலை! நீ ஏன் இதையெல்லாம் பார்த்துக்
கொண்டு சும்மாயிருந்தாய்? இவள் அத்தையை நீ ஏன் தடுத்து நிறுத்தவில்லை? நீயும்
இவர்களுடைய சூழ்ச்சியில் கலந்துவிட்டாயா, என்ன?"
"அபசாரம், குருதேவரே!
அபசாரம்! அத்தகைய துரோகத்தை நான் செய்யக்கூடியவனல்ல. முதலில், இதெல்லாம் தங்கள்
ஏற்பாடு என்று எனக்குத் தெரியாது. பழுவூர் அரண்மனைப் பல்லக்கு ஆனபடியால், சின்னப்
பழுவேட்டரையருடைய காரியமாயிருக்கும் என்று எண்ணினேன். மேலும், மந்தாகினி தேவியை
என்னால் தடுத்து நிறுத்த முடியுமா? புயற்காற்றை அணை போட்டு நிறுத்தினாலும்
நிறுத்தலாம்; அந்த மாதரசியை நிறுத்த முடியுமா? இலங்கையிலேயே முயன்று பார்த்துத்
தோல்வி அடைந்தவன்தானே. மேலும் அந்த அம்மாளுக்கு என்னை அடையாளம் தெரியும்.
பார்த்ததும் மிரண்டு ஓடிப் போவார்கள்; பிறகு யாராலும் அவரைப் பிடிக்க முடியாது..."
"அதை நினைத்தால் வைத்தியர் மகன் கெட்டிக்காரன் என்றே தோன்றுகிறது. இத்தனை
தூரம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் அல்லவா?"
"குருதேவரே! இந்த
விஷயத்தில் தங்கள் ஊகம் சரியல்லவென்று தோன்றுகிறது. மந்தாகினி தேவி தாமே
விரும்பித்தான் வந்திருக்க வேண்டும். தஞ்சையை நெருங்கியதும் அவருடைய மனம்
மாறியிருக்க வேண்டும்..."
"இருக்கலாம்; இருக்கலாம், ஆனாலும் இதற்குள் அதிக
தூரம் அந்தக் கரையர் மகள் போயிருக்க முடியாது. இரவெல்லாம் காற்றும் மழையுமாக
இருந்ததல்லவா? சமீபத்திலேதான் எங்கேயாவதுதான் இருக்க வேண்டும். திருமலை!
எப்படியாவது அவளைப் பிடித்தாக வேண்டும். ஒரு வேளை இந்தப் பெண்ணுக்கு அவள்
தங்குமிடம் தெரிந்திருக்கலாம்...மகளே! உன் பெயர் என்ன?"
"பூங்குழலி, ஐயா!"
"ஆகா! அழகான பெயர்! பெயர் வைப்பதில் தியாகவிடங்கரின் சாமர்த்தியத்துக்கு
இணையே கிடையாது. பூங்குழலி! உன் அத்தை எங்கே தங்கியிருப்பாள் என்று உனக்குத்
தெரிந்திருக்கும். தெரிந்தால் சொல்லு! அவளுக்கு ஒன்றும் கெடுதல் நேராது."
பூங்குழலி சிறிது யோசித்துவிட்டு, "சுவாமி! என் அத்தை இப்போது
இருக்கக்கூடிய இடம் எனக்குத் தெரியும். அவளை எதற்காகத் தாங்கள் பிடித்துக் கொண்டு
வரச் செய்தீர்கள் என்று சொன்னால், நானும் அவள் இருக்குமிடத்தைச் சொல்லலாம்..."
"பூங்குழலி! அது பெரிய இராஜாங்க விஷயம். அரண்மனையைப் பற்றிய இரகசியம்
உன்னிடம் சொல்ல முடியாது."
"நானும் சொல்ல முடியாது!"
"இந்தப்
பெண்ணுடன் பேசிச் சாத்தியப்படாது.."
"ஐயா! ஒரு நிபந்தனையை
நிறைவேற்றுவதாயிருந்தால்..."
"ஆகா! எனக்கு இந்தப் பெண் நிபந்தனை
போடுகிறாளாம்! அது என்ன?"
"என் அத்தையைத் தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் ஏற்றி
வைத்து மணிமகுடம் சூட்டுவதாயிருந்தால், அவளை நானே அழைத்து வருகிறேன்."
"திருமலை! இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது...!"
"அதை இப்போதுதானா கண்டீர்கள், குருதேவரே! இவளை ஒன்றும் கேட்கவே வேண்டாம்.
இவள் அத்தை இருக்குமிடம் எனக்குத் தெரியும். இவள் அத்தை மகன் சேந்தன் அமுதன்
கோட்டைக்குச் சற்றுத் தூரத்தில் பூந்தோட்டத்தில் இருக்கிறான். அவனும் அவனது
அன்னையும் தளிக்குளத்தார் கோயிலுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்கிறவர்கள். அங்கேதான்
தாங்கள் தேடும் பெண்மணி இருக்கிறாள். என்னுடன் சில ஆட்களை அனுப்பினால், அழைத்து
வருகிறேன்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
பூங்குழலி திருமலையை எரித்து
விடுகிறவள் போலப் பார்த்துவிட்டு, "அப்படி ஏதாவது செய்தால், நான் இப்போதே
சக்கரவர்த்தியின் அரண்மனை முன்னால் சென்று முறையிடுவேன்! நீங்கள் செய்யும்
அக்கிரமம் ஊரெல்லாம் அறியும்படி செய்வேன்!" என்றாள்.
"திருமலை! இவளைப்
பாதாளச் சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான்; வேறு வழி இல்லை!" என்றார்
அநிருத்தப்பிரம்மராயர்.
"என் அருகில் யாராவது வந்தால் கொன்று விடுவேன்!"
என்று பூங்குழலி மடியில் செருகி வைத்திருந்த கத்தியை எடுத்துக் காட்டினாள்.
"ஐயா! இந்தப் பெண்ணை பாதாளச் சிறைக்கு அனுப்ப வேண்டியதில்லை. அதற்குப்
பதிலாக இளையபிராட்டி குந்தவை தேவியின் மாளிகைக்கு அனுப்பி வைக்கலாம். இளையபிராட்டி
இப்போது இங்கேதானே இருக்கிறார்? அவர் இந்தப் பெண்ணின் பைத்தியத்தைத் தௌிய வைப்பார்!
இளையபிராட்டிக்கும் இந்தப் பெண்ணினால் ஆக வேண்டிய காரியம் ஏதேனும் இருக்கலாம்!"
என்றான் ஆழ்வார்க்கடியான்.
"எதனால் சொல்லுகிறாய்? இளையபிராட்டிக்கு இந்தப்
பெண்ணின் மூலமாக என்ன காரியம் ஆகவேண்டியிருக்கப் போகிறது...?"
"குருதேவரே!
தங்களுக்குத் தெரியாதா? நேற்று மாலை இங்கு அடித்த புயல் சோழ நாட்டுக் கடற்கரை ஓரமாக
அதாஹதம் செய்து விட்டிருக்கிறதாம்! தங்கள் அரண்மனை வாசலில் நாலாபுறமிருந்தும்
தூதர்கள் வந்து காத்திருக்கிறார்கள்..."
"ஆம், ஆம்! அவர்களையெல்லாம் நான்
இப்போது பார்க்கவேண்டும். அதற்குள் இந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்ததில் வெகு
நேரம் வீணாகிவிட்டது. இவள் ஊமையாகவே பிறந்திருந்தால் எவ்வளவோ
நன்றாயிருந்திருக்கும்..."
"கேள்வி முறையில்லாமல் கொடுமை செய்யலாம்
அல்லவா?" என்று முணுமுணுத்தாள் பூங்குழலி.
"நாகைப்பட்டினத்துக்குப் பெரிய
ஆபத்து என்று கேள்விப்படுகிறேன். கடல் பொங்கி வந்து நகரையே மூழ்க அடித்து
விட்டதாகச் சொல்கிறார்கள்!..."
இந்த வார்த்தைகளைக் கேட்டு முதன் மந்திரி
அநிருத்தர், பூங்குழலி இருவருமே திடுக்கிட்டார்கள்.
"அதைப் பற்றித்
தங்களிடம் விசாரிப்பதற்கு இளையபிராட்டியே இங்கே வந்தாலும் வரக்கூடும்" என்று
முடித்தான் ஆழ்வார்க்கடியான்.
அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே அரண்மனை
வாசலில் ஜயகோஷத் தொனிகள் கேட்டன.
"திருமலை, நீ எப்போது ஞானதிருஷ்டி
பெற்றாய்? இளையபிராட்டிதான் வருகிறார் போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டு
அநிருத்தர் எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.
அதற்குள் அதே வாசல் வழியாகக்
குந்தவை தேவியும் வானதியும் உள்ளே பிரவேசித்தார்கள்.
பூங்குழலி அங்கே
நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், இளையபிராட்டியின் திருமுகத்தில்
குடிகொண்டிருந்த கவலைக் குறி மறைந்து, வியப்பும் உவகையும் ஒருங்கே பிரதிபலித்தன.
பக்க
தலைப்பு
இருபத்து நாலாம் அத்தியாயம் இளவரசியின் அவசரம்
இளவரசிகளை உபசரித்து வரவேற்றுப் பீடங்களில் உட்காரச் செய்த
பிறகு அநிருத்தர் தாமும் அமர்ந்தார்.
"தேவி, என்னைப் பார்க்க வேணுமென்று
சொல்லி அனுப்பினால் நானே வந்திருக்கமாட்டேனா? இவ்வளவு அவசரமாக வந்த காரணம் என்ன?
சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறார் அல்லவா?" என்று கேட்டார்.
"சக்கரவர்த்தியின் தேக சுகம் எப்போதும் போலிருக்கிறது, ஐயா! ஆனால் மனதுதான்
கொஞ்சமும் சரியாக இல்லை. நேற்று இரவு அடித்த கடும் புயல் தந்தையின் மனத்தை
ரொம்பவும் பாதித்திருக்கிறது. இராத்திரியெல்லாம் அவர் தூங்கவில்லை. குடிசைகளில்
வாழும் ஏழை எளிய மக்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணி அடிக்கடி
புலம்பினார். பொழுது விடிந்தவுடன் தங்களைப் போய்ப் பார்க்கும்படி சொன்னார்.
புயலினால் கஷ்ட நஷ்டம் அடைந்தவர்களுக்கெல்லாம் உடனே உதவி அளிக்க ஏற்பாடு செய்ய
வேண்டுமாம். அதைத் தங்களிடம் சொல்லுவதற்காகவே முக்கியமாக வந்தேன்!" என்றாள்
இளையபிராட்டி குந்தவை.
"தேவி! இந்த எளியவனால் என்ன செய்ய முடியும்?
முதன்மந்திரி என்ற பெயர்தான் எனக்கு என்பது தங்களுக்குத் தெரியாதா? பெரிய
பழுவேட்டரையர் இந்தச் சமயம் ஊரை விட்டுப் போயிருக்கிறார். பொக்கிஷத்தை இறுக்கிப்
பூட்டிக் கொண்டுதான் போயிருப்பார். அவருடைய சம்மதமின்றிக் காலாந்தககண்டரால் கூடப்
பொக்கிஷ சாலையைத் திறக்க முடியாதே! கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்கு நான் என்ன உதவி
செய்ய முடியும்? வாசலில் பலர் வந்து காத்திருப்பதைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் அவர்களைப் பார்ப்பதற்கே எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதனால்தான் வௌியில்
செல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறேன்" என்று அநிருத்தப்பிரம்மராயர் பஞ்சப் பாட்டுப்
பாடினார்.
'ஐயா! அதைப்பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம் என்னுடைய சொந்த
உடைமைகள் அனைத்தையும் கொடுக்கிறேன். என் அன்னையும் அவ்விதமே கொடுக்கச்
சித்தமாயிருக்கிறார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையில் உள்ள எல்லாப் பொருள்களையும்
தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். தந்தை அவ்விதம் சொல்லி அனுப்பினார்கள். ஏழைகளின்
கஷ்டங்களுக்குத் தற்காலிக, சாந்தியாகவேனும் ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள்..."
"தங்களுடைய சொந்த உடைமைகள் யானைப் பசிக்குப் சோளப் பொரி கொடுத்ததாகவே
இருக்கும். சோழ நாடு முழுவதும் நேற்றுப் புயல் அடித்திருக்கிறது. எங்கெங்கே
என்னென்ன நேர்ந்திருக்கிறது என்ற செய்திகளே இன்னும் கிட்டவில்லை. இதோ நிற்கிறானே,
என் பரமானந்த சீடன், இவன் பெரும் பயங்கரமான செய்தியைச் சொல்லுகிறான். கடல் பொங்கி
எழுந்து கோடிக்கரை முதலாவது நாகைப்பட்டினம் வரையில் கடலோரமுள்ள ஊர்களையெல்லாம்
மூழ்கடித்து விட்டதாம்...!"
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அங்கிருந்த
மூன்று பெண்களின் முகங்களும் பீதிகரமான மாறுதலை அடைந்ததை அநிருத்தர் கவனித்தார்.
உடனே அவர் தொடர்ந்து ஆறுதலாகக் கூறினார்:
"ஆனால் அதை நான் நம்பவில்லை. இவன்
கூறுவது வெறும் வதந்திதான். புயலைக் காட்டிலும் வேகமாக வதந்தி பரவியிருக்கிறது.
கடற்கரைப் பகுதியிலிருந்து செய்தி வருவதற்கே இன்னும் நேரமாகவில்லை. குதிரை மீது
தூதர்கள் வந்தாலும் இன்று மத்தியானத்துக்கு மேலேதான் இங்கு வந்து சேர முடியும்.
இதற்கிடையில் நம்மால் செய்யக் கூடிய உதவிகளையெல்லாம் செய்வதற்கு ஏற்பாடு
செய்யலாம்."
இளையபிராட்டி குந்தவை தன் மனக் குழப்பத்தைச் சிறிது
சமாளித்துக் கொண்டு, "ஐயா! நாகைப்பட்டினம் பற்றிய வதந்தி என் காதிலும் விழுந்தது.
அதைப் பற்றியும் தங்களிடம் பேசலாம் என்று வந்தேன்.இப்போதுதானே சூடாமணி
விஹாரத்திற்கு நாம் நிவந்தங்கள் அளித்துவிட்டு வந்தோம்? விஹாரத்துக்கு விபத்து
நேர்ந்தால் பாவம், அதில் உள்ள பிக்ஷுக்கள் என்ன செய்வார்கள்?" என்று கூறிவிட்டு,
பூங்குழலி நின்ற இடத்தை நோக்கினாள்.
"ஐயா! இந்தப் பெண் இங்கே எப்படி
வந்தாள்? கோடிக்கரைத் தியாவிடங்கரின் மகள் பூங்குழலி அல்லவா இவள்?" என்று
வினவினாள்.
"ஆமாம்; தியாகவிடங்கரின் குமாரிதான் ஆனால் அவரைப் போல்
சாதுவல்ல. ரொம்பப் பொல்லாத பெண் தனக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுத்
தொந்தரவு விளைவிப்பவள்!" என்றார் முதன்மந்திரி.
இளையபிராட்டிக்கு வேறு வித
ஐயப்பாடு தோன்றியது. அருள்மொழியைப் பற்றி உளவு அறிவதற்காகத்தான் பூங்குழலியை இங்கே
அநிருத்தர் தருவித்திருக்கிறாரோ? தந்திர வித்தைகளில் கைதேர்ந்த மந்திரியாயிற்றே?
எப்படி இருந்தாலும் பூங்குழலியின் சார்பில் தான் இருக்க வேண்டுமென்று
தீர்மானித்துக் கொண்டு, "அப்படியொன்றுமில்லையே? பூங்குழலி மிக நல்ல பெண் ஆயிற்றே!
இங்கே வா, அம்மா! முதன்மந்திரி ஏன் உன் பேரில் கோபமாயிருக்கிறார்? அவருக்கு ஏதேனும்
தொந்தரவு கொடுத்தாயா?" என்றாள்.
பூங்குழலி சற்று நெருங்கி வந்து, "தேவி!
முதன்மந்திரியையே தாங்கள் கேளுங்கள்! நான் முதன்மந்திரிக்குத் தொந்தரவு கொடுத்தேனா
அவர் எனக்குத் தொந்தரவு கொடுத்தாரா என்று கேளுங்கள்!" என்றாள்.
"ஓகோ!
நீயும் கோபமாகத்தான் இருக்கிறாய்! இங்கே வா, பெண்ணே; என் அருகில் உட்கார்ந்துகொள்!"
என்று கூறி இளையபிராட்டி பூங்குழலியைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.
"ஐயா! இந்தப் பெண்ணை எதற்காகத் தருவித்தீர்கள்? ஏதாவது முக்கியமான
காரியமா?" என்று கேட்டாள்.
"அம்மணி! நான் இந்தப் பெண்ணைத் தருவிக்கவில்லை.
இப்படி ஒரு பொல்லாத பெண் இருக்கிறாள் என்ற செய்தியே எனக்குத் தெரியாது
இவளாகவேதான்.." என்று அநிருத்தர் தயங்கினார்.
"தேவி! முதன்மந்திரி ஏன்
தயங்குகிறார்? மிச்சத்தையும் சொல்லச் சொல்லுங்கள்!" என்றாள் பூங்குழலி.
"இவளாகவேதான் இவளுடைய அத்தையைத் தேடிக் கொண்டு வந்தாள்."
"யார்
இவளுடைய அத்தை? ஓகோ! சேந்தன் அமுதனின் அன்னையா? கோட்டைக்கு வௌியில் அல்லவா
அவர்களுடைய வீடு இருக்கிறது?"
"இல்லை; அமுதனின் அன்னை இல்லை; இவளுக்கு
இன்னொரு ஊமை அத்தை இருக்கிறாள். இளவரசி! தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய
செய்திதான். ஈழநாட்டுக் காடுகளில் பித்துப்பிடித்தவள் போல் திரிந்து கொண்டிருந்த
ஊமை ஸ்திரீ ஒருவர் உண்டு. அந்த மாதரசியை இங்கே ஒரு முக்கியமான காரியத்துக்காக
அழைத்து வர விரும்பினேன். அதற்காகப் பெரு முயற்சி செய்தேன்; கடைசியில், வெற்றி
கிட்டியது அந்தச் சமயத்தில்..."
குந்தவை தேவி சொல்லி முடியாத பரபரப்பை
அடைந்து, "உண்மையாகவா? அந்தப் பெண்மணி இப்போது இங்கே இருக்கிறாளா? நான் உடனே
பார்க்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பீடத்தை விட்டு எழுந்தாள்.
"மன்னிக்க வேண்டும் தேவி! வெற்றி கிட்டும் சமயத்தில் இந்தப் பெண்
குறுகிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டாள்!" என்றார் முதன்மந்திரி.
குந்தவை மிக்க ஏமாற்றத்துடன் திரும்பவும் உட்கார்ந்து "பூங்குழலி! இது
உண்மைதானா? என்ன காரியம் செய்து விட்டாய்!" என்றாள்.
"தேவி! என் அத்தையை
அழைத்து வருவதற்கு முதன்மந்திரி கையாண்ட முறையைக் கேளுங்கள். அப்போது என் பேரில்
குற்றம் சொல்லமாட்டீர்கள்!" என்றாள் பூங்குழலி.
பிறகு, முதன்மந்திரி
நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
கேட்டுக் கொண்டிருந்த இளையபிராட்டி,
"அப்படியானால், இந்தக் கோட்டைக்குப் பக்கத்திலே தானே எங்கேனும் இருக்க வேணும்?
தேடிப் பார்க்கலாமே?" என்றாள்.
"நல்ல வேளையாகத் தேடிப் பார்க்க வேண்டிய
அவசியம் கூட இல்லை. சேந்தன் அமுதன் குடிசையில் இன்று காலையில் பார்த்ததாக என் சீடன்
சொல்லுகிறான்" என்றார் முதன்மந்திரி.
"அப்படியானால் ஏன் வீண் கால தாமதம்?
மற்றக் காரியங்கள் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நாமே போய் அழைத்து
வருவோம்; தாங்கள் வருவதற்கில்லாவிட்டால் நான் போய் வருகிறேன். வானதி! புறப்படு,
போகலாம்!" என்றாள்.
ஆழ்வார்க்கடியான் அப்போது குறுக்கிட்டு, "தேவி! சற்று
யோசித்துச் செய்ய வேண்டும். புதிய மனிதர்கள் கூட்டமாய் வருவதைக் கண்டால் அந்த
அம்மாள் மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். பிறகு புயலைப் பிடித்தாலும் அந்த அம்மணியைப்
பிடிக்க முடியாது!" என்று சொன்னான்.
"ஆம், திருமலை சொல்லுவது சரிதான்
நம்மைப் பார்த்ததும் பூங்குழலியின் அத்தை மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். நமது
பிரயத்தனமெல்லாம் வீணாகிவிடும்! நீ என்ன யோசன |