கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
நான்காம் பாகம் - மணிமகுடம்
முதலாவது
அத்தியாயம் - கெடிலக் கரையில் இரண்டாம்
அத்தியாயம் - பாட்டனும், பேரனும் மூன்றாம்
அத்தியாயம் - பருந்தும், புறாவும் நான்காம்
அத்தியாயம் - ஐயனார் கோவில் ஐந்தாம்
அத்தியாயம் - பயங்கர நிலவறை ஆறாம்
அத்தியாயம் - மணிமேகலை ஏழாம்
அத்தியாயம் - வாலில்லாக் குரங்கு எட்டாம்
அத்தியாயம் - இருட்டில் இரு கரங்கள் ஒன்பதாம்
அத்தியாயம் - நாய் குரைத்தது! பத்தாம்
அத்தியாயம் - மனித வேட்டை
முதலாவது அத்தியாயம் கெடிலக் கரையில்
திருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்திய இனிய நீர்ப் பெருக்குடைய
நதிகளில் கெடிலம் நதியும் ஒன்று. அப்பர் பெருமானை ஆட்கொண்ட இறைவன்
எழுந்தருளியிருந்த திருவதிகை வீரட்டானம் இந்த நதிக் கரையில் இருக்கிறது.
சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொண்ட பெருமான் வாழும் திருநாவலூர் இந்நதியின்
அருகிலேதான் இருக்கிறது. இந்த இரண்டு ஷேத்திரங்களுக்கும் மத்தியில் தொண்டை
நாட்டிலிருந்து நடு நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் செல்லும் இராஜபாட்டை அந்த நாளில்
அமைந்திருந்தது. இராஜபாட்டை கெடில நதியைக் கடக்கும் துறை எப்போதும் கலகலவென்று
இருக்கும். நதிக் கரையில் உள்ள மரங்களில் பறவைகளின் குரல்களும், அவை இறகை
அடித்துக்கொள்ளும் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கும். பிரயாணிகள் அங்கே
வண்டிகளிலிருந்து மாட்டை அவிழ்த்து விட்டுக் கட்டுச் சாதம் உண்பார்கள். உண்ணும்போது
அவர்கள் விளையாட்டாக வானில் எறியும் சோற்றைக் காக்கைகள் வந்து அப்படியே கொத்திக்
கொண்டு போகும். இவற்றையெல்லாம் பார்க்கும் இளம் சிறார்கள் கை தட்டி ஆரவாரித்தும்,
'ஆஹூ' என்று வியப்பொலிகள் செய்தும், கலகலவென்று சிரித்தும், தங்கள் குதூகலத்தை
வௌியிடுவார்கள்.
ஐப்பசி மாதம் ஆரம்பத்தில் கெடில நதியில் வழக்கத்தை விட
அதிகமாகவே வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. இதனால் உச்சி வேளையில் அங்கே கட்டுச் சாதம்
அருந்துவதற்காகத் தங்கிய பிரயாணிகளின் ஆரவார ஒலிகளும் அதிகமாயிருந்தன. அந்த
ஒலிகளெல்லாம் அமுங்கிப் போகும்படியான ஒரு பெரும் ஆரவாரம் திடீரென்று சற்றுத்
தூரத்தில் சாலையில் எழுந்தது கேட்டுப் பிரயாணிகள் வியப்புற்றார்கள். அவர்களில்
சிலர் கரையேறிப் பார்த்தார்கள். முதலில் புழுதிப் படலம் மட்டுமே தெரிந்தது. பிறகு
யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் ஏந்துவோர் முதலிய இராஜ பரிவாரங்கள் வருவது
தெரிந்தது. சிறிது அருகில் அப்பரிவாரங்கள் நெருங்கி வந்ததும் கட்டியக்காரர்களின்
முழக்கம் தௌிவாகக் கேட்டது.
"பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்த
வீராதி வீரர், வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி, இரட்டை மண்டலத்தார் சொப்பனத்தில்
கண்டு அஞ்சும் சிங்கம், தொண்டை மண்டலாதிபதி, வடதிசை மாதண்ட நாயகர், மூன்று உலகமுடைய
சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருமகனார், ஆதித்த கரிகால சோழ மகாராஜா வருகிறார்!
பராக்!"
இடி முழக்கக் குரலில் எட்டுத் திசையும் எதிரொலி செய்யும்படி எழுந்த
இந்தக் கோஷத்தைக் கேட்டதும் கெடில நதித்துறையில் இருந்தவர் அனைவரும் அவசர அவசரமாகக்
கரையேறினார்கள். அத்தகைய வீராதி வீரனைக் காண வேண்டுமென்ற ஆவலுடன் நதித்துறையில்
நடுவில் வழி விட்டுவிட்டு இருபுறமும் அவர்கள் ஒதுங்கி நின்றார்கள்.
கட்டியக்காரர்கள், எக்காளம் ஊதுவோர், பரிச்சின்னம் ஏந்துவோர் ஆகியவர்கள்
முதலில் வந்து தண்ணீர்த் துறையை அடைந்தார்கள். பரிவாரங்களுக்குப் பின்னால் மூன்று
குதிரைகள் ஒன்றின் பக்கம், ஒன்றாக வந்தன, மூன்று குதிரைகள் மீதும் மூன்று இளம்
வீரர்கள் வீற்றிருந்தார்கள். அவர்களைத் தூரத்தில் பார்த்த போதே ஜனங்கள் அவர்களைச்
சுட்டிக் காட்டி இன்னார் இன்னவர் என்று பேசத் தொடங்கினார்கள். "நடுவில் உள்ள குதிரை
மீது வருகிறவர்தான் ஆதித்த கரிகாலர்! பொற் கிரீடத்தைப் பார்த்தவுடனே தெரியவில்லையா?
வெய்யில் படும்போது எப்படி கிரீடம் ஜொலிக்கிறது!" என்றான் ஒருவன்.
"இந்தக்
கிரீடத்தைப் போய்ச் சொல்லப் போகிறாயே? கரிகால்வளவன் அணிந்திருந்த மணி மகுடத்தை இவர்
சிரசில் தாங்கும் போதல்லவா பார்க்க வேண்டும்? அது கோடி சூரியப் பிரகாசமாகக் கண்கள்
கூசும்படி ஜொலிக்குமாம்!" என்றான் இன்னொருவன்.
"அது கரிகால்வளவன் கிரீடம்
அல்ல தம்பி! அப்படிச் சம்பிரதாயமாகச் சொல்வதுதான். பராந்தக சக்கரவர்த்தியின் சோழர்
அணிந்திருக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கோ, தெரியவில்லை!" என்றான் மற்றொருவன்.
"சுந்தர சோழரின் வாழ்நாளை இப்படித்தான் சில காலமாக எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். அவர் சிரஞ்சீவியாயிருப்பார் என்று தோன்றுகிறது!" என்றான்
முதலில் பேசியவன்.
"நன்றாயிருக்கட்டும், அவர் உயிரோடிருக்கும் வரையில் நாடு
நகரமெல்லாம் குழப்பமில்லாமலிருக்கும்!"
"அப்படியும் சொல்வதற்கில்லை;
பொன்னியின் செல்வனைக் கடல் கொண்டு விட்டதாகச் செய்தி வந்ததிலிருந்து, சோழ
நாடெங்கும் ஒரே அல்லோல கல்லோலமாயிருக்கிறதாம். எப்போது சண்டை மூளுமோ என்று
அங்கிருந்து வந்தவர்கள் எல்லாம் சொல்லி வருகிறார்கள்."
"யாருக்கும்
யாருக்கும் சண்டை? எதற்காகச் சண்டை?"
"பழுவேட்டரையர்களுக்கும்,
கொடும்பாளூர் வேளாளருக்கும் சண்டை மூளும் என்று சொல்கிறார்கள். அப்படியொன்றும்
ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சிற்றரசர்கள்
கூடுகிறார்களாம். ஆதித்த கரிகாலரும் அங்கேதான் போகிறாராம்."
"குதிரைகள்
நெருங்கி வந்துவிட்டன; இரைந்து பேசாதீர்கள்!" என்று ஒருவன் எச்சரித்துவிட்டு,
"இளவரசர் ஆதித்த கரிகாலரின் முகம் எவ்வளவு வாட்டமடைந்திருக்கிறது பார்த்தாயா?"
என்று கேட்டான்.
"அவர் முகம் வாட்டமடைந்தில்லாமல் எப்படியிருக்கும்? ஆதித்த
கரிகாலருக்குத் தம்பியின் பேரில் பிராணன். அப்படிப்பட்ட தம்பியைப் பற்றித் தகவல்
தெரியவில்லையென்றால் தமையனுக்கு வருத்தமாயிராதா? தந்தையோ
நடமாட்டமில்லாமலிருக்கிறார்!"
"இதெல்லாம் உலகத்தில் இயற்கை, தம்பி!
இளவரசருடைய முகவாட்டத்துக்குக் காரணம் இவையெல்லாம் அல்ல. இரட்டை மண்டலத்தார் மீது
படையெடுத்துப் போக வேண்டும் என்று கரிகாலருக்கு ஆசை; அது கைகூடவில்லையே என்றுதான்
கவலை!"
"அது ஏன் கைகூடவில்லை? யார் இவரைப் படையெடுத்துப் போக வேண்டாம்
என்று தடுக்கிறார்கள்?"
"வேறு யார்? பழுவேட்டரையர்கள் தான்!
படையெடுப்புக்கு வேண்டிய தளவாட சாமக்கிரியைகள் கொடுக்க மறுக்கிறார்களாம்!"
"ஏதேதோ இல்லாத காரணங்களையெல்லாம் கற்பித்துச் சொல்லுகிறார்கள். உண்மைக்
காரணம் உங்கள் ஒருவருக்கும் தெரியவில்லை" என்றான் ஒருவன். "எல்லாம் தெரிந்தவனே!
உண்மைக் காரணத்தை நீதான் சொல்லேன்!" என்று இன்னொருவன் கேட்டான்.
"ஆதித்த
கரிகாலர் யாரோ ஒரு பாண்டிய நாட்டுப் பெண் மீது காதல் கொண்டிருந்தாராம். இளவரசர்
வடபெண்ணைப் போருக்குச் சென்றிருந்த போது, பெரிய பழுவேட்டரையர் அப்பெண்ணை மணந்து
கொண்டுவிட்டாராம்.அவள்தான் இப்போது பழுவூர் இளையராணியாக விளங்கிச் சோழநாட்டில்
சர்வாதிகாரம் செலுத்துகிறாள். அதிலிருந்து ஆதித்த கரிகாலரின் மனமே பேதலித்துப்
போய்விட்டதாம்!"
"இருக்கலாம்; இருக்கலாம்? உலகத்தில் எல்லாச்
சண்டைகளுக்கும் யாராவது ஒரு பெண்தான் காரணமாயிருப்பாள் என்று பெரியவர்கள்
சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?"
"எந்தப் பெரியவர்கள், தம்பி, அப்படிச்
சொல்லியிருக்கிறார்கள்? சுத்தப்பைத்தியக்காரத்தனம்! இளவரசர் ஒரு பெண்ணை
விரும்பினார் என்றால், அவள் போய் ஒரு அறுபது வயதுக்கிழவனை மணந்து கொள்ளுவாளா?
சொல்லுகிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி இல்லையா?"
"அப்படியானால்
ஆதித்த கரிகாலருக்கு இன்னும் கலியாணமாகாமலிருப்பானேன்? நீர்தான் சொல்லுமே?"
"சும்மா இருங்கள்! இதோ நெருங்கி வந்துவிட்டார்கள். இளவரசருக்கு வலது
புறத்தில் வருகின்றவன்தான் பார்த்திபேந்திர பல்லவன் போலிருக்கிறது. இடது புறத்தில்
வருகின்றவன் யார்? வாணர் குலத்து வந்தியத்தேவனா?"
"இல்லை; இல்லை! கடம்பூர்
சம்புவரையர் மகன் கந்தமாறன். ஓலை கொடுத்து அனுப்பினால் இளவரசர் ஒருவேளை வரமாட்டார்
என்று சம்புவரையர் தம் மகனையே அவரை அழைத்துவர அனுப்பியிருக்கிறார்."
"இதிலிருந்து ஏதோ விஷயம் மிக முக்கியமானது என்று தெரிகிறது."
"அந்த
முக்கியமான விஷயம் இராஜரீக சம்பந்தமானதாகவும் இருக்கலாம். ஆதித்த கரிகாலருக்குத்
திருமணம் ஆகாதிருக்கும் வரையில் சிற்றரசர்கள் அவரை வலை போட்டுப் பிடிக்க முயன்று
கொண்டுதானிருப்பார்கள். முதன் முதலில் அவரை மணந்து கொள்ளும் பெண் சோழ
சாம்ராஜ்யத்தின் சிங்காதனத்தில் அமரும் பாக்கியம் பெறுவாள் அல்லவா?"
மேற்கண்டவாறெல்லாம் கெடில நதிக்கரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு
நின்றிருந்த ஜனங்கள் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மூன்று
குதிரைகளும் வந்து தண்ணீர்க் கரையோரம் நின்றன.
குதிரைகளுக்குப் பின்னால்
வந்த ரதம் சற்று அப்பால், அரச மரத்தடியில் நின்றது. அந்த ரதத்தில் எண்பது பிராயமான
வீரக் கிழவர் திருக்கோவலூர் மலையமான் இருந்தார். தண்ணீர்க் கரை ஓரத்தில் குதிரை
மேலிருந்த வண்ணம் ஆதித்த கரிகாலன் திரும்பி அவரைப் பார்த்தான்.
பக்க
தலைப்பு
இரண்டாம் அத்தியாயம் பாட்டனும் பேரனும்
பின்னால் ரதத்தில் வந்த கிழவர் சமிக்ஞை செய்யவே, ஆதித்த
கரிகாலன் குதிரையைத் திருப்பிக் கொண்டு அவர் வீற்றிருந்த ரதத்தின் அருகில்
சென்றான்.
"குழந்தாய்! கரிகாலா! நான் இவ்விடத்தில் உங்களிடம் விடை பெற்றுக்
கொண்டு திருக்கோவலூர் போக எண்ணுகிறேன். போவதற்கு முன்னால் உன்னிடம் சில முக்கிய
விஷயங்கள் சொல்ல வேண்டும். சற்றுக் குதிரையிலிருந்து இறங்கி அந்த அரச
மரத்தடியிலுள்ள மேடைக்கு வா!" என்றார்.
"அப்படியே ஆகட்டும், தாத்தா!" என்று
ஆதித்த கரிகாலன் குதிரையிலிருந்து கீழே குதித்தான்.
கிழவரும்
ரதத்திலிருந்து இறங்கினார்.
இருவரும் அரசமரத்தடி மேடைக்குச் சென்றார்கள்.
அப்போது பார்த்திபேந்திரன், கந்தமாறனைப் பார்த்து, "நல்ல வேளையாய்ப்
போயிற்று. இந்தக் கிழவர் விடேன் தொடேன் என்று நம்முடன் நெடுகிலும் வந்து விடுவாரோ
எனப் பயந்து கொண்டிருந்தேன்" என்றான்.
"அப்படித் தொடர்ந்து வந்தால் இவரை
வெள்ளாற்றின் பிரவாகத்தில் தள்ளி முழுக அடித்து விடுவது என்று நான்
எண்ணியிருந்தேன்!" என்றான் கந்தமாறன்.
இருவரும் தங்கள் பேச்சில் தாங்களே
சிரித்து மகிழ்ந்தார்கள்.
ஆதித்த கரிகாலனைப் பார்த்து மலைநாடு உடையாராகிய
திருக்கோவலூர் மலையமான் சொல்லலுற்றார்:-
"ஆதித்தா! இன்றைக்கு இருபத்து
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நீ பிறந்தாய்! திருக்கோவலூரில் என்னுடைய
அரண்மனையிலேதான் பிறந்தாய்! அச்சமயம் நடந்த கொண்டாட்டங்கள் நேற்று நடந்தது போல்
எனக்கு ஞாபகமிருக்கின்றன. உன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களும், என்னுடைய குடியைச்
சேர்ந்தவர்களும், சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் சேர்ந்த சிற்றரசர்கள் பலரும்
வந்திருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் சேர்ந்த வீரர்கள் முப்பதினாயிரம் பேர்
வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நடந்த விருந்தின் விமரிசையைச் சொல்லி
முடியாது. உன் தந்தையின் பட்டாபிஷேக வைபவத்தின்போது கூட அத்தகைய விருந்துகளும்
கோலாகலங்களும் நடைபெறவில்லை. என் பொக்கிஷத்தில் என் முன்னோர்கள் காலத்திலிருந்து
நூறு வருஷங்களாகச் சேர்த்து வைத்திருந்த பொருள் அவ்வளவும் அந்த மூன்று நாள்
கொண்டாட்டத்தில் தீர்ந்து போய் விட்டது!
அச்சமயம் உன்னுடைய கொள்ளுப்
பாட்டனாராகிய பராந்தக சக்கரவர்த்தியே திருக்கோவலூருக்கு வந்திருந்தார். உன் பெரிய
பாட்டனார் கண்டராதித்தரும், உன் தந்தை சுந்தர சோழரும் வந்திருந்தார்கள். ஆண்
குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் அவர்கள் அனைவரும் அடைந்த ஆனந்தத்துக்கு
அளவேயில்லை. சோழ குலத்தை விளங்க வைப்பதற்கு நீ பிறந்து விட்டாய் என்று குதூகலம்
அடைந்தார்கள். உன் பாட்டனின் மூத்த தமையன்மார்களுக்கு அதுவரையில் சந்ததியில்லை.
அரிஞ்சயனுக்கும் உன் தகப்பன் ஒரே மகனாக விளங்கினான். அவன் உன் பிராயத்தில்
மன்மதனையொத்த அழகுடன் விளங்கினான், சோழ குலத்திலோ அல்லது தமிழகத்துச் சிற்றரசர்
வம்சத்திலோ அவ்வளவு அழகுடைய பிள்ளையை யாரும் அதற்கு முன் கண்டதில்லை. இதனால் உன்
தந்தைக்குச் சில சங்கடங்களும் நேர்ந்தன. குடும்பத்தார் அனைவருக்கும் அவன் செல்லப்
பிள்ளையாக இருந்தான். அரண்மனைப் பெண்டிர்கள் அவனுக்குப் பெண் வேடம் போட்டுப்
பார்த்து மகிழ்ந்தார்கள். 'இவன் மட்டும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால்?' என்று
பேசிப்பேசிப் பூரித்தார்கள். உன் தந்தைக்குத் தங்கள் பெண்ணைக் கொடுப்பதற்கு இலங்கை
முதலாவது விந்திய பர்வதம் வரையில் உள்ள மன்னாதி மன்னர்களும், சிற்றரசர்களும் தவம்
கிடந்தார்கள். அர்ச்சுனனையும் மன்மதனையும் நிகர்த்த அழகன் அவன் என்பதுடன் சோழ
சிங்காதனத்துக்கு உரியவன் என்ற எண்ணத்தினாலும் அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தார்கள்.
உன் தந்தையை மருமகனாகப் பெறும்பேறு கடைசியில் எனக்குக் கிடைத்தது.
"எங்கள்
வம்சத்தில் நாங்கள் ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும் மேனி அழகுக்குப் பெயர் போனவர்கள்
அல்ல. ஆண் பிள்ளைகள் உடம்பில் எத்தனைகெத்தனை போர்க் காயங்களைப் பெறுகிறோமோ
அவ்வளவுக்கு அழகுடையவர்களாக எண்ணிக் கொள்வோம். எங்கள் குலத்துப் பெண்களுக்குக்
கற்பும், குணமும் தான் அழகும், ஆபரணமும். உன் தந்தைக்கு என் மகளைக் கலியாணம்
செய்வதென்று தீர்மானித்தபோது, மலையமானாடு முழுதும் அல்லோல கல்லோலப்பட்டது.
அவ்வளவுக்குத் தமிழகத்துச் சிற்றரசர்கள் எல்லாரும் அசூயை கொண்டார்கள்; அதை நான்
பொருட்படுத்தவில்லை. மூன்று உலகம் பிரமிக்கும்படியாக உன் பெற்றோர்களின் திருமணம்
தஞ்சையில் நடந்தது.என்றாலும் அப்போது நடந்த கொண்டாட்டத்தைக் காட்டிலும் நீ பிறந்த
போது திருக்கோவலூரில் நடந்த கொண்டாட்டந்தான் அதிகக் குதூகலமாயிருந்தது. உனக்கு என்ன
பெயர் வைப்பது என்பது பற்றிக் குதூகலமான சர்ச்சை நடந்தது. சிலர் உன் குலத்து
முன்னோரில் மிகப் புகழ் பெற்ற கரிகால் வளவன் பெயரை இடவேண்டும் என்றார்கள். நானும்
இன்னும் சிலரும் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்தியர் பெயரைத்தான் வைக்க வேண்டும்
என்று வற்புறுத்தினோம். கடைசியில் இரண்டையும் சேர்த்து 'ஆதித்த கரிகாலன்' என்று
உனக்கு நாமகரணம் செய்தார்கள்.
அதோ பார்! ஆதித்தா! திருநாவலூரின் கோவில்
சிகரம் தெரிகிறது. நம்பி ஆரூரர் சுந்தரமூர்த்தி அடிகள் பிறந்த ஸ்தலம் அது. அங்கே,
இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்ய
சோழர் முகாம் செய்திருந்தார். கதைகளிலும், காவியங்களிலும் வரும் எத்தனையோ
வீரர்களைப் பற்றிக் கேட்டறிந்திருக்கிறேன். இந்த வீரத் தமிழகத்தில் எவ்வளவோ
வீரர்களைப் பார்த்துமிருக்கிறேன். ஆனால் இராஜாதித்யரைப் போன்ற இன்னொரு வீரரைப்
பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. போர்க்களத்தில் அவர் போர் செய்வதைப் பார்த்தவர்கள்
யாராயிருந்தாலும், அப்படித்தான் சொல்லுவார்கள்.
ஒரு மாபெரும் சைன்யத்தைத்
திரட்டிக் கொண்டு வடநாட்டின் மீது படையெடுத்துச் செல்ல அவர் இங்கே ஆயத்தம் செய்து
கொண்டிருந்தார். இரட்டை மண்டலத்து அரசனாகிய கன்னரதேவனை முறியடித்து, மானியகேடம்
என்னும் அவனுடைய தலைநகரைத் தரைமட்டமாக்க வேண்டும் என்று அவர் உறுதி கொண்டிருந்தார்.
முன்னொரு காலத்தில் பல்லவ குலத்து மாமல்ல சக்கரவர்த்தி வாதாபி நகரை அழித்தது போல்,
மானியகேட நகரை அடியோடு அழித்தால்தான் இரட்டை மண்டலத்தாரின் கொட்டம் அடங்கும்,
என்றும் தானும் மாமல்லரைப்போல் புகழ் பெறலாம் என்றும் இராஜாதித்யர் எண்ணினார்.
அதற்கு வேண்டிய மாபெரும் சைன்யத்தைத் திரட்டுவதென்றால் இலேசான காரியமா? மாமல்லர்
ஏழு வருஷ காலம் படை திரட்டியதாகச் சொல்லுவார்கள். அவ்வளவு காலம் தனக்கு
வேண்டியதில்லையென்றும் மூன்று அல்லது நாலு ஆண்டுகள் போதும் என்றும் இராஜாதித்யர்
கூறினார். படை திரட்டிச் சேர்ப்பதற்கும், திரட்டிய படைகளுக்குப் போர்ப் பயிற்சி
தருவதற்கும், தகுந்த பிரதேசம் இந்தக் கெடிலம் ஆற்றுக்கும் தென்பெண்ணை நதிக்கும்
இடைப்பட்ட நாடுதான் என்று தேர்ந்தெடுத்தார்.
ஆதித்தா! அந்த நாளில் இந்த இரு
நதிகளுக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை நீ பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அந்தக்
காட்சிகளைப் பார்த்தவர்களோ, உயிர் உள்ள வரையில் அதை மறக்க மாட்டார்கள்.
திருநாவலூரில் இராஜாதித்யர் முப்பதினாயிரம் வீரர்களுடன் தங்கியிருந்தார். பெண்ணை
ஆற்றங்கரையில் முடியூரில் சேர நாட்டுச் சிற்றரசன் வெள்ளன் குமரன் இருபதினாயிரம்
வீரர்களுடன் முகாம் செய்திருந்தான். உன் பாட்டன் அரிஞ்சயன் என்னுடன்
திருக்கோவலூரில் இருந்தான். நானும், அரிஞ்சயனும் ஐம்பதினாயிரம் வீரர்களை ஆயத்தம்
செய்தோம். இன்னும் கொடும்பாளூர்ப் பெரிய வேளான், இன்று சோழ நாட்டுக்குச் சனியனாக
முளைத்திருக்கும் பழுவேட்டரையன், கடம்பூர் சம்புவரையன், இந்தத் திருமுனைப்பாடி
நாட்டின் சிற்றரசனாக முனையதரையன், மழநாட்டு மழவரையன், குன்றத்தூர்க் கிழான்,
வைதும்பராயன் முதலியவர்கள் தத்தம் படைகளுடன் இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில்
தங்கியிருந்தார்கள். யானைப் படைகளும், குதிரைப் படைகளும் தெரிந்த கைக்கோளரின்
மூன்று கைப் படைகளும் இங்கே முகாம் போட்டிருந்தன. இப்படித் தங்கியிருந்த
படைகளுக்குள்ளே அடிக்கடி பயிற்சிப் போர்கள் நடக்கும். யானைகளோடு யானைகள் மோதும்போது
பூகம்பம் வந்து விட்டதாகத் தோன்றும். குதிரைப் படைகளின் அணிவகுப்புகள் வேல் பிடித்த
வீரர்களுடன் பாய்ந்து செல்லுங்கால் எழும் சத்தம் பிரளய கால சமுத்திரம் பொங்கிவருவது
போலிருக்கும். வீரர்கள் வில்லுகளிலிருந்து அம்புகள் விட்டுப் பழகிக் கொள்ளும்போது
அந்தச் சரமாரியினால் வானமே மறைந்துவிடும். எதிரிப் படைகளைத் தாக்குவதற்காக
ஆயிரமாயிரம் வீரர்கள் 'நாவலோ நாவல்' என்று ஏககாலத்தில் கர்ஜித்துக் கொண்டு
கிளம்பிப் பாயும் போது உலகத்தின் முடிவு நெருங்கி விட்டதாகவே தோன்றும். இதையெல்லாம்
வேடிக்கை பார்ப்பதற்குத் திரள் திரளாக ஜனங்கள் வருவார்கள்.
இந்தத்
திருமுனைப்பாடி நாட்டிலும் நடு நாட்டிலும் உள்ள ஜனங்கள் மிக நல்லவர்கள் அதோடு வீரம்
மிகுந்தவர்கள். இங்கே படை திரண்டிருந்தபோது அவர்களுடைய விவசாயத்துக்குப் பெரும்
குந்தகங்கள் நேர்ந்தன. அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இத்தகைய மக்களுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே இராஜாதித்யர் இந்த இரண்டு நாட்டிலும் பல ஏரிகள்
தோண்டுவித்தார். கொள்ளிடத்திலிருந்து புதிய ஆறு வெட்டிக் கொண்டு வந்து வீர
நாராயணபுரத்து ஏரியில் நிரப்புவதற்கும் ஏற்பாடு செய்தார். ஆதித்தா! அந்த ஏரியின்
வளத்தினால் பெருநன்மை அடைந்தவன் கடம்பூர் சம்புவரையன். அவன் அன்றைக்கு
இராஜாதித்யரின் அடிபணிந்து நின்ற நிலையையும் இன்று அடைந்திருக்கும் செல்வச்
செருக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்குப் பெரு வியப்பு உண்டாகிறது!.."
ஆதித்த கரிகாலன் குறுக்கிட்டு, "தாத்தா! சம்புவரையர் செருக்கைப் பற்றித்
தங்களுக்கு என்ன கவலை? தக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள். இந்தக்
கெடிலக் கரையில் திரட்டிய மாபெரும் சைனியம் எப்போது இங்கிருந்து புறப்பட்டது?
அவ்வளவு முன்னேற்பாடுகள் செய்திருந்தும், என் பெரிய பாட்டனார் அவ்வளவு பெரிய மகா
வீரராயிருந்தும், ஏன் நம் படைகள் தக்கோலத்தில் தோல்வியுற்றன? தாங்களும் அந்தப்
போரில் கலந்து போரிட்டவர் அல்லவா? ஆகையால் நேரில் பார்த்துத் தெரிந்து
கொண்டிருப்பீர்களே?" என்றான்.
"ஆம், நானும் அந்தப் போர்க்களத்தில்
இருந்தேன் அதைப் பற்றித்தான் உனக்குச் சொல்லப் போகிறேன்."
"இராஜாதித்யர்
இங்கே பல வகைப் படைகள் திரட்டித் தூர தேசங்களுக்குச் சென்று போர் செய்வதற்குப்
பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அல்லவா? சில காரணங்களினால் உத்தேசித்திருந்த
காலத்துக்குள் அவர் புறப்பட முடியவில்லை. இலங்கையில் மறுபடியும் போர் மூண்டதாகச்
செய்தி வந்தது.அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு மேலும் படைகள் அனுப்ப வேண்டியிருந்தது.
தெற்கே ஒரு பகைவனை வைத்துக் கொண்டு வடக்கே நெடுந்தூரம் சோழ நாட்டின் முக்கிய சேனா
வீரர்களும், தளபதிகளும் போவதைச் சக்கரவர்த்தி விரும்பவில்லை. 'இலங்கைப் போர்
முடிந்ததாகச் செய்தி வந்த பிறகு புறப்படலாம்' என்று கூறி வந்தார். இராஜாதித்யரும்
தந்தையின் வார்த்தையைத் தட்ட முடியாமல் பொறுமையுடன் காத்திருந்தார். ஆனால்
பகைவர்கள் அவ்விதம் காத்திருக்க இணங்கவில்லை. இரட்டை மண்டலச் சக்கரவர்த்தி
கன்னரதேவனும் அதே சமயத்தில் சோழ நாட்டின் மீது படை எடுப்பதற்காகப் பெரிய சைன்யம்
சேர்த்துக் கொண்டு வந்தான். அந்த மாபெரும் சைன்யத்துடன் அவன் தெற்கு நோக்கிப்
புறப்பட்டு விட்டான். கங்க நாட்டு மன்னன் பூதுகனும், தன் பெரும் படையுடன்
கன்னரதேவனோடு சேர்ந்து கொண்டான். வட கடலும் தென் கடலும் ஒன்று சேர்ந்தாற்போல்
இரட்டை மண்டல சைன்யமும், கங்க நாட்டுப் பூதுகன் சைன்யமும் சேர்ந்து ஒரு மகா
சமுத்திரமாகி முன்னேறி வந்தது. அந்தச் சமுத்திரத்தில் யானைகளாகிய திமிங்கிலங்கள்
ஆயிரக்கணக்கிலும் குதிரைகளாகிய மகர மீன்கள் பதினாயிரக்கணக்கிலும் இருந்தன. பிரளய
காலத்தில் ஏழு கடலும் சேர்ந்து பொங்குவது போல் பொங்கி முன்னேறி வந்த அந்தச் சேனா
சமுத்திரம் தென்னாட்டை அடியோடு மூழ்க அடித்துவிடும் என்று தோன்றியது. அந்தச்
சைன்யத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு முன்னால் வாயுவேக மனோவேகமாக
ஓடிவந்து அறிவித்த நம் ஒற்றர்கள் அவ்வாறு சொன்னார்கள்.
ஆனால் இதுவும் ஒரு
விதத்தில் நல்லதே என்று பராந்தக சக்கரவர்த்தி கூறினார். நம்முடைய சைன்யங்களைத்
தொலைதூரம் பிரயாணம் செய்யப் பண்ணி, பிரயாணக் களைப்புடன் பகைவர்களின் நாட்டில் எதிரி
சைன்யத்துடன் போர் புரியச் செய்வதைக் காட்டிலும் எதிரி சைன்யங்களை நமது
நாட்டுக்குச் சமீபமாக இழுத்து அவர்களை நாலாபுறமும் மடக்கி, அதம் செய்வதுதான் நல்ல
போர் முறை என்று சக்கரவர்த்தி கூறினார். எதிரி சைன்யம் வடவேங்கடம் வரை நெருங்கி
விட்டதென்று தெரிந்த பிறகுதான் பிரயாணப்படுவதற்கு அனுமதி கொடுத்தார்.
அனுமதி கிடைத்ததோ, இல்லையோ, இராஜாதித்யர் புறப்பட்டு விட்டார். மூன்று
லட்சம் காலாள் வீரர்களும், ஐம்பதினாயிரம் குதிரை வீரர்களும், பதினாயிரம் போர்
யானைகளும், இரண்டாயிரம் ரதங்களும், முந்நூற்றிருபது தளபதிகளும், முப்பத்திரண்டு
சிற்றரசர்களும் அப்பெரும் சைன்யத்தில் சேர்ந்து சென்றார்கள். அவர்களில் ஒருவனாகச்
செல்லும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. ஆனால் உயிர் பிழைத்துத் திரும்பி வந்த
துர்பாக்கியசாலியும் ஆனேன்.
மூன்று நாள் பிரயாணத்துக்குப் பிறகு காஞ்சிக்கு
வடக்கே இரண்டு காத தூரத்தில் தக்கோலம் என்னும் இடத்தில் நம் படைகளும் எதிரி
படைகளும் போர்க்களத்தில் சந்தித்தன!
ஆதித்தா! புராணங்களில்
தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் நடந்த யுத்தம் பற்றிக் கேட்டிருக்கிறோம்.
இராமராவண யுத்தம், பாண்டவர் - கௌரவர் யுத்தம் பற்றியும் அறிந்திருக்கிறோம்.
தக்கோலத்தில் நடந்த கோரயுத்தத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த யுத்தங்கள் எல்லாம்
அற்பமானவை என்றே சொல்லுவார்கள். நம்முடைய படைகளைக் காட்டிலும் எதிரிகளின் படைகள்
சுமார் இரண்டு மடங்கு அதிகமாயிருந்தன. ஐந்து லட்சம் வீரர்களும் முப்பதினாயிரம் போர்
யானைகளும் அச்சைன்யத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இருந்தால் என்ன? உன்னுடைய பெரிய
பாட்டனார் இராஜாதித்யரைப் போன்ற சேனாதிபதி அந்தச் சைன்யத்தில் இல்லை. ஆகையால் வீர
லஷ்மியும் ஜயலஷ்மியும் நம்முடைய பக்கத்திலேயே இருந்து வருவதாகத் தோன்றியது.
பத்து நாள் வரையில் யுத்தம் நடந்தது. இரு பக்கத்திலும் இறந்து போன
வீரர்களைக் கணக்கு எடுப்பது அசாத்தியமாயிற்று. போர்க்களங்களில் கரிய குன்றுகளைப்
போல் யானைகள் இறந்து விழுந்து கிடந்தன. இரு பக்கத்திலும் சேதம் அதிகமாயிருந்தாலும்,
எதிரிகளின் கட்சியே விரைவில் பலவீனமடைந்தது. இதற்குக் காரணம் என்னவென்பதை எதிரிகள்
கண்டு கொண்டார்கள். புலிக் கொடியைக் கம்பீரமாகப் பறக்க விட்டுக் கொண்டு
இராஜாதித்யரின் யானை போகுமிடமெல்லாம் ஜயலஷ்மியும் தொடர்ந்து போகிறாள் என்பதை
அறிந்து கொண்டார்கள். எங்கெங்கே நமது படையில் சோர்வு ஏற்படுகிறதாகத் தென்பட்டதோ,
அங்கங்கே இராஜாதித்யரின் யானை போய்ச் சேர்ந்தது. அந்த யானையையும் அதன் மீது
வீற்றிருந்த வீர புருஷரையும் பார்த்ததும் நம் வீரர்கள் சோர்வு நீங்கி மும்மடங்கு
பலம் பெற்று எதிரிகளைத் தாக்கினார்கள். இதையெல்லாம் பத்து நாளும் கவனித்து வந்த
பகைவர்கள் ஒரு படுபாதகமான சூழ்ச்சி செய்தார்கள். அது சூழ்ச்சி என்று பின்னால்தான்
தெரியவந்தது. சூழ்ச்சி செய்தவனும் அதை நிறைவேற்றி வைத்தவனும் கங்க மன்னன் பூதுகன்
தான். திடீரென்று அந்தப் பாதகன் தன் யானையின் மீது சமாதானக் கொடியைப் பறக்க
விட்டுக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு 'சரணம் சரணம்!'
என்று கூறிக் கொண்டு வந்தான். அச்சமயம் இராஜாதித்யரே சமீபத்தில் இருந்தார். புலிக்
கொடி பறந்த அவருடைய யானையின் அம்பாரியைப் பார்த்த பின்னரே பூதுகன் அவ்வாறு
செய்திருக்க வேண்டும். மகாவீரராகிய இராஜாதித்யர் இவ்வாறு ஒரு பகை மன்னன் 'சரணாகதி'
என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் மனம் இளகி விட்டார். இரட்டை மண்டலச்
சக்கரவர்த்தியே போரை நிறுத்த, சமாதானம் கோருகிறாரா அல்லது அவரைப் பிரிந்து பூதுகன்
மட்டும் நம்முடன் சேர வருகிறானா என்று தெரிந்து கொள்ள விரும்பினார். ஆகையால்
சங்கநாதம் செய்து தன்னைச் சுற்றி நின்ற மெய்க்காப்பாளரை விலகச் செய்தார். பூதுகன்
ஏறியிருந்த யானையைத் தாம் ஏறியிருந்த யானைக்கு அருகில் வரும்படி சமிக்ஞை செய்தார்.
பூதுகன் இராஜாதித்யரின் அருகில் வரும் வரையில் கைகூப்பிய வண்ணம் வந்தான். அவனுடைய
கண்களிலிருந்து கண்ணீர் பெருகியதையும் இராஜாதித்யர் பார்த்தார். இதனால் அவருடைய
மனம் இன்னும் இளகிவிட்டது.
'தொழுகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து' என்னும் தமிழ்நாட்டுப் பெரும் புலவரின் வாக்கு
அச்சமயம் இராஜாதித்யரின் ஞாபகத்தில் இருக்கவில்லை. கண்ணீரைக் கண்டு கரைந்து
விட்டார். இன்னும் சமீபமாகப் பூதுகனை வரவிட்டு, 'என்ன சேதி?' என்று கேட்டார்.
அதற்கு அவன் கூறிய மறுமொழி இராஜாதித்யரை அருவருப்புக் கொள்ளும்படி செய்தது. இரட்டை
மண்டலப் படைகளுக்குத் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து விட்டால் சரணாகதி
அடைந்துவிடும்படி கன்னர தேவனிடம் தான் கூறியதாயும், அவன் அதை மறுத்து விட்டபடியால்
தான் மட்டும் தனியே பிரிந்து வந்து சரணாகதி அடையத் தீர்மானித்ததாகவும் பூதுகன்
கூறினான். இதைக் கேட்டதும் இராஜாதித்யர் அவனைக் கடுமையாக நிந்தித்தார்.
அத்தகைய நீசனைத் தாம் தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்றும்,
திரும்பிப் போகும்படியும் கூறிக் கொண்டிருக்கும்போதே, பூதுகன் கண்மூடிக் கண்
திறக்கும் நேரத்தில் அந்தப் பயங்கரமான வஞ்சகச் செயலைப் புரிந்து விட்டான். மறைவாய்
வைத்திருந்த வில்லையும், அம்பையும் எடுத்து வில்லில் நாணேற்றி அம்பைப் பூட்டி எய்து
விட்டான். அந்தக் கொடிய விஷம் தோய்ந்த அம்பு எதிர்பாராத சமயத்தில் இராஜாதித்யரின்
மார்பில் பாய்ந்ததும் அவர் சாய்ந்தார். இப்படிப்பட்ட வஞ்சனையை யாரும்
எதிர்பார்க்கவில்லையாதலால் சுற்றிலும் நின்ற வீரர்கள் என்ன நேர்ந்தது என்பதையே
சிறிது நேரம் தெரிந்து கொள்ளவில்லை. இராஜாதித்யர் பூதுகனைத் திரும்பிப் போகும்படி
கட்டளையிட்டது மட்டும் அவர்கள் காதில் விழுந்தது. உடனே பூதுகன் தன் யானையை விரட்டி
அடித்துக் கொண்டு ஓடிப் போனான்!
இராஜாதித்யர் யானை மேலிருந்தபடியே
மரணமடைந்தார் என்ற செய்தி பரவியதும் நமது படையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும்
தனித்தனியே தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. அந்த மாபெரும் துயரத்தினால்
யுத்தத்தையே மறந்து விட்டார்கள். சிற்றரசர்கள், தளபதிகள், படை வீரர்கள் எல்லாருமே
செயல் இழந்து புலம்பத் தொடங்கி விட்டார்கள். அந்த நிலைமையில் பகைவர்களின் கை ஓங்கி
விட்டதில் ஆச்சரியம் இல்லையல்லவா? சிறிது நேரத்துக்கெல்லாம் நமது சைனியம் பின்
வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. ஓடுகிறவர்களைத் துரத்துவது எல்லாருக்குமே
எளிதுதானே? அப்படி ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்தான்! இந்தக் கெடில நதிக்கரை
வரையிலே கூடப் பகைவர்களின் சைனியம் வந்து விட்டது.இங்கே வந்த பிறகுதான் நாங்கள் சுய
உணர்வு பெற்றுத் திரும்பி நின்றோம். பகைவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நான்
திருக்கோவலூரிலிருந்து என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு போய் மேற்கே மலை
நாட்டில் இருக்கும் என்னுடைய கோட்டையில் விட்டேன். அந்த மலைச்சாரலிலேயே படைகளைத்
திரட்டினேன். இந்தக் கெடில நதி வரையில் வந்து விட்ட பகைவர்களை அவ்வப்போது தாக்கிக்
கொண்டு வந்தேன்.ஆயினும் அப்போது வந்த பகைவர்கள் பல வருஷ காலம் இந்தப் பகுதியை
விட்டுப் போகவில்லை. அங்குமிங்கும் தங்கித் தொல்லை கொடுத்துக்
கொண்டுதானிருந்தார்கள். காஞ்சி நகர் அவர்கள் வசத்திலே தான் இருந்தது. மூன்று
ஆண்டுகளுக்கு முன்னால் நீ வீரபாண்டியனை முறியடித்த பிறகு இந்தப் பக்கம் வந்துதான்
காஞ்சி நகரை மீட்டாய்..."
ஆதித்த கரிகாலன் மீண்டும் குறுக்கிட்டு, "தாத்தா!
இதெல்லாம் எனக்கு முன்னமே தெரிந்ததுதான்! ஆனால் தக்கோலப் போரைப் பற்றியும்
இராஜாதித்யர் வரலாற்றையும் எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு அலுப்பதில்லை. இப்போது
இராஜாதித்யரைப் பற்றி எனக்கு எதற்காக நினைப்பூட்டினீர்கள்? அதைச் சொல்லுங்கள்!"
என்றான்.
"குழந்தாய்! உன் பெரிய பாட்டனார் இராஜாதித்யர் சோழ சாம்ராஜ்யத்தை
இலங்கை முதலாவது கங்கை நதி வரையில் விஸ்தரிக்க ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை
நிறைவேறாமலே உயிர் நீத்தார். அவரைப் போன்ற மகாவீரன் என் பேரன் ஆதித்த கரிகாலன்
என்று நாடு நகரமெல்லாம் பேச்சாயிருக்கிறது. அவர் சாதிக்க நினைத்த காரியத்தை நீ
சாதிக்கப் போகிறாய் என்று இத்தமிழகமெங்கும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இராஜாதித்யரைப் போல் நீயும் வஞ்சத்திற்கு ஏமாந்து போகக்கூடாது என்பதற்காகவே
அவருடைய வரலாற்றை உனக்கு நினைவூட்டினேன்..."
"தாத்தா! என் பெரிய பாட்டனார்
போர்க்களத்தில் பகைவர்களின் வஞ்சனையினால் உயிரை இழந்தார். அதை இப்போது எனக்கு
எதற்காக நினைவூட்டுகிறீர்கள்? நான் போர்க்களத்துக்குப் போகவில்லையே? என்னை
வஞ்சிக்கக் கூடிய பகைவர்களின் மத்தியிலும் போகவில்லையே? என் தந்தையின் அத்யந்த
நண்பர்களையல்லவா பார்க்கப் போகிறேன்? அவர்கள் என்னை எந்த விதத்தில், எதற்காக
வஞ்சிக்கப் போகிறார்கள்?" என்றான் ஆதித்த கரிகாலன்.
"கேள், கரிகாலா!
எதிரிகள் தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் கொடிய ஆயுதம் இருக்கக்கூடும் என்று கூறிய
திருவள்ளுவர் பெருமான், வௌிப்பகையைக் காட்டிலும் உட்பகை கொடியது என்றும்
கூறியிருக்கிறார்.
'வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர்
தொடர்பு' வாளைப் போல் வௌிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயம்
வேண்டியதில்லை. சிநேகிதர்களைப் போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும் என்று
சொல்லியிருக்கிறார். குழந்தாய்! கேளிரைப் போல் நடிக்கும் பகைவர்களின் மத்தியில்
இப்போது போகிறாய். நான் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் நீ போகிறாய். ஏதோ ராஜ்யம்
சம்பந்தமாகத் தகராறு நேர்ந்து விட்டதாகவும் அதைத் தீர்த்து வைக்கப் போவதாகவும்
உன்னை அழைத்திருக்கிறார்கள். சம்புவரையன் மகள் ஒருத்தியை உன் கழுத்தில் கட்டிவிட
உத்தேசித்து உன்னை அழைத்திருப்பதாகவும் அறிகிறேன். ஆனால் அவர்களுடைய உண்மையான
நோக்கம் இன்னதென்பது எனக்கும் தெரியாது; நீயும் அறிந்திருக்க முடியாது. உனக்குப்
பெண் கொடுப்பதற்கு இந்தப் பாரத தேசத்தில் மன்னர்கள் பலர் காத்திருக்கிறார்கள்.
இந்தச் சம்புவரையன் மகள் தான் வேண்டுமென்பதில்லை. இராஜ்யத்தை உனக்குப் பாதி என்றும்
மதுராந்தகனுக்குப் பாதி என்றும் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்விக்கப்
போகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதில் என்ன சூது இருக்குமோ, சூழ்ச்சி
இருக்குமோ, எனக்குத் தெரியாது. எது எப்படியானாலும், நான் உடனே திருக்கோவலூருக்குச்
சென்று என்னுடைய பாதுகாப்புப் படைகளையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து
வெள்ளாற்றங்கரையில் தங்கியிருப்பேன். சம்புவரையர் அரண்மனையில் இருக்கும்போது உனக்கு
ஏதேனும் சந்தேகம் தோன்றினால் எனக்கு உடனே சொல்லி அனுப்பு!..."
இச்சமயம்
ஆதித்த கரிகாலனுடைய கவனம் தன் பக்கம் இல்லை என்பதையும் வேறு பக்கம்
திரும்பியிருக்கிறதென்பதையும் மலையமான் கண்டார். "தாத்தா! அதோ பாருங்கள்!" என்று
ஆதித்த கரிகாலன் கலக்கத்துடன் கூறிய வார்த்தைகளை அந்த வீரக் கிழவர் கேட்டு, அந்தத்
திசையை உற்று நோக்கினார்.
பக்க
தலைப்பு
மூன்றாம் அத்தியாயம் பருந்தும்புறாவும்
ஆதித்த கரிகாலன் சுட்டிக்காடிய திசையில் ஆற்றங்கரை மண்டபம்
ஒன்று இருந்தது. அது கல் வேலையினால் ஆன மண்டபம். வழிப்போக்கர்கள் வெய்யிலிலும்
மழையிலும் தங்குவதற்காக யாரோ தர்மவான் அதைக் கட்டியிருக்க வேண்டும். அந்த மண்டபம்
வெய்யிலிலும் மழையிலும் வெகு காலம் அடிப்பட்டு முதுமையின் அறிகுறிகளை காட்டிக்
கொண்டிருந்தது, மண்டபத்தின் முனைகளில் சிற்ப வேலைப்பாடு உடைய உருவங்கள் சில
காணப்பட்டன. அவை இன்னவை என்று கிழவராகிய மலையமானுக்குத் தெரியவில்லை.
"பார்த்தீர்களா, தாத்தா!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"குழந்தாய்!
அந்த மண்டபத்தைத்தானே சொல்லுகிறாய்? அதில் வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே?
மண்டபமும் வெறுமையாகத்தான் இருக்கிறது, அதில் யாரும் இருப்பதாகக் காணவில்லையே!"
என்றார்.
"தாத்தா! உங்களுக்கு வயதாகிவிட்டது என்று இப்போது தான் எனக்கு
நன்றாய்த் தெரிகிறது. அதனால் கண் பார்வை குன்றியிருக்கிறது. அதோ பாருங்கள்! ஒரு
பெரிய இராஜாளி! எத்தனை பெரியது? அதன் சிறகுகள் எவ்வளவு விசாலம்? கொடுமை! கொடுமை!
அது தன் கால்களில் ஒரு சின்னஞ்சிறு புறாவைப் பிடித்துக் கொண்டிருக்கிறதே;
தெரியவில்லையா? இராஜாளியின் கூரிய நகங்கள் கிழித்துப் புறாவின் இரத்தம்
சிந்துகிறதே, தெரியவில்லையா? கடவுளே, இது என்ன விந்தை! அதோ இன்னொரு புறாவைப்
பாருங்கள், தாத்தா! அந்தப் பயங்கரமான இராஜாளியின் அருகில் வட்டமிடுகிறது! அது
இராஜாளியிடம் எப்படிக் கெஞ்சுகிறது? இராஜாளியின் கால்களில் அகப்பட்டுக்
கொண்டிருக்கும் புறா அதனுடைய காதலனாக இருக்க வேண்டும்! காதலனுக்கு உயிர்ப்பிச்சை
கொடுக்கும்படி அது கெஞ்சுகிறது! தாத்தா! அந்தப் புறா கெஞ்சுகிறதா? அல்லது
இராஜாளியிடம் சண்டைக்குப் போகிறதா? இறகை அடித்துக் கொள்வதைப் பார்த்தால்
சண்டைக்குப் போவதாகவே தோன்றுகிறது. கடவுளே! அந்தப் பெண் புறாவுக்கு என்ன தைரியம்
பாருங்கள்! இராஜாளியுடன் சண்டைக்குப் போகிறது! காதலனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக
அந்தப் பயங்கர ராட்சதனுடன் போராடப் போகிறது! தாத்தா! இராஜாளி மனம் இரங்கும் என்று
நினைக்கிறீர்களா? இரங்காது! இரங்காது! ஒருநாளும் இரங்காது! இம்மாதிரி எத்தனையோ
புறாக்களை அது கொன்று தின்று கொழுத்துக் கிடக்கிறது! சண்டாள இராஜாளியே! இதோ உன்னைக்
கொன்று போடுகிறேன்!" என்று கூறிக் கொண்டே ஆதித்த கரிகாலன் பக்கத்தில் கிடந்த ஒரு
கூழாங்கல்லை எடுத்து வீசி எறிந்தான். அந்தக் கூழாங்கல் மண்டபத்தை நோக்கிச் சென்று
அதன் ஒரு முனையில் பட்டுவிட்டுக் கீழே விழுந்தது.
ஆதித்த கரிகாலன்,
"ராட்சதனே! உனக்கு நன்றாய் வேண்டும்!" என்று சொல்லிவிட்டு, இடி இடி என்று
பயங்கரமாகச் சிரித்தான்.
பேரப் பிள்ளையின் சித்த சுவாதீனத்தைப் பற்றி
ஏற்கனவே கிழவருக்குச் சிறிது சந்தேகம் இருந்தது அது இப்போது இன்னும் அதிகமாயிற்று.
"தாத்தா! ஏன் என்னை இப்படி வெறித்துப் பார்க்கிறீர்கள்? மண்டபத்தின்
அருகில் போய்ப் பாருங்கள்" என்றான் கரிகாலன்.
அவ்விதமே மலையமான்
மண்டபத்தைச் சற்று நெருங்கிச் சென்று கரிகாலனின் கல் விழுந்த இடத்தை உற்றுப்
பார்த்தார். அங்கே ஒரு சிற்பம் காணப்பட்டது. அந்தச் சிற்பத்தில் இராஜாளி ஒன்று தன்
கால் நகங்களில் ஒரு புறாவைக் கொத்தித் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், இன்னொரு
புறா அந்த இராஜாளியுடன் பாயப் போவது போலவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
மலையமான் திரும்பி வந்து, "குழந்தாய்! எனக்கு வயதாகி விட்டது என்பது
உண்மைதான்! கண் பார்வை முன் போல் துல்லியமாக இல்லை. அருகில் சென்று உற்றுப் பார்த்த
பிறகு தான் தெரிந்தது நல்ல சிற்ப வேலை!" என்றார்.
"நல்ல சிற்ப வேலையா?
சிற்ப அற்புதம் என்று சொல்லுங்கள் தாத்தா! மகேந்திரவர்மர் - மாமல்லர் காலத்துச்
சிற்ப சக்கரவர்த்தி யாரோ ஒருவன் இதையும் செய்திருக்க வேண்டும். முதலில் பார்த்ததும்
உண்மையாகவே நடப்பது போலவே எனக்குத் தோன்றிவிட்டது!" என்றான் கரிகாலன்.
"ஆதித்தா! அற்புதம் அந்தக் கல்லிலே மட்டும் இல்லை! உன் கண்ணிலும்
இருக்கிறது; உன் மனத்திற்குள்ளேயும் இருக்கிறது. இந்த வழியாக எவ்வளவோ பிரயாணிகள்
தினந்தோறும் போகிறார்கள். அவர்களில் முக்கால்வாசிப் பேர் இந்தச் சிற்ப அற்புதத்தைக்
கவனித்துக் கூட இருக்க மாட்டார்கள். மற்றும் பலர் பார்த்தும் பார்க்காதது போலவே
போய்விடுவார்கள். உன்னைப் போல் ஒரு சிலர் தான் ஒரு சிற்பத்தைப் பார்த்து இவ்வளவு
ஆச்சரியப்படுவார்கள்!..."
"நான் ஆச்சரியப்படவில்லை, தாத்தா!
கோபப்படுகிறேன். அந்த சிற்பத்தை இப்போதே இடித்துத் தள்ளிவிட வேண்டுமென்று எனக்கு
ஆத்திரம் உண்டாகிறது. இவ்வளவு கொடூரமான சிற்பத்தை அமைத்தவனை அதிகமாகப் புகழ்ந்து
பாராட்டுவது கூட எனக்குப் பிடிக்கவில்லை!"
"கரிகாலா! இது என்ன விந்தை?
உன்னுடைய வைர நெஞ்சு எப்போது இவ்வளவு இளக்கம் கொடுத்தது? இராஜாளி புறாவைக் கொன்று
தின்பது அதனுடைய இயற்கை. சிங்கராஜா ஆட்டினிடம் இரக்கம் கொள்ள ஆரம்பித்தால் அது
சிங்கராஜா அல்ல; அதுவும் ஆடாகத்தான் போய்விடும். சிம்மாசனத்தில் வீற்றிருந்து அரசு
புரிய ஆசைப்படுகிறவர்கள் பகைவர்களையும் சதிகாரர்களையும் கொன்றுதான் ஆக வேண்டும்.
சக்கரவர்த்தியாயிருந்து உலகை ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவர்கள் பகையரசர்களைக்
கொன்றுதான் தீரவேண்டும். இராஜாளி புறாவைக் கொல்லாவிட்டால், அது இராஜாளியாயிருக்க
முடியுமா? இதைப் பற்றி ஏன் உனக்கு இவ்வளவு கலக்கம்?" என்றார் மலையமான்.
"தாத்தா! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் அந்தப் பெண் புறா அப்படித்
தவிப்பதைப் பார்த்த பிறகு இராஜாளிக்கு இரக்கம் வர வேண்டாமா? பெண்ணுக்கு இரங்கி ஆணை
விடுதலை செய்ய வேண்டாமா? ஐயா! நீங்களே சொல்லுங்கள், உங்கள் பகைவன் ஒருவனை நீங்கள்
கொல்லப் போகும் சமயத்தில் அவனுடைய காதலி குறுக்கே வந்து புருஷனுக்கு உயிர்ப்பிச்சை
கேட்டால் என்ன செய்வீர்கள்? அப்போது உங்கள் மனம் இரங்காமலிருக்குமா..?" என்று
கரிகாலன் கேட்டான்.
"அப்படி ஒரு பெண் குறுக்கே வந்தால் அவளை என் இடது
காலினால் உதைத்துவிட்டு என் பகைவனைக் கொல்லுவேன். கரிகாலா! அதைப் பற்றிச் சந்தேகமே
இல்லை. பகைவர்கள் 'தொழுத கையினில்' ஆயுதம் வைத்திருப்பார்கள் என்றும், அவர்கள்
'அழுத கண்ணீரிலும்' ஆயுதம் மறைந்திருக்கும் என்றும் வள்ளுவர் கூறியிருக்கிறார்.
ஆண்களின் கண்ணீரைக் காட்டிலும் பெண்களின் கண்ணீர் அபாயமானது. ஏனெனில், பெண்களின்
கண்ணீருக்கு இளகச் செய்யும் சக்தி அதிகம் உண்டு. அப்படி மனத்தை இளகவிட்டு
விடுகிறவனால் இவ்வுலகில் பெரிய காரியம் எதையும் செய்ய முடியாது அவன் பெண்களிலும்
கேடு கெட்டவனாவான்!"
"தாத்தா! இது என்ன? பெண்களைப் பற்றி ஏன் நீங்கள்
இவ்வளவு குறைவாகப் பேசுகிறீர்கள்? பெண்களைப் பற்றிக் குறைவாய்ப் பேசுவது என்
தாயாரையும் குறைவுபடுத்துவதாகாதா?"
"குழந்தாய்! கேள்! உன் தாயாரிடம் நான்
வைத்திருந்த அன்புக்கு இந்த உலகத்தில் இணை ஒன்றுமே இல்லை. எனக்கு ஆறு பிள்ளைகள்
பிறந்தார்கள். பீமனையும், அர்ச்சுனனையும் ஒத்த வீரர்களாய் வளர்ந்தார்கள். அவ்வளவு
பேரையும் யுத்தகளத்தில் பலி கொடுத்துவிட்டேன். அவர்கள் இறந்த செய்தி வந்தபோதெல்லாம்
நான் வருத்தப்படவில்லை. ஆனால் உன் தாயாரை மணம் செய்து கொடுத்து அனுப்பி வைத்தபோது
அவள் சாம்ராஜ்ய சிங்காதனத்தில் அமரப் போகிறாள் என்று தெரிந்திருந்தும் என் மனம்
அடைந்த வேதனையைச் சொல்லி முடியாது. ஆனால் அந்த வேதனையை வௌிப்படையாகக் காட்டிக்
கொண்டேனா? இல்லை! அவளிடந்தான் வௌியிட்டேனா? அதுவும் இல்லை. உன் தாயை மணம் செய்து
கொடுப்பதற்கு முதலாவது நாள் அவளைத் தனியாக அழைத்து என்ன சொன்னேன்? கேள், கரிகாலா!
'மகளே! மாநிலம் புரக்கப் போகும் மன்னனை நீ மணந்து கொள்ளப் போகிறாய்! அதற்காகவும் நீ
கர்வம் அடையாதே! அவ்வளவு புகழ் வாய்ந்த கணவனை மணந்து கொள்வதினால் உனக்குக்
கஷ்டந்தான் அதிகமாயிருக்கும். உன் அரண்மனையில் பணி செய்யும் பணிப் பெண்கள் பலரும்
உன்னைக் காட்டிலும் சந்தோஷமாயிருப்பார்கள். துக்கப்படுவதற்கும் வேதனைப்படுவதற்கும்
உன்னை நீ ஆயத்தம் செய்து கொள். உனக்குக் குழந்தைகள் பிறக்காவிட்டால் உன் புருஷன்
வேறு ஸ்திரீகளை கட்டாயம் மணந்து கொள்வான். அதை நினைத்து நீ வேதனைப்படக் கூடாது.
உனக்கு மக்கள் பிறந்தால் அவர்களை வீர மக்களாய் நீ வளர்க்க வேண்டும். அவர்கள்
போர்க்களத்தில் உயிர் விட்டதாகச் செய்தி வந்தால் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட
விடக்கூடாது. உன் கணவன் சந்தோஷமாயிருந்தால் நீயும் சந்தோஷமாயிரு! உன் புருஷன்
துக்கப்பட்டால் நீ அவனைச் சந்தோஷப்படுத்தப் பார்! உன் பதி நோய்ப்பட்டால் நீ
அவனுக்குப் பணிவிடை செய்! உன் கணவன் இறந்தால் நீயும் உடன்கட்டை ஏறிவிடு! உன்
நெஞ்சில் உதிரம் கொட்டினாலும் உன் கண்களில் மட்டும் கண்ணீர் சொட்டக் கூடாது!
மலையமான் வம்சத்தில் பெண்களுடைய குலாச்சாரம் இது!' என்று இவ்விதம் உன் அன்னைக்குப்
புத்திமதி கூறினேன். அம்மாதிரியே உன் அன்னை இன்று வரை நடந்து வருகிறாள்; நடத்தி
வருகிறாள். கரிகாலா! உன்னையும் உன் சகோதரனையும் இணையில்லாத வீரர்களாக வளர்த்து
வந்திருக்கிறாள். உன் தந்தை நோய்ப்பட்ட பின்னர் இரவு பகல் அவர் பக்கத்திலிருந்து
அவளே எல்லாப் பணிவிடைகளையும் செய்து வருகிறாள். உன் அன்னையை என் மகளாகப் பெற்றதை
நினைக்கும்போதெல்லாம் என் தோள்கள் பூரிக்கின்றன!" என்றார் மலையமான்.
"தாத்தா! என் தாயை நினைக்கும்போதெல்லாம் நான் அடையும் பெருமிதத்துக்கும்
அளவில்லை. ஆனால் ஒன்று கேட்கிறேன் சொல்லுங்கள்! என் தந்தையின் கொடிய பகைவன் ஒருவன்
அவரைக் கொல்லுவதற்குக் கத்தியை ஓங்கிக் கொண்டு வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். என்
தாயார் அப்பொழுது என்ன செய்வாள்? முன்னால் நின்று கண்ணீர் பெருக்கிக் கணவனைக்
காப்பாற்றும்படி அப்பகைவனை வேண்டிக் கொள்வாளா? முக்கியமாக, அப்படி வருகிற பகைவன்
என் அன்னைக்குத் தெரிந்தவனாகவும் இருந்து விட்டால்..."
"குழந்தாய்! உன்
தாயார் ஒரு நாளும் அப்படிப் பகைவனிடம் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டாள். மலையமான் மகள்
அவ்விதம் ஒருகாலும் தான் பிறந்த குலத்தையும், புகுந்த குலத்தையும்
அவமானப்படுத்தமாட்டாள். அவளுடைய புருஷனுடைய பகைவனைத் தனக்கும் கொடிய பகைவனாகவே
கருதுவாள். பகைவன் முன்னால் கைகூப்பமாட்டாள்; கண்ணீரும் விடமாட்டாள், கணவன் உயிர்
துறந்தால் உடனே அவன் மீது விழுந்து தானும் உயிரை விடுவாள்! அல்லது மனத்தைக்
கல்லாகச் செய்து கொண்டு உயிரோடிருப்பாள்; பகைவனைப் பழிக்குப் பழி வாங்குவதற்காக
மட்டுமே உயிரை வைத்துக் கொண்டிருப்பாள்!"
இதைக் கேட்ட ஆதித்த கரிகாலன் ஒரு
நெடிய பெருமூச்சு விட்டு, "தாத்தா! நான் போய் வரவா?" என்றான்.
"அவசியம்
போகத்தான் வேண்டுமா?"
"அதைப்பற்றி இன்னும் என்ன சந்தேகம், தாத்தா! பாதி
வழிக்கு மேலே வந்தாகிவிட்டதே?"
"ஆம், பாதி வழிக்கு மேல் வந்தாகிவிட்டது
நானும் முதலில் உன்னைப் போக வேண்டாம் என்றேன்; அப்புறம் போகும்படி சொன்னேன். உன்
தம்பியைப் பற்றிய செய்தி கேட்ட பிறகு நீ போவதே நல்லது என்று தீர்மானித்தேன்.
அருள்மொழிவர்மன் இறந்திருப்பான் என்று நான் நம்பவில்லை..."
"நானும்
நம்பவில்லை..."
"உன் தந்தையின் இளம் பிராயத்தில் சில காலம் அவர்
இருக்குமிடம் தெரியாமலிருந்தது. அதுபோல் அருள்மொழியும் ஏதேனும் ஒரு தீவில்
ஒதுங்கியிருப்பான். சில நாளைக்கெல்லாம் வந்து சேர்வான் என்றே நம்புகிறேன்! ஆனாலும்
அச்செய்தி சோழ நாடெங்கும் கொந்தளிப்பை உண்டாக்கி விட்டிருக்கிறது என்று அறிகிறேன்.
உன் பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். இச்சமயம் அவர்கள் பக்கத்தில்
இருந்து நீ ஆறுதல் சொல்லுவது அவசியம்; அப்படிப் போகும்போது பழுவேட்டரையர்களின்
விரோதியாகப் போவதைக் காட்டிலும், சிநேகமாய்ப் போவது நல்லது. ஆகையினால்தான் நீ
சம்புவரையர் அழைப்புக்கு இணங்கிப் போவதற்குச் சம்மதித்தேன். அவன் வேண்டுமென்றே
என்னை அழைக்கவில்லை. அழைத்திருந்தால் நானும் வந்திருப்பேன்.
"தாத்தா!
எனக்காக அவ்வளவு தூரம் நீங்கள் பயப்படுகிறீர்களா? என்னை அவ்வளவு கையினாலாகாதவன்
என்று எண்ணி விட்டீர்களா?" என்று கேட்டான் கரிகாலன்.
"இல்லை, தம்பி! இல்லை!
நீ எத்தகைய வீராதி வீரன் என்பது எனக்குத் தெரியாதா? கொடிய ஆயுதங்களைத் தரித்த
பதினாயிரம் பகைவர்களின் நடுவில் நான் உன்னைத் தன்னந்தனியாக நம்பி அனுப்புவேன்.
ஆனால் கண்ணீர் பெருக்கி உன் மனத்தைக் கலங்கச் செய்யக் கூடிய ஒரு பெண்ணின் முன்னால்
உன்னைத் தனியாக அனுப்புவதற்கு மட்டும் பயப்படுகிறேன்."
"சம்புவரையர் மகள்
அப்படியெல்லாம் ஜாலவித்தையில் தேர்ந்தவள் என்று நான் கேள்விப்படவில்லை, தாத்தா! ஆண்
மக்கள் முன்னால் வருவதற்கே அஞ்சக்கூடிய பெண்ணாம் அவள்; கந்தமாறன்
சொல்லியிருக்கிறான். நானும் அப்படியெல்லாம் அவசரப்பட்டுத் தாய் தந்தையர் சம்மதம்
இல்லாமல் ஒரு காரியத்தை செய்துவிடமாட்டேன். உங்களுடைய பழங்குடியில் பிறந்த இரண்டு
பெண்கள் இன்னும் மணமாகாமல் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.."
"ஆதித்தா, அதைப் பற்றிச் சிந்தனையே எனக்கு இல்லை. என் முத்த மகனுடைய
பெண்கள் இரண்டு பேர் திருமணப் பிராயம் வந்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால்
அவர்களை உன் கழுத்தில் கட்டும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. ஏற்கெனவே சோழ
நாட்டுச் சிற்றரசர்கள் பலரும் என் மீது பொறாமையும், பகைமையும் கொண்டிருக்கிறார்கள்.
இதுவும் வேறு சேர்ந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாகச் சம்புவரையர்
மகளையே நீ கட்டிக் கொண்டால் நான் ஒருவாறு திருப்தி அடைவேன். எனக்கோ வயது அதிகமாகி
விட்டது; உடல் தளர்ந்து விட்டது. சில சமயம் உள்ளமும் நெகிழ்ந்துவிடுகிறது.
மறுபடியும் என் அருமைப் பேரனைக் காணமாட்டேனோ, இதுதான் உன்னை நான் பார்ப்பது கடைசி
முறையோ என்றெல்லாம் சில சமயம் எண்ணிக் கொள்கிறேன். இனிமேல் என்னால் உனக்கு உதவி
எதுவும் இல்லை. புதிய சிநேகிதர்கள் சிலர் உனக்கு அவசியம் வேண்டும். உன் விஷயத்தில்
சிரத்தை கொள்ளக் கூடியவர்கள் வேண்டும்.ஆகையால் சம்புவரையர் மகளை நீ மணந்து கொண்டால்
நான் உண்மையில் மகிழ்ச்சியே அடைவேன்."
"தாத்தா! உங்கள் மகிழ்ச்சிக்காகக்
கூட அதை நான் செய்ய முடியாது. சம்புவரையர் மாளிகைக்கு நான் விருந்தாளியாகப் போவது
அவருடைய சிநேகத்தை விரும்பியும் அல்ல; அவர் மகளை மணம் புரியவும் அல்ல. நீங்கள்
அதுபற்றி நிம்மதியாயிருக்கலாம்."
"அப்படியானால் எதற்காகப் போகிறாய்,
குழந்தாய்! என்னிடம் உண்மையைச் சொல்லக் கூடாதா? உன்னுடைய நண்பர்கள் இருவரும் பேசிக்
கொண்டிருந்ததில் சில வார்த்தைகள் அவ்வப்போது என் காதில் விழுந்தன. பெரிய
பழுவேட்டரையன் அறுபது வயதுக்கு மேல் கலியாணம் செய்து கொண்டானே, அந்த மோகினிப்
பிசாசு உனக்கு ஓலை அனுப்பியிருக்கிறாள் என்றும், அதனாலேதான் நீ கடம்பூர் வரச்
சம்மதித்தாய் என்றும் அவர்கள் பேசிக் கொண்டார்கள் அது உண்மையா?"
"ஆம்
தாத்தா! அது உண்மைதான்!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"கடவுளே! இது என்ன
காலம்? கரிகாலா! நான் சொல்வதைக் கேள். நீ பிறந்த சோழ குலம் இரண்டாயிரம் ஆண்டுகளாக
வாழையடி வாழையாக வந்த பெருமை பெற்ற குலம். உன்னுடைய மூதாதைகள் சிலர் உலகத்தை ஒரு
குடையில் ஆண்ட சக்கரவர்த்திகளாயிருந்திருக்கிறார்கள். சில சமயம் உறையூரையும் அதன்
சுற்றுப்புறத்தையும் மட்டும் ஆண்ட குறுநில மன்னர்களாயிருந்திருக்கிறார்கள். சிலர்
ஏகபத்தினி விரதம் கொண்டு இராமபிரானைப் போல இருந்ததுண்டு. சிலர் பல தாரங்களை மணம்
செய்து கொண்டு வீரப் புதல்வர்கள் பலரை ஈன்றதுண்டு. சிலர் சிவபக்தர்கள்; சிலர்
திருமாலின் பக்தர்கள். சிலர் 'சாமியுமில்லை; பூதமுமில்லை' என்று சொல்லி வந்தார்கள்.
ஆனால் அவர்களில் யாரும் தங்கள் நடத்தையில் களங்கமுண்டாகுமாறு நடந்ததில்லை. பிறன்
மனை விழைந்ததில்லை. குழந்தாய்! கன்னிப் பெண்களாயிருப்பவர்கள் எத்தனை பேரை
வேண்டுமானாலும் மணந்து கொள். உன் பாட்டனின் தந்தை - புகழ் பெற்ற பராந்தகச்
சக்கரவர்த்தி, ஏழு பெண்களை மணந்து கொண்டார், அவரைப் போல் நீயும் மணந்துகொள். ஆனால்
பெரிய பழுவேட்டரையனை மணந்து கொண்ட மாயமோகினியைக் கண்ணெடுத்தும் பாராதே!"
"மன்னிக்க வேண்டும் தாத்தா! அந்த மாதிரி குற்றம் ஒன்றும் நான்
செய்யமாட்டேன். சோழ குலத்துக்கும் மலையமான் குலத்துக்கும் களங்கம் உண்டு பண்ண
மாட்டேன்!"
"அப்படியானால் அவள் அழைப்புக்காக ஏன் போகிறாய்? குழந்தாய்?"
"உண்மையை உங்களிடம் சொல்லிவிட்டே போகிறேன். அவளுக்கு ஒரு சமயம் நான் ஒரு
பெரிய தீங்கு செய்தேன். அதற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்"
என்றான் கரிகாலன்.
"இது என்ன வார்த்தை? ஒரு பெண்ணிடம் நீ மன்னிப்புக்
கேட்டுக் கொள்வதாவது? என் காதினால் கேட்கச் சகிக்க வில்லையே?" என்றார் மலையமான்.
ஆதித்த கரிகாலன் சிறிது நேரம் தலைகுனிந்த வண்ணமாக இருந்தான். பிறகு
மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, பாட்டனாரிடம் பழைய வரலாற்றை ஒருவாறு கூறினான்.
வீரபாண்டியனைத் தான் தேடிச் சென்று அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்ததையும்,
நந்தினி குறுக்கிட்டு உயிர்ப்பிச்சை கேட்டதையும், தான் அதைக் கேட்காமல்
ஆத்திரப்பட்டு அவனைக் கொன்றதையும் அதுமுதலாவது தன் மனம் நிம்மதியில்லாமல்
அலைப்புறுவதையும் பற்றி விவரமாகக் கூறினான்.
"அந்த ஞாபகம் என்னை ஓயாமல்
கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. தாத்தா! அவளை ஒரு தடவை பார்த்து மன்னிப்புக்
கேட்டுக் கொண்டால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவளும் போனதையெல்லாம் மறந்துவிடத்
தயாராகியிருப்பதாகக் காண்கிறது. இராஜ்யத்தில் குழப்பம் விளையாமல் பார்த்துக்
கொள்வதிலும் சிரத்தைக் கொண்டிருக்கிறாள். அதற்காகவே என்னை அழைத்திருக்கிறாள்.
போகும் காரியத்தை முடித்துக் கொண்டு வெகு சீக்கிரமாகவே காஞ்சிக்குத் திரும்பி
விடுவேன், தாத்தா! திரும்பி வந்ததும் என் தம்பியைக் கண்டு பிடித்துக் கொண்டு
வருவதற்காகக் கப்பல் ஏறிப் புறப்படுவேன்" என்றான் ஆதித்த கரிகாலன். கிழவர்
மலையமான் ஒரு பெருமூச்சுவிட்டு, "இதுவரையில் விளங்காமலிருந்த பல விஷயங்கள் இப்போது
எனக்கு விளங்குகின்றன. இன்று வரை மர்மமாக இருந்த பல காரியங்கள் அர்த்தமாகின்றன.
விதியை வெல்ல யாராலும் முடியாது என்பது நிச்சயந்தான்!" என்றார்.
பக்க
தலைப்பு
நான்காம்அத்தியாயம் ஐயனார் கோவில்
கெடில நதிக் கரையில் பாட்டனும் பேரனும் பேசிக் கொண்டிருந்த அதே
சமயத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருக்கானாட்டுமுள்ளூர் என்னும் ஊரில் பழைய
நண்பர்களான ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் ஒரு விநோதமான காரியத்தில்
ஈடுபட்டிருந்தார்கள். அக்காலத்தில் வட காவேரியாகிய கொள்ளிடமும் தென் காவேரியைப்
போலவே புண்ணிய நதியாகக் கருதப்பட்டு வந்தது. துலா மாதத்தில் தினந்தோறும்
கானாட்டுமுள்ளூர் ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் ரிடபாரூடராகக் கொள்ளிடக்
கரைக்கு எழுந்தருளி ஸ்நானத்துக்கு வந்துள்ள பக்தர்களுக்குச் சேவை தருவது வழக்கம்.
மத்தியான வேளையில் ஒவ்வொரு நாளும் உற்சவமாகவே இருக்கும். அக்கம் பக்கத்து
கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரண்டு வருவார்கள். விஷ்ணு கோயில் அந்த ஊரில்
சிறிதாக இருப்பினும் அந்தக் கோயிலிலிருந்தும் பகவான் கருட வாகனத்தில் ஆரோகணித்துக்
கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளுவார்.
இவ்விதம் துலா மாதத்தில் வட காவேரியில்
ஸ்நானம் செய்வதற்காக வந்து கூடியிருந்த ஜனக்கூட்டத்தினிடையே ஆழ்வார்க்கடியான் ஒரு
நாவல் கிளையை மண்ணில் நட்டு வைத்து கொண்டு, "நாவலோ நாவல்! நாவலோ நாவல்! இந்த நாவலத்
தீவில் வைஷ்ணவ சமயமே மேலான சமயம் என்று நிலைநாட்டுவதற்கு வாதப் போர் புரிய
வந்துள்ளேன். சைவர்கள், சாக்தர்கள், அத்வைதிகள், காபாலிகர்கள், காளாமுகர்கள்,
புத்தர்கள், சமணர்கள் யார் வேணுமானாலும் வாதப் போர் புரிய வரலாம். அவர்கள் வெற்றி
பெற்றால் அவர்களை என் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வலம் வருவேன்,
அவர்கள் தோற்றால் இடுப்புத் துணியைத் தவிர மற்றதையெல்லாம் இங்கே கொடுத்து விட்டுப்
போக வேணும்! நாவலோ நாவல்" என்று கத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால்
ருத்திராட்ச மாலைகள், மகர கண்டிகள், கமண்டலங்கள், குண்டலங்கள், பட்டுப்
பீதாம்பரங்கள், பொற்காசுகள் ஆகியவை குவிந்து கிடந்தன. இவற்றிலிருந்து வெகு நேரம்
வாதமிட்டுப் பலரை வாதப் போரில் வென்றிருக்க வேண்டும் என்பது தௌிவாயிருந்தது.
அவனுக்குப் பக்கத்தில் கடம்பமரம் ஒன்றில் சாய்ந்து கொண்டு வந்தியத்தேவன் கையில்
உருவிய கத்தியுடன் நின்று கொண்டிருந்தான். இப்போது அவனுடைய அரையில் உடுத்திய ஒரு
துணியும், கையில் ஒரு கத்தியும் மட்டும் தான் இருந்தன. அவனுடைய தோற்றத்திலிருந்து
ஆழ்வார்கடியான் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்கப் பார்த்தவர்களை அவன் கத்தியை
வீசிப் பயமுறுத்தி அனுப்பியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்தச் சமயத்தில்
கூட்டமாகவும், கோஷித்துக் கொண்டும் வந்த சைவர் கூட்டம் ஒன்றைப் பார்த்து அவன் கூறிய
மொழிகளிலிருந்தும் அது வௌியாயிற்று.
"எச்சரிக்கை! நியாயமாக வாதப் போர்
செய்வோர் செய்யலாம். அத்துமீறி இந்த வைஷ்ணவன் மீது யாராவது கையை வைத்தால் இந்த
வாளுக்கு இரையாவார்கள்!" என்று கூறியதுடன், கத்தியையும் இரு முறை சுழற்றினான்.
கோபத்துடன் வந்த சைவர்கள் சாந்தமடைந்தார்கள். அவர்களில் ஒருவர், "ஓ வைஷ்ணவனே! ஏதோ
நீ இன்றைக்கு வாதத்தில் ஜெயித்து விட்டதாக எண்ணிக் கர்வம் கொள்ளாதே!
திருநாரையூருக்குப் போ! அங்கே உன்னை வாதில் வென்று புறமுதுகிட்டு ஓடச் செய்யக்கூடிய
நம்பியாண்டார் நம்பி இருக்கிறார்!" என்றார்.
"உங்கள் திருநாரையூர்
நம்பியைத் திருநாராயணபுரத்து அனந்த பட்டரிடம் வந்து வாதமிடச் சொல்லுங்கள்! அங்கே
நானும் ஒருவேளை இருந்தாலும் இருப்பேன்!" என்று கூறினான் ஆழ்வார்க்கடியான்.
பலமுறை அவன் "நாவலோ நாவல்!" என்று கூவியும் யாரும் புதிதாக வாதமிட
வரவில்லை. எனவே, நாவல் கிளையை எடுத்துவிட்டுச் சங்கு சக்கரம் பொறித்த வெற்றிக்
கொடியை ஆழ்வார்க்கடியான் நட்டான்.பக்கத்தில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருந்த வைஷ்ணவர்கள் சிலர் உடனே அருகில் வந்து அவனைத் தூக்கித் தோளில்
வைத்துக்கொண்டு,
"நாராயணனே நம் தெய்வம்!
நாமெல்ல |