கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
அத்தியாயம் 11-20
பதினொன்றாம்
அத்தியாயம் - தெரிஞ்சகைக்கோளப் படை பன்னிரண்டாம்
அத்தியாயம் - குருவும் சீடனும் பதின்மூன்றாம்
அத்தியாயம் - "பொன்னியின் செல்வன்" பதினான்காம்
அத்தியாயம். - இரண்டு பூரண சந்திரர்கள் பதினைந்தாம்
அத்தியாயம் - இரவில் ஒரு துயரக் குரல் பதினாறாம்
அத்தியாயம் - சுந்தர சோழரின் பிரமை பதினேழாம்
அத்தியாயம் - மாண்டவர் மீள்வதுண்டோ? பதினெட்டாம்
அத்தியாயம் - துரோகத்தில் எது கொடியது? பத்தொன்பதாம்
அத்தியாயம் - "ஒற்றன் பிடிப்பட்டான்!" இருபதாம்
அத்தியாயம் - இரு பெண் புலிகள்
பதினொன்றாம் அத்தியாயம் தெரிஞ்சகைக்கோளப் படை
இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு
பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய
அமைச்சர் வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. கணக்கர்கள், ஓலை
எழுதும் திருமந்திர நாயகர்கள், அகப்பரிவாரக் காவலர்கள் முதலியோர் அவரவர்களுடைய
இடத்தில் ஆயத்தமாக இருந்தார்கள்.
அநிருத்தர் படகிலிருந்து இறங்கி வந்து
அம்மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஆனது, தம்மைப் பார்க்க வந்திருந்தவர்களை
அழைக்குமாறு கட்டளையிட்டார்.
ஐந்து பேர் முதலில் வந்தார்கள். அவர்களைப்
பார்த்தால் செல்வச் செழிப்புள்ள வர்த்தகர்கள் என்று தோன்றியது.
ஒரு தட்டில்
நவரத்தின மாலை ஒன்றை வைத்துச் சமர்ப்பித்தார்கள். அதை அநிருத்தப் பிரம்மராயர்
வாங்கிக் கணக்கரிடம் கொடுத்து, "செம்பியன் மகாதேவியின் ஆலயத் திருப்பணிக்கு என்று
எழுதி வைத்துக் கொள்க!" என்றார்.
"பிறகு வந்தவர்களைப் பார்த்து "நீங்கள்
யார்?" என்று கேட்டார். (இந்த நீண்ட தொடர்ப் பெயர் கொண்ட வர்த்தகக் கூட்டத்தார்
சோழப் பேரரசின் கீழ், கடல் கடந்த நாடுகளுடன் வாணிபம் நடத்தி வந்தார்கள்.)
"நானா தேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் சார்பில் நாங்கள் வந்திருக்கிறோம்"
என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
"சந்தோஷம்; பாண்டியநாட்டில் உங்களுடைய
வாணிபம் செழிப்பாயிருக்கிறதல்லவா?"
"நாளுக்கு நாள் செழிப்படைந்து
வருகிறது!"
"பாண்டிய நாட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?"
"பாண்டிய வம்ச ஆட்சியைக் காட்டிலும் சோழ குல ஆட்சியே மேலோனது என்று பேசிக்
கொள்கிறார்கள். முக்கியமாக, இளவரசர் அருள்மொழிவர்மரின் வீர தயாளங்களைக் குறித்துச்
சிலாகிக்கிறார்கள். இலங்கையில் நடப்பதெல்லாம் இந்தப் பக்கத்து மக்களிடையில்
பரவியிருக்கிறது..."
"கீழ்க்கடல் நாடுகளுடன் உங்கள் கப்பல் வாணிபம் இப்போது
எப்படியிருக்கிறது?"
"சுந்தர சோழ சக்கரவர்த்தி ஆளுகையில் ஒரு குறைவும்
இல்லை. சென்ற ஆண்டில் அனுப்பிய எங்கள் கப்பல்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டன;
ஒன்றுகூடச் சேதமில்லை."
"கடல் கொள்ளைக்காரர்களினால் தொல்லை ஒன்றுமில்லையே?"
"சென்ற ஆண்டில் இல்லை, மானக்க வாரத் தீவுக்கு அருகில் இருந்த கடற்
கொள்ளைக்காரர்களை நம் சோழக் கப்பற் படை அழித்த பிறகு கீழைக்கடல்களில் கொள்ளை பயம்
கிடையாது."
"நல்லது; நாம் கொடுத்தனுப்பிய ஓலை சம்பந்தமாக என்ன ஏற்பாடு
செய்திருக்கிறீர்கள்?"
"கட்டளைப்படி செய்திருக்கிறோம்.இலங்கைச்
சைன்யத்துக்கு அனுப்ப ஆயிரம் மூட்டை அரிசியும், ஐந்தாறு மூட்டை சோளமும், நூறுமூட்டை
துவரம்பருப்பும் இந்த இராமேசுவரத் தீவில் கொண்டு வந்திருக்கிறோம். இலங்கைக்கு
அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்." "உங்களுடைய கப்பல்களிலேயே ஏற்றி அனுப்ப
முடியுமா?"
"கட்டளையிட்டால் செய்கிறோம். இலங்கை யுத்தம் எப்போது முடியும்
என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்."
"ஆ! அது யாருக்குத் தெரியும்?
உங்களுடைய வர்த்தக சபைக்குச் சோதிடக்காரன் இருக்கிறான் அல்லவா? அவனைக் கேட்டு
எனக்கும் சொல்லுங்கள்!"
"பிரம்ம ராஜரே! எங்கள் சோதிடக்காரன்
சொல்வதையெல்லாம் எங்களாலேயே நம்ப முடியவில்லை."
"அப்படி அவன் என்ன
சொல்லுகிறான்?"
"இளவரசர் அருள்மொழிவர்மர் போகுமிடமெல்லாம் வெற்றிதான் என்று
சொல்லுகிறான். அவருடைய ஆட்சியில் சோழக் கப்பல் படை கடல் கடந்த தேசங்களுக்கெல்லாம்
சென்று வெற்றி கொள்ளும் என்று சொல்லுகிறான். தூர தூரத்தில் உள்ள தேசங்கள் பலவற்றில்
புலிக்கொடி பறக்கும் என்று சொல்லுகிறான்."
"அப்படியானால் உங்கள் பாடு
கொண்டாட்டம் தான்!"
"ஆம்; எங்கள் கடல் வர்த்தகம் மேலும் செழித்து ஓங்கும்
என்றும் சொல்லியிருக்கிறான்."
"மிகவும் சந்தோஷம் ஸரீரங்கநாதருடைய அருள்
இருந்தால் அப்படியே நடக்கும். இலங்கையில் யுத்தம் நடக்கும் வரையில் மாதம் ஒரு தடவை
நீங்கள் இப்படியே அரிசி முதலியவை அனுப்பி வரவேண்டும். போய் வாருங்கள்."
"அப்படியே செய்கிறோம், போய் வருகிறோம்."
ஐந்நூற்றுவர் சபையின்
பிரதிநிதிகள் போன பிறகு ஒரு காவலன் வந்து, "தெரிஞ்ச கைக்கோளப் படைச் சேனாதிபதிகள்
காத்திருக்கிறார்கள், பார்க்க விரும்புகிறார்கள்" என்று சொன்னான்.
"வரச்
சொல்லு!" என்றார் முதலாவது அமைச்சர் அநிருத்தர்.
"மூன்று கம்பீர புருஷர்கள்
பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம்
செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று
தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள
வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர். அவர்களில்
பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை
அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச
கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின்
பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.)
"சுந்தர சோழ
தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.
"ஆம், ஐயா!
ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."
"அது
ஏன்?"
"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே
வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."
"உங்கள் படையில் எத்தனை கை?
எத்தனை வீரர்கள்?"
"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத்
தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும்
இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த்
தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."
"உங்களுடைய கோரிக்கை
என்ன?"
"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர்
அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய
விரும்புகிறோம்!" "ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம்
கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."
"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை
யுத்தம் முடிந்து விட்டால்...?"
"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை
யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."
"ஈழத்துச்
சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை
பார்க்கிறோம்!..."
"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள்,
தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால்
பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின்
நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும்
வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து
தாக்குவீர்கள்..."
"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம்
செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."
"பாண்டியர்களும் சேரர்களும்
போர்க்களத்தில் எதிர்த்து நின்றார்கள்; அதனால் அவர்களைத் தாக்கி முறியடித்தீர்கள்.
பகை வீரர்களை முதலில் கண்ணால் பார்த்தால்தானே அவர்களை நீங்கள் ஒரு கையும்
பார்க்கலாம்; மூன்று கையும் பார்க்கலாம்?"
"இராவணர் காலத்து
அசுரர்களைப்போல் இந்தக் காலத்து இலங்கை வீரர்களும் மாயாவிகளாகிவிட்டார்களா? மேக
மண்டலத்தில் மறைந்து நின்று போரிடுகிறார்களா?"
"மாயாவிகளாய் மறைந்துதான்
விட்டார்கள்; ஆனால் போர் செய்யவில்லை. போரிட்டால்தான் இருக்குமிடத்தைக்
கண்டுபிடித்து விடலாமோ? இலங்கை அரசன் மகிந்தனையும் காணவில்லை; அவனுடைய சேனா
வீரர்களையும் காணவில்லை. காடுகளிலே, மலைகளிலே எங்கே போய் ஒளிந்து கொண்டார்களோ,
தெரியவில்லை. ஆகையால் ஆறுமாதமாக இலங்கையில் யுத்தமே நடைபெறவில்லை. உங்களையும் அங்கே
அனுப்பி என்ன செய்கிறது?"
"மகா மந்திரி! எங்களை அனுப்பிப் பாருங்கள்!
மகிந்தனும், அவனுடைய வீரர்களும் காடு மலைகளிலே ஒளிந்திருக்கட்டும்; அல்லது மேக
மண்டலத்திலே ஒளிந்திருக்கட்டும்; அவர்களைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து
இளவரசரின் காலடியில் சேர்க்கிறோம். அப்படிச் சேர்க்காவிட்டால், 'தெரிஞ்ச கைக்கோளர்
படை' என்ற பெயரை மாற்றிக்கொண்டு 'வேளாளரின் அடிமைப்படை' என்ற பட்டயத்தைப் பெற்றுக்
கொள்கிறோம்!"
"வேண்டாம்; வேண்டாம்! அப்படி ஒன்றும் இப்போது சபதம் செய்ய
வேண்டாம்! தெரிஞ்ச கைக்கோளர் படையின் வீர பராக்கிரமம் இந்த ஜம்புத்வீபத்தில்
யாருக்குத் தெரியாது? தஞ்சாவூர் சென்றதும் சக்கரவர்த்தியைக் கேட்டுக் கொண்டு
உங்களுக்குக் கட்டளை அனுப்புகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள். பாண்டிய நாட்டில்
பகைவர்களை அடக்கி அமைதியை நிலை நாட்டி வாருங்கள்!"
"மகா மந்திரி! பாண்டி
நாட்டில் இனி அடக்குவதற்குப் பகைவர் யாரும் இல்லை. குடி மக்கள் யுத்தம் நின்றது
பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவரவர்களும் விவசாயம், வாணிபம்,
கைத்தொழில்களில் ஈடுபட்டு அமைதியான வாழ்க்கை நடத்துகிறார்கள். பாண்டிய மன்னர்குலமோ
நாசமாகி விட்டது..."
"அவ்விதம் எண்ண வேண்டாம்! வீர பாண்டியனோடு
பாண்டியவம்சம் அற்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். அது தவறு.பாண்டிய சிம்மாசனத்துக்கு
உரிமை கோருவோர் இன்னும் இருக்கிறார்கள்...! அவர்களுக்காகச் சதிசெய்வோரும்
இருக்கிறார்கள்...!"
"ஆகா! எங்கே அந்தச் சதிகாரர்? தெரியப்படுத்துங்கள்!"
"காலம் வரும்போது உங்களுக்கே தெரியும். பாண்டிய குலத்தின் பழைமையான மணிக்
கிரீடமும், இந்திரன் அளித்த இரத்தின மாலையும், வைரமிழைத்த பட்டத்து உடைவாளும்
இன்னும் இலங்கையில் இருந்து வருகின்றன. ரோஹண மலை நாட்டில் எங்கேயோ ஒளித்து
வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் மீட்டுக்கொண்டு வரும் வரையில் பாண்டியப் போர்
முற்றுப் பெறாது."
"ஆபரணங்களை மீட்டுக்கொண்டு வரவேண்டும்; இளவரசர்
அருள்மொழிவர்மரை மதுரைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய மணி மகுடத்தையும்,
பட்டாக் கத்தியையும் அணிவிக்கும் நாளும் வரவேண்டும்!"
"ஆகா! இது என்ன
வார்த்தை சொல்கிறீர்கள்?"
"குடி மக்களின் நாவிலும், போர் வீரர்களின்
உள்ளத்திலும் இருப்பதைச் சொல்கிறோம்!"
"அதெல்லாம் பெரிய இராஜரீக விஷயங்கள்,
நாம் பேசவேண்டாம். உங்களுக்குச் சந்தோஷமளிக்கக்கூடிய வேறு ஒரு முக்கிய விஷயம்
சொல்லப் போகிறேன்..."
"கவனமாய்க் கேட்டுக் கொள்கிறோம், மகா மந்திரி!"
"இலங்கை யுத்தத்தோடு யுத்தம் முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம்.
இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கைப்போர் முடிந்த பிறகு நாலா திசைகளிலும் திக்விஜயம்
செய்யப் புறப்படுவார். ஆயிரம் கப்பல்களில் வீரர்களை ஏற்றிக்கொண்டு கீழ்த்திசைக்
கடல்களிலே செல்வார். மாநக்கவாரம், மாபப்பாளம், மாயிருடிங்கம், கடாரம், இலாமுரி
தேசம், ஸரீவிசயம், சாவகம், புட்பகம் ஆகிய நாடுகளை அந்த மகா வீரர் வெற்றி கொள்வார்.
தெற்கே முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும் கைப்பற்றுவார். மேற்கே, கேரளம், குடமலை,
கொல்லம் ஆகிய நாடுகள் அவருடைய காலடியில் வந்து பணியும், பிறகு வடதிசை நோக்கிப்
புறப்படுவார். வேங்கி, கலிங்கம், இரட்டபாடி, சக்கரக்கோட்டம், அங்கம், வங்கம்,
கோசலம், விதேகம், கூர்ஜரம், பாஞ்சாலம் என்னும் நாடுகளுக்குப் படையெடுத்துச்
செல்வார்.காவியப் புகழ் பெற்ற கரிகால வளவனைப் போல் இமயமலைக்கும் சென்று
புலிக்கொடியை நாட்டுவார். வீர சேநாதிபதிகளே! இப்படியெல்லாம் நமது தென்திசை
மாதண்டநாயகர் திட்டம் இட்டிருக்கிறார். தமிழகத்தில் வீர ரத்தமும், வயிர நெஞ்சமும்
படைத்த அனைவருக்கும் வேண்டிய வேலை இருக்கும்; தத்தம் வீர பராக்கிரமங்களை நிலை
நாட்டச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆகையால் நீங்களும் உங்கள் தெரிஞ்ச கைக்கோளப்
படையும் பொறுமை இழக்க வேண்டாம்!"
சேநாதிபதிகள் மூவரும் ஏக காலத்தில் சுந்தர
சோழ சக்கரவர்த்தி வாழ்க! இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க! மகா மந்திரி அநிருத்தர்
வாழ்க!" என்று கோஷித்தார்கள்.
'பிறகு அவர்களில் ஒரு படைத்தலைவன் கூறினான்;
- "மகாமந்திரி! இன்னும் ஒரே ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறோம். எங்கள்
படையில் பெயர் 'சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படை' என்பது தாங்கள் அறிந்ததே."
"தெரிந்த விஷயந்தான்."
"சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருப்பணியில்
உயிரையும் விடுவோம் என்று பகைவர்களின் இரத்தம் தோய்ந்த சிவந்த கையினால் அடித்துப்
பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்."
"அதுவும் நான் அறிந்ததே."
"ஆகையால் சக்கரவர்த்தியைத் தவிர வேறு யாரையும் நாங்கள் சேரமாட்டோம்; வேறு
யார் சொல்வதையும் கேட்கமாட்டோம்."
"உங்களிடம் நான் எதிர்பார்த்ததும்
இதுவேதான்!"
"முன்னொரு காலத்தில் பழுவேட்டரையர்களின் மாபெரும் சேனையில் ஒரு
பகுதியாக இருந்தோம். அது காரணம் பற்றி எங்கள் பேரில் யாருக்கும் யாதொரு சந்தேகமும்
ஏற்படக் கூடாது..."
"ஆகா! இது என்ன வார்த்தை? யாருக்கு என்னச் சந்தேகம்!"
"தஞ்சாவூரில் நடப்பது பற்றி ஏதேதோ வதந்திகள் காற்றிலே வருகின்றன."
"காற்றிலே வருகிறது காற்றோடு போகட்டும்! நீங்கள் அதையெல்லாம் நம்பவும்
வேண்டாம்; திருப்பிச் சொல்லவும் வேண்டாம்." "கொடும்பாளூர் வேளாளர்கள் ஏதாவது
எங்களைப் பற்றிச் சந்தேகத்தை கிளப்பக்கூடும்..."
"கிளப்ப மாட்டார்கள்;
கிளப்பினாலும் யாரும் கேட்க மாட்டார்கள்."
"மனித காயம் அநித்தியமானது..."
"அதனால் சுத்த வீரர்கள் உயிருக்குப் பயப்படமாட்டார்கள்."
"திரிபுவன
சக்கரவர்த்தியானாலும் ஒரு நாள்..."
"இறைவன் திருப்பாதங்களை அடைய
வேண்டியதுதான்."
"சக்கரவர்த்திக்கோ உடல்நிலை சரியாக இல்லை..."
"வானத்தில் வால் நட்சத்திரம் பிரகாசிக்கிறது!"
"சக்கரவர்த்திக்கு அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால், எங்கள் படை
வீரர்கள் அருள்மொழிவர்மரின் அகப் பரிவாரமாக விரும்புகிறார்கள்!"
"சக்கரவர்த்தியின் ஆக்ஞையின் படி நடப்பது உங்கள் கடமை!"
"சக்கரவர்த்தியின் ஆக்ஞையை எங்களுக்குத் தெரிவிப்பது தங்களுடைய கடமை.
தாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது தஞ்சைக்குப் போய்ச்
சக்கரவர்த்தியைத் தரிசிக்க எங்களுக்கு அநுமதி கொடுங்கள்...!"
"வேண்டாம்;
நீங்கள் தஞ்சை போவது உசிதமல்ல; வீண் குழப்பம் ஏற்படும். சக்கரவர்த்தியைக் கண்டு
உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்துவதை நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள்
நிம்மதியாக இருங்கள்!"
"தங்களிடம் தெரியப்படுத்தியதுமே எங்களுடைய
மனத்திலிருந்த பாரம் நீங்கிவிட்டது! போய் வருகிறோம்!"
தெரிஞ்ச கைக்கோளப்
படைத் தலைவர்கள் மூவரும் அங்கிருந்து அகன்று சென்றார்கள்.
அநிருத்தப்
பிரமராயர் "ஆகா! பொன்னியின் செல்வரிடம் அப்படி என்னதான் ஆகர்ஷண சக்தி இருக்குமோ,
தெரியவில்லை! அவரை ஒரு முறை பார்த்தவர்கள்கூடப் பைத்தியமாகி விடுகிறார்களே!" என்று
வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
பிறகு, உரத்த குரலில், "எங்கே? அந்த
முரட்டு வைஷ்ணவனை இங்கே வரச் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டார்.
பக்க
தலைப்பு
பன்னிரண்டாம் அத்தியாயம் குருவும் சீடனும்
இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி
சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இக்கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக்
கொள்ள விரும்புகிறோம். திருச்சிராப்பள்ளி ஜில்லா லால்குடி தாலுகாவில் அன்பில் என்ற
பெயர் கொண்ட கிராமம் ஒன்று இருக்கிறது. இதை வடமொழியாளர் 'பிரேமபுரி' என்று
மொழிபெயர்த்துக் கையாண்டிருக்கிறார்கள். (இந்த அத்தியாயம் எழுதப்பட்டது 1951-ல்)
இன்றைக்குச் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் ஒரு
வேளாளர் தம்முடைய பழைய வீட்டை இடித்துப் புதுப்பித்துக் கட்டுவதற்காக அஸ்திவாரம்
தோண்டினார். அப்போது ஓர் அதிசயமான வஸ்து பூமிக்கடியிலிருந்து அகப்பட்டது. பல
செப்புத் தகடுகளை நுனியில் துவாரமிட்டு வளையத்தினால் கோத்திருந்தது. அந்தத்
தகடுகளில் ஏதோ செதுக்கி எழுதப்பட்டிருந்தது. இரண்டு ஆள் தூக்க முடியாத கனமுள்ள
அந்தத் தகடுகளை அவர் சில காலம் வைத்திருந்தார். பிறகு அந்தக் கிராமத்துக் கோயிலைப்
புதுப்பித்த திருப்பணி செய்யலாம் என்று வந்த ஸரீ ஆர்.எஸ்.எல்.லக்ஷ்மண செட்டியார்
என்பவரிடம் அத்தகடுகளைக் கொடுத்தார். ஸரீ லக்ஷ்மண செட்டியார், அத்தகடுகளில்
சரித்திர சம்பந்தமான விவரங்கள் இருக்கலாம் என்று ஊகித்து அவற்றை எடுத்துக்
கொண்டுபோய் மகா மகோபாத்தியாய சுவாமிநாத ஐயர் அவர்களிடம் தந்தார். ஐயர் அவர்கள்
அச்செப்பேடுகளில் மிக முக்கியமாக விவரங்கள் இருப்பதைக் கண்டு அந்த நாளில் சிலாசாஸன
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஸரீ டி.ஏ. கோபிநாத ராவ், எம்.ஏ. என்பாரிடம்
அத்தகடுகளைச் சேர்ப்பித்தார். ஸரீ கோபிநாதராவ் அச்செப்புத் தகடுகளைத் கண்டதும்
அருமையான புதையலை எடுத்தவர் போல் அகமகிழ்ந்தார். ஏனென்றால், சோழ மன்னர்களின்
வம்சத்தைப் பற்றிய அவ்வளவு முக்கியமான விவரங்கள் அச்செப்பேடுகளில்
செதுக்கப்பட்டிருந்தன.
சுந்தரசோழ சக்கரவர்த்தியின் 'மான்ய மந்திரி'யான
அன்பில் அநிருத்தப்பிரமராயருக்குச் சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்த நாலாம் ஆண்டில்
அளித்த பத்து வேலி நில சாஸனத்தைப் பற்றிய விவரங்கள் அந்தச் செப்பேடுகளில்
செதுக்கப்பட்டிருந்தன. இந்த நில சாஸனத்தை எழுதிய மாதவ பட்டர் என்பவர் சுந்தர சோழர்
வரைக்கும் வந்த சோழ வம்சாளியை அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அநிருத்தப்
பிரமராயரின் வைஷ்ணவ பரம்பரையைக் குறிப்பிட்டு, அவருடைய தந்தை, தாயார், பாட்டனர்,
கொள்ளுப்பாட்டனார் ஆகியவர்கள் .ஸரீ ரங்கநாதரின் ஆலயத்தில் செய்து வந்த சேவையைத்
குறித்தும் எழுதியிருந்தார். இதற்கு முன்னால் அகப்பட்டிருந்த ஆனைமங்கலச்
செப்பேடுகள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், ஆகியவற்றில் கொடுத்திருந்த சோழ
வம்சாவளியுடன் அன்பில் செப்பேடுகளில் கண்டது பெரும்பாலும் ஒத்திருந்தது. எனவே,
அந்தச் செப்பேடுகளில் கண்டவை சரித்திர பூர்வமான உண்மை விவரங்கள் என்பது
ஊர்ஜிதமாயிற்று. மற்ற இரண்டு செப்பேடுகளில் காணாத இன்னும் சில விவரங்களும்
இருந்தபடியால் "அன்பிற் செப்பேடுகள்" தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சித் துறையில்
மிகப் பிரசித்தி அடைந்தன. எனவே, அநிருத்த பிரமராயர் என்பவர் சரித்திரச்
செப்பேடுகளில் புகழ் பெற்ற சோழ சாம்ராஜ்ய மந்திரி என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு
மேலே கதையைத் தொடர்ந்து படிக்குபடி நேயர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மானிய
முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த மண்டபத்துக்குள்
ஆழ்வார்க்கடியான் பிரவேசித்தான். அவரை மூன்றுதடவை சுற்றி வந்தான்! சாஷ்டாங்கமாக
விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்!
"ஓம் ஹ்ராம் ஹ்ரீம் வஷட்டு" என்று நாலு
தடவை உரத்த குரலில் உச்சரித்துவிட்டு, குருதேவரே விடை கொடுங்கள்" என்றான்.
அநிருத்தர் புன்னகையுடனே, "திருமலை! என்ன இந்தப் போடு போடுகிறாய்? எதற்கு
என்னிடத்தில் விடை கேட்கிறாய்?" என்றார்.
"தாஸன் அவலம்பித்த ஸரீ வைஷ்ணவ
சம்பிரதாயத்தையும், 'ஆழ்வார்க்கடியான் என்ற பெயரையும், தங்களுக்குக் கைங்கரியம்
செய்யும் பாக்கியத்தையும் இந்த மாகடலில் அர்ப்பணம் செய்துவிட்டு வீர சைவ காளாமுக
சம்பிரதாயத்தைச் சேர்ந்து விடப் போகிறேன். கையில் மண்டை ஓட்டை எடுத்துக்கொண்டு 'ஓம்
ஹ்ராம் ஹ்ரீம் வஷட்டு என்ற மகத்தான மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஊர் ஊராகப்
போவேன்! தலையில் ஜடாமகுடமும், முகத்தில் நீண்ட தாடியும் வளர்த்துக் கொண்டு,
எதிர்ப்படுகிற ஸரீ வைஷ்ணவர்களுடைய மண்டைகளையெல்லாம் இந்தத் தடியினால் அடித்துப்
பிளப்பேன்..."
"அப்பனே! நில்! நில்! என்னுடைய மண்டைக்குக் கூட அந்தக்
கதிதானோ?"
"குருவே! தாங்கள் ஸரீ வை.ணவ சம்பிரதாயத்தை இன்னமும்
அவலம்பிக்கிறவர்தானோ?"
"திருமலை! அதைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம்? என்னை
யார் என்று நினைத்தாய்!"
"தாங்கள் யார்? அது விஷயத்திலேதான் எனக்கும்
சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு நதிகளின் நடுவில் அறிதுயில் புரிந்து சகல
புவனங்களையும் காக்கும் ஸரீ ரங்கநாதருக்குப் பணி செய்வதையே வாழ்க்கை எடுத்த பயனாகக்
கொண்டிருந்த அன்பில் அனந்தாழ்வார் சுவாமிகளின் கொள்ளுப்பேரர் தாங்கள் தானே?"
"ஆம் அப்பனே? நான்தான்!"
"ஸரீமந் நாராயண நாமத்தின் மகிமையை
நானிலத்துக்கெல்லாம் எடுத்துரைத்த அன்பில் அநிருத்தப் பட்டாச்சாரியின்
திருப்பேரரும் தாங்கள்தானே?"
"ஆமாம்; நானேதான்! அந்த மகானுடைய
திருநாமத்தைத் தான் எனக்கும் சூட்டினார்கள்?"
"ஆழ்வார்களுடைய அமுதொழுகும்
மதுர கீதங்களைப் பாடிப் பக்த கோடிகளைப் பரவசப்படுத்தி வந்த நாராயண பட்டாச்சாரியின்
சாக்ஷாத் சீமந்த புத்திரரும் தாங்களேயல்லவா?"
"ஆமாம் அப்பா; ஆமாம்!"
".ஸரீ ரங்கநாதர் பள்ளிகொண்ட பொன்னரங்கக் கோயிலில் தினந்தினம் நுந்தா
விளக்கு ஏற்றி வைத்தும் யாத்ரீகர்களுக்கு வெள்ளித் தட்டில் அன்னமிட்டும் கைங்கரியம்
புரிந்து வந்த மங்கையர் திலகத்தின் புதல்வரும் தாங்களே அல்லவா?"
"சந்தேகம்
இல்லை!"
"அப்படியானால், என் கண்கள் என்னை மோசம் செய்கின்றனவா? என் கண்
முன்னே நான் பார்ப்பது பொய்யா? என் இரு செவிகளால் நான் கேட்டதும் பொய்யா?"
"எதைச் சொல்கிறாய், அப்பனே? உன் கண்களின் மேலும் காதுகளின் பேரிலும்
சந்தேகம் கொள்ளும்படி என்ன நேர்ந்தது விட்டது?"
"தாங்கள் இந்த ஊர்ச் சிவன்
கோயிலுக்குச் சென்று அபிஷேகம் - அர்ச்சனை எல்லாம் நடத்திவைத்ததாக என் செவிகளால்
கேட்டேன்."
"அது உண்மையேதான்; உன் செவிகள் உன்னை மோசம் செய்து விடவில்லை."
"தாங்கள் சிவன் கோவிலுக்குப் போய் வந்ததின் அடையாளங்கள் தங்கள்
திருமேனியில் இருப்பதாக என் கண்கள் காண்பதும் உண்மைதான் போலும்!"
"அதுவும்
உண்மையே!"
"இந்தக் கலியுகத்தில் ஸரீமந் நாராயணனே தெய்வம் என்றும்,
ஆழ்வார்களின் பாசுரங்களே வேதம் என்றும், ஹரிநாம சங்கீர்த்தனமே மோட்சத்தை அடையும்
மார்க்கம் என்றும் எனக்குக் கற்பித்த குருதேவர் தாங்களே அல்லவா?"
"ஆம்;
அதனால் என்ன?"
"குருதேவராகிய தாங்களே சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக
இருந்தால், சீடனாகிய நான் என்ன செய்யக் கிடக்கின்றது?"
"திருமலை! நான்
சிவன் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்தது பற்றித்தானே சொல்லுகிறாய்?"
"குருதேவரே! அங்கே எந்தக் கடவுளைத் தரிசனம் செய்தீர்கள்?"
"சந்தேகம் என்ன? நாராயண மூர்த்தியைத்தான்!"
"இராமேச்சுரக்
கோயிலுக்குள் இலிங்க வடிவம் வைத்திருப்பதாக அல்லவோ கேள்விப்பட்டிருக்கிறேன்? அதனால்
தானே இங்குள்ள வீர சைவ பட்டர்மார்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அவ்வளவு
கொக்கரித்தார்கள்?"
"பிள்ளாய்! நீ திருநகரியில் திரு அவதாரம் செய்த நம்
சடகோபரின் அடியார்க்கடியான் என்று நாமம் பூண்டிருப்பது சத்தியந்தானே?"
"அதில் என்ன சந்தேகம்?"
"நம்மாழ்வாரின் அருள்வாக்கைச் சற்று
ஞாபகப்படுத்திக்கொள். நீ மறந்திருந்தால் நானே நினைவூட்டுகிறேன்; கேள்;
இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நுந்
தெய்வமுமாகி நின்றானே!....'
இவ்வாறு சடகோபரே சாதித்திருக்கும்போது சிவலிங்கத்தில் நான் நாராயணனைத்
தரிசித்தது தவறா?"
"ஆகா! சடாகோபரின் அருள்வாக்கே! வாக்கு! இலிங்கத்தை
வழிபடுவோரைச் சமணரோடும் சாக்கியரோடும் கொண்டு போய்த் தள்ளினார் பாருங்கள்!"
"அப்பனே! உன் குதர்க்க புத்தி உன்னை விட்டு எப்போது நீங்குமோ, தெரியவில்லை. நம்
சடகோபர் மேலும் சொல்லியிருப்பதைக் கேள்:
'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனாய்...'
உள்ளவன் ஸரீ நாராயண மூர்த்தியே என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
இன்னும் கேள், திருமலை! கேட்டு உன் மனமாசைத் துடைத்துக்கொள்!
'முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே
என் கள்வா!
தனியே ஆருயிரே என்தலை மிசையாய்
வந்திட்டு..."
கேட்டாயா, திருமலை 'முக்கண்ணப்பா!' என்று நம் சடகோபர் கூவி அழைத்துத் தம்
தலைமீது வரும்படி பிரார்த்திருக்கிறார்! நீயோ சிவன் கோயிலுக்கு நான் போனது பற்றி
ஆட்சேபிக்கிறாய்!..."
"குருதேவரே! மன்னிக்க வேண்டும்; அபசாரத்தை க்ஷமிக்க
வேண்டும்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமையினால் வீண்
சண்டைகளில் காலங்கழித்தேன். தங்களையும் சந்தேகித்தேன். இனி எனக்கு ஒரு வரம்
கொடுத்து அருள வேண்டும்."
"என்ன வரம் வேண்டும் என்று சொன்னாயானால்,
கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம்."
"திருக்குருகூர் சென்று அங்கேயே தங்கிவிட
ஆசைப்படுகிறேன். நம் சடகோபரின் ஆயிரம் பாடல்களையும் சேகரித்துக் கொண்டு பிறகு ஊர்
ஊராகச் சென்று அந்தப் பாடல்களைக் கானம் செய்ய விரும்புகிறேன்..."
"இந்த ஆசை
உனக்கு ஏன் வந்தது?"
"வடவேங்கடத்திலிருந்து வரும் வழியில் வீர நாராயணப்
பெருமாள் சந்நிதியில் ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றைப் பாடினேன். அந்தச் சந்நிதியில்
கைங்கரியம் செய்யும் ஈசுவரப்பட்டர் என்னும் பெரியவர் கேட்டு ஆனந்தக் கண்ணீர்
விட்டார்..."
"ஈசுவர பட்டர் மகா பக்திமான்; நல்ல சிஷ்டர்."
"அவருடைய இளம் புதல்வன் ஒருவனும் அவர் அருகில் நின்று கேட்டுக்
கொண்டிருந்தான். அந்த இளம் பாலகனின் பால்வடியும் முகம் ஆழ்வார் பாசுரத்தை கேட்டுப்
பூரண சந்திரனைப்போல் பிரகாசித்தது. 'மற்றப் பாடல்களும் தெரியுமா?' என்று அந்தச்
சின்னஞ்சிறு பிள்ளை பால் மணம் மாறாத வாயினால் கேட்டான். 'தெரியாது' என்று சொல்ல
எனக்கு வெட்கமாயிருந்தது. ஆழ்வார்களின் தொண்டுக்கே ஏன் இந்த நாயேனை அர்ப்பணம்
செய்து விடக்கூடாது என்று அப்போதே தோன்றியது. இன்றைக்கு அந்த எண்ணம்
உறுதிப்பட்டுவிட்டது..."
"திருமலை; அவரவர்களும் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிக்க
வேண்டும் என்று கீதாச்சாரியார் அருள்புரிந்திருக்கிறார் அல்லவா?"
"ஆம்,
குருவே!"
"ஆழ்வார்களின் பாசுரங்களைச் சேகரிப்பதற்கும் பரப்புவதற்கும்
மகான்கள் அவதரிப்பார்கள். அதுபோலவே ஆழ்வார்களுடைய பாடல்களில் உள்ள வேத சாரமான
தத்துவங்களை நிரூபணம் செய்து, வடமொழியின் மூலம் பரத கண்டமெங்கும் நிலை நாட்டக்கூடிய
அவதாரமூர்த்திகளும் இந்நாட்டில் ஜனிப்பார்கள். நீயும் நானும் இராஜ்ய சேவையை நமது
ஸ்வதர்மமாகக் கொண்டவர்கள். சோழ சக்கரவர்த்தியின் சேவையில் உடல் பொருள் ஆவியை
அர்ப்பணம் செய்வதாக நாம் சபதம் செய்திருப்பதை மறந்தனையோ?.."
"மறக்கவில்லை,
குருவே! ஆனால் அது உசிதமா என்ற சந்தேகம் தோன்றி என் உள்ளத்தை அரித்து வருகிறது.
முக்கியமாக, தங்களைப் பற்றிச் சில இடங்களில் பேசிக் கொள்வதைக் கேட்டால்..."
"என்ன பேசிக் கொள்கிறார்கள்?"
"தங்களுக்குச் சக்கரவர்த்தி பத்து
வேலி நிலம் மானியம் விட்டு அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருப்பதால் தாங்கள்
வைஷ்ணவ சம்பிரதாயத்தை விட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஜாதி தர்மத்தைப்
புறக்கணித்துக் கப்பல் பிரயாணம் செய்ததாகவும் கூறுகிறார்கள்..."
"அந்தப்
பொறாமைக்காரர்கள் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம். நம்முடைய ஜாதி கிணற்றுத்
தவளைகளாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். சக்கரவர்த்தி எனக்குப்
பத்து வேலி நிலம் மானியம் கொடுத்திருப்பது உண்மைதான். அதைச் செப்பேட்டிலும் எழுதிக்
கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு நாலு வருஷங்களுக்கு முன்பே சக்கரவர்த்திக்கு நான்
மந்திரியானேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?" ஆழ்வார்க்கடியான்
மௌனமாயிருந்தான்.
"சக்கரவர்த்திக்கும் எனக்கும் எப்போது நட்பு ஏற்பட்டது
என்றாவது உனக்குத் தெரியுமா? நாங்கள் இருவரும் இளம்பிராயத்தில் ஒரே ஆசிரியரிடம்
பாடங்கற்றோம். செந்தமிழும் வடமொழியும் பயின்றோம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம்,
வியாகரணம் எல்லாம் படித்தோம். அப்போதெல்லாம் சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறப் போகிறார்
என்று யாரும் கனவிலும் எண்ணியதில்லை. அவராவது, நானாவது அதைப் பற்றிச் சிந்தித்ததே
கிடையாது. இராஜாதித்தரும் கண்டராதித்தரும் காலமாகி அரிஞ்சய சோழர் பட்டத்துக்கு
வருவார் என்று யார் நினைத்தது? அரிஞ்சயருக்கு அவ்வளவு விரைவில் துர்மரணம்
சம்பவித்துச் சுந்தர சோழர் பட்டத்துக்கு வரும்படியிருக்கும் என்றுதான் யார்
நினைத்தார்கள்? சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறியபோது அதனால் பல சிக்கல்கள் விளையும்
என்று எதிர்பார்த்தார். உடனிருந்து நான் உதவுவதாயிருந்தால் பட்டத்தை
ஒப்புக்கொள்வதாகவும் இல்லாவிட்டால் மறுத்துவிடுவதாகவும் கூறினார். இராஜ்ய
நிர்வாகத்தில் அவருக்கு உதவுவதாக அப்போது வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை
இன்றளவும் நிறைவேற்றி வருகிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா, திருமலை?"
"எனக்குத் தெரியும், குருதேவா! என் ஒருவனுக்கு மட்டும் தெரிந்து என்ன பயன்?
ஜனங்களுக்குத் தெரியாது தானே? நாட்டிலும் நகரத்திலும் வம்பு பேசுகிறவர்களுக்குத்
தெரியாதுதானே"
"வம்பு பேசுகிறவர்களைப் பற்றி நீ சிறிதும் கவலைப்படவேண்டாம்.
பரம்பரையான ஆச்சாரியத் தொழிலை விட்டுவிட்டு நான் இராஜ சேவையில் இறங்கியது பற்றி
இதற்கு முன்னால் நானே சில சமயம் குழப்பமடைந்ததுண்டு. ஆனால் சென்ற இரண்டு நாட்களாக
அத்தகைய குழப்பம் எனக்குச் சிறிதும் இல்லை. திருமலை! நான் இராமேசுவர ஆலயத்தில்
சுவாமி தரிசனத்துக்காக இங்கு வரவில்லை என்பதும் மாதோட்டம் போவதற்காகவே இங்கு
வந்தேன் என்பதும் உனக்குத் தெரியும் அல்லவா?"
"அப்படித்தான் ஊகித்தேன்,
குருதேவரே!"
"நீ ஊகித்தது சரியே, அன்றைக்குச் சம்பந்தரும்
சுந்தரமூர்த்தியும் பரவசமாக வர்ணித்தபடியேதான் இன்றைக்கும் பாலாவி நதிக்கரையில்
மாதோட்டம் இருக்கிறது.
'வண்டுபண்செயும் மாமலர்ப் பொழில்
மஞ்ஞை நடமிடுமாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய
அருள்செய் கேதீச்சுர மதுதானே!'
என்று சம்பந்தர் பாடியிருக்கிறாரே, அந்த மாதோட்டத்தை நேரில் பார்க்காமல்
எழுதியிருக்க முடியுமா? இந்த இராமேசுவரத் தீவிலிருந்தபடியே மாதோட்டத்தை எட்டிப்
பார்த்து விட்டு எழுதியதாகச் சொல்லுகிறார்கள், கிணற்றுத் தவளைப் பண்டிதர்கள் சிலர்.
அத்தகையோர் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம்..."
"சுவாமி! மாதோட்டத்தின்
இயற்கை வளங்களைக் கண்டு களிப்பதற்காகவா தாங்கள் அந்த க்ஷேத்திரத்துக்குச்
சென்றிருந்தீர்கள்?"
"இல்லை; உன்னை அங்கே அனுப்ப எண்ணியிருப்பதால் அதைப்
பற்றியும் சொன்னேன். நான் சென்றது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்ப்பதற்காக..."
"இளவரசரைப் பார்த்தீர்களா, குருதேவரே?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
அவனுடைய பேச்சில் இப்போதுதான் சிறிது ஆர்வமும் பரபரப்பும் தொனித்தன.
"ஆகா!
உனக்குக்கூட ஆவல் உண்டாகிவிட்டதல்லவா, இளவரசரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு? ஆம்,
திருமலை! இளவரசரைப் பார்த்தேன்; பேசினேன். இலங்கையிலிருந்து வந்து கொண்டிருந்த
அதிசயமான செய்திகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை நேரில் தெரிந்து கொண்டேன். கேள்,
அப்பனே! இலங்கை அரசன் மகிந்தனிடம் ஒரு மாபெரும் சைன்யம் இருந்தது. அந்தச் சைன்யம்
இப்போது இல்லவே இல்லை! அது என்ன ஆயிற்று தெரியுமா? சூரியனைக் கண்ட பனிபோல் கரைந்து,
மறைந்து போய்விட்டது! மகிந்தனுடைய சைன்யத்திலே பாண்டியநாட்டிலிருந்தும்,
சேரநாட்டிலிருந்தும் சென்ற வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நம்
இளவரசர் படைத்தலைமை வகித்து வருகிறார் என்று அறிந்ததும் ஆயுதங்களைக் கீழே
போட்டுவிட்டார்கள். ஒருவரைப் போல் அனைவரும் நம்முடைய கட்சிக்கே வந்து சேர்ந்து
விட்டார்கள்! மகிந்தன் எப்படிப் போர் புரிவான்? போயே போய் விட்டான். மலைகள் சூழ்ந்த
ரோஹண நாட்டிற்குச் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறான். ஆக, நமது சைன்யம் போர்
செய்வதற்கு அங்கு இப்போது எதிரிகளே இல்லை!"
"அப்படியானால், குருதேவரே!
இளவரசர் நம் சைனியத்துடன் திரும்பிவிட வேண்டியதுதானே? மேலும் அங்கே இருப்பானேன்?
நம் வீரர்களுக்குத் தானியம் அனுப்புவது பற்றிய ரகளையெல்லாம் எதற்காக?"
"எதிரிகள் இல்லையென்று சொல்லி திரும்பிவந்து விடலாம். ஆனால் இளவரசருக்கு
அதில் இஷ்டமில்லை. எனக்கும் அதில் சம்மதமில்லை. இளவரசரும், சைனியமும் இப்பால்
வந்ததும், மகிந்தன் மலை நாட்டிலிருந்து வௌி வருவான். மறுபடியும் பழையபடி போர்
தொடங்கும். அதில் என்ன பயன்? இலங்கை மன்னரும், மக்களும் ஒன்று நமக்குச்
சிநேகிதர்களாக வேண்டும். அல்லது புலிக்கொடியின் ஆட்சியை அங்கே நிரந்தரமாக நிறுவுதல்
வேண்டும். இந்த இரண்டு வகை முயற்சியிலும் இளவரசர் ஈடுபட்டிருக்கிறார். நமது போர்
வீரர்கள் இப்போது இலங்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? பழைய
போர்களில் அநுராதபுரநகரமே நாசமாகிவிட்டது. அங்கிருந்த பழமையான புத்த விஹாரங்கள்,
கோயில்கள், தாது கர்ப்ப கோபுரங்கள் எல்லாம் இடிந்து பாழாய்க் கிடக்கின்றன.
இளவரசரின் கட்டளையின் பேரில் இப்போது நம்வீரர்கள் இடிந்த அக்கட்டிடங்களை யெல்லாம்
புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.!'
"அழகாய்த்தானிருக்கிறது.சைவம்,
வைஷ்ணவம் இரண்டையும் கைவிட்டு இளவரசர் சாக்கிய மதத்திலேயே ஒருவேளை சேர்ந்து
விடுவாரோ, என்னமோ? அதையும் தாங்கள் ஆமோதிப்பீர்களோ?"
"நானும் நீயும்
ஆமோதித்தாலும் ஒன்றுதான்! ஆமோதிக்காவிட்டாலும் ஒன்றுதான். நம்மைப் போன்றவர்கள்
நம்முடைய மதமே பெரிது என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நாட்டை ஆளும்
அரசர் தம்முடைய பிரஜைகள் அனுசரிக்கும் சமயங்கள் எல்லாவற்றையும் ஆதரித்துப்
பராமரிக்கவேண்டும். இந்த உண்மையை யாருடைய தூண்டுதலுமில்லாமல் இளவரசர் தாமே
உணர்ந்திருக்கிறார். சந்தர்ப்பம் கிடைத்ததும் காரியத்திலும் செய்து காட்டுகிறார்.
திருமலை, இதைக் கேள்! நம் இளவரசர் அருள்மொழிவர்மருடைய கரங்களில் சங்கு சக்கர ரேகை
இருப்பதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன், நீயும் கேட்டிருப்பாய். ஆனால் அவருடைய
கரங்களை நீட்டச் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் கையில் சங்கு சக்கர ரேகை
இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒன்று நிச்சயமாக சொல்கிறேன். இந்தப்
பூமண்டலத்தை ஏக சக்ராதிபதியாக ஆளத்தகுந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் இளவரசர்
அருள்மொழிவர்மர் தாம். பிறவியிலேயே அத்தகைய தெய்வ கடாட்சத்துடன் சிலர்
பிறக்கிறார்கள். சற்றுமுன் சில வர்த்தகத்தலைவர்களும் கைக்கோளப் படைச்
சேநாதிபதிகளும் வந்துபேசிக் கொண்டிருந்தார்களே, அது உன் காதில் விழுந்ததா?
இளவரசருக்கு என்றால் நம் வர்த்தகர்கள், - காசிலேயே கருத்துள்ளவர்கள், - எவ்வளவு
தாராளமாகி விடுகிறார்கள் பார்த்தாயா?"
'சில நாளைக்கு முன்னால் பொதிகைமலைச்
சிகரத்தில் ஒரு தவயோகியைப் பார்த்தேன்; அவர் ஞானக்கண் படைத்த மகான். அவர் என்ன
சொன்னார் தெரியுமா? 'யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்.
இப்போது தென்னாடு மேம்பாடு அடையும் காலம் வந்திருக்கிறது. வெகுகாலமாக இப்புண்ணிய
பாரத பூமியில் பெரிய பெரிய சக்கரவர்த்திகளும், வீராதி வீரர்களும், ஞானப் பெருஞ்
செல்வர்களும், மகா கவிஞர்களும் வடநாட்டிலேயே அவதரித்து வந்தார்கள். ஆனால்
வடநாட்டைச் சீக்கிரம் கிரகணம் பிடிக்கப் போகிறது. இமயமலைக்கு அப்பாலிருந்து ஒரு மகா
முரட்டுச் சாதியார் வந்து வடநாட்டைச் சின்னா பின்னம் செய்வார்கள். கோயில்களையும்,
விக்கிரகங்களையும் உடைத்துப் போடுவார்கள். ஸநாதன தர்மம் பேராபத்துக்கும் உள்ளாகும்.
அப்போது நமது தர்மம், வேதசாஸ்திரம், கோயில், வழிபாடு - ஆகியவற்றையெல்லாம்
தென்னாடுதான் காப்பாற்றித் தரப்போகிறது. வீராதி வீரர்களான சக்கரவர்த்திகள்
இத்தென்னாட்டில் தோன்றி, நாலு திசைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள். மகாஞானிகளும்,
பண்டிதோத்தமர்களும், பக்த சிரோமணிகளும் இத்தென்னாட்டில் அவதரிப்பார்கள்!' என்று
இவ்விதம் அந்தப் பொதிகை மலைச் சிவயோகி அருளினார். அந்த யோகியின் தீர்க்க தரிசனம்
உண்மையாகும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது பிறந்திருக்கிறது, திருமலை!'
"சுவாமி! தாங்கள் ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் அங்கே இராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறியப் பார்க்கிறார்கள் குரு
தேவரே! நான் பார்த்ததையெல்லாம் தாங்கள் பார்த்து நான் கேட்டதையெல்லாம் தாங்களும்
கேட்டிருந்தால் இவ்வளவு குதூகலமாயிருக்க மாட்டீர்கள். இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு
ஏற்படப்போகும் அபாயத்தை நினைத்துக் கதிகலங்குவீர்கள்..."
"திருமலை, ஆம்,
நான் மறந்துவிட்டேன். அதிக உற்சாகம் என் அறிவை மூடிவிட்டது. நீ உன் பிரயாணத்தில்
தெரிந்து வந்த செய்திகளை இன்னும் நான் கேட்கவே இல்லை. சொல், கேட்கிறேன். எவ்வளவு
பயங்கரமான செய்திகளாயிருந்தாலும் தயங்காமல் சொல்!" "சுவாமி, இங்கேயே
சொல்லும்படி ஆக்ஞாபிக்கிறீர்களா? நான் கொண்டுவந்த செய்திகளை வாயு பகவான் கேட்டால்
நடுங்குவார்; சமுத்திரராஜன் கேட்டால் ஸ்தம்பித்து நிற்பார்; பட்சிகள் கேட்டால்
பறக்கும் சக்தியை இழந்து சுருண்டுவிடும்; ஆகாசவாணியும், பூமா தேவியுங்கூட
அலறிவிடுவார்கள். அப்படிப்பட்ட செய்திகளை இங்கே பகிரங்கமாகச் சொல்லும் படியா
பணிக்கிறீர்கள்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"அப்படியானால் வா! காற்றும்,
கனலும் புகாத பாதாளக் குகை ஒன்று இந்தத் தீவிலே இருக்கிறது. அங்கே வந்து விவரமாகச்
சொல்லு!" என்றார் அநிருத்தப் பிரமராயர்.
பக்க
தலைப்பு
பதின்மூன்றாம் அத்தியாயம் "பொன்னியின் செல்வன்"
வந்தியத்தேவன் நாகத்தீவின் முனையில் இறங்கி மாதோட்டத்தை
நோக்கிப் போய்க்கொண்டிருந்த அதே சமயத்தில் - அநிருத்தப் பிரமராயரும்
ஆழ்வார்க்கடியானும் சாம்ராஜ்ய நிலைமையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அதே
நேரத்தில் - குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும், அம்பாரி வைத்த
ஆனைமீது ஏறித் தஞ்சை நகரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இளைய பிராட்டி சில
காலமாகத் தஞ்சைக்குப் போவதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தாள். இதற்குப் பல
காரணங்கள் இருந்தன. தஞ்சையில் அரண்மனைப் பெண்டிர் தனித்தனியாக வசிக்கும்படியாகப்
போதிய அரண்மனைகள் இன்னும் உண்டாகவில்லை. சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனையிலேயே
எல்லாப் பெண்டிரும் இருந்தாக வேண்டும். மற்ற அரண்மனைகளையெல்லாம் பழுவேட்டரையர்களும்
மற்றும் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள்.
பழையாறையில் அரண்மனைப் பெண்டிர் சுயேச்சையாக இருக்க முடிந்தது. விருப்பம் போல்
வௌியில் போகலாம்; வரலாம். ஆனால் தஞ்சையில் வசித்தால் பழுவேட்டரையர்களின்
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தீரவேண்டும். கோட்டைக்குள்ளும், அரண்மனைக்குள்ளும்
இஷ்டம்போல் வருவதும் போவதும் இயலாத காரியம். அம்மாதிரி கட்டுப்பாடுகளும்,
நிர்ப்பந்தங்களும் இளைய பிராட்டிக்குப் பிடிப்பதில்லை. அல்லாமலும் பழுவூர்
இளையராணியின் செருக்கும், அவளுடைய அகம்பாவ நடத்தைகளும் குந்தவைப் பிராட்டிக்கு
மிக்க வெறுப்பை அளித்தன. அரண்மனைப் பெண்டிர்கள் பழையாறையில் இருப்பதையே
சக்கரவர்த்தியும் விரும்பினார். இந்தக் காரணங்களினால் குந்தவைப் பிராட்டி
பழையாறையிலேயே வசித்து வந்தாள். உடம்பு குணமில்லாத தன் அருமைத் தந்தையைப்
பார்க்கவேண்டும். அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும்
கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் வந்தியத்தேவன் வந்துவிட்டுப்
போனதிலிருந்து இளைய பிராட்டியின் மனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது.
இராஜரீகத்தில் பயங்கரமான சூழ்ச்சிகளும், சதிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது
நாம் பழையாறையில் உல்லாசமாக நதிகளில் ஓடம் விட்டுக்கொண்டும், பூங்காவனங்களில்
ஆடிப்பாடிக் கொண்டும் காலங் கழிப்பது சரியா? தமையன் தொண்டை நாட்டில் இருக்கிறான்;
தம்பியோ ஈழநாட்டில் இருக்கிறான்; அவர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் இராஜ்யத்தில்
நடக்கும் விவகாரங்களை நாம் கவனித்தாக வேண்டும் அல்லவா? தலை நகரில் அவ்வப்போது
நடக்கும் நிகழ்ச்சிகளை அந்தரங்கத் தூதர்கள் மூலம் அறிவிக்க வேண்டும் என்று தமையன்
ஆதித்த கரிகாலன் கேட்டுக் கொண்டிருக்கிறானே? பழையாறையில் வசித்தால் தஞ்சையில்
நடக்கும் காரியங்கள் எப்படித் தெரியவரும்?
வந்தியத்தேவன் அறிவித்த
செய்திகளோ மிகப் பயங்கரமாயிருந்தன. பழுவேட்டரையர்கள் தங்கள் அந்தஸ்துக்கு மீறி
அதிகாரம் செலுத்தி வந்தது மட்டுமே இதுவரையில் இளைய பிராட்டிக்குப்
பிடிக்காமலிருந்தது.இப்போதோ சிம்மாசனத்தைப் பற்றியே சூழ்ச்சி செய்ய
ஆரம்பித்துவிட்டார்கள். பாவம்! அந்தப் பரம சாது மதுராந்தகனையும் தங்கள் வலையில்
போட்டுக் கொண்டார்கள். சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தரத்து அதிகாரிகள்
பலரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ,
தெரியாது. இவர்களுடைய சூழ்ச்சியும், வஞ்சனையும், துராசையும் எந்த வரையில் போகும்
என்று யார் கண்டது? சுந்தர சோழரின் உயிருக்கு உலை வைத்தாலும் வைத்துவிடுவார்கள்!
மாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சக்கரவர்த்தியின் புதல்வர்கள் இருவரும்
இல்லாத சமயத்தில் அவருக்கு எதாவது நேர்ந்துவிட்டால், மதுராந்தகனைச் சிம்மாசனத்தில்
ஏற்றி வைத்துவிடுவது எளிதாயிருக்கும் அல்லவா? இதற்காக என்ன செய்தாலும் செய்வார்கள்!
அவர்களுக்கு யோசனை தெரியாவிட்டாலும் அந்த ராட்சஷி நந்தினி சொல்லிக் கொடுப்பாள்.
அவர்கள் தயங்கினாலும், இவள் துணிவூட்டுவாள். ஆகையால் தஞ்சாவூரில் நம் தந்தையின்
அருகில் நாம் இனி இருப்பதே நல்லது. சூழ்ச்சியும் சதியும் எதுவரைக்கும் போகின்றன
என்று கவனித்துக் கொண்டு வரலாம். அதோடு நம் அருமைத் தந்தைக்கும் ஆபத்து ஒன்றும்
வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
சாதுவாகிய மதுராந்தகனை ஏன் இவர்கள்
சிம்மாசனத்தில் ஏற்றப் பார்க்கிறார்கள்? தர்ம நியாய முறைக்காகவா? இல்லவே
இல்லை.மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டினால் அவனைப் பொம்மையாக வைத்துக்கொண்டு தங்கள்
இஷ்டம் போல் எல்லாக் காரியங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகத்தான்.அப்புறம்
நந்தினி வைத்ததுதான் சோழ சாம்ராஜ்யத்தில் சட்டமாகிவிடும்! அவளுடைய அதிகாரத்துக்குப்
பயந்துதான் மற்றவர்கள் வாழ வேண்டும். அவளிடம் மற்ற அரண்மனை மாதர் கைகட்டி
நிற்கவேண்டும். சீச்சீ! அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்க முடியுமா? நான் ஒருத்தி
இருக்கும் வரையில் அது நடவாது. பார்க்கலாம் அவளுடைய சமார்த்தியத்தை!
தஞ்சாவூரில் இருப்பது தனக்குப் பல வகையில் சிரமமாகவே இருக்கும். தாயும்,
தந்தையும், "இங்கு எதற்காக வந்தாய், பழையாறையில் சுகமாக இருப்பதை விட்டு?" என்று
கேட்பார்கள். 'சுயேச்சை என்பதே இல்லாமற் போய்விடும். தன்னுடைய திருமணத்தைப் பற்றிய
பேச்சை யாரேனும் எடுப்பார்கள். அதைக் கேட்கவே தனக்குப் பிடிக்காது. நந்தினியைச்
சிலசமயம் பார்க்கும்படியாக இருக்கும். அவளுடைய அதிகாரச் செருக்கைத் தன்னால் சகிக்க
முடியாது. ஆனால் இதையெல்லாம் இந்தச் சமயத்தில் பார்த்தால் சரிப்படுமா?
இராஜ்யத்துக்குப் பேரபாயம் வந்திருக்கிறது. தந்தையின் உயிருக்கு அபாயம் நேரலாம்
என்ற பயமும் இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் இருக்கவேண்டிய இடம்
தஞ்சையேயல்லவா?'
இவ்வளவையும் தவிர, வேறொரு, முக்கிய காரணமும் இருந்தது. அது
வந்தியத்தேவனைப் பற்றி ஏதேனும் செய்தி உண்டா என்று தெரிந்துகொள்ளும் ஆசைதான்.
வந்தியத்தேவன் கோடிக்கரைப் பக்கம் போயிருக்கிறான் என்று தெரிந்து அவனைப் பிடித்து
வரப் பழுவேட்டரையர்கள் ஆட்கள் அனுப்பியிருப்பதைப்பற்றி இளைய பிராட்டி
கேள்விப்பட்டாள். 'புத்தி யுத்திகளில் தேர்ந்த அந்த இளைஞன் இவர்களிடம் அகப்பட்டுக்
கொள்வானா? ஒருவேளை அகப்பட்டால் தஞ்சாவூருக்குத்தான் கொண்டு வருவார்கள். அச்சமயம்
நாம் அங்கே இருப்பது மிகவும் அவசியமல்லவா? ஆதித்த கரிகாலன் அனுப்பிய தூதனை அவர்கள்
அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்து விடமுடியாது.ஏதாவது குற்றம் சாட்டித்தான் தண்டிக்க
வேண்டும். அதற்காகவே சம்புவரையர் மகனை முதுகில் குத்திக் கொல்ல முயன்றதாக குற்றம்
சாட்டியிருக்கிறார்கள். அது பொய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது பொய் என்பதை
நிரூபிக்க வேண்டும். கந்தன் மாறனுடன் பேசி அவனுடைய வாய்ப் பொறுப்பை அறிந்து கொள்வது
அதற்கு உபயோகமாயிருக்கலாம்...'
இவ்விதமெல்லாம் குந்தவையின் உள்ளம் பெரிய
பெரிய சூழ்ச்சிகளிலும் சிக்கலான விவகாரங்களிலும் சஞ்சரித்துக் குழம்பிக்
கொண்டிருக்கையில், அவளுடன் யானைமீது வந்த அவள் தோழி வானதியின் உள்ளம், பால் போன்ற
தூய்மையுடனும், பளிங்கு போன்ற தௌிவுடனும் ஒரே விஷயத்தைப்பற்றியே சிந்தித்துக்
கொண்டிருந்தது. அந்த ஒரு விஷயம் இளவரசர் அருள்மொழிவர்மர் எப்போது இலங்கையிலிருந்து
திரும்பி வருவார் என்பது பற்றித்தான்.
"அக்கா! அவரை உடனே புறப்பட்டு
வரும்படி ஓலை அனுப்பியிருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா? வந்தால், எவ்விடம் வருவார்?
பழையாறைக்கா? தஞ்சாவூருக்கா?" என்று வானதி கேட்டாள்.
தஞ்சாவூருக்கு இவர்கள்
போயிருக்கும்போது இளவரசர் பழையாறைக்கு வந்து விட்டால் என்ன செய்கிறது என்பது
வானதியின் கவலை. வேறு யோசனைகளில் ஆழ்ந்திருந்த குந்தவைப் பிராட்டி வானதியைத்
திரும்பிப் பார்த்து, "யாரைப்பற்றியடி கேட்கிறாய்? பொன்னியின் செல்வனைப் பற்றியோ?"
என்றாள்.
"ஆமாம், அக்கா! அவரைப் பற்றித்தான். இளவரசரைப் 'பொன்னியின்
செல்வன்' என்று நாலைந்து தடவை தாங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள், அதற்குக் காரணம்
சொல்லவில்லை. பிற்பாடு சொல்வதாகத் தட்டிக் கழித்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள்.
இப்போதாவது சொல்லுங்களேன். தஞ்சாவூர்க் கோட்டை இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது.
இந்த யானையோ ஆமை நகர்வதுபோல் நகர்கிறது!" என்றாள் வானதி.
"இதற்குமேல் யானை
வேகமாய்ப் போனால் நம்மால் இதன் முதுகில் இருக்க முடியாது. அம்பாரியோடு நாமும் கீழே
விழவேண்டியதுதான்! அடியே! தக்கோலப் போரில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?"
"அக்கா! 'பொன்னியின் செல்வன்' என்னும் பெயர் எப்படி வந்தது என்று
சொல்லுங்கள்!"
"அடி கள்ளி! அதை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறது;
சொல்கிறேன், கேள்!" என்று குந்தவைப் பிராட்டி சொல்லத் தொடங்கினாள்.
சுந்தர
சோழ சக்கரவர்த்தி பட்டதுக்கு வந்த புதிதில் அவருடைய குடும்ப வாழ்க்கை ஆனந்த மயமாக
இருந்தது.அரண்மனைப் படகில் குடும்பத்துடன் அமர்ந்து சக்கரவர்த்தி பொன்னி நதியில்
உல்லாசமாக உலாவி வருவார்.அத்தகைய சமயங்களில் படகில் ஓரே குதூகலமாயிருக்கும். வீணா
கானமும் பாணர்களில் கீதமும் கலந்து காவேரி வெள்ளத்தோடு போட்டியிட்டுக் கொண்டு
பெருகும். இடையிடையே யாரேனும் ஏதேனும் வேடிக்கை செய்வார்கள். உடனே கலகலவென்று
சிரிப்பின் ஒலி கிளம்பிக் காவேரிப் பிரவாகத்தில் சலசலப்பு ஒலியுடன் ஒன்றாகும்.
சிலசமயம் பெரியவர்கள் தங்களுக்குள் பேசி மகிழ்வார்கள். படகில் ஒரு
பக்கத்தில் குழந்தைகள் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள். சில சமயம்
எல்லோருமாகச் சேர்ந்து வேடிக்கை விநோதங்களில் ஈடுபட்டுத் தங்களை மறந்து
களிப்பார்கள். ஒருநாள் அரண்மனைப் படகில் சக்கரவர்த்தியும் ராணிகளும் குழந்தைகளும்
உட்கார்ந்து காவேரியில் உல்லாசப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று,
"குழந்தை எங்கே? குழந்தை அருள்மொழி எங்கே?" என்று ஒரு குரல் எழுந்தது. இந்தக் குரல்
குந்தவையின் குரல்தான் அருள்மொழிக்கு அப்போது வயது ஐந்து. குந்தவைக்கு வயது எழு.
அரண்மனையில் அனைவருக்கும் கண்ணினும் இனிய செல்லக் குழந்தை அருள்மொழி. ஆனால்
எல்லாரிலும் மேலாக அவனிடம் வாஞ்சை உடையவள் அவன் தமக்கை குந்தவை. படகில் குழந்தையைக்
காணோம் என்பதைக் குந்தவைதான் முதலில் கவனித்தாள். உடனே மேற்கண்டவாறு கூச்சலிட்டாள்.
எல்லாரும் கதிகலங்கிப் போனார்கள். படகில் அங்குமிங்கும் தேடினார்கள். ஆனால்
அரண்மனைப் படகில் அதிகமாகத் தேடுவதற்கு இடம் எங்கே? சுற்றிச் சுற்றித் தேடியும்
குழந்தையைக் காணவில்லை. குந்தவையும், ஆதித்தனும் அலறினார்கள். ராணிகள்
புலம்பினார்கள், தோழிமார்கள் அரற்றினார்கள்.படகோட்டிகளில் சிலர் காவேரி வெள்ளத்தில்
குதித்துத் தேடினார்கள். சுந்தர சோழரும் அவ்வாறே குதித்துத் தேடலுற்றார். ஆனால்
எங்கே என்று தேடுவது? ஆற்று வெள்ளம் குழந்தையை எவ்வளவு தூரம் அடித்துக்கொண்டு
போயிருக்கும் என்று யார் கண்டது? குழந்தை எப்போது வெள்ளத்தில் விழுந்தது என்பதுதான்
யாருக்குத் தெரியும்? நோக்கம், குறி என்பது ஒன்றுமில்லாமல் காவேரியில்
குதித்தவர்கள் நாலாபுறமும் பாய்ந்து துழாவினார்கள். குழந்தை அகப்படவில்லை. இதற்குள்
படகில் இருந்த ராணிகள் - தோழிமார்களில் சிலர் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார்கள்.
அவர்களைக் கவனிப்பார் இல்லை. உணர்ச்சியோடு இருந்த மற்றவர்கள் 'ஐயோ!' என்று அழுது
புலம்பிய சோகக் குரல் காவேரி நதியின் ஓங்காரக் குரலை அடக்கிக்கொண்டு மேலெழுந்தது.
நதிக்கரை மரங்களில் வசித்த பறவைகள் அதைக் கேட்டுத் திகைத்து மோனத்தில் ஆழ்ந்தன.
சட்டென்று ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. படகுக்குச் சற்றுத் தூரத்தில்
ஆற்று வெள்ளத்தின் மத்தியில் அது தெரிந்தது. பெண் உருவம் ஒன்று இரண்டு கைகளிலும்
குழந்தையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றது.அந்த மங்கையின் வடிவம்
இடுப்புவரையில் தண்ணீரில் மறைந்திருந்தது. அப்பெண்ணின் பொன் முகமும், மார்பகமும்,
தூக்கிய கரங்களும் மட்டுமே மேலே தெரிந்தன. அவற்றிலும் பெரும் பகுதியைக் குழந்தை
மறைத்துக் கொண்டிருந்தது. எல்லாரையும் போல் சுந்தர சோழரும் அந்தக் காட்சியைப்
பார்த்தார். உடனே பாய்ந்து நீந்தி அந்தத் திசையை நோக்கிச் சென்றார். கைகளை நீட்டிக்
குழந்தையை வாங்கிக் கொண்டார். இதற்குள் படகும் அவர் அருகில் சென்றுவிட்டது.
படகிலிருந்தவர்கள் குழந்தையைச் சுந்தர சோழரிடமிருந்து வாங்கிக்
கொண்டார்கள்.சக்கரவர்த்தியையும் கையைப் பிடித்து ஏற்றி விட்டார்கள். சக்கரவர்த்தி
படகில் ஏறியதும் நினைவற்று விழுந்துவிட்டார். அவரையும், குழந்தையையும் கவனிப்பதில்
அனைவரும் ஈடுபட்டார்கள். குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்த மாதரசி என்னவானாள்?
என்று யாரும் கவனிக்கவில்லை. அவளுடைய உருவம் எப்படியிருந்தது? என்று அடையாளம்
சொல்லும்படி யாரும் கவனித்துப் பார்க்கவும் இல்லை. "குழந்தையைக் காப்பாற்றியவள்
நான்!" என்று பரிசுகேட்பதற்கு அவள் வரவும் இல்லை. ஆகவே காவேரி நதியாகிய தெய்வந்தான்
இளவரசர் அருள்மொழிவர்மரைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கவேண்டும் என்று அனைவரும் ஒரு
முகமாக முடிவு கட்டினார்கள். ஆண்டுதோறும் அந்த நாளில் பொன்னி நதிக்குப் பூஜை
போடவும் ஏற்பாடாயிற்று. அதுவரை அரண்மனைச் செல்வனாயிருந்த அருள்மொழிவர்மன்
அன்றுமுதலாவது 'பொன்னியின் செல்வன்' ஆனான். அச்சம்பவத்தை அறிந்த அரச குடும்பத்தார்
அனைவரும் பெரும்பாலும் 'பொன்னியின் செல்வன்' என்றே அருள்மொழிவர்மனை அழைத்து
வந்தார்கள்.
பக்க
தலைப்பு
பதினான்காம் அத்தியாயம். இரண்டு பூரண சந்திரர்கள்
அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத்
தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர
மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன்? சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு,
அறிவு, தயாளம் முதலிய குணங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது
ஏதேனும் ஒரு வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டுப் பேசாதவர்களும் இல்லை.
இந்த வருஷம் நவராத்திரி வைபவத்துக்கு இளவரசி தஞ்சை அரண்மனையில் வந்து இருப்பார்
என்ற வதந்தி முன்னமே பரவி மக்களின் ஆவலை வளர்த்திருந்தது. எனவே, இன்றைக்கு
வருகிறார் என்று தெரிந்ததும் தஞ்சைக் கோட்டை வாசலில் ஒரு ஜன சமுத்திரமே
காத்துக்கொண்டிருந்தது. பூரண சந்திரனுடைய உதயத்தை எதிர்பார்த்து ஆஹ்லாத ஆரவாரம்
செய்யும் ஜலசமுத்திரத்தைப் போல் இந்த ஜனசமுத்திரமும் ஆர்வம் மிகுந்து ஆரவாரம்
செய்து கொண்டிருந்தது.
கடைசியில், பூரணசந்திரனும் உதயமாயிற்று. ஏன்? இரண்டு
நிலாமதியங்கள் ஒரே சமயத்தில் உதயமாயின. தஞ்சைக் கோட்டை வாசலண்டை குந்தவை தேவி தன்
பரிவாரத்துடன் வந்து சேர்ந்தபோது, கோட்டைக் கதவுகள் தடால் என்று திறந்தன.
உள்ளேயிருந்து தேவியை வரவேற்று அழைத்துப் போவதற்காக அரண்மனைப் பரிவாரங்கள்
வௌிவந்தன. அந்தப் பரிவாரங்களின் முன்னிலையில் இருபழுவேட்டரையர்களும் இருந்தார்கள்.
அது மட்டுமல்ல; அவர்களுக்குப் பின்னால், முத்துப்பதித்த தந்தப் பல்லக்கு ஒன்றும்
வந்தது.அதன் பட்டுத்திரைகள் விலகியதும் உள்ளே பழுவூர் இளைய ராணி நந்தினிதேவியின்
சுந்தர மதிவதனம் தெரிந்தது.
குந்தவை யானையிலிருந்தும் நந்தினி
பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு
முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள்.
சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம்
கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள்.
நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின்
திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள
வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன்
வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின்
இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று
தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு
பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம்
ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன்
பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு
மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின்
அரசி" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.
இப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும்
தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல
முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில |