|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Tamil Ilakkanam including Tolkappiyam: இலக்கணம் - தொல்காப்பியம் > முதல் பாகம் - எழுத்திகாரம் > இரண்டாம் பாகம் - சொல்லதிகாரம் > மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்
தொல்காப்பியரின் 'தொல்காப்பியம்'
மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்
Etext Preparation & PDF version: Dr.K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Proof-reading & Web version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu© Project Madurai 1999-2001Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
1. அகத்திணையியல்
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழு திணை என்ப.1
அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
படு திரை வையம் பாத்திய பண்பே.2
முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை.3
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே.4
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.5
காரும் மாலையும் முல்லை.
6
குறிஞ்சி,
கூதிர் யாமம் என்மனார் புலவர்.7
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப.
8
வைகறை விடியல் மருதம்.
9
எற்பாடு,
நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்.10
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே.11
பின்பனிதானும் உரித்து என மொழிப.
12
இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும் என்மனார் புலவர்.13
திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே
நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப
புலன் நன்கு உணர்ந்த புலமையோரே.14
உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே.
15
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே.16
கொண்டு தலைக்கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும்
உண்டு என மொழிப ஓர் இடத்தான.17
கலந்த பொழுதும் காட்சியும் அன்ன.
18
முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே.
19
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியடு தொகைஇ
அவ் வகை பிறவும் கரு என மொழிப.20
எந் நில மருங்கின் பூவும் புள்ளும்
அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்.21
பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணை நிலைப் பெயரே.22
ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே.23
ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை
ஆனா வகைய திணை நிலைப் பெயரே.24
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இல புறத்து என்மனார் புலவர்.25
ஏவல் மரபின் ஏனோரும் உரியர்
ஆகிய நிலைமை அவரும் அன்னர்.26
ஓதல் பகையே தூது இவை பிரிவே.
27
அவற்றுள்,
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.28
தானே சேறலும் தன்னொடு சிவணிய
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.29
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையான்
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்
இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே.30
மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே.
31
மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப.
32
உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான.
33
வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே.34
பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே.
35
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான.
36
முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை.
37
எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான.38
தன்னும் அவனும் அவளும் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ் வழி உரிய.39
ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்
தாமே செல்லும் தாயரும் உளரே.40
அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே.
41
தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்
போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும்
நீக்கலின் வந்த தம் உறு விழுமமும்
வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித்
தாய் நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை
அழிந்தது களை என மொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு
என்று இவை எல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன.42
பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
ஊரது சார்பும் செல்லும் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்து எதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்
தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்
கண்டோர் மொழிதல் கண்டது என்ப.43
ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்
ஒன்றிய மொழியடு வலிப்பினும் விடுப்பினும்
இடைச் சுர மருங்கின் அவள் தமர் எய்திக்
கடைக் கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட
அப் பால் பட்ட ஒரு திறத்தானும்
நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்
வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு
ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்
தூது இடையிட்ட வகையினானும்
ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்
மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்
பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி
இரத்தலும் தெளித்தலும் என இரு வகையடு
உரைத் திற நாட்டம் கிழவோன் மேன.44
எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே.
45
நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்.
46
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே.
47
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப.48
உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது ஆகும் திணை உணர் வகையே.49
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
கொள்ளும் என்ப குறி அறிந்தோரே.50
உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக என
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்.51
ஏனை உவமம் தான் உணர் வகைத்தே.
52
காமம் சாலா இளமையோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்
தன்னொடும் அவளடும் தருக்கிய புணர்த்து
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.53
ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.54
முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப.
55
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரியது ஆகும் என்மனார் புலவர்.56
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்.57
புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே.58
2. புறத்திணையியல்
அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்
வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே.1
வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும்.2
படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
புடை கெடப் போகிய செலவே புடை கெட
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய
ஊர் கொலை ஆ கோள் பூசல் மாற்றே
நோய் இன்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம்
தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என
வந்த ஈர் ஏழ் வகையிற்று ஆகும்.3
மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத் திணைப் புறனே.4
வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்
போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மா பெருந்தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி வயவர் ஏத்திய
ஓடாக் கழல் நிலை உளப்பட ஓடா
உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்
மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்
ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்
சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்
வரு தார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று
இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்
வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க
நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று
இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே.5
வஞ்சிதானே முல்லையது புறனே
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
அஞ்சு தகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே.6
இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல்
வயங்கல் எய்திய பெருமையானும்
கொடுத்தல் எய்திய கொடைமையானும்
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்
மாராயம் பெற்ற நெடுமொழியானும்
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்
வரு விசைப் புனலைக் கற் சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும்
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்
அழி படை தட்டோர் தழிஞ்சியடு தொகைஇ
கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே.7
உழிஞைதானே மருதத்துப் புறனே
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனை நெறி மரபிற்று ஆகும் என்ப.8
அதுவேதானும் இரு நால் வகைத்தே.
9
கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
தொல் எயிற்கு இவர்தலும் தோலது பெருக்கமும்
அகத்தோன் செல்வமும் அன்றியும் முரணிய
புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட
ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர்
வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட
சொல்லப்பட்ட நால் இரு வகைத்தே.10
குடையும் வாளும் நாள்கோள் அன்றி
மடை அமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச்
சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு
முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்
நீர்ச் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று
ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்
மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும்
இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்
வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற
தொகைநிலை என்னும் துறையடு தொகைஇ
வகை நால் மூன்றே துறை என மொழிப.11
தும்பைதானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப.12
கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையடு
இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே.13
தானை யானை குதிரை என்ற
நோனார் உட்கும் மூ வகை நிலையும்
வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும்
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்
ஒருவன் ஒருவனை உடை படை புக்கு
கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து
பாழி கொள்ளும் ஏமத்தானும்
களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு
பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து
இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும்
செருவகத்து இறைவன் வீழ்ந்தென சினைஇ
ஒருவன் மண்டிய நல் இசை நிலையும்
பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.14
வாகைதானே பாலையது புறனே
தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப.15
அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐ வகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்
பால் அறி மரபின் பொருநர்கண்ணும்
அனை நிலை வகையடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலைபெற்றது என்மனார் புலவர்.16
கூதிர் வேனில் என்று இரு பாசறைக்
காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்
ஏரோர் களவழி அன்றி களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர்
வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்
ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்
பெரும் பகை தாங்கும் வேலினானும்
அரும் பகை தாங்கும் ஆற்றலானும்
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்
ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து
தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்
ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்
பகட்டினானும் ஆவினானும்
துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்
கடி மனை நீத்த பாலின்கண்ணும்
எட்டு வகை நுதலிய அவையகத்தானும்
கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்
இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்
பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்
பொருளடு புணர்ந்த பக்கத்தானும்
அருளடு புணர்ந்த அகற்சியானும்
காமம் நீத்த பாலினானும் என்று
இரு பாற் பட்ட ஒன்பதின் துறைத்தே.17
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
பாங்கு அருஞ் சிறப்பின் பல் ஆற்றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே.18
மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்
புண் கிழித்து முடியும் மறத்தினானும்
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்
இன்னன் என்று இரங்கிய மன்னையானும்
இன்னது பிழைப்பின் இது ஆகியர் எனத்
துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்
இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்
நீத்த கணவன் தீர்த்த வேலின்
பேஎத்த மனைவி ஆஞ்சியானும்
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்
முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்
தலையடு முடிந்த நிலையடு தொகைஇ
ஈர் ஐந்து ஆகும் என்ப பேர் இசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசல் மயக்கத்தானும்
தாமே எய்திய தாங்க அரும் பையுளும்
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதானந்தமும்
நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனி மகள் புலம்பிய முதுபாலையும்
கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்
காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்
சொல் இடையிட்ட பாலை நிலையும்
மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த
தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்
பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே.19
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடும் காலை நால் இரண்டு உடைத்தே.20
அமரர்கண் முடியும் அறு வகையானும்
புரை தீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப.21
வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே.22
காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.23
குழவி மருங்கினும் கிழவது ஆகும்.
24
ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப
வழக்கொடு சிவணிய வகைமையான.25
மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.26
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.27
கொற்றவள்ளை ஓர் இடத்தான.
28
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்
சேய் வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்
கண்படை கண்ணிய கண்படை நிலையும்
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
வேலை நோக்கிய விளக்கு நிலையும்
வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும்
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்
கைக்கிளை வகையடு உளப்படத் தொகைஇ
தொக்க நான்கும் உள என மொழிப.29
தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்
சிறந்த நாளினில் செற்றம் நீக்கி
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்
மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி
நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே.30
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.1ஒன்றே வேறே என்று இரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே.2
சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
இழிந்துழி இழிபே சுட்டலான.3
வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று
அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ
நின்றவை களையும் கருவி என்ப.4
நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்.5
குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின்
ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர்.6
பெருமையும் உரனும் ஆடூஉ மேன.
7
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப.8
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபினவை களவு என மொழிப.9
முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
நல் நயம் உரைத்தல் நகை நனி உறாஅ
அந் நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்.10
மெய் தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்
இடம் பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ
பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும்
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்
நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்
குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்
ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்
நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி
குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்
தண்டாது இரப்பினும் மற்றைய வழியும்
சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையினும்
அறிந்தோள் அயர்ப்பின் அவ் வழி மருங்கின்
கேடும் பீடும் கூறலும் தோழி
நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி
மடல் மா கூறும் இடனுமார் உண்டே.11
பண்பின் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்
அன்புற்று நகினும் அவட் பெற்று மலியினும்
ஆற்றிடை உறுதலும் அவ் வினைக்கு இயல்பே.12
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப.
13
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.
14
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.
15
முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவல் அருஞ் சிறப்பின் ஐந் நிலம் பெறுமே.16
இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்
காணா வகையின் பொழுது நனி இகப்பினும்
தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின்
காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி
வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்
புகாக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி
பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்
வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும்
தாளாண் எதிரும் பிரிவினானும்
நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரை தீர் கிளவி புல்லிய எதிரும்
வரைவு உடன்படுதலும் ஆங்கு அதன் புறத்துப்
புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ
கிழவோள் மேன என்மனார் புலவர்.17
காமத் திணையின் கண் நின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள்வயினான.18
காமம் சொல்லா நாட்டம் இன்மையின்
ஏமுற இரண்டும் உள என மொழிப.19
சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்
அல்ல கூற்றுமொழி அவள்வயினான.20
மறைந்து அவற் காண்டல் தற் காட்டுறுதல்
நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல்
பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைப்பட்டுக் கலங்கினும் நாணு மிக வரினும்
இட்டுப் பிரிவு இரங்கினும் அருமை செய்து அயர்ப்பினும்
வந்தவழி எள்ளினும் விட்டு உயிர்த்து அழுங்கினும்
நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்
கூறிய வா`யில் கொள்ளாக் காலையும்
மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்
உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர் செல
வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும்
நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்
அருமை சான்ற நால் இரண்டு வகையின்
பெருமை சான்ற இயல்பின்கண்ணும்
பொய் தலை அடுத்த மடலின்கண்ணும்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும்
குறியின் ஒப்புமை மருடற்கண்ணும்
வரைவு தலைவரினும் களவு அறிவுறினும்
தமர் தற் காத்த காரண மருங்கினும்
தன் குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித்
தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும்
வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும்
பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்
அழிவு தலைவந்த சிந்தைக்கண்ணும்
காமம் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும்
ஏமம் சான்ற உவகைக்கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும்
அன்னவும் உளவே ஓர் இடத்தான.21
வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
உரை எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும்
தானே கூறும் காலமும் உளவே.22
உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவன் உள்வழிப் படினும்
தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும்
ஆ வகை பிறவும் தோன்றுமன் பொருளே.23
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும்
குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப்
பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும்
அருமையின் அகற்சியும் அவள் அறிவுறுத்துப்
பின் வா என்றலும் பேதைமை ஊட்டலும்
முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும்
அஞ்சி அச்சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு
எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும்
வந்த கிழவனை மாயம் செப்பிப்
பொறுத்த காரணம் குறித்த காலையும்
புணர்ந்த பின் அவன்வயின் வணங்கற்கண்ணும்
குறைந்து அவட் படரினும் மறைந்தவள் அருக
தன்னொடும் அவளடும் முதல் மூன்று அளைஇ
பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்
நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்
எண்ண அரும் பல் நகை கண்ணிய வகையினும்
புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்
புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்
ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்
செங் கடு மொழியான் சிதைவுடைத்து ஆயினும்
என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ
அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்
ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்
காப்பின் கடுமை கையற வரினும்
களனும் பொழுதும் வரை நிலை விலக்கி
காதல் மிகுதி உளப்படப் பிறவும்
நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி
அவன்வயின் தோன்றிய கிளவியடு தொகைஇ
அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்
ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்து
பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்
அவன் விலங்குறினும் களம் பெறக் காட்டினும்
பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும்
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப்
புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்
வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும்
ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட
பாங்குற வந்த நால் எட்டு வகையும்
தாங்க அருஞ் சிறப்பின் தோழி மேன.24
களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்
அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்
காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்
தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும்
போக்கு உடன் அறிந்த பின் தோழியடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்
பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும்
இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும்
இன்ன வகையின் பதின்மூன்று கிளவியடு
அன்னவை பிறவும் செவிலி மேன.25
தாய்க்கும் வரையார் உணர்வு உடம்படினே.
26
கிழவோன் அறியா அறிவினள் இவள் என
மை அறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்
ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே.27
தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை
பிற நீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந் நீர் போலும் உணர்விற்று என்ப.28
காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின்
தாமே தூதுவர் ஆகலும் உரித்தே.29
அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்
களம் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்
தான் செலற்கு உரிய வழி ஆகலான.30
தோழியின் முடியும் இடனுமார் உண்டே.
31
முந் நாள் அல்லது துணை இன்று கழியாது
அந் நாள் அகத்தும் அது வரைவு இன்றே.32
பல் நூறு வகையினும் தன் வயின் வரூஉம்
நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின்
துணைச் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்
துணையோர் கருமம் ஆகலான.33
ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின்
தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்.34
தோழிதானே செவிலி மகளே.
35
சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே.
36
குறையுற உணர்தல் முன் உற உணர்தல்
இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் என
மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே.37
அன்ன வகையான் உணர்ந்த பின் அல்லது
பின்னிலை முயற்சி பெறாள் என மொழிப.38
முயற்சிக் காலத்து அதற்பட நாடி
புணர்த்தல் ஆற்றலும் அவள்வயினான.39
குறி எனப்படுவது இரவினும் பகலினும்
அறியக் கிளந்த ஆற்றது என்ப.40
இரவுக் குறியே இல்லகத்துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே
மனையகம் புகாஅக் காலையான.41
பகல் புணர் களனே புறன் என மொழிப
அவள் அறிவு உணர வரு வழியான.42
அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே
அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே.43
ஆங்கு ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே
ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான.44
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை.45
ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும்
ஊறும் உளப்பட அதன் ஓரன்ன.46
தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப.
47
தாய் அறிவுறுதல் செவிலியடு ஒக்கும்.
48
அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்
அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும்.49
வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று
ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே.50
வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும்
ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக
வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை.51
கற்பு எனப்படுவது கரணமொடு புணர
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே.1
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன் போகிய காலையான.2
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.3
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.4
கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்
நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ
குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்
நாமக் காலத்து உண்டு எனத் தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ
சொல்லுறு பொருளின்கண்ணும் சொல் என
ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என
அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணும்
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்
அந்தரத்து எழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்
அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும்
தான் அவட் பிழைத்த பருவத்தானும்
நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி
தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும்
புதல்வற் பயந்த புனிறு தீர் பொழுதின்
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்
செய் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்
பயம் கெழு துணை அணை புல்லி புல்லாது
உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி
அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய இரவினும்
உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளைப்
பிற பிற பெண்டிரின் பெயர்த்தற்கண்ணும்
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
பரிவின் நீக்கிய பகுதிக்கண்ணும்
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்
சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும்
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்
தான் அவட் பிழைத்த நிலையின்கண்ணும்
உடன் சேறல் செய்கையடு அன்னவை பிறவும்
மடம் பட வந்த தோழிக்கண்ணும்
வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்
மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்
அவ் வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும்
பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்
காமக் கிழத்தி மனையோள் என்று இவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்
சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி
இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்
அருந் தொழில் முடித்த செம்மல் காலை
விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும்
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்கண்ணும்
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ
பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்
எண்ண அருஞ் சிறப்பின் கிழவோன் மேன.5
அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்
ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும்
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்
பெருமையின் திரியா அன்பின்கண்ணும்
கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின்
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
நளியின் நீக்கிய இளி வரு நிலையும்
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி
இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி
எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்ணும்
செல்லாக் காலை செல்க என விடுத்தலும்
காமக் கிழத்தி தன் மகத் தழீஇ
ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும்
சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி
அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை
புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்
தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால்
அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்
கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது
நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ
பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்று என
மாதர் சான்ற வகையின்கண்ணும்
தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்
தன்வயின் சிறைப்பினும் அவன் வயின் பிரிப்பினும்
இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும்
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை
வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையடு தொகைஇ
கிழவோள் செப்பல் கிழவது என்ப.6
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து
இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும்.7
தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்
ஆவயின் நிகழும் என்மனார் புலவர்.8
பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த
தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்ணும்
அற்றம் அழிவு உரைப்பினும் அற்றம் இல்லாக்
கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்
சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்
அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை
அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்
பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி
இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்
வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்
மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும்
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்
சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்
பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து
பெறு தகை இல்லாப் பிழைப்பினும் அவ் வழி
உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய
கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்
உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்
உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று
தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எளிமைக் காலத்து இரக்கத்தானும்
பாணர் கூத்தர் விறலியர் என்று இவர்
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்
பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய
மரபு உடை எதிரும் உளப்பட பிறவும்
வகை பட வந்த கிளவி எல்லாம்
தோழிக்கு உரிய என்மனார் புலவர்.9
புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்
பல் வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும்
காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின்
தாய் போல் தழீஇக் கழறி அம் மனைவியைக்
காய்வு இன்று அவன்வயின் பொருத்தற்கண்ணும்
இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து
பின்னர் வந்த வாயிற்கண்ணும்
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகை எனக் குறித்த கொள்கைக்கண்ணும்
எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும்
கண்ணிய காமக்கிழத்தியர் மேன.10
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய.11
கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக்கு உரிய ஆகும் என்ப.12
சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய.
13
இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்
கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின்.14
உணர்ப்பு வரை இறப்பினும் செய் குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய.15
புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்
சொலத் தகு கிளவி தோழிக்கு உரிய.16
பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி
மடத் தகு கிழமை உடைமையானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியள்.17
அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி
அகம் மலி ஊடல் அகற்சிக்கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.18
காமக் கடப்பினுள் பணிந்த கிளவி
காணும் காலை கிழவோற்கு உரித்தே
வழிபடு கிழமை அவட்கு இயலான.19
அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி
பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே.20
களவும் கற்பும் அலர் வரைவு இன்றே.
21
அலரின் தோன்றும் காமத்து மிகுதி.
22
கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே.
23
மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை.24
மனைவி முன்னர்க் கையறு கிளவி
மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே.25
முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்.26
தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்
பல் ஆற்றானும் ஊடலின் தகைத்தலும்
உறுதி காட்டலும் அறிவு மெய்ந் நிறுத்தலும்
ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும்
அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன.27
நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் நிலை உரைத்தல்
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய.28
ஆற்றது பண்பும் கருமத்து விளைவும்
ஏவல் முடிவும் வினாவும் செப்பும்
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்
தோற்றம் சான்ற அன்னவை பிறவும்
இளையோர்க்கு உரிய கிளவி என்ப.29
உழைக் குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்
நடக்கை எல்லாம் அவர்கண் படுமே.30
பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத்
தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும்
இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும்
இறந்தது நினைஇக் கிழவோன் ஆங்கண்
கலங்கலும் உரியன் என்மனார் புலவர்.31
தாய் போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய் மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப
கவவொடு மயங்கிய காலையான.32
அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்
மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும்
செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான.33
எண் அரும் பாசறை பெண்ணொடு புணரார்.
34
புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும்.
35
காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்
செலவு உறு கிளவியும் செலவு அழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய.36
எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப.37
அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின்
சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர்.38
தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்
எத் திறத்தானும் கிழத்திக்கு இல்லை
முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே.39
கிழவி முன்னர்த் தற் புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய என்ப.40
மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே.
41
குறித்து எதிர் மொழிதல் அ·கித் தோன்றும்.
42
துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன்
வன்புறுத்தல்லது சேறல் இல்லை.43
செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே
வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும்.44
கிழவி நிலையே வினையிடத்து உரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்45
பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்
நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான.46
வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது.
47
வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே.
48
ஏனைப் பிரிவும் அவ் இயல் நிலையும்.
49
யாறும் குளனும் காவும் ஆடி
பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப.50
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களடு துவன்றி
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.51
தோழி தாயே பார்ப்பா