Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Tamil Ilakkanam including Tolkappiyam: இலக்கணம் - தொல்காப்பியம் > முதல் பாகம் - எழுத்திகாரம் > இரண்டாம் பாகம் - சொல்லதிகாரம் > மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்

tolkAppiyam of tolkAppiyar
part I- ezuttatikAram

தொல்காப்பியரின் 'தொல்காப்பியம்'
முதல் பாகம் - எழுத்திகாரம்



Etext Preparation & PDF version: Dr.K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Proof-reading & Web version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu

© Project Madurai 1999-2001 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


சிறப்புப்பாயிரம்

வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

5

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய

10

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே.

15

முதல் பாகம் - எழுத்ததிகாரம்

1. நூல் மரபு

எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்ப?து என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.

1

அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.

2

அவற்றுள்,
அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப.

3

ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.

4

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே.

5

நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.

6

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.

7

ஔகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப.

8

னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப.

9

மெய்யடு இயையினும் உயிர் இயல் திரியா.

10

மெய்யின் அளபே அரை என மொழிப.

11

அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.

12

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியும் காலை.

13

உட் பெறு புள்ளி உரு ஆகும்மே.

14

மெய்யின் இயற்கை புள்ளியடு நிலையல்.

15

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.

16

புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே.

17

மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே.

18

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற.

19

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன.

20

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள.

21

அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை.

22

ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்
க ச ப என்னும் மூ எழுத்து உரிய.

23

அவற்றுள்,
ல ள?கான் முன்னர் ய வவும் தோன்றும்.

24

ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே.

25

அவற்றுள்,
ண ன?கான் முன்னர்
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய.

26

ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
ய?கான் நிற்றல் மெய் பெற்றன்றே.

27

ம?கான் புள்ளி முன் வவ்வும் தோன்றும்.

28

ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும்.

29

மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே.

30

அ இ உ அம் மூன்றும் சுட்டு.

31

ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.

32

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.

33

2. மொழி மரபு

குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்
யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.

1

புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.

2

நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே.

3

இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே
கடப்பாடு அறிந்த புணரியலான.

4

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே.

5

ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும்.

6

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அ?காக் காலையான.

7

குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே.

8

ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகர உகரம் இசை நிறைவு ஆகும்.

9

நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி.

10

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே.

11

ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே.

12

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.

13

தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந் நிலை மயக்கம் மானம் இல்லை.

14

ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும்.

15

அவற்றுள்,
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா.

16

குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல.

17

செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும்.

18

னகாரை முன்னர் மகாரம் குறுகும்.

19

மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்
எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்.

20

அகர இகரம் ஐகாரம் ஆகும்.

21

அகர உகரம் ஔகாரம் ஆகும்.

22

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும்.

23

ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே
தேரும் காலை மொழிவயினான.

24

இகர யகரம் இறுதி விரவும்.

25

பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும்.

26

உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா.

27

க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே.

28

சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே.

29

உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
வ என் எழுத்தொடு வருதல் இல்லை.

30

ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய.

31

ஆவொடு அல்லது யகரம் முதலாது.

32

முதலா ஏன தம் பெயர் முதலும்.

33

குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்.

34

முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது
அப் பெயர் மருங்கின் நிலையியலான.

35

உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும்.

36

க வவொடு இயையின் ஔவும் ஆகும்.

37

எ என வரும் உயிர் மெய் ஈறாகாது.

38

ஒவ்வும் அற்றே ந அலங்கடையே.

39

ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை.

40

உ ஊகாரம் ந வவொடு நவிலா.

41

உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே.

42

உப் பகாரம் ஒன்று என மொழிப
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே.

43

எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே.

44

ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
அப் பதினொன்றே புள்ளி இறுதி.

45

உச் சகாரமொடு நகாரம் சிவணும்.

46

உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே
அப் பொருள் இரட்டாது இவணையான.

47

வகரக் கிளவி நான் மொழி ஈற்றது.

48

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்ப?து என்ப
புகர் அறக் கிளந்த அ?றிணை மேன.

49

 

3. பிறப்பியல்

 

உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்படத் தெரியும் காட்சியான.

1

அவ் வழி,
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.

2

அவற்றுள்,
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.

3

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
அவைதாம்,
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.

4

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.

5

தம்தம் திரிபே சிறிய என்ப.

6

ககார ஙகாரம் முதல் நா அண்ணம்.

7

சகார ஞகாரம் இடை நா அண்ணம்.

8

டகார ணகாரம் நுனி நா அண்ணம்.

9

அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின.

10

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்.

11

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
ற?கான் ன?கான் ஆயிரண்டும் பிறக்கும்.

12

நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

13

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

14

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்.

15

பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்.

16

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்.

17

மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும்.

18

சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும்.

19

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே.

20

அ?து இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே.

21

4. புணரியல்

 

மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்
இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருப?து
அறு நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே உயிர் என்று ஆயீர் இயல.

1

அவற்றுள்,
மெய் ஈறு எல்லாம் புள்ளியடு-நிலையல்.

2

குற்றியலுகரமும் அற்று என மொழிப.

3

உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே.

4

உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று
இவ் என அறியக் கிளக்கும் காலை
நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று
ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே.

5

அவற்றுள்,
நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என
ஆங்கு அந் நான்கே மொழி புணர் இயல்பே.

6

அவைதாம்,
மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று
இவ் என மொழிப திரியும் ஆறே.

7

நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும்
அடையடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய.

8

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவே புணர் நிலைச் சுட்டே.

9

வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்
ஒழுக்கல் வலிய புணரும் காலை.

10

ஐ ஒடு கு இன் அது கண் என்னும்
அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே.

11

வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு
ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும்.

12

ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறு ஆகு அகர முனைக் கெடுதல் வேண்டும்.

13

வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே.

14

உயர்திணைப் பெயரே அ?றிணைப் பெயர் என்று
ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே.

15

அவற்று வழி மருங்கின் சாரியை வருமே.

16

அவைதாம்,
இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன் என் கிளவி உளப்பட பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே.

17

அவற்றுள்,
இன்னின் இகரம் ஆவின் இறுதி
முன்னர்க் கெடுதல் உரித்தும் ஆகும்.

18

அளபு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்மிசை
ன?கான் ற?கான் ஆகிய நிலைத்தே.

19

வ?கான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன்
அ?கான் நிற்றல் ஆகிய பண்பே.

20

ன?கான் ற?கான் நான்கன் உருபிற்கு.

21

ஆனின் னகரமும் அதன் ஓரற்றே
நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே.

22

அத்தின் அகரம் அகர முனை இல்லை.

23

இக்கின் இகரம் இகர முனை அற்றே.

24

ஐயின் முன்னரும் அவ் இயல் நிலையும்.

25

எப் பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி
அக்கின் இறுதி மெய்ம் மிசையடும் கெடுமே
குற்றியலுகரம் முற்றத் தோன்றாது.

26

அம்மின் இறுதி க ச தக் காலை
தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும்.

27

மென்மையும் இடைமையும் வரூஉம் காலை
இன்மை வேண்டும் என்மனார் புலவர்.

28

இன் என வரூஉம் வேற்றுமை உருபிற்கு
இன் என் சாரியை இன்மை வேண்டும்.

29

பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப
வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்
தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்
ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி
சொற் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது
இடை நின்று இயலும் சாரியை இயற்கை
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்.

30

அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்
ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்றே
அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே.

31

காரமும் கரமும் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை.

32

அவற்றுள்,
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே.

33

வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய.

34

ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும்.

35

புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது
மெய்யடும் சிவணும் அவ் இயல் கெடுத்தே.

36

மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும்.

37

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்.

38

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே.

39

அவைதாம்,
முன்னப் பொருள புணர்ச்சிவாயின்
இன்ன என்னும் எழுத்துக் கடன் இலவே.

40

5. தொகைமரபு  

க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும்
மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான்
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே
அன்ன மரபின் மொழிவயினான.

1

ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும்
உயிர் முதல் ஆகிய மொழியும் உளப்பட
அன்றி அனைத்தும் எல்லா வழியும்
நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே.

2

அவற்றுள்,
மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி இறுதியான.

3

ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும்
வினை ஓரனைய என்மனார் புலவர்.

4

மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும்
வரு வழி நின்ற ஆயிரு புள்ளியும்
வேற்றுமை அல் வழித் திரிபு இடன் இலவே.

5

வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி
மேற் கூறு இயற்கை ஆவயினான.

6

ல ன என வரூஉம் புள்ளி முன்னர்
த ந என வரின் ற ன ஆகும்மே.

7

ண ள என் புள்ளி முன் ட ண எனத் தோன்றும்.

8

உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று
ஆயீர் இயல வல்லெழுத்து வரினே.

9

ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும்
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும்
குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே.

10

உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்
புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்
எல்லா வழியும் இயல்பு என மொழிப.

11

அவற்றுள்,
இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே.

12

அ?றிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே.

13

புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்
தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்
மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்
அம் முறை இரண்டும் உரியவை உளவே
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்.

14

மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும்
வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும்
சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும்
சாரியை உள் வழித் தன் உருபு நிலையலும்
சாரியை இயற்கை உறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
அ?றிணை விரவுப்பெயர்க்கு அவ் இயல் நிலையலும்
மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும்
அன்ன பிறவும் தன் இயல் மருங்கின்
மெய் பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப.

15

வேற்றுமை அல்வழி இ ஐ என்னும்
ஈற்றுப் பெயர்க் கிளவி மூ வகை நிலைய
அவைதாம்,
இயல்பு ஆகுநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழ் ஆகுநவும் என்மனார் புலவர்.

16

சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும்
எகர முதல் வினாவின் இகர இறுதியும்
சுட்டுச் சினை நீடிய ஐ என் இறுதியும்
யா என் வினாவின் ஐ என் இறுதியும்
வல்லெழுத்து மிகுநவும் உறழ் ஆகுநவும்
சொல்லிய மருங்கின் உள என மொழிப.

17

நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும்
குறியதன் முன்னர்த் தன் உருபு இரட்டலும்
அறியத் தோன்றிய நெறி இயல் என்ப.

18

ஆறன் உருபினும் நான்கன் உருபினும்
கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை
ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும்
நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன.

19

நும் என் இறுதியும் அந் நிலை திரியாது.

20

உகரமொடு புணரும் புள்ளி இறுதி
யகரமும் உயிரும் வரு வழி இயற்கை.

21

உயிரும் புள்ளியும் இறுதி ஆகி
அளவும் நிறையும் எண்ணும் சுட்டி
உள எனப்பட்ட எல்லாச் சொல்லும்
தம்தம் கிளவி தம் அகப்பட்ட
முத்தை வரூஉம் காலம் தோன்றின்
ஒத்தது என்ப ஏ என் சாரியை.

22

அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு
புரைவது அன்றால் சாரியை இயற்கை.

23

குறை என் கிளவி முன் வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை.

24

குற்றியலுகரக்கு இன்னே சாரியை.

25

அத்து இடை வரூஉம் கலம் என் அளவே.

26

பனை என் அளவும் கா என் நிறையும்
நினையும் காலை இன்னொடு சிவணும்.

27

அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி
உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே
அவைதாம்,
க ச த ப என்றா ந ம வ என்றா
அகர உகரமொடு அவை என மொழிப.

28

ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு எனக்
கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம்
மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி
ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே.

29

பலர் அறி சொல் முன் யாவர் என்னும்
பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை
ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை
ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்
மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே.

30

6. உருபியல்
 

அ ஆ உ ஊ ஏ ஔ என்னும்
அப் பால் ஆறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை.

1

பல்லவை நுதலிய அகர இறு பெயர்
வற்றொடு சிவணல் எச்சம் இன்றே.

2

யா என் வினாவும் ஆயியல் திரியாது.

3

சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே.

4

சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே.

5

யா என் வினாவின் ஐ என் இறுதியும்
ஆயியல் திரியாது என்மனார் புலவர்
ஆவயின் வகரம் ஐயடும் கெடுமே.

6

நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும்
ஆவயின் னகரம் ஒற்று ஆகும்மே.

7

ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை.

8

அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு
அத்தொடும் சிவணும் ஏழன் உருபே.

9

ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை.

10

சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும்
கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே.

11

ஏனை வகரம் இன்னொடு சிவணும்.

12

ம?கான் புள்ளி முன் அத்தே சாரியை.

13

இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே.

14

நூம் என் இறுதி இயற்கை ஆகும்.

15

தாம் நாம் என்னும் மகர இறுதியும்
யாம் என் இறுதியும் அதன் ஓரன்ன
ஆ எ ஆகும் யாம் என் இறுதி
ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்
ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும்.

16

எல்லாம் என்னும் இறுதி முன்னர்
வற்று என் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையும் இறுதியான.

17

உயர்திணை ஆயின் நம் இடை வருமே.

18

எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்
எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்
ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையும் இறுதியான
தம் இடை வரூஉம் படர்க்கை மேன
நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே.

19

தான் யான் என்னும் ஆயீர் இறுதியும்
மேல் முப் பெயரொடும் வேறுபாடு இலவே.

20

அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்தது என்ப உணருமோரே.

21

அன் என் சாரியை ஏழன் இறுதி
முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப.

22

குற்றியலுகரத்து இறுதி முன்னர்
முற்றத் தோன்றும் இன் என் சாரியை.

23

நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும்
அப் பால் மொழிகள் அல் வழியான.

24

அவைதாம்,
இயற்கைய ஆகும் செயற்கைய என்ப.

25

எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்.

26

ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் காலை
ஆன் இடை வரினும் மானம் இல்லை
அ?து என் கிளவி ஆவயின் கெடுமே
உய்தல் வேண்டும் ப?கான் மெய்யே.

27

யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்
ஆய்தம் கெடுதல் ஆவயினான.

28

ஏழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர்
சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும்
ஆவயின் இறுதி மெய்யடும் கெடுமே.

29

புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்
தேரும் காலை உருபொடு சிவணி
சாரியை நிலையும் கடப்பாடு இலவே.

30

7. உயிர்மயங்கியல்
 

அகர இறுதிப் பெயர் நிலை முன்னர்
வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின்
தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே.

1

வினையெஞ்சுகிளவியும் உவமக் கிளவியும்
என என் எச்சமும் சுட்டின் இறுதியும்
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.

2

சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின்
ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும்.

3

ய வ முன் வரினே வகரம் ஒற்றும்.

4

உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது.

5

நீட வருதல் செய்யுளுள் உரித்தே.

6

சாவ என்னும் செய என் எச்சத்து
இறுதி வகரம் கெடுதலும் உரித்தே.

7

அன்ன என்னும் உவமக் கிளவியும்
அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்
செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும்
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
செய்த என்னும் பெயரெஞ்சுகிளவியும்
செய்யிய என்னும் வினையெஞ்சுகிளவியும்
அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்
பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட
அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப.

8

வாழிய என்னும் செய என் கிளவி
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே.

9

உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்.

10

பலவற்று இறுதி நீடு மொழி உளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழியான.

11

தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின்
லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே.

12

வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும்.

13

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.

14

மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே.

15

மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை.

16

அத்து அவண் வரினும் வரை நிலை இன்றே.

17

பலவற்று இறுதி உருபு இயல் நிலையும்.

18

ஆகார இறுதி அகர இயற்றே.

19

செய்யா என்னும் வினையெஞ்சுகிளவியும்
அவ் இயல் திரியாது என்மனார் புலவர்.

20

உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி
மெய்ம்மையாக அகரம் மிகுமே.

21

ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யா என் வினாவும் பலவற்று இறுதியும்
ஏவல் குறித்த உரையசை மியாவும்
தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியடு
அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப.

22

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.

23

குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக் கிளவி.

24

இரா என் கிளவிக்கு அகரம் இல்லை.

25

நிலா என் கிளவி அத்தொடு சிவணும்.

26

யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்
ஆ முப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே.

27

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.

28

மாமரக் கிளவியும் ஆவும் மாவும்
ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன
அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா
னகரம் ஒற்றும் ஆவும் மாவும்

29

ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே.

30

ஆன் முன் வரூஉம் ஈகார பகரம்
தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே.

31

குறியதன் இறுதிச் சினை கெட உகரம்
அறிய வருதல் செய்யுளுள் உரித்தே.

32

இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே.

33

இனி அணி என்னும் காலையும் இடனும்
வினையெஞ்சுகிளவியும் சுட்டும் அன்ன.

34

இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி
நின்ற இகரம் உகரம் ஆதல்
தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே.

35

சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே.

36

பதக்கு முன் வரினே தூணிக் கிளவி
முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே.

37

உரி வரு காலை நாழிக் கிளவி
இறுதி இகரம் மெய்யடும் கெடுமே
டகாரம் ஒற்றும் ஆவயினான.

38

பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு
அத்தும் இன்னும் சாரியை ஆகும்.

39

வளி என வரூஉம் பூதக் கிளவியும்
அவ் இயல் நிலையல் செவ்விது என்ப.

40

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே.

41

புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை.

42

ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே.

43

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
ஒல்வழி அறிதல் வழக்கத்தான.

44

நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு
ஆன் இடை வருதல் ஐயம் இன்றே.

45

திங்கள் முன் வரின் இக்கே சாரியை.

46

ஈகார இறுதி ஆகார இயற்றே.

47

நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்
மீ என மரீஇய இடம் வரை கிளவியும்
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.

48

இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம்
உடன் நிலை மொழியும் உள என மொழிப.

49

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.

50

நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும்
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.

51

உகர இறுதி அகர இயற்றே.

52

சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும்.

53

ஏனவை வரினே மேல் நிலை இயல்பே.

54

சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே.

55

அன்று வரு காலை ஆ ஆகுதலும்
ஐ வரு காலை மெய் வரைந்து கெடுதலும்
செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப.

56

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.

57

எருவும் செருவும் அம்மொடு சிவணி
திரிபு இடன் உடைய தெரியும் காலை
அம்மின் மகரம் செருவயின் கெடுமே
தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை.

58

ழகர உகரம் நீடு இடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயினான.

59

ஒடுமரக் கிளவி உதி மர இயற்றே.

60

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்
ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை.

61

ஊகார இறுதி ஆகார இயற்றே.

62

வினையெஞ்சுகிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்
நினையும் காலை அவ் வகை வரையார்.

63

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.

64

குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்
நிற்றல் வேண்டும் உகரக் கிளவி.

65

பூ என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

66

ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும்.

67

அக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே
தக்க வழி அறிதல் வழக்கத்தான.

68

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்
இன் இடை வரினும் மானம் இல்லை.-

69

எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தேற்றமும் சிறப்பும் அல் வழியான.

70

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்
மேற் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா.

71

ஏகார இறுதி ஊகார இயற்றே.

72

மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும்
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்.

73

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.

74

ஏ என் இறுதிக்கு எகரம் வருமே.

75

சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே.

76

பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும்.

77

ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே.

78

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்.

79

விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்
ஆ முப் பெயரும் சேமர இயல.

80

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
நினையும் காலை அம்மொடு சிவணும்
ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே
மெய் அவண் ஒழிய என்மனார் புலவர்.

81

பனையின் முன்னர் அட்டு வரு காலை
நிலை இன்று ஆகும் ஐ என் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயினான.

82

கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப
கடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி.

83

திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன.

84

மழை என் கிளவி வளி இயல் நிலையும்.

85

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐ என் இறுதி அவா முன் வரினே
மெய்யடும் கெடுதல் என்மனார் புலவர்
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்.

86

ஓகார இறுதி ஏகார இயற்றே.

87

மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும்
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்.

88

ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே.

89

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே
ஒகரம் வருதல் ஆவயினான.

90

இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும்.

91

உருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.

92

ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும்
வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே
அவ் இரு ஈற்றும் உகரம் வருதல்
செவ்விது என்ப சிறந்திசினோரே.

93

8. புள்ளிமயங்கியல்

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே
உகரம் வருதல் ஆவயினான.

1

ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும்.

2

நகர இறுதியும் அதன் ஓரற்றே.

3

வேற்றுமைக்கு உக் கெட அகரம் நிலையும்.

4

வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி
வரும் இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை.

5

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

6

ணகார இறுதி வல்லெழுத்து இயையின்
டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.

7

ஆணும் பெண்ணும் அ?றிணை இயற்கை.

8

ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே.

9

விண் என வரூஉம் காயப் பெயர்வயின்
உண்மையும் உரித்தே அத்து என் சாரியை
செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை.

10

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.

11

கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே.

12

வேற்றுமை அல்வழி எண் என் உணவுப் பெயர்
வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே.

13

முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும்.

14

மகர இறுதி வேற்றுமை ஆயின்
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே.

15

அகர ஆகாரம் வரூஉம் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே.

16

மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே
செல் வழி அறிதல் வழக்கத்தான.

17

இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே.

18

அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும்.

19

அகம் என் கிளவிக்குக் கை முன் வரினே
முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும்
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.

20

இலம் என் கிளவிக்குப் படு வரு காலை
நிலையலும் உரித்தே செய்யுளான.

21

அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி
ஒத்த எண்ணு முன் வரு காலை.

22

அடையடு தோன்றினும் அதன் ஓரற்றே.

23

அளவும் நிறையும் வேற்றுமை இயல.

24

படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்
தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை ஆயின் உருபு இயல் நிலையும்
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.

25

அல்லது கிளப்பின் இயற்கை ஆகும்.

26

அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும்
வேற்றுமை அல் வழிச் சாரியை நிலையாது.

27

மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.

28

உயர்திணை ஆயின் உருபு இயல் நிலையும்.

29

நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே.

30

அல்லதன் மருங்கின் சொல்லும் காலை
உக் கெட நின்ற மெய்வயின் ஈ வர
இ இடை நிலைஇ ஈறு கெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியடு புணர்ந்தே
அப் பால் மொழிவயின் இயற்கை ஆகும்.

31

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.

32

ஈமும் கம்மும் உரும் என் கிளவியும்
ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன.

33

வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும்
தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை-

34

வகாரம் மிசையும் மகாரம் குறுகும்.

35

நாட்பெயர்க் கிளவி மேல் கிளந்தன்ன
அத்தும் ஆன்மிசை வரை நிலை இன்றே
ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர்.

36

னகார இறுதி வல்லெழுத்து இயையின்
றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.

37

மன்னும் சின்னும் ஆனும் ஈனும்
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்.

38

சுட்டு முதல் வயினும் எகரம் முதல் வயினும்
அப் பண்பு நிலையும் இயற்கைய என்ப.

39

குயின் என் கிளவி இயற்கை ஆகும்.

40

எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே.

41

ஏனை எகினே அகரம் வருமே
வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும்.

42

கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல.

43

மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வே.

44

தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின்
மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே
வல்லெழுத்து மிகு வழி இறுதி இல்லை.

45

மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.

46

மெல்லெழுத்து இயையின் இறுதியடு உறழும்.

47

இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும்.

48

ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே.

49

மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந் நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல.

50

வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு
தோற்றம் ஒக்கும் கன் என் கிளவி.

51

இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின்
முதற்கண் மெய் கெட அகரம் நிலையும்
மெய் ஒழித்து அன் கெடும் அவ் இயற்பெயரே.

52

ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயர் ஒற்று அகரம் துவரக் கெடுமே.

53

சிறப்பொடு வரு வழி இயற்கை ஆகும்.

54

அப் பெயர் மெய் ஒழித்து அன் கெடு வழியே
நிற்றலும் உரித்தே அம் என் சாரியை
மக்கள் முறை தொகூஉம் மருங்கினான.

55

தானும் பேனும் கோனும் என்னும்
ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே.

56

தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும்.

57

வேற்றுமை அல் வழிக் குறுகலும் திரிதலும்
தோற்றம் இல்லை என்மனார் புலவர்.

58

அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகுமே.

59

முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
இல் என் கிளவிமிசை றகரம் ஒற்றல்
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே.

60

பொன் என் கிளவி ஈறு கெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுள் மருங்கின் தொடர் இயலான.

61

யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே.

62

தாய் என் கிளவி இயற்கை ஆகும்.

63

மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே.

64

மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே.

65

அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப.

66

ரகார இறுதி யகார இயற்றே.

67

ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய் பெறத் தோன்றும்.

68

சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும்.

69

பீர் என் கிளவி அம்மொடும் சிவணும்.

70

லகார இறுதி னகார இயற்றே.

71

மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும்.

72

அல்வழி எல்லாம் உறழ் என மொழிப.

73

தகரம் வரு வழி ஆய்தம் நிலையலும்
புகர் இன்று என்மனார் புலமையோரே.

74

நெடியதன் இறுதி இயல்புமார் உளவே.

75

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல.

76

இல் என் கிளவி இன்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும்
இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும்
கொளத் தகு மரபின் ஆகு இடன் உடைத்தே.

77

வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே.

78

நாயும் பலகையும் வரூஉம் காலை
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே
உகரம் கெடு வழி அகரம் நிலையும்.-

79

பூல் வேல் என்றா ஆல் என் கிளவியடு
ஆ முப் பெயர்க்கும் அம் இடை வருமே.

80

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.

81

வெயில் என் கிளவி மழை இயல் நிலையும்.

82

சுட்டு முதல் ஆகிய வகர இறுதி
முற்படக் கிளந்த உருபு இயல் நிலையும்.

83

வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும்.

84

மெல்லெழுத்து இயையின் அவ் எழுத்து ஆகும்.

85

ஏனவை புணரின் இயல்பு என மொழிப.

86

ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே.

87

ழகார இறுதி ரகார இயற்றே.

88

தாழ் என் கிளவி கோலொடு புணரின்
அக்கு இடை வருதல் உரித்தும் ஆகும்.

89

தமிழ் என் கிளவியும் அதன் ஓரற்றே.

90

குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின்
பீர் என் கிளவியடு ஓர் இயற்று ஆகும்.

91

பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே.

92

ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும்.

93

அளவும் நிறையும் எண்ணும் வரு வழி
நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும்
கடி நிலை இன்றே ஆசிரியர்க்க.

94

பத்து என் கிளவி ஒற்று இடை கெடு வழி
நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி.

95

ஆயிரம் வரு வழி உகரம் கெடுமே.-

96

நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்
கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே.

97

ஐ அம் பல் என வரூஉம் இறுதி
அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்.

98

உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது.

99

கீழ் என் கிளவி உறழத் தோன்றும்.

100

ளகார இறுதி ணகார இயற்றே.--

101

மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும்.

102

அல்வழி எல்லாம் உறழ் என மொழிப.-

103

ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே
தகரம் வரூஉம் காலையான.

104

நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும்
வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும்
போற்றல் வேண்டும் மொழியுமார் உளவே.

105

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.

106

இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும்.

107

புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல.-

108

மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி
தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே.

109

உணரக் கூறிய புணர் இயல் மருங்கின்
கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே.

110

  9. குற்றியலுகரப்புணரியல்  

ஈர் எழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகு இடன்.

1

அவற்றுள்,
ஈர் ஒற்றுத் தொடர்மொழி இடைத்தொடர் ஆகா.

2

அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
எல்லா இறுதியும் உகரம் நிறையும்.

3

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வரு வழி
தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே.

4

யகரம் வரு வழி இகரம் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது.

5

ஈர் எழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்
வேற்றுமை ஆயின் ஒற்று இடை இனம் மிக
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.

6

ஒற்று இடை இனம் மிகா மொழியுமார் உளவே
அத் திறத்து இல்லை வல்லெழுத்து மிகலே.

7

இடையற்றுத் தொடரும் ஆய்தத்தொடரும்
நடை ஆயியல என்மனார் புலவர்.

8

வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும்
வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகுமே
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம்
வல்லொற்று இறுதி கிளை ஒற்று ஆகும்.

9

மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை.--

10

மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே.

11

ஈர் எழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்
அம் இடை வரற்கும் உரியவை உளவே
அம் மரபு ஒழுகும் மொழிவயினான

12

ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம்
அக் கிளைமொழியும் உள என மொழிப.

13

எண்ணுப்பெயர்க் கிளவி உருபு இயல் நிலையும்.

14

வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்.

15

பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார்.

16

யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய
ஆய்த இறுதியும் உருபு இயல் நிலையும்.

17

முன் உயிர் வரும் இடத்து ஆய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழியான.

18

ஏனை முன் வரினே தான் நிலை இன்றே.

19

அல்லது கிளப்பின் எல்லா மொழியும்
சொல்லிய பண்பின் இயற்கை ஆகும்.

20

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே.

21

சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும்
யா வினா முதலிய மென்றொடர் மொழியும்
ஆயியல் திரியா வல்லெழுத்து இயற்கை.

22

யா வினா மொழியே இயல்பும் ஆகும்.

23

அந் நால் மொழியும் தம் நிலை திரியா.

24

உண்டு என் கிளவி உண்மை செப்பின்
முந்தை இறுதி மெய்யடும் கெடுதலும்
மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும்
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே
வல்லெழுத்து வரூஉம் காலையான.

25

இரு திசை புணரின் ஏ இடை வருமே.

26

திரிபு வேறு கிளப்பின் ஒற்றும் உகரமும்
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர்
ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும்
தெற்கொடு புணரும் காலையான.

27

ஒன்று முதல் ஆக எட்டன் இறுதி
எல்லா எண்ணும் பத்தன் முன் வரின்
குற்றியலுகரம் மெய்யடும் கெடுமே
முற்ற இன் வரூஉம் இரண்டு அலங்கடையே.

28

பத்தன் ஒற்றுக் கெட னகாரம் இரட்டல்
ஒத்தது என்ப இரண்டு வரு காலை.

29

ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது.

30

நிறையும் அளவும் வரூஉம் காலையும்
குறையாது ஆகும் இன் என் சாரியை.

31

ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர்
நின்ற பத்தன் ஒற்றுக் கெட ஆய்தம்
வந்து இடை நிலையும் இயற்கைத்து என்ப
கூறிய இயற்கை குற்றியலுகரம்
ஆறன் இறுதி அல் வழியான.

32

முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும்
உகரம் வருதல் ஆவயினான.

33

இடை நிலை ரகரம் இரண்டு என் எண்ணிற்கு
நடை மருங்கு இன்றே பொருள்வயினான.

34

மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும்
மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும்.

35

நான்கன் ஒற்றே றகாரம் ஆகும்.

36

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்.

37

எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்.

38

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
ப?து என் கிளவி ஆய்த பகரம் கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்.

39

அளந்து அறி கிளவியும் நிறையின் கிளவியும்
கிளந்த இயல தோன்றும் காலை.

40

மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும்.

41

ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும்.

42

க ச த ப முதல் மொழி வரூஉம் காலை.

43

ந ம வ என்னும் மூன்றொடு சிவணி
அகரம் வரினும் எட்டன் முன் இயல்பே.

44

ஐந்தும் மூன்றும் ந ம வரு காலை
வந்தது ஒக்கும் ஒற்று இயல் நிலையே.

45

மூன்றன் ஒற்றே வகாரம் வரு வழி
தோன்றிய வகாரத்து உரு ஆகும்மே.

46

நான்கன் ஒற்றே லகாரம் ஆகும்.

47

ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே.-

48

முதல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு காலை
தவல் என மொழிப உகரக் கிளவி
முதல் நிலை நீடல் ஆவயினான.

49

மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும்
தோன்றிய வகரத்து இயற்கை ஆகும்.

50

மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே
உழக்கு என் கிளவி வழக்கத்தான.

51

ஆறு என் கிளவி முதல் நீடும்மே.

52

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது
இன் பெறல் வேண்டும் சாரியை மொழியே.

53

நூறு முன் வரினும் கூறிய இயல்பே.

54

மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும்.

55

நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா.

56

ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்தற்றே
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
நூறு என் கிளவி நகாரம் மெய் கெட
ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும்.

57

ஆயிரக் கிளவி வரூஉம் காலை
முதல் ஈர் எண்ணின் உகரம் கெடுமே.

58

முதல் நிலை நீடினும் மானம் இல்லை.

59

மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும்.

60

நான்கன் ஒற்றே லகாரம் ஆகும்.

61

ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும்.

62

ஆறன் மருங்கின் குற்றியலுகரம்
ஈறு மெய் ஒழியக் கெடுதல் வேண்டும்.

63

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது
இன் பெறல் வேண்டும் சாரியை மரபே.

64

நூறாயிரம் முன் வரூஉம் காலை
நூறன் இயற்கை முதல் நிலைக் கிளவி.

65

நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு
ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே.

66

அவை ஊர் பத்தினும் அத் தொழிற்று ஆகும்.

67

அளவும் நிறையும் ஆயியல் திரியா
குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும்
முன் கிளந்தன்ன என்மனார் புலவர்.

68

ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே
நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும்.

69

ஆயிரம் வரினே இன் ஆம் சாரியை
ஆவயின் ஒற்று இடை மிகுதல் இல்லை.

70

அளவும் நிறையும் ஆயியல் திரியா.

71

முதல் நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும்
ஞ ந மத் தோன்றினும் ய வ வந்து இயையினும்
முதல் நிலை இயற்கை என்மனார் புலவர்.

72

அதன் நிலை உயிர்க்கும் யா வரு காலை
முதல் நிலை ஒகரம் ஓ ஆகும்மே
ரகரத்து உகரம் துவரக் கெடுமே.

73

இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர்
வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின்
மகர அளவொடு நிகரலும் உரித்தே.

74

ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன்
உம்மும் கெழுவும் உளப்படப் பிறவும்
அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி
செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும்
வேற்றுமை குறித்த பொருள்வயினான.

75

உயிரும் புள்ளியும் இறுதி ஆகி
குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி
நெறிப் பட வாராக் குறைச்சொற் கிளவியும்
உயர்திணை அ?றிணை ஆயிரு மருங்கின்
ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும்
செய்யும் செய்த என்னும் கிளவியின்
மெய் ஒருங்கு இயலும் தொழில் தொகு மொழியும்
தம் இயல் கிளப்பின் தம் முன் தாம் வரூஉம்
எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்
அன்னவை எல்லாம் மருவின் பாத்திய
புணர் இயல் நிலையிடை உணரத் தோன்றா.

76

கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும்
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்
வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்
நன் மதி நாட்டத்து என்மனார் புலவர்.

77

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home