|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
20th Century Eelam Tamil Literature
at Project Madurai
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்
Etext Preparation: Dr. N. Kannan, Boeblingen, Germany and Mr. Padmanabha Iyer, London, UK; Proof-reading: Ms. Anshiya Seyed Ahamed, New Orleans, LA, USA
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source acknowledgement: "Twentieth Century Ceylon Tamil Literature" by C. Maunaguru, M. A. Dip.in.Ed., Mau. Chitralega, B. A. (Hons), B.Phil.,& M. A. Nuhman, B. A. (Hons), B. Phil.; First Edition: March 1979, Published by: Readers' Association, 'Noori Manzil', Kalmunai-6; Printed at: Chitra Achchakam, 310, Clock Tower, Jaffna
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
முதற்பதிப்பு: மார்ச் 1979, உரிமை: ஆசிரியர்களுக்கு
வௌியீடு: வாசகர் சங்கம், 'நூறி மன்ஸில்', கல்முனை-6
அச்சு: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
வாசகர் சங்க வௌியீடு -9
உள்ளடக்கம்
1. முன்னுரை
2. ஈழத்து இலக்கிய வரலாறு- ஓர் அறிமுகம் 1
3. கவிதை 18
4. நாவல் 37
5. சிறுகதை 55
6. நாடகம் 76
7. விமர்சனம் 97
1. முன்னுரை இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், இன்று வரையுள்ள பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். பல்கலைக் கழகப் பரீட்சைகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் உடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
'ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சியடைந்துள்ளது' என்ற ஒரு பொதுவான அபிப்பிராயம் இன்று நிலவுகின்றது. தமிழகத்தில் ஈழத்து இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆயினும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றையும், வளர்ச்சி நிலைகளையும் முழுமையாகக் கூறும் நூல் எதுவும் இன்று வரை தோன்றவில்லை. எனினும் அத்தகைய முழுமையான நூல் ஒன்று எழுதப்படுவதற்கான சான்றுகளையும், தகவல்களையும் திரட்டிக் கூறும் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இங்கே வௌிவந்துள்ளன.பொதுவாக இவற்றை நாம் மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
1. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் எழுதிய நூல்கள் பற்றிய குறிப்புகளையும் தருவன. 1856ல் வௌிவந்த சைமன் காசிச் செட்டியின் 'தமிழ் புளூட்டாக்' முதல் 1967ல் வௌிவந்த மு.கணபதிப்பிள்ளையின் 'ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்' வரை இப்பிரிவில் அடங்கும்.
2. ஈழத்தவரின் தமிழ்தொண்டு பற்றியன. தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஈழத்தவரின் பங்கு, பதிப்புப் பணியில் ஈழத்தவரின் இடம், முஸ்லீம்களின் தமிழ்த்தொண்டு போன்ற விசயங்களை மதிப்பிடும் முயற்சிகள் இவற்றுள் அடங்கும். பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், கலாநிதி பொ. பூலோகசிங்கம், எம்.எம்.உவைஸ், எஸ்.எம். கமால்தீன் முதலியோர் இத்துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். பொ. பூலோகசிங்கத்தின் 'தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள்' இவ்வகையில் முக்கியத்துவம் உடைய நூலாகும்.
3. வரலாற்று நோக்கில் வெவ்வேறு கால கட்டங்களுக்குரிய ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றி இலக்கியவடிவ ரீதியாகவும் பொதுவாகவும் தொகுத்துக் கூறுவன. பேராசிரியர். ஆ.சதாசிவம் தொகுத்த 'ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் '(1966) முதல், பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஈழத்தில் தமிழ் இலக்கியம் வரை இப்பிரிவில் அடங்கும். பேராசிரியர் க. கைலாசபதியும் இவ்வகையில் அநேக கட்டுரைகள்எழுதியுள்ளார்.
இவ்வாறு, ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வௌிவந்த நூல்கள், முக்கியமான கட்டுரைகள் பல இடம்பெற்ற சிறப்பிதழ்கள் பற்றிய விபரங்களை இந்நூலின் இறுதியில் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளோம். மேற்குறிப்பிட்ட வகையான ஆய்வு நூல்கள் இன்னும் பல வௌிவர வேண்டும். இவ்வாறு பல்வேறு ஆய்வுகளூம் வௌிவந்து ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஐயப்பாடுகள் தௌிவான நிலையில்தான் ஈழத்து இலக்கியம் பற்றிய முழுமையான வரலாற்று நூல் எழுதப்படுதல் சாத்தியமாகும். இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி நெறிகளைத் தொகுத்துக் கூறும் இந்நூல் அத்தகைய ஒரு முழுமையான வரலாற்று நூல் உருவாகுவதற்குப் பயன்படக்கூடிய முக்கியமான நூல்களுள் ஒன்றாக அமையும் என நம்புகிறோம்.
இந்நூல் ஆறு அத்தியாயங்களாக அமைந்துள்ளது. முதல் அத்தியாயம் ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு ஓர் அறிமுகமாக அமைவதோடு, இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தின் விசேடமான சில பொதுப் பண்புகளையும் திரட்டிக் கூறுகிறது. அடுத்துவரும் அத்தியாங்களில் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய துறைகளில் காணப்படும் வளர்ச்சிப் போக்குகள் தனித்தனியாக ஆராயப்படுகின்றன. நாடகம் முற்றிலும் இலக்கிய வடிவம் அல்ல; அது ஓர் அரங்கக் கலையும் ஆகும். ஆகவே நாடக வளர்ச்சி பற்றிய கட்டுரையில் நாடக அரங்க அபிவிருத்திகளும் இணைத்து நோக்கப்பட்டுள்ளன.
இலக்கியம் சமுதாய நடைமுறையின் ஓர் வௌிப்பாடு ஆகும். சமுதாய வளர்ச்சிப் போக்குகளே இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை இறுதியாக நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் இந்த நூற்றாண்டின் ஈழத்து சமூக, அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் பின்னணியிலேயே இந்நூலின் ஈழத்து இலக்கியம் நோக்கப்பட்டுள்ளது. இலக்கிய வளர்ச்சி தனித்தனி வடிவங்களின் அடிப்படையில் நோக்கப்பட்டதால் சமுதாயப் பின்னணி பற்றிய குறிப்புக்கள் திரும்பத் திரும்ப இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. ஓரு வகையில் இலக்கியத்தின் சமுதாய அடிப்படையை அது மேலும் வலியுறுத்துவதாகவும் அமையும்.
சமகால ஈழத்து இலக்கியத்தில் ஏதோ ஒரு துறையிலேனும் ஈடுபாடு கொண்டுள்ள படைப்பாளிகள் அநேகர் உள்ளனர். குறிப்பாக கவிதை, சிறுகதைத் துறைகளில் இவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது. இவர்கள் எல்லோருடைய பெயர்களும் இந்நூலில் இடம் பெறுவது சாத்தியமல்ல;அது அவசியமுமல்ல. ஆயினும் பெயர்களை முடிந்த அளவு குறைத்து பொதுப்பண்புகளை மட்டும் சுட்டிச் செல்வதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எழுத்தாளர்கள் இல்லாமல் இலக்கியப் பண்புகளும் இல்லை. ஆகவே ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்கள் என்று கருதக்கூடியவர்களின் பெயர்கள் இந்நூலில் சற்று கூடுதலாகவே இடம் பெற்றுள்ளன. இடம் பெறாதவர்கள் இடம் பெறத்தகாதவர்கள் என்று பொருளாகாது. இந்நூலில் குறைபாடுகள் இருக்கலாம். அவை சுட்டப்படும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுவோம். ஆயினும் இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தை இது நிறைவேற்றும் என்றே நம்புகின்றோம்.
இந்நூலாக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே ஊக்கப்படுத்தி உதவிகள் புரிந்த நண்பர் மு. நித்தியானந்தன், ஏ.ஜே. கனகரத்தினா ஆகியோருக்கும் அட்டை அமைப்பை வழங்கிய உ.சேரனுக்கும் அழகிய முறையில் இந்நூலை அச்சிட்டு உதவிய சித்திரா அச்சக உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எமது நன்றிகள்.
ஆசிரியர்கள்.
2. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு: ஓர் அறிமுகம் ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பு ஐந்துநூற்றாண்டு காலத் தொடர்ச்சியான பாரம்பரியத்தையுடையது. இவ்விலக்கியப் பாரம்பரியத்தினையும் அதனூடு காணப்படும் பல்வேறு போக்குகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நோக்குதல் அவைபற்றிய தௌிந்த விளக்கத்துக்கு உதவும். இக்காலத்தில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சமூக சமய கலாசார நிலைமைகள், அவற்றை ஊக்குவித்த அரசியல் பொருளாதார காரணிகள் ஆகியவற்றின் விளக்கமும் இவ்விலக்கிய வரலாற்று விளக்கத்துக்கு உதவி புரிவதாகும். எனினும் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்ப்பகுதிகளின் வரலாறானது தயக்க மயக்கங்கட்கு இடமளிப்பதாகவே உள்ளது. இக்காலப் பகுதியில் மன்னர்களின் வரன்முறைபற்றிய தகவல்கள் கிடைத்தபோதிலும் சமூக முழுமைக்குமான வரலாற்றைத் தொகுத்துக் காண்பதற்கு உதவும் சான்றுகளும் அரிதாகவே காணப்படுகின்றன. வரலாற்றியலில் காணப்படும் இக்குறைபாடு இலக்கிய வரலாற்று மாணவனையும் பாதிக்கவே செய்கிறது.
இத்தகைய பிரச்சினைகள் இருப்பினும் தற்போது கிடைக்கின்ற தகவல்களை அடிப்படையாக வைத்து ஈழத்து இலக்கியப் பரப்பினை இலக்கியப்பண்பு, இலக்கிய நெறி ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கி தொடாச்சியான இலக்கியவரலாற்றை அமைத்துக் கொள்ளுதல்கூடும். இப்பணியைச் செய்யவே இக்கட்டுரை முயல்கிறது.
16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழிலக்கிய முயற்சிகள் தொடச்சியாக நடைபெற்றிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு முன்னர் எழுந்தனவாகச் சரசோதிமாலை என்னும் சோதிட நூலும், ஈழத்துப் பூதந்தேவனார் என்பாரியற்றிய சில தனிப்பாடல்களும் காணப்படுகின்றன. ஈழத்துப் பூதந்தேவனாருடனேயே ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடங்குகிறது எனக்கூறுவது இன்று மரபாகிவிட்டது. எனினும் ஈழத்துப்பூதந்தேவனார் ஈழத்தவர்தானா என்பது பற்றிய சந்தேகம் இன்னும் தீர்த்துவைக்கப்படவில்லை. சங்கத்தொகை நூல்களான அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்பவற்றில் இப்புலவர் பெயரால் சில பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 68, 231இ 307 ; குறுந்தொகை 34, 189, 360; நற்றிணை 366 ஆகிய பாடல்கள் ஈழத்துப் பூதந்தேவனாருடையவை. ஈழம் என்ற சொல்லே இப்புலவரை ஈழத்தவராகக் கொள்ள இடமளிக்கிறது. எனினும் ஈழம் என்ற சொல் இலங்கையை மட்டுமே குறித்ததா என்பதும் சிந்திக்க வேண்டியதாகும். ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொண்டால், சங்ககால நூல்களின் பின்னெல்லையான கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு முன்னர் எழுந்தனவாகவே இப்பாடல்கள் அமையும். இதற்குப் பின்னர் நீண்டகாலமாகத் 'தமிழிலக்கிய நூல்கள்ரு ஈழத்தில் எழுந்ததற்கு இதுவரை சான்றுகள் எதுவுமில்லை. தம்பதேனியா மன்னர் 3-ஆம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு போசராச பண்டிதர் என்பவர் சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை அரங்கேற்றினார். ஈழத்துப் பூதந்தேவனாருக்குப்பின் சரசோதிமாலை இயற்றப்பட்டது வரை எமது இலக்கிய வரலாறு இருண்டதாகவே உள்ளது. இதற்குப் பின்னர் கிடைக்கின்ற இலக்கியங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவையே. இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர் வதியும்போதிலும் 17-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எதுவும் அப்பகுதிகளிலிருந்து எழுந்ததாகத் தெரியவில்லை. ஈழத்து இலக்கியவரலாற்றைக் கற்போர்இந்த அம்சத்தையும் மனங்கொள்ளுதல் வேண்டும்.
13-ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதி தனிராச்சியமாக விளங்கியதென்பதும் தமிழ் மன்னர்கள் அப்பகுதியை அரசுபுரிந்தனர் என்பதும் வரலாற்றுண்மை. இக்காலத்திலிருந்துதான் தமிழிலக்கியங்கள் பலவும் தோன்றியுள்ளன. இக்காலத்திலே இயற்றப் பட்டவையாக கிடைக்கும் நூல்களை சிங்கைச் செகராசசேகரன் காலத்தவை (1380 - 1414) எனவும் நல்லூர்ப் பரராசசேகரன் காலத்தவை (1478-1519) எனவும் இவற்றுக்குப் பிந்தியவை எனவும் பேராசிரியர் ஆ. சதாசிவம் தான் தொகுத்த ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் வகுத்துள்ளார். இந்லூல்களைப்பற்றி இங்கு குறிப்பிடுதல் இக்கால இலக்கியப் போக்கினை அறிந்துகொள்ள உதவும்.
செகராசசேகரம் (இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை இயற்றுவித்தவர் செகராசசேகர மன்னன் என அறியப்படுகிறது) சோமசன்மாவின் செகராசசேகரமாலை, பரராச சேகரம் (பரராச சேகர மன்னன் பன்னிரு வைத்தியர்களைக் கொண்டு இந்லூலை இயற்றுவித்தான என்பர்), பண்டிதராசர் இயற்றிய தக்கிணகைலாச புராணம், சகவீரர் இயற்றிய கண்ணகி வழக்குரை, கரசைப்புலவர் இயற்றிய திருக்கரசைப் புராணம், கதிரைமலைப்பள்ளு (இந்நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை). அரசகேசரியின் இரகுவம்சம், வையாபுரி ஐயர் இயற்றிய வையாபாடல், வைத்தியநாத முனிவர் இயற்றிய வியாக்கிரபாத புராணம், முத்துராச கவிராயரின் கைலாய மாலை முதலியவை 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் எழுந்த நூல்களாகும். இந்நூல்களை, சமய சம்பந்தமான நூல்கள், யாழ்பாணத்தரசர்களின் வரலாற்று வரன்முறை கூறும் இலக்கியங்கள், சோதிடம், வைத்தியம் ஆகிய துறைகள் சார்ந்த நூல்கள் என வகைப்படுத்தலாம். முதலாவது பிரிவில் தக்கிணகைலாசபுராணம், திருக்கரசைப்புராணம், கதிரை மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை என்பன அடங்கும். இரண்டாம் பிரிவில் வையா பாடல், கைலாய மாலை என்பன அடங்கும். இவற்றுடன் பரராச சேகரன் உலா என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாழ்ப்பாண வைபவம் என்ற நூல் பரராசசேகரன் உலாவைத் தனது முதனூலாகக் குறிப்பிடுகிறது. இந்நூல் தற்போது கிடைக்கவில்லையாயினும் பரராசசேகரன் பேரில் எழுந்ததாகையால் அம்மன்னன்காலத்ததாய் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. மூன்றாவது பிரிவில் செகராசசேகரமாலை, செகராசசேகரம், பரராசசேகரம் ஆகியவை அடங்குகின்றன. இவற்றில் செகராசசேகர மாலை சோதிட நூல்; ஏனையன இரண்டும் வைத்திய சம்பந்தமான நூல்களாகும்.
மேற்கண்டவாறு பல நூல்கள் எழுந்திருப்பினும் சமய சம்பந்தமான இலக்கியங்களே அவற்றுள் பெரும்பான்மையன. நிலவுடமைச் சமூகங்களிற் சமயம் பெறும் முக்கியத்துவத்தையே இது காட்டுகிறது. இந்நிலைமை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எமது இலக்கியங்களில் தொடர்ந்து காணப்படுகிறது.
2
யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதூக்கியது. கிறித்த சமயப் பாதிப்பு வௌித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப்புதிய பண்பாகும். இதனால் இத்தகைய பாதிப்பு வௌித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்றாண்டுகளிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த பகுதிகளில் ஸ்திரம் பெற்றிருந்தது. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போத்துக்கேயர் இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தமது ஆட்சியை நிறுவினரெனினும் 1620ஆம் ஆண்டில்தான் யாழ்ப்பாணத்துத் தலைநகரான நல்லூரை அவர்கள் கைப்பற்றினர். அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் வந்த பகுதிகளில் தமது நிலைமையைப் பலப்படுத்திக்கொள்ள மதமாற்றத்தையும் முக்கிய சாதனமாகக் கொண்டனர். கத்தோலிக்க மதகுருமாரின் மதம்பரப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளையும் போத்துக்கேயர் மேற்கொண்டனர். கத்தோலிக்க மதத்தைத் தழுவியோருக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. கத்தோலிக்கரான சுதேசிகள் சிற்சில வரிகள் இறுப்பதிலிருந்து விலக்கபட்டனர். கத்தோலிக்கரானோருக்கு நீதி வழங்கும் விடயத்தில் கூட சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றைவிட சைவர்கள் பொது இடங்களில் வணங்குவதும் தடைசெய்யப்பட்டது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் சலுகைகளுக்கிணங்கியும், நிர்ப்பந்தத்தினாலும் சைவர்கள் பலர் கிறித்தவராயினர். மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நீண்டகாலம் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவாகிய பிரான்சிஸ்சேவியர் இப்பகுதிகளிலே கத்தோலிக்க மதம் நிலைபெற முயன்று உழைத்தார். போத்துக்கேயரின் பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சியைக் கைப்பறிய ஒல்லாந்தரும் தமது மதப் பிரிவாகிய புரொட்டஸ்தாந்து கிறித்தவத்தைப் பரப்ப பல்வேறு முயற்சிகளையுமெடுத்தனர். எவ்வாறாயினும் இவ்விரு இனத்தவரின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் சமயம் சார்ந்ததாகவேயமைந்தது. 16ஆம் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் இலங்கை அரசியல் வரலாற்றில் போத்துக்கேயர் காலம் (1505 - 1658) ஒல்லாந்தர் காலம் (1658-1798) என இரு பிரிவுகளாக அமையினும் தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இவை ஒருகாலகட்டமாகவே நோக்குதற்குரியன. இரு வேறு இனங்களின் ஆட்சி என்பதைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏற்படவில்லை. இவ்விரு நூற்றாண்டுகளிலும் கிறித்தவ சமயப் பொருளடக்கம் கொண்ட நூல்கள் தோன்றத் தொடங்கியதைத் தவிர இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க புதிய போக்குகள் எவையும் காணப்படவில்லை. இக்காரணங்களினால் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் ஒரு காலகட்டமாகவே அமையத்தக்கவை.
இக்காலப் பிரிவில் கிறித்தவ சமயத்தாக்கத்தினால் எழுந்த நூல்களை முதலில் நோக்குவது பொருத்தமாகும். ஞானப்பள்ளு கத்தோலிக்க மதத்தின் பெருமையை விளக்கும் நூல். இதை இயற்யிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. இது இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. இப் பள்ளு நூலில் இடம் பெறும் புனிதத் தலங்கள் செரு சேலமும் உரோமாபுரியுமாகும். இக்காலக் கிறித்தவ இலக்கியங்கள் பற்றி பேராசிரியர் ஆ. சதாசிவம் கூறுவது இந்நூலுக்கும் பொருந்துவதாகும்.
"அக்கால இலக்கியங்களெல்லாம் கத்தோலிக்க மத நூல்களாகையின் அவற்றிற் கூறப்படும் நாட்டு நகர வருணனைகளெல்லாம் உரோமாபுரி செருசேலம் முதலிய மேல் நாட்டுக் கத்தோலிக்க புனித தலங்களைப் பற்றியனவாய் அமைந்துள்ளன. தேசியக் கருத்துக்கள் அந் நூல்களிற் பொருந்தப்பெறவில்லை. ஞானப்பள்ளிலே நாட்டு வளம் கூறும் பள்ளியர் ஈழத்தைப் பற்றிச் சிந்திக்காது உரோமாபுரியைப் பற்றியும் செருசேலமைப் பற்றியும் சிந்திக்கின்றனர்.
ஞானப்பள்ளினைவிட வேறு சில நூல்களும் குறிப்பிடத்தக்கன. பேதுருப்புலவர் இயற்றிய அர்ச்யாகப்பர் அம்மானை, தொன்பிலிப்பு இயற்றிய ஞானானந்தபுராணம், பூலோக சிங்க முதலியாரியற்றிய திருச்செல்வர் காவியம் என்பன இவற்றுட் சில. இவற்றுடன் சந்தியோகுமையூர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை,மருதப்பக்குறவஞ்சி ஆகியவையும் அடங்கும். இக் கிறித்தவ மத இலக்கியங்கள் பெரும்பாலன சமூகத்தின் கீழ்மட்ட மக்கள் தொடர்புடைய சிற்றிலக்கிய வடிவங்களிலே அமைந்துள்ளன என்பதும் சுவையான அவதானிப்பாகும். 19ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதம் பரப்பியோர் பரவலான மக்களை எட்டக்கூடியதாக வசன நடயைப் பயன்படுத்தியதற்கும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் அதே தேவைக்கு இச் சிற்றிலக்கியவடிவங்கள் பயன்படுத்தப்பட்டவைக்கும் உள்ளார்ந்த தொடர்பு உண்டு போலும்.
மேற்கண்டவாறு கிறித்தவ சமயப் பிரசாரநோக்குடன் இலக்கியங்களியற்றப் பெறுதல் புதிய பண்பாகக் காணப்படினும் தொடர்ந்து சைவசமயச்சார்பான நூல்களும் பெரு வாரியாக எழுந்துள்ளன. இந் நூல்கள் அனைத்தையும் இங்கு குறிப்பிடுதல் சாத்தியமன்று. இவற்றை அவதானிக்கும் போது தலபிரபந்தங்கள், விரதமகிமை,கிரியை விளக்கம் ஆகியவை பற்றியெழுந்த நூல்கள், சமயத் தெடர்பான வடமொழி இலக்கியங்களின் தழுவல்/ மொழிபெயர்ப்புகள் என வகைப்படுத்தலாம். சின்னத்தம்பிப் புலவரின் கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, பறாளைவிநாயகர் பள்ளு, கூழங்கைத் தம்பிரானின் நல்லைக்கலிவெண்பா வீரக்கோன் முதலியாரின் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதலியன முதலாம் பிரிவுக்கு உதாரணங்காயமையும். வரத பண்டிதரின் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் முதலியன இரண்டாம் பிரிவுக்கும் இராமலிங்க முனிவரின் சந்தானதீபிகை போன்றவை மூன்றாம் பிரிவுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். இவற்றை நோக்கும் போது தொடர்ந்து சைவசமய இலக்கியங்களே தமிழிலக்கிய மரபில் கோலோச்சி வந்தமை புலப்படுகின்றது.
3
ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தனித்து ஆராயப்பெறும் தகுதிகள் கொண்டது. வரலாற்றைப் பொறுத்தவரையிலும் பலமுக்கியமான நிகழ்ச்சிகள் இந்நூற்றாண்டில் நடைபெற்றன. 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடானமை, 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசியற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமை, சுதேசிகள் இலங்கையரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமை, ஆங்கிலக் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, நாட்டின் பல்வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம் தபால் தந்திச் சேவைகளும் பெருந் தெருக்களும் புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்டமை முதலியன இலங்கை வரலாற்றுக்குப் புதிய தோற்றத்தையளித்தன. சமூக வகுப்புகளிடையேயும் புதிய அம்சங்கள் தோன்றின. புதிதாக ஆங்கிலக் கல்வி கற்க அரசாங்க சேவையில் ஈடுபட்ட மத்தியதர வர்க்கமொன்று தோன்றியது. இவ்வர்க்கத்தினரிடையே கிறித்தவ மத மாற்றம் அதிக அளவில் நடைபெற்றது, இது மட்டுமன்றி இவ்வகுப் பினரிடையிலேயே மேனாட்டு மயப்படுத்தலும் (Westernization) நிகழ்ந்தது.
இத்தகைய புதிய நிலைமைகளின் தாக்கம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கவே செய்தது. 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் நடந்தது போலவே 19ம் நூற்றாண்டிலும் கிறித்தவ மிசனரிமாரின்மதமாற்றமுயற்சிகள் மிகத் தீவிரமாக நடந்தன. கத்தோலிக்க, புரொட்டஸ்தாந்து மிசனரிடமாருடன் கூட அமெரிக்க, வெசிலியன் மிசனரிமாரும் ஆங்கிலேயரது ஆட்சிகாலத்தில் மதப் பிரசாரப்பணியில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ மதம், ஆங்கிலக் கல்வி, உயர்பதவி வாய்ப்பு ஆகியன ஒன்றுடனொன்று இணைந்திருந்தன. இதனால் ஆங்கிலக்கல்வியையோ உயர் உத்தியோகத்தையோ நாடுவோர் கிறித்தவர்களாவதும் இயல்பாயிற்று. பல்வேறு சலுகைகளை கருதிக் கிறித்தவரானோர் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு அந்நியப்படும் நிலைமையும் ஏற்பட்டது. முத்துக்குமாரகவிராசரின் (1780-1851) பாடலொன்று இந்நிலையை நன்கு பிரதிபலிக்கிறது.
" நல்வழி காட்டுவோம் உடு புடவை சம்பளம்
நாளு நாளுந் தருவோம்
நாஞ் சொல்வதை கேளும் எனமருட்டிச் சேர்த்து
நானமுஞ் செய்துவிட்டார்
மெல்லமெல்லப் பின்னை வேலையிங்கில்லைநீர்
வீட்டினிடை போமென்கிறார்
வேண்டியொரு கன்னியைக் கைக்கொண்டு கருவாக்கி
விட்டபின் கணவன் வேலை
இல்லை நீ போவென்று தள்ளுவது போலுமே
இனி எம்மை எம் உறவினோர்
எட்டியும் பாரார்கள் கிட்டவும் வாரார்கள்
ஏர்ட்பூடி உழவுமறியோம்
அல்லலாம் இம்மைக்கு மறுமைக்கு (நரகினுக்)கு
ஆளாகி மிக அழிந்தோம்
ஆ பரா பரனே! கிறிஸ்தவர்கள் எங்களை
அடுத்துக் கெடுத்தார்களே.இத்தகையதொரு நிலையில் பாரம்பரிய நிலவுடமைச் சமூக அமைப்பின் மதிப்பீடுகள் மாறத் தொடங்கிய சூழலே 19ம் நூற்றாண்டு இலக்கியத்தின் சமூக அடித்தளமாக அமைந்தது எனில் மிகையாகாது.
19-ஆம் நூற்றாண்டில் எழுந்த பெருந்தொகையான இலக்கியங்கள் சமய உள்ளடக்கம் கொண்டனவாகவே அமைந்தன. தெய்வங்கள் மீதும் திருத்தலங்கள் மீதும் பாடப்பெற்ற இலக்கியங்களே இவற்றிற் பெரும்பான்மையன. இவற்றைவிட கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்குடன் எழுதப்பட்டவையும், கிறிஸ்தவ சமயத்தை மறுத்து சைவ மதத்தை நிலைநிறுத்தும் நோக்குடன் எழுதப்பட்டவையும் 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாய் அமைந்தன. கிறிஸ்தவ மதப்பிரசாரமும் அதற்கு எதிரான முயற்சிகளும் தீவிரமாகவும் பரவலாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கல்வி கற்றோரை மட்டுமன்றி மற்றோரையும் எட்டும்படி அவை சம்பந்தமான ஆக்கங்கள் அமையவேண்டிதாயிற்று. இத்தகைய நிலை 19ஆம் நூற்றாண்டு இலக்கிய வசன நடை பிரதானம் பெறவும் வளர்ச்சியடையவும் வழியமைத்தது. உரைநடையைச் சமயப் பிரசாரத் தேவைகளுக்குப் பயன்படுத்தியோரில் கிறிஸ்தவரே முன்னின்றனர். மிசனரிமாரே முதலில் யாழ்ப்பாணத்தில் அச்சுக் கூடங்களை நிறுவினர். சமயத் தேவைக்காகப் பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் முதலிய தகவற் தொடர்புச் சாதனங்களை அவர்கள் பயன்படுத்தினர். 1923ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத் துண்டுப் பிரசுர சங்கம் (Jaffna Tract Society) நிறுவப்பட்டது, இதன் மூலம் கிறிஸ்தவ மத சம்பந்தமான பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் வௌியிடப்பட்டன. சமய உண்மைகளின் விளக்கங்கள், சமய கண்டனங்கள் ஆகிய பலவும் இத்துண்டுப் பிரசுரங்களில் இடம்பெற்றன. கிறிஸ்தவரின் இதே வழியினைச் சைவரும் கைக்கொண்டனர். ஆறுமுகநாவலரும் அவரைத் தொடர்ந்து சங்கரபண்டிதர், செந்திநாதையர், தாமோதரம் பிள்ளை, கைலாயபிள்ளை போன்ற சைவப் பெரியார்களும் சிறு பிரசுரங்கள் பலவற்றை வௌியிட்டுள்ளனர்.
19ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பகுதிகளில் உருவாகிய பத்திரிகைச் சூழல் சமய அடித்தளம் கொண்டது. கிறிஸ்தவ மிசனரிமாரே மதம் பரப்புவதற்கெனப் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841இல் அமெரிக்க மிசனரி சார்பில் வௌிவந்தது. கத்தோலிக்கபாதுகாவலன், இலங்காபிமானி ஆகியனவும் 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் கிறிஸ்தவ சமயச்சார்புடன் வௌிவந்த பத்திரிகைகளாகும். எனினும் இப்பத்திரிகைகள் சமய எல்லையுள் மட்டும் நின்றுவிடாது பல்வேறு விடயங்கள்பற்றியும் எழுதின. உதயதாரகை தனது முதலாம் இதழ் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு கூறியிருந்தது.
".......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவானகல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சிமாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்".
சமயசம்பந்தமாகத் தோன்றிய பத்திரிகைகளாயினும் இவை தமது கோட்பாட்டெல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டமை குறிப்பிடத் தக்கது. கிறிஸ்தவர் பத்திரிகைகளை ஆரம்பித்தது போன்று சைவர்களும் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கைநேசன், சைவாபிமானி, சைவ உதயபானு, இந்துசாதனம் ஆகியவை சைவர்களால் வௌியிடப்பட்டவை. இவற்றுடன் இஸ்லாமிய மறுமலர்ச்சி நோக்கில் முஸ்லிம் நேசன், சைபுல் இஸ்லாம் ஆகிய பத்திரிகைகளும் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வௌியிடப்பட்டன. பொதுத் தகவற் சாதனமாகிய பத்திரிகையின் பரவலான தோற்றம் தமிழ் வசன நடையின் துரிதமான பன்முகப்பட்ட வளர்ச்சிக்கு வழிகோலிற்று. இலக்கண இலக்கிய தத்துவ நூல்களில் உரை வடிவங்களிலே கட்டுண்டு கிடந்த தமிழ் வசனநடை தனது பண்பாட்டெல்லைகளை விரிவுபடுத்தி, புதிய வனப்பும் வளர்ச்சியும் பெற்றமைக்குரிய பிரதான காரணிகளுள் பத்திரிகைத் துறையும் ஒன்றாய் அமைந்தது. அச்சுரூபத்தில் பல நூற்றுக் கணக்கான பிரதிகள் வௌியிடப்படும் போது இலக்கியம். தவிர்க்க முடியாதபடி பரந்துபட்ட மக்களை எட்டவேண்டி ஏற்படுகிறது. இது நவீனயுகத்தில் அச்சில் வௌிவரும் இலக்கியங்களின் நிலை பேற்றுக்குரிய விதியாகும். பத்திரிகைகளின் தோற்றத்துடன் தமிழிலக்கியம் பொதுத்தகவற் தொடர்புச் சாதனப் பண்பைப் பெற்றதை இவ்வகையிலேயே விளக்கலாம்.
அச்சுவசதி, வசன நடை வளர்ச்சி, பத்திரிகையின் தோற்றம் என்பவற்றுடன் கூட இக்காலத்தில் பரவலாகிய கல்வித் துறையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை குறிப்பிடக் கூடியதாகும். குறிப்பாக ஆங்கிலக் கல்வியின் மூலம் மேல்நாட்டு இலக்கியத்துடன் தொடர்பு எற்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் நாவல்,சிறுகதை ஆகியவை தோன்றி வளர்வதற்குரிய சூழல் ஏற்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவும் இதற்கு உதவின. 1856-ல் Parley the Porter என்ற ஆங்கில நூல் காவலப்பன் கதை என்ற பெயரில் தமிழாக்கப்பட்டது. Orson and valantine என்ற போத்துக்கேய நூல் ஊசோன்பாலந்தை கதை என நெடுங்கதையாய் வௌிவந்தது. இவற்றைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டு நாவலிலக்கியத்துக்கு முன்னோடிகளாயமையக் கூடிய அஸன்பேயுடைய கதை (1885) , மோகனாங்கி (1895) முதலிய நெடுங்கதைகளும் வௌியிடப்பட்டன.
இதுவரை 19ஆம் நூற்றாண்டுக்குரியனவாக மேலே பார்த்த புதிய வளர்ச்சிகள் வசன இலக்கிய வழியமைந்தவையே. செய்யுள் மரபுரீதியான போக்கிலேயே சென்றது. தலபிரபந்தங்களையும், சமயக்கிரியை விளக்க நூல்களையும் வடமொழி இலக்கியங்களின் தழுவல்களையுமே செய்யுட்துறையில் தொடர்ந்து காணலாம். பொருளடக்கம் மட்டுமல்லாது இலக்கிய உத்தி, மொழி நடை ஆகியவை கூட மரபு நெறிப்பட்டதாகவே அமைந்தன. வசன நடையில் புதுமையைப் புகுத்திய ஆறுமுகநாவலர் கூடச் செய்யுளை மரபுவழி நின்று 'புனிதப் பொருளாகவே' நோக்கினார். யுநீண்ட பாரம்பரியத்தையுடைய செய்யுளில் புதுமைசெய்ய இலக்கிய ஆசிரியர் தயங்கினர். ஆனால் தமது கண் முன்னே வளர்ந்த வசன நடையுடன் அதிக சொந்தம் பாராட்டி மாற்றங்கள் செய்ய அவர்கள் தயங்கவில்லை'. இந்நிலைமை ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பொதுப்பண்பாகும்.
19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் பத்திரிகைகள் போன்ற பொதுத் தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியும் இலக்கியத்தைப் பரந்த மக்கள் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தின. இதனால் இலக்கியம் உயர்நிலை மக்களைப் பாத்திரங்களாகவும் வாசகர்களாகவும் கொள்ளும் நிலையிலிருந்து விடுபடத் தொடங்கியது. இன்னொரு வகையில் கூறினால் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் காணப்படும் நவீன பண்புகள் பல பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியது எனலாம். இத்தகைய காரணங்களால் இக்கால இலக்கியம் தனியொரு பிரிவாகவும் விரிவான ஆய்வுக்கு உட்பட வேண்டியதாகவும் அமைகிறது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டையடுத்து இருபதாம் நூற்றாண்டு தனிக் காலகட்டமாயமைகிறது. இதுவே இந்நூலின் அடுத்துவரும் அதிகாரங்களில் இலக்கிய வடிவங்களின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுகின்றது.
4
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டியதென்பதும் இந்நூற்றாண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன் பின்னரேயாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற்றுணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேய ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்துத் தமிழரின் சமய கலாசார தனித்துவத்தைப் பேணுவதில் முழுமூச்சாக ஈடுபட்ட ஆறுமுகநாவலர் ஈழத்து இலக்கியப் பற்றுக் கொண்டிருந்தவர். 1856ஆம் ஆண்டு இவர் வௌியிட்ட நல்லறிவுச் சுடர் கொழுத்தல் என்ற பிரசுரத்தில் இதனை அவதானிக்கலாம். சி.வை. தமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ்நாட்டைச்சேர்ந்த வீராசாமி முதலியார் வௌியிட்ட ஒரு பிரசுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே நல்லறிவுச் சுடர் கொழுத்தலில் ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.
இருப்பினும் 1950ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டைப் பரவலாக்கியதுடன்தான் எழுத்தாளர், வாசகர், விமரிசகர் ஆகிய மூன்று மட்டங்களிலும் இவ்வுணர்வு செறிந்து பிரபலம் பெற்றது. இக்கால கட்டத்தில் இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இக்கோட்பாட்டின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவின. தேசிய நலனை அபிவிருத்தி பண்ணும் வகையிலேயே சகல நடவடிக்கைகளும் அமையவேண்டும் என்ற அரசின் கொள்கை கலாசாரத் துறையில் தேசியக்கலை இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உதவிற்று, ஈழத்து இலக்கியத்தில் வெறும் பற்று மட்டும் அன்றி இலக்கியம் தேசியப் பிரச்சினைகளை எடுத்தாளவேண்டும் என்றும்; குறிப்பாக அடிநிலை மக்களின் வாழ்க்கை இலக்கியப் பொருளாக வேண்டும் என்றும் இத்தேசிய இலக்கியக் கோட்பாடு வற்புறுத்திற்று. இக்கருத்தைப் பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. எனினும் தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு பெற்ற இம்முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஈழத்துத்தமிழிலக்கியப் போக்கைக் குறிப்பிடத்தக்களவு வழிநடத்தியுள்ளது.
5
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் அதற்கு முற்பட்ட இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட சில பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் நிகழ்ந்தேறிய பாரிய சமூக மாற்றங்களே இதற்குக் காரணமாக அமைந்தன. பிரித்தானியரின் வருகையினாலும் அவர்கள் இங்கு புகுத்திய வர்த்தகப் பொருளாதார முறையினாலும் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு சிதைவடைய, அதன் சிதைவில் இருந்து தோன்றி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூக முறையும், அதன் விளைவான நவீன மயமாதலும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களுமே இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இயக்கு சக்தியாக அமைந்தன.
19ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ சமூக கலாசாரத்தின் அடிப்படை அம்சமான சமயமே இலக்கியத்தின் உள்ளடக்கமாக அமைந்தது. சாதாரண மனிதனும் அவனது அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளும் இலக்கியத்துக்குப் புறம்பாகவே இருந்தன. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் சாதாரண மனிதன் பொது வாழ்வில் முக்கியத்துவம் பெறத் தொடங்க 20ஆம் நூற்றாண்டு இலக்கியம் சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வைப் பொருளாகக் கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதாவது தெய்வங்களும், திருத்தலங்களும், சமயானுஷ்டானங்களும் பெற்ற இடத்தை பொதுமனிதனும், நடைமுறைவாழ்வும் பெற்றன. சுருக்கமாகச் சொல்வதானால் இலக்கியம் சமய நெறியில் இருந்து சமூகநெறிக்கு மாறியது. இது 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய பண்பாகும்.
இலக்கியத்தின் உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இதனாலேயே 19ஆம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்துவந்த உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி போன்ற பிரபந்த வடிவங்களும் புராணங்களும் வழக்கிறக்க நவீன ஆக்க இலக்கிய வடிவங்களான நாவல்,சிறுகதை, நாடகம், (நவீன) கவிதை போன்றன தோன்றின. இவை ஈழத்தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்த வளர்ச்சி பெற்றன. ஆரம்பத்தில் இவற்றை இலக்கியங்களாக அங்கீகரிக்காத பண்டித மரபினர்கூட இன்று இவற்றின் இலக்கிய அந்தஸ்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஈழத்து மொழிவழக்குகளும் ஈழத்துப் பண்பாட்டு அம்சங்களும் 20ஆம் நூற்றாண்டிலேயே இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. முந்திய நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களில் மிக அரிதாகக் காணப்பட்ட இத்தனித்துவக்கூறுகள், இந்த நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தின் மிகப்பிரதான அம்சமாக மாறின. இவை தமிழக இலக்கியத்திலிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை வேறுபடுத்தி அதற்கு ஒரு தேசியத் தன்மையை வழங்கின.
இந்த நூற்றாண்டின் பின்பகுதியில் அதாவது 1950-க்குப் பிறகு இந்நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சமூக அரசியல் பிரக்ஞையை அளித்தன. இக்காலப்பகுதியில், பொருளாதார விடுதலையும், சம உடைமைச் சமூக அமைப்பும் கோரிய அடிநிலை மக்களின் அரசியல் விளிப்புணர்வு, மார்க்ஸீயக் கட்சிகளை மட்டுமன்றி எல்லா அரசியல் கட்சிகளையும் தவிர்க்கமுடியாதவாறு சோசலிசக் கோட்பாட்டை கொள்கையளவிலேனும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்தது. இலக்கியமும் சமூக அரசியல் பிரக்ஞையில் இருந்து பிரிந்து ஒதுங்கமுடியாது போயிற்று. இந்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர்களின் பிரச்சினைகளையே தங்கள் படைப்புக்களின் பொருளாகக் கொண்டனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தே சில எழுத்தாளர்களும் தோன்றினர். இவ்வகையில் முற்போக்கு இலக்கியம் இந்நாட்டின் பிரதான இலக்கிய நெறியாக மாறியது. முற்போக்கு இலக்கியக்கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத எழுத்தாளர் பலர் இங்க இருப்பினும் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிரதான போக்காக இருப்பது முற்போக்கு நெறியே என்பதை அழுத்திக் கூறலாம். இடதுசாரி இயக்கத்தில் அரசியல் பிளவுகள் ஏற்பட்ட போதிலும் கூட இது இலக்கியு நெறியை அதிகம் பாதிக்கவில்லை.மறுவகையில் இலக்கியத்தின் சமூகப்பெறுமானத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிக முக்கியத்துவம் சிலவேளை அதன் கலைப் பெறுமானத்தைப் பாதித்துள்ள நிலையையும் இங்கு அவதானிக்க முடிகின்றது. சமீபகாலத்தில் இது பற்றிய சர்ச்சைகள் ஈழத்து இலக்கிய உலகில் அதிகம் நடை பெற்றுள்ளன. இலக்கியத்தின் சமூகப் பெறுமானமும் கலைப்பெறுமானமும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை இன்று, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அதிகம் உணர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ள இம்முற்போக்கு இலக்கிய நெறி தமிழக இலக்கியத்தைப் பொறுத்தவரை மிகப் பிற்பட்ட வளர்ச்சியே என்பதும் மனங் கொள்ளத்தக்கது.
20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத் தக்க பிறிதொரு அம்சம் வர்த்தக மயமாகாமை எனலாம். தமிழ்நாட்டைவிட ஈழத்தில் எழுத்தறிவு விகிதம் மிக அதிகம் எனினும் இங்கு வர்த்தகரீதியான பெரும் சஞ்சிகைகள் வளர்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென் இந்திய வர்த்தக சஞ்சிகைகளின் சந்தையாக ஈழம் தொடர்ந்தும் இருந்து வருவதே இதன் காரணம் எனலாம். மலிவான ரசனைக்குத் தீனிபோடும் பொழுது போக்கு ரகக் கதைகள் தமிழகத்தில் மலிவாக உற்பத்தி செய்யப்பட்டு இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. நூல்வௌியீட்டு வசதியும், நூல் சந்தைப்படுத்தல் முறையும் விருத்தி அடையாத நிலையில் அவற்றோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு இங்கு வர்த்தக இலக்கியம் வளர்ச்சி அடைய முடியவில்லை. சிங்கள மொழியில் வர்த்தக இலக்கியங்கள் பெருகியதைப் போன்று இலங்கைத் தமிழில் பெருகாமைக்கும் இதுவே காரணம் எனலாம். இவ்வாறு கூறுவதனால் ஈழத்துத் தமிழில் வர்த்தக ரீதியான இலக்கியேமா, சஞ்சிகைகளோ இல்லையென்று பொருள்படாது. 1970 க்குப் பின்னர் சுமார் ஏழு ஆண்டுகாலம் இந்தியப் புத்தகங்கள், சஞ்சிகைகள் இறக்குமதிக்கு இருந்த தடையைப் பயன்படுத்தி, வீரகேசரி, ஜனமித்திரன் போன்ற வர்த்தக ரீதியான வௌியீட்டு நிறுவனங்கள் தோன்றி ஈழத்துத் தமிழ் இலக்கியம் வர்த்தக மயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் காணப்படுவது போல் வர்த்தக இலக்கியத்துக்கும் உயர் இலக்கியத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவௌி ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நூல்வௌியீட்டு வசதியும், நூல் சந்தைப்படுத்தும் முறையும் வளர்ச்சியடையாமையால் வர்த்தக இலக்கியத்தின் எழுச்சி தடைப்பட்டிருப்பது மட்டுமன்றி காத்திரமான இலக்கிய முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் மனம் கொள்ளத்தக்கது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் காணப்படும் பொதுவான மந்தநிலைக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்களின் சிறந்த படைப்புகள் பல இன்னும் வௌியிடப்படாமலேயே உள்ளன. பிரசுர வசதிக் குறைவினால் எழுத்தார்வம் மறைமுகமாகத் தடை செய்யப்படுகின்றது. எனினும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், வாசகர் சங்கம், முத்தமிழ் வௌியீட்டுக் கழகம், யாழ். இலக்கிய வட்டம் போன்ற எழுத்தாளர் கூட்டுப் பதிப்பு முயற்சிகள் நம்பிக்கை தருவதாக உள்ளன.
3. கவிதை
இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீன தமிழ்க் கவிதையையே நாம் பிரதானமாகக் கருதுகின்றோம். 'நவீன தமிழ்க்கவிதைரு அல்லது 'தற்காலத் தமிழ்க்கவிதை' என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு,நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையே நவீன கவிதை என்ற தொடர் குறிக்கின்றது. நவீன உள்ளடக்கத்துக்கு ஏற்ப அதன் வடிவ அமைப்பிலும் -சொற்கள், சொற் சேர்க்கைகள், ஓசை ஒழுங்கு, வௌிப்பாட்டு முறை போன்றவற்றிலும் - இக் கவிதை முறை பழைய செய்யுள் இலக்கியங்களிலிருந்து எவ்வளவோ மாறியுள்ளது என்பதையும் நாம் காண்கின்றோம்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இப்புதிய கவிதை மரபு, சுமார் முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்புதிய கவிதை மரபை அங்கு தோற்றுவித்து வலுப்படுத்தியவன் பாரதியே என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் உண்மை.
'தற்காலத் தமிழ்க்கவிதை' என்று இனங் காணப்படுகின்ற இக்கவிதை மரபு தமிழ்நாட்டில் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப தோன்றி வளர்ச்சி அடைந்ததைப் போன்றே, ஈழத்திலும் நமது நாட்டுக்கு உரிய சில தனிப் பண்புகளையும், பாதிப்புகளையும் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளதை நாம் இப்போது தௌிவாக இனம் கண்டு கொள்கின்றோம். ஈழத்தைப் பொறுத்தவரை இக்கவிதை மரபு சுமார் நாற்பது ஆண்டு கால வரலாற்றையே கொண்டுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் 'மறுமலர்ச்சிக் காலம்' என்று சொல்லப்படுகின்ற 1940 ஆம் ஆண்டுகளிலேயே இங்கு இப்புதிய கவிதை மரபு தோன்றி வளர்ச்சியடையத் தொடங்கியது.
19ஆம் நூற்றாண்டின் மரபு வழிப்புலவர்கள் சிலர் இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் வாழ்ந்தனர். சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், க. மயில்வாகனப் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, நவநீதகிருஷ்ணபாரதியார், அருள்வாக்கி அப்துல்காதிறுப் புலவர் முதலியோர் இவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியவர்கள். ஆயினும் இவர்கள் அனைவரையும் சென்ற யுகத்தின் பிரதிநிதிகளாகவே கருதவேண்டும். இந்த நூற்றாண்டின் கவிதை மரபுடன் இவர்களைத் தொடர்புறுத்த முடியாது.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த, பாரதியின் சம காலத்தவரான பாவலர் துரையப்பாபிள்ளை,சோம சுந்தரப்புலவர், விபுலானந்த அடிகள் ஆகியோரும் இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அநேக கவிதைகளைப் படைத்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சிந்தனைப் போக்குகள் சில இவர்களது கவிதைகளில் காணப்படினும் இன்றைய அர்த்தத்தில் இவர்கள் ஈழத்து நவீன கவிதையின் முன்னோடிகள் என்று கருதப்படுபவர்கள் அல்லர். பழைய மரபுக்கும் புதிய மரபுக்கும் இடைப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
1940 ஆம் ஆண்டுக்குப்பின் குறிப்பாக 1942ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சில இலக்கிய ஆர்வம் உடைய இளைஞர்கள் சேர்ந்து 'மறுமலர்ச்சிச் சங்கம்' என்ற ஒரு இலக்கிய ஸ்தாபனத்தை அமைத்ததைத் தொடர்ந்து பாரதிதாஸன், கலைவாணன் போன்ற அக்காலத்து தமிழ் நாட்டு முன்னணிக் கவிஞர்களின் செல்வாக்கினால் தூண்டப்பட்ட சில இளம் கவிஞர்களின் முயற்சியினாலேயே இங்கு நவீன கவிதைப் பாணி உருவாகி வளர்ச்சி அடையத் தொடங்கியது. நாவற் குழியூர் நடராசன், சோ. நடராசன், அ.ந. கந்தசாமி, மஹாகவி, சாரதா, செ. கதிரேசபிள்ளை, யாழ்ப்பாணன் முதலியோர், இக்காலப் பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களுள் நாவற்குழியூர் நடராசன், அ.ந. கந்தசாமி, மஹாகவி ஆகிய மூவரும் இக்காலப்பிரிவில் தோன்றிய முக்கியமான கவிஞர்களாவர்.
நாவற்குழியூர் நடராசன் மனோரதியப் பாங்கான கவிதைகளையே அதிகம் எழுதினார். பொருளைவிட ஒசைநயத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது கவிதைகள் சில 'சிலம்பொலி' என்ற பெயரில் நூல்வடிவம் பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் கவிதையில் இடதுசாரிச் சிந்தனை போக்கை முதலில் பிரதிபலித்தவர் அ.ந. கந்தசாமியே ஆவர். 'கவீந்திரன்' என்ற புனைபெயரிலும் இவர் கவிதைகள் எழுதிவந்தார். ஏராளமாக எழுதாவிட்டாலும் வில்லூன்றி மயானம், துறவியும் குஸ்டரோகியும் போன்ற இவரது சில கவிதைகள் குறிப்பிடத்தக்கன.
இம்மூவருள்ளும் இலங்கைத் தமிழ்க் கவிதையில் அதிக பாதிப்பையும் பங்களிப்பையும் செய்தவர் மஹாகவியே ஆவர். 1971 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும்வரை சுமார் முப்பது ஆண்டு காலம் கவிதை எழுதி வந்தார். பல நூற்றுக் கணக்கான கவிதைகளும் சேனாபதி, பொய்மை, சிற்பி ஈன்ற முத்து, கோலம், திருவிழா, அடிக்கரும்பு முதலிய வானொலிப் பா நாடகங்களும், கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று முதலிய மேடைப் பா நாடகங்களும், கல்லழகி, சடங்கு, கந்தப்பசபதம், கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் முதலிய காவியங்களும் மானிலத்துப் பெரு வாழ்வு எனும் தலைப்பில் அமைந்த இசைப்பாடல்களும் பொருள்நூறு என்னும் சிறு கவிதைகளும் பிஞ்சுப் பாடல்கள் என்னும் சிறுவர் கவிதைகளும் அவரது படைப்புக்களாக உள்ளன. வள்ளி, குறும்பா, கோடை, கண்மணியாள்காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வௌியும், இருகாவியங்கள் ஆகிய அவரது ஏழு நூல்கள் இதுவரை வௌிவந்துள்ளன. நூல்வடிவம் பெறாதவை பல.
மஹாகவி, யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வையே தனது கவிதைப் பொருளாகக் கொண்டார். யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். பழைய யாப்பு வடிவங்களைப் பேச்சோசைப் பாங்கில் எளிமைப்படுத்தினார். கிராமிய வழக்குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகப் பயன்படுத்தினார். மனித வாழ்க்கையில் ஒரு ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர்தன் கவிதைகளில் பிரதிபலித்தார். தனக்குப்பின் வந்த பல கவிஞர்களில் அவர் கணிசமான பாதிப்பைச் செலுத்தினார். இக்காரணங்களால் ஈழத்து நவீன கவிதையில் ஒரு பெரிய ஆழுமையாக பல விமர்சகர்களால் மஹாகவி கருதப்படுகின்றார்.
1950 ஆம் ஆண்டுகள் இலங்கை வரலாற்றில் முக்கியமான காலப் பிரிவாகும். கிடைத்த சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்குவதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் இக்காலப் பிரிவிலேயே தொடங்கின. தேசியம் பற்றிய பிரக்ஞை பொதுமக்கள் மயமாகத் தொடங்கிய காலப்பிரிவும் இதுவே. தேசிய இனப் பிரச்சினை பெரிய அரசியல் பிரச்சினையாக மாறிய காலமும் இதுவே.
இக்காலப் பகுதியில் இலங்கைத் தமிழ்க் கவிதையில் பல புதியவர்களையும் சில புதிய போக்குகளையும் நாம் காண்கின்றோம். உண்மையில் இக்காலப் பகுதியிலேயே இலங்கையின் நவீன தமிழ்க் கவிதை வீறுடன் எழுச்சி பெற்றது எனலாம். நாம் முன்னர் குறிப்பிட்ட கவிஞர்களும் இக்காலப் பகுதியிலேயே முதிர்ச்சி பெற்றனர். முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், ராஜபராதி, புரட்சிக்கமால், அண்ணல் முதலியோர் இக்காலப் பகுதியில் அதிகம் எழுதிப் பிரபலம் பெற்றவர்கள். ஆயினும் தங்கள் நோக்கிலும் போக்கிலும் இவர்கள் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தனர்.
விஞ்ஞானப் பட்டதாரியான முருகையனின் கவிதைகளில் சிந்தனைக் கனதியே பிரதான அம்சமாகும். விஞ்ஞான அறிவின் செல்வாக்கை இவரது பல கவிதைகளில் காணலாம். கவிதைகளாகவும் பா நாடகங்களாகவும் காவியங்களாகவும் இவரது படைப்புக்கள் அதிகம் உள்ளன. நெடும்பகல் இவரது காவியமும் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு நூலாகும். வந்து சேர்ந்தன-தரிசனம், கோபுரவாசல் ஆகியன பாநாடக நூல்களாகும். ஆதிபகவன் என்ற காவிய நூல் அண்மையில் வௌிவந்துள்ளது. கடூழியம் என்னும் குறியீட்டுப் பாங்கான இவரது பாநாடகம் சமீபகாலத்தில் இலங்கையில் மேடையேற்றப்பட்ட முக்கியமான நாடகங்களுள் ஒன்றாகும். மஹாகவியுடன் இவர் சேர்ந்து எழுதிய 'தகனம்' குறிப்பிடத்தக்க ஒரு பரிசோதனைக் காவியமாகும். ஒருவரம் இவர் மொழி பெயர்த்து வௌியிட்ட ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு.
50 களில் எழுதத் தொடங்கிய நீலாவணன் 1975 ஜனவரியில் மரணித்தார். அதுவரை அவர் ஏராளமான கவிதைகளையும் சில பா நாடகங்களையும் வேளாண்மை என்ற முடிவுறாத ஒரு காவியத்தையும் படைத்துள்ளார். ஆரம்பத்தில் அழகிய காதல் கவிதைகள் பலவற்றை எழுதிய நீலாவணன் 1960 களில் கிழக்கிலங்கைக் கிராமங்களின் வாழ்க்கை முரண்பாடுகளைத் தனது கவிதைகள் பலவற்றில் சித்திரமாக்கினார். ஆயினும் இவரது பிற்காலக் கவிதைகள் பலவற்றில் ஆன்மீக உணர்வே வௌிப்பாடு பெற்றுள்ளது. 'வழி' இவரது முக்கியமான கவிதைகள் சிலவற்றை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பாகும்.
சில்லையூர் செல்வராசன் (தான்தோன்றிக் கவிராயர்) அங்கதப் பாணியிலான கவிதைகள் எழுதுவதில் வல்லவராக விளங்கினார். பிரதானமாக இவர் ஒரு மேடைக்கவிஞரே எனலாம். கவியரங்குகளில் இவரது கவிதைகள் அதிகம் வரவேற்பைப் பெற்றன. பிற்காலத்திலே இவர் சிலேடை போன்ற மொழி வித்தைகளிலும் அக்கறை காட்டியுள்ளார். இவரது கவிதை நூல்கள் எதுவும் வௌிவரவில்லை.
இராஜ பாரதி, அண்ணல் ஆகியோர் பிரதானமாகக் காதல் கவிஞர்களே. ஓசைநயமும் உவமைச் சிறப்புமிக்க பல காதல் கவிதைகளை இவர்கள் எழுதியுள்ளனர். தீயுண்ட வீரமுனை என்ற இராஜ பாரதியின் சிறு கவிதை நூல் இனக்கலவரம் ஒன்றில் பாதிக்கப்பட்ட வீரமுனை என்ற கிராமத்தைப் பற்றியது. அண்ணலின் 'அண்ணல்' கவிதைகள் என்ற தொகுப்பும் வௌிவந்துள்ளது. ஐம்பதுகளில் வளர்ச்சியடைந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவரான புரட்சிக்கமால் பிற்காலத்தில் முற்றிலும் இஸ்லாமிய மரபுணர்ச்சிக் கவிஞராக மாறினார். 'புரட்சிக்கமால் கவிதைகள்' தொகுப்பாக வந்துள்ளது.
1950 களில், பரமஹம்சதாசன், பார்வதிநாதசிவம், திமிலைத்துமிலன், அம்பி, சக்தி அ.பாலையா, எம்.சி.எம். சுபைர், யுவன், போன்ற இன்னும்பல குறிப்பிடத்தகுந்த கவிஞர்களும் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஆயினும் மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகிய மூவருமே 50 களிலும் 60 களிலும் கூட ஈழத்தின் பிரதான மூத்த கவிஞர்களாக விளங்கினர்.
1950 ஆம் ஆண்டுகளின் 'பின்பகுதி' அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழ்க்கவிதையில் பெரிதும் செல்வாக்குச் செலுத்திய காலப்பிரிவாகும். இக்காலப் பகுதியே அரசியல் கவிதையின் தொடக்க காலமும் ஆகும். தென் இலங்கையில் சிங்களம் மட்டும் என்ற அரசியல் கோசத்தின் எதிரொலியாக தமிழ் மக்கள் மத்தியில் மொழி உணர்வும் இனரீதியான அரசியல் எழுச்சியும் தீவிரம் அடைந்தன. இயல்பாகவே மொழி உணர்வுடைய, ஆனால் அரசியல் ரீதியாக வெறுமையாக இருந்த பெரும்பாலான தமிழ்க் கவிஞர்கள் 'தமிழ் அரசு' இயக்கத்தால் எளிதில் ஈர்க்கப்பட்டார்கள். இன, மொழி உணர்வை உள்ளடக்கமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கவிதைகள் இக்காலப் பகுதியில் எழுந்தன. தமிழரசுக்கட்சி சார்பான சுதந்திரன் பத்திரிகை இத்தகைய கவிதைகளின் பிரதான வௌியீட்டுக் களமாக அமைந்தது. செந்தமிழ்ச் செல்வம், உயிர்தமிழுக்கு, தமிழ் எங்கள் ஆயுதம் முதலிய தொகுப்பு நூல்களாகவும் தமிழ் இயக்கக் கவிதைகள் வௌிவந்தன. இந்த அரசியல் அலையில் இருந்து ஒதுங்கி நின்ற கவிஞர்கள் மிகச்சிலரே.
எனினும் 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரம் இக்கவிதைப் போக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. இனரீதியான அரசியல் எழுச்சியின் விளைவுகளை மனிதாபிமானமிக்க இக்கவிஞர்கள் நேரடியாகக் கண்டனர். பலர் அதில் இருந்து விடுபட்டனர். சிலர் புதியதொரு அரசியல் போக்குக்கான தேடலில் ஈடுபட்டனர். எனினும் தீர்த்து வைக்கப்படாத தேசிய இனப் பிரச்சினை, பெரும்பான்மை இன ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க வேட்கை ஆகியவற்றின் விளைவாக இன்றுவரை இக்கவிதைப் போக்கு சிறுபான்மையாக நீடித்து நிலவக் காணலாம். கவிஞர் காசி ஆனந்தன் இப்போக்கின் சிறந்த பிரதிநிதியாக இருந்து வருகின்றார். அவரது உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் முதலியன இப்போக்கில் அமைந்த கவிதை நூல்களாகும்.
1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முக்கியமான காலப் பிரிவாகும், சமூகப் பிரக்ஞையும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் பிரதான போக்காக மாறிய காலப்பிரிவும் இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து நாவல், சிறுகதை, விமர்சனத்துறைகளில் முற்போக்குச் சிந்தனை பிரதான இடம் பெறத் தொடங்கியது. ஆனால் கவிதையைப் பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னரே முற்போக்குச் சிந்தனை முதன்மைபெறத் தொடங்கியது. எல்லோரும் இல்லை எனினும் ஒரு கணிசமான தொகைக் கவிஞர்கள் முற்போக்குச் சிந்தனையால் பாதிக்கப்பட்டனர். இவர்களுள் பலர் அரசியல் இயக்கங்களிலும் நேரடியாக ஈடுபட்டனர்.
பசுபதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை போன்றோர் நேரடியான பிரச்சாரப் பாங்கான அரசியல் கவிதைகள் எழுதினர். எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிப்பதன் ஊடாக கலாபூர்வமாக அரசியல் உணர்வை வௌிப்படுத்த முனைந்தனர். மௌனகுரு, ஈழவாணன், இ. சிவானந்தன், மருதூர்க்கனி, பண்ணாமத்துக்கவிராயர், கலைவாதி கலீல் போன்றோரும் தம் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனைகளைப் பிரதிபலித்தனர். மேற்காட்டியவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் முற்போக்கு அரசியல் சித்தாந்தங்களுடன் உறவு உடையவர்களாவர்.
இக்காலப் பிரிவில் முற்போக்குச் சித்தாந்தங்களுடன் தம்மை இனம் காட்டிக்கொள்ளாத சீர்திருத்தவாதப் போக்குடைய அல்லது ஆன்மீக நோக்குடைய பல கவிஞர்களும் உள்ளனர். 60ஆம் ஆண்டுகளின் கவிதை முயற்சியில் இவர்களின் பங்களிப்பும் கணிசமானதாகும். ஜீவா.ஜீவரத்தினம், வி.கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, பாண்டியூரன், மு.சடாட்சரன், பஸீல் காரியப்பர், ஏ.இக்பால், அன்பு முகையதீன், சா.வெ. பஞ்சாட்சரம், பா. சத்தியசீலன், மு.பொன்னம்பலம், குமாரசாமி போன்றோர் இப்போக்குகளின் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகளாவர். இவர்களுள் சிலரின் பிற்காலக்கவிதைகளிலே முற்போக்குச் சிந்தனையின் தாக்கத்தையும் காணலாம். இவர்களுள் சிலர் 60க்கு முன்னரே கவிதை உலகில் பிரவேசித்தவர்கள் எனினும் 60 ஆம் ஆண்டின் பின்னரே முதிர்ச்சியும் பிரபலமும் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்காலப் பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர்கள் சிலரின் கவிதை நூல்கள் சில வௌிவந்துள்ளன.பசுபதியின் 'பசுபதி கவிதைகள்', சுபத்திரனின் 'இரத்தக்கடன்', இரத்தினதுரையின் 'காலம் சிவக்கிறது', 'ஒரு தோழனின் காதல் கடிதம்', எம்.ஏ. நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்', ஈழவாணனின் 'அக்கினிப்பூக்கள்', இ. சிவானந்தனின் 'கண்டறியாதது', ஜீவா ஜீவரத்தினத்தின் 'வாழும் கவிதை', வி. கந்தவனத்தின் 'ஏனிந்தப் பெருமூச்சு', 'இலக்கிய உலகம்', 'கவியரங்கில் கந்தவனம்', காரை சுந்தரம்பிள்ளையின் 'தேனாறு', 'சங்கிலியம்', சா.வே. பஞ்சாட்சரத்தின் 'எழிலி, பா.சத்தியசீலனின் 'பா', மு.பொன்னம்பலத்தின் யுஅது'. அன்புமுகையதீனின் 'நபிகள் வாழ்வில் நடந்த கதை' ஆகியன 60, 70 களில் வௌிவந்தன.
1960 ஆம் ஆண்டுகளில் ஈழத்துக் கவிதைகளின் உருவ அமைப்பில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்.
60 ஆம் ஆண்டுகள் வரை யாப்போசையும், சந்தலயமும் கவிதையின் பிரதான அம்சங்களாகக் கருதப்பட்டு வந்தன. 'யாப்புக்குள் இருந்து யாழ்மீட்டுபவள்' என மஹாகவி ஒரு கவிதை எழுதினார். ஓசைநயம் மிக்க பல்வேறு வகையான யாப்பு வடிவங்களிலும், சந்த விகற்பங்களிலும், ஈழத்துக் கவிஞர்கள் அக்கறை காட்டினார். ஆனால் 60 ஆம் ஆண்டுகளில் இறுக்கமான யாப்போசை விருப்பு தளர்ச்சியடைந்தது. பேச்சோசைப் பாங்கான கவிதைகள் பெரிதும் எழுதப்பட்டன. அதற்கேற்ப செய்யுளின் அமைப்பு முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அன்றாட வழக்குச் சொற்கள் இயல்பான சொற் சேர்க்கை, சிறு வாக்கிய அமைப்பு என்பன கையாளப்பட்டன. செய்யுளின் அடி அமைப்புக்கு ஏற்ப அன்றி, பொருள் அமைப்புக்கு ஏற்ப சீர்பிரித்து வரிகள் அமைக்கப்பட்டன. ஓசை நிறுத்தத்துக்காக நிறுத்தக் குறிகளும் இடைவௌி (Space) களும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு செய்யுளின் யாப்போசை குறைக்கப்பட்டு பொருள் புலப்பாட்டுக்கு ஏற்ப பேச்சோசை நிலை நிறுத்தப்பட்டது. ஒரு செய்யுளுக்குரிய எதுகைமோனை, சீர்தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசையின் சகல பண்புகளையும் ஈழத்துக்கவிதை பெற்றது.
மரபு ரீதியான எல்லாச் செய்யுள் உருவங்களிலும் குறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக் கலித்துறை போன்ற வரையறுப்புக்கள் மிகுந்த வடிவங்களிலும் கூட ஈழத்து நவீன கவிஞர்கள் பேச்சு ஓசைப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றார்கள். மஹாகவி, முருகையன், நீலாவணன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரே இதில் முக்கிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர் எனலாம். முருகையனின் 'பேச்சோசையும் பாட்டோசையும்' என்ற கட்டுரையும் எம்.ஏ.நுஃமானின் 'பேச்சுமொழியும் கவிதையும்' 'மஹாகவியும் வழக்குத் தமிழும்' என்ற கட்டுரைகளும் ஈழத்து நவீன கவிதையின் இப்பண்பை எடுத்துக் காட்டுவனவாய் அமைந்தன. புதிய உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய கவிதைத் தேவைகளுக்கு ஏற்ப மரபுவழிச் செய்யுள் நவீனமயமாக்கப் பட்டதன் விளைவே இப்பேச்சோசைப்பண்பு எனலாம். இது தமிழகத்துக் கவிதையில் காணப்படாத ஓர் அம்சம் ஆகும்.
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைத் தமிழ்க் கவிதையில் ஒரு புதிய அலை தோன்றியது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணர்வும், தென் இந்தியப் புதுக்கவிதைகளின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கவிதை உலகுள் இழுத்துவிட்டன. புதிய சமுதாய மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கும் புரட்சிகரச் சிந்தனை உடையோரே இவர்களுள் அதிகமாகக் காணப்பட்டனர். இவர்கள் யாவரும் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வௌியிடுவதற்குப் புதுக்கவிதை ஒரு இலகுவான சாதனம் எனக் கண்டனர். 1970க்கு முன்பும் ஈழத்துக் கவிதை உலகில் புதுக்கவிதை அல்லது வசன கவிதைப் போக்கு இருந்தது. இன்று தென்னிந்திய இலக்கியத்துடன் தன்னை முற்றிலும் இணைத்துக்கொண்ட புதுக்கவிதையாளர் தருமு சிவராமு ஈழத்தவரே. 60 க்களில் மு. பொன்னம்பலம், கே.எஸ். சிவகுமாரன், தா. ராமலிங்கம் முதலியோரும் புதுக்கவிதைகள் எழுதினர். தா. ராமலிங்கம் முக்கிய கவனத்துக்குரிய தனித்துவமான புதுக்கவிதைக்காரராவர். இவரது புதுமெய்க்கவிதைகள், காணிக்கை ஆகிய இரு நல்ல புதுக்கவிதைத் தொகுதிகள் வௌிவந்தன. எனினும் 70க்கு முன்னர் இலங்கையில் புதுக்கவிதை சிறுபான்மையினருக்கு உரியதாகவும் இலக்கிய அங்கீகாரம் பெறாததாகவுமே இருந்