தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > முகம் கொள் - கி.பி. அரவிந்தன்

20th Century Eelam Tamil Literature at Project Madurai


 
முகம் கொள் - கி.பி. அரவிந்தன்
mukam koL by K.P. Aravindan


[ Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany , Mr. Ramanitharan Kandiah, New Orleans, USA,  Ms. Geetha Ramaswami, Singapore(Proof-reading)Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland  © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]


Preface
Introduction
முன்னுரை ... 11
முகம் கொள் ... 23
முடிவுறாத பாடல்கள் ... 31
ஆண்ட பரம்பரை ... 33
மாலை விழுந்த பின் முன்னிராப் பொழுதொன்றில் ... 38
நன்றி கெட்டதுகள்.. ... 42
பனங்கொட்டைகள்.. ... 45
நண்பனுக்கு ... 49
உறைதலாய் ... 55
துருவங்கள் மாறி... ... 57
இருப்பிடம் தேடி... ... 61
தாலாட்டும் தன்பாட்டும்... ... 63
வதைமொழி ... 66
நிலமை ... 68
பிரிப்பு ... 69
என் இனிய...க்கு ... 70
போ...அங்கிரு ... 73
ஞாயிறும் நானும் ... 78
விடைபெறும் நேரம்.. ... 88


Preface

'கடல் மடி ஏறி
இன்றளவும் திரும்பாத
என்னருந் தோழன்
ஏலோலா பாடகன்
மைக்கலுக்கு.......'

வணக்கம்.

இவை என் முகத்தின்
சில பக்கங்கள், பதிவுகள்.
நினைவுப்பரணில் இருந்து
இறக்கப்பட்டவைகள்.
பட்ட நன்றிக் கடனுக்கு
நன்றி சொல்லும் முனைவு.
இத்துடன்
நட்பு, நேசம், தோழமை,
காதல், கனிவு, மனிதம்
என்பவற்றையும்,
அவலமுற்று தொய்த மனத்தின்
ஆறாப் புண்களையும்
எனக்கு பரிச்சயமான
சொற்களுக்குள்
புகுத்திவிடலாம்
எனும் துணிபு.
இச் சொற்களுக்குள்
அவை வசப்படவில்லையாயின்
அது என்
மொழியறிவின் பற்றாக் குறையே.
வெட்கம் கொள்கிறேன்.
நூலாக்கியதற்கு மன்னித்து
ஓங்கி ஒரு குட்டு,
முடிந்தால் அதிகமாகவும்.

தலைதாழ்த்தி, நட்புடன்
கி.பி.அரவிந்தன்.


Introduction

முடிவுறாத பாடல்கள்

தனது தாயத்திற்கான இந்த ஏக்கத்தைத் தவிர வேறெந்த ஏக்கத்தையும் நாம் நிராகரிக்க வேண்டுமல்லவா? இந்த ஏக்கம் என்னுடன் இருக்கிறது. எனக்குள் இருக்கிறது. அது எனது பாதத்தோலை உரசும் கடலின் வெண்மணல் போன்றது. அது என் கண்களில், என் இரத்தத்தில் வாழ்கிறது. எனது வாழ்வின் ஒவ்வொரு நம்பிக்கையின் பின்னணிக்கும் அதற்குரிய பரிமாணத்தை வழங்குகிறது. ஒருநாள், எழுதுவதை நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன் - ஒரு ரஷ்ய இலையுதிர் காலத்தை. - விளாடிமிர் நபகோவ் (நினைவே, பேசு)

"துப்பாக்கி வாய்ப்பட்ட" தனது "சிறு தேச"த்தை விட்டுக் கவிஞன் புலம்பெயர்கிறான். தாயகத்தில் "காற்றும் நெருப்புமாய், வாழ்வும் இருப்பும்". "ஊனத்தழும்புக"ளேறிய கவிஞனின் உடலும் இதயமும் காலத்தின் "சுழல்" பாதையை விட்டகன்று விலகியிருப்பதையே விரும்புகின்றன -தேசிய விடுதலைப் போராட்டம் குறிதவறி, இலக்கு மறந்து, உருமாறிய காரணத்தால். கடல் கடந்து மாற்றான் தேசத்தை அண்டி வாழ்ந்தாலும்,

"விழிநீர்ப் பெருக்குடனும்
ஆழ்கடல் போர் முடித்து
அணிகுலைந்து திரும்பும்
கடற்புரவிகள்"

கொண்ட 'நேசக்கடலின்' நினைவு கவிஞனின் மனத்தை விட்டொழிய மறுக்கிறது. "துருவம் தப்பி வந்த" அவன், இப்போது "வெண்தோல் மினுங்கும்" மேற்கத்திய சொர்க்கத்தில் "ஊரில் தீண்டாத 'இழிசனப்' பணிகளை" மேற்கொண்டு காலம் கழிக்கும் முகமற்ற அகதி; சரணாலயம் நீங்கிய ஏதிலிப்பறவை. தாயகத்தில் அவனது மனைவியும் மகனும்; விழித்துறங்கும் தொலைவுகளில் அவர்கள் இருப்பினும், அவள் கண்ட சூரியனை அவன் காண நேரம் பிடிக்கும். பிள்ளை சிரித்து நித்திரையில் முகம் சுருக்கும்போது, "நாவந்து விரட்டுதென்று" சொல்ல அவனால் முடியாது. "குண்டும் குழியுமான" அவன் பிறந்த நாட்டில் மனைவி" ஊனுருகி உடலுருகி" பிள்ளையைத் "தன்னுக்குள் போர்த்து" அவனுக்காகக் காத்திருப்பாள். கவிஞனுக்கு இனி வாய்த்ததுதான் என்ன? இனி அவனால் வீடு திரும்ப முடியுமா?


முன்னுரை - வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை - சென்னை, 17.09.1992

கி.பி. அரவிந்தனின் கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை: யாழ்ப்பாணத்து அனுபவங்கள்; தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்து அனுபவங்கள்; அகதிவாழ்வின் பாதிப்புகள் (மேற்கு ஐரோப்பிய அனுபவங்கள்).

இக்கவிதைகள் வரலாற்றனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல. அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால், பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு, பண்படுத்தப்பட்டுக் கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.

போராளியின் சோர்வு, அகதியின் மனத்தாங்கல்கள் சிந்திக்கும் மனிதர் எவருக்குமே உண்டாகும் ஐயப்பாடுகள், தர்மசங்கடங்கள்- இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலையை இக்கவிதைகளில் காணலாம்.

கவிதை மொழி வெளிப்படும்போது சரி ('நண்பனுக்கு') இலக்கியச் சாற்றில் ஊறித் திளைத்து இலக்கிய உணர்வுகளை யதார்த்தத்தின் எதிரே நிறுத்தி நையாண்டி செய்யும்போதும் சரி ('போ...அங்கிரு') நயமான சொற்களைக் கொண்டு ஒரு கனவுலகைப் படைத்துக் காட்டும்போது சரி- இப்படைப்பாளியின் உணர்வும் உணர்ச்சிகளும் தனியருவரது உணர்ச்சிகள், அனுபவங்கள் என்ற அளவில் நின்று விடாது, குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் குறிப்பிட்ட வரலாற்று நிர்ப்பந்தங்களுக்கும் கட்டுப்பட்டு வாழும் ஈழ மக்கள், போராளிகள், அகதிகள் ஆகிய அனைவரது கூட்டு உணர்வாக, கூட்டு அனுபவமாக, கூட்டு நினைவாக பரிணமிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் அவர் கண்டவை 'கரைந்துருகும் மனிதம்', 'ஆண்டபரம்பரை'யினரின் இறுமாப்பு, காய்களை நகர்த்தித் தலைகளை வீழ்த்தும் 'சதுரங்க ஆடல்'... அங்குள்ள 'நண்பர்கள்'

வாடும் பயிர் கண்டு
வாடுவர் முதலில்.
படி அளந்து
கஞ்சி வார்ப்பர்
இடையில்
தவிக்கும் உயிர்களைப்
பங்கு வைப்பர்
முடிவில்.

கவிஞனை நண்பர்கள் பார்ப்பார் ஒருவிதமாக; 'விலகுகின்றாயா?' எனக் கேட்டு முகத்தைத் திருப்பிக் கொள்வர். ஆனால் 'முற்றத்தில் வேலி'யையும் தலைவாசல் தாண்டினால் முட்புதரையும் காண்கையில் அவனால் என்ன செய்ய முடியும்? தனது இலட்சியத்தைக் கைவிட மறுக்கும் அவன் கூறுகிறான்:

பொடியன்களின்
கிட்டிப்புள்
விளையாட்டல்ல
அழாப்ப...
பணயம் வைக்கப்பட்டுள்ளவை
தேசிய நிர்ணம்

கவிஞன் வரலாறறிந்தவன், வரலாற்றின் எதிபாராத் திருப்பங்களையறிந்தவன்; வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள துரோகச் செயல்களையும் கண்டவன்.

எதிரி மாநிலம் ஆளவந்தான் - தோழன்
கூடவே வந்து சேர்ந்தான்.

என்பதைக் கூறும் அவன் 'தோள் கொடுத்த எலும்புகளில் சமைக்கப்பட்ட சிம்மாசனத்'திற்குச் சிரம் தாழ்த்த மறுத்தவன். அதேசமயம் முறை தவறிய 'நண்பனை' எச்சரிக்கவும் தயங்காதவன்:

சயனைட் குப்பியை
சயனைட் தின்னும்
தொப்புள் கொடியில்
சயனைட் பூக்கும்

ஆழமான கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைக்கும் கவிஞன் இவற்றுக்கு எளிதான, இதமான பதில்களை யாராலும் பெற்றுவிட முடியாது என்பதையும் வலியுறுத்துகிறான். தேசிய விடுதலைப் போராட்டம் "சறுக்குகின்றது இலக்கு/ குறியும் தவறி" என்று அவன் வேதனைப்பட்டாலும் போராட்டத்திற்கான தேவை, தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை அவன் மறக்கவில்லை:

உழு
மறுத்துழு
மீளவும், மீளவும்
பண்படும் நிலம்

தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தினால் இனிவரும் தலைமுறைகளும் பாதிக்கப்படும் என்பதை அவன் அறிவான். ஆயினும் கையினில் ஏந்திய நெருப்பை அணைக்கவா முடியும்? அது சுட்டொ¢ப்பதைத் தடுக்கவா முடியும்? நெருப்பு

எரியவும் வேண்டும்
ஒளிரவும் வேண்டும்
புயலினும் ஏறவும் வேண்டும்

அது அழிக்கவும் வேண்டும்; ஆக்கவும் வேண்டும்.

ஆனால் போர்க்களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போராளியின் நெஞ்சத்திற்கு அமைதி ஏது?

அகதிமுகம் பெறவா
உயிர்க்களையை
நான் இழுந்தேன்?
தேசமெங்கும்
தீ விதைத்தேன்?

ராஜராஜன் குதிரையின் குளம்புகளதிர்ந்த தமிழகத்தில் "செவிலியர் பண்புடன் ஒத்தடம்" கொடுத்து ஆசுவாசப்படுத்திய நாட்கள், நீங்காத உறவுகள் உருக்கொண்ட நாட்கள் கவிஞனின் நினைவுத் திரையில் தோன்றுகின்றன. கவிஞன் இங்கிருந்தும் விடைபெற வேண்டிய கட்டாயம். "முகம் பெற்றவனாக" திரும்பி வருவதாகக் கூறிச் செல்கிறான்...

இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகள் தற்கால அகதியின்- ஈழத் தமிழரின், பாலஸ்தீனியரின், குர்து இனமக்களின்-இருப்பு நிலை, வீடற்ற வாழ்வு, நிறவெறிக்கிலக்காகும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து பிறந்தவை. கடுமையான அரசியல் போராட்டமும், மூர்க்கத்தனமான குழுச்சண்டையும், துப்பாக்கிச் சண்டையும் பு¡¢ந்து பு¡¢ந்து அலுத்துப் போய், இலேசான நம்பிக்கையிழையன்றில் தொங்கிக் கொண்டு ஊசலாடும் மனிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, தாயகத்தை விட்டுப் பலர் நீங்குகின்றனர். தேசிய ஆளுமையை உறுதிப் படுத்தியும் தேசவிடுதலையைக் குறிக்கோளாக்கியும் தொடங்கிய போராட்டங்கள், தேசத்தையே காயப்படுத்தும் போராட்டமாக மாறியுள்ள கொடுமையை ஈழத்தில் மட்டுமல்ல, வேறு சில மூன்றாம் உலக நாடுகளிலும் காணலாம்.

தேசியத் தன்னுரிமைக்கான போராட்டங்கள் பாதை மாறிச் செல்கையில், போராட்டத்திற்காகக் குரல் கொடுத்தும் கைகொடுத்தும் உதவிய கலைஞர்கள், அறிவாளிகள் -ஏன் போராளிகளில் சிலரும் கூட - மனம் தடுமாறுகின்றனர்; செய்வதறியாது திகைக்கின்றனர்; போராட்டத்தை வழிநடத்தும் தலைமையை இடித்துரைக்கவோ மாற்றுப் பாதையைக் காட்டவோ முனைகின்றனர். விமர்சனக் குரல்களோ அடக்கப்படுகின்றன. காலம் செல்லச் செல்ல போர்வாடை சித்தத்தையே மயக்கி நிலைகுலையச் செய்கிறது. எனவே அவர்கள் தாயகத்தை விட்டு வேறு புகலிடங்களை நாடிச் செல்லத் தலைப்படுகின்றனர். நமது கவிஞனும் செல்கிறான் - யாருடைய சொர்க்கத்தையும் தட்டிப்பறிப்பதற்காக அல்ல.

அவன் போய்ச் சேர்ந்த இடம் உலகிலுள்ள சாலைகள் மட்டுமல்லாது "றுகள் வாய்க்கால்கள், நிலத்தடி நீரோடைகள், பாதாளச் சுரங்கள்" ஆகியவையும் கூட போய்ச் சேரும் இடம். அங்கு

வந்து வந்து
சேர்கின்றன பார்
அறுத்தெடுத்த
ஈரல் குலைகள்
துடிதுடிக்கும்
இதயங்கள்
உருவி எடுக்கப்பட்ட
நாடி நரம்புகள்
பதமான
முகங்கள்....

மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், வட அமரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் அகதிகளாகச் செல்லும் உலக மக்கள்- பழுப்பு நிறத்தவரோ, மஞ்சள் நிறத் தவரோ, கறுப்பினத்தவரோ, யாராக இருந்தாலும் சரி- அவர்கள் எல்லாருமே 'கறுப்பர்கள்தாம்'. 'வெள்ளையரல்லாதவர்கள்தாம்'. அங்கு "ஊரினில் தீண்டாத 'இழிசன' பணிகளை ஆலாய்ப் பறந்து தலைகளில் சுமந்தாலும் அதுவும் கூட நிரந்தரமாக அமைவதில்லை. அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள குறிப்பிட்ட நாட்டின் வறிய பகுதியினரின் வெறுப்பையும் குரோதத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அக் குறிப்பிட்ட நாட்டிலுள்ள நிறவெறியர்கள் அகதிகளை வெளியேற்றுவதையே இலட்சியமாகக் கொள்கின்றனர். அவர்கள்

தீப்பற்றும் குரல்களால்
செவிகளில் அறைவர்
"வெளியேறு..."
சிலைகள் உயிர்க்கும்
வாள்முனை மினுங்கும்

அகதிகளுக்குத் தஞ்சமளித்துள்ள மேற்கு நாட்டரசாங்கங்கள், மூன்றாம் உலக மக்களின் நிலை கண்டு கவலைப்படுவதாகக் கூறிக்கொண்ட போதிலும், நிறவெறியர்களின் அச்சுறுத்தல்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயங்குகின்றன. ஏனெனில் வெள்ளையர் அல்லாதவர்களைப் "பிறத்தியாரா`கவே பார்க்கும் ஒரு சமூக வரலாற்று மரபில் வந்தவைதானே அவையும்? இனவெறி தனது கோரைப் பற்களைக் காட்டாத சாதாரண நாட்களிலும் கூட வெள்ளையா¢ன் 'பூனைக் கண்கள்' இகழ்ச்சியைக் கொட்டும். தமது 'நிழலும் குறுகிக் கரைய' அகதிகள் தமக்குள்ளேயே சுருங்கிக்கொள்வர். அல்லது கவிஞனைப் போல் சவால் விடவும் செய்வர்:

"சாதிய வெக்கையிலும்
வேகாத உயிர்
நிறவெக்கையிலா வேகும்?"

எத்தகைய வாழ்க்கை அது? அங்கு

மனிதம் சிறுமையுற
சூத்திரங்கள் அச்சுறுத்த
இயந்திரங்கள் காவு கொள்ளும்.

கவிஞனின் அந்நியமாதல் இங்கு கொடூரமான பா¢மாணங்களைப் பெறுகிறது. அவனோ ஒரு ஏதிலி. அதுவும் 'கறுப்பிலும் மாற்றுக் குறைந்தவன்' இவனுக்குப் பாலுணர்வு ஒரு கேடா? இயல்பூக்கள் அவனைச் சீண்டிப்பார்க்கின்றன. என்ன கொடுமை!

கும்பி கூழுக்கழ
கொண்டை
பூவுக்கழுததாம்!
இது
எதற்கழுகின்றது
இடம் வலம்
தொ¢யாத இடத்தில்.

சாதித்திமிரோடு வளர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் சிலர் மூன்றாம் உலக மக்களின் மானுடத்துவமே மறுக்கப்படும் இந்த நாடுகளிலும் கூட கறுப்பின மக்களைத் தங்களினும் இழிவாகப் பார்ப்பதும் நடக்கிறது:

குறுக்குக் கட்டும்
நார்க் கடகமும்
சுமந்தோரெல்லாம்
இழிந்தவரானால்
என்னவர் அகங்கள்
தரமிங்கும் அளக்கும்
கறுப்பினை இகழும்

புலம் பெயர்ந்து வாழ்வோருக்கு வேறு சில சிக்கல்களும் தோன்றுகின்றன. தாயகம் பற்றிய நினைவுகள் ஒருபுறம் அவர்களை வாட்டி வதைக்கும். மற்றோர் புறமோ எதிலிகளுக்கே உரிய நிச்சயமற்ற நிலை அவர்களது நினைவுகளையும் கூட கொன்றழிக்கக் கூடியதாக மாறி அவர்களைத் துன்புறுத்தும்.

என்றாவது ஒருநாள் தாயகம் திரும்பலாம் என்ற நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகள் தாயகத்திலிருந்து வந்து, அவர்களது செவிகளைத் தீண்டும். அங்கு முடிவே கண்ணுக்குத் தொ¢யாத ஒரு போராட்டத்திற்காக இளைஞர்கள் மடிவதும் பெண்களும் வயோதிகர்களும் பிணங்காத்துப் பிணங்காத்துச் சோர்வுறுவதும்தான் அன்றாட நிகழ்வுகள்.

வரலாறு, நினைவு, அன்றாட வாழ்வு இவற்றில் சிக்குண்டு மனங்குமுறுபவரே இன்றைய அகதிகள். வரலாற்றின் இயக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவரைப் பார்த்து சங்கடங்கள் நிறைந்த அன்றாட வாழ்வு ஏளனப் புன்னகை வீசும். தமது நிலையை மறக்க முனைபவரைப் பாழாய்ப் போன நினைவு வந்து சஞ்சலம் கொள்ள வைக்கும்.

ஏக்கப் பெருமூச்சுடன் கடந்தகால நினைவுகளில் தம் சிந்தனையைப் படர வைக்க முயல்பவர்களை வரலாற்றின் வலிய கரம் உசுப்பி எழுப்பி விடும். தாயகத்தின் பண்பாடும் இலக்கியமும், ஏன் அதன் வரலாறும் கூட, அகதி மனத்திற்கு ஆறுதல் தந்து அதனைத் தேற்றக்கூடிய சக்தியை இழந்து விடுகின்றன. வேரறுந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் எதை ஆறுதலாகக் கொள்வது? பயணங்கள் முடிந்த பிறகும் இளைப்பாற முடியாமல் போனால்? "பறவைகள் எங்கு செல்லும், கடைசி வானத்திற்குப் பின்?" - பாலஸ்தீனியக் கவிஞர் மஹ்மூக் தார்வீஷின் இக்கேள்வி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் அகதிகளின் உதடுகளில் உறைந்து போய் விட்ட கேள்விதான்.

இந்த நம்பிக்கை வறட்சியைக் கடந்து செல்லும் இடையறாத முயற்சியை அரவிந்தனிடம் காணலாம். தாயகத்தின் மீதுள்ள அவரது தணியாத வேட்கையை, தற்செயலாகக் கவிஞன் மீது விழும் நிலவொளி தட்டியெழுப்புகிறது. அது வேறுபல நிலாக் காலங்களை அவனுக்கு நினைவுபடுத்துகிறது. "நிலவின் குறுக்காய்" எட்டடுக்கு மாளிகைகளும் இராட்சத இயந்திரங்களும் நின்று நிலவின் தோபையை அபகா¢த்த போதிலும் கவி மனம் கற்பனையில் இலயிக்கின்றது. 'குருதிபட்டு குழிக்குள் ஒடுங்கும் துயர்வாய்ப் படுமுன்னம்' தென்பட்ட தாயகத்து நிலவொளியைக் கவிதையாக மாற்றுகிறான் அகதிக் கவிஞன். கற்பனா உலகில் கண நேரமே சஞ்சா¢க்கிறான். ஆனால் அதுவே அவனுக்குத் தெம்பூட்டப் போதுமானது:

நிலவாடி
நிலவொளியில் நீராடி
நீருக்குள் ஒளிந்தாடி
வாலைப் பருவத்தார்
இளந்தேகம் தொட்டாடி

அக்காலத்தில் கவிஞனை தனது ஒளியில் 'தோய்ந்த' அந்நிலவு, நினைவுச் சின்னமாகவும் நாளைய உலகிற்கு ஒளியூட்டக் கூடியதாகவும் உருவகப்படுத்தப்படுகிறது.

உயிருக்கு
பால் சிந்து
அங்கிரு
நான் வர.....

என்று நிலவுக்கு விடை கொடுத்தனுப்புகிறான் கவிஞன்.

அரவிந்தனின் கவிதைகள் முடிவு பெறாதவை. அவர் தனக்குள் நடத்தி வரும் உரையாடல்களே இங்கு கவிதைகளாக வடிவங் கொண்டுள்ளன. புலம் பெயர்ந்து வாழ்வோர் கடந்தகால நம்பிக்கைகளுக்கும் தற்கால மனச்சோர்வுக்குமிடையே ஒரு சமன்பாட்டை உருவாக்க விரும்புவர். நினைவுகளைக் கொன்றோ, தற்கால எதிர்பார்ப்புகளைத் தவிர்த்தோ, மிகை நம்பிக்கைகளை உருவாக்கியோ இந்தச் சமன்பாட்டை உருவாக்க முடியாது. அகதிகள் நாடிழந்தவர்கள்; நாடிழந்த காரணத்தால் தம்மையே இழந்தவர்கள். அவர்கள் பெயர் மாறி, உருமாறித்தான் வாழ வேண்டியுள்ளது. பாலஸ்தீனிய அறிஞர் எட்வர்ட் சய்து கூறுகிறார்: நாடு விட்டு நாடு சென்று வாழ்பவரது வாழ்க்கை, பெயர்கள் சூட்டப்படாத புகைப்படங்களாக உறைந்து போனவை. இந்தப் புகைப்படங்களில் காட்சியளிக்கும் பிம்பங்களுக்குப் பெயா¢ல்லை. அவற்றால் பேச முடியாது. அவற்றைப் பற்றி எதையும் விவா¢த்துக் கூற முடியாது. ஆனால் காண்போர் மனத்தை அவை சலனப்படுத்தும் - சுண்டியிழுக்கும். தொலைந்துபோன தாயகங்களை நினைவுபடுத்தும்.

அப்படி நினைவுபடுத்தப்பட்ட தாயகத்தின் பொருட்டுத் தான் அரவிந்தன் சூ¡¢யனிடம் மன்றாடுகிறார்,

உன் சினம் தணி!
வெங்கதிர்களை
சுருக்கிக் கொள்!
கடல் நீர்
உறிஞ்சி
கார்மேகம்
படைத்து
மழைக்கரங்களால்
நீராட்டு,
செழிப்பூட்டு,
பூக்களும் தென்றலும்
முத்தமிட.

வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை

சென்னை
17.09.1992


முகம் கொள்

1.

இருள் பாய் சுருள்கின்றது
வேறெங்கோ விரிவதற்காய்.

நங்கூரம் தூக்குகின்றது
இராமானுஜம் கப்பல்.

இன்னமும் அணையாமல்
இராமேஸ்வரம் விளக்கு.

ஆழிக்குமரனும் நீந்திய
பாக்கு நீரிணை

சொற்பக் கடல்தான்
அப்பால் வி¡¢யும்
மகா சமுத்திரமாய்
விழிநீர் பெருக்குடனும்....

ஆழ்கடல் போர் முடித்து
அணி குலைந்து திரும்பும்
கடற்புரவிகள்.

கணக்கும் காயமும்
கரையினில் தொ¢யுமோ?

நானுமாய் வலை வீசிய
கடலிடம் ஏது?
கலைகள்தாம் எங்கே?

எனதரும் தோழர்
ஏலேலோ பாடகரை
உட்கொண்ட கடல்.

அடேய் மைக்கல்....
எதையெல்லாம் நான்....

கடுகின் காரம் நீ.
புரண்டெழும் அலைகளில்
எற்றுண்ணும் நீர்த்திவலைகள்

காற்று காவி வரும்.
கண்கள் கா¢க்கும்
அழுது விடுவேனோ?

சூ¡¢யன் எழுமுன்னால்
கரை கடந்தாயிற்று
நேசக் கடல் தாண்ட....

காற்றும் கடலுமாய்
தொடுத்த போ¡¢ல்
அழிந்து போன கரையும்,
அழிந்த கரைமேல்
சவுக்கு மரத் தோப்பும்
கோட்டோவியமென
மங்கித் தொலைவுறும்.

என்னைச் சூழவும்
நீலம் மிஞ்சும்.


2.

கனவுகள் மொட்டவிழும்
பயமறியாப் பருவம்.

முகில் பற்றைக் காட்டுக்குள்
பின்னிலவு புதைந்திருக்கும்.

அழிந்த கரை மேலே
கள்ளத் தோணியாலே
முன்னமொரு போதில் நான்.
அலைகளின் எக்களிப்பும்
காற்றின் பேச்சொலிப்பும்
ஈர மணற் சிலிர்ப்பின்
ஊதல் வெடடெப்பும்,
சவுக்கம் தோப்பசைவின்
கருநிழல் எச்சரிப்பும்,
கருங்கற் சுவர் ஒதுக்கால்
பவனி வரும் ராஜராஜன்
குதிரைக் குளம்பதிர்வும்....

நான் அப்போது அறிந்தேனா
இறங்கியது கரையல்ல
மானுடப் பேராழியென்று.

அச்சம் தவிரென்று
உச்சி முகர்ந்தும்,

செவிலியர் பண்புடன்
ஒத்தடம் தந்தும்

நெய்தல் மருதம்
குறிஞ்சி முல்லை
நிலங்கள் தோறும்
என்னுடன் நீங்கள்.

பாலை நிலத்திற்கும்
நீர் வார்க்கும் கனவுகள்.

மனங்களில் சுரக்கும்
சுனை நீர் ஊற்றுகள்.

நெஞ்சினில் நீர்மை
மிகுந்தனாலோ
நீர் வற்றிப் போயின
காவி¡¢, வைகை, பாலாறு....


3

பசியாறா வெறியுடன்
கடல்,
மெளன இருட்டாழம்
ஆர்ப்பா¢ப்பில் அமுங்கும்.

என்னையும் அழைக்கின்றதா?

வாலிப முறுக்கினில்
மிதப்புறும் வெண் நரையாய்
நுரை பொங்கும் அலைகள்.

அலை எங்கும் கரையேறும்,
மண்தனையும் மெல்லும்.

கடல்வாய் கொள்ளுண்ட
நிலம் போலாகுமோ
துப்பாக்கி வாய்ப்பட்ட
என் சிறு தேசம்.

வீ¡¢ய விதைகள்
இரத்தத்துள் அமிழும்,
பதர்கள் மிதக்கும்.

சிறு போகம், பெரும் போகம்
எல்லாமும் பொய்த்ததுவோ....?

அகதி முகம் பெறவா
உயிர்க் களையை
நான் இழந்தேன்?
தேசமெங்கும்
தீ விதைத்தேன்?

துறவறம் கொண்டதும்
கடுந்தவம் பு¡¢ந்ததும்
வரம் பல பெற்றதும்
வீரமும் களத்தே விட்டு
வெறுங்கையோடு இலங்கை புகும்
இராவணேஸ்வரனாகவா?

சிறகுகளைக் கூட
காவிச் செல்ல மாட்டாமல்...
சரணாலயம் நீங்கும்
ஏதிலிப் பறவை.


4.

ஒளிக் கதிரில் சூடேற்றி
சூரியன் எழுகின்றான்.

நீண்டும் கோணியும்
படியும் என் நிழல்....

மூத்தது கோணலென்றால்
பின்னால் பிறந்தவையும்....

இருக்கையும் அதட்டுகிறது.

"என்ன புலம்புகின்றாய்
நாடற்றவன் போல....
அகதி முகம் உள்ளதே
அப்புறம் என்ன?

நீங்கள் கையுயர்த்தி
முகமழித்த மனிதரை
நினைவுண்டோ?

இந்த இருக்கைகளில்தான்
எத்தனை ஆயிரம்
துயர் கொண்டழுதிட்ட
என்புத் தோல் மனிதர்கள்.

மர இருக்கைகளை
பிளாஸ்டிக்காய் மாற்றியதே
அவர் உகுத்த கண்ணீர்தான்!

அலையின் சுழற்சியை
என்னென்பேன்
அவர்கள் வந்திறங்கிய
கரை இருந்து நீ.
வேடிக்கையாக இல்லை.

கவனத்தில் கொள்
உன் சந்ததியையும்
கேடு சூழும்
நாதியற்றவராய்....
நாடற்றவராய்...
அப்போது புலம்பு...."

இருப்பு கொள்ள
மனம் மறுக்கும்
காங்கேசன் துறை நோக்கும்
கப்பலின் அணியம்.

ஆபுத்திரன் கரையேறிய
மணிபல்லவம் தீவும்
மறைகின்றது.

விரிந்த வானத்தில்
வெண் முகில்கள்
இணைந்தும் கலைந்தும்
உருக்கொள்ளத் தவித்தும்,

என் முகம் போல....


5.

நான் எதையெல்லாம்
உங்களில் தொற்ற வைத்தேன்?

நீங்கள் எவற்றையெல்லாம்
எடுத்துக் கொண்டீர்?

நான் அறியேன்.

ஆனால் நான் கனிந்தேன்
உங்கள் தோளணைவால்
வெம்பலாகாமல்.

வேர் ஏன் அறுந்தது?

அத்தேசம் என்னை
உயிர்ப்பிக்கட்டும்.

என்னைத் தள்ளுங்கள்

தள்ள முடியாதவை
எல்லாவற்றையுமே
உரைத்துப் பாருங்கள்
நிறுத்துக் கொள்ளுங்கள்.

நிறுவைப் படிகள்
உங்கள் கைகளில்.

காவிரிப் படுகையிலும்
வைகைக் கரை நெடுகிலும்
கா¢சல் மண் காட்டிலும்
என்னுடன் அலைகையில்
எதை நீர் விதைத்தீர்?

பருத்தி வெடித்தால்
தறியினில் நெய்யலாம்,
கரும்பு விளைந்தால்
ஆலையில் பிழியலாம்,
கம்பு பயிரானால்
கூழ் காய்ச்சிக் குடிக்கலாம்,
கூட்டு நினைவினில்
பயிராகி வளர்ந்தவை
ஆறாத் துயரென்றால்....
கருத்துகள் பற்றிக் கொள்ளும்

சந்தேகம் கொள்ளற்க
கற்களின் உரசலில்
தீப்பொறி தெறிக்கும்.
பாறை இடுக்கிலும்
நீர்மை கசியும்.

சொர்க்க பூமியும்
கனவுத் தேசமும்
எங்குமே இல்லை.

இரத்தமும் சதையுமாய்த்தான்
பாதைகள் வி¡¢யும்
என் தேசம் போல
வெந்து தணியாக் காடாக....

நீலமலைத் தொடா¢னின்றும்
ராமர் அணை மேட்டிலிருந்தும்
எட்டிச் செல்லாப்
பாடமாக....

இன்றுபோய் நாளை வரும்.
உயிர்ப்பேன்
உங்களிடை இருப்பேன்.

கைகள் கொள்ளா
கலைச் செல்வங்கள் காவியும்
நெஞ்சு முட்ட
அன்புதனை நிறைத்தும்

நேசக் கடல் நாடி
வருவேன்-
முகம் பெற்றவனாக

1988 பாக்கு நீரிணை
 


முடிவுறாத பாடல்கள்

காற்றும் நெருப்புமாய்
வாழ்வும் இறப்பும்.

கரைந்துருகும் மனிதம்.

உயிர்த் துளிகளாய்த்
தேங்கிய வெள்ளம்.

கந்தகப் பூமியின்
வெக்கையின் வீச்சம்

காற்று சுழல்கின்றது
சருகுகள் பறக்கின்றன
சரசரத்த இரைச்சலுள்
கற்பகத் தருக்களும்
முறிபட்டு வீழ்கின்றன.

பார்வைப் புலன்களில்
புழுதிப்படலம்.

சறுக்குகின்றது இலக்கு
குறியும் தவறி....

யாரங்கே...?
ஏனிந்த முகச்சுழிப்பு?

சுரையை விதைத்தால்
அவரையா விளையும்?

அக்கினிக் குஞ்சொன்றை
ஆங்கோர் காட்டிடைப்
பொந்தினுள்....'
வைத்தது யார்?

மறந்து விடலாந்தான்
இலகானதுதான்
ஆனால் நடப்பதுவோ
அறுவடை.

வார்த்தைகளில்
தீ ஊறிப்
பாடல்களும் எ¡¢கின்றன.

சேறுபடா கரங்கள் எது?
பதர்களில்லா விளைச்சல் ஏது?

நெருப்பே நீ
வளர்!
கொழுந்து விட்டொ¢.

துடைத்துப் பொசுக்கு
பாரச்சுமைகளை
பாவ மூட்டைகளை.

இந்தா
உயிரும் சதையும்
வலுவிழந்து விடாதே

பற்று
மூண்டெழு
ஈரலிப்பு, நீர்மை
அனைத்திலும் தாவு.

பவுத்திரங்கள் பொசுக்கு

சீறிச் சினந்து
கங்குகள் விசிறு

ஓளிர்....

வசந்த ருதுவென
தேசம் வனப்புற....

 



ஆண்ட பரம்பரை

1.

கதவடைப்பு
அ¡¢தாரம் பூசிய
ஆண்டைகள்
ஆடிடும் மேடை

எந்தக் கூத்தானாலும்
இராஜபார்ட் வேடம்!

வாடும் பயிர் கண்டு
வாடுவர் முதலில்.

படி அளந்து
கஞ்சி வார்ப்பர்
இடையில்.

தவிக்கும் உயிர்களைப்
பங்கு வைப்பர்
முடிவில்.

தோள் கொடுத்த
எலும்புகளில்
சமைப்பர்
சிம்மாசனம்.

மூலைக் கற்கள்
பெயர்ந்துதிர
துப்பாக்கிகள்
தாங்கும் கவசம்.

சாரளம் கட்டி
கற்கள் சுமந்து
எழுப்பிய கோபுரம்.

நந்திகள் மறைக்கும்
பிரகார வெளியில்
நான்.

என்னில் எங்கணும்
இரத்த விளார்கள்.

மூளைப் பொறியின்
அறைகள் கனக்கும்.


2.

கற்களால் அடுக்கிய
வேலிக்குள் காலம்.

விடியலில் பனை ஏறி
வெயிலில் மண் கொத்தி
அந்தியில் வலைவீசி
ஒடுங்குவர் மனிதர்.

சாட்டைகள்
பிரம்புகள்
உலாவரும் தெருவில்.
சாதிக்காக ஒதுக்கிய
குடிநீர் தேடி
சுடுமணல் வெளியில்
அன்ன