தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > அகங்களும் முகங்களும் - சு.வில்வரெத்தினம்)

20th Century Eelam Tamil Literature at Project Madurai


akangkaLum mukangkaLum (by cu. vilvaretinam)
அகங்களும் முகங்களும் (ஆசிரியர் : சு.வில்வரெத்தினம்)



Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany (input); Mr. Govardhanan Ramachandran, Columbus, Ohio, USA (Proof-reading) Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai 1999-2000 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


சமர்ப்பணம்

எல்லாமும் ஆகி
எனதுள்ளும்
சொல்லாமல் ஊடுருவி
சுருதிப் பொருளாகி
பொல்லா வினைகளைந்த
ஞானப் புயலே

சொல்லிலே
உந்தன் சுவடெழுதும் போதெல்லாம்
தோற்றுப்போய் விழுகிறேன்
என்னைத்
தூக்கிவிடு
குருதேவா
நின் தொடுகழலில்
இது சரணே.

உள்ளடக்கம்


பதிப்புரை

நாட்டுப் பாடல், சிறுகதை, நாவல் இலக்கிய விமர்சனம், அரசியல் வரலாறு எனப் பல்வேறு துறைகள் சார்ந்த வெளியீடுகளைத் தொடர்ந்துவரும் இக்கவிதைத் தொகுப்பு, எமது ஏழாவது வெளியீடாகும்.

சமகாலக் கவிஞர்களில் சு.வில்வரெத்தினம் முக்கியமான ஒருவர். அகவயமானவன், புறவயமானவன் எனப் படைப்பாளனைப் 'பெட்டிகட்டிப்' பார்க்க முந்தும் நம் வரட்டு விமர்சகர்கள், இவரிடம் தோல்வியே காணுவர். அரசியல், சமூக, சமய, தன்னுணர்வுத் தளங்களிற் காலூன்றி இவரது அனுபவங்கள் கவிதா வெளிப்பாடு கொள்கின்றன. மரபுகளைச் சார்ந்து நவீன உலகினுள் பிரவேசிக்கின்றபோதும் 'முகந்திருப்பாது எதையும் எதிர்கொள்கிறார்; மனஞ் சலிக்காது எதிர்ப்பில் முளைகொள்கிறார்'. சொல்லாட்சி, புதிய சொற்பனைவு இவரிடம் காணும் தனித்திறன்கள்.

பல்வேறு அம்சங்களால் முக்கியங்கொண்டமையும் இந் நூலினை வெளிக்கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்; அதற்க இசைவுதந்த கவிஞருக்கு எமது நன்றிகள்.

முன்னுரை அளித்த மு.பொ., ஓவியங்களை வரைந்த திரு. அ.மாற்கு, புனிதவளன் அச்சகத்தினர் ஆகியோருக்கும், எமது அன்பு கலந்த நன்றிகள்.

அலை வெளியீட்டினர்
குருநகர்
7.8.1985


முன்னுரை

".....என்னோடு கூடவே இளைய பரம்பரையின் கலைஞனான சு.வில்வரத்தினமும் இருந்தான்."

- மு.த. ('கலைஞனின் தாகம்' - மெய்யுள்)

கலைஞன் சு.வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுதியைப் படித்த போது எனக்குள் நேர்ந்த அனுபவம்-

சந்தோஷம், ஆச்சரியம், நிறைவு.

நான் எழுதுபவை, எழுத நினைப்பவை என்கின்ற பகைப்புல கணிப்பீடுகளை உள்வாங்காதா நிலையில், இன்றைய சமகாலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் நின்று படித்தபோது எனக்குள் நேர்ந்த அனுபவம் இது. எந்த விதமான எதிர்மன முற்சாய்வுகளுமின்றிப் படிக்கும் எவர்க்கும் வாய்க்கக்கூடிய அனுபவம் இது. புகழ்ச்சியல்ல.

அதனால் ஒன்று நிச்சயமாகிறது:

இன்றைய புதிய தலைமுறைக் கவிஞர்களுள் சு.வில்வரத்தினம் தனித்துவம் பெறுகிறார். இத் தனித்துவம் பற்றிய விளக்கம் இவரையத்த இளந் தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புஷ்பராஜன் போன்றவர்களை இவரோடு ஒப்பு நோக்குதலைக் கோருகிறது.

ஆனால் இச் சிறு முன்னுரையில் அது சாத்தியப்படாததால் இக் கவிதைதை தொகுப்பின் முக்கியத்துக்குக் காரணமாய் இயங்கும் சூக்கும நிலைகளைப் பொதுவாகத் தொட்டு பார்ப்பது, இக் கவிதைத் தொகுப்பு எனக்களித்த அனுபவங்களைப் பரீட்சிக்கும் உரைகல்லாக அமையும்.

இவரது சிருஷ்டிகளை ஆத்மார்த்த தளத்துக்கு உரியவையாகவே நான் காண்கிறேன்.

ஆத்மார்த்த விஷயங்களை வெளிக் கொணரும் ஊடகங்களாகவே ஆதியில் கலை இலக்கியங்கள் தோன்றின. அதாவது மனித இருப்பின் அனுபவங்கள் சில சாதாரண வார்த்தைகளால் சொல்லக்கூடியவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாதவையாகவும் நிற்கின்றன. அப்படிச் சொல்லமுடியாத உணர்வுகள் எண்ணங்களைச் சொல்லில் வடித்துக் காட்டும் ஊடகங்களாகவே ஆதியில் கலை இலக்கியங்கள் தோன்றின. ஆத்மீக, தத்துவச் சிந்தனைகளில் பரிச்சயமுள்ளவர்கள் இவற்றை வியவகாரிக, பரமார்த்திக என்ற பிரிவுகளுக்குள் அடக்கிப் பார்க்கக்கூடும். அதாவது வார்த்தைகளில் சொல்லக்கூடிய நடைமுறை விஷயங்களை வியவகாரிக என்றும்; அப்படி முடியாத இறைவன், மனித இருப்பு போன்ற நடைமுறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பரமார்த்திக என்றும் கூறலாம். ஆனால் எனது ஆத்மார்த்தத் தளம் இந்தப் பிரிவுகளுக்குட்பட்டதல்ல. வியகாரிக தளத்திலும் சரி பரமார்த்திக தளத்திலும் சரி நாம் பிறர்க்கு வார்த்தைகளாற் சொல்ல முடியாமல் எம்முள் பதிவுறும் அனுபவங்களின் தளத்தையே, நான் ஆத்மார்த்த தளம் எனக் கருதுகிறேன்.

இறைவன் பற்றி அல்லது நம் இருப்புப்பற்றி எழும் ஆத்மீக விஷயங்கள் வேண்டாம். வெகு சாதாரணமான, மண்ணில் தெறிக்கும் உண்மைகளையே சொல்ல முடியாத அவஸ்தை நமக்கு.

பள்ளிக்கூடத்துக்கு முன்னால், விபத்தொன்று நேர்ந்ததின் பின்னர் அங்கே தனித்துக் கிடக்கும் ஒரு கால் சப்பாத்து.

வெட்ட வெளியில் தூரத்தில் நின்று சோழகத்தில் ஆடும் ஒற்றைப்பனை.

இப்படிப் பல. இந்த நிகழ்வுகள் எம்முள் கிளறிவிடும் உணர்வு ரூபங்களை வெளிக்கொணர முடியாமல் தவிக்கும்போது எமக்குக் கைகொடுத்து நிற்கும் ஊடகங்களே கலை இலக்கியங்கள்! இந்த உணர்வுநிலைகளை வெற்றிகரமாக வெளிக்கொணரும் படைப்புகளே சிறந்த கலைச் சிருஷ்டிகளாகக் கொள்ளப்படுகின்றன; கருத்துக்களைக் கோஷித்தும் கொள்கைகளைப் போதித்தும் நிற்கும் படைப்புகள் அல்ல. ஆயினும் கோஷிப்பும் போதிப்பும் கூட இவ்வுணர்வுகளில் கவலையிடப்படும்போதே உத்வேகமும் நிமிர்வும் பெறுகின்றன. இத்தகைய அனுபவ வெளிப்பாடுகளையே நான் ஆத்மார்த்த தளத்தவை என்கிறேன். இந்த ஆத்மார்த்த அனுபவங்களின் உந்துதலே கலை இலக்கியங்களின் தோற்றத்தின் ஆரம்பமாக இருந்திருக்கின்றன, இருக்கின்றன.

இந்த ஆத்மார்த்த உணர்வுகளின் மற்றுமொரு நிலை இன்னும் முக்கியமானதும் சுவையானதுமாகும். அதாவது பல்வேறு பன்முகப்பட்ட தளங்களிலிருந்து இந்த ஆத்மார்த்த உணர்வுகள் கிளறப்படுகின்றன. அப்படிக் கிளறப்படும் உணர்வுகள் அவ்வத் துறைக்கேற்ற கனதிகளைப் பரிமாணங்களை ஏற்று வெளிக்கிளம்பி வரும்போதும் அவையெல்லாம் ஒன்றையன்று தழுவி, ஒன்றுவிட்ட இடத்திலிருந்து மற்றொன்று தொடர்ந்து நானாபக்கமிருந்து வரும் ஆற்றின் கிளைகளைப்போல், ஒரே உணர்வுக் கடலை நோக்கிப் பாய்கின்றன.

ஒரே உணர்வுக் கடல், அதுதான் முக்கியம்.

பல்வேறு தளங்கள். அவற்றின் கனதிகள், தன்மைகளுக்கேற்ப உணர்வுகளின் மேற்பூச்சுக்கள் வேறுபடுவனபோல் தெரிந்தாலும், ஆழ நோக்கில் எல்லாம் ஒன்றை நோக்குவன போல்; ஒன்றைத் தேடுவன போல்.

ஓர் இனிமையான இசை.

தூரத்து மலைகளில் கவியும் முகில் திரள்.

ஓர் அடர்ந்த காட்டுள் ரகசியத்தைப் பொத்திக் கொண்டு ஓடுவதுபோல் கிளுகிளுத்துத் தலைமறையும் ஓர் அருவிக் கிளை.

"வெள்ளி நாடாவாய்" விரியும் நிலாக்கால ஒற்றையடிப் பாதை.

இந்தப் படிமங்கள் எம் இருப்பில் படியும்போது எமக்குள் வழியும் ஓர் இன்துயர்.

இன்பமும் துன்பமும்.

இந்த நிகழ்வுப் படிவுகளின்போது கிளறப்படும் எமது ஆழ உணர்வுகளிலிருந்து சந்தோஷமும் பின்னர் அதன் முடிவில் இருந்து வெளிக் கசியும் துயரமும் என்கின்ற இரு முரண்பட்ட உணர்வுள்ள எம்முள். ஏன் இது ஏற்படுகிறது?

இந்த நிகழ்வுப் படிவுகளின் தூண்டுதலால் எமது ஆழமான பேரியல்பு கிளறப்படுவதால் சந்தோஷம் ஏற்படுகிறது. பின்னர் அப் பேரியல்போடு சதா ஒன்றி நிற்க முடியாத எமது இயலாமை வெளிக்கும்போது துயரம் மேலெழுகிறது. ஒரு பிரிவுத் துயர். எமது இயல்பை, இருப்பைப் பிரித்த பிரிவுத் துயர்.

இதை இப்படி நோக்கலாம்.

தனது காதலியோயடு ஒருவன் கூடியிருந்த காலத்தில் அவன் கேட்ட பாடல்கள், இப்போ அவன் தனித்திருக்கும்போது எங்காவது இசைக்கப்படும்போது அவன் காதலியின் நினைவை அது அவனில் தடவிச் செல்கின்ற ஒரு சந்தோஷத்தையும் பின்னர் அதன் முடிவில் அப்போது அவள். அங்கில்லையே என்கின்ற உண்மையில் எற்படும் பிரிவுத் துயரையும் போலவே இதுவும்.

எமது இருப்பாக உள்ளியங்கும் இப் பேரியல்பே எல்லா உயிர்களது இருப்பாகவும் இருப்பதால்தான் நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ளவும் அவைபால் ஈர்க்கப்படவும் செய்கிறோம். அதேநேரத்தில் அவ்வியல்பு பற்றிய சீரான புரிதல் இன்மையே பிறரில் கோபமும் குரோதமுமாய் வெடிக்கிறது. அதனால்தான் எமக்குப் படுவிரோதியாக இயங்கும் ஒருவன் திடீரெனத் தன் பலவீனமான நிலையில் எம்மிடம் அகப்பட்டுப் பழிவாங்கப்படும்போது எங்காவது அவன் முகபாவத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சுழிப்பு, திடீரென எங்கோ எமக்கும் அவனுக்கும் பொதுவாக உள்ளியங்கும் எம் ஆழ இயல்பின் நரம்பை நெருடிவிட, இதுகாலவரை நாம் அவனுக்கெதிராக வைத்திருந்த முஸ்தீபுகளெல்லாம் அடிபட்டுப்போக, அவனுக்காக எம் நெஞ்சு கரைந்து கரைந்து நாம் பெறும் புது அனுபவம்.

என் எதிரியின் முகபாவத்தில் தெறித்த ஒரு சுழிப்பு எப்படி என் ஆழ இயல்பை அருட்டி விட்டதோ அவ்வாறே, நம் ஆழ இயல்புகளை அருட்டிச் செல்லும் கலை இலக்கியங்களும் சாகாத கலைச் சிருஷ்டிகளாகப் பரிணமிக்கின்றன. ஒரு சிறந்த கலைஞன் இந்த ஆழ இயல்போடு தொடர்புகொள்ளச் செய்யும் மின்னிணைப்பைத்தான் தன் படைப்பின் மூலம் செய்துவிட்டுப் போகிறான். அவனது படைப்புத் திறன் எவ்வளவு காலஞ்சென்றும் மின்னாற்றல் இறங்காத பற்றறிப் (Battery) பெட்டியாக, அதை நுகர்பவன் எவனுக்கும் அந்தப் பேரியல்போடு தொடர்பு கொள்ளும் வல்லமையைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

இவ்வடிப்படையில் பார்க்கும்போது காலத்துக்குக் காலம் தோன்றும் கலை, இலக்கியக் கோட்பாடுகள் எல்லாம் ஒவ்வொரு கலைஞனின் கல்வி, அனுபவம், சின்தனை ஆழம் என்பவற்றுக்கேற்ப அறிந்தோ அறியாமலோ மனிதனின் இவ் ஆழ இயல்பைத் தொடும் முயற்சிகளாகவே அமைந்துள்ளன. எக்ஸ்பிறஷனிசம், இம்பிறஷனிசம், நச்சுறலிசம், றியலிசம், சேர்றியலிசம் என்று கலைஇலக்கிய உலகில் அடிபடும் இக் கோட்பாடுகளெல்லாம் இதன் வெளிப்பாடுகளே. ஆனால் அப்படி நான் கூறின் அக்கோட்பாடுகளை உருவாக்கியவர்களோ அதில் ஈடுபட்டவர்களோ அதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. அவர்கள் தத்தம் காலத்து சமூக, தத்துவ, புறச் சூழ்ல்களால் தம் இருப்பு யந்திரமயமாக்கப்படும்போது என்னென்ன நோக்குகள் தமக்கு விடுதலை அளிப்பனவாக இருக்கின்றவோ அவற்றின் வெளிக்காட்டல்களே இவையெனக் கூறுவர். மனிதனின் ஆழ இயல்புகள் பற்றி அக்கறைப்படாதவர்களாகவோ அல்லது அறியாதவர்களாகவோகூட அவர்கள் இருக்கலாம். ஆனால் நமக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் அவர்கள் விடுதலைப்பற்றிப் பேசுவது.

விடுதலை : அது முக்கியமானது

ஒவ்வொரு கலைஞனும் இந்த விடுதலைக்குத் தான் கொடுக்கும் அர்த்தம், ஆழம் என்கின்ற வரையறைகள் மூலம் நான் குறிப்பிட்ட மனிதனின் பேரியல்புக்கு அருகிலா தூரத்திலா நிற்கின்றான் என்பதை, அறியலாம். காரணம் மனிதனின் பேரியல்புதான் அவனது பூரணமான விடுதலையாகவும் இருக்கிறது; அதுவே அவனது நிலையான இருப்பாகவும் ஆனந்தமேற்றுகிறது.

ஒரு சிறந்த கலைஞன் எந்தக் கோட்பாட்டுக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டாலும் ஒரு தேர்ச்சிபெற்ற சுழியோடிபோல் நேரடியாகவே இந்த மனித ஆழ இயல்புக்குள் இறங்கி, அந்த விடுதலையில் குளிப்பதோடு மற்றவரையும் அங்கழைத்துக் குளிப்பாட்ட முயல்கிறான். அவன் ஆத்மார்த்தத் தளத்தின் சிறந்த பிரதிநிதியாவான்.

2

இந்தப் பின்னணியின் அடிப்படையில் சு.வி.யின் கவிதைகளை நோக்குவது, அவர் சிருஷ்டி ஆற்றலை நாம் புரிந்துகொள்வதற்கு எதிராக நிற்கும், சில தடைகளை அகற்றுவதற்கு உதவிபுரிவதாக அமையும்.

சு.வி.யின் கவிதைகளின் தனித்துவத்திற்கும் வெற்றிக்கும் காரணம் என்ன?

அவரது கவிதைகளின் காட்டப்படும் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக உள்ளியங்கும் பேரியல்பின் பரிமாணங்களும்; அப்படிக் காட்டுதலுக்குக் கருவியாகப் பெய்யப்படும் ஆத்மார்த்த உச்சங்களும்; அவற்றின் வெளிப்பாட்டு முறைகளுமாகும்.

ஏற்கனவே சமகாலத் தமிழ் இலக்கியத்தில் ஆத்மார்த்த வாதிகள் தேறியுள்ளனர். 'மௌனி'யின் கதைகள் இந்த ஆர்மார்த்தப் பண்பின் உயர் நிலைகளை எட்டியிருக்கின்றன. ஆயினும் அவை 'அவன்-அவன்' என்னும் எல்லைக்குள் சிக்கி. ஒரே தன்மையத்த உணர்வு நிலைகளையே திரும்பத் திருமப எழுப்ப முயல்வனவாதலால் ஆத்மார்த்தப் பண்பின் பூரண சுற்றோட்டத்தைத் தராதவையாகவே போய்விடுகின்றன.

ஆனால் கவிஞர் சு.வி.யின் கவிதைகள் அவற்றிற்கு மாறாக, பன்முகப்பட்ட துறைகள் இவர் இருப்போடு நிகழ்த்தும் 'உராய்வின்' சிலிப்பாகவே வெளிக் கிளம்புகின்றன.

ஆனால் இப்படி வெளிக்கிளம்பும் உணர்வுகள் எல்லாம் பன்முகப்பட்ட தளங்களின் குணங்களை ஏற்றிருந்த போதும், நான் ஆரம்பத்தில் கூறியதுபோல, அவையெல்லாம் ஒரே உணர்வுக் கடலை நோக்குவனபோல், ஒன்றையே தேடுவனபோல், ஒன்றையன்று பின்னியும் தொடர்ந்தும் ஆத்மார்த்த உலகுக்குரியவையாகவே வெளிக் கிளம்புகின்றன.

இதே 'விடுதலைப்பொழுது' என்னும் கவிதையில் காலைப் பொழுதின் ரம்மியத்தைக் கூறும்

"நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு
புலரவிடு காலைப் பொழுதை" என்னும் வரிகள்,
அடுத்து வரும் 'கோடை'யில் எழும் வெறுமையை அசைபோடும்,

"கானல் அரவுகள் நெளிதரும்வயல் வெளி
மேய்தலிலாது வெறுமையை இரைமீட்டபடி
காய்தலுறும் மாடுகள்" என்னும் வரிகள்,

பின்னர் 'ஊடாக' என்னும் கவிதையில் பிணக்குற்ற தாம்பத்திய உறவில் விழுந்த இரவு பற்றிப் பேசும் போது,

"உறைந்துபோய் நிற்கும் ஊமை இருளில்
புதைந்து போய்விட்ட கால ஊர்தி"

என்று வரும் படிமக் கலப்புகள்,

'பொழிவு' கவிதையில் வரும்
"இலையுதிர்ந்த நெடுமரமாய்
ஏகப் பெரு வெளியின்
சங்கீதம் குளித்திலையா?" என்று கேட்கும் வரிகள்.

'நிலவும் நெகிழ்வும்' என்னும் கவிதையில்
"எல்லாம் முடிந்து
நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ்
சுமந்தபடி மெல்ல
அசைநடைபோடும் மாட்டு வண்டிகள்;
வண்டிகளின் பின்னே நாங்கள்....
திரும்பிப் பார்த்தால்
பின்னிலவில்,
வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட
வயல்வெளி
வறிதே கிடக்கின்ற சோகம்
நெஞ்சைப் பிழியும்
துயர்- இன் இசையாய்....." என்று கூறும் வரிகளெல்லாம் நமக்கு என்ன கூறுகின்றன?

ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு நிலைகளின் தளங்களின் பிரசவங்களாக வெளிக் கிளம்பியபோதும் அவையெல்லாம் அடிப்படையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும், தொடர்ந்தும் ஒரே உணர்வுக் கடலை நோக்குவனவாய், ஒன்றையே தேடுவனவாய் நிற்கின்றன. அப்படி நிற்கும்போதும் ஆனந்தமும், இனந்தெரியாப் பிரிவுத் துயருக்குமான ஆத்மார்த்தப் படிவுகளாகவுமே நிற்கின்றன.

ஆனால் இந்த ஆனந்தமும் துயரும் ஏனைய சிறந்த கலைஞர்கள் பலரிடம் காணப்படுவதுபோல, அடிக்கடி மனதை வந்துறுத்தும் வெறும் அருட்டல்களாக சு.வி.யிடம் நின்றுவிடவில்லை. இந்த இனங்காண முடியாத அருட்டல்களை வைத்தே வெவ்வேறு கோணங்களில் காலங்காலமாகக் கலைகள் யாத்தவர் உள்ளார். இடைக்கிடை மின்னும் தரிசன வீச்சால் சில வெளிச்சங் காட்டினாலும் அனேகமானவை விளக்கமின்மையால் மூடுமந்திரங்களாகவே வீழ்ந்துள்ளன.

ஆனால் சு.வி. ஏனையோர் போவல்லாது தம்மை அடிக்கடி அருட்டும் 'இன் துயருக்'குரிய காரணத்தைத் தெளிகிறார். நம் விடுதலை இருப்புப் பற்றிய தூண்டுதல்கள் ஆனந்தத்தையும் அதில் சதா நிலைகொள்ளாமை துன்பத்தையும் தருகின்றன என்ற தெளிவே, அவரது 'விடுதலைப் பொழுது' என்னும் கவிதையும்; 'விடுதலை ஒன்றே உடைமையாய்' என்னும் கடைசிக் கவிதையுமாம். எல்லாப் புற விடுதலைகளோடும் நீ, நீயாக உன் 'வீட்டில்' இருப்பதுபோல் வேறு சுகம் வருமா? 'வீட்டை'ப் பிரிந்தால் துயரந்தான். அதனால்தான் அவர், விடுதலைப் பொழுதுக்காய்-

"திறந்து விடு கதவை முற்றாய்
உனதகம் ஒளி பெறுமட்டும்" என்கிறார் வீரியம் தொனிக்க.

இனி கவிஞர் சு.வி. தனது ஆத்மார்த்த அனுபவப் படிவுகளை வெளிக்கொணரக் கையாளும் முறைகளைப் பார்ப்போம். இவர் ஏனைய ஆத்மார்த்தக் கவிஞர்கள் போலல்லாது பன்முகப்பட்ட அனுபவங்களைத் தரும் பல்வேறு தளங்களில் சஞ்சரிப்பவர். அப்படிச் சஞ்சரிக்கும் போது தான் பெறும் அனுபவங்களை அந்தந்தத் தளத்துக்குரிய ஆத்மார்த்தச் சொற்களின் தெரிவின் மூலம் பதிவு செய்கிறார். அதனால் அவர் அனுபவங்கள் ஏனைய அனேக ஆத்மார்த்த கவிஞர்களின் படைப்புகள்போல் வெறும் மூடுமந்திரங்களாக வீழாமல் எல்லோர் நெஞ்சங்களிலும் உரையாடிச் செல்கின்றன. சிறந்த ஆக்கங்களாக வருவதற்குரிய கீற்றுகள் தெரிந்தும் அனேக படைப்புகள் வெறும் மூடுமந்திரங்களாக வீழ்வதற்குரிய காரணம். அந்தந்தத் தளங்கள் பற்றிய அறிவும் அவற்றிற்குரிய சொற்களின் தேர்வும் இல்லாமையே. தர்மு சிவராமுவின் பலவீனத்துக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். பல்வகைப்பட்ட தள அனுபவங்களை ஒரே தளத்துக்குரிய வார்த்தைகளால், படிமங்களால் பேச முயலும் போக்கு அவருடையது. இதனால் தளப் பிறழ்வும் சொற்திரிபும் மாறாட்டமும் நிகழ்கின்றன. ஆனால் தளமாறாட்டமும் சொற்திரிபும் நிகழக்கூடாதென்றில்லை. ஆனால் அப்படி நிகழும்போது அது வேறோர் புதுத்தள, புதுக் கலை இலக்கிய உருவாக்கத்தின் தேவையின் நிகழ வேண்டும்.

கவிஞர் சு.வி.யின் தொடும் தளங்களுக்கேற்பச் சொற்களைத் தெரிவுசெய்து மிகக் கச்சிதமாக வாய்பேச முடியாத உணர்வுகளை எம்மோடு தன் கவிதை மூலம் பேசவைக்கிறார். இதே 'விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்' என்ற கவிதையில் பாரதியை நினைவூட்டி விடுதலைக் குருவியோடு அழகாகப் பேசுகிறார்.

"பாரதி,
விடுதலை அவாவிய நின்
சிட்டுக் குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும்
மேய்தல் கண்டேன்.

விடுதலைத் தாகத்தின் துடிப்பும் குரலென்றால்
அதன் இதழ்களிலும்
'விடு விடு' என்ற அதே துடிப்புத்தான்.

முற்றத்தில் மேயும் போதும்
திண்ணையில் திரியும் போதும்
வீட்டு வளையின் மேலும்
விண்ணை அளக்கும் போதும்
'விடுவிடு' என்ற ஒரே ஜபம்தான்......

தலையை உருட்டுதலில்,
சிறகைக் கோதுதலில்
காற்று வெளியில் 'ஜிவ்'வென்ற சிறகுதைப்பில்
அதே துடிப்பு! சதா துடிப்பு!"

என்று பாரதியை நினைவுகூர்ந்து சிட்டுக் குருவியை அழைக்கும்போது விடுதலையின் துடிப்பும் தேவையும் புதுப் பரிமாணங்களும் ஆழ்கின்றன. ஈற்றில்-

"விடுதலைக் குருவீ!
வீடுதேடி வந்தாய் நீ வாழி!
நின் அலகிதழ் முனையில் எம்
இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது...."

என்று கூறிச் செல்லும்போது உண்மையாகவே கருத்துக்கள் காட்சிப் படிமமுறும் ரசவாதம் ஒன்று எம்முன்நடந்தேறுகின்றது போலவே உணர்கிறோம்.

'வீழ்ச்சி' என்னும் இன்னோர் கவிதையில் தான் சோரம் போனதையும், அது எப்படித் தன் மனைவியின் முகத்தில் பிரதிபலிக்கிறது என்பதையும், அதேநேரத்தில் மனைவியின் குணவொழுக்கம் தனக்கு நேர்மாறானது என்பதையும் காட்ட அவர் தேர்ந்தெடுக்கும் அந்தத் தளத்துக்குரிய வார்த்தைகள்:

"அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்"

'அகங்களும் முகங்களும்-2' என்ற கவிதையில் இன்றைய நம் போலி அரசியல்காரர்களுக்கே உரிய, அவர்களை வைவதற்கே உரிய பாஷையில்

"வெட்கம் கெட்டவர்கள்!
வேற்றோர் இட்ட நெருப்பின்
வெக்கை தணிந்து இன்னும்
சாம்பல் அள்ளவில்லை.
தூர்ந்து போன தேசத்தைத்
தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை.
அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிறார்.

.....இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு
படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள்...."

என்று நம் தமிழ்த் தலைவர்களைச் சாடும் அவர், இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடு' என்ற கவிதையில் இந்த இடிபாடுகளை வேறோர் தத்துவத் தளத்துக்கு இட்டுச் செல்கிறார்.

"கோபுரங்கள் எழுப்பிய கோயில்களை விடவும்
இடிபாடுற்றவைகளில்
எனக்கு அதிகம் ஈடுபாடு....
...எல்லாமே ஒரு நாள் இடிவிழுந்த குண்டாகாதோ?
எழும்பிய கோயில் வேறு. இடிவிழுந்தகுண்டு வேறா?
இடிவிழுந்த குண்டினுள்ளும்
நீருற்று முகங்காட்டும்." என்னும்போது கட்டடங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களை விட இடிபாடுகளின் குவியலும் குழிகளும் இன்னும் ஆழத்துக்கு எம்மை இழுக்கின்றன.

அடுத்து 'புத்தரின் மௌனம் எடுத்த பேச்சுக் குரல்' என்ற கவிதையில், பேரினவாதச் சூறாவளியால் மனித இனத்தின் கலை, கலாசாரம், ஏன் மனித நாகரிகமே இடியுண்டு வீழ்ந்த நிலையை புத்தர் மூலமே கூறவைப்பது மிக நேர்த்தியாக அமைகிறது.

"நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும்
படையல் செய்தோரே

இதோ ஏற்றுக் கொள்ளுங்கள்
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.

பௌத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய
வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய
இன சங்காரப் பெரஹராக்களின் பின்னரும்
இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?"

என்று இனவாத வெடில் சூழலை விளக்கிக் கொண்டு வரும் கவிஞர் இடையில்

"விலகி செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பி‡¡ பாத்திரம்.

ஒரு கணம்
அமுத சுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது." என்று விவரிக்கும் போது இவ்வரிகள் எத்தனையோ நினைவுத் தொடர்களை அவிழ்த்துச் செல்கின்றன. இக்கவிதை அரசியலாகவும், தத்துவமாகவும் மாறி மாறி வளர்ந்து செல்கிறது.

'வெறுங் காற்றில் கலந்திடுமோ....' என்ற கவிதையில் பீகாரில், கீழ் வெண்மணியில் ஹரிஜனங்களை நெருப்பாக்கிய சாதிவெறித்தனங்களைச் சாடிய கவிஞர், இறுதியாக அதை முடிக்கும்போது ஆகுதி வளர்க்கும் புதிய வேதியன்போல் நெருப்பைப் பார்த்து கூறுகிறார்:

"அக்கினியே! இடம்மாறு.
அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த
ஏழை எளியவரிடம் வந்து குடியேறு.
அவர்கள் கண்களில் ஜுவாலி.
நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி.
சொற்களில் சுடுசரமாகு.
செய்களில் ஆலைக் கனல்பெருக்கு.
மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக."

என்று கூறும்போது பாரதிபோல் வேதத்தின் புது வலு ஏற்றுமவர், 'தூது' என்ற கவிதையில் இனவாதிகளால் கைதுசெய்யப்பட்ட ஒரு மார்க்சீய நண்பனுக்கு வேத உண்மையையே தூது விடுகிறார்:

"நடுங்கா நாட்டத்து நண்ப,
இது கேள்
நினக்கும் துயர் வதையுறும்
விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும்.
குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாதது
ஆத்மா!
இருமைகள் அதற்கில்லை
என்பது வேதம்."

என்று கூறும்போது வேத உண்மை வலுவுறும் சூழலும்; அதன் வழிவந்த புரட்சிக்காரராகவும் சு.வி.நிற்கிறார்.

இப்படி அவர் கவிதைக்குக் கவிதை தன் அனுபவப் பதிவுகளை, நம் சூக்கும புரிதலைத் தூண்டிவிடும் சொற்கலவையால் புரியவைத்துச் செல்கிறார். இங்க நான் மேலெழுந்தவாரியாக மேற்கோள் காட்டியவற்றை விட, மேற்கோள் காட்டல் என்னும் முறைக்குள் அடங்காது முழுமையான தரிசனத்துக்கே உரியவை என நிற்கும் படைப்புகளே அனேகம்.

3

இந்த ரீதியில் பார்க்கும்போது கவிஞர் சு.வி.யின் கவிதைத் தொகுப்பு ஒரு வெற்றிகரமான சாதனையே. அதற்குரிய காரணம் அவர் பல்வேறு பன்முகப்பட்ட தளங்களையும் தொடுக்கிறார் என்பது மட்டுமல்ல, அவர் பிரவேசிக்கும் தளங்களில் அவ்வப் பிரதேசங்களுக்குரிய முற்போக்குச் சக்திகளான ஆத்மார்த்த நிகழ்வுகள், அவற்றின் படிமங்கள், வார்த்தைகள் என்பவற்றோடும் அணிசேர்ந்துகொள்கிறார் என்பதுமே. இந்த நிலையில் அவர் தனது தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புஷ்பராஜன் போன்றோரையும் மிஞ்சியே நிற்கிறார் என்றே சொல்லவேண்டும். இதனால்தான் இவர் கவிதைகள் சிலவற்றில் தனக்கு முற்பட்ட கவிஞர்களின் செல்வாக்கின் பாதிப்பு நிகழ்ந்தபோதும் தன் தனித்தன்மையை இழக்காது நிற்கிறார். உதாரணமாக நீலாவணனின் கவிதை ஒன்றின் உவமைப் படிமத்தை (பரிதிக் குஞ்சு) இவரது 'தியானம்' கவிதையில் காணலாம். இவரது 'சுழலின் மையம் தேடி....', 'நிலவுக் கெழுதல்' போன்றவற்றில் மு.பொ.வின் 'பிரபஞ்சக்கும்மி', 'பிறையருகாலம் முழுநிலவாகும்' போன்ற கவிதைகளின் அருட்டலைக் காணலாம். ஆயினும் இவரது படைப்புகள் தமக்கே உரிய தனித்துவத்தோடு நிமிர்கின்றனவென்றால் அதற்குரிய காரணம் இவரது வெளிப்பாட்டு முறையும், அதற்கரிய சொற் தேர்வுமே.

இவரது சாதனை தளங்களில் உடைவு நிகழாமல் சொற்களில் திரிபு ஏறாமல் அந்தந்தத் தளங்களின் ஆத்மார்த்தத்தைக் கறந்தெடுத்தது என்றால், தளங்களில் உடைவு நிகழ்த்தியும் சொற்களில் திரிபு விழுத்தியும் நிகழும் புதுத்தள இலக்கிய உருவங்களும் அதன் ஆத்மார்த்தமும் இதில் இல்லாது போனது, ஒரு குறையே எனலாம். மு.த.வின் ஆளுமையில் பயின்ற இவரின் இவ்வாக்கங்கள், ஏற்கனவே இசைவுற்றிருந்த புதுக்கவிதைப் பரப்பின் அகலத்தையும் ஆழத்தையும் விரிக்கின்ற அதே நேரத்தில், புதுத்தள ஊடறுப்புகளைக் காட்டவில்லைத்தான். என்றாலும் இவரது 'ஸ்தல புராணம்' சிருஷ்டி அந்தத் திசையின் சமிக்ஞைகளை விழுத்துவதாகவே நிற்கிறது. சாதி அமைப்புக் கெதிராகப் போராடிய மு.த.வோடு தோளோடு தோள்போட்டு நின்று அவரோடு அடிபட்டுச் சிறைக்குச்சென்ற இவரின் அப் போராட்டத்தின் அனுபவ வடிப்பாக நிற்கும் இந்தப் படைப்பு, கூத்து நாடகம் கவிதை போன்ற பல்வகை உருவாக்கத்தின் கலப்பாக நிற்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இத் தொகுப்பு புதுக்கவிதை உலகில் ஒரு பெரும் பாய்ச்சலைக் காட்டுகிறது. ஆயினும் அதற்கெதிராக சிறு சிறு தடைகள் நிற்கின்றன. இவையே சிலவேளை பின்னர் பெரும் தடைகளாகவும் மாறக்கூடும். அதாவது தத்துவ விஷயங்களைக் கவிதையில் சொல்லவரும்போது இன்னும் எளிய, கூரான சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும். கவிதை என்பது கற்பனையில் இழுபடும் றப்பர் போன்ற ஒரு குணத்தை உள்ளிருப்பாகக் கொண்டிருப்பதால், சிறந்த ஆய்வு நோக்கு இல்லாவிடில் செழுமையான தத்துவ பலத்தையும் தன் 'இழுவல்' குணத்தால் பாழடித்து விடக்கூடும். உதாரணமாக, 'சுழலின் மையல் தேடி......' என்ற கவிதையில் வரும்

"மனதில் ஓரவிழி நோக்கில்
ஆழப் புதைகுழி நீத்துக் கிளர்வுறும்
உணர்வுகளின் முளை மீறல்கள்,
கிளைத்துப் படர்ந்து
பூச்சொரியும் இன் கனவுகள்...."

என்ற வரிகளைக் காட்டலாம்.

அதோடு அகவயப்பட்ட சிந்தனைகளைக் கூறும்போது, 'ஆணவம், மாயை, கன்மம்' என்று சமயவாதிகள் சதா போட்டடிப்பதுபோல் திரும்பத் திரும்ப, இலை கொட்டி நிற்கும் மரம்போல் கருத்துவலுப் போய்விட்ட சொற்களையும், விரணைகளையும் பாவிப்பது களையப்பட வேண்டும். இல்லாவிடில் நல்ல சிருஷ்டிக்குப் பதில், இச்சொற்கள் புகுந்து வெற்றுப்பானைக் கட கடப்பையே தரலாம். சு.வி.யின் இத் தொகுப்பில் இத்தகைய கடகடப்புகள் இல்லையென்றாலும் அவற்றுக்குரிய தாக்குதல்கள், கவனிப்புக் குன்றினால் நிகழலாம். இவைபோக அகங்களும் முகங்களும் ஒரு வெற்றிகரமான சாதனையே.

- மு.பொ.


என்னுரை

எனது கவிதைகளின் தொகுப்பு இங்கே அலைவெளியிடாக முகங்கொள்கிறது. என்னைப் பாதித்தவற்றை உள்ளுறை அனுபவ ஒளிகொண்டு பின்னி இழைத்தெடுத்து வேய்ந்ததோர் சிறு கவிக்குடில் இது. சிறு குடிலேனும் அதன் இருப்போ ஒரு பரந்த பெருவெளியில்! இது ஒன்றே எனக்குப் பரவசம் தருவது. 1970இல் ஆரம்பித்த நான் பதினைந்து வருடங்களில் பின்னால் ஒரு சிறுகுடில் போடல் சாத்தியமாகியுள்ள இவ்வேளையில் நேர்ந்த தேடலின் காலவெளியைத் திரும்பிப் பார்க்கிறேன். அப்படியான ஒரு திரும்பிப் பார்த்தலில், நான் போட்ட இச் சிறுகுடில் இன்னுஞ் சிறுத்தே தெரிவதுபோல் தோற்றங்கொள்ளுகிறதேனும், சார்ந்து நின்ற பரந்த பெருவெளிதான் எனக்குப் பர நிம்மதி தருகிறது. அந்தப் பரந்த பெருந்தள, விடுதலைவெளிக்கு என்னைக் கூவியழைத்த குரலை இத்தருணம் பெருமிதத்துடன் நினைவுகூறுகிறேன். இதோ காற்று வெளியிடை, பிரபஞ்சவெளியிடையிருந்து கூவும் அக் குரல்ஒலி எனக்குள்ளும் கேட்கிறது. அக்குரலுக்குரியவரை அடையாளம் காண்கிறேன். திரு.மு.தளையசிங்கம். எனது வளர்பருவகாலத்தின் பள்ளி ஆசிரியராக வந்து என் வாழ்வின் அத்திவாரத்தையே ஓர் உலுப்பு உலுப்பியவர். ஊன்றி நோக்கி உள்ளன்போடு என்னை அறிவால் தூண்டி நடாத்திய ஒரு தனிக்குரல் அவரது. சகல துறைகளிலும் ஒரு வழிகாட்டியாய் இருந்து ஆத்மீக குருவிடம் என்னை ஆற்றப்படுத்தியவர். கலைப்பற்றிய அவரது நோக்கின் பூரண பரிமாணத்தை எய்திய கலைஞனாய் வாழ்ந்து காட்டி எம்மையும் அவ்வழி இட்டுச் சென்றவர். "விடுதலை என்ற இலட்சியத்துக்குரிய வழிகளும் விடுதலை பயப்பனவாய் இருக்கவேண்டும்" என்று ஒலித்த பரந்த விடுதலைப் பெருவெளிக்குரிய அவரின் குரல், இதே இச் சிறுகுடிலினுள்ளும் ஒலித்துக்கொண்டேயுள்ளது!

சிறுகுடில் என்றேனா? இச் சிறுகுடிலை நிமிர்த்துவதில்தான் எத்தனை சிரமங்கள். இந்தச் சிரமங்களில் ஒன்றையேனும் என் முதுகு சுமந்ததில்லை! ஏழைமை நிரம்பிய இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய -கலாசாரக் குடிலை பல்துறை அடுக்குப் பரிமாணங்கொண்ட மாளிகையாய் நிமிர்த் மனங்கொண்டவர், ஆத்மார்த்தமான உழைப்பைப் பிழிந்து தமிழியல் வளமூக்கியாய் நின்று செயல்படும் நண்பர் திரு.இ.பத்மநாப ஐயர். இதன் நிமிர்வுக்கும் முதுகு கொடுத்தவர் அவரே. இன்றைய ஈழத் தமிழ் இலக்கிய -- பல்துறை வெளியீடுகளின் பின்னணியின் இவரின் ஆத்மார்த்தமான உழைப்பின் திறன் நின்றதை, அறிந்தோர் அறிவர். தன்னை முன்னிறுத்தாத அவரின் பங்களிப்பை ஒருநாள் தமிழுலகம் முற்றாய் அறியவரும்போது, அதிசயப்படும் என்பது உண்மை.

மு.பொன்னம்பலம் நீண்டதொரு முன்னுரையை இச் சிறுகுடிலின் முன்றலில் கோலமிட்டுள்ளார். அவர் எனது கவிதைகளைக் கையெழுத்துப் பிரதியிலேயே படித்த முதல் வாசகனாகவும் விமர்சகனாகவும் இருந்து என்னை நெறிப்படுத்தியவர். தன் படைப்பாற்றலால் என்னை நிரம்பவும் பாதித்தவர்; 'அகங்களும் முகங்களும்' என்பதையே கவிதைத் தொகுதியின் தலைப்பாக வைக்கலாம் என்று அக் கவிதை வெளியான போதே ஆலோசனை கூறியவர். அவரது முன்னுரை எனது கவிதைகளின் போக்கை இனங்கண்டு கொள்ளும் பின்னணியாய் இருக்கிறது என்பதற்கும் மேலாக, நானே என்னை விமர்சன ரீதியாகக் கண்டுகொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.

கனமான படைப்புகளை இனங்கண்டு தேர்ந்து தெள்ளி எடுக்கும் கூரிய நோக்குடையவர், அ.யேசுராசா. தமது அலை இதழில் எனது கவிதைகளைத் தேர்ந்து பிரசுரித்ததோடு, எனது தொகுதியையும் 'அலை வெளியீடு' நிறுவனத்தினூடாக வெளிக் கொணர்வதில் மிக முனைப்போடு செயல்புரிந்தவர். அவ்வப்போது விமர்சனங்களால் என்னை நெறிப்படுத்தியதில் அவருக்கும் பங்குண்டு. தக்க இடங்களில் மனமுவந்து பாராட்டும் பண்பைவிடவும், அவரின் சமநிலை நோக்கே, என்னை மிகக் கவர்ந்தது எனலாம் மற்றும் இ.ஜீவகாருண்யன், மு.புஷ்பராஜன் ஆகியோரும் என்னை இவ்வகையான ஒத்துழைப்பால் கவர்ந்தவர்களே.

இவர்கள் எல்லோருக்கும் இதனால் நன்றி கூறல் என்பது, வெறும் சம்பிரதாயமாகக் கீழிறங்கிவிடும் செயல் என்பதனால் அதைத் தவிர்த்துவிடுகிறேன். அவர்கள் மேற்கொள்ளும் அரிய தமிழ் இலக்கியப்பணிகளில் எம்முடையவுமான ஆத்மார்த்த ஒத்துழைப்பை வழங்குதல் ஒன்றே, அதற்கான கைமாறாகும்.

இத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் பல ஏற்கனவே பூரணி, அலை, மல்லிகை, புதுசு, வானம்பாடி இதழ்களி பிரசுரமானவை. அவ்வேடுகளின் ஆசிரியர்களுக்கும் இதனால் என் நன்றி உரியது.

இது என் முதல் வெளிப்பாடு: முதற் சுழல் வட்டத்தின் சிந்தனையே உள்ளடக்கியது. இதைத் தளமாய்க்கொண்டு இனிவரும் படைப்புகள் வேறொரு பரிமாணத்தைக் கொண்டதாய் அமைதலே என் விருப்பு. அதை முனைப்போடு செயல்படுத்துதல் காலத்தின் கையில்தான் உள்ளது. ஒவ்வோர் அம்சங்களிலும்கூட ஒளிகூர்ந்த உக்கிரம் தெறிக்க வாழ்தல் ஒன்றேதான்-வாழ்வையே கலை வடிவமாக்கி நிற்றல் ஒன்றேதான், பூரண கலைஞன் என்ற பெருமைக்கு என்னை உரித்தாக்கும். மற்று இவை ஒன்றும் எனக்குப் பெருமை தரா.

31.7.1985

சு. வில்வரத்தினம்


1. தியானம்

உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும்
ஒரு கரீய பெரீய முட்டையாய்.

உறங்காது
நானோ
உள்விழித்திருப்பேன்.

உள்திரளும் பரிதிக் குஞ்சின்
உதயம் தியானித்து.


2. விடுதலைப் பொழுது

எழுந்திரு பிள்ளாய்
இது விடுதலைப் பொழுது

இருளின் துயில் கலைகிறது
நீயோ
இழுத்துப் போர்த்தபடி
இன்னம் உறங்குதியோ?
எழுந்திரு.

இதோ
விடியலில் கீழ் வானம்
ஒளிமுடி தரிக்கும் உன்னதம்
உனக்குத் தரிசனமாகவில்லை.

குருகினங்களின்
உதயத்து இசை
உனக்குத் தேனிப்பதில்லை.

மெல்லிதழ் மலர்த்தி வரும் தென்றல்
உன்
மேனி வருடச் சிலிர்ப்பதில்லை.

சீ! நீ என்ன மனிதன்
இன்னந் துயில் புணர்வாய்

புலர் பொழுதை ஸ்பரிசிக்காத
நின் புலன்கள் பழுதுடைய.

இனியும், காலம் கடத்தாதே
புலன்கள் நறையுண்ணும்
பொழுதை மழிக்காதே.

ஒலியேந்தவிரியும் விழிகொள்
விடியலின் குரலுக்குச் செவிகொடு.
நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு
புலரவிடு காலைப் பொழுதை.

எழுந்திரு

சோம்பலை உதறிச்
சுருட்டிய பாயடு தூரவீசு.

வைகறை நீராடு
பொய்கறை இருள் கழுவிப்
புலரும் பொழுதை வரவேற்று
மனதில் ஒரு கும்பம் வை.
நினைவுகளை ஒருங்குவி
திகழ் ஒளியைத் தியானி.

அதோ
உன் வீட்டு வாசற்படியில்
ஒளிக்குழந்தை
தொற்றித் தவழ்கிறது
ஒற்றிக் கொள் கண்களில்.

கதவிடுக்கின் ஊடாக
உட் செல்லத் துடிக்கிறது
திறந்து விடு கதவை முற்றாய்
உனதகம் ஒளி பெறட்டும்.


3. கோடை

ஒரு கோடை நடுப்பகல்.
நடுப் பகலின்
வெக்கையின் தாக்கம்
விளைவிக்கும் வெறுமை.

எங்கோ இருந்தொரு காக்கை
வெறுமைக்குக் குரல் கொடுக்கும்.
கோடை உமிழும் குரல்.

எரிச்சல் பற்றி வர
எழுந்து போய்
காக்கையைக் கலைந்தால்
கலைகிறதா வெறுமை?

சுருதியறுந்த தந்தியின்
அதிர்வாய் அதே
வெறுமையின் மீட்டல்.

வலம்வந்தொருகால் மீண்டும்
கொல்லை அமர்ந்ததுகாக்கை.
மீட்டும் குரல் மாறிலது
அதே வெறுமை எடுத்தகுரல்.

வெளியில்
காற்றின் விழுக்காடு
சோர்ந்து வழிகின்ற தென்னைகள்,
வெறிச் சோடிப் போன தெரு.
கானல் அரவுகள் நெளிதரும்வயல் வெளி
மேய்தலிலாது வெறுமையை இரைமீட்டபடி
காய்தலுறும் மாடுகள்.

இவற்றுக் கெல்லாம் ஒட்டுமொத்தமாக
குத்தகை எடுத்ததாய் ஓர் குரலில்
கோடை வறுக்கிறது காக்கை.

கானல் திரைவெளியில் வெறுமை
நிழல் விழுத்தி உலர
கண்கள் வெயில்கிறது.
மூடி விழித்தால் கானலின் ஒவியம்
கூடவே காக்கையின் குரலின்
பின்னணி ராகம்.

கல்லெறிந்து மீண்டும் அதைக்
கலைப் போமெனின் சாய்மனையோடு
மல்லுக்கட்டி மாழுகிறது மனம்.

சொல்லெறிந்து மீண்டும் காக்கை
சுற்றிச் சுற்றி எதையோ குத்திக் காட்டுவதாய்
முற்றும் இலையுதிர்ந்த வொரு
முள் முருக்கில் உலர் குரலில்....

சீ சனியன், நரகம்.

நிச்சயமாக நான் வெறுக்கிறேன்.
இந்தக் கோடையை
வெறுமை தின்னும் கோடை நடுப்பகலை.
குரல் கறுத்த காக்கையை.

நிச்சயமாக என்னையும்
நான் சாய்ந்து கிடக்கும் சாய்வு நாற்காலியையுங்கூடவே.


4. மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்

வான் முலை சுரந்தது
வையம் அருந்திற்று
ஓ! வான் மழையே!
வையத் திருவே! வந்தனை நீ வாழி!

நீண்டெரிந்த கோடையில் தீக்குளித்த நிலமகளை
மழை முழுக்காட்ட வந்தனை! மாரி நீ வாழி!

வரண்டு வெடித்த வாய் பிளந்து பூமி
வருந்தி அழைத்த குரல் உனக் கெட்டிற்றோ?
இரங்கினை! அதனால் எம்மிதயங் குளிக்கிறது.

நின் வரவால் நிகழும்
அற்புதங்கள்தான் எத்தனை! எத்தனை!

மலை எழில் போர்க்கும்
துயிலும் நதியில் துரித விழிப்புப் பெருகும்

செடிகொடிகள் குளிக்கும்
தென்றலின் அசைப்பில் மேனிகுலுங்கி
நீர்த் திவலைகள் சிலும்பும்.

மண்ணில் நின் சங்கமத்தால் எழும் மண்வாசனை
எங்கும் பரவும்! அது
உழைப்பைக் கோருவது. உறங்கும் மனிதரின்
நாசியின் உட்புகுந்து
'எழுங்கள் ஏர் எடுங்கள்'என
உழுதுழுது பூமித்தாயை தொழுகை செய
தூண்டி நடாத்தும் புனிதவாசனை!
உழைப்பின் வாசனை!
வான் மழையே மண்ணில் உயிர்
வாசனை கிளர்த்தினாய் வாழி.

மழைத்தேவா வர்ஷித்தாய்
இந்த மண்ணில் உயிர் பெய்தாய்

ஓங்கிய பெரும் ஓசையுடன்
தாள பேத பாவங்களுடன்
துமிதுமி துமி என நின்
பாத துளிகள் இம் மண்ணில் பாவின.

பேதமிலாத நின் பெய்கையால்
வான் மழையே நினக்கு மறுபெயர்
ஞான மழை என்போம்.

ஞான மழையே நனி பொழிக
இம்மண்ணின் பாவங்கள் கழுவுண்டோட
பொறாமை பொச்சரிப்பு வெப்பு நோய்கள் தணிய
வரம்புகள் கடந்த வாழ் வொன்று செய்ய.

விடியலில் மதியத்தில் அந்தியில் நள்ளிருளில்
நாளெலாம் பொழிக பொழுதுகள் நனைக.

விண்ணின் றிழியும் அமிர்த தாரைகள்
வீட்டுமுன்றலில் மீண்டும் சங்கீதம்
உள்வாங்கி உள்வாங்கி உயிர் வீங்கி....

"பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்ப சிலம்பு கலந்தர்ப்ப...."

நானே எனக்குள் மழையாய்ப் பொழிந்து
நனைந்து நனைந்துருகி -- ஏலோரெம்பாவாய்.


5. அகங்களும் முகங்களும் -1

இடிந்து கிடந்த நினைவுத் தூண்களை*
எழுப்பி வைத்தீர்
இடித்தவரை நினைவூட்ட.

எழுபத்தியேழு ஓகஸ்டில் தெற்கில்
இழந்த உயிர்களுக்கு
நினைவுத் தூண்கள் நிறுவுவீரா?
உங்கள்
இழிமைகளை நினைவூட்ட?

மலர் வளையங்கள், மாலைகள் சாத்தல்:
இவை உதவப் போவதில்லை,
எங்கள் நினைவுகளில் உங்களைச்செதுக்க.
மலர்வளையங்களும் மாலைகளும்
உதிர்ந்து விழும் உங்கள்
சொல்லலங்காரங்கள் போல.

மாலைசாத்திய கைகள்
மறுநாளே வாளெடுக்கும்
நிகழ்ச்சிகள் பல
நடப்பிலே கண்டோம்.

மலர் தூவிய கைகளாலேயே
துட்டகெமுனுவின் அஸ்தியும் தூவுவீர்
வகுப்புவாத மேகங்கள் இருண்டு
குருதி மழை பொழிய.

இரத்தச் சுவடுகள் பதிய
ஒழிந்தோடி ஓர்மூலையில் பதுங்கி
உடைமாற்றிவந்து
ஒப்புக்கழுவீர்.

உடை மாற்றலேன்?
உங்களை மாற்றுங்கள்.

இனவாதமணம் அறாதவாயால்
இன்னமுத மொழிகள்;
"இதயத்தை உங்களிடமே விட்டுவிட்டுச்
செல்கிறேன்." இப்படிப் பலப்பல.

எடுத்துச் செல்லுங்கள்
உங்களிதயத்தை உங்களுடனேயே.
எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்கமுன்
உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்.

காலங் காலமாய் இரத்தக் கறைபடிந்து
துருப்பிடித்த இதயத்தை
துருவி ஆராயுங்கள்.
போலித் தார்மீகப் போர்வை களைந்து
உண்மை நிர்வாணம் பற்றுங்கள்.

மஞ்சள் அங்கிகளுக்கும்
மழித்த தலைகளுக்கும்
புலப்படாது புதைக்கப்பட்டுவிட்ட
புத்தரின் அன்பு துலங்கும்வரை
செதுக்குங்கள்! உங்கள் இதயத்தைச்
செதுக்குங்கள்!

எடுத்துச் செல்லுங்கள்
எங்கள் உபதேசமிதே.

* 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் போது இழக்கப்பட்ட ஒன்பது உயிர்களுக்கான நினைவுச்சின்னம். அவற்றை முந்திய ஆட்சியினர் காலத்தில் பொலிசார் உடைத்துவிட்டனர். யூ.என்.பி. பதவிக்கு வந்தபின் யாழ். விஜயம் மேற்கொண்ட சிறீலங்காப் பிரதமர் அத் தூண்களை எழுப்பி மலர்வளையம் சாத்தியது செய்தி.

+ யாழ். விஜயம்செய்து சிறீலங்கா திரும்புகையில் பிரதமர் சொன்னது.


6. அகங்களும் முகங்களும் -2

வெடிகள் சிதறும் ஒலிகள்
வேடிக்கை தெருவெல்லாம்
என்ன வெளியே?
எட்டிப் பார்த்தேன்.

தேர்தல் வெற்றித் திருவிழா ஊர்வலம்

நம்மவர்,
மேளங்கொட்டுறார், குதிக்கிறார், விழுகிறார்.
கோஷம் போடுவார்
நடுவே
கோடியுடுத்த மாப்பிள்ளையாக
மா.அ. சபைத் தலைவர் வருகிறார்
மாலை மரியாதையுடன்.

வெட்கம் கெட்டவர்கள்!
வேற்றோர் இட்ட நெருப்பின்
வெக்கை தணிந்து இன்னும்
சாம்பல் அள்ளவில்லை.
தூர்ந்து போன தேசத்தை
தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை.
அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிறார்.

58இல் தொடங்கி அடுத்தடுத்து
அடிவிழுந்த பின்னாலும்
என்ன செய்தார் இவர்கள்?
அடித்தாரைச் சொல்லி
அழுதழுது வாக்குப் பெற்றார்;
கூட்டுச் சேர்ந்தும் கொள்கை முழக்கி
வெற்றிகள் குவித்தார்.

தேர்தல் எனும் வேசி
விடுதலைக் குழந்தை ஈவாள் எனச்சொல்லி
பாராளுமன்றத்தில் 'கூடல்' செய்தார்.
மாவட்டந் தோறும் தங்கு மடங்கட்ட
முண்டு கொடுப்போம் என்றார்.
தேர்தல் பந்தல் சோடனைகள்
ஒருபுறம் நடக்க மறுபுறம்
தீண்டிற்றே நெருப்பு.

77இன் எரிதழற் காயங்கள் ஆறமுன்னம்
மீண்டும் எரிநெருப்பில் தமிழ்-ஈழம்

காக்கி உடைகளும் காடையர் கூட்டமும்
கூட்டுச் சேர்ந்து கொள்ளி வைத்தார்
எரிமலைப் பிரதேசம் போல்
எல்லாமே நாசம்.

தற்காத்துக் கொள்ளத் தகுதியிலாத்
தமிழரெல்லாம் ஒப்பாரி வைக்கிறார்;
விடுதலை பெற வியலாத
மலட்டுத் தலைவரெல்லாம் இன்னும்
பாராளுமன்ற ஒட்டுண்ணிகளாய்
பதவிகளை உதறாமல்
பகிஷ்கரிப்பு 'ஊடல்' செய்வார்.

பதவிகளை உதறி எறிந்திருந்தால்
உலகின்
மனச்சாட்சியையே உலுப்பியிருக்காதா?
எமைச் சுற்றி நாமிட்ட
வேலிகள் தகர்ந்து
விடுதலைக்கு ஒரு வழி திறந்திருக்காதா?

ஆனால்,
எதை உதறினாலும் பதவிகளை உதறோமென
தோளிட்ட துண்டுகளை எடுத்து உதறியவாற
இதோ வருகிறார் தலைவர்கள் ஊர்வலமாய்,
சவக்காட்டில் வெற்றிச் சங்கூதி.

அதிலென்ன?
இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு
படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள்
பயணம் தொடரட்டும்!


7. வெறும் இறக்கை

ரோட்டில் பலர் போவார் வருவார்
ஆயினும் ஓரம் கிடக்கிறதே
அக் காகத்தை யார் பார்ப்பார்?

மணலுள் தலை புதைத்து
கழுத்தைச் சவட்டியக் காகம் கிடக்கிறது.
கருநீல வண்ணனுக்கு ஒப்பிட்ட
கரிய நிறக் காக்கை; யார் பார்ப்பார்?
போவோர் வருவோர் யாரேனும்?

விண்ணளந்த வீரருக்கு விழாக் கோலம்.
விண்ணளந்ததோடு இது
மண்ணின் அழுக்குகளையும் தன்னுள் விழுங்கிவந்த
ஆகாயத் தோட்டியன்றோ....
போவோர் வருவோர் யாரேனும்?

விமான இறக்கை விரிநிழலில்
அணுகுண்டுத் தலையணை
சுதந்தர இருப்பார்க்கு
ரோட்டில் கிடக்கும்
காக்கை நினைப்பெதற்கு?
வெட்டுண்டு வீழ்ந்த இயற்கையதை
யார் நினைவார்?

வெளியுலக மேடையிலே
காகத்தைப் போற்றுவோம்
பெருஞ்சுவர் ரகசியத்துள்
வெள்ளை அன்னங்களோடு விருந்துண்டு
உலா வருவோம்.

வெட்டுண்டு வீழ்ந்த இயற்கை
நினைவெதற்கு? அதைவிடுத்து
கட்டுப்பாடு, கண்ணியம், கடமை
எனக் கோஷிப்போம்
காகம் கிடந்து
நாறிப் புழுக்கட்டும்.


8. வீழ்ச்சி

என்னுள் எழுந்து
பிளிறிற்று யானை

மதம் வழிய முகம் பிய்ந்து
தும்பிக்கையால் விகாரமாய்
பீறிற்று காமம்.

மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய
மோப்பம் பிடித்தலைந்தேன்
தும்பிக்கை நீட்டி.

வேலி மீறினேன்
கீறிய முட்கள்.
தடித்த காமத் தோலில்
தைக்குமா என்ன?

வேகநடை.
வேலியினுள் விதைத்திருக்க
பண்பாட்டுப் பயிர்கள்
காலடியில் துவம்சமாச்சு.

குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை
வளைத் தெடுத்துத் தழுவ
வழிந்த மதநீர்
வடிகால் தேடிக் கலந்தது.

தின வடங்கிற்றா?

தும்பிக்கை உட்சுருள
பூசி மெழுகிப் பண்பாடு காத்த
உருத்திராட்சப் பூனையாய் மெல்லப்
பதுங்கிப் பதுங்கி
வேலி ஓரமாய் ஓசைகாத்து
வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும்
கீறியது மீண்டும் முட்களா?

மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின.
மனச் சாட்சியை ஊடுருவி.

அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.

படைவீடிருந்த சிம்மாசனம்
குடைசாய
குப்புற வீழ்ந்தேன்
கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது.
"யானோ அரசன்? யானே கள்வன்."


9. ஊடாக

எனக்கும் உனக்கும் ஊடாக
கட்புலனாகாக் கயிறொன்றில்
பிணைப்புளது.

எங்கெங்கோ அலைந்தாலும்
சுண்டியிழுக்கும் அக் கயிற்றின்
அதிர்வு என்னுள்.

எனினும் அப் பிணைகயிறு
சில வேளைகளில்
இதோ அறுகிறேன் என
நுண் புரியில் பயமுறுத்தும்
கணங்களை நினைந்தால்.....

ஊடல் முற்றி
மன மூட்டம் கௌவிய
இருட்டறை மௌனத் துள்தான்
எத்துனை கனம்
உறைந்துபோய்நிற்கும் ஊமை இருளில்
புதைந்து போய்விட்ட கால ஊர்தி
வெறுமையின் கனம் தாளாமல்.

இருள் ஊர்ந்த மனமும்
முகடூர்ந்த விழிகளும்-
சோர்ந்து போய்
துயிலில் மூழ்கியதும் தெரியாது போன
பின்னிரவில்

நெஞ்சில் வீழ்ந்த மென் கரத்தால்
துயில் கலையும்: இருளில்
மினுங்குகிற பொன்வளைகள் செவியருகில்
மெல்லச் சிணுங்குகையில் சேர்த்தணைத்தேன்.

சிறுகச் சிறுக இறுகப் பிணைந்த
கணங்களின் உருளலில்

உறைந்து போயிருந்த ஊமைஇருள்
நெகிழ்ந்து மூச்சுவிடும்
மீண்டும்
உறவென்னும் ஒளிக்கயிற்றின்
அதிர்வு தொடங்கிற்றே!


10. கலப்பு

அன்பே எனையுடையாய்
காதல் இன்பமும் கனிவும்
கலந்தொன்றாய் வந்தவளே
நிச்சயமாய் நம்முறவு
முந்தைத் தொடர்பின்
புது முகிழ்ப்பு என்னல் பிழையன்று.

வெண்ணெய் எனத் திரண்டிருந்த
பெண் மெய்யாய் நீ இருக்க
ஓட்டைப் பாத்திரம் ஏந்தி
ஊரெல்லாம் நெய்க் கலைந்தேன்.

நெய்க்கலைந்து நாயேன்
நீண்ட வழி நடந்து மீளுகையில்
நீண்ட வழி நெடுகிலும் அன்பு
நிழல் தழைய நின்றிருந்தாய்
நின்னிரு விழிகளிலும்
தேக்கியிருந்தாய் காதற் தேன் வதைகள்.

உட்குருவிந்திருந்த காதல்
இதழவிழ்ந்ததோர் விடியல்
ஓ! இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
பளிச் செனப் புலர்ந்த வெண்முறுவலில்
என் இரவினை விழுங்கினை அன்று.

இன்றோ
எனது சுமைகள், அயர்வுகள், சோர்வுகள்
எல்லாம் உன்னிடம் கைமாறின.

நான் காலாற ஓர்
நிழல் கனிந்த தருவாய்,
கை நிறைய அள்ளிப் பருக
காலடியில் தெறிந்தோடும்
அன்பு ஓடையாய் நீ.

என் துயர் நின்துயராய்
எனக்குற்ற அவமானம் நினக்குற்றதாய்
நெகிழ்ந்துருகி நீ விட்ட கண்ணீராலேயே
என் மாசுகள் கழுவுண்ண
நான் மனிதனாய் நிமிர்ந்தனன்.

என்னை மனிதனாய் நிமிர்த்த உன்னுள்
எல்லையற்ற துயர் சுமந்து நின்று
புன்னகைக்கும் பேடே
நினக்கு என்ன செய்தால் தகும்?

எதை வேண்டி நின்றாய் நீ ஏந்திழையாய்
எனினும் என்ன செய்தல் தரும் நினக்கே?
உன்னுட் பெருகும் உண்மை அன்புப் பெருக்குள்
என்னையே மூழ்கி இறும்பூது எய்தலன்றி.


11. உராய்வு

கோளங்கள் நகரும் போது
ஒன்றோ டொன்றுராய்ந்து
கீதம் ஒன்றெழுப்புகுதாம்.

மானுடரின் காதுகளை எட்டாத
கோளகீதம்
கடவுளர்க்கே கேட்கும் என்றார்
கிரேக்கர்.

ஞாலமே தூங்கும் ஓர் நள் யாமம்
தூங்காத ந‡த்திரங்கள்.
நான் முற்றத்தில் நிற்கிறேன்
மனமோ முகையவிழ்ந்து
பால் வழி முற்றத்தில் பவனிக்க.

திடீரென அதிர்ந்தன என்
உட் செவி நரம்புகள்
பேரண்ட ரீங்காரம்
உள்ளுராய்ந்ததே கோளகீதம்.

மனங்கிழிந்து போனேன்; அக்
கணங்களிலே நான்
மானுடன் அல்லன்
மானுடனே அல்லன்.

நீங்களும் நின்று பாருங்களேன்
ஓர் ந‡த்ர ராவில்
மனங்கிழிந்து போக
உள்ளுருவிச் செல்லும்
கோள முட்டிகளின் கள்ளிரைச்சல்.


12. வெறுங் காற்றில் கலந்திடுமோ.....

முன்பு தமிழ்நாட்டில் ஒரு கீழ் வெண்மணி
இன்று பீகாரில் இன்னொன்று.

சாதி வெறிக்கேது திக்கு?
தெற்கிலே பற்றியது
வடக்கிலும் தீ நாக்குவளைத்தது.

பீகாரில் ஒரு கிராமத்தில்
சாதி வெறியர் எளியவர்களுக்கு
எரி கொள்ளிகளால் பதில் சொல்லியுள்ளார்.

கோயிலில் தீவட்டி ஏந்திய கைகள்
தாழ்த்தப் பட்டவரின் குடிசைகள் கொளுத்த
தீவட்டியோடு ஊர்வலம்போயின.

கொள்ளிவாய்ப் பேய்கள் சுற்றிவர
குழுமி நின்று உமிழ்ந்த தீ
பற்றிப் பிடிக்க குடிசைகளுள் துயின்ற
பதினான்கு உயிர் வெண் மணிகள்-
பிஞ்சுப் பாலகர், நேற்றுத் தான்
மஞ்சம் நுகர்ந்த மணமக்கள், முதியவர்-
பச்சை உடம்போடு பஸ்மீகரமாயின.

ஹரிஜனங்களை அவிர்ப் பொருளாக்கி
சாதி வெறியர் வேள்விகள் செய்ய
சந்நிதானங்கள், கோயில்கள், பீடங்கள்
குத்துக் கல்லாய் குந்தியிருந்து
ஸ்லோகம் சொரிந்தன.

ஆட்சி பீடங்களில் மாறி மாறி ஆள்வோர்
அமர்ந்தனர் போயினர்
'கீழ் வெண்மணிகள்' போயாவிட்டன?
சாதிவெறியரின் ஏவலால்
மன்னுயிர் தின்ற தீயே நீயும்
விண்ணெழுந்து வெறுமனே போகுதியோ?

தீயே!
ஆதிவேடன் பண்டொருநாள்
கல்லோடு கல்லுரசக் கனன்றதீயே,
உன்னை இங்கழைக்கிறோம்
மீள்க.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
சாதி வெறியை ஊதிவளர்த்த
தீயவர் கையில் நீ சேரற்க.

அக்கினியே! இடம்மாறு.
அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த
ஏழை எளியவரிடம் வந்து குடியேறு.
அவர்கள் கண்களில் ஜுவாலி.
நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி.
சொற்களில் சுடு சரமாகு.
செயல்களில் ஆலைக் கனல்பெருக்கு.
மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக.

ஆதிஜோதியே! அனற் கொழுந்தே!
நின்னை வேண்டினோம்
இந்த எளியவர் வாழ்வு வெளிச்சமுறும் பொருட்டாக.

தீயே உன்னை அழைத்தனம்
தீயவரைச் சென்றுதீண்டுதற்காக.

சாதி இன, மத நிற வெறி
எந்தெந்த மூலை முடக்கிலே காணினும்
அவற்றை
நீக்கமற எரிந்து நீறாக்கும் பொருட்டாக.

.......


13. இந்தியாவே நீ எங்கு செல்கிறாய்?

மீண்டும் மனிதன் இருண்ட குகையுட் புகுந்தான்
வில்லும் அம்புமாய் வேட்டை விழையும் குணத்தினனாய்.
ஒரு வித்தியாசம்
இப்போது அவன்குறி சக மனிதனேதான்.

அஸ்ஸாமில் பாய்ந்த அம்புகள் அதற்குச் சாட்சி.
ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவலக்குரல்
விண்ணை நிறைக்க மீண்டும் மீண்டும்
தொண்டைக் குழியைத் துளைத்துப் போன அம்புகள்.
துப்பாக்கிக் குண்டுகள்-

பிஞ்சுகள், முதிர்ந்தவை-
பேதமின்றி எல்லாமே உதிர்ந்தன.

பிணக் காடு, இரத்த வெள்ளப் பெருக்கு
இவற்றின் நடுவே கழுகுகள் வேறு.

பிணம் பொறுக்கிகளாய்,
பிணக்குவியலினிடையே உயிராடும் ஏதும்
தலைநீட்டாவோ என
வாக்குப் பொறுக்க நத்தி வட்டமிடும்
கழுகுகள் என்றவை இருரகம்.

என்னே இவர் சிறுமை
பிணக் குவியலின் நடுவே சிம்மாசனமிட
விழையும் வேட்கை,
வேட்டையாடும் மனிதனின் உச்சம்.

இருபுறமும் ஈட்டியும் வாளும் ஏந்தியவர்
இடையே சமாதானம் வேண்டி நடந்த
காந்தியின் யாத்திரை எங்கே?
பிணக்காட்டில் தேர்தல் யாத்திரை செய்யும்
இவர்கள் எங்கே?

இந்தியாவே, நீ எங்கு செல்கிறாய்?
இமயமலை உச்சி எங்கே? இன்றைய உன்
வீழ்ச்சி எங்கே?
இமயத்தினின்றும் வழிந்தோடும் உன் புண்ணியநதிகள் இன்று
புலைமை குளிக்கிறதே அவற்றில் ஏனிந்த இரத்தவெடில்?

குடில்கள் தோறும் வளர்த்த அக்னியில்
வாழ்வு சுடர்த்திய உன் பண்டையரிஷிகள்,
அண்மைக் காலம் வரை இருந்த
ரமணர், அரவிந்தர் போய் மறைய

போலிகளும் பொய்மைகளும் அன்னக் காவடிகளும்
பொய்க்கால் குதிரையாட்டப் புது மன்னர்களும்
வாழ்வு தருவார் என்று வறுமை கொண்டாயே.

"மன்னும் இமயமலை எங்கள் மலையே" என்று
செருக்கோடு பாடிய நின் கவிகள் கருதியது
வெறும் மலையைப்பற்றி மட்டுந்தானா?
இல்லை யெனின்,
மாநிலமீதில் உன்னிலை இழிவதேன் இன்று?

உதறு! உன்சிறுமைகளை உதறிஎழு.
உன்னில் நீ உறுதி கொள்.

பண்டைய ஞானத்தை
இன்றைய காலத்தியல்புகளுட் பாய்ச்சும்
வித்தை பயில்! இருண்ட நின்
வீட்டுள் சுடரேற்று.

விடிகாலைக்கதிர் ஒளியெழுதச் சுடரும்
இமயத்தின் நெற்றியென
வாழ்வு சுடர்த்தும் வழியறிக இந்தியமே.


14. விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்

பாரதி,
விடுதலை அவாவிய நின்
சிட்டுக் குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும்
மேய்தல் கண்டேன்.

விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குரலென்றால்
அதன் இதழ்களிலும்
'விடு விடு' என்ற அதே துடிப்புத்தான்.

முற்றத்தில் மேயும் போதும்
திண்ணையில் திரியும் போதும்
வீட்டு வளையின் மேலும்
விண்ணை அளக்கும் போதும்
'விடு விடு' என்ற ஒரே ஜபம்தான்.

துயிலும் கட்டிலில் தொற்றியும்
தூங்கும் குழந்தையின் தொட்டில்
கயிற்றினைப் பற்றியும்
'விடு விடு' என்றே ஜபிக்கிறது.

தானியம் பொறுக்கும் போதும்,
கூடுகட்டக் குச்சுப் பொறுக்கும் போதும்.
'விடு விடு' என்ற ஜபத்தை அது விடவில்லை.
அதன் சிற்றுடலே
விடுதலைத்துடிப்பின் வேக இயக்கமாயிருக்கிறது.

தலையை உருட்டுதலில்
சிறகைக் கோதுதலில்,
காற்று வெளியில் 'ஜிவ்'வென்ற சிறகுதைப்பில்
அதே துடிப்பு! சதா துடிப்பு!

நீ நேசித்த தேசத்திலும் அதன்
ஒவ்வோர் அங்கங்களிலும்
பெண்மையில், ஆண்மையில், பிணைக்கின்ற காதலில்
மொழியில், இசையில், கவிதையில், உரைநடையில்
அரசியலில், தொழிலில், ஆன்மீகத்தில்-
இதே துடிப்பை நீ உடுக்கொலித்தாய்.

"குடு குடு குடு நல்லகாலம் வருகுது" என்று
நாட்டுக்கு நல்ல குறி சொல்ல
தூக்கிய நின் உடுக்கின் ஒவ்வொரு முழக்கிலும்
விடுதலைக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது.
'கொட்டு முரசு'வின் அதிர்விலும் அதே
விட்டு விடுதலையாகும் வீச்சேதான்.

தூக்கம் எங்கெங்கு கௌவிற்றோ அங்கெல்லாம்
துயிலெழுப்ப இந்தத்
துடிப்புக் குருவியை நீ தூதுவிட்டாய்.
உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம்,
நின் விடுதலைக்குருவி.

அந்த விடுதலைக்குருவி
எங்கள் வீட்டுமுற்றத்திலும்
மேய்தல் கண்டேன்.

சோம்பித் துயின்ற என்குழந்தைகளை எழுப்பி
'துரு துரு' வென்ற குருவியைக் காட்டினேன்.
சோம்பலை உதறிய அவர்களில்
தொற்றிய துடிப்பின் உயிரொளி கண்டேன்.
குருவியின் பின்னால் ஓர் கூட்டமே இயங்கிற்று.

விடுதலைக் குருவியோடு
'சடுகுடு' ஆடும் சிறுவரின் கூத்து.
'விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலை'
என்றந் நாளில்
'சடுகுடு' ஆடிய இளமையின் வேகம்
என்னுள்
புதுநடை பயிலும்.

விடுதலைக் குருவி!
வீடுதேடி வந்தாய் நீ வாழி!
நின் அலகிதழ் முனையில் எம்
இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது.
மூலை முடக்குகள், நாடி நரம்புகள் தோறும்
விடுதலை வீச்சோட்டம் நிகழ்கிறது.

சிட்டுக்குருவீ!
எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல்
விட்டு விடுதலையானோம் நம்
கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று.
குறி சொன்னானே அந்தக்
குடுகுடுப்பைக் காரன்!
அவன்
காதிலும் மெல்ல இச் சேதியைப் போடு!


15. விமர்சக விகடங்கள்

நூல் வெளியீடு ஒன்று நிகழ்ந்தது.
நால் வகைக் கிரியைகளும் நடந்தேறியபின்
'நூலை இவர் விமர்சிப்பார்' என்னவும்
எழுந்தார் ஒருவர் எழுத்தாளர்.

வந்தார் அரங்கில் சபையை
வடிவாக நோட்டம் விட்டே
எங்கோ ஒரு மூலையில் இருப்போனை
இலக்கியத்தில் எளியோனாகச்
சிந்தையில் 'பாவம்' கொண்டு
சின்னச் செருமலோடு ஆரம்பித்தார்.

"...எளிமையாய் விளக்கப் போனால்
இதற்கொரு கதை சொல்வேன்" என்று
கதை சொல்லத் தொடங்கி மனுஷன் ஓர்
கழுதையின் மேலே தொற்றி
கழுதையை விட்டிறங்கிப் பின்னொரு
குதிரையின் பிடரி மயிர் பிடித்தேறியப்
பெருவெளிச் சவாரி செய்து பின்
குதிரை விட்டிறங்கி உடனே
குரங் கொன்றின் வாலைப் பற்றி....

இப்படியே
கதை கதையாம் காரணமாம்
காரணத்துக்கோர் கதையாம் என்று
பலகுட்டி ஈன்றபன்றியைப் போல
குட்டிக்கைகளை ஈன்ற களைப்பில்
குலைதள்ளி நின்றவேளை

குட்டிக் கதைகளின் கும்பலின் இடைநழுவி
விமர்சனம் மெல்ல எங்கோ விடை யூர்ந்தேகிற்று.

விடை பெறுகிறேன் என்று இவரும்
விமர்சனம் அன்று தமது
'விகடனம்' முடித்துக் கொண்டே,
கதிரையில் அமர்ந்தார் அல்லர்
தமது
கைவாகனம் இவர்ந்தாரன்றே!
........


16. காற்றுள்ளபோதே....

தூற்றிக்கொள் நண்ப
காற்றோட்டம் சாதகமாய் உள்ள தருணமிது.

எத்தனை நாள்தான்
சுப்பற்ற கொல்லைக்குள்ளேயே புரட்சிச்
சுலோகங்கள் விதைத்தபடி.....?

போக்கையும் மாற்றி புதுச் சுலோகங்களும்
விதைக்கக் கற்போம் இல்லையெனில்
நாளை நமக்கெல்லாம் நாற்காலி யார்தருவார்?

வர்க்கக் கடலில் தூண்டிவிட்டு இதுகாறும்
வயிற்றைக் கழுவிவந்தோம்.
பிச்சைப் பிழைப்புத்தான்
அண்மையில்
பேரினவாதப் புயல்களினால் காலநிலை
சீரற்றுப் போயிற்றே என் செயலாம்?
'செவ்வானம்' கருக்கலிலே செந்திருள
பொய்மானாய்ப் போயிற்றே நம் 'வர்க்கப் புரட்சி'
இனியும்,
'முற்போக்கில்' வீணாய்
முதலி முடக்கிவைத்து
என்னபயன்?
சிந்தித்தாய்;
'நீண்டபயணம்' இடைநிறுத்தி வைத்துவிட்டு
முகமூடி வேறணிந்து முகாமினை மாற்றிக்கொண்டாய்.
'இரவல் தாய்நாடு' தான் இன்று,
எவர்க்கும் கை கொடுக்கிறதே!

காற்றுத் திசைமாறக் கடலோரம்
நீரோட்டம் பார்த்து
பாயிழுத்து விட்டீர் பக்குவமாய்;
உங்கள் போலித்தனங்கள், 'புனைகதைகள்' சகிதம்.

இக்கணம்
கலம் சேர்ந்திருக்கும் அக்கரையில்.
திரைகட லோடியுந் திரவியம் தேடுகென்ற
பழந்தமிழர் வரிசையில் நீவிரெலாம்
இன்றைய வாரிசென நானறிவேன்.
நிச்சயமாய் ஒருகால்
வங்கக் கடல் முழுதும்
கப்பல் விடுவீர் காண்!

எப்படி வியாபாரம்?
எழுத்து விலை போகிறதா?

இங்குதான் எம்மவர் கொட்டிய