தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search
Home > Tamil Language & Literature > Cilapathikaram > pukaark kaaNtam > maturaik kANTam >  vanjcik kANTam

 
cilappathikaaram - maturaik kANTam
of ilankO aTikaL
சிலப்பதிகாரம் -  மதுரைக் காண்டம்
இளங்கோ அடிகள் இயற்றியது

[also in PDF ]

[eText input:Etext input: Mr. P.R. Sivakumar, Toronto, ON, Canada.;Proof-reading: Mr. P.K.Ilango, Erode, Tamilnadu, India; HTML encoding: Dr.K. Kalyanasundaram, Lausanne, Switzerland   - © Project Madurai 2000 மின்னுரையாக்கம்: திரு. பொ. ரா. சிவகுமார், தொரோண்டோ, ஒண், கனடா.; பிழை திருத்தம்: திரு. பா. கா. இளங்கோ, ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா.; உயருரைக் குறிமொழியாக்கம்: திரு. கு. கல்யாணசுந்தரம்-© மதுரைத் திட்டம் 2000   Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org   You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.]


2. மதுரைக் காண்டம்
உள்ளுரை
11. காடுகாண் காதை
12. வேட்டுவ வரி
13. புரஞ்சேரியிறுத்த காதை
14. ஊர்காண் காதை
15. அடைக்கலக் காதை
16. கொலைக்களக் காதை
17. ஆய்ச்சியர் குரவை
18. துன்ப மாலை
19. ஊர்சூழ் வரி
20. வழக்குரை காதை
21. வஞ்சின மாலை
22. அழற்படு காதை
23. கட்டுரை காதை
கட்டுரை


11. காடுகாண் காதை
திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் 5
அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித்
தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று 10
வைகறை யாமத்து வாரணங் கழிந்து
வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற
வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
இளமரக் கானத் திருக்கை புக்குழி
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை 15
ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
ப·றுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள 20
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி 25
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி 30
மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் 35
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் 40
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு 45
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய 50
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்
தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின் 55
வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத்
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி 60
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் 65
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை தன்னுடன்
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று 70
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்
வலம்படக் கிடந்த வழிநீர் துணியின்
அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் 75
பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்
வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும்
நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
கானமும் எயினர் கடமுங் கடந்தால்
ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும் 80
கொய்பூந் தினையும் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் 85
அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின்
அவ்வழிப் படரீ ராயி னிடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து 90
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி 95
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
பவகா ரணி படிந் தாடுவி ராயிற் 100
பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்
இட்ட சித்தி எய்துவி ராயின்
இட்ட சித்தி எய்துவிர் நீரே
ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்
ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது 105
சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலம் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்
கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத் 110
தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி
இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் 115
உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின்
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன
ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர் 120
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி
இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும்
உரையீ ராயினும் உறுகண் செய்யேன்
நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும் 125
உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண் டோதி 130
வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின்
உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன் 135
புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்
தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்
காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு 140
அந்நெறிப் படரீ ராயின் இடையது
செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த
ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்
நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி 145
இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும்
மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி
நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்
தாள்தொழு தகையேன் போகுவல் யானென
மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட 150
காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்
நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய் 155
இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வங் கண்டடி பணிய 160
நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக்
குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன்
அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப்
பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட் 165
கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்
வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப
இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக் 170
கானுறை தெய்வம் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயந்த மாலை வடிவில் தோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து 175
வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று
மேலோ ராயினும் நூலோ ராயினும் 180
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் 185
தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச்
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் 190
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென
மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென
வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ்
ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக் 195
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
என்திறம் உரையா தேகென் றேகத் 200
தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு
அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து
மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத்
தீதியல் கானஞ் செலவரி தென்று
கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும் 205
மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக்
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை
ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
மாரி வளம்பெறா வில்லேர் உழவர் 210
கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக்
கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
விழிநுதற் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி 215
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்.



12. வேட்டுவ வரி
கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு
ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால் 5
வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் 10
நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்
கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் 15
கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது 20
சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்
சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது 25
முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு 30
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி 35
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் 40
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் 45
கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப் 50
பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் 55
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி 60
கரியின் உரிவை போர்த் தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் 65
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை 70
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;
உரைப்பாட்டுமடை.

வேறு
நாகம் நாறு நரந்தம் நிரந்தன 1
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;

செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ் 2
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;

மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் 3
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;

வேறு

கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் 4
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும்;

ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் 5
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும்;

பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ் 6
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும்;

வேறு

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் 7
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் 8
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் 9
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;

வேறு

ஆங்குக், 10
கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
அசுரர் வாட அமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;

வேறு

ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப 11
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்;

உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை 12
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;

கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் 13
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

வேறு

இளமா எயிற்றி இவைகாண் நின் னையர் 14
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;

முருந்தேர் இளநகை காணாய்நின் னையர் 15
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;

கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர் 16
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
துறைப்பாட்டுமடை.

வேறு

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் 17
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;

அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு 18
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;

துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய 19
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே;

வேறு

வம்பலர் பல்கி வழியும் வளம்பட 20
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;

துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு 21
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;

பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும் 22
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;

வேறு

மறைமுது முதல்வன் பின்னர் மேய 23
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே.


13. புறஞ்சேரியிறுத்த காதை
பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்
கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா 5
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே 10
பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேத மில்லெனக்
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப் 15
படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப்
பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீரிள வனமுலை சேரா தொழியவும் 20
தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து 25
புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்
ஆரிடை உழந்த மாதரை நோக்கிக் 30
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகெனத்
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடைகழிந்து 35
வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக்
கான வாரணங் கதிர்வர வியம்ப
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து
மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர் 40
தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி 45
உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்
கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே 50
வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி
கோசிக மாணி கூறக் கேட்டே
யாதுநீ கூறிய உரையீ திங்கெனத்
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக் 55
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் 60
ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் 65
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோ யுற்று
நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர்
படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் 70
வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத்
தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்
கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே 75
மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்
ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்
வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு
அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி 80
போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட
உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டிய தாதலிற் கைவிட லீயான் 85
ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது 90
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி
என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி
என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங் 95
கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய 100
இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி
மாசில் கற்பின் மனைவியோ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து 105
செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்
தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து
ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை யிறுவாய்க் கட்டி
வரன்முறை வந்த மூவகைத் தானத்து 110
பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதம் கூறுமின் நீரெனக்
காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம் 115
நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத்
தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் 120
போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும் 125
பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் 130
பொதியில் தென்றல் போலா தீங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு 135
பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும் 140
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவ ரோதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்
போரிற் கொண்ட பொருகரி முழக்கமும் 145
வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்
பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும்
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்
கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல்
ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக் 150
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் 155
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் 160
வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி
பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி 165
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி 170
தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்