Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy > எத்தனை கோடி ஜன்மம் வேண்டுமானாலும். . . .செல்லம்மாள் பாரதி, 1922

எத்தனை கோடி ஜன்மம் வேண்டுமானாலும். . . .
செல்லம்மாள் பாரதி
1922 Foreword to Publication of 80 Bharathy Songs


தமிழ்நாட்டு மக்களே!

நான் படித்தவள்ளல்ல. இந்த நூலுக்கு முகவுரை எழுத நான் முன் வரவில்லை.அதற்கு எனக்கு சக்தியுமில்லை. என்னைப் போல இந்தத் தமிழ் நாட்டில் லக்ஷ்க்கணக்காக ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன்

என் புருஷன் ஸ்ரீமான் சுப்பிரமனிய பாரதி இந்த நாட்டில் பிறந்தார்; வளர்ந்தார்; வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய ஸ்தூல தேகத்திற்கு முடிவு நேரிட்டு ஆத்மா விண்ணுலகம் சென்றுவிட்டது. கடவுளின் திருவிளையாடலில் இப்படி ஒரு ஆத்மா இவ்வுலகில் ஜனித்து சொற்ப காலந் தங்கி, சிற்சில காரியங்களை செய்துவிட்டு, திரும்பப் போய்விட வேண்டுமென்ற கட்டளையின்படி என் புருஷனும் ஜனித்து, செய்ய வேண்டிய காரியங்களை அவசர அவசரமாக செய்து விட்டு காலம் சமீபத்தவுடன் இறப்பதுவும் ஓர் அவசரமான கடமையாகக் கொண்டு அதனையும் செய்து மடிந்தார்.

1904ம் வருஷத்தில் சுதேசமித்திரன் உப பத்திராதிபராக அமரு முன்பே நம் நாட்டைப் பற்றிய கவலை அவருக்கு அதிகம் ஏற்பட்டு விட்டது. எட்டையபுரம் சமஸ்தானாதிபதியின் கீழ் தான் ஏற்றுக் கொண்ட வேலையைத் திரணமாக நினைத்துத் தள்ளினார்; மதுரை சேதுபதி வித்யாசாலையில் தமிழப் பண்டிதர் வேலையையும் அற்பமாக எண்ணித் தள்ளினார்.சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உழைக்க ஆரம்பித்ததும் அவரது உள்ளம் மலர்ச்சியடைய ஆரம்பித்தது. சுமார் இரண்டு வருஷம் கழிந்த பின் ' இந்தியா' என்னும் வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார்.

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார்.ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். " வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று.வீடு வாசல் மனைவி, பிள்ளை, குட்டி, ஜாதி வித்தியாசம், அகந்தை முதலியவை முற்றும் மனதின்று விட்டு அகன்றன.தேசப் பிரஷ்டமானார்.புதுவையில் தேசபக்தி விரதத்தை பலவிதமாக அநுஷ்டித்தார்.திரும்ப வந்து தந்நாட்டை ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார்.மறுபடியும் சுதேசமித்திரனில் ஒரு வருஷம் உழைத்தார். தான் வந்த காரியம் முடிவடையவே விண்ணுலகம் சென்ற தேசபக்தர் கூட்டத்தில் தானும் போய்ச் சேர்ந்து கொண்டார்.

நமது நாடு இன்னது; நமது ஜனங்கள் யாவர்; நமது பூர்வோத்திரம் எத்தகையது; இன்று நமது நிலையென்ன; நமது சக்தி எம்மட்டு; நமது உணர்ச்சி எத்தன்மையது - இவைகளைப் பற்றிய விவகாரங்களும் சண்டைகளும், தீர்மானங்களும் அவருடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன்.இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்.

அவரது தேகத்தின் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்காதரமாக இருந்த பாரதமாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ் நாட்டில் ஒரு மனிதனோ அல்லது ஒரு சிறு குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி நிலைத்திருக்குமென்று என் ஹிருதயம் சொல்கிறது. இதனை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள்.இஃதொன்ருதான் நான் உங்களுக்கு சொல்ல முன் வந்தேன். நீங்கள் நீடுழி வாழ்க!

பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும் வரை நான் வகித்து பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்து விட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தே மாதரம்

பாரதி ஆச்ரமம்

திருவல்லிக்கேணி,
சென்னை

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home