"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
TAMIL NATIONAL FORUM
Selected Writings - M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம்,
அவுஸ்திரேலியா
மொழியும் தேசியமும் 31 August 2009
ஒரு தேசம் என்னும்போது அதற்கு ஒரு பெயர், பிரதேசம், இதிகாசங்கள், வரலாற்று ஞாபகங்கள், கலாசாரம், பொருளாதாரம், கடமைகளும் உரிமைகளும் எனப் பட்டியல் இடலாம். இவற்றை தாங்கி நிற்க, பகிர்ந்துகொள்ள மொழி உதவுகிறது. ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது என்ற கருத்தை 1772 இல் யேர்மனிய தத்துவாசிரியரான ஜோஹன் ஹொற்பிறைட் ஹேடர் (Johann Gottfried Herder ) முன்வைத்தார். எம் முந்தையரின் அரிய சாதனைகளை வெளிப்படுத்தும் வரலாற்றையும் கவிதையையும் மொழியின் ஊடாகவே கொண்டாடுகின்றோம் என்கிறார் இவர். இவரின் சகபாடியான வில்ஹெலம் வொன் ஹம்போல்ட் ( Wilhelm von Humboldt ) என்பார் மொழி ஒரு தேசத்தின் ஆன்மீக வெளிமூச்சு, அதன் மொழியே அதன் ஆத்மா அந்த ஆத்மாவே அதன் மொழி என்கிறார். இவர்களது சமகாலத்தவரான ஜோஹன் கொற்லிப் பிசற் ( Johann Gottlieb Fichte )
இவர்கள் யாவரும் யேர்மன் மொழி மற்றைய மொழிகளைவிட உயர்வானது என்ற கருத்துருவாக்கத்தின் தளத்தில் நின்று மொழியை தேசியத்துடன் இணைத்தனர். அதன் வழி ஜேர்மன் தேசமும் அதன் மொழியும் மேலானது என்ற வெறி இவர்களிடம் காணப்பட்டது. இதில் பிரன்சுக்காரரும் சளைத்தவர்ககள் அல்லர். இக்காலத்தில் Maurras Limoge போன்ற தத்துவாசிரியர்கள் பிரான்சிய மொழியே ஜரோப்பிய கலாசாரத்தின் வனப்புக்களை வெளிப்படுத்துகிறது என்றனர். மொழித் தூய்மையை வற்புறுத்திய இவர்களது கருத்தாக்கம் நின்று நிலைக்கவில்லை என்பது வரலாறு. இந்த வகையான தூய்மைவாதிகளின் கருத்துக்கள் தேசிய வாதத்தின் அசிங்கமான பக்கங்களாகப் பார்க்கப்படுகிறது. இன்று அரசு என்ற அங்கீகாரத்துடன் 192 நாடுகள் மட்டில் ஜக்கிய நாடுகள் தாபனத்தில் அங்கம் வகித்தபோதும் இந்த நாடுகளில் 3000 க்கும் அதிகமான தேசிய இனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேசிய இனங்கள் யாவும் தமக்கான தனித்துவமான மொழியைக் கொண்டிருக்கவில்லை. அந்தச் சமயங்களில் அவர்களது தேசியத்தின் வெளிப்பாடாக மொழி தவிர்ந்த வேறு பண்புகள் முதன்மை பெறுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை.
தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர். அதாவது தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமல்ல அதற்கு மேலாக அதன் தொடர்ச்சியிலேயே தங்கியுள்ளது. இந்தத் தமிழ் அயலை "தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார். நீண்ட தொடர்ச்சியான வரலாற்றில் தமிழின் பெருமையை பலரும் போற்றியபோதும் அது தமிழ் வெறியாக இருக்கவில்லை.
தமிழை: சத்தியத்தின், ஞாயத்தின், அன்பின், வீரத்தின், பக்தியின் வெளிப்பாடாகத் தமிழ் செய்த வாழ்வின் காட்சிக் கோலங்களையே காட்டிநிற்கின்றனர். இந்தித் திணிப்பும், சிங்களத் திணிப்பும் ஏற்பட்டபோதே பாரதிதாசன்களும், காசியானந்தன்களும் கவிவெறிகொண்டனர். சிங்களமொழித் திணிப்பு இடம் பெற்றபோது சிங்கள பாராளுமன்றத்தில் 1955 இல் பேசிய கலாநிதி என்.எம். பெரேரா இந்த அடக்குமுறைகளால் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் ஒரு மாநிலமாகப் பிரிந்து இந்தியாவுடன் இணைந்து கொள்வர் என எச்சரித்திருந்தார். பாரத நாட்டைப் பல தேசங்களின் கூட்டாகக் கண்ட பாரதி சிங்களதேசத்திற்கும் பாலம் அமைப்போம் என்றான்.
இன்று தமிழ் ஈழத்தில் தமிழ் மக்களின் தேசியத்தை வென்று எடுப்பதற்கான ஆயுதப்போராட்டம் தோற்கடிகப்பட்டுள்ளது. இதில் ஒரு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. எஞ்சியோர் வதை முகாங்களில் நாளுநாள் சாகடிக்கப்படுகின்றனர். சகிப்புத் தன்மை அற்ற சிங்களப் பெரும்பான்மைத் தேசியத்தின் இந்த நிலையை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான அல்பேட் அயன்ஸ்ரயனின் வார்தைகளில் கூறுவது பொருத்தமாகும்.
என அவர் கூறினார். தமிழ் மக்கள் தம் மொழிக்கு விழா எடுப்பதைக்கூட சகித்துக் கொள்ளாத சிங்களத்தேசியம் 1974 இல் சிவகுமாரனை உருவாக்கிய வரலாறு தமிழ்த் தேசியத்தில் மொழியின் ஆழத்தைப் புலப்படுத்தப் போதுமானது. யாழ்நூலகம் மீதான தீ வைப்பும் மொழி தாங்கி நிற்கும் வரலாற்று ஞாபகங்ளை அழிக்கும் முயற்சியே. ஆக்கிரமிப்புக்களாலும், பிறமொழி ஆதிக்கத்தாலும் எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. அழிக்கப்பட்டு வருகின்றன.
என்கிறார் பறக்கும்விதியின் ஆசிரியரான ஸ்கொட்லாந்தைச் சார்ந்த வில்லியம் சாப். (William Sharp) இவர் கூறும் அவலமான, அலங்கோலமான நிலையில் உள்ள தமிழீழ மக்களின் துயரங்கள் கூட்டான வேதனையையும் அதன் ஊடாக கூட்டான கடமைகளையும் கூட்டான முயற்சிகளையும் வேண்டிநிற்கிறது. பறக்கும்விதியின் ஆசிரியர் கூறிய அவலத்தை ஸ்கொட்லாந்து மக்கள் அனுபவிக்கவில்லை. ஆனால் அவர்கள் மொழி இன்று அங்கு எல்லோராலும் பேசப்படுவதில்லை. அவர்களின் தேசியக் கவி எனப் போற்றப்படும் றொபேட் பேன்ஸ்கூட (Robert Burns ) பெரும்பான்மையான படைப்புக்களை ஆங்கிலத்திலேயே படைத்துள்ளார். இதே கதிதான் அயர்லாந்து மொழிக்கும். அயர்லாந்தின் தேசியக் கவிஞர்களான தொமஸ் மூர் ( Thomas Moore ) ஜேட்ஸ் (Yeats ) என்போரின் ஆக்கங்களும் ஆங்கில மொழியில்தான். இன்று அயர்லாந்தில் ஹெல்ரிக் மொழியே முதல் உத்தியோக மொழியாக இருந்தபோதும் அதனைப் பேசுவோர் சொற்ப வீதத்தினரே. ஒரு காலத்தில் அயர்லாந்தின் ஒரு கரையில் இருந்து மற்றக்கரை மட்டும் ஹெல்ரிக் மொழியையே பேசினார்கள். ஆனால் வைக்கிங்ஸ், நோமன்ஸ். ஆங்கிலேயர் என இடம் பெற்ற தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கள், 1840 இல் இடம் பெற்ற கொடிய உருளைக்கிழங்குப் பஞ்சம், தொடர்ந்து பெருமளவில் நாட்டைவிட்டு அமெரிக்கா அவுஸ்திரேலியா எனக் குடியேறியமை இவர்கள் மொழியின் தேய்விற்கு வித்திட்டது என்பர். அயர்லாந்தின் முதல் பிரதமரும் ஜனாதிபதியுமான டி வலறா ,
என்றார். அவர்காலத்திலேயே ஹேலிக் மொழி அவர்கள் அரசியல் யாப்பிலும் அரச நிர்வாகத்திலும் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றபோதும் அவை ஏட்டில் மட்டுமே நின்று விட்ட பரிதாப நிலை அந்த மொழிக்கு. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் தேய்ந்தபோதும் தமிழ் மக்கள் ஏதிலிகளாகியபோதும் அவர்கள் தேசியத்தில் மொழியின் ஆற்றல் அற்புதமானதாகும். ஸ்கொட்லாந்து அயர்லாந்து மக்களின் கதை இதுவாகின் நாட்டோடு தொலைத்த மொழியையும் மீட்டெடுத்த வரலாறு யூதமக்களின் கதையாகும். எகிப்தியர், பாரசீகர், உரோமர், ஒட்டமன், ஆங்கிலேயர் எனப் பலராலும் அடிமைப்படுத்தப்பட்டு 2000 ஆண்டுகளாகப் பரதேசிகளாக வாழந்த யூதமக்கள், நச்சுவாயு கிடங்குகளிலும், வதை முகாங்களிலும் பலிபோன யூதமக்கள் , உலக வழக்கொழிந்து இருந்த தம் மொழியை மீட்டு இஸ்றேல் நாட்டின் மொழியாக அரியாசனம் ஏற்றிய வரலாறு அற்புதமானது. இடையறாத மனித முயற்சியின் வெற்றி வரலாறு அது. ஆயிரம் ஆண்டுகாலமாக சமய அனுட்டானங்களில் மாத்திரம் சிலரால் பேணப்பட்ட ஹீபுறு மொழியை 1858 க்கும் 1922 க்கும் இடையே வாழ்ந்த எலியேசர் பேன் யெகுடா ( Eliezer Ben Yehuda ) என்னும் தனிமனிதன் தலமையில் மீட்டெடுத்தனர். இவரின் மகனே 1700 ஆண்டுகளின் பின்னர் முதன்முதல் ஹீபுறு மொழியில் தன் முதல் வார்த்தையை உச்சரித்தார் என்று கூறுவார்கள். தியோடர் ஹேல் (Theodor Herzl) யூததேசியத்தின் தந்தை எனின் அந்த தேசியத்தின் மொழிப் பண்பிற்கு Eliezer Ben Yehuda வை தந்தை என்பர். இன்று பல மொழிகள் எம் கண்முன்னே அழிந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். யேசநாதர் பேசிய அராமிக் மொழி இன்று வழக்கில் இல்லை. எழுத்தையும் நாகரிகத்தையும், நகரத்தையும் தந்த பபிலோனிய நாகரிகம் கண்ட மொழிகள் இன்று இல்லை. இலக்கிய தத்துவ வழம்கொண்ட சமஸ்கிருதம் லத்தீன் என்பன பேச்சு வழக்கில் இல்லை. இலங்கைத் தீவுவரை கரைதட்டிய பிராகிருத மொழியும் இன்றில்லை. ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகளாக 200 மொழிகளே இன்று உள்ளன என்பர். 100 மில்லியனுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகளாக 12 மொழிகள் உள்ளன. உலகவர்த்தக சாம்ராச்சியம், உலகமயமாக்கல் என்னும் சுஸ்ரீறாவளியில் பல மொழிகள் இரையாகும் என எதிர்வு கூறப்படுகிறது. இத்தகையதொரு பின்புலத்தில் தமிழ்த் தேசியத்தில் தமிழ் மொழியின் பங்கு எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை ஊகிக்கலாம்.
தமிழ்த்தேசியம் இந்தத் தமிழ்கூறும் நல் உலகைத் தழுவி உள்வாங்கப்படும்போதே இது சாத்தியமாகும். மொழியே இதற்கான பிணைப்பாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக எம், முந்தையர் உள்ளங்களிலும் அவர்தம் சிந்தனைகளிலும் செப்பனிடப்பட்ட மொழியே தமிழ். முள்ளிவாயக்காலில் சிங்கள அரசின் படைகளுடன் கைகோத்த பிராந்திய வல்லரசு, சீன வல்லரசு, அமெரிக்க வல்லரசு எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து தமிழ் மக்களை அகதிகளாக்கி வவனியா மனிக்பாமில் வதைக்கின்றபோது கேட்கும் அவலக்குரலில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அகதிகளான பாரி மகளிரின்
என்ற குரலையும் கேட்க தமிழ் மொழியே வழி சமைக்கின்றது. இந்தச் சோகம் காப்பிய பரிமாணம் பெற்று எம்மை வதைக்கவும் அந்த வதையிலும் உறுதிபெற தமிழ் சுமந்து நிற்கும் எம் முன்னோர் வரலாறும் அவர்தம் அனுபவங்களும் எமக்கு ஒத்தணமாகிறது. அதில் ஒரு சக்தி பிறக்கிறது. இந்த சக்தி தொடர்ச்சியான ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு. கண்ணதாசனின் பாடல்களில் பாரதியை, கம்பனை, வள்ளுவனை தரிசிக்கின்றோம். பாரதியில் கம்பனின், ஆழ்வார்களின் குரல்களைக் கேட்கின்றோம். கம்பனில் நம்ஆழ்வாரைத் தரிசிக்கின்றோம். நெஞ்சை அள்ளும் சிலம்பில், வள்ளுவனின் சொல் ஓவியங்களையும் சங்கப் புலவர்களின் மொழி ஆழுமையையும் காண்கிறோம். வள்ளுவனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனை, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்ற ஒவையை, அவனின் காமத்துப் பாலில் சங்க அகத்திணையின் சாரத்தை ரசிக்கின்றோம். இந்த பழமையான இலக்கியங்களுக்கு ஊடாக நாம் செய்யும் யாத்திரையில் எம்மையும் கண்டு அறிகின்றோம். நாம் இந்த கண்டு பிடிப்பை கிரேக்க,ரோம, கிறீஸ்தவ அனுபவங்களுக்கு ஊடாகச் செய்யவில்லை. அந்தச் சிந்தனைகள் பெரிதாக இருக்கலாம் இல்லாதும் விடலாம். ஆயின் டஷ வலறா கூறியதுபோல் எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி. அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர்.
|