Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings by Dharmeratnam Sivaram (Taraki) > அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை

Selected Writings by Dharmeratnam Sivaram (Taraki)

அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை

வீரகேசரி - 29 August 2004


கடற்புலிகளை வாகரைக்கு வராமல் ஸ்ரீலங்கா அரசு தடுத்திருந்தால் கருணா மட்டக்களப்பை விட்டு ஓடவேண்டி வந்திருக்காது எனவும் வாகரைப் பகுதியிலிருந்து வாழைச்சேனை, பொலன்னறுவை நெடுஞ்சாலையைக் கடந்து செல்வதற்கு ரமேஷின் கீழ் வந்த படைகளை அனுமதிக்காமல் ஸ்ரீலங்கா படையினர் தடுத்து நிறுத்தியிருந்தால் கருணாவை அசைத்திருக்க முடியாது எனவும் ஒருசிலர் இன்னும் நம்புகின்றனர்.

ஸ்ரீலங்கா அரசு வெளிப்படையாக கருணா விவகாரத்தில் ஏன் தலை­யிடத் தயங்கியது என்பதும் அந்த காலகட்டத்தில் ஏன் சில மேற்கு நாட்டுத் தூதுவர்கள் கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளுக்குரிய அங்கீகாரத்தை தொடர்ந்து வழங்க முற்பட்டனர் என்பதும் சிலருக்கு இன்னும் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு பெரியதொரு இலஞ்சத்தொகையைக் கொடுத்ததாலேயே அவர்களுடைய சண்டைப் படகுகள் வாகரை செல்ல அனுமதிக்கப்பட்டன என்று வெளிநாட்டுப் புலனாய்வுத் துறையொன்றின் பின்னணியோடு இயங்கும் 'ஏசியன் டிரிபியோன்" இணையச் சஞ்சிகை குற்றஞ்சாட்டுமளவுக்கு மேற்படி விடயத்தில் புலிகளின் சில தமிழ் எதிரிகளும் சிங்களப் பேரினவாதிகளும் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

இவர்கள் குழம்புவதாலோ கலங்குவதாலோ யாருக்கும் நட்டமில்லை. ஆனால், எமது மக்களிடையே ஆங்காங்கு காணப்படும் சில எருமைகள் இப்படியான கேள்விகளை இன்னும் தொடுத்துவருகின்றன. எனவேதான் கருணாவின் பிரச்சினையின்போது ஏன் ஸ்ரீலங்கா அரசு வெளிப்படையாக தலையிடத் தயங்கியது என்பதை நாம் இங்கு ஆராயவேண்டியுள்ளது.

இதற்கு அடிப்படையாக நாம் படைவலுச் சமநிலை (ஆடைவயசல டீயடயnஉந) என்ற போரியல் கருத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையின் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்படி படைவலுச் சமநிலையிலேயே தங்கியுள்ளது எனவும் விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்குமிடையே 2001ஆம் ஆண்டளவில் படைவலுச் சமநிலை ஒன்று ஏற்பட்டதனாலேயே இருதரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முன்வந்தன எனவும் ஈழப்போர்களை ஆராய்ந்துவரும் மேலைத்தேய போரியல் அறிஞர் சிலர் கூறுவர். இதையே இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தனது அடிப்படை விளக்கக் கோட்பாடாக கொண்டு இயங்கி வருகிறது.

இரு நாடுகளுக்கிடையில் படைவலுச் சமநிலை ஏற்பட்டால் அவை தம்மிடையே போரிடுவதை தவிர்த்துக் கொள்ளும் என நவீன போரியலின் முன்தடுப்புக் கோட்பாடு (னுகைகநசநnஉந வுhநசழல) கூறுகின்றது. மேற்படி கோட்பாடு இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் நிலவிய உலகளாவிய பனிப்போரின் (ஊழடன றுயச) இராணுவப் பரிமாணத்தை விளக்க உருவாக்கப்பட்டதொன்றாகும். சோவியத் யூனியனிடமிருந்த அணுவாயுதங்களின் எண்ணிக்கை காரணமாகவே அமெரிக்கா அதன்மீது போர் தொடுக்காமல் இருந்ததென்றும் அதேபோல அமெரிக்காவின் அணுவாயுதக் களஞ்சியத்தின் காரணமாகவே சோவியத் யூனியன் மூன்றாம் உலகப் போரை தூண்டிவிடாமல் இருந்தது எனவும் முன்தடுப்புக் கோட்பாட்டாளர்கள் கூறினர். இதன் காரணமாகவே அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஏட்டிக்குப் போட்டியாகத் தத்தமது அணுவாயுதக் களஞ்சியங்களை பெருக்கி உலக படைவலுச் சமநிலையை தமக்குச் சாதகமாக திருப்ப முயன்றுவந்தன.

படைவலுச் சமநிலை இரு தரப்பினரிடையே காணப்படும்போது அவர்கள் தம்மிடையே போரிடுவதால் ஏற்படும் சமனான அழிவை கருத்திற்கொண்டு நிரந்தரமான அமைதி காக்கவே விரும்புவர் என்ற அடிப்படையில் போரியல் அறிஞர்கள் பல்வேறு நாடுகளுக்கிடையிலான படைவலுச் சமநிலையை காலத்துக்குக் காலம் அளவிட்டு மதிப்பீடு செய்துவருகின்றனர். இங்கிலாந்திலுள்ள சர்வதேச கேந்திரக் கற்கைகளுக்கான நிறுவனம் ஆண்டுதோறும் உலக நாடுகளின் படைவலுச் சமநிலைகளை கணிப்பட்டு இராணுவச் சமநிலை (ஆடைவயசல டீயடயnஉந) என்கின்ற ஒரு ஆய்வு நூலை வெளியிட்டு வருகின்றது.

இரு நாடுகளுக்கிடையிலான படைவலுச் சமநிலையை நாம் அவற்றிடம் இருக்கும் அணுவாயுத ஏவுகணைகள், பீரங்கிகள், டாங்கிகள், படையணிகள், போர்க் கப்பல்கள், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு கணிப்பிடலாம். ஆனால் எந்த அடிப்படையில் நாம் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்குமிடையில் இராணுவச் சமநிலை உள்ளதெனக் கூறமுடியும்?

ஸ்ரீலங்காவின் படைவலுவை அளவிடலாம். நாம் முன்னர் குறிப்பிட்ட இராணுவச் சமநிலை போரியல் ஆய்வு வெளியீடும் ஜேன்ஸ் (தயநௌ) போன்ற வேறு சர்வதேச படைத்துறை வெளியீடுகளும் ஆண்டுதோறும் ஸ்ரீலங்காவின் படைவலுவை மதிப்பிட்டுவருகின்றன. ஆனால், புலிகளின் உண்மையான படைவலு என்ன என்பது யாருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது. எனவேதான் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் படைவலுச் சமநிலை உள்ளது என நாம் எந்த அடிப்படையில் கூறமுடியும் என்ற கேள்வி எழுகிறது. இதைப்பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் நாம் ஸ்ரீலங்கா படைகளின் வலு என்ன என்பதைப் பார்ப்போம்.

மேலைத்தேய படைக் கட்டமைப்பு முறையின் கீழ் ஒரு நாட்டின் படையில் மிகப்பெரிய அலகு ஒரு கோ (ஊழசடிள) ஆகும். இதற்கு அடுத்த அளவிலுள்ளது ஒரு டிவிசன் (னுiஎளைழைn). அதற்கடுத்தது பிரிகேட் (டீசபையனந). இவ்வாறு 'செக்ஷன்" வரை அலகுகள் சிறிதாகிச் செல்லும். ஒவ்வொரு அலகின் அளவும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. (நாடுகளுக்கிடையில் பெரும்போர்கள் நடைபெறும்போது இரண்டு அல்லது மூன்று கோக்களை இணைத்து ஒரு படை அணூட்தூ உருவாக்கப்படுகின்றது. ஒரு அணூட்தூ இற்கு கட்டளைத் தளபதியாக குநைடன ஆயசளாயட தரத்திலுள்ளவரே நியமிக்கப்படுவார்.) ஸ்ரீலங்காப் படைகளின் மிகப்பெரிய அலகாக டிவிசனே காணப்படுகிறது. இலங்கை பின்பற்றிய பிரித்தானியப் படைக்கட்டமைப்பு முறையின் கீழ் ஒரு டிவிசனில் அண்ணளவாக 8 ஆயிரம் படையாட்கள் இருக்க வேண்டும். ஒரு டிவிசனில் வழமையாக மூன்று பிரிகேட் அணிகள் காணப்படும். ஸ்ரீலங்கா படைகளில் களத்தில் இறக்கப்படக் கூடிய டிவிசன்களாக 21, 22, 23, 51, 52, 53, 54, 55, 56 என்பவை காணப்படுகின்றன.

இருபது ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போரில் ஈடுபட்டு வந்ததாலும் தொடர்ச்சியாக படைகளிலிருந்து படையாட்கள் ஓடியதாலும் மேற்படி டிவிசன்களின் அளவு சுருங்கியே காணப்படுகின்றது. உதாரணமாக ஆனையிறவை புலிகள் தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய 54 ஆவது டிவிசன் ஆயிரத்துக்குக் குறைந்த படையாட்களுடனேயே காணப்பட்டது. (இது தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.) இதுபோல விசேட படைகள், கமாண்டோக்கள் ஆகியவற்றாலான 53 டிவிசனும் புலிகளிடம் தொடர்ந்து அடிவாங்கியதாலும் படையாட்கள் ஓடியதாலும் அளவில் மிகச்சுருங்கியே காணப்படுகின்றது.

இருநாடுகளுக்கிடையிலான படைவலுச் சமநிலை என்பது அவற்றின் பீரங்கிகள், படையணிகள் போன்றவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் நாம் மதிப்பிட முடியாது. அவை எவ்வாறு எதிரியை நோக்கி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதும் படைவலுச் சமநிலையை ஆராய்வதற்கு முக்கிய அடிப்படையாகிறது.

உதாரணமாக, இந்தியா தனது படைவலுவின் பெரும்பகுதியை தமிழ்நாட்டில் குவித்து வைத்திருக்கின்றது என எடுத்துக்கொள்வோம். இந்த நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் படைவலுச் சமநிலை உள்ளது என நாம் கூறமுடியாது. ஏன்? பாகிஸ்தானுக்குச் சமனான அல்லது கூடிய படைவலு இந்தியாவிடம் இருந்தபோதும் அது பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் ஆகிய எல்லைப் புறங்களை நோக்கிய நிலையில் இல்லாவிடின் அங்கு பாகிஸ்தானின் கையே சமநிலையில் மேலோங்கிக் காணப்படும். படைகளை உரிய இடத்தில் நகர்த்தி வைத்திராவிட்டால் ஒரு நாட்டிடம் எவ்வளவு படைவலு இருப்பினும் அது தன்னைவிட பலம் குறைந்த ஒரு எதிரியை எதிர்கொள்ளமுடியாது போய்விடும். எனவேதான் இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் படைவலு மட்டுமல்லாது அப்படைவலு எவ்வாறு எதிரியை நோக்கி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதும் அவற்றுக்கு இடையிலான படைவலுச் சமநிலையை கணிக்க தேவையாகிறது.

இந்தவகையில், ஸ்ரீலங்கா அரசுக்கும் புலிகளுக்குமிடையில் படைவலுச் சமநிலை உள்ளது என கூறும்போது முதலில் நாம் ஸ்ரீலங்கா அரசு எவ்வாறு தன் படையணிகளை புலிகளை நோக்கி அணிவகுத்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

வடக்குத் தெற்காக முகமாலை, ஓமந்தை ஆகியவற்றுக்கிடையிலும் கிழக்கு மேற்காக முல்லைத்தீவு, மன்னார் ஆகியவற்றின் கரையோரங்களுக்கிடையிலும் அமைந்துள்ள பெரும் நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைச்சுற்றி இதன் வடபாகத்தில் 51, 52, 54 ஆகிய டிவிசன்களும் 55இன் ஒரு பகுதியும் இதன் தென்பாகத்தில் மன்னாரிலிருந்து மணலாறுவரை 21, 56 மற்றும் 22 டிவிசனின் ஒரு பகுதியும் நிலைகொண்டுள்ளன. இவற்றோடு இந்த டிவிசன்களுக்குரிய ஆதரவணிகளாக பீரங்கி, கவசவாகன மற்றும் வழங்கல் போன்ற பல பரிவுகளும் உள்ளன. இவற்­றோடு 53 டிவிசனும் வடக்கை நோக்கியதாகவே உள்ளது.

கிழக்கில் மணலாறுக்குத் தெற்காக திருமலையில் 22 டிவிசனின் ஒருபகுதியும் மட்டக்களப்பு வடக்கு அதன் பின்புலமான மின்னேரியா ஆகிய பகுதிகளில் 23 டிவிசனும் அண்மைக்காலத்தில் 55 டிவிசனின் ஒரு பகுதியும் நிலைகொண்டுள்ளன. (நீங்கள் சில இடங்களில் ஸ்ரீலங்கா படைமுகாம்கள் 23 2 அல்லது 51 2 போன்ற இலக்கங்களைக் கண்டிருப்பீர்கள். இதில் முன்பகுதி டிவிசனையும் பின்பகுதி அதன் பிரிகேட் இலக்கத்தையும் குறிப்பிடுகின்றன.)

இதைப் பார்க்கும்போது உங்களுக்கு விளங்குவது என்ன?

அதாவது, வடக்கில் புலிகள் கட்டுப்படுத்தும் பகுதியை நோக்கி ஸ்ரீலங்கா அரசு தனது ஒன்பது களமிறக்கக் கூடிய டிவிசன்களில் ஏழு டிவிசன்களை ஒழுங்குபடுத்தியுள்ளது என்ற உண்மை அடிப்படைக் கணக்குத் தெரிந்த யாருக்கும் இலகுவாகப் புரியும். இதன் காரணம் என்ன? 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கில் தன்னிடமிருந்த படைவலுவின் சாரத்தைத் ஒன்றுதிரட்டி முகமாலையிலிருந்து பளையைநோக்கி ஸ்ரீலங்கா இராணுவம் தீச்சுவாலை நடவடிக்கையை மேற்கொண்டது. இதை முறியடித்த அதேவேளை வடக்கின் வேறு எந்த முனையிலிருந்தும் ஸ்ரீலங்காப் படையினர் சமகாலத்தில் வேறு தாக்குதலை தொடுக்கமுடியாதபடி தடுக்குமளவிற்கு புலிகளின் படைபலம் காணப்பட்டது. வடக்கில் இருதரப்பிற்குமிடையில் படைவலுச் சமநிலை ஏற்பட்டுவிட்டதையே இது காட்டிற்று. அதாவது ஸ்ரீலங்காப் படைகளின் ஏழரை டிவிசன்களுக்கு (அந்நேரத்தில் 55 டிவிசன் முழுமையாக வடக்கிலேயே இருந்தது) சமனான படைவலு புலிகளிடம் காணப்பட்டதாலேயே மேற்படி நிலை தோன்றிற்று. இன்னொரு வகையில் சொல்லப்போனால் ஸ்ரீலங்காப் படைகளின் 83 சதவீத வலுவிற்குச் சமனான பலம் வன்னியில் புலிகளிடம் உள்ளது என்பதையே தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வி மிகத் தெளிவாகக் காட்டிற்று. இதை இந்திய, பிரித்தானிய மற்றும் அமெரிக்க போரியல் அறிஞர்கள் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டனர்.

இலங்கையில் இவ்வாறாகத் தோன்றிய படைவலுச் சமநிலை புலிகளின் பக்கம் சரியப்போகிறது என்பது கட்டுநாயக்க வான்படைத்தளத்திற்கு விழுந்த அடியோடு ஸ்ரீலங்கா அரசின் பின்னின்ற நாடுகளுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. இந்தப் படைவலுச் சமநிலையை புலிகளுக்குச் சார்பாக தளம்பவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்த நாடுகளுக்கும் 2001 ஏப்ரலுக்குப் பின்னர் ஏற்பட்டது. இலங்கையின் படைவலுச் சமநிலை புலிகளுக்குச் சார்பாக சரிந்தால் இத்தீவின் இராணுவ மேலாண்மை அவர்களின் கைக்குப் போய்விடும் எனவும் அப்படிப்போனால் இங்கு தாம் எண்ணியதை செய்யமுடியாதளவிற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்றுணிவு அற்றுப்போகும் எனவும் அந்நாடுகள் எண்ணின.

அதுமட்டுமன்றி, இப்படைவலுச் சமநிலையில் புலிகளின் தரப்பு இராணுவ வளங்களில் சிலவற்றை தம்மால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அந்நாடுகள் உணர்ந்தன. புலிகளிடம் எத்தனை பீரங்கிகள் உள்ளன, டிவிசன்கள் உள்ளன, சண்டைப் படகுகள் உள்ளன என்பதுபோன்ற விடயங்கள் சமச்சீரான படைவலு சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைக் கொண்டு சமநிலையைக் கணிப்படுவது இலகுவாகும். ஆனால், புலிகளிடம் காணப்படும் கரும்புலிப்படையும் கொழும்பைத் தாக்கும் வலுவும் சமச்சீரற்றவையாகவும் (யுளலஅஅநவசiஉயட) அதனால் சரியாக அளவிடப்படமுடியாதவையாகவும் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு பீரங்கியால் எத்தனை முறை சுடமுடியும் என்பதை கணக்கிடலாம். ஆனால், ஒரு கரும்புலி அணியின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதை அளவிடமுடியாது. ஆகவே, இலங்கையில் ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இன்று நிலவும் படைவலுச் சமநிலையில் கரும்புலிகளும் புலிகளின் கொழும்பைத் தாக்கும் வலுவும் அளவிடமுடியாத அம்சங்களாக இருப்பதும் வெளிநாடுகளுக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன. இதனாலேயே புலிகளை பேச்சுவார்த்தை என்ற கூட்டுக்குள் நிரந்தரமாக மடக்கிவைத்திருக்க அவை முயற்சி எடுக்கின்றன.

இனித் தொடங்கிய இடத்துக்கு வருவோம். கருணாமீது மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையில் ஸ்ரீலங்காப் படையினர் தலையிட்டால் மறுபேச்சுக்கு இடமின்றி அடிவிழும் என்பது சந்திரிகா அரசுக்கு அந்நேரத்தில் மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது. சண்டை மீண்டும் ஆரம்பித்தால் வடக்கில் இருதரப்புக்குமிடையிலான படைவலுச் சமநிலையை பேணமுடியாது என்பது சந்திரிகா அரசுக்கும் ஸ்ரீலங்காப் படைத்தளபதிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. வடக்கில் உள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஏழு டிவிசன்களில் பெரும்பாலானவை போர் மூளும்போது பாதிப்புக்குள்ளாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். வடக்கில் உள்ள டிவிசன்களுக்கு ஏற்படக்கூடிய சிறிய பாதிப்பும் இலங்கையின் படைவலுச் சமநிலையை புலிகளுக்குச் சார்பாக சரித்துவிடும் என்பது கிழக்கிலுள்ள சில போரியல் பேதைகளுக்கு புரியாவிட்டாலும் ஸ்ரீலங்கா படைத்தளபதிகளுக்கும் வெளிநாட்டு படைத் துறை வல்லுநர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

இதைவிட இன்னொரு முக்கிய விடயத்தையும் அவர்கள் கருத்திற்கொள்ள வேண்டியிருந்தது. உங்களை ஒருவர் திடீரெனத் தாக்கவந்தால் நீங்கள் முதலில் உங்கள் உடம்பில் படக்கூடாத இடங்களில் அடிவிழாமல் தடுக்கவே முயற்சிப்பீர்கள். அதுபோலவே ஒருநாட்டின்மீது இன்னொரு நாடு போர்தொடுக்க முற்பட்டால் முதலாவது நாடு தன்னுடைய கேந்திர மற்றும் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காப்பாற்றும் வகையிலேயே தன்னுடைய படைவளங்களை பிரித்துக் குவிக்க முற்படும். உதாரணமாக, இந்தியா மீது பாகிஸ்தான் போர்தொடுத்தால் இந்தியா தனது படைவளங்களைக் கொண்டு போய் முதலில் தமிழ்நாட்டில் குவிக்காது. அது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப்புற பகுதிகளை நோக்கியே தனது படைகளை நகர்த்தும்.

போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் புலிகள் தமது படைகளை வடமுனை, மேற்குமுனை, கிழக்குமுனை, தென்கிழக்குமுனை ஆகிய கட்டளைத் தலைமையகங்களின் கீழ் மறுசீரமைத்திருக்கிறார்கள். புலிகளின் மேற்குமுனைப் படைகள் தள்ளாடி, மன்னார் ஆகியவற்றை நோக்கியபடியும், தென்கிழக்குமுனைப் படைகள் மணலாறு, திருமலை வடக்கு ஆகியவற்றை நோக்கியவாறும் நிறுத்தப்பட்டுள்ளன. புலிகளின் வடமுனைப் படைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் ஸ்ரீலங்கா இராணுவம் குவித்து வைத்துள்ள பெரும் படைவளங்களை நோக்கியவாறு நிறுத்தப்பட்டுள்ளன.

கிழக்கில் கருணா மீதான புலிகளின் இராணுவ ஒழுக்காற்று நடவடிக்கையில் ஸ்ரீலங்காப் படையினர் நேரடியாகத் தலையிட்டதால் போர்தொடங்கிற்று என வைத்துக்கொள்வோம். ஸ்ரீலங்கா அரசும் அதன் படைத்தளபதிகளும் முதலில் எதைப்பற்றி அக்கறைப்பட்டிருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

புலிகளின் தென்கிழக்குமுனைப் படைகள் மணலாற்றிலுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் அரண்களை உடைத்தால் திருமலை வடக்கும் அதன் காரணமாக திருமலைத் துறைமுகத்தின் இருப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். புலிகளின் மேற்குமுனைப் படைகள் தள்ளாடியை உடைத்தால் புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையில் வேறு பெரும் தடைகள் இல்லை. இதனால் புத்தளமும் இலங்கையின் பொருளாதார இயங்குதளமான மேற்குக் கரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். புலிகளின் வடமுனைப் படைகள் குடாநாட்டில் எந்தவொரு உடைப்பை ஏற்படுத்தினாலும் அங்குள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் பெரும் படைவளங்கள் (பீரங்கிகள், கவசவாகனங்கள், எறிகணைகள், இன்னோரன்ன) அச்சுறுத்தலுக்குள்ளாகும். ஏனெனில் இவை எவற்றையும் அங்கிருந்து வெளியெடுக்க முடியாது.

மேற்படி மூன்று முனைகளில் ஒன்றைப் புலிகள் உடைத்தாலும் அதை காப்பாற்றுவதற்காகவே ஸ்ரீலங்கா அரசு தனது இராணுவ வளங்களை பயன்படுத்தும். இது இயல்பு. இதற்காக போரியல், கேந்திர அல்லது பொருளாதார முக்கியத்துவமற்ற இடங்களிலிருந்து படைகளை வெளியெடுத்து அவற்றை மேற்படி முனைகளை பாதுகாக்க அனுப்பிவைக்கும். இது போரியலின் அடிப்படைப் பாடம்.

போரைத் தொடங்கினால் ஆபத்து வடக்கில் தான் இருக்கின்றது என்பது ஸ்ரீலங்கா படைத் தளபதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

மேற்படி மூன்று முனைகளில் எதற்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதை சமாளிக்க படைகளை வெளியெடுக்கக் கூடிய இடம் வடக்குக் கிழக்கில் ஒன்றே ஒன்றுதான். அது மட்டக்களப்பு. ஏனெனில் ஈழப்போரின் இராணுவப் புவியியல் சமநிலையில் மட்டக்களப்பிற்கு கேந்திர, போரியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் எதுவும் கிடையாது. புத்தளத்தைக் காப்பாற்றுவதா? மட்டக்களப்பைக் காப்பாற்றுவதா? அல்லது திருமலைத் துறைமுகத்தைக் காப்பாற்றுவதா மட்டக்களப்பைக் காப்பாற்றுவதா? அல்லது குடாநாட்டில் குவிக்கப்பட்டுள்ள தமது பாரிய இராணுவ வளங்களைக் காப்பாற்றுவதா மட்டக்களப்பைக் காப்பாற்றுவதா? என்ற கேள்விகள் எழும்போது ஸ்ரீலங்கா அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை நான் உங்களுக்கு விரிவாக விளக்குமளவிற்கு நீங்கள் மடையரல்லர்.

மட்டக்களப்பு விவகாரத்தில் தலையிட்டு அந்தரத்தில் இருக்கும் இலங்கைத் தீவின் படைவலுச் சமநிலையை புலிகளின் பக்கம் சாய்க்க இதன் காரணமாகவே யாரும் முன் வரவில்லை.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home